Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

எண்ணமும் எழுத்தும் 52

அதிரைநிருபர் பதிப்பகம் | December 28, 2011 | , , , , ,


தப்பித்தது –
இது
கவிதை அல்ல
நல்லவேளை –
நான்
கவிஞனும் இல்லை!

இந்த
வார்த்தைக் கோர்வை
எதேச்சையானது
சொந்த
வாழ்கையைச் சொல்வதில்
சுயேட்சையானது

இது
பகுத்தறிவுப் பண்புகளைத்
தொகுத்தக் கணக்கு
வளைந்தும் நெளிந்தும்
வயலைச்சேரும் வரப்பு

இது
வைத்தியர்கள் இலக்கணமோ
மருத்துவச்சி அனுபவமோ
அவசியப்படாத
இயற்கை பிரசவம்

தேன் தடவிய
கசப்பு மருந்து
தீன் தடுத்திடாத
எழுத்து விருந்து.

இது
கர்ப்புள்ள பெண்டிர்
வேண்டிடும் கர்ப்பம்
கயமையை எதிர்ப்பதில்
தீண்டிடும் சர்ப்பம்

உபரிக் குறியீடுகளும்
உதிரிக் காகிதங்களும்
விரயமாகாததால்
விழலுக்கு
இது
வீணாவதில்லை

இது
கத்தரித்து வைக்கப்பட்ட
கட்டபொம்மன் மீசை
திருத்தி அமைக்கப்பட்ட
தீன்குலத்தோர் கேசம்

விளிப்புகளையும் அழைப்புகளையும்
அடிவருடல்களையும் தவிர்த்த
அறிவாகரனின் மேடைப்பேச்சு

கொண்டதைக் கொண்டே
கொள்கலன் அறியப்படும்
உண்டதைக் கொண்டே
உடல்நலம் சீர்படும்

ஏட்டோடு பழகாமல்
எழுத்தோடு மோதாமல்
எண்ணங்களைப் பார்க்கனும்
என்னவென்று புரியனும்

கெட்டதை சொல்லுமெனில்
கட்டுரையும் தீதே
கட்டுக் கதைகளையும்
தடுத்தே வைக்கனும்

கடமையை மறந்து
ஜடமாய் வாழ்பவனை
எண்ணமும் எழுத்தும்
திண்ணமாய் எழுப்பும்

எழுதிப் படைப்பவன்
இறந்து மடிந்தபின்னும்
எண்ணமும் எழுத்தும்
இன்னமும் நிலைக்கும்

- Sabeer abuShahruk

52 Responses So Far:

Unknown said...

"தேன் தடவிய
கசப்பு மருந்து
தீன் தடுத்திடாத
எழுத்து விருந்து."

"எழுதிப் படைப்பவன்
இறந்து மடிந்தபின்னும்
எண்ணமும் எழுத்தும்
இன்னமும் நிலைக்கும்."

உண்மை! உண்மையிலும் உண்மை...!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//தப்பித்தது –
இது
கவிதை அல்ல
நல்லவேளை –//

:) என் புன்னகை
பதிலாக இருக்கட்டுமே ! :)

//வாழ்கையைச் சொல்வதில்
சுயேட்சையானது//

எதேட்சையான வரிகள்.. !

//உபரிக் குறியீடுகளும்
உதிரிக் காகிதங்களும்
விரயமாகாததால்
விழலுக்கு
இது
வீணாவதில்லை//

அதெப்படி வீணாகும் !

//எழுதிப் படைப்பவன்
இறந்து மடிந்தபின்னும்
எண்ணமும் எழுத்தும்
இன்னமும் நிலைக்கும்//

அதே அதே அதே....

கவிக் காக்கா ! எண்ணத்திற்கும் எழுத்திற்கும் மகுடம் !

sabeer.abushahruk said...

//உண்மை! உண்மையிலும் உண்மை...! //

ஆஹா...மோதிரக்கையால் குட்டல்ல...தட்டு!

ஜஸாகல்லாஹு ஹைரா காக்கா.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//நான்
கவிஞனும் இல்லை!//

ஒரு போதும் ஏற்க மாட்டோம்.
--------
//வளைந்தும் நெளிந்தும்
வயலைச்சேரும் வரப்பு//

வளையாத மூளைக்கும் சேரும் வாய்ப்பு.
--------
//அவசியப்படாத
இயற்கை பிரசவம்//

அதுவே கவிஞனின் அனுபவம்.
------
//தீன் தடுத்திடாத
எழுத்து விருந்து.//

செவிக்குள் எக்ஸ்ப்ரஸ்ஸாய் அனுப்பிடும் பேருந்தும் கூட!
------
//எண்ணமும் எழுத்தும்
இன்னமும் நிலைக்கும்//

உங்களைப்போல் கவிஞர் உள்ளவரை!

KALAM SHAICK ABDUL KADER said...

//இயற்கை பிரசவம்//

கவிஞன் ஈன்றெடுக்கும்
கவிதை குழந்தை
அதனை வெளிக்கொணர
அனுபவிப்பதோ சுகமான வேதனை

இத்துணைக் கவிதை குழந்தைகளை
ஈன்றெடுத்த நீர் "கவிஞன் இல்லை"
என்றால்...
தாய்மையுடையவள் தன்னைத்
தானே "மலடி" என்றால்

தாய்மையும் கவிதையும்
பொய்மையாகி விடுமே..!!

வாய்மையுடன் வாழ்த்துகின்றோம்
வாய் நிரம்பிய வார்த்தைகளால்
வாழ்க கவிவேந்தரே
சூழ்க புகழெலாம்

உன்றன் தலை
தட்டிய மோதிரக்கை
என்றன் பாக்களில்
தளை தட்டியதைத்
தட்டி நிமிர்த்திய பொற்கை

மரபுப்பா வண்ணத்துப்பூச்சி- மணம்
பரப்பும் புதுக்கவிதை மலரினை
நேசிக்க ஈர்த்திட்டவன் நீ
வாசிக்க வைத்த
வார்தைகளைக் கோர்த்திட்டவன் நீ

உன்றன் கவிதைகள் கிறுக்கல்
என்றா படத்தை நெறியாளர்
கிறுக்கி வைத்தார்? யான்
மறுத்து வைக்கின்றேன்
மன்னிப்புக் கேட்பார் என்றே
உன்னிப்பாய் அவதானிப்பேன் இன்றே

எண்ணங்கள் கவிதையாய் ஆனாதால்
எழுத்துக்களும் கவிதையாய் ஆனதும்
உள்ளத்தில் ஊறிக் கிடப்பதெலாம்
உளவியல் தானென்றும் யானறிவேனே

நடுநிசியில் நான் எழுதும்
கடுதாசி இதுவென்பதும்
உனைநேசிப்பதில் இரவும் பகலும்
நான் சுவாசிக்கும் மூச்சாகும் சாட்சி இது

crown said...

தப்பித்தது –
இது
கவிதை அல்ல
நல்லவேளை –
நான்
கவிஞனும் இல்லை!
-------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.
சொல்லித்தெரிவதில்லை பூவின் வாசம்!புலவனின் புலமை தரம்.!

crown said...

இந்த
வார்த்தைக் கோர்வை
எதேச்சையானது
சொந்த
வாழ்கையைச் சொல்வதில்
சுயேட்சையானது.
---------ஆனாலும் முத்திரை பதிப்பது! இதயத்தில் இதமாய் ஆட்சி செய்வது!---------------------------

crown said...

இது
பகுத்தறிவுப் பண்புகளைத்
தொகுத்தக் கணக்கு
வளைந்தும் நெளிந்தும்
வயலைச்சேரும் வரப்பு
-----------------------------------
இது வாழ்வியலை பாடம் நடத்தும் வகுப்பு! பகுத்து அறிவை தரும் வரவு! இதில் ஆகும் செலவும் லாபமாய் முடியும்!மொத்தத்தில் தீர்ந்துவிடாத புவி ஈர்ப்பு!

crown said...

மன்னித்தருள்க! சிறிது பணி முடித்து மறுபடியும் வருவேன் இன்ஷாஅல்லாஹ்.அதுவரை... இந்த கவிஞரின் கவிதையை ரசித்து மகிழுங்கள் என்னைபோல>>>

sabeer.abushahruk said...

//உன்றன் கவிதைகள் கிறுக்கல்
என்றா படத்தை நெறியாளர்
கிறுக்கி வைத்தார்? யான்
மறுத்து வைக்கின்றேன்
மன்னிப்புக் கேட்பார் என்றே
உன்னிப்பாய் அவதானிப்பேன் இன்றே//

கவியன்பன்,

இது அபு-இபுறாகீம் கிறுக்கியதல்ல; அவர்தம் மகன்-இபுறாகீம் வரைந்தது! முற்றிய கோலல்ல; பிஞ்சுத் தூரிகை! இப்பொழுது சொல்லுங்கள், மன்னிப்பு வேண்டுமா இன்னும் இந்த இனிப்பு வேண்டுமா? :)

பிஞ்சுத் தூரிகை என்றதும் ஒரு சம்பவத்தத் தங்களுடன் பகிர்ந்து மகிழ விழைகின்றேன். கீழே உள்ளது நான் எழுதி சத்திய மார்கம் மற்றும் திண்ணையில் பிரசுரமானது. இதை எழுதி முடித்தபின்பு நான்கூட "கிறுக்கல்கள்" என்றுதான் தலைப்பிட்டு நம்ம தலைமை வாத்தியார் ஜமீல் காக்காவிடம் தந்து அபிப்பிராயம் கேட்டேன். அவர்கள் வீட்டுச் சுவற்றிலும் இவற்றை நான் கண்டுள்ளேன். 

காக்கா அவர்கள் மிகவும் ரசித்து  தலைப்பை மாற்றி "பிஞ்சுத் தூரிகை" என்றாக்கித் திருப்பித் தந்தார்கள். அப்பொழுதுதான் கிறுக்கல்களுக்கும் பிஞ்சுகளின் கிறுக்கல்களுக்கும் உள்ள வேறுபாடு விளங்கியது.

அவர்கள் செய்த திருத்தங்களிலேயே அழகிய திருத்தமாக நான் இதைத்தான் இன்றும் வியக்கிறேன்.

sabeer.abushahruk said...

71) பிஞ்சுத் தூரிகை!
 
அடுத்த வாரமாவது
சுவருக்குச்
சாயம் அடிக்கச் சொன்னாள் மனைவி.
 
வட்டங்களும் கோடுகளுமாய்
மனிதர்கள்
சதுரங்களும் செவ்வகங்களுமாய்
கொடிகள் 
ஏனல் கோணலாய் ஊர்வலம்

இரண்டு சக்கர
போலீஸ் காரும்
காரைவிட
பெருத்த விளக்குகளும்
 
விதவிதமான பந்துகளும்
விரட்டும் ஜந்துக்களும்
ஆங்கில எழுத்துகளும்
அதன் தலைகளில் கொடிகளும்
 
டி ஃபார் டாக்கும்
எஃப் ஃபார் ஃபிஷ்ஷும்
குச்சிக் குச்சி கைகளோடு
குத்தி நிற்கும் சடைகளோடு
வகுப்புத் தோழிகளும்
 
உடலைவிடப் பெருத்த
தும்பிக்கையோடு
கால்களைவிடப் பெரிய
வாலுடன்
யானையும்
 
மூவர்ண நிறத்தில்
முக்கோண வீடும்
வாசலைவிடப் பெரிய
சன்னலும்
பாதை யோரப் பூக்களும்
 
மேகப் பொதிகளுக்குள்
மஞ்சள் சூரியனும்
புகை கக்கும் விமானமும்
 
நதியும்
நான்கிதழ்ப் பூச்செடிகளும்
ரெட்டைத் தென்னையும்
கூட்டமான பறவைகளும்
ஆங்கிலத்தில் தன் பெயரு மென

அழகா யிருந்தது சுவர்!
 
கற்றுக்கொள்ள கிறுக்கியதைவிட
வெற்றுச் சுவர்
அழகல்ல
என உணர்ந்து
 
சுவருக்குச்
சாயம்ப் பூசச் சொன்ன
மனைவிக்குச்
சரி யெனப்
பொய் சொன்னேன்
... தடவையாக !
 

Unknown said...

சலாம் சபீர் காக்கா,

இது புதுசு ..வாசர்களுக்காக எழுதப்படும் கவிதைகள்

மத்தியில் எழுத்தாளர்களுக்கு ஒரு கவிதை ......அருமை ...

\\இது
பகுத்தறிவுப் பண்புகளைத்
தொகுத்தக் கணக்கு
வளைந்தும் நெளிந்தும்
வயலைச்சேரும் வரப்பு

இது
வைத்தியர்கள் இலக்கணமோ
மருத்துவச்சி அனுபவமோ
அவசியப்படாத
இயற்கை பிரசவம்//

நிஜம் .........இலக்கணம் ஒரு மொழியின் உயிர்ப்புக்கும் ,வனப்பிற்கும்

இன்றியமாதவை .ஆனால் நல்லதை சொல்ல இலக்கணம் மீறுவது தவறில்லை

//கவிஞன் ஈன்றெடுக்கும்
கவிதை குழந்தை
அதனை வெளிக்கொணர
அனுபவிப்பதோ சுகமான வேதனை//

இதுவும் நிஜம் ......கலாம் காக்கா மாதிரி

இலக்கணம் பிறழாமல் எழுதும் கவிஞகர்களுக்கு

நிச்சயம் சுகமான வேதனைதான் .

-------------------------------------------------------------------------

பொதுவாக நல்ல எழுத்துக்களை எழுதும் எழுத்தாளர்கள்

அனைவரும் அடிபடையில் நல்ல உள்ளம் கொண்டவர்களாக

இருப்பார்கள் என்பது என் நம்பிக்கை .


பொறாமை பட வைக்கும் படைப்பு சபீர் காக்கா ......வாழ்த்துக்கள்

crown said...

இது
வைத்தியர்கள் இலக்கணமோ
மருத்துவச்சி அனுபவமோ
அவசியப்படாத
இயற்கை பிரசவம்.
-----------------------------------------
சிந்தனைக்கருவின் சீரிய குழந்தை!
தூக்கி எடுத்து பார்த்தால் நம்மை
கவ்விக்கொள்ளும் வசீகரம்!
நடை பழகும்விதம் தவளும் சிகரம்!
மழலையின் முத்தம்!
பெண்ணின் கைவளையல் சினுங்கள்.

crown said...

தேன் தடவிய
கசப்பு மருந்து
தீன் தடுத்திடாத
எழுத்து விருந்து.
--------------------------
அருமை! பசப்பும் பொய் கலக்காத பசும் நெய் கலந்ததுபோல் மனதை மணத்தால் கவரும் செவிக்குணவு!

crown said...

இது
கர்ப்புள்ள பெண்டிர்
வேண்டிடும் கர்ப்பம்
கயமையை எதிர்ப்பதில்
தீண்டிடும் சர்ப்பம்

உபரிக் குறியீடுகளும்
உதிரிக் காகிதங்களும்
விரயமாகாததால்
விழலுக்கு
இது
வீணாவதில்லை
---------------------------------------------
ஆமாம் தீண்டவேண்டிய இடத்தில் படம்மெடுத்து மெய்யாக பொய்மை தீண்டும் சர்பம். நல்ல உவமானம்

crown said...

கெட்டதை சொல்லுமெனில்
கட்டுரையும் தீதே
கட்டுக் கதைகளையும்
தடுத்தே வைக்கனும்

கடமையை மறந்து
ஜடமாய் வாழ்பவனை
எண்ணமும் எழுத்தும்
திண்ணமாய் எழுப்பும்

எழுதிப் படைப்பவன்
இறந்து மடிந்தபின்னும்
எண்ணமும் எழுத்தும்
இன்னமும் நிலைக்கும்
-----------------------------------------------
இங்கே கவிதை வாழ்கிறது, வாழ்ந்துகொண்டிருக்கிறது, இனியும் வாழும். வித்தக கவிஞரின் மெச்சத்தக்க கவிதையைப்பற்றிய கவிதை! இதயத்தை தொற்றிய குளிர் நெருப்பு! இதனை வாசிப்பதில் மூளை கொஞ்சம் கதகதப்பாய் இருந்து மீண்டும் சுறு,சுறுப்பாய் இயங்க நல் கிரியாஊக்கி!மொழியை உச்சத்தில் தூக்கி நிறுத்தி அழகு பார்க்கிறது.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

மோதிரக்கை குட்டென்ன‌
மோசமானவர்கள் திட்டு கூட‌
உம் கவிவரிகளுக்கு இஷ்டப்பட்டு
வரிசையில் நிற்கும் கட்டுப்பட்டு.

பொற்கொல்ல‌ன் ம‌க்க‌ள் விரும்பும் வ‌டிவ‌த்தில் பொன்நகையை வ‌டித்தெடுப்ப‌து போல் சொற்கொல்ல‌னாகிய‌ நீங்க‌ள் மக்க‌ள் விரும்பும் வ‌டிவ‌த்தில் நல்ல க‌விதையாய் எப்ப‌டித்தான் வடித்தெடுக்கிறீர்க‌ளோ?

சபீர்காக்காவுக்கு வாழ்த்துக்க‌ள்...

Unknown said...

சொற்கொல்லன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தமிழ் கூறும் நல்லுலகுக்கு நெய்னாவின் அர்பணிப்பு :)

Unknown said...

சொற்கொல்லன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தமிழ் கூறும் நல்லுலகுக்கு நெய்னாவின் அர்பணிப்பு :)

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

சும்மா லைட்டா...."சொற்கொல்லன்" means, whoever making the words by swinging in the cradle not in the cave. It should not killing the minds through the spill of cruel words.

எதோ நம்மனாலெ முடிஞ்ச எக்ப்ளனேசனு....

sabeer.abushahruk said...

இது இந்தப் பதிவுக்கான ஏற்புரை அல்ல:::

கீழ்கண்ட இறை வசனத்தைச் சுட்டிக்காட்டி "கவிதை வேண்டாம்" என்று எனக்குப் பிடித்த வலைஞர்களுல் ஒருவரான அதிரை சகோதரர் ஒருவர், மற்றொரு மின்னஞ்சல் குழுமத்தில் சொன்ன...

1வது விநாடியின்
ஆதங்கத்தில்
உதித்த
இந்த எண்ணம்
1200வது நொடியில்
எழுத்தாகி முடிந்தது!

அந்த வசனம்:
//இன்னும் புலவர்கள் (எத்தகையோரென்றால்) அவர்களை வழிகேடர்கள் தாம் பின்பற்றுகிறார்கள்.//

நான் சொல்வது:
//"லாயிலாஹ இல்லல்லாஹ் முஹமதுர்ரஸூலுல்லாஹ்" எனும் ஓரிறைக் கொள்கையில் ஈமான் கொண்ட, ஐந்துவேளை தொழுது வருகின்ற (இயன்றவரை), சுன்னத்தானவற்றையும்கூட சேர்த்தே நோன்பு வைக்கின்ற, குரான் ஓதுகின்ற, ஸகாத் கொடுக்கின்ற, என் பெற்றோர் மற்றும் மனைவி மக்களோடும் நண்பர்களோடும் என மூன்றுமுறை ஹஜ் செய்த, இயன்றவரை ஏழைகளுக்கு உதவியும், கொடு , தொழு, பகிர் என்றெல்லாம் சமுதாயத்திற்கு புத்தி சொல்லியும் வருகின்ற என்னைத் தொடர்தல் வழி கேடா?//

இது நம் ஹார்மிஸ் அப்துர்ரஹ்மான் சொன்னது:
//பொதுவாக நல்ல எழுத்துக்களை எழுதும் எழுத்தாளர்கள்.
அனைவரும் அடிபடையில் நல்ல உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பது என் நம்பிக்கை// .

இது யாஸிர்:
//இஸ்லாம் இனிமையானது ,எளிதானது,அதை கடினமாக்க முயற்ச்சிக்காமல் கவனமாக
கையாள்வது நம் அனைவரின் பொறுப்பு..மார்க்கதிற்க்கு புறம்பாக இல்லாத
எதுவும்,எழுத்தாலும் சரி,கவிதையானலும் சரி ரசிக்கலாம் என்பது என் கருத்து....//

இது முகி அபூபக்கர்:
//நபி(ஸல்)அவர்கள் காலத்தில் முஸ்லிம்களிலும் கவிஞர்கள்
இருந்ததால், இணைவைப்பு இல்லாத கவிதைகளை ஆதரித்தார்கள்//

இது எம் ஹெச் ஜே:
////வளைந்தும் நெளிந்தும்
வயலைச்சேரும் வரப்பு
வளையாத மூளைக்கும் சேரும் வாய்ப்பு.//

இது அபு இபுறாஹீம்:
//கவிதைன்னா என்னான்னு சீரியஸா தெரிய ஆரம்பிச்சு, அது எப்படி உணர்வுகளோடு ஒட்டியிருக்கு ரசனைகள் வெளிக்காட்டாவிடினும் உணர்ந்தவர்களின் எழுச்சி, விசும்பல், ஏக்கம், தாக்கம், சீண்டல் என்று... //

இது அஹ்மது காக்கா அவர்கள்:
//நபித்தோழர்களுள் பலர் இயல்புக் கவிஞர்களாக இருந்துள்ளனர்.  அவர்கள் பாடிய கவிதைகளை நபியவர்கள் பாராட்டியும் உள்ளார்கள்.  ஏன், நபியவர்களே சில வேளைகளில் கவி பாடியும் உள்ளார்கள்; போர்க்களத்தில்கூட!//

இது நம் தாஜுதீன்:
//நபிகளார் காலத்தில் கவிதைகளால்  வாசைபாடி யூதர்கள் திரிந்தார்கள் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கவிதை பாடுங்கள் என்று கட்டளையிட்டுள்ளார்கள் என்பது மேல் சொன்ன ஒரு நபிமொழியில் அறியமுடிகிறது. //

இது எம் எஸ் எம் நெய்னா:
//மோசமானவர்கள் திட்டு கூட‌
கவிவரிகளுக்கு இஷ்டப்பட்டு
வரிசையில் நிற்கும் கட்டுப்பட்டு.//


இது கிரவுன் தஸ்தகீர்:
//இதயத்தை தொற்றிய குளிர் நெருப்பு! இதனை வாசிப்பதில் மூளை கொஞ்சம் கதகதப்பாய் இருந்து மீண்டும் சுறு,சுறுப்பாய் இயங்க நல் கிரியாஊக்கி!மொழியை உச்சத்தில் தூக்கி நிறுத்தி அழகு பார்க்கிறது.//

இது கவியன்பன் கலாம்:
//இன்று வரை கோடிக்கணக்கானோர் மனனம் செய்ய -ஞாபகத்தில் வைத்திட வசதியாக இந்த சந்தம் (”ஈற்றெதுகை”) பெரிதும் உதவியாக இருப்பதும் ஓர் உண்மை! செய்யுளாகவும், நற்போதனைகளாகவும் பாடல்கள் பொய்யினை விட்டும் தவிர்ந்திடத்தானே வலியுறுத்துகின்றன.//

இது நம் ஜமீல் காக்கா:
//இணைவைப்புக் கலவாத எந்தச் சொல்லும் ஹராமாக்கப்படாடதது போன்றே, இஸ்லாத்திற்கு முரணற்ற கவிதைச் சொற்களும் ஹரமானதல்ல //

முத்தாய்ப்பாய் தீர்ப்பைத் தக்கவைத்துக்கொண்டிருக்கும் நம்ம நாட்டாமை:
//'கவிதை - ஓர் இஸ்லாமியப் பார்வை' எனும் தலைப்பில், கடந்த அனைத்துலக இஸ்லாமிய இலக்கியக் கழக எட்டாவது மாநாட்டில் நான் வழங்கிய ஆய்வுக் கட்டுரையை 'அதிரை நிருபர்' தளத்தில் தொடராகப் பதிக்கட்டுமா?
- அதிரை அஹ்மத்//

KALAM SHAICK ABDUL KADER said...

உங்களிடம் ஆழமான உணர்வுகள், மெல்லிய மற்றும் மிருதுவான உளவியல்பூர்வமான எண்ணங்கள் யாவும் இயற்கையில் இறைவன் உங்களுடன் படைத்துவிட்டான்; அதனாற்றான், உங்களின் கவிதைகள் காப்பியமாகின்றன;விமர்சனங்களும் கவிதை உடை உடுத்திக் கொள்கின்றன!

உங்களின் அடியொற்றியே தொடர்கின்றேன்
உங்களின் கிளையிலே படர்கின்றேன்
வாசிப்பதற்கும்
நேசிப்பதற்கும்
வசதியாகவும்
மரபின் மூச்சடக்காமல்
நிரப்பமாய் சுவாசிக்கவும்
கற்றுத் தந்த
கவிவேந்தரின்
ஒவ்வொரு அடியும் கவிதையே
ஒவ்வொரு நொடியும் நினைப்பேன் அதையே

மன்னிப்புக் கேட்கின்றேன்
மன்னிப்புக் கேட்டதற்க்கு
இனிப்பாய் உணர்ந்தேன்
தனிப்பாவில் குழந்தை
தூரிகை கிறுக்கல் கவிதை
வாரிச் சென்றது மனதை

உங்களின் மனமும் குழந்தை
உணர்த்திடும் உங்கள் கவிதை
ஈரப்பதம் காண்கின்றேன் அதில்
"ஈரம்" என்னும் என்றன் கவிதை
உங்கள் குழந்தை மனதை
ஈர்த்ததும் காரணம் அஃதே..

என்றன் எண்ணமும்
உன்றன் எண்ணமும்
ஒன்றே என்றே
இங்கே முழங்கு..!..


பாட்டாண்மை மிக்கப் பழம்பெரும் பாவலர்
நாட்டாண்மை யாகிய நற்றலைவர் அஹ்மத்
முடிவினை சொன்னால் முழுமை யடையும்
விடிவினை காண்போம் விரைந்து.

sabeer.abushahruk said...

அப்துர்ரஹ்மான்,

எம் எஸ் எம்முக்கு சார்பாக ஒரு சமாளிஃபிகேஷன்:

ஆட்டைக்கொன்றபின்தானே பிரியானி சாத்தியம்
கோழியைக் கொன்றபின்தானே குருமா சாத்தியம்
மீனைக்கொன்றபின்தான் ஆனம் சாத்தியம்

அதுபோல்,

பொன்னைக் கொன்று நகையாக்கியதால் பொற்கொல்லன்?
சொல்லைக் கொன்று வாக்கியமாக்கியதால்/கவிதையாக்கியதால் சொற்கொல்லன்?

(ஸ்ஸ்ஸ் அப்பாடா....சோடா ப்ளீஸ்)

ZAKIR HUSSAIN said...

//ஆட்டைக்கொன்றபின்தானே பிரியானி சாத்தியம்
கோழியைக் கொன்றபின்தானே குருமா சாத்தியம்
மீனைக்கொன்றபின்தான் ஆனம் சாத்தியம்//

இப்படியெல்லாம் உதாரணம் கொடுத்தால் சைவ பார்ட்டிகள் கூட சீரியல் கில்லர் ஆயிடுவாங்க பரவாயில்லையா?...

KALAM SHAICK ABDUL KADER said...

பொருத்தமான இடத்தில்
பொருத்தமான சாதனங்களைப்
பொருத்தும் பொறியியல் வல்லுனரே
கருத்தும் நயமும் மிக்க கவிவேந்தரே

வேறு இழையின் நாற்றங்கால்களை
சேறு படாமல் இதமாகப் பதியமிட்டீர்
வேறுபட்டக் கருத்துக்களைக் களை எடுத்தீர்
கூறுபோடமலே கூர்மையாய்க் கூறினீர்

KALAM SHAICK ABDUL KADER said...

//
இந்த வரிகளை எழுதும் முன்பாக என் மனதில் வருடிய வரிகள்:

உன்றன் தலை தட்டிய
மோதிரக்கை தான்
என்றன் பாக்களில் தளை தட்டிய
பொழுதெல்லாம் அதனைத்
தட்டித் தட்டித்தட்டிச சீராக்கிய
தட்டார் அல்லது பொற்கொல்லர்

என்றுதான் முதலில் வரிகள் விழுந்தன
"தட்டார் அல்லது பொற்கொல்லர்" என்ற வரிகளை நெறியானது இல்லை என்று நெறியாளர் நிறுத்தி வைத்துவிடலாம் அல்லது மாண்பு மிக்க நம் தலைவரின் மனதைப் பாதிக்கும் என்றும் எண்ணியதால் விடுத்தேன்.அதனால் "பொற்கை" என்று போட்டேன். அதுவேப்போல, MSM அவர்களும் சமொயோசிதமாகவே "சொற்கொல்லன்" என்றே புதிய வரவை புகுத்தி விட்டார்கள். கவிவேந்தர் சபீர் அவர்கள் எண்ணம் எனது எண்ணம் தான் என்பதற்கு அவர்கள் முந்தையப் பின்னூட்டத்தில் சொன்னதுபோல் "நான் சொல்ல வந்ததையே ..." அவர்களும் சொல்லிவிட்டார்கள். ஆம்.
"கொல்லன்"என்றால் வார்த்தைகளைக் கொல்லுபவனாச்சே?! "why this ............" போல..

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வேலைப் பளு(ன்னா) இப்படியா இருக்கும் ? ஆங்கில வருடக் கடைசி(ன்னா) பெண்டெடுப்பாங்களோ ?

இப்போதானுங்க... எல்லாத்தையும் வாசிக்கிறேன்... :)

சரி தலைக்கு பூ வேனும்னு கேட்டாங்க காக்கா அதானால தலைப்'பு' நிறைய மலேசியாவுக்கும் அனுப்பிட்டேன்... எப்போது மாலை வருமோ என்றும் காத்திருக்கேன்.... கவணிங்களேன் அ.க.

பிஞ்சுக் கரங்களில் கணினித் துகல் தூரிகையை காட்டி வா என்னோடு செல்லும் வழியெல்லாம், சொல்லும் வண்ணமெல்லாம், துள்ளும் வரிகளாக என்று தத்தி தத்தி வண்ண நடை பயின்ற சிறுசுவின் தொக்குப்புகள் எகிறிக் கொண்டிருக்கிறது... :) அதில் ஒன்றுதான் கவிதைக்கு கருதான் கொடுக்க முடியவில்லை கலராவது கொடுக்கலாமே என்றும் கொடுத்து வைத்தேன்... (யாருக்கும் என் மேல கோபமில்லையே ?)

கிரவ்னின் ஜெராக்ஸ் ஒன்றின் குரல் கேட்டேன் ஆனால் சென்று பார்க்க இன்னும் நேரம் அமையவில்லை (வேலைப் பளுன்னா இப்படியா இருக்கும்னு சொன்னது இதுக்குதானுங்க)... தவிக்கிறேன்... !

Anonymous said...

அன்பின் வாசகக நேசங்களுக்கு:

சமீபத்தில் கருத்துப் பகுதியில் பதியும் கருத்துக்கள் புதியன ஒன்றன் மேல் ஒன்றாக வந்திடும் வகையில் மாற்றம் செய்திருந்தோம், அதன் பின்னர் அதிரைநிருபர் வலைத்தளாத்தில் சில நுட்பத் தடங்கல்கள் தொடர்ந்தததால் மீண்டும் தனிக் குடில் (blogger) இயல்பிலேயே (default) அமைத்திருந்த முதல் கருத்து முதலிலும் அடுத்தடுத்து பதியும் கருத்துக்கள் அதன் கீழும் வரும்படி மாற்றியமைத்திருக்கிறோம்...

"அட ! என்னடா இது எக்குதப்பா இருக்கேன்னு.." அன்று பதியப்பட்ட அழகிய கருத்தினையும் மிகவும் ரசித்தோம் :) இது வலை(ப்பூ)தளங்கள் என்றால் சிக்கல்(களும்) இருந்தால்தானே ஒன்றுக் ஒன்றாக பின்னிக் கொண்டிருப்போம் நாமும் !

நான் சொல்வதும் சரிதானே !?

அன்புடன்

நெறியாளர்

KALAM SHAICK ABDUL KADER said...

நெறியாளர் அவர்கள்
நெஞ்சை நெகிழ வைத்து
பிஞ்சுக் கைகளின்
பிசகாத ஓவியங்களை
பிசகாகப் புரிந்துகொண்டமைக்கு
நிசமாகவே மன்னிப்பை
நானேச் சொல்லி விட்டாலும்

சபீர் கவிதையின் மேல் கொண்ட என் காதல்
அபிப்ராய பேதம் கூடாது என்றே
சாடினேன் அவ்வண்ணம் என்பதே உண்மை
பாடினேன் ஒப்புநோக்கியப் பரவசத் தன்மையில்
காதலுக்குக் கண்ணில்லை யாதலால்
காதற்கொண்ட அக்கவிதைக்கு இடம்பிடித்தது
பொருத்தமானதாக இல்லையே என்று அடம்பிடித்த
வருத்தமான என்றன் கருத்தினை இட்டேன்.

குழந்தை மனம் கொண்ட கவிஞரின் கவிதைக்குக்
குழந்தையின் தூரிகைக் கவிதையேச்
சாலச் சிறந்தது

KALAM SHAICK ABDUL KADER said...

"சொற்கொல்லன்" என்ற பதம் மனதைப் பதம் பார்த்துவிடலாம்;"ஒரு சொல் வெல்லும்; ஒரு சொல் கொல்லும்" என்பார்கள். எனவே, இப்படியும் அர்த்தம் தொணிக்கும் தோரணை அதனுள் அடக்கம்; இதனை வெளிப்படுத்தாமல் "தன்னடக்கம்" காரணமாக கவிவேந்தர் சபீர் அவர்கள் "சமாளிஃபிகேஷன்" செய்வதாக எனக்குப் பட்டதால் முந்தையப் பின்னூட்டத்தில் இதுபற்றி "வார்த்தைகளைக் கொல்பவன்" என்ற அர்த்தம் தொனிக்கும் என்பதே என் கருத்தாகப் பதிந்தேன். இதில் சகோ.எம் எஸ் எம் அவர்களைக் குற்றம் சாற்றுவதாகக் கருத வேண்டா.

மீண்டும் சொல்கின்றேன்:

சபீர் கவிதையின் மீது அடியேன் கொண்ட காதலே காரணம்

Ahamed Arif (Arabic Institute of Commerce) said...

والشعراء يتبعهم الغاوون ألم تر أنهم في كل واد يهيمون وأنهم يقولون ما لا يفعلون إلا الذين آمنوا وعملوا الصالحات وذكروا الله كثيرا وانتصروا من بعد ما ظلموا وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون .

இன்னும் புலவர்கள் (எத்தகையோரென்றால்) அவர்களை வழிகேடர்கள் தாம் பின்பற்றுகிறார்கள். (224) நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் (பாதையிலும்) அலைந்து திரிவதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? (225) இன்னும் நிச்சயமாக, தாங்கள் செய்யாததைச் (செய்ததாக) அவர்கள் சொல்லுகிறார்கள். (226) ஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற்செயல்கள் செய்து அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்து (தங்களுக்கு) அநியாயம் செய்யப்பட்ட பின்னர் தங்களுக்கிடையில் (நியாயத்திற்காக) உதவிக் கொள்வார்களே அவர்களைத் தவிர (மற்றவர்கள் குற்றவாளிகள்தாம்) அநியாயம் செய்தவர்கள், தாங்கள் எங்கு திரும்பச் செல்லவேண்டு மென்பதையும் திட்டமாக(ப் பின்னர்) அறிந்து கொள்வார்கள். (227)
(அல்குர்ஆன் / 26:224-227)

சபீர்காக்கா அவர்களிடம் அதிரை சகோதரர் ஒருவர் கவிதை வேண்டாம் எனக் கூறியது கவிஞர்களைப் பற்றிக் கூறும் மேற்கண்ட குர்ஆனின் வசனத்தை இதுபோன்று சில – அல்ல – பல சகோதரர்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்கள் அல்லது தவறாகப் புரிய வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெளிவாகின்றது. அது என்னவெனில், 224, 225, 226 ஆகிய வசனங்கள் கவிஞர்களிடம் காணப்படும் தவறான ஒரு குணத்தைக் கண்டித்தாலும், அதன் பின் 227ஆம் வசனத்தில் / ஆனால், ஈமான் கொண்டு ஸாலிஹான நற்செயல்கள் செய்து அல்லாஹ்வை அதிகமாகத் தியானம் செய்து (தங்களுக்கு) அநியாயம் செய்யப்பட்ட பின்னர் (அதற்காக) பழிதீர்த்துக் கொண்டார்களோ அவர்களைத் தவிர என்ற வசனத்தையும் சேர்த்துப் படிக்காததன் காரணம் தான்.

‘இது நிராகரிப்பவர்களைக் குறிக்கின்றது, அதாவது இறைநிகாரிப்பைச் செய்யும் கவிஞர்களைக் குறிக்கின்றது. அவர்களையே மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள வழிகெட்டோர் பின்பற்றுகின்றார்கள்’ என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இந்த வசனத்திற்கு விளக்கம் அளித்துள்ளார்கள். எனவே, இந்த வசனம் மார்க்க விதிகளுக்குட்பட்டுக் கவிதைகள் பாடும் கவிஞர்களைக் குறிக்காது என்பதை நாம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.
‘ஒரு முறை நான் நபி (ஸல்) அவர்களுடன் வாகனத்தில் ஒன்றாகப் பயணித்துக் கொண்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், உம்மிடம் உமய்யா இப்னு அபிஸ்ஸல்த் என்ற கவிஞரின் பாடல்கள் ஏதும் (மனனமாக) இருக்கின்றதா? என்று கேட்டார்கள். அதறக்கு நான் ஆம் என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் சரி, பாடிக் காண்பியுங்கள் என்றார்கள். நான் ஒரு கவிதையை அவர்களுக்குப் பாடிக் காட்டினேன். பின்னர், நபி (ஸல்) அவர்கள், இன்னும்... என்றார்கள். மீண்டும் ஒரு கவிதையை நான் அவர்களுக்குப் பாடிக் காட்டினேன். பின்னர், நபி (ஸல்) அவர்கள், இன்னும்..., என்றார்கள். நான் மீண்டும் அவர்களுக்கு ஒரு கவிதையைப் பாடிக் காட்டினேன். எதுவரை எனில், நான் அவர்களுக்குப் பாடிக் காட்டிய கவிதைகளின் எண்ணிக்கை 100ஐத் தாண்டி விட்டது’ என தமது ஷரீத் (ரலி) அவர்கள் கூறியதாக அவர்களின் மகனார் அம்ரு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல் – முஸ்லிம்)

மேற்கண்ட ஹதிஸில் வரும் உமய்யா இப்னு அபிஸ் ஸல்த் என்பவர் அறியாமைக் காலத்தில் வாழ்ந்த ஒரு கவிஞர் ஆவார். இவரின் பாடல்களில் ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் புகழும், அவனது வல்லமைகள், அறிவு செறிந்த கருத்துக்கள் பலவும் காணப்படும்.

நபி (ஸல்) அவர்களே ஒரு முறை இக்கவிஞரைப் பற்றி ‘உமய்யா இப்னு அபிஸ்ஸல்த் இப்போது இருந்திருந்தால் இஸ்லாத்தைத் தழுவி விட்டிருப்பார்’ எனக் கூறியுள்ளார்கள்.

மேலும், இதன் அடிப்படையில் ஷரீஅத்திற்குட்பட்டோ அல்லது இயல்பாகவோ அறிவான கருத்துக்களையும், அழகிய பொருள்களையும் கொண்டுள்ள கவிதைகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்கு ஆதராமும் இந்த ஹதீதில் தெளிவாக இருக்கின்றது. (தஃப்ஸீர் குர்துபீ)

Ahamed Arif (Arabic Institute of Commerce) said...

மேற்கண்ட ஆயத் இறங்கியவுடன், ஹஸ்ஸான் இப்னு ஃதாபித் (ரலி) அவர்களும், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களின் சமுகம் வந்து, ‘யா ரஸூலல்லாஹ், அல்லாஹ் நாங்கள் கவிஞர்களாக இருக்கிறோம் என அறிந்து எங்களைப் பற்றித்தான் இந்த ஆயத்தை இறக்கி உள்ளான்’ என அழுது கொண்டே கூறினர்.

அப்போது, ‘இல்லல்லதீன ஆமனூ வஅமிலுஸ் ஸாலிஹாத்தி – இன்னும் ஈமான் கொண்டு நல்ல அமல்கள் புரிந்தோரைத் தவிர என்று கூறியுள்ளானே, அது நீங்கள் தான், இன்னும், வ தகருல்லாஹ கஃதீரன் – இன்னும் அல்லாஹ்வை அதிகமாக நினைப்பார்கள் (தங்கள் கவிதைகளில்), அதுவும் நீங்கள் தான், இன்னும் வன்தஸரூ மிம்பஃதி மா ளுலிமூ – தங்களுக்கு அநியாயம் இழைக்கப்பட்ட பின்னர் (நியாயத்திற்காக) உதவிக் கொள்வார்களே – என்றும் கூறியுள்ளான், அதுவும் நீங்கள்தான், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (தஃப்ஸீர் இப்னு கஃதீர்)

எனவே, கவிதை வேண்டாம் எனக் கூறுவது குர்ஆனின் வசனங்களை முழுமையாகப் பொருள் புரிந்து கொள்ளாததன் விளைவே அன்றி வேறில்லை.


உமய்யா இப்னு அபிஸ் ஸல்த் அவர்களின் ஓரு கவிதை உங்களுக்காக,
لك الحمد والنعماء والملك ربنا
فلا شيئ اعلى منك مجدا وامجدا
லகல் ஹம்து வன்னஃமாஉ வல்முல்கு ரப்பனா
ஃபலா ஷைஅ அஃலா மின்க மஜ்தன் வஅம்ஜதா
எங்கள் இரட்சகனே, உனக்கே புகழ் அனைத்தும், உனக்கே அருள்கள் அனைத்தும், உனக்கே அரசாட்சி அனைத்தும்,
எந்தப் பொருளும் உன்னை விட பெருமை மிக்கதல்ல.

எனவே, சபீர் காக்கா
================================================
1வது விநாடியின்
ஆதங்கத்தில்
உதித்த
இந்த எண்ணம்
1200வது நொடியில்
எழுத்தாகி முடிந்தது!

அந்த வசனம்:
//இன்னும் புலவர்கள் (எத்தகையோரென்றால்) அவர்களை வழிகேடர்கள் தாம் பின்பற்றுகிறார்கள்.//

நான் சொல்வது:
//"லாயிலாஹ இல்லல்லாஹ் முஹமதுர்ரஸூலுல்லாஹ்" எனும் ஓரிறைக் கொள்கையில் ஈமான் கொண்ட, ஐந்துவேளை தொழுது வருகின்ற (இயன்றவரை), சுன்னத்தானவற்றையும்கூட சேர்த்தே நோன்பு வைக்கின்ற, குரான் ஓதுகின்ற, ஸகாத் கொடுக்கின்ற, என் பெற்றோர் மற்றும் மனைவி மக்களோடும் நண்பர்களோடும் என மூன்றுமுறை ஹஜ் செய்த, இயன்றவரை ஏழைகளுக்கு உதவியும், கொடு , தொழு, பகிர் என்றெல்லாம் சமுதாயத்திற்கு புத்தி சொல்லியும் வருகின்ற என்னைத் தொடர்தல் வழி கேடா?//
===================================

என்ற தங்களின் வரிகளைப் படித்ததும், குர்ஆனின் விரிவுரைகளைக் கண்டு இதற்கான என் கருத்தை எழுதிமுடிக்காமல் நான் தூங்குவதில்லை என நினைத்தேன். எழுதிவிட்டேன்.

சபீர் காக்கா தங்களது கவிப் பணி தொடரட்டும்,,,

===========================
//'கவிதை - ஓர் இஸ்லாமியப் பார்வை' எனும் தலைப்பில், கடந்த அனைத்துலக இஸ்லாமிய இலக்கியக் கழக எட்டாவது மாநாட்டில் நான் வழங்கிய ஆய்வுக் கட்டுரையை 'அதிரை நிருபர்' தளத்தில் தொடராகப் பதிக்கட்டுமா?
- அதிரை அஹ்மத்//
=============================
அஹ்மது சாச்சா அவர்கள் தமது கட்டுரையின் மூலம் தெளிவு படுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும்.


வஸ்ஸலாம்.
புலவர் பஷீர் அவர்களின்
மகன் அஹ்மது ஆரிஃப்

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். சபிர்காக்காவின் கவிதைகளுக்கு நேசர்கள் கூடிவிட்டனர். இனி கூடு எடுக்காமல் இருந்தால் சரி!

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். நெறியார் அவர்களே! இங்கு கவிஞர்கள் கவியன்பன் கலாம் காக்கா, கவிவேந்தன் சபிர்காக்கா,இளம் கவியரசன் ஷபாத், இயற்கை கவிஞன் அப்துற்றஹ்மான், வார்தைகவிஞர் ஜஹபர்சாதீக், மண்ணின் மைந்தன் நைனா, நெறியாளர் அபுஇபுறாகிம் காக்கா போன்றகவிஞர்கள் இருப்பதால் ஒரு ரன்னிங் ரேஸ்போல் ஒருவர் தொடங்கி முடிக்கும் வார்த்தையில் அடுத்தவர் தொடங்கும் கவிதைத்தொடர் வைத்தால் என்ன?தொடங்கும் வார்தையை தேர்ந்தெடுத்து பின் தொடர்பவர்களை நீங்களே அறிவிக்கலாமே?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சபீர் காக்காவுக்கு கலர் கொடி காட்டியாச்சு! இனி உங்க ராஜ்யம் தான்.

Shafi MI said...

/இது
கர்ப்புள்ள பெண்டிர்
வேண்டிடும் கர்ப்பம்
கயமையை எதிர்ப்பதில்
தீண்டிடும் சர்ப்பம்/

கற்புள்ள பெண்டிர்
வேண்டிடும் கர்ப்பம்
...

ஒரே பொருளுடைய பெயர்ச்சொல்[கற்பு]க்கு "ற்"
அதே பொருளுடைய வினைச்சொல்?[கர்ப்பம்]க்கு "ர்"

ஏன் இப்படி?
அறிஞ்சவங்க சொன்ன தெரிஞ்சுக்கலாம்.

-தமிழ் படிக்கிற(மாண)வன்

sabeer.abushahruk said...

தம்பி ஷாஃபி,

கர்ப்பில் உள்ள ரகர ஒற்றுவை றகர ஒற்றாகத் திருத்தியமைக்கு மிக்க நன்றியும் வாழ்த்துகளும்.

அஃதன்றி, இரு சொற்களும் ஒரே அர்த்தம் கொண்டவை அல்ல.

கற்பு: தலைவர் தலைவியை முறைப்படி மணந்து இல்லறம் புரியும் ஒழுக்கம்; மகளிர் ஒழுகும் மன/உடல் சார்ந்த ஒரு நெறி கற்பு.

கர்ப்பம்: கரு,கருக்கொள்கை.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

//தம்பி ஷாஃபி,

கர்ப்பில் உள்ள ரகர ஒற்றுவை றகர ஒற்றாகத் திருத்தியமைக்கு மிக்க நன்றியும் வாழ்த்துகளும்.

அஃதன்றி, இரு சொற்களும் ஒரே அர்த்தம் கொண்டவை அல்ல.

கற்பு: தலைவர் தலைவியை முறைப்படி மணந்து இல்லறம் புரியும் ஒழுக்கம்; மகளிர் ஒழுகும் மன/உடல் சார்ந்த ஒரு நெறி கற்பு.

கர்ப்பம்: கரு,கருக்கொள்கை.//

இப்போ நாங்க என்ன செய்யனும் !? :)

sabeer.abushahruk said...

இந்த இடுகையின் ஏற்புரையை ஒரு கதம்பமாகப் பார்த்து விடுவோம்:

-இது ஓர் ஆதங்கத்தை மொழியாக்கம் செய்த முயற்சி.

-ஜாகிரின் மகன் அஃசலின் புகைப்படங்களை அறிமுகம் செய்தது போல் அபுஇபுறாகீமின் மகன் இபுறாகீமின் கிரியேட்டிவிட்டியை, மகன் 16 அடிபாயும் விந்தையை அவன் வரைந்த படத்தின்மூலம் அறிமுகம் செய்த இடுகை.

-மொழி மற்றுமன்ரி மார்க்கத்தில் கவிதையின் நிலைகுறுத்த ஓர் அலசல். இதற்கு தம்பி அஹ்மது ஆரிஃபின் பின்னூட்டம் ஒரு தீர்ப்பாகவே தெளிவாக சொல்லிமுடிக்கிறது. தம்பி ஆரிஃபின் ஊக்கத்தை ஓர் அங்கீகாரமாகவே எடுத்துக்கொண்டு தொடர்வேன். ஆரிஃபுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும். (உங்களைப்போன்ற அறிவாளிகளெல்லாம் நான் எழுதுவதை வாசிக்கிறீர்கள் என அறியும்போது சந்தோஷமாக இருக்கிறது)

//சபிர்காக்காவின் கவிதைகளுக்கு நேசர்கள் கூடிவிட்டனர். இனி கூடு எடுக்காமல் இருந்தால் சரி!//
நினைவிருக்கா கிரவுன், எனக்கும் முதல் ஆதரவே நீங்கள்தான் என்பது.

கூடு எடுக்க வேன்டுமெனில் அடங்கியிருக்க வேண்டுமே. நீங்கள் சொன்னால் அடங்கிப்போகவும் தயார்தான். (இரண்டு அடக்கத்திற்கும் வித்தியாசம் உங்களுக்குத் தெரியும்)

-யாசிர், ஹமீது, தாஜுதீன், எல் எம் எஸ், அலாவுதீன், அமேஜான் ஆகிய வழமையான வாசகர்களையும் சேர்த்து, வாசித்து கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட சகோதரர்களுக்கு மிக்க நன்றி.


-குறிப்பாக தம்பி ஷாஃபியின் திருத்ததிற்கும் அஹ்மது காக்காவின் ஊக்கத்திற்கும் கடப்பாடு.

-கவியன்பன் கலாமுக்கு நன்றி சொல்ல மனசு வரவில்லை. காரணம், இந்த வழக்கில் நாங்கள் இருவருமே வாதிகள்தாம்.

மற்றொரு பதிவில் சந்திப்போம், இன்ஷா அல்லாஹ்

KALAM SHAICK ABDUL KADER said...

//இந்த வழக்கில் நாங்கள் இருவருமே வாதிகள்தாம்.//

பிரதிவாதியும் ஏற்றுக்கொண்ட பின்னர், இவ்வழக்குத் தள்ளுபடி செய்வதா? அல்லது, நீதியரசர் அஹ்மத் காக்கா அவர்களின் தீர்ப்பு வரும் வரைத் தொடர வேண்டுமா? புலவர் அவர்களின் புதல்வர், புலவர்களைப் பற்றிய ஆணித்தரமான ஆதாரங்களுடன் தீர்ப்பை வழங்கிவிட்டார்கள். நிலவும் தவறான புரிந்துணர்தலே
புலவரகளைப் பற்றிய ஐயம் ஏற்படக் காரணம் என்பதும் அறிகின்றோம். ஜஸக்கல்லாஹ் க்ஹைரன், புலவர் அவர்களின் புதல்வர் ஆரிஃப் அவர்களுக்கு நன்றி.

வார்த்தை வித்தகர் க்ரௌன் அவர்களின் அவா "அந்தாதி" என்று நினைக்கின்றேன்.

அதிரைப்பட்டினத்தார்களில்
அதிகம் பாட்டினத்தார்களாய்
இருப்பதும் மண்ணின் சத்தோ?
கருக்கொள்ளும் கவிதைகளின் வித்தோ?

Shameed said...

அப்பாடா இரண்டு குழப்பங்கள் தீர்ந்தது எனக்கு என்ன ஒரு குழப்பம்தானே கவிதை கூடுமா கூடாதா என்று இன்னொன்னு என்ன புது குழப்பமா இருக்கேன்னு யோசிக்க வேண்டாம் பின்னுட்டங்கள் கிழே மேலே அந்த குழப்பமும் தீர்ந்தது

Ahamed Arif (Arabic Institute of Commerce) அவர்களின் விளக்கம் அருமை.

(நபி (ஸல்) அவர்கள், இன்னும்..., என்றார்கள். நான் மீண்டும் அவர்களுக்கு ஒரு கவிதையைப் பாடிக் காட்டினேன். எதுவரை எனில், நான் அவர்களுக்குப் பாடிக் காட்டிய கவிதைகளின் எண்ணிக்கை 100ஐத் தாண்டி விட்டது’ என தமது ஷரீத் (ரலி) அவர்கள் கூறியதாக அவர்களின் மகனார் அம்ரு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல் – முஸ்லிம்))

இந்த வரிகள் மெய் சிலிர்க்க வைத்துவிட்டன

crown said...

அபுல் கலாம் (த/ பெ. ஷைக் அப்துல் காதிர் )) சொன்னது…
வார்த்தை வித்தகர் க்ரௌன்???? அவர்களின் அவா "அந்தாதி" என்று நினைக்கின்றேன்.
-------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் ஆமாம் அந்தாதிதான் நான் வேண்டுவது.

crown said...

sabeer.abushahruk சொன்னது…
//சபிர்காக்காவின் கவிதைகளுக்கு நேசர்கள் கூடிவிட்டனர். இனி கூடு எடுக்காமல் இருந்தால் சரி!//
நினைவிருக்கா கிரவுன், எனக்கும் முதல் ஆதரவே நீங்கள்தான் என்பது.

கூடு எடுக்க வேன்டுமெனில் அடங்கியிருக்க வேண்டுமே. நீங்கள் சொன்னால் அடங்கிப்போகவும் தயார்தான். (இரண்டு அடக்கத்திற்கும் வித்தியாசம் உங்களுக்குத் தெரியும்)
அஸ்ஸலாமு அலைக்கும்.
"அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்துவிடும்"".
-----
தெரிந்தவர் தனக்குத் தெரியும் என்றாலும் தாம் தெரிந்தவற்றிற்கு மாற்றாக ஏதும் சொல்லப்படும்போது, அச்சூழ்னிலை, சொல்வோர், சொல்வோர் மன நிலை, அவையோர் மன நிலை, ஆகியவற்றினைக் கருத்திற் கொண்டு "சும்மா"ஏதும் தெரியாதவர்போல் அடங்கி இருப்பதுஅடக்கம் .இதனால் முடங்கி இருப்பதல்ல!மூச்சடங்கிருப்பதல்ல! ஆனாலும் முஸ்லிமாகிய நான் இந்த "அமரர்" சொல் பதம் என் ஈமானை பதம் பார்த்துவிடும் என்பதால் சரியென சொல்ல மாட்டேன். ஆனால் சிறந்த பண்பு என்பதை அறிவேன் சரிதானே சபீர் காக்கா?(இலக்கியவாதிகள் சபையில் எழுதும் போது கை நடுங்குகிறது. பிழைஇருப்பின் பொருத்தருள்க!)

sabeer.abushahruk said...

இபுறாகீமின் ஓவியத்தை ஒரு 2 நிமிடங்கள் உற்றுப்பார்த்தேன்:

குறவை மீன் குதிக்கும்
குளக்கரையும்

மாட்டைத் தொலைத்த
கூட்டு வண்டியும்

புமியில் கிடந்த
"கதை"யை நிமிர்த்தி
"வி" சேர்த்து
"கவிதை"யாக்கி
ஆகாயம் பார்க்க வைக்கும்
முயற்சி தெரிந்தது.

வெப்பமயமாதலுக்கு
எதிரான
பச்சை முயற்சியும்கூட
பார்க்க முடிந்தது.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

மாஷாஅல்லாஹ்! கவிப்புலவர்கள் அனைவரும் ஒன்று கூடி விவாதித்து கொண்டு இருக்கிறீர்கள்.
***********************************************************************************************
((( அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான்பின் அவ்ஃப் அறிவித்தார்.
ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடம் 'அபூ ஹுரைராவே! அல்லாஹ்வை முன்னிறுத்தி நான் உம்மிடம் கேட்கிறேன். நபியவர்கள், 'ஹஸ்ஸானே! இறைத்தூதர் சார்பாக நீர் அவர்களுக்கு (உம் கவிதை மூலம்) பதிலளிப்பீராக!" என்றும் (இறைவா! ஹஸ்ஸானை ஜிப்ரீல்(அலை) மூலம் வலுப்படுத்துவாயாக!" என்றும் கூறியதை நீர் செவியுற்றீர் அல்லவா?' என்று கேட்டபோது அபூ ஹுரைரா(ரலி) 'ஆம்' என்றனர். (ஸஹீஹுல் புகாரி : எண் : 453) )))



((( பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். (நீண்ட ஹதீஸின் கடைசி பாரா)

(உடனே) அபூ சுஃப்யான், 'இந்நாள், பத்ருப் போர் (நடந்த) நாளுக்குப் பதிலாகும். (நமக்கிடையிலான) போரில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருகிறது. (உங்கள்) கூட்டத்தாரில் நீங்கள் அங்கங்கள் சிதைக்கப்பட்டவர்களைக் காண்பீர்கள். அப்படிச் செய்யும்படி நான் கட்டளையிடவுமில்லை. அது எனக்கு மனத் துன்பத்தையளிக்கவும் செய்யாது" என்று சொல்லிவிட்டு பிறகு, 'ஹுபலே! உன் கட்சி மேலோங்கிவிட்டது, என்று கவிதை பாடலானார். நபி(ஸல்) அவர்கள் (தோழர்களை நோக்கி), 'இவருக்கு நீங்கள் பதிலளிக்க மாட்டீர்களா?' என்று கேட்டார்கள். தோழர்கள், 'இறைத்தூதர் அவர்களே! நாம் என்ன(பதில்) சொல்வது?' என்று வினவ, நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வே மிக உயர்ந்தவன்; மிக மேலானவன்' என்று சொல்லுங்கள்" என்று கூறினார்கள். அபூ சுஃப்யான், 'எங்களுக்கு 'உஸ்ஸா' (எனும் தெய்வம்) இருக்கிறது; உங்களிடம் உஸ்ஸா இல்லையே" என்று கவிதை பாடினார். உடனே நபி(ஸல்) அவர்கள், 'இவருக்கு நீங்கள் பதிலளிக்க மாட்டீர்களா?' என்று கேட்டார்கள். தோழர்கள், 'நாங்கள் என்ன (பதில்) சொல்வது? இறைத்தூதர் அவர்களே!" என்று வினவ, நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வே எங்கள் உதவியாளன்; உங்களுக்கு உதவியாளனே இல்லையே!' என்று சொல்லுங்கள்" என்று பதிலளித்தார்கள். (ஸஹீஹுல் புகாரி : எண் : 3039) )))

***********************************************************************************************

மார்க்கத்திற்கு முரணில்லாமல் வரும் கவிதையை வரவேற்போம்.

Yasir said...

கண்ணியத்திற்க்குரிய கவிக்காக்கா தங்களை போன்ற அப்பழுக்கற்ற எதிலும் நலம் விரும்பும்,தலைக்கனம் தெரியாத,வாழ்வியல் இலக்கியங்களை கற்று தரும்,கன்னியமான,பாக்கெட் நிறைய காசு இருந்தாலே கண்மண் தெரியாமல் இறையை மறந்து தான் தான் பெரியவன் என்று அலம்பரை செய்யும் இந்த உலகில்,அல்லாஹ் உங்களுக்கு வாரி வழங்கி இருந்தாலும் அதன் சாயல் கொஞ்சம் கூட தெரியாமல்,எல்லைதாண்டாமல்,தன் கடந்து வந்த பாதைகளை அடிக்கடி நினைத்துபார்த்து உயரிய நெரிகளுடன் வாழும் உங்களை போன்ற சான்றோர்களின் நற்செயல்களை ஃபலோ செய்வது தவறே இல்லை ...அல்லாஹ் உங்கள் கவித்திறனை மேலும் மெருகெற்றி மேன்மை படுத்துவானாக

KALAM SHAICK ABDUL KADER said...

மலரை வருடிச் செல்லும் மாலை நேரத் தென்றல்;
நிலவை கடந்து செல்லும் நீல வானின் மேகம்;
புலவர் யாப்பில் மனமும் புரளும் தன்மை காண்பீர்!
உலகில் மொழிகள் வேறாம்; உணர்வு என்றும் ஒன்றாம் !

திசைகள் வேறு வேறு; தெரியும் இலக்கு ஒன்றே
அசைக்கும் நிலையில் பாடும் அனைத்து மொழிகள் கவியும்
விசையாய் இயக்கும் மனதில் விந்தை கண்டால் புரியும்
தசையும் உடலும் சிலிர்க்கத் தானாய் மூளை விரியும்

வானின் பரப்பை மறந்து வண்ணப் பறவை காண்போம்
தேனின் சுவைக்கு நம்மைத் தீண்டும் தேனீ அறியோம்
மீனின் சுவைக்கு வேண்டி மீண்டும் தூண்டில் இடுவோம்
தானில் உணரும் ஞான தவம்போல் கவிகள் காண்போம்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சபீர் காக்கா,

எண்ணமும் எழுத்தும் ரெடியா தான் இருந்தது.. வேலை பளு நேரமின்மையால் கருத்திட முடியவில்லை.

ஒரு மொழி... நம் உணர்வுகளை கருத்துக்களை பரிமாற்ற பயன்படுத்தப்படும் ஊடகம். மக்களுக்கு எளிதில் கொண்டு சேர்க்கும் நோக்கில் எந்த மொழியானாலும் சொல்லும் விதங்களில் (கட்டுரை, கவிதை) இறை நிராகரிப்பு கருத்துக்கள் இல்லாதபோது அவைகளின் தவறேதுமில்லை.

ஆரிப் காக்காவின் பின்னூட்டம் எல்லோருக்கும் தெளிவுபடுத்திவிட்டது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இபுறாகீமின் ஓவியத்தை ஒரு 2 நிமிடங்கள் உற்றுப்பார்த்தேன்:

குறவை மீன் குதிக்கும்
குளக்கரையும்

மாட்டைத் தொலைத்த
கூட்டு வண்டியும்//

இப்படியாக நீளும் இன்னும் உற்று நோக்கினால் அதுதானே சிறுசுகளின் கிறுக்கள் என்றுமே நமக்கு கிரக்கமே... :)

எனது தம்பியின் மகன் மூத்தவர் (மஹ்மூத்) இதற்காகவே ஒவ்வொரு வெள்ளியன்றும் மதியம் 2 மணிக்கு மேல் என்னோடு இணையத்தில் இணைவார் பிஞ்சுத் தூரிகைக்கு மரியாதை கொடுக்க வைத்த கரங்களில் முதலாவது அவர்தான் அடுத்து இபுறாஹிம்...

sabeer.abushahruk said...

அபு இபுறாகீம்,

01) எனில், அந்த ஓவியங்களை இங்குப் பதியுங்களேன்.
02) கிரவுனும் கலாமும் பேசும் அந்தாக்‌ஷரி (அந்தாதி) துவங்குங்களேன். நேரம் காலம் சரியாக அமையவேண்டும் என்பதை மனதில் வைக்கவும்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அந்தாக்‌ஷரி (அந்தாதி) துவங்குங்களேன். நேரம் காலம் சரியாக அமையவேண்டும் என்பதை மனதில் வைக்கவும்//

ஆய்வுக் கட்டுரையின் முதல் பாகம் பதிவுக்குள் வந்ததும் அடுத்து தொடர் கவியோட்டத்திற்கான களம் அமைப்போம்... இதில் மூத்தோரும் இளைய தூரிகைகளும் அவசியம் கலந்து கொள்ளவேண்டும் என்பதும் என் அவா...

//அந்த ஓவியங்களை இங்குப் பதியுங்களேன்.//

"கருவாகும் பிஞ்சு தூரிகை(கள்)" என்று தொகுத்தெடுத்து ஒன்றோ அல்லது தொடர்ந்தோ பதிவாக்க முயற்சிக்கிறேன் இன்ஷா அல்லாஹ்... :)

KALAM SHAICK ABDUL KADER said...

ஆண்டு இறுதி கணக்கு முடிவு; கணக்குத் தணிக்கைப் போன்ற தொடர் பணி பளு காரணமாக கவித் தொடர் ஓட்டத்தில் அடியேன் அடியெடுத்து வைக்கக் கூட முடியுமா என்ற ஐயம் என்னுள் எழுந்துள்ளது . சென்ற ரமளானில் இப்படித்தான் ஓர் இணைய தளம் நடாத்தியப் போட்டிக் கவியரங்கில் அடியேனும் பெயரினைப் பதிவு செய்து விட்டேன். அவர்கள் அழைக்கும் தருணம் அடியேன் இணைய இணைப்பில் இல்லாமற் போனதால், மீண்டும் என்னை அழைக்கும் நேரம் குறிப்பிட்டு என் பாக்களைப் பதிந்தனர். யான் அவர்களிடம் கொடுத்தத் தலைப்பு : " என் தேசம்" அதனைத் தெரிவு செய்தது அன்று இந்திய விடுதலை நாள் ஆகஸ்ட் 15 . ஆனால், என்றன் எண்ணம் விரும்பிய வண்ணம் அன்றே எனது பாக்கள் கவியரங்கத்தில் பதிய முடியாமற் போனதால், அன்பால் என் பாவின் பால் உள்ள மதிப்பால் , மீண்டும் அழைப்புக்கொடுத்து பதிவு செய்தனர். அவர்கள் அழைத்தபொழுது இணையத்தில் இல்லாமற் போனது போலவே, நீங்கள் துவங்கும் இக்கவி ஓட்டத்தொடரிலும் நேரமின்மை ஒரு குறிக்கீடு.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு