Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இயக்க மயக்கம் ! 27

அதிரைநிருபர் பதிப்பகம் | December 17, 2011 | , ,


இவ்வுலகை மட்டுமல்ல
ஈருலகை வென்றெடுக்க
அல்லாஹ்வின் அடியார்களாய்
அவதரித்த தொரு இயக்கம்

பிறக்கின்ற வகையினிலே
பிரிந்ததொரு இயக்கம்
வளர்கின்ற விதத்தினிலே
விளைந்ததொரு இயக்கம்

பயிலுகின்ற பாங்கினிலே
பதிந்ததொரு இயக்கம்
பயிற்றுவிக்கும் பணியினிலும்
பன்மடங்காய் இயக்கம்

உண்ணும் விதம் விளக்க
உதித்த தொரு இயக்கம்
உடுத்துகின்ற தோரணையை
எடுத்துச் சொல்ல இயக்கம்

வணக்க வழிபாட்டில்
இணக்க மின்றி இயக்கம்
வணக்கத்தி னுள் முறையில்
வழக்காடு தொரு இயக்கம்

மார்க்கத்தில் நேர்வழியென
காட்டு தொரு இயக்கம்
மாற்று வழி சுட்டிக்காட்டி
மயக்கு தொரு இயக்கம்

இருக்கின்ற இயக்கமெல்லாம்
இயங்க என்ன தயக்கம்
இனிமேலும் வேண்டாமையா
இன்னுமொரு இயக்கம்

எத்துனை தேவையுண்டோ
அத்துனைக்கும் சேவை வேண்டும்
எல்லா சேவைகளையும்
எல்லோரும் செய்வதறிவா?

கல்வி ஓர் இயக்கம்
கல்யாணம் ஓர் இயக்கம்
அரசியல் ஓர் இயக்கம்
ஆண்மீகம் ஓர் இயக்கம்

சுற்றுப்புரச் சூழலுக்கும்
சுகாதாரத்துக்கும் ஓர் இயக்கம்
சாலை மேம்பாட்டுக்கும்
சமரசத்துக்கும் ஓர் இயக்கம்

சாக்கடை சீர்படுத்த
சகதி மனை சரிசெய்ய
கொசுக்களை கொன்றொழிக்கும்
கொள்கைக்கு ஓர் இயக்கம்

கொள்கைகளை வகுத்துக்கொண்டால்
சேவைகளைப் பிரித்துக்கொண்டால்
எல்லாத் துறைகளிலும்
எழுந்து நிற்கும் எம் குலமும்

இயக்க மயக்கம் தெளி
இயங்க முழக்கம் தரி!

- சபீர்

27 Responses So Far:

KALAM SHAICK ABDUL KADER said...

வினா: சமுதாயத்தைச் சீரழிப்பது யார்?
விடை: "ஈகோ" என்னும் மனோயிச்சை
வினா: "ஈகோ"வை விரட்டி என்னும் ஏதும் சாதனம் உண்டா?
விடை: ஆம். "இக்லாஸ்" என்னும் உளத்தூய்மை
வினா""ஈகோ"உருவாக்கியவைகள் என்ன?
விடை: இயக்கம்/பிரிவுகள்
வினா: ஷைத்தானின் அடிமை யார்?
விடை: தானேப் பெரியவன்/தனது இயக்கமேப் பெரிது என்று வாதிடுபவன்
வின: இப்பொழுது என்ன செய்ய வேன்டும்?
விடை: கவிவேந்தர் சபீர் சொன்னபடி//இயக்க மயக்கம் தெளி
இயங்க முழக்கம் தரி!

crown said...

எல்லாத் துரைகளிலும்
எழுந்து நிற்கும் எம் குலமும்

இயக்க மயக்கம் தெளி
இயங்க முழக்கம் தரி!

- சபீர்

-----------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். சிறு திருத்தம் எல்லா துறை என இருக்கனும். (அவசரத்தில் இதுபோல் வருவது சகஜம்)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இயக்கங்களுக்கே கலக்கம் உண்டாக்கும் கவியாக்கம்.

ஆக இயக்கம்
அதன் நோக்கம்
நான் என்பதன் தாக்கம்
நானும் என்பதன் ஏக்கம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//பயிலுகின்ற பாங்கினிலே
பதிந்ததொரு இயக்கம்
பயிற்றுவிக்கும் பணியினிலும்
பன்மடங்காய் இயக்கம்//

//மார்க்கத்தில் நேர்வழியென
காட்டு தொரு இயக்கம்
மாற்று வழி சுட்டிக்காட்டி
மயக்கு தொரு இயக்கம்//

இதுதான் கவிக் காக்கா வித்திட்டது அன்றைய மற்றும் இன்றைய இளைய தலைகளின் மயக்கத்திற்கு !

நீங்களும் சரியான கிரக்கத்திலதான் இருக்கீஹ போல !

எந்த தயக்கமும் இல்லையே இதனைச் சொல்ல ! :)

//கொள்கைகளை வகுத்துக்கொண்டால்
சேவைகளைப் பிரித்துக்கொண்டால்
எல்லாத் துறைகளிலும்
எழுந்து நிற்கும் எம் குலமும்//

இங்கே சொல்லியிருப்பது போன்று கொள்கைக்காக பிறந்தது இயக்கங்கள் ஏராளம், அதன் பின்னர் தொடர்ந்தது ஏளனம் ஒருவர் மாற்றி ஒருவர் தூற்றி ! மீண்டும் சென்றது தனிமனித துதிக்கு அங்கே !

தி.மு.க. = சொன்னது அண்ணா சொன்னார்
அ.தி.மு.க. = சொன்னது எம்.ஜி.ஆர் சொன்னார்
காங்கிரஸ் = சொல்லத் தெரியவில்லை "யார்" சொன்னார் !?
அட ! நம்ம இ(ம)யக்கங்கள் = சொல்வதோ "நாங்க ரெடி நீங்க ரெடியா?"

இந்த பெருக்கல் ஒத்துவருமான்னு பாருங்களேன் யாராச்சும்

"ஒற்றுமை X ஒருங்கினைப்பு = புதிய இயக்கம்"

தாஜுதீன் (THAJUDEEN ) said...

விடை தெரியாத வினாவாகி போகிறது ஊருப்பட்ட இயக்கங்களின் செயல்பாடுகள்.

யார் சொல்லுவது தான் உண்மை? எந்த கூட்டம் தான் உண்மை?

சபீர் காக்கா, எல்லோருடைய இயக்க மயக்கத்தையும் தெளிவாக்க வந்த கவிதை தந்தமைக்கு ஜஸக்கல்லாஹ்.

Yasir said...

இயக்க மயக்கம் தெளிந்தால்தான்..மயங்கி கிடக்கும் நமது சமுதாய விழிந்தெழும்....அதை அருமையாக தனக்கே உரிய பாணியில் சொன்ன கவிகாக்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

//வணக்க வழிபாட்டில்
இணக்க மின்றி இயக்கம்
வணக்கத்தி னுள் முறையில்
வழக்காடு தொரு இயக்கம்//
வாவ்....மிகவும் பிடித்தது

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//இந்த பெருக்கல் ஒத்துவருமான்னு பாருங்களேன் யாராச்சும்
"ஒற்றுமை X ஒருங்கிணைப்பு = புதிய இயக்கம்"//

இயக்கக் கவிப்பட்டியல் நீண்டது போக மேலுமொரு புது இயக்கமா?

Anonymous said...

எந்த இயக்கமாக இருந்தா என்ன நமக்கு சரியாக படுகிறதா என்று பார்க்க வேண்டும். நாம் இயக்கத்தை நினைத்துக் கொண்டே இருந்தால்தானே மயக்கமும், குழப்பமும் வரும்.

ZAKIR HUSSAIN said...

இயக்க மயக்கம் தெளியாமல் இப்போது ஒருவரை ஒருவர் அடையாளம் காண இயக்க பெயர்களே இப்போது முன்னிறுத்தப்படுகிறது.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

// ZAKIR HUSSAIN சொன்னது…
இயக்க மயக்கம் தெளியாமல் இப்போது ஒருவரை ஒருவர் அடையாளம் காண இயக்க பெயர்களே இப்போது முன்னிறுத்தப்படுகிறது. //

இதை யாராலும் மறுக்க முடியாது காக்கா..

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

செம கிரக்கம்போல் ! :)

அதிருக்கட்டும்...

இயக்க மயக்கத்தை பிரிச்சு பிரிச்சு தனி ஆ(இய)க்கமாக்கிட கிரவ்னு வருவரே எங்கள் எழில் எங்கே எங்கே ?

சீக்கிரடம் வா(டா)ப்பா !

KALAM SHAICK ABDUL KADER said...

இதில் வேதனையான ஒரு விடயம் என்னவென்றால் ஒரு தொலைக்காட்சியின் “நேருக்கு நேர்” நிகழ்ச்சியில் இதே கருத்தினை ஒரு மாற்று மத தலைவர் குறிப்பிட்டு ”முஸ்லிம்கள் தங்களுக்குள் தொலைக்காட்சி வழியாக சண்டையிட்டுக் கொள்வதால் அவர்களின் வீழ்ச்சிக்கு அவர்களே வழி தேடிக் கொண்டார்கள்” என்ற நெத்தியடியான இந்த விமர்சனத்திற்குப் பின்னரும் திருந்தாமல் இருப்பவர்களை எண்ணி எண்ணி மிகவும் வேதனைப் படுவதில் என்னைப் போல் ஒற்றுமை விரும்பும் தம்பி தாஜுத்தீன் போன்ற நல்லுள்ளம் படைத்தவர்கள் “அதிரை அனைத்து முஹல்லா”ப் போன்ற அமைப்புச் சாரா அமைப்பு நாடி உள்ளோம்.

sabeer.abushahruk said...

ஒரே சேவைக்காக ஒன்பது இயக்கங்கள்/அமைப்புகள் என ஆகும்போது அந்தச் சேவை செறிவாக தேவைப்படுபவர்களுக்கு கிடைக்காமல் போய் விடுகிறது.

இந்த அமைப்பு பார்த்துக்கொள்ளும் என்று அந்த அமைப்பும் வைஸ்வெர்சாவுமாக ஆகிப்போவதால் சேவையும் சிறப்பதில்லை, அமைப்புகளும் சாதிப்பதில்லை.

எனவேதான், என் பார்வையில் சேவைகளைப் பிரித்துக்கொள்ளுங்கள் என்கிறேன்.

போட்டிபோட்டு உதவ அமைப்புகள் ஒன்றும் லாப நோக்கோடு செயல்படுபவையல்ல.

சுருங்கச் சொன்னால், அரசாங்கம் துறைகளைப் பிரித்துக்கொள்வது போல!

sabeer.abushahruk said...

//இயக்க மயக்கம் தெளியாமல் இப்போது ஒருவரை ஒருவர் அடையாளம் காண இயக்க பெயர்களே இப்போது முன்னிறுத்தப்படுகிறது//

இது ஒரு பெருத்த சீர்கேட்டுக்கான துவக்கம்.

புல்லாங்குழல் said...

ஒற்றுமையை குலைக்கும் இயக்க மயக்கம் தெளிய வேண்டும் சபீரின் மேல் வருகிறது ஒரு மயக்கம். இது இயக்கமில்லா மயக்கம்..

sabeer.abushahruk said...

திண்ணையில் கண்ணம்மா பாட்டி


நள்ளிரவில்
நனைந்திருந்த நிலையத்தில்
நின்றது பேரூந்து

முன்னிரவின் மழை
மிச்சமிருந்தது
மசாலாப் பால் கடையின்
மக்கிப்போன கூரையில்

மஞ்சள் தூக்கலாக யிருந்த
மசாலாப் பாலில்
மடிந்த ஈசல்
பாலை
மேலும்
அசைவமாக்கியிருந்தது

எடை குறைந்த
பயணப் பொதியோடு
ஈரத்தில் நடந்து
என்
வீடிருந்த சந்தின்
முச்சந்தியை அடையவும்

காணும் தூரத்தில்
என் வீட்டுக்கு எதிர் வீட்டில்
மேடையிட்டத் திண்ணையில்
கண்ணம்மா பாட்டி
உட்கார்ந்திருந்தது

கண்ணம்மா பாட்டி
கதை சொல்லாது
காதைக் கிள்ளாது
பாதையில் செல்வோரை
வதைக்கவும் செய்யாது

சுருங்கிய தோலுக்குள்
ஒடுங்கிய உடலும்
சுருக்குப் பைக்குள்
சுண்ணாம்பும் புகையிலையும்
இடது கையில்
குச்சி யொன்றும்
எப்போதும் வைத்திருக்கும்

பல்லாங்குழியோ பரமபதமோ
பாட்டியோடு விளையாடினால்
தோற்றாலும்கூட
இழந்தை வடையோ
இஞ்சி மரபாவோ தரும்

முடிந்து வைத்த காசவிழ்த்து
முறுக்கு திண்ணச் சொல்லும்

கண்ணம்மா பாட்டி
இல்லாத திண்ணையை
நான் கண்டதே யில்லை
எனினும்
இத்தனை இரவிலுமா
இப்படித் தனித்திருக்கும்?!

தனிமைதான்
முதுமையின் முகவரியோ?

பின் படலின் கொக்கி நீக்கி
கொல்லைப்புற வழியில்
சென்று உறங்கிப் போனேன்.

மூன்று மாதங்கள் கழித்து
வந்திருந்த என்னை
மறுநாள் காலை
எழுப்பிய உம்மா
வழக்கம்போல
இறந்து போனவர்கள்
இருந்த வீடுகளுக்கு அழைத்துப் போயிற்று

இரண்டாவது வீடாக
எதிர் வீட்டுக்குச் செல்ல
இறந்தது யாரென கேட்க
உம்மா சொன்னது
கடந்த சனி யன்று
கண்ணம்மா பாட்டி யென்று!


-sabeer.abushahruk@gmail.com

(thanks to www.thinnai.com

KALAM SHAICK ABDUL KADER said...

”Division of Labour" என்பதன் அடிப்படையில் வேலைகள/சேவைகளைப் பகிர்ந்து கொள்வது அவசியமானது; அதனால், வேலைச்சுமைகள் குறையும்;விளைவுகள் நிறையும். ஆனால், கட்சி,இயக்கம் என்ற அடிப்படையிலும், மார்க்கத்தை விளக்குவதாகக் கூறிக் கொண்டு பிளப்பதும், தான் சார்ந்திருக்கும் இயக்கமேச் சரியானது என்பதை வாதிடுவதிலேயே வயோதிகம் அடைவதும், குடும்பங்கள் வேறுபட்டு உறவுகள் அறுபட்டுப் போவதும், குறிப்பாக இளைஞர்களைக் குறி வைத்து மூளைச் சலவை செய்வதும் தான் இயக்கங்களின் மயக்கம் தோற்றுவித்த சாதனைகள்;இதனால் நம் சமுதாயம் படுவதோ வேதனைகள்! இதனைக் களைய வேண்டும் என்பதே கவிவேந்தர் சபீர் அவர்களின் போதனைகள்

sabeer.abushahruk said...

//குறிப்பாக இளைஞர்களைக் குறி வைத்து மூளைச் சலவை செய்வதும் தான் இயக்கங்களின் மயக்கம் தோற்றுவித்த சாதனைகள்;//

மிக்க நன்றி கவியன்பன்.

இந்தச் சமுதாயச் சீரழிவு மேலும் தீவிரமடையாமல் தடுக்கவே நாம் முயல்கிறோம் அல்லவா? மற்றபடி எவரையும் குறை சொல்லவோ குற்றம்பிடிக்கவோ அல்ல.

KALAM SHAICK ABDUL KADER said...

தம்பி தாஜுத்தீன்,

//விடையறியா வினா”//அல்ல
விடையறிந்தும் வீணானவர்கள்
தடையாய் இருப்பது
உடைக்கும் ஆயுதம்: “ஈகோ”

நெஞ்சுக்குள் இருக்கும்
நஞ்சாகும் சுயநலம்
கொஞ்சம் விட்டுக் கொடுத்தால்ல்
பஞ்சாகப் பறந்திடும் “ஈகோ”

நேற்றுக் கட்சி
இன்று எதிர்க்கட்சி
நாளை முதல்வர் என்ற கனவில்
நடிகரால் ஒரே கட்சி காணும் பொழுது
நம்மால் ஒரே கட்சி காண முடியவில்லையே

காலங்காலமாகத் தாய்ச்சபையாய்
கண்ணியத்திற்குரியவர்களால்
காப்பற்றப்பட்ட இயக்கத்தை
அலங்கோலமாக்கிய
அதே சூழ்ச்சியாளர்கள்
இன்றைய இயக்கங்களையும்
கூறு போட்டு
கீறி போட்டு
நாறிப் போக வைத்தனர்

அறிந்தும் அறியாதவர்களாய்
அவர்களிடமே சமுதாயத்தை
அடகு வைத்தனர்; அந்தோ பரிதாபம்
படகு கரை சேராமல் தத்தளிப்பது போல்
நடுக்கடலில் நிற்கின்றது சமுதாயம்
அடுத்தடுத்து அவர்க்ட்கே ஆதாயம்

“ஒற்றுமை என்னும் கயிறா”
“ஒற்றுமையாக அல்லாஹ்வின் கயிறாம் வேதமா”
என்று வாதிடவே
ஒற்றுமைக்கு வேட்டு!!!

மதஹபுகளை ஒழிப்பதாக எண்ணி
இயக்கமென்னும் மதகுகளை எண்ணிலாமல்
வளர்த்ததனால் பயன் என்ன?

KALAM SHAICK ABDUL KADER said...

ஆம். கவிவேந்தரே

சமுத்திரமாய்ப் பொங்கும்
சமுதாயப் பிரளயங்களைச்
சிரத்தையுடன் நாமெல்லாரும்
சிரட்டை அளவேனும் அள்ளித்
தடுப்போம்; இயக்க மயக்கத்தை
விடுப்போம்

KALAM SHAICK ABDUL KADER said...

ஒல்லியாக இருந்தாலும்
ஓட்டிச் சேர்க்கிற
ஊசியாக இருப்போம்,
கெட்டியாக இருந்தாலும்
வெட்டிப்பிரிக்கிற
கத்திரிக்கோலாக இருக்க வேண்டா

Shameed said...

இயக்க மயக்கத்துக்கு ஒரு நல்ல ஊசி மருந்து உங்களின் கவிதை

crown said...

கல்வி ஓர் இயக்கம்
கல்யாணம் ஓர் இயக்கம்
அரசியல் ஓர் இயக்கம்
ஆண்மீகம் ஓர் இயக்கம்

சுற்றுப்புரச் சூழலுக்கும்
சுகாதாரத்துக்கும் ஓர் இயக்கம்
சாலை மேம்பாட்டுக்கும்
சமரசத்துக்கும் ஓர் இயக்கம்

சாக்கடை சீர்படுத்த
சகதி மனை சரிசெய்ய
கொசுக்களை கொன்றொழிக்கும்
கொள்கைக்கு ஓர் இயக்கம்.
---------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். நடக்கும் வீதிதோறும் எண்ணிப்பார்த்தால் குறைந்தது ஐந்து இயக்கம், சில பேருக்கு இயங்கும் ,பல பேருக்காய் இயங்கும், வெகு சில மட்டுமே பேறுடன் விளங்கும். இப்படி எதற்கெடுத்தாலும் சங்கம் என்னும் பெயரிலும், சபை, அவை எனும் பெயரியில் அவையாவும் இயக்கமாக இயங்கும் . இப்படி வகை,வகையாய் இயக்கம் இருந்தால் எப்படி துலங்கும்? விளங்கும்?

crown said...

கொள்கைகளை வகுத்துக்கொண்டால்
சேவைகளைப் பிரித்துக்கொண்டால்
எல்லாத் துறைகளிலும்
எழுந்து நிற்கும் எம் குலமும்

இயக்க மயக்கம் தெளி
இயங்க முழக்கம் தரி!
---------------------------------------------------
கவிஞர் சரியான வழி சொல்லியுள்ளார். பிரித்து கொண்டு செயல் பட்டால் செயல் எளிதில் செயல் படுத்த முடியும். இது தான் பகிர்தலின் உன்னத பண்பு!பிரிந்து கொண்டு செய்தால் அழிவின் தொடக்கம் இறுதியில் எல்லாம் தோல்வியில் முடியும்.
வழக்கம் போல் கவிஞரின் சமூக சிந்தனை நம்மை விழிப்படைய செய்துள்ளது.

sabeer.abushahruk said...

ஒன்றிய கருத்துடன் பின்னூட்டமிட்ட என் இனிய நண்பர்களுக்கு மிக்க நன்றி.

மாற்றுக் கருத்து கொண்ட நண்பர்கள் கூட தத்தமது கோணத்தை பகிர்ந்துகொண்டிருந்தால் மேற்கொண்டு விவாதித்து தீர்வை எட்டி இருக்கலாம்.

நாம் பேசுவதைவிட செய்வதில் ஆர்வம் குறைந்தவர்கள்தாமே? என் செய்ய?

தலைத்தனையன் said...

இயக்க மயக்கம்
இயங்க மறுக்கும்
இயக்க செருக்கும்
சமுதாய தொண்டையில்
முள்ளாய் தரிக்கும்

தப்லீக் ஜமா'அத் வந்ததால்
தன்னடக்கம் வந்தது
த.மு.மு.க. வந்தது
தன்னுணர்வு தந்தது

தர்ஹாவிற்கு கொஞ்சமும்
தரீகாவிற்கு கொஞ்சமும்
மிச்ச சொச்ச இறை அச்சம்
தாரைவார்கப்பட்டதால்

தவ்ஹீதியக்கம் வந்தது
ஏகத்துவம் சொன்னது
பள்ளிசெல்லும் தயக்கம் நின்று
வயோதிகர் அதிகம் கண்ட பள்ளி
வாலிபர் அதிகம் கொண்டது

தரீகாவின் சில்சிலாவும்
தர்ஹாவின் சித்து யாவும்
உடைத்து சொல்ல பட்டது
உடைத்து சொன்ன அறிஞருக்கு

ஒற்றுமை ஒன்றும் தெரியலே
ஓங்கி ஒலிக்க சொல்லப்பட்ட
ஒற்றுமை மார்க்க விதியடா
ஓன்று பட்டு நின்றுவிட்டால்
வேறு சக்தி இல்லடா

KALAM SHAICK ABDUL KADER said...

புள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி

புளங்காகிதம் அடைவதில் நமக்கோர் மயக்கம்;

உள்ளத்தளவில் ஈமானின் தளர்ச்சி

ஒத்துக்கொள்வதில் நமக்கேன் தயக்கம்?

தாயும் ஒன்றே; தந்தையும் ஒன்றே

தாரணிக்கு நாம் தந்த சமத்துவம் எங்கே?

ஆயினும் நமக்குள் ஆயிரம் பிளவுகள் உண்டே

ஆயுதம் கொண்டும் நமக்குள்

சண்டையிட்டு மாய்த்து கொள்வது யாரோடு?

சகோதரத்துவ மரத்தை சாய்த்து விடுகின்றோம் வேரோடு....!

அண்டை வீட்டார் பசித்திருத்தலாகாது -என்ற

அண்ணல்நபி(ஸல்) அமுத மொழி மறந்தோம் அடியோடு..

பண்டைய முஸ்லிம்கள் உலகுக்கு

பயிற்றுவித்தனர் அறிவியல்- கணிதம்*

இன்றைய முஸ்லிம் இளைஞர்கள்

எத்தனை பேரிடம் உண்டு உயர்கல்வி விகிதம்?

மூளைச்சலவைச் செய்து முஸ்லிம் இளைஞர்களை

மூலைக்குத்தள்ளி விட்ட முல்லாக்களே....!

நாளை மஹ்ஷரிலே பதில் தர வேண்டும் அல்லாஹ்விடம்

நானே வந்து சாட்சி சொல்வேன் அப்போது...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு