Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் ! 21

அதிரைநிருபர் பதிப்பகம் | December 12, 2011 | , , ,

நினைவில் நிலைத்ததை பகிர்வது : மர்ஹூம் ஹாஜி த. அ. அப்துல் ரசாக்...

அதிரை நகரக் கல்வித் தந்தை ஹாஜி எஸ்.எம்.எஸ். ஷேக் ஜலாலுதீன் 28-ஜனவரி-1920ல் பிறந்தார். நகரத் தந்தை சேர்மன், முஹம்மது அபுல் ஹசன் மரைக்காயரின் ஒரே பிள்ளை; செல்லப்பிள்ளை; சேர்மன் தன் தந்தை ஹாஜி ஷேக் ஜலாலுதீன் பெயரைப் பிள்ளைக்குச் சூட்டினார். அதனால் மகனை எப்போதும் ’வாப்பா’ என்றே அழைப்பார்! மற்றவர்களிடம் பிள்யைப் பற்றிச் சொல்லும்போது ‘தம்பி’ என்பார்! இதனால் அவர் எல்லாருக்கும் ‘தம்பி’ ஆகிவிட்டார்!

நான் ஜனாப் ஷேக் ஜலாலுதீனின் பள்ளித் தோழன்; நான் அவருக்கு இரண்டு வகுப்புகள் இளையவன். அதிராம்பட்டினம், ஆராவமுத அய்யங்கார் நடுநிலைப் பள்ளியிலும், பட்டுகோட்டை மாவட்டக் கழக உயர் நிலைப் பள்ளியிலும் படித்தோம். ஆராவமுத அய்யங்காரும் அவருடைய இரண்டாவாது மகனும் ஆசிரியர்கள்; அருமையான ஆசிரியர்கள்! அவர்கள் திறம் படப் பாடங்களை நடத்தியதோடு, மாணவர்களை வைத்து நாடகங்களையும், மற்ற கலை நிகழ்ச்சி களையும் நடத்தினார்கள். குறிப்பாக, ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் பிறந்த நாளன்று கலை நிகழ்ச்சிகள் அமர்க்களப்படும். அரசு மருத்துவ மனை வளாகம்தான், பள்ளியின் கலை அரங்கம்! ஒரு ஆண்டு சேக்ஸ்பியரின் ’வெனிஸ் வர்த்தகன்’ ஆங்கில நாடகம் நடந்தபோது, அதில் ஜனாப் ஷேக் ஜலாலுதீன் நீதிபதியாக நடித்தார்!

உடல் தளர்ச்சி காரணமாக ஆராவமுத அய்யங்கார், பள்ளியை மூடிவிட்டார்! அப்போது, தற்போதைய ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி மாவட்டப் பகுதிகளில், பட்டுக்கோட்டை – ஒரத்தநாடு இந்த இரண்டு இடங்களில் மட்டுமே உயர் நிலைப் பள்ளிகள் இருந்தன! எனவே மேற் படிப்புக்காக நாங்கள் பட்டுக்கோட்டை போய் வரலானோம்!

இப்போது போல அப்போது பட்டுக்கோட்டைக்கு பேருந்து வசதி கிடையாது! ஒரு நாளைக்கு இரு முறையோ, ஒரு முறையோ பேருந்து வரும்; போகும்! பயணக் கட்டணம் 4 அணா! பயணம் செய்வோரும் மிகவும் குறைவு! நான்கு அல்லது ஐந்து பேர் சேர்ந்து வருவதாகச் சொன்னால் வீட்டு வாசலில் பேருந்தை நிறுத்திக் கூட்டிச் செல்வார்கள்!

பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூருக்கும் பயணிகளை ஏற்றிச்செல்ல, பையை ஒருவர் இடையே ஒருவர் பிடுங்கிக் கொண்டு போவார்கள்! பயணக் கட்டணம் எட்டணா! போட்டி காரணமாக ஒருநாள் கட்டணத்தை ஓரணாவாகக் குறைத்ததோடு தஞ்சாவூரில் காப்பியும் கொடுத்தார்கள்! இந்தப் போட்டியைக் கண்டுதான் அப்போதைய முதல்வர் ராஜாஜி, அவர்கள் பேருந்துகளுக்கு வழித் தடங்களையும், நேரத்தையும் ஒதுக்கும் முறையைக் கொண்டு வந்தார்கள்! பேருந்து யாவும் கரி வண்டிகளே!

நான் ஜனாப் ஷேக் ஜலாலுதீன், திரு என்.எஸ். இளங்கோ, உட்பட ஏறத்தாழ 25 மாணவர்கள் பட்டுக்கோட்டையில் படித்தோம்! பெரும்பாலோர் புகை வண்டியில் சென்று திரும்புவர்! சிலர் சைக்கிளில் செல்வர்! இன்னும் சிலர் பட்டுக்கோட்டையிலேயே வாடகைக்கு அறை எடுத்துத் தங்கிப் படித்தார்கள்!

சேர்மன் ஒரு குதிரை வண்டியும், ஒரு ஃபோர்டு காரும் வைத்திருந்தார்! ஜனாப் ஷேக் ஜலாலுதீனையும் என்னையும் காலையில் புகை வண்டி நிலையத்திற்கும், மாலையில் அங்கிருந்து வீட்டிற்கும் ஏற்றிச் செல்ல குதிரை வண்டியோ அல்லது காரோ காத்திருக்கும்!

அக்காலத்தில் பட்டுக்கோட்டையில் உணவகங்கள் மிகவும் குறைவு! தரத்தையோ, ருசியையோ உணவுப் பண்டங்களில் எதிர் பார்க்க முடியாது! அளவு மட்டும் அதிகமாக இருக்கும்! தயிரோடு சாப்பாடு இரண்டணாதான்! நானும் மற்ற மாணவர்களும் பகல் உணவை வீட்டிலிருந்து கொண்டு வருவோம்! முப்பது சாப்பாட்டுச் சீட்டுகள் மூன்றே முக்கால் ரூபாயே! திங்களன்று வடை, பாயாசத்துடன் சாப்பாடு போடுவார்கள்!

நானும் மற்ற மாணவர்களும் பகல் உணவை வீட்டிலிருந்து கொண்டு வருவோம்! ஜனாப் ஷேக் ஜலாலுதீன் உணவுப் பொட்டலம் எதுவும் கொண்டு வரமாட்டார்! மணிக்கூண்டிற்கு அருகில் இருந்த கன்டியர் சிற்றுண்டி விடுதியில் இரண்டு அல்லது மூன்று பரோட்டாக்களை பால் ஊற்றிச் சாப்பிடுவார்! நீலாதான் அப்போது பட்டுக்கோட்டையில் இருந்த ஒரே திரைப் படக் கொட்டகை! எப்போதாவது அவரும் மற்ற நண்பர்களும் திரைப் படம் பார்க்கப் போவோம்! மாணவப் பருவத்தில் ஜனாப் ஷேக் ஜலாலுதீன், பள்ளி உண்டு, வீடு உண்டு என்று இருப்பார்! விளையாட்டில் அவருக்கு ஈடுபாடு கிடையாது! அப்போதே ஆங்கிலத்திலும் தமிழிலும் நன்றாக, ஆணித் தரமாக எழுதுவார்! 1938 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.எ\ல்.சி. தேர்வு எழுதினார். தமிழில் தேற வில்லை! அப்போ தெல்லாம் ஒரு பாடத்தில் தேராவிட்டாலும் எல்லாப் பாடங்களையும் மீண்டும் எழுதவேண்டும்! அதனால், அடுத்த ஆண்டும் அதே வகுப்பிக் தொடர்ந்து படித்தார்!

மீண்டும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதக் கட்டணம் கட்டினார். 1939 மார்ச் துவக்கத்தில் தேர்வு எழுத படிப்பு விடுமுறை விட்ட போது, அவருக்குத் திருமணம் நடந்தது. திங்கட் கிழமை, தேர்வு தொடங்குவதாக இருந்தது. சனிக்கிழமை அவருக்குக் காய்ச்சல் கண்டது. மறுநாள் ஞாயிற்றுக் கிழமை அம்மை போட்டது! இதனால் தேர்வு எழுதமுடிய வில்லை! பல்லாயிரம் மாணவர்களுக்குக் கல்லூரிக் கல்வி வழங்கிய கல்வித் தந்தைக்கு கல்லூரிக் கல்வி கிடைக்க வாய்ப்புக் கிட்டவில்லை!

பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடக்கும் நாட்களில் மற்ற மாணவர்களுக்குக் காலை 9.30 மணி வரை வகுப்புகள் நடக்கும். அந்த நேரத்தில் பட்டுக்கோட்டைக்குப் புகை வண்டியோ, பேருந்தோ கிடையாது!

அப்படி ஒரு நாள் 1937 – ஆம் ஆண்டு மார்ச் திங்கள் காலை 7.30 மணி வகுப்புக்கு சேர்மனின் ஃபோர்டு காரில் பள்ளிக்குப் போய்க் கொண்டிருந்தோம். பட்டுக்கோட்டைப் பொது பணித்துறை பயண மாளிகைக்கு அருகில், காருக்கு பழுது ஏற்பட்டு நின்று விட்டது. நாங்கள் நடந்தே பள்ளிக்கூடம் நோக்கிப் போனோம்! திடீரென மழை பிடித்துக் கொண்டது! பக்கத்தில் வீடுகளோ, ஒதுங்கும் இடங்களோ எதுவும் இல்லை! நனைந்து கொண்டே பள்ளிக் கூடம் நோக்கிச் சென்றோம்!

அப்போது ஷேக் ஜலாலுதீன் சொன்னார், ”நாம் படிப்பதற்காக பட்டுகோட்டை வருவதில் அதிகமாகச் சிரமப் படுகிறோம்! நம் குழந்தைகள் இவ்விதம் சிரமப் படக் கூடாது! நாம் பெரியவர்களாகி ஓரளவு சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு, முதல் காரியமாக நம் பிள்ளைகள் நம் ஊரிலேயே படிக்க சொந்த முயற்சியில், ஓர் உயர் நிலைப் பள்ளியை ஆரம்பிக்க வேண்டும்!” மேற்படியார் இவ்வாறு சொன்னது, இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது! அவர் நினைத்தபடி தன் முயற்சியால் உயர் நிலைப் பள்ளி என்ன, ஆண்கள் மேல் நிலைப் பள்ளி, பெண்கள் மேல் நிலைப் பள்ளி, இளங் கலை, முதுகலை, கல்லூரி, தொழிற் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றை ஏற் படுத்தி தன் கனவை நனவாக்கி, அதற்கு மேலும் சாதித்து, நம் மத்தியில் தன் நினைவு என்றும் நிலைத்து நிற்கும் படிச் செய்து விட்டார்.

என்னைக் கல்லூரிக் கட்டிடக் குழுச் செயலாளராகப் பணியாற்றி நிதி திரட்ட ஓரளவு உதவ வைத்தது, அவரும் இறைவனும் எனக்கு அளித்த பெரும் பாக்கியமாகும்!

நாங்கள் படித்த காலத்தில் அதிராம்பட்டினத்தில் இருந்த பி.ஏ. பட்டதாரிகள் இரண்டே பேர் தான்! ஒருவர் திரு மஜீது! அவரை பி.ஏ. மஜீது என்று தான் அழைப் பார்கள்! மற்றவர் என்.எஸ் இளங்கோவின் தமையனார் திரு கோவிந்தராஜுலு! இன்று அதிரையில் தடுக்கி விழும் இடமெல்லாம் பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பட்டதாரிகள்! இந்த புரட்சி கரமான மாற்றத்திற்கான பெருமை கல்வித் தந்தை எஸ்.எம். எஸ். ஷேக் ஜலாலுத்தீன் அவர்களையே பெரிதும் சாரும்! இது உண்மை! வெறும் புகழ்ச்சி இல்லை!

கல்வியும் செல்வமும் ஒரு சேரப் பெற்றிருந்த அதிரைப்பட்டினத்தின் சரியான வாரிசு நம் கல்வித் தந்தை என்று சொன்னால் அது மிகை ஆகாது! 

- வாவன்னா

21 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அற்புதமான வரலாற்று நிகழ்வை, அதிரையில் கல்வி கண்ணொளி வீரிட பாதை அமைத்த கொடைவள்ளல் மர்ஹூம் SMS அவர்களின் பள்ளிக்கூட தோழனாக இருந்த மர்ஹூம் த.அ.அதுர்ரஜாக் (அப்பா) அவர்களுடைய நினைவில் நிலைத்த காவியம் இது !

மறக்க முடியாத ஒரு நெஞ்சில் நின்ற நினைவுகளை வாசித்த திருப்தி...

//அப்போது ஷேக் ஜலாலுதீன் சொன்னார், ”நாம் படிப்பதற்காக பட்டுகோட்டை வருவதில் அதிகமாகச் சிரமப் படுகிறோம்! நம் குழந்தைகள் இவ்விதம் சிரமப் படக் கூடாது! நாம் பெரியவர்களாகி ஓரளவு சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு, முதல் காரியமாக நம் பிள்ளைகள் நம் ஊரிலேயே படிக்க சொந்த முயற்சியில், ஓர் உயர் நிலைப் பள்ளியை ஆரம்பிக்க வேண்டும்!” மேற்படியார் இவ்வாறு சொன்னது, இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது! அவர் நினைத்தபடி தன் முயற்சியால் உயர் நிலைப் பள்ளி என்ன, ஆண்கள் மேல் நிலைப் பள்ளி, பெண்கள் மேல் நிலைப் பள்ளி, இளங் கலை, முதுகலை, கல்லூரி, தொழிற் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றை ஏற் படுத்தி தன் கனவை நனவாக்கி, அதற்கு மேலும் சாதித்து, நம் மத்தியில் தன் நினைவு என்றும் நிலைத்து நிற்கும் படிச் செய்து விட்டார்.//

அதிரையில் கல்வி கற்ற கற்கும் அனைவருன் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம் அன்னாருக்காக !

KALAM SHAICK ABDUL KADER said...

யான்படித்தப் பள்ளிக்கு வித்திட்ட வள்ளல் ஜனாப்(மர்ஹூம்) எஸ்.எம்.எஸ் அவர்களைப் பற்றிய இப்படைப்பு, தேன்குடித்த இன்பத்தினைக் கிடைக்க வைத்தது.

“ஸதகத்துல் ஜாரியா” என்ற நிரந்தரமான தர்மத்தின் பலனை அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். அவர்களின் பள்ளித்தோழரான மர்ஹூம் த.அ.அவர்களின் நினைவு நாடாக்களை அவர்களால் வித்திடப்பட்டப் பள்ளியின் சித்திர ஆசிரியர் “வா வன்னா சார்” என்று வாய்நிறை வாஞ்சையுடன் இன்றும் எங்களால் மதிக்கப்படும் ஆசிரியர் அவர்களால் அ.நி. வலைவரிசையில் ஒலிக்க வைத்திருப்பதும் எவ்வளவுப் பொருத்தம்.

கல்வியும் செல்வமும் கண்ட பெருந்தகை
நல்வினை செய்தார் நமக்கு.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இதுவரை அறியாத அரிய தகவல்களை தந்தமைக்கு நன்றி சார்.
கல்வித்தந்தை மற்றும் த.அ.அப்பா வுக்கு துஆவை சமர்ப்பிக்கிறேன்.
சார் அவர்கள் பரிபூரண ஆரோக்கியத்துடன் இருந்து நீங்கள் அறிந்த அத்தனையும் அப்பப்ப அறியத் தாருங்கள்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//அதிராம்பட்டினத்தில் இருந்த பி.ஏ. பட்டதாரிகள் இரண்டே பேர் தான்! ஒருவர் திரு மஜீது! அவரை பி.ஏ. மஜீது என்று தான் அழைப் பார்கள்! மற்றவர் என்.எஸ் இளங்கோவின் தமையனார் திரு கோவிந்தராஜுலு! இன்று அதிரையில் தடுக்கி விழும் இடமெல்லாம் பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பட்டதாரிகள்! இந்த புரட்சி கரமான மாற்றத்திற்கான பெருமை கல்வித் தந்தை எஸ்.எம். எஸ். ஷேக் ஜலாலுத்தீன் அவர்களையே பெரிதும் சாரும்! இது உண்மை! //

இது உண்மை,

சேக் ஜலாலுதீன் அவர்கள் இன்றிருந்தால, அதிரையில் ஒரு சட்டக்கல்லூரியோ அல்லது ஒரு மருத்துவக் கல்லூரியோ உருவாக்கியிருப்பார்கள்.

நேற்று வந்த கல்லூரிகள் எத்தனையோ தன்னாட்சி பல்கலைகழங்கங்களாக மாறியுள்ளதை நாம் கண்கூடாக காண்கிறோம். கல்வித்தந்தையின் சந்ததியினர் ஏன் கல்லூரியை மென்மேலும் வளர்ச்சிப்பாதையில் எடுத்துச்செல்ல யோசிக்கிறார்களோ தெரியவில்லை.

தலைத்தனையன் said...

அல்லாஹ்வின் அருளுக்கும் கருணைக்கும் உரித்தானவர்களாக அன்னார் ஆகி இருப்பார்கள். இன்ஷா அல்லாஹ்.

அன்னாரின் மக்கள ஒருவர்கூட அவர்கள் போல் இல்லையோ என்று அச்சுற தோன்றுகிறது.

மர்ஹூம் த.அ. மாமா அவர்களின் இதுபோன்ற ஆவணச்செய்திகள் நமதூரின் எல்லா தெரு மக்களிடமும் பரவிக்கிடக்கலாம்.

எங்கள் வாப்பிச்சா வீடு கடற்கரை தெருவில்தான் இருந்திருக்கிறது. எங்கள் வாப்பா, எங்கள் சேக்காதி சாச்சா (அல்லாஹ இவர்களை நல்லடியார்களுடன் சேர்ப்பானாக) பிறந்ததும் கடற்கரை தெருவில்தான். எங்கள் வாப்பாவுக்கு ஐந்து வயதில்தான் வாப்பிச்சா வீடு ஆஸ்பத்திரி தெருவுக்கு குடி வந்திருக்கிறார்கள். ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தை சார்ந்த பல குடும்பங்கள் கடற்கரை தெருவில் இருந்துதான் குடிபெயர்ந்து வந்திருக்கின்றார்கள். நம் கடற்கரை சகோதரர்கள் அங்குள்ள பெரியவர்களிடம் கேட்டால் குறைந்தது இருநூறு வருட செய்திகளாவது நமக்கு கிடைக்கும்.

தலைத்தனையன் said...

// கல்வித்தந்தையின் சந்ததியினர் ஏன் கல்லூரியை மென்மேலும் வளர்ச்சிப்பாதையில் எடுத்துச்செல்ல யோசிக்கிறார்களோ தெரியவில்லை.//

காரணம் வேறொன்றுமல்ல, அவர்கள் சொத்துக்களைக் கொடுத்து முத்துக்கள் ஆனார்கள், இவர்கள் சொத்துக்களைச் சேர்த்து, சொத்தைகலானார்கள். அவ்வளவே.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஒரு நேர்மையான, தொலைநோக்குப்பார்வை கொண்ட சிறந்த உண்மையா கல்வித்தந்தையை (எஸ்.எம்.எஸ்) நமதூர் பெற்றமைக்காக அல்ஹம்துலில்லாஹ்....

"அன்றே விளைநிலத்தில் அவரை விதை தூவப்பட்டு விட்டது. ஆனால் அது இன்றுவரை அவரையாகவோ அல்லது துவரையாகவோ முளைக்கொண்டு அது வெளிவரவில்லை".

"பதினைந்து வருடங்களுக்கு முன் சைக்கிளில் ஆயுர்வேத/சித்த மருந்துகளை அக்கம்பக்கத்து ஊர்களுக்கு தானே எடுத்துச்சென்று விற்று அதுடன் யோகாவையும் கற்றுக்கொடுத்து வந்தவன் இன்று ஆயிரத்தி ஐநூறு கோடிகளுடன் தனி விமானத்திற்கும் அதிபதியாக இருக்கிறான்".

"பல ஆண்டுகளுக்கு முன் பல நூறுகோடிகளை சாதி,மத,இன பேதமின்றி நம் சுற்று வட்டாரம் கல்விக்காக சிரமப்பட்டு வேதனையடையாமல் சிக‌ர‌ம் எட்ட‌ வ‌ழிவ‌குத்து கொடுத்த‌ க‌ல்வித்த‌ந்தையின் குடும்ப‌ம் இன்று தெருக்கோடிக‌ளில் கூட‌ ம‌க்க‌ளால் பேச‌ப்ப‌டப்ப‌டுவ‌தில்லை ஏன்?"

"இங்கு க‌ழுதை தேய்ந்து க‌ட்டெறும்பாக‌வில்லை; க‌ண்மாசியாக்காணாம‌ல் போய் விட்ட‌தாக‌வே க‌ருத‌ வேண்டியுள்ள‌து".

க‌ட‌ந்த‌ கால‌ ந‌ல்ல‌ ப‌ல‌ நினைவுக‌ள் ந‌ம‌க்கு பெருமைய‌ளித்தாலும் நிக‌ழ்கால‌ ந‌ட‌ப்புக‌ள் ச‌ங்க‌ட‌த்தை த‌விர‌ வேறொன்றையும் அளிக்க‌வில்லை.

ந‌ல்ல‌ நினைவுக‌ளை இங்கு த‌ன‌க்கேயுரிய‌ பாணியில் ப‌கிர்ந்த‌ என‌த‌ருமை வாவ‌ன்னா சாருக்கு என் இனிய‌ ச‌லாமும், நீண்ட‌ ஆயுளுட‌ன் அவர்கள் வாழ‌ துஆவும் சென்ற‌டைய‌ட்டுமாக‌...

ஆமீன்....


மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

தன் உடல் நிலை போதிய ஒத்துழைப்பு தரவில்லை என்றாலும்.கொடை வள்ளல் அவர்களின் சேவைகளை அறியாமக்களுக்கு கொண்டு போய் சேர்த்து விட வேண்டும்.என்கிற துடிப்போடு பல விசயங்களை (அ.நி)
ரில் முத்திரை பதிக்கும் வாவன்னா பெரியப்பா அவர்களுக்கு உடல் வலிமையை கொடுத்து மென்மேலும் .செய்திகளை அறிய தருவதற்கு அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன்.

அதிரையில் கல்வி கூடம் உருவாக்கிய .அதற்க்கு உறுதுணையா இருந்தவர்களுக்கும் அல்லாஹ் ஆகிரத்தில் உயர் பதவியை கொடுத்தருள் வானாக.ஆமீன்.

Yasir said...

இத்தகைய அறிந்திராத அரிய தகவல்களை அறிய தந்த வாவன்னா சார் அவர்களுக்கு அல்லாஹ் பரிபூரண சுகத்தை கொடுக்கட்டும்..கல்விக்கு கண் திறந்த பெரியவர்களுகும் அல்லாஹ் சுவர்க்கத்தை கபூலாக்கட்டும் ஆமீன்

Yasir said...

//நேற்று வந்த கல்லூரிகள் எத்தனையோ தன்னாட்சி பல்கலைகழங்கங்களாக மாறியுள்ளதை நாம் கண்கூடாக காண்கிறோம்/// கோர்ட்டு, கேசு,அதிகாரம் யாருக்கு என்பதை பற்றியே சிந்தித்து கொண்டிருப்பதால்...இதைப்பற்றி நினைக்க நேரம் இல்லாமல் இருக்கலாம்...

Yasir said...

//அவர்கள் சொத்துக்களைக் கொடுத்து முத்துக்கள் ஆனார்கள், இவர்கள் சொத்துக்களைச் சேர்த்து, சொத்தைகலானார்க/// like it

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
----------------------------------------------

இங்கு நாம் ஒன்றை சிந்திக்க வேண்டும். அதாவது, நம் அதிரையை சுற்றி பட்டுக்கோட்டை மற்றும் கிராமங்களில் அன்று செல்வம் படைத்த தனவந்தர்கள் பலர் இருந்தனர். இவர்களுக்கெல்லாம் நம் பகுதியில் ஒரு கல்லூரியை உருவாக்க வேண்டு மென்ற ஓர் ஆர்வம் வரவில்லை. அந்த ஆர்வத்தை நம் கல்வித் தந்தை மர்ஹூம் SMS அவர்களுக்குத்தான் அல்லாஹ் நாடினான். அதன் விளைவாக கல்வி சாலைகள் பல அமைத்தார்கள். அழியாப் புகழ் கொண்டார்கள்.

1983 ல் மாளியக்காட்டில் Medical College ஆரம்பிப்பதற்காக அப்போது DR. U. MOHAMMED, Dean of Stanley Medical College அவர்களை அழைத்து மாளியக்காட்டு பகுதியை survey செய்து, 1984 ல் ஹஜ்ஜை முடித்து திரும்பியதும் Medical college ஆரம்பிக்க திட்டமிட்டார்கள்.

1984 ல் ஹஜ்ஜை முடித்து திரும்பியதும், அப்போது பிரபலமாக இருந்த computer course க்கு முக்கியம் கொடுத்து அதனை ஆரம்பித்தார்கள். ஆனால் Medical college திட்டம் செயல்படத் துவங்கியபோது, 02/10/1986 ல் இறைவனடி சேர்ந்தார்கள்.

நூர் முஹம்மத் / கதீப்-தமாம் / சவூதி அரேபியா.

ZAKIR HUSSAIN said...

நம் ஊர் பகுதியில் ஒரு மருத்துவக்கல்லூரி ஆரம்பித்து தஞ்சாவூர் பொது மருத்துவமனையை ப்ராக்டிகலுக்கு பயன்படுத்தினால் நல்ல மருத்துவர்களை உருவாக்கலாம்.

இதை இப்போது நாம் எழுதுகிறோம்...ஹாஜி எஸ்.எம். எஸ். ஷேக் ஜலாலுத்தீன் இருந்தால் இதுவரை நடைமுறைப்படுத்தியிருப்பார்.

ஹாஜி த.அ. அப்துல்ரஜாக் அவர்களைப்பற்றி நினைக்கும்போது ..எனக்கு கல்யாணம் ஆனவுடன் சொந்த பந்தத்தைவிட முதலில் அவர்வீட்டில்தான் விருந்துக்கு வர வேண்டும் என பிரியமான கண்டிப்புடன் என் வாப்பாவிடம் சொல்லி எங்களை அழைத்துப்போன அந்த நிகழ்வுதான் நினைவுக்கு வருகிறது.

நடந்தால் ஆரோக்கியமாக இருக்களாம் என்பதற்கான மிகச்சிறந்த எடுத்துக்காட்டு...ஹாஜி.த.அ.அப்துல்ரஜாக்

Thank you vaavanna sir , for sharing this memory.

அபூபக்கர்-அமேஜான் said...

அஸ்ஸலாமு அழைக்கும்

வாவன்னா சார் அவர்கள் இந்த நேரத்தில் கல்லூரியை பற்றி மிக அருமையாகவும்,அழகாகவும் வருனித்தியிருக்கிறார் என்று சொல்லலாமா அல்லது எழுதியிருக்கிறார்கள் என்று சொல்லலாமா? வாவன்னா சார் அவர்கள் அவர்களுடைய பழைய ஞாபகத்தை இப்பொழுது நினைவுபடுத்தியிருக்கிரார்கள். எஸ்.எம். எஸ்.ஷேக் ஜலாலுதீன் காக்கா அவர்கள் எந்த விதமான லாப நோக்கம் இல்லாமல். அதிரையில் உள்ள சகோதரர்கள் நன்றாக படித்து நமதூருக்கு பெருமையை சேர்க்க வேண்டும் என்ற நியத்தில்
கல்லூரியை ஆரம்பித்து இருக்கிறார்கள். இப்ப உள்ள கல்லூரிகள் எல்லாம் லாப நோக்கத்துடன் ஆரம்பித்தி இருக்கிறார்கள். அந்த காலத்தில் பள்ளிக்கு செல்வதற்கோ பட்டுக்கோட்டைக்கு போய் படித்து வந்துள்ளார்கள். ஆனால் இப்போ உள்ள பிள்ளைகள் சொந்த ஊரில் இருக்கும் பள்ளிகளுக்கே செல்வதற்கு தயங்குகிறார்கள். இப்போ உள்ள பெரியவர்கள் அந்த காலத்திலே ஒருசிலர் படிப்புக்கு முக்கியத்துவம் குடுத்து படித்தியிருக்கிரார்கள். இப்ப உள்ள பிள்ளைகளும் ஆர்வம் கொண்டு நன்றாக படித்து வருகின்றனர். இதற்கு பெற்றோர்களும் தமது பிள்ளைகளுக்கு ஊக்கப்படுத்தி நல்ல முறையில் படிக்க வைக்க வேண்டும். அந்த காலங்களில் படிப்பதற்கு கூட மின்சாரம் கிடையாது நம்ம ஊர் பேச்சில் சொன்னால் அரிக்கன் லைட்டும்,முட்ட லாம்பும் தான் இருந்து வந்தது. அந்த காலத்திலேயே சாப்பிடுவதற்கும்,பள்ளி செல்லுவதற்கும் மிக சிரமப்பட்டுத்தான் இருக்கிறார்கள். இதை எல்லாம் இப்போ உள்ள பிள்ளைகள் சிந்திப்பதில்லை. எஸ்.எம். எஸ்.ஷேக் ஜலாலுதீன் காக்கா அவர்களுடைய எண்ணம் நிறைவேறி விட்டது அவர்கள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தொழிற் பயிற்சி, கல்லூரி போன்றவைகள் ஆரம்பிக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்ததற்கு எல்லாம் வல்ல இறைவன் கபூல் செய்துவிட்டான். வாவன்னா சார் அவர்களுக்கும் எல்லாம் வல்ல இறைவன் உடல் நல்ல ஆரோக்கியத்தை கொடுப்பானாகவும் ஆமீன்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

Gentlemen,

Nowadays, we could not see any one like late Haji S.M.S. Shaik Jalaludeen anywhere else. To whatever and wherever it is, we have to pay money even to release our excreta or to safe our foot wears. He has dedicated uncounted money and his full efforts not only to our community to the human beings living in the surroundings for its and heir's brightest future. Whoever getting benefits through his noble characters will be deposited at his record in order to the hereafter's benefits as a "Sathakath-un-Zariyyah" Insha-allah.

If he had not think this valuable dedication at his time, his family would have richer family in the state now.

Somebody is called as "Father of Education". No, they all are "Father of Money". Without money motive no one is working or doing something in this world.

So, All that glitters are not gold.

May Allah bestow him the highter position in the Zannah...

Some one should be born like SMS at our hometown by the mercy of Allah in order to establish more charities and educational organizations to reap more scientists, doctors, engineers, advocates, IAS, IPS officers and in all goverment posts to rule in justice. Aameen....

May Allah fulfill our Hajaths in need and indeed.....

MSM Naina Mohamed

from Saudi Arabia.

sabeer.abushahruk said...

சரித்திரம் என்றாலே அலர்ஜி எனக்கு. ஆயினும் நம்மூரின் கடந்தகால சாதனைகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் நாமெல்லாமே.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
---------------------------------------

மிக அருமையான நினைவலைகள். சிறப்பாக அசைபோட்டு இருக்கிறார்கள் த. அ.அவர்கள். இன்று அதிரையில் சாதாரண குடும்பத்தில் பிறந்த எங்களைப்போன்றவர்கள் முதுகலைப் பட்டம் பெற்று நல்ல பதவிகளில் இருக்கிறோம் என்றால் பட்டுக்கோட்டையில் படிக்க செல்லும்போது மர்ஹூம் எஸ்.எம்.எஸ் அவர்களின் உள்ளத்தில் விழுந்த விதை என்று அறியும்போது உடல் சிலிர்க்கிறது. கல்வி நிறுவனங்கள் மட்டும் அதிரையில் தொடங்கப் படவில்லை என்றால் அதிரை ஏழை குடும்பத்தை சேர்ந்த பலர் பரோட்டா மாஸ்டராகவோ. சமையல்காரர்களாகவோ, அல்வா விற்ப வர்களாகவோத்தான் இருந்திருக்க முடியும்.

இது நிதர்சனம். ஆனால் எளிமையாக கிடைக்ககூடிய இந்த கல்வி வாய்ப்புகளை உள்ளூரில் இருக்கும் பலர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற உண்மையையும் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

நாம் இன்னும் முன்னேறி இருந்து இருக்க முடியும். இருந்தாலும் துஆச்செய்வோம்.

-இப்ராகிம் அன்சாரி- துபை.

Saleem said...

ஜாஹிர் ஹுசைன் சொன்னது:

//நடந்தால் ஆரோக்கியமாக இருக்களாம் என்பதற்கான மிகச்சிறந்த எடுத்துக்காட்டு...ஹாஜி.த.அ.அப்துல்ரஜாக்//


நான் எத்தனையோ முறை என் அப்பாவை பைக்கில் ஏறி போகலாம் என்று கூப்பிட்டுள்ளேன். நடந்து செல்வது தான் ஆரோக்கியம் என்று அடிக்கடி சொல்வார்கள்..

அவர்களிடம் நம் ஊர் பற்றிய அறிய பல தகவல்களை நிறைய பேர் வந்து கேட்பதை நான் பார்த்துள்ளேன்....


M.F.முஹம்மது சலீம்

Vavanna (உமர்தம்பிஅண்ணன்) said...

சரித்திரத்தை நடத்துகிற மாதிரி நடத்தினால், தரித்திரம் கூட கிரீடம் தரித்துக் கொள்ளும் !

சரித்திர ஆசிரியர்கள் அதை நடத்திச் செல்வார்கள் ! சரித்திரமோ என்னை நடத்திச் செல்லும் !!

-வாவன்னா

Vavanna (உமர்தம்பிஅண்ணன்) said...

பின்னூட்டங்களின் எடிட்டிங்கைப் பார்க்கும் போது எஸ் . பாலச்சந்தரின் பொம்மை நினைவுக்கு வருகிறது .

வா..

Automobile said...

Haji janab S.M.S. shaik jalaludeen was a great visionary to adirampattinam.
thank you all for posting such article.

Arif
SMS grand son

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு