Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அன்று v/s இன்று - காலங்களின் கோலம் ! 25

அதிரைநிருபர் பதிப்பகம் | December 20, 2011 | , , ,


இந்தக்காலம்
அன்று ஏழை,எளியவர்களாக வாழ்ந்து வந்தாலும் மக்கள் ஒரு வித அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். பெரும் பிரச்சினைகள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் உருவாகி அவர்களை ஆட்கொள்ளவில்லை.
இன்று பணங்காசு புழக்கம் எல்லாத்தரப்பு மக்களிடமும் வந்து விட்டாலும் வாழ்வில் ஏதோ ஒரு நிம்மதி இல்லாத நிலை நிலவி வருவதாகவே எல்லோராலும் உணரப்பட்டு வருகின்றன. விதவிதமான பிரச்சினைகள் நாலாப்புறங்களிலிருந்தும் வந்த வண்ணம் உள்ளன.
அன்றைய உலக நாகரீக வளர்ச்சிகளெல்லாம் அல்லாஹ், ரசூல், குர்'ஆன், ஹதீஸைப்பற்றி பேசி வாழ்ந்து வந்த மக்களை விட்டும் வரம்பு மீறி விடவில்லை. இறையச்சத்தின் முன் இதுவெல்லாம் எம்மாத்திரம் என்ற நிலை மக்களிடம் அன்றிருந்தது.
இன்று அல்லாஹ், ரசூல், குர்'ஆன், ஹதீஸ் பற்றி பேசப்படாத இடங்களில்லை, ஒளி/ஒலிபரப்பாத ஊடகங்கள் இல்லை. வகைவகையான வழிகளில் எல்லா மொழிகளிலும் மார்க்க புத்தகங்களும், கணிப்பொறி வழி சி.டி, டி.வி.டி என்று ஏராளம் வந்து விட்டாலும் உலக நாகரீக வளர்ச்சியின் மேல் மக்களின் மோகம் அவர்களின் உண்மையான இறையச்சத்தை கொஞ்சமோ (அ) அதிகமோ அசைத்துப்பார்த்து தாக்கி விட்டதாகவே கருதப்பட்டு வருகின்றன.
அன்று அனைத்து தரப்பு மக்களும் வயது வித்தியாசமின்றி அன்றாடம் தனக்கு வேண்டியதை தன்னால் ஆன‌ உடல் உழைப்பிலேயே பெற்று ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ்ந்து வந்தனர். குறிப்பிட்ட ஒரு சில நோய்கள் மட்டுமே மக்களின் வாழ்வில் (புழக்கத்தில்) வந்து போனது.
இன்று எல்லா தரப்பு மக்களிடமும் பணப்புழக்கம் வந்து விட்டதால் வயது வித்தியாசமின்றி அனைவரும் தன் வியர்வை சிந்தாமலேயே இருக்கையில் அமர்ந்து கொண்டே தன் பணத்தை வைத்து தனக்கு வேண்டியதை பெற்று விடுகின்றனர். உடல் உழைப்பில் அவ்வளவு ஆர்வமும், அவசியமும் இல்லாமல் போய் விட்டது. தினம்,தினம் புதுபுது நோய்கள் உருவாகி வயது வித்தியாசமின்றி அவர்களை தாக்கி இளம் வயதிலேயே மண்ணோடு மடிய வைத்து விடுகிறது. மருத்துவமனைகளோடு அலைய வைத்து விடுகிறது.
அன்று சிறுவர்களால் விளையாடப்பட்ட பம்பரம், பளிங்கி, கிட்டிக்கம்பு, பட்டம், தொட்டு விளையாட்டு, கண்டு விளையாட்டு, பள்ளாங்குழி, சில் கோடு, அட்டபில்லு, குளத்தில் குதித்து/குளித்து கும்மாளமிடுவது, நொங்கு வண்டி, டயர் வண்டி, கயிறு ரயில் வண்டி போன்ற ஒழுக்க விளையாட்டுக்களால் சமூகத்தில் ஏதேனும் சீரழிவு வந்ததாக தெரியவில்லை. அவர்கள் உடல் நலமும், மன நலமும் பாதுகாக்கப்பட்டது. இளம் வயதில் தலைநரையையோ அல்லது வழுக்கையையோ காணுவது அரிதாக இருந்தது.
இன்று சிறுவர்கள் முதல் வாலிபர்கள் வரை கணிப்பொறி வழி கேம்ஸ், இண்டர்நெட், கூகுள், ச்சாட்டிங், ஃபேஸ் புக் மூலமும், தொலைக்காட்சி மூலம் ஜெட்டிக்ஸ், டாம் அன் ஜெர்ரி, சூப்பர் மேன், ஹாலிவுட் நல்ல/கெட்ட ஆங்கிலப்படங்கள், சினிமா, நாடக சீரியல்கள் மூலமும் அறைக்குள் எலிப்பொறி வைத்து பிடிக்கப்படும் எலிகள் போல் கணிப்பொறி மூலம் பிடிக்கப்பட்டு உடலாலும், மனதாலும் சீர்கெட்டு அமைதியில்லாமல் உறக்கமின்றி பல உடல்நலக்குறைவு உபாதைகளுக்குட்பட்டு வாழ்க்கை ஒரு விரக்தியுடன் அமைதி, பாசம், நேசம், இயற்கையை அனுபவிக்க இயலாமல் தவித்து வருகிறது.
அன்று வீட்டு, தெருப்பெரியவர்கள் போற்றி மதிக்கப்பட்டனர். அவர்களின் சொல்லுக்கு உள்ளம் உண்மையிலோ அல்லது பயந்தோ கட்டுப்பட்டது. அதனால் பெரும்,பெரும் பிரச்சினைகள் கூட கடுகாய் ஆகி காணாமல் போனது. மரணத்தை முன் வைத்து விருப்பு,வெறுப்புகளெல்லாம் வெகுண்டோடிப்போனது.
இன்று மேலை நாட்டு கலாச்சார சீர்கேட்டின் விளைவாக மகன்/மகள் தன்னை ஈன்றெடுத்த தாய்,தந்தையரை மதிப்பதில்லை. அப்படி இருக்கும் பொழுது குடும்ப, தெருப்பெரியவர்களுக்கு எப்படி மதிப்பும், மரியாதையும் செலுத்துவான்/ள்? அவன்/அவள் மனம் போன போக்கிற்கு போய் தலைக்கணம் பிடித்து அலைகிறான்/ள். பேரிடர் தன் வாழ்வில் குறிக்கிட்டதும் என்றோ மடிந்து போன தன் பெற்றோரை பிரயோஜனமின்றி எண்ணிப்பார்க்கிறான்/ள் அந்தோ பரிதாபமான நிலையை அடைகின்றனர். அல்லாஹ்வின் பேருதவி அப்பொழுது தான் அவசியப்படுகிறது.
அன்று உணவு வயிற்றுப்பசிக்கு உண்ணப்பட்டது. அது ஜீரணமும் ஆகி வாழ்க்கை ஆரோக்கியமானது. காசின்றி ஆனந்தத்தைக்கண்டது. ஆஸ்பத்திரி செலவைக்குறைத்தது இறுதியில் இதயம் அல்ஹம்துலில்லாஹ் சொல்லி நின்றது.
இன்று ருசிக்கு உணவு உண்ணப்பட்டு அது வயிற்றில் கண்ணாமூச்சி விளையாண்டு ஆரோக்கியத்திற்கே வேட்டு வைத்து விடுகிறது. இறுதியில் ஆஸ்பத்திரி மருந்து மாத்திரைகளுடன் அல்லல் பட வைத்து விடுகிறது ஆரோக்கியத்திற்காக ஏங்க வைத்து விடுகிறது.
அன்று தொழில்நுட்ப நவீனங்கள் குறைந்திருந்தாலும் எங்கு சென்றாலும் நம் வேலைகள் சில மணித்துளிகளில் முடிந்து விடும். மணிக்கணக்கில் கால்வலிக்க வரிசையில் காத்துக்கிடக்க வேண்டியதில்லை.
இன்று தொழில் நுட்ப நவீனங்கள் பெருகி விட்டாலும் எங்கு சென்றாலும் கால் வலிக்க வரிசையில் காத்து கிடக்க வேண்டியுள்ளது. அது பொது கட்டணக்கழிப்பிடமாக இருந்தாலும் சரி பணம் போட்டு எடுக்கும் வங்கியாக இருந்தாலும் சரி. மக்கள் தொகைப்பெருக்கத்தால் தொழில் நுட்ப வளர்ச்சிகள் கூட காணாமல் போய் விடுகின்றன நம்மை கால் கடுக்க காக்க வைத்து விடுகின்றன.
அன்று மானத்திற்காக உடலை மறைக்க உடை உடுத்தப்பட்டது. அதனால் தீயவர்களின் தீய பார்வைகளிலிருந்தும்/செயல்களிலிருந்தும் பாதுகாப்பும் கிடைத்தது.

இன்று நாகரீகத்திற்காக உடல் தெரிய உடை உடுத்தப்படுகிறது. அதனால் ஆங்காங்கே தீயசக்திகளின் சதிகளுக்கு சதைகள் தீக்கிரையாக்கப்படுகின்றன வாழ்க்கை சீரழிந்து போகின்றன.
அன்று அனைத்து தரப்பு மக்கள் குளிப்பதற்கும், குடிப்பதற்கும் தனித்தனி குளங்கள் பயன்படுத்தப்பட்டன. அதனால் வருடம் முழுவதும் ஊரின் குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்பி இருந்தது.
இன்று ஆழ்குழாய்க்கிணறுகள் வீடுதோறும் தோன்டப்பட்டு அதில் நீர்மூழ்கி மோட்டார்களை இறக்கி ஊரின் நீர் ஆதாரங்களான குளம், குட்டைகள் காணாமல் போய் இடித்த வீடுகளின் கல்,மண்களால் நிரப்பப்பட்டு மனைகளாய் உருமாறி மக்களின் வசிப்பிடங்களாக ஆக்கப்பட்டு வருகின்றன.
அன்று தேவைகள் குறைவாக இருந்ததால் சவுதி, துபாய் வருமானம் போதுமானதாக இருந்தது. வீட்டு தேவைகள் பல நிறைவேறின.
இன்று மக்கள் அமெரிக்க, ஆஸ்திரேலிய நாடுகள் சென்றாலும் வீட்டு தேவைகள் தீர்ந்தபாடில்லை.
அன்று கடைத்தெருவிற்கு கொஞ்சம் பணம் எடுத்துப்போய் நிறைய சாமான்கள் வாங்கி வரலாம். (இருபது ரூபாய்க்கு இரண்டு கூறு தேசப்பொடி வாங்கி ரெண்டு நாளைக்கு வச்சி ஓட்டலாம்.)
இன்று கடைத்தெருவிற்கு நிறைய காசுபணம் எடுத்துப்போய் கொஞ்சம் சாமான்கள் தான் வாங்க முடிகிறது. (இருநூறு ரூபாய்க்கு மீனு வாங்கினால் ஒரு வேளை கூட நிரப்பமா சாப்பிட முடிவதில்லை)
சாய்ங்காலப்பொழுதை சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் விளையாண்டு கழிக்க ஊரில் ஆங்காங்கே போதிய விளையாட்டுத்திடல்கள் இருந்தன. அவர்களுக்கும் உடற்பயிற்சியும் அதன் மூலம் கிடைத்தது.
இன்று விளையாட்டுத் திடல்களெல்லாம் விலை மனைகளாக்கப்பட்டு விளையாட திடல் இன்றி வீட்டிலேயே வாலிபர்களும், சிறுவர்களும் முடங்க வேண்டியுள்ளது.
அன்று பலதரப்பட்ட விளையாட்டுக்கள் மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்தன. விரும்பிய விளையாட்டுக்கள் விளையாடப்பட்டன.
இன்று எல்லா விளையாட்டுக்களும் ஓரங்கட்டப்பட்டு கிரிக்கெட் விளையாட்டிற்கு மட்டும் எல்லாத்தரப்பு மக்கள்கள் மட்டுமின்றி நாடே சல்யூட் அடித்து வரவேற்று அதன் வீரர்களுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது கொடுக்க மத்திய/மாநில அரசுகளாலேயே பரிந்துரைக்கப்படுகின்றனர். இவ்விளையாட்டில் வீரர்கள் மண்ணில் புரள்கிறார்களோ இல்லையோ பல ஆயிரம் கோடிகள் எப்படியும் புரண்டு விடுகின்றன.
அன்று குறைவான கல்வியின் மூலம் நிறைவான பண்புகளையும், நல்ல பல பழக்கவழக்கங்களையும் மக்கள் பெற்றிருந்தனர்.
இன்று அதிகம் படித்து நல்ல பண்புகளும், பழக்கவழக்கங்களும் இன்றி அல்லல் படுகின்றனர்.
அன்று இயற்கை உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

இன்று அதிவேக செயற்கை உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
அன்று பிளாஸ்டிக் பொருட்களின் தேவை குறைவாக இருந்தது. அதனால் மக்களின் ஆரோக்கியமும் அதிகமாக இருந்தது.
இன்று பிளாஸ்டிக் பொருட்களின் தேவை அதிகமாகி ஆரோக்கியம் குறைந்து விட்டது.
அன்று ஓட்டு வீட்டிற்குள் ஒட்டி உறவாடியது குடும்ப உறவு.

இன்று மாடி வீட்டிற்குள் மலையேறி விட்டது குடும்ப உறவு.
அன்று மக்களுக்கிடையே இயக்கங்களும், அதனால் வரும் பரஸ்பர தயக்கங்களும் குறைவு.
இன்று பல இயக்கங்களும், பரஸ்பரம் ஒன்றிணைய வரும் பல தயக்கங்களும் அதிகம்.
அன்று கடன் வாங்கியவர் கலக்கமடைவார் கடன் வாங்கிய பணம் திருப்பப்படும் வரை.
இன்று கடன் கொடுத்தவர் கலக்கமடைவார் கடன் கொடுத்தப்பணம் திரும்பி கிடைக்கும் வரை.

மண‌ப்பெண்ணுக்கு நகைகளுடன் வீடு கொடுத்து மாரடிக்கும் ஊர்ப்பழக்கம் மட்டும் அன்று முதல் இன்று வரை மாறவும் இல்லை தேயவும் இல்லை ஒரு சில வீடுகளைத்தவிர‌.

அந்த‌க்கால‌மும், இந்த‌க்கால‌மும் ந‌ம் பார்வையில் ஓர் ஒப்பீடு/ம‌திப்பீடு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. அவை ச‌ரியா? த‌வ‌றா? என்ப‌தை ந‌ன்கு ப‌டித்து அத‌ன் பின் பின்னூட்ட‌மிட‌ ம‌ற‌வாதீர் ச‌கோத‌ர‌, ச‌கோத‌ரிக‌ளே.....

- மு.செ.மு. நெய்னா முஹம்மது.

25 Responses So Far:

KALAM SHAICK ABDUL KADER said...

உயர்ந்த கட்டிடங்கள் கட்டுகின்றோம்,

தாழ்வான எண்ணங்களில் உள்ளோம்;

விரிவான பாதைகள் அமைக்கின்றோம்,

குறுகிய மனப்பான்மையிலே உள்ளோம்;

நிறைய செலவு செய்கின்றோம்,

குறைவாகவே பெறுகின்றோம்;

பெரிய வீடுகள் உள,

சிரிய குடும்பமே வசிக்கின்றது;

நிரம்ப வசதிகள் உள,

குறைவான நேரங்களே கிடைக்கின்றன;

பட்டங்கள் நிரம்பப் பெறுகின்றோம்,

பட்டறிவு குறைவாகவே பெற்றுள்ளோம்;

நிறைய அறிந்திருந்தாலும்,

அரைகுறையாகவே நீதி வழங்குகின்றோம்;

அறிஞர்கள் அதிகமானதால்,

குழப்பங்களும் கூடி விட்டன;

மருந்துகள் பெருகிவிட்டன,

நிவாரணம் அருகிவிட்டன;

உடைமைகளைப் பெருக்கிவிட்டோம்,

அதன் மதிப்பைச் சுருக்கிவிட்டோம்;

அதிகமாகவே பேசுகின்றோம்,

அன்பைச் சுருக்கி; வெறுப்பைப் பெறுக்கிவிட்டோம்;

வாழ்வாதாரங்களை உருவாக்கக் கற்று கொண்டோம்,

வாழ்க்கையை அல்ல;

ஆயுளுக்கு ஆண்டுகளைச் சேர்க்கும் நாம்,

வாழும் பருவத்துக்கு உயிரைச் சேர்ப்ப்தில்லை;

விண்ணுக்குச் சென்று திரும்பும் நாம்,

மண்ணில் அண்டை வீட்டாரைக் காண்பதேயில்லை;

வெளிக்கட்டமைப்புகள் யாவற்றையும் வென்றாலும்,

உள்கட்டமைப்புகளை ஒழுங்குபடுத்துவதில் தோற்றுவிட்டோம்;

காற்று வெளியாவும் தூய்மைப் படுத்தி விட்டோம்,

ஆற்றல் மிகு ஆன்மாவை தூய்மைப் படுத்தவேத் தவறிவிட்டோம்;

அணுவைப் பிளக்கும் அறிவைப் பெற்றோம்,

அகத்தின் அழுக்காறு பிளந்தெடுக் கற்றோமா..?

உயர்வான ஊதியம் காணுகின்றோம்,

குறைவாகவே ஒழுக்கம் பேணுகின்றோம்;

அளவையிலே நிறைந்துள்ளோம்,

தரத்தினிலே குறைந்துள்ளோம்;

இலாபத்தைப் பெருக்கி விட்டோம்,

உறவுகளை கழித்து விட்டோம்;

"உலக அமைதி"க்கு உச்சி மாநாடு,

கலகம் உருவாக்கி உள்நாடே ம்யானக்காடு..!;

வகைவகையான உணவு பதார்த்தங்கள்,

மிகமிக குறைவான சத்துக்களே- என்பதே யதார்த்தம்;

இருவழிப் பாதையாக வருமானம்,

ஒருவ்ழிப் பாதையாக "விவாகரத்து" பெருகுவதே அவமானம்;

அலங்கார இல்லங்கள்,

அலங்கோல உள்ள்ங்கள்;

காட்சிக்கு அழகான ஜன்னல்கள் வெளியே,

வைப்பறையில் ஒன்றுமேயில்லை உள்ளே;

Anonymous said...

அந்தக்காலம் நாகரீக உலகம், இந்தக்காலம் அநாகரீக உலகம்! மொத்தத்தில் இக்காலம் பரக்கத்து என்பது அரவே இல்லை,அதர்க்கும் நாமே காரணம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

MSM(n): சமூகவியல் பாடம் நடக்கும் வகுப்பில் இருந்த ஃபீலிங்க் !!...

அசராத அலசல்

அதற்கு ஈடாக அபுல் கலாம் காக்காவின், அடுக்குமாடியில் ஆரம்பித்த வரிகள் ஜன்னல் கதவை தட்டி குட்டி வைக்கிறது !

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரா தம்முடைய ஆழ்ந்த அறிவில் தோன்றிய இந்த வெளிப்பாடு பல நியாயமான சந்தேகம் எழச்செய்வது இயல்பே! நல்லதொரு விழிப்புணர்வு! வாழ்துக்கள் தொடர்ந்து எழுதி சமூதாயத்தின் தூக்கம் கலைய ஆக்கம் தரவும். எல்லாப்புகழும் அல்லாஹுக்கே!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

வேறுபடுத்துக!
அதுவும் இன்றைய அரையாண்டுத்தேர்வு நடக்கும் நேரத்தில்!
அத்தனையும் மிகச்சரியே!
நூத்துக்கு நூறு.சூப்பரு. நீ பாஸ் மச்சான்!

உன் அட்டவணைக்குள் கிடைத்த கருவில் சில!
அன்று விளையாட திறந்த வெளி மைதானம்/இன்று கணிணித் திரையே அதற்கு
அன்று ஜாவியாவில் பொட்டியில் சிட்டியில் உணவு/இன்று சவுக்கு தாளில் அது
அன்று கறி வாங்க ஒமலு/ இன்றோ அதுவும் சவுக்கு தாளு

sabeer.abushahruk said...

எம் எஸ் எம் சொல்வதில்,உற்று நோக்கினால், நல்லகாலம் பிறக்க வழிகளும் உள்ளன.

sabeer.abushahruk said...

//வைப்பறையில் ஒன்றுமேயில்லை உள்ளே//

புலமைமிக்க ஆக்கம்.

sabeer.abushahruk said...

காலம் மாறுது - கோலம் தடுமாறுது

அதிகாலை எழுந்து
அல்லாஹ்வைத் தொழுது...
அம்மா தேநீர் என்ற
அமிர்தம் பருகி...
அல்குர்'ஆன் கற்க
ஆர்வமுடன் விரைந்து...
ஆற அமர பயின்று
அற்புதமாய் துவங்கும்...
அந்தகால பிள்ளைகளின்
அன்றாட வாழ்க்கை!

அடித்த அலாரம்
அடித்து அனைத்து...
தலையணை எடுத்து
தலைக்குமேல் போர்த்தி...
அரைகுறைத் தூக்கத்தால்
அழுது வடிந்து...
தட்டி எழுப்பும் தாயை
திட்டித் தீர்த்து..
பதினாறு பல்கூட
தேய்க்கமுடியா நேரத்தில்
முப்பத்தி ரெண்டும்
ஒப்பேத்தித் தேய்த்து...
பாதி பால்...
பகுதி உணவு...
சட்டென நினைத்து
விட்டதை தொழுது...
பறக்கப் பறக்கப்
பள்ளிக்கு ஓடும்
இக்கால இளசுகள்!

பரிசுத்த உடையும்
பதவிசான நடையும்...
பாடப் புத்தகத்தில்
பாதுகாத்த மயிலிறகும்...
சின்னச்சின்ன சிணுங்கல்களும்
சித்திரக்கதை புத்தகமும்...
அணில்மாமா முயல்
அம்புலிமாமா கோகுலம்
அத்தனையும் வாசித்து...
மாலையெலாம் விளையாடி
மஃரிபுக்கு பின் வீடோடி...
அம்மாவை அரவணைத்து
அழகாய் உறங்கும்...
அக்காலப் பிள்ளை!

இடுப்பின் எல்லையை
கடக்கும் உடையும்...
எடுத்தெரிந்த நடையும்
எகத்தாலப் பேச்சும்...
கணினி கண்ணிக்குள்
கால்சிக்கி முடங்கியும்...
அலறும் ஐப்போடால்
ஊமையான உலகமும்...
குறுஞ்செய்தி குடைந்தே
குட்டையாய்ப்போன
கட்டை விரலும்...
ஆன்லைன் கேம்களால்
அயர்ந்துபோன மூளையும்...
சொங்கி சோப்லாங்கியாய்
சூம்பிப்போன உடலுமென...
சிதைந்து போயிருக்கு
இக்கால இளசுகள்!

எப்படி இருக்கணும்
எக்காலமும் இளசுகள்?

முக்கால முணர்ந்து
முன்னோர்சொல் கேட்டு...
மூத்தவர்தமை மதித்து
முடிந்தவரை பயின்று...
மூச்சிறைக்க விளையாடி
முழுநிலவாய் ஒளிர்ந்து
முழுமூச்சாய் முயன்று
முஹம்மது நபி(ஸல்) போதித்த
முறைப்படி வாழ்ந்து
முன்னுக்கு வரவேண்டும்
முழுதாக வாழ வேண்டும்!

-- சபீர்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அ...............முதல் மு.......... வரை நல்லாயிருக்கு சபீர்காக்கா.

Unknown said...

''இந்த உலகம் தன் அருகுகளிலிருந்து குறைவதை கவனித்தீர்களா ?''
இறை வசனம் ....
-------------------------------------------------------
சிந்திக்கவைக்கும் நல்ல ஆக்கம்..நெய்னா!!

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

"அந்தக்காலமோ, இந்தக்காலமோ நம் சொந்தக்காலில் நிற்க பழகாதவரை எந்தக்காலமும் நமக்கு வெந்தக்காலம் தான்"

36 வயசான சின்னப்புள்ளெ நமக்கே இப்புடி அந்தக்காலத்துக்கும், இந்தக்காலத்துக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் தெரியும் பொழுது 50 வயசு தாண்டிய பெரிசுகளுக்கு எவ்வளவு பெரிய வித்தியாசங்கள் தெரியுமோ? அல்லாஹ் அஹ்ழம்....

எல்லோரும் சொந்தக்காலில் தானே நிற்கிறார்கள். யாரும் வாடகைக்கும் கால் எடுத்து நிற்கவில்லையே? என்று யாரோ முணுமுணுப்பது போல் தெரிகிறது. சொந்தக்கால் என்பது காலமெல்லாம் மற்றவர்களின் உழைப்பில்/சம்பாத்தியத்தில்/யாரோ சம்பாதித்து வாங்கிய சொத்தை அனுபவித்து சோம்பேறியாகவே வாழ்ந்து காலம் ஓட்ட நினைப்பது என்பது பொருள்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது.

Anonymous said...

சகோதரர் நெய்னா அந்த காலத்தை பற்றியும் இந்த காலத்தை பற்றியும் மிக அழகாக ஆக்கம் தந்துள்ளார்.

அந்த காலத்தில் மிக செழிப்பாகவும்,மனநிம்மதியாகவும் இருந்து வந்தார்கள் ஒருவீட்டில் எத்தனை குடும்பங்கள் இருந்தாலும் மிக சந்தோசமான முறையில் இருந்தார்கள். ஆனால் இப்போ அந்த சந்தோசமில்லை ஒரு வீட்டிலேயே ஆயிரம் பிரச்சினைகள் ராத்தா,தங்கைகள், அண்ணன் மற்றும் தம்பிமார்கள் ஒற்றுமை இல்லை. அந்த காலத்தில் பணம்,காசுகள் கொஞ்சமாக இருந்தாலும் பரக்கத் இருந்து வந்தது இந்த காலத்தில் பணம்,காசுகள் நிறை இருந்தாலும் பரக்கத் இல்லை.

பணம் நிறைய வர வர தான் நோய்களும் அதிகமாக வருகிறது இந்த காலத்தில் எல்லாம் வகையிலும் நாகரிகமாக இருப்பதால் பெண்களுக்கும், ஆண்களுக்கும் உடல் வேலையை இல்லாமல் போய்விட்டது. அந்த காலத்தில் கொட களில் மாவு ஆட்டுவார்கள்,அம்மியில் மசாலா அரைப்பார்கள். இந்த காலத்தில் கிரைண்டர்,மிக்சி என்றல்லாம் வந்து மக்களை சோம்பே ரிதனமாக ஆக்கி விட்டது. அந்த காலத்தில் உள்ள மக்கள் பணம் குறைவாக சம்பாதித்தாலும் நல்ல செல்வாக்கும்,அன்பும்,பாசமுமாக இருந்து வந்தார்கள். இந்த காலத்தில் உள்ள மக்கள் என்னா பணம் பெரியதாக சம்பாதித்தாலும் செல்வாக்கும்,அன்பும்,பாசமும் இல்லாமல் இருக்கிறார்கள். அந்த காலத்தில் உள்ள பிள்ளைகள் பெற்றோர்களை மதித்து,பேணி நடந்து வந்தார்கள்.

இந்த காலத்தில் உள்ள பிள்ளைகள் பெற்றோர்களையும் மதிப்பதியில்லை, பேணி நடப்பதும் கிடையாது. யார் என்ன சொன்னால் நமக்கு என்ன அவர்கள் சொல்வதை சொல்லிகொண்டே இருக்கட்டும் நாம் நம்மலுடைய வேலையை பார்ப்போம். அந்த காலத்தில் உள்ள பிள்ளைகள் அதிகாலையில் குர் ஆன் ஓத மதரசாவிற்கு செல்வார்கள். இந்த காலத்தில் உள்ள பிள்ளைகள் உலக கல்விக்கு முக்கியவத்துவம் கொடுத்து அதிகாலையில் டீயுசனுக்கு செல்கிறார்கள். அந்த காலத்தில் உள்ள விளையாட்டுகள் இப்ப இல்லை இந்த காலத்தில் கிரிக்கெட் என்னும் ஒரு விளையாட்டு அது எல்லா மனிதனையும் சோம்பலாகவும்,அசட்டையாகவும் ஆக்கிவிடுகிறது.

அபூபக்கர் - அமேஜான்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பு சகோ. நெய்னா முஹம்மது. நல்ல சிந்தனை ஆக்கம்.

தகவல் தொடர்புதுறையில் வளர்ச்சி இல்லாத அந்த காலத்தில் தங்களுக்கு கிடைத்த ஹதீஸ்களின் அடிப்படையில் தக்வாவுடன் வாழ்ந்து வந்தார்கள்

ஆனால் இன்று தகவல் தொடர்பில் அதீத வளர்ச்சியை அடைந்தும், நபிகளாரின் வாழ்க்கை நிகழ்வுகள் அனைத்தும் ஆதாராங்களுடன் கிடைத்தும் சுயநலனகளுக்கு அடிமையாகி இறையச்சமின்றி வாழ்வது மிகவும் கவலைகுறியது.

அல்லாஹ் பாதுகாப்பானாக.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அதிகாலையில் ஆரம்பித்து...

எக்காலத்திற்கும் உகந்த ரூட் போட்டதும் அழகுதான் கவிக் காக்கா !

//முக்கால முணர்ந்து
முன்னோர்சொல் கேட்டு...
மூத்தவர்தமை மதித்து
முடிந்தவரை பயின்று...
மூச்சிறைக்க விளையாடி
முழுநிலவாய் ஒளிர்ந்து
முழுமூச்சாய் முயன்று
முஹம்மது நபி(ஸல்) போதித்த
முறைப்படி வாழ்ந்து
முன்னுக்கு வரவேண்டும்
முழுதாக வாழ வேண்டும்!///

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அந்தக்காலம், இந்தக்காலம் எது எம்மை வென்றகாலம்? வேதனை நிறைந்த வெந்தகாலம்? அனுபவம் பேசட்டும்....

எது எப்படியோ நவீன நாகரீக தொழில் நுட்பத்தின் உச்சத்தில் இருக்கும் இன்றைய உலகம் இயற்கையில் உருவாகும் ஒரு நெற்கதிரிலுள் ஒளிந்திருக்கும் ஒரு நெல் மணியை செயற்கையாக தொழிற்சாலைக்கூடத்தில் வைத்து உற்பத்தி செய்து விட முடியுமா?

இறைவனை வெல்ல இயற்கைக்கோ அல்லது செயற்கைக்கோ என்ன தகுதி இருக்கிறது?

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

ZAEISA said...

அந்த காலங்களில் ஒருநல்லகறியோ,ஆனமோ,கீரையோ,முட்டைகோஸோ சுண்டுனா
அண்டை வீட்டிற்க்கு கொடுத்தனுப்பி சந்தோசம் கண்டார்கள் ஆனால் இந்தக்காலத்தில் அது அறவேயில்லையென்று சொல்லலாம்

Kuthub bin Jaleel said...

சகோதரர் MSM நெய்னா முஹ‌ம்ம‌து, உங்களை யார் என்று தெரிந்து கொள்ள ஆவல். Photo போடுங்களேன்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

சகோ. குத்துப் பின் ஜலீலுக்கு,

ஃபோட்டோ இங்கு எப்ப‌டி போடுவ‌து என்று கொஞ்ச‌ம் சொல்லித்தாங்க‌ளேன்!!

If you don't mind, pls. send an email to my below ID to get my photo and continue our mutual communication in the near future. May I know about you through your email?

This is my email ID: Naina.Mohamed@saipem.com

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஒரு காலத்தில் குடும்பத்தின் பெரும் பிரச்சினைகளுக்காக வேண்டா வெறுப்பாய் அங்கொன்றும், இங்கொன்றுமாய் நடந்து வந்த திருமண விவாகரத்து இன்று பரவலாக எல்லா இடத்திலும் சிறு பிரச்சினைகளுக்கு கூட‌ விருப்பத்துடன் நடந்து வருவது வேதனையின் முன்னேற்றமே அன்றி வேறில்லை.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மாசா அல்லாஹ் !
என்ன நெய்னா கட்டான உடலை காட்டியாவது ஊரை கட்டுப்படுத்தவா?

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

கட்டான உடல்களெல்லாம் கடைசியில் ஒரு நாள் காணாமல் போய் விடும் இறுதி புற‌ப்பாடுக்குப்பின்.

உடல்களை கட்டுப்படுத்துபவனை விட உள்ளத்தை கட்டுப்படுத்துபவனே பெரும் வீரனாவான்.

இருக்கும் வரை இறக்கும் வரை ஆரோக்கியம் தேவை.

உடல் பலம் தன் ஆரோக்கியத்திற்கேயன்றி எந்த சூழ்நிலையிலும் அராஜக, அத்துமீறல்களுக்கு ஆதரவாக இருந்து விடக்கூடாது.

நாம் ஊரிலிருந்தாலும் அல்ல‌து உல‌கின் எந்த‌ மூலையில் இருந்தாலும் அன்றாடம் ஐங்கால தொழுகையுடன் த‌ன‌க்கு இய‌ன்ற‌ உட‌ற்ப‌யிற்சிக‌ளை செய்து கொண்டே இருக்க‌ வேண்டும்.

ஆரோக்கியத்திற்காக நம் உட‌லை க‌ட்டுக்கோப்பாக‌/க‌ட்ட‌ழ‌காக‌ வைத்திருக்க‌ ந‌ம் மார்க்க‌ம் ஒன்றும் த‌டைவிதிக்க‌ வில்லையே? பிற‌கென்ன‌ யோச‌னை? ஆர‌ம்பிச்சிட‌ வேண்டிய‌து தான்......

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

"நடப்பதெல்லாம் நன்மைக்கே" அதாங்க எவ்வளவு தூரம் நாம் தினமும் நடக்கிறமோ அவ்வளவு தூரம் நம் உடம்புக்கு நல்லதுண்டு சொல்ல வந்தேன்.

Yasir said...

சகோ.குத்புதீன் காக்காவின் முயற்ச்சியால் சகோ.நெய்னாவை கண்டது மகிழ்ச்சி....இவ்வளவு பலமான ஸ்டீல் பாடிக்குள்ள எவ்வளவு மென்மையான,தன்மையான எழுத்துக்கள்....தங்களின் அந்தகாலம் / இந்தகாலம் கட்டுரை அப்பட்டமான உண்மைகளை சொல்லி இருக்கிறது...

KALAM SHAICK ABDUL KADER said...

அன்று:

கன்னத்தில் முத்தமிட்டு
கட்டியணைத்து
உச்சிதனை முகர்ந்து
உச்சந்தலையில் ஓதி
சென்றுவா மகனே
”வென்றுவா மகனே”
என்றுதான் புகழந்த தாய்
அன்றுதான் கண்டோம்

இன்று:

“ஏழு மணியாச்சுடா
எழுந்து வா சனியனே”
கோபத்தில் வாயைக்
கொப்பளித்து
சாபத்தில் காலைச்
சாப்பாட்டை அளித்து
விரட்டியடிக்கும்
வீரத்தாய்(?) இன்று

அன்று:

தாய்பாடும் தாலாட்டும்
நோய்போகும் நல்மருந்தும்
வாய்பாடும் மனக்கணக்கும்
வாய்த்தது நமக்கு அன்று

இன்று:

தொடர்நாடகம் தருகின்ற
தொல்லைக் காட்சியும்
பக்கவிளைவுகளின்
பக்கமே இழுக்கும் மருந்தும்
கணிதப்பொறி,கைப்பேசி,
கணினிகளால் மனக்கணக்கும்
வாய்பாடும் வாயைவிட்டும்
போய்விட்ட கொடுமைகள்

அன்று:

”தமிழுக்கும் அமுதென்று பேர்” என்று
தமிழாய் தமிழுக்காய்த்
தாழாது உழைத்தனர் எத்துணைப் பேர்!

இன்று:

கொலைவெறிடி” சத்தம்
கொலை செய்யும் தமிழை நித்தம்
நிலை மாறியதே மிச்சம்
நிலைத்திடுமோ இதுவென அச்சம்

அன்று:

“பர்கத்” என்ற சொல்லின் விளக்கம்
படிக்காமல் நடைமுறை விளக்கும்
சொர்க்கத்தின் காற்று வீசும்
“சுப்ஹூ” தொழுதவர் வீடும்

இன்று:

பணப்புழக்கம் அதிகமாய் இருந்தும்
மனப்புழுக்கம் நோயாளியாக்கி மருந்தும்
நரகத்தின் வேதனைகளை அனுபவிக்கும்
விரக்தியால் அல்லற்படும் வீடும்

Shameed said...

நெய்னாவின் காலங்களின் ஒப்பிடு அருமை அந்த கடைசி ஒப்பிடு நூத்துக்கு நூறு உண்மை

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு