உன்னதமான ஒரு தலைமைக்குக் கட்டுப்பட்டதால், சிறப்பான சமுதாயம் ஒன்று உருவாயிற்று என்பதற்கு, நபித்தோழர்கள் சிறந்த முன்மாதிரிகளாவர். இஸ்லாமிய வரலாற்றில் அச்சிறந்த சமுதாயத்தின் ஒப்பற்ற நிகழ்வுகள் பதிவு பெற்றுள்ளன. காரணம், முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைத் தூதர்களுள் இறுதியானவர்கள் என்பதால், அவர்களின் தூதுச் செய்தியை இவ்வுலகம் உள்ளளவும் எடுத்துக் காட்டவேண்டும் என்ற பொறுப்பைச் சுமந்தவர்கள் அத்தோழர்கள். அதனால்தான் ‘சிறந்த முதன்மைச் சமுதாயம்’ என்று மாநபி அவர்களால் மதிப்பளிக்கப் பெற்றார்கள். நபியவர்களின் மாணவர்கள் சீடர்கள் என்ற நிலையில் இருந்தும்கூட, ‘சஹாபா’ (தோழர்கள்) என்று சிறப்பிக்கப்பட்டார்கள்.
“என் சமுதாயத்தவர்களுள் முதன்மைச் சிறப்பைப் பெற்றவர்கள் என் தோழர்கள்; அதற்குப் பின்னர், அடுத்த சமுதாயம்; அதற்குப் பின்னர், அவர்களைத் தொடர்ந்தவர்கள் ஆவர். அதன் பின்னர் சிலர் வருவார்கள். அவர்கள் உறுதிமொழி எடுப்பதற்கு முன் சான்று பகர்வார்கள்; சான்று பகர்வதற்கு முன் உறுதிமொழி எடுப்பார்கள்” என்று அருள்மொழி பகர்ந்தார்கள் அண்ணல் நபி நாயகம் (ஸல்). (நூல்: புகாரீ)
மூன்று சிறந்த சமுதாயங்களுள் முதன்மையான சமுதாயமான நபித்தோழர்களைப் பற்றிய சிறப்பான எடுத்துக்காட்டுகளைப் படம் பிடிப்பது போன்ற தொகுப்பொன்றை ‘ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல்’ எனும் தமது நூலில் அதன் ஆசிரியர் காலித் முஹம்மத் காலித் அவர்கள் கூறுகின்றார்:
“தம் தலைவரை முழுமையாக நம்பிச் செயல்பட்ட நல்லவர்களான நபித் தோழர்கள் அப்பழுக்கற்ற, தூய்மை மிக்க வரலாற்று நாயகர்கள் ஆவர். மனித வரலாற்றின் எந்தப் பதிவும் கண்டிராத, துல்லியமான உண்மை விவரனங்களைத் தந்த அந்த உத்தமத் தோழர்கள் உண்மையான வரலாற்று நாயகர்கள்தாம் என்பதில் ஐயமில்லை. அத்தகைய உன்னதமான பதிவுகளைத் தருவதற்காக அவர்கள் எடுத்துக்கொண்ட கவனமும் கடும் உழைப்பும் ஈடிணையற்றதாகும். அவர்களுக்குப் பின்வந்த சமுதாயத்தினர், அந்தப் பதிவுகளின் நம்பகத் தன்மை மற்றும் மிகச் சிறிய நிகழ்வுகளையும் விடாமல் பதிவு செய்த நேர்த்தி நம்மை வியக்க வைக்கிறது.
“இறைத் தூதர் (ஸல்) அவர்களின் இணையற்ற தோழர்கள் வெறும் வரலாற்றுப் பதிவுகளாக மட்டுமன்றி, தலைவரை முற்ற முற்றப் பின்பற்றிய முன்மாதிரிகளாகவும் வியக்கத் தக்க விதத்தில் திகழ்கின்றனர். அத்தகைய தோழமையின் உண்மைப் பதிவுகள்தாம் இந்நூலின் சிறப்பிற்குச் சான்று பகர்வன. இந்நூலாசிரியரின் எழுத்துத் திறனுக்கு மதிப்புச் சேர்ப்பனவாக அந்த உண்மை வரலாறுகள் திகழ்கின்றன என்று கூறுவது மிகையாகாது.”
முந்திய இறைத் தூதர்களுக்கு இல்லாத வேறுபட்ட பொறுப்பும் நோக்கும் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு இருந்தது. மற்ற நபிமார்களுக்கு இருந்த பொறுப்போ, அவர்களின் தூதுச் செய்தியை ஏற்றுக்கொள்ளும் கூட்டத்தை உருவாக்குவதாகும். ஆனால், இறுதித் தூதரான இந்த நபிக்கோ, கிடைத்த தூதுச் செய்தியைப் பரப்புதல் மட்டுமன்றி, அந்தச் செய்தியை முற்றாகப் பின்பற்றும் சமுதாயம் ஒன்றை உருவாக்கி, அவர்களை உலகம் உள்ளளவும் வரும் மனித சமுதாயத்துக்கு எடுத்துரைக்கும் உண்மையாளர்களாகத் திகழச் செய்யும் பொறுப்பும் இருந்தது. அந்தப் பொறுப்புதான், முழு மனித சமுதாயத்துக்கும் மார்க்கத்தை எடுத்துரைக்கும் ‘தஅவா’ எனும் பெரும் பொறுப்பான இறுதித் தூதின் உண்மையாகும். சுருங்கக் கூறுமிடத்து, மற்ற இறைத் தூதர்கள் தம்மைப் பின்பற்றுவோரை உருவாக்கினார்கள். ஆனால் இறுதித் தூதராகிய முஹம்மத் (ஸல்) அவர்கள் அந்தப் பொறுப்பைச் சுமந்த தலைவர்களை உருவாக்கினார்கள்.
அத்தகைய தலைவர்களுள் முதலானவர்தான், அண்ணலின் அருமைத் தோழர் அபூபக்ருஸ் சித்தீக் (ரலி) அவர்கள். தம் நேசரான நபியவர்களிடம் எத்தகைய தலைமைத்துவப் பாடத்தைப் படித்தார்கள் என்பதற்கு, நபியின் இறப்பிற்குப் பின்னர் அன்னார் நடந்துகொண்ட முறை மிகச் சிறந்த சான்றாகும். இறைத் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாழ்க்கையின்போது தமக்குப் பின் எத்தகைய தலைவர் வரவேண்டும் என்று சூசகமாக உணர்த்திச் சென்றார்கள் என்பதற்கு அந்த நிகழ்வு ஓர் எடுத்துக்காட்டாகும். தமக்குப் பின் தம் தோழர்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன், எவ்வித ஐயத்திற்கும் இடமின்றி அபூபக்ரைத் தேர்ந்தெடுப்பார்கள் என நம்பியிருந்தார்கள்; அவ்வாறே அம்மக்களும் அபூபக்ரைத் தேர்ந்தெடுத்தார்கள்.
அந்த நிகழ்வின் மீது ஐயத்தைக் கிளப்புவோர் நபியவர்களின் முழு வாழ்க்கையின் மீதும் தமது அறியாமையால் பிதற்றத் தொடங்குகின்றனர். உண்மையில் நடந்ததென்ன என்பதைக் கீழ்வரும் விவரணத்தால் நாம் அறியலாம்:
“உங்களுக்குத் துன்பம் ஒன்று ஏற்பட்டு, அதனால் உள்ளம் வாடி வருந்துமாயின், அப்போது எனது மரணத்தை மனக்கண் முன் கொண்டுவாருங்கள். அதனால் உங்களுக்கு ஏற்பட்ட சோதனை ஒரு துளியளவே எனக் கருதப்படும்” என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அன்னாரின் இறப்பால் தோழர்களுக்கு ஏற்பட்ட துயரத்தை அளவிட்டுக் கூற முடியாது!
விளைவுகள்...? அந்த அருள் தூதரின் நெருக்கம் இல்லாமல் போய்விட்டது! அது மட்டுமா? இறைவனிடமிருந்து ஜிப்ரீல் கொண்டுவந்த ‘வஹீ’யும் அல்லவா தடைபட்டு நின்றுவிட்டது! நபியவர்களின் தொடர்பால் கிடைத்துவந்த இறைத் தொடர்பும் இல்லாமலாகிவிட்டது!
அவ்வாண்டின் சஃபர் மாதம் தொடங்கி, அது முடியும் தருவாயில் வந்துவிட்டது. இறைத் தூதரின் இறப்பு ஊறுதியாகிவிட்டது என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. அண்ணலவர்கள் அதற்காகத் தம்மை ஆயத்தம் செய்துகொண்டார்கள். குர்ஆனின் சில வசனங்கள் அவர்களின் இறுதிப் பயணத்தை உறுதிப் படுத்தும் வகையில் அமைந்தன. அன்னாரின் முன்னவர்களான இறைத்தூதர்கள் இறந்தது போன்று முஹம்மத் (ஸல்) அவர்களும் இறப்பார்கள் என்ற செய்தியும் வந்தது!
“(நபியே! முஹம்மதே!) நீர் இறக்கக் கூடியவரே. அது போன்று உம்முடைய முன்னவர்களான இறைத் தூதர்களும் இறந்தவர்களே” (39:30) எனும் வசனம் இறங்கி, அன்னாரின் இறப்பை உறுதிப் படுத்திற்று!
“(நபியே!) உமக்கு முன்னரும் எந்த மனிதனுக்கும் நிலையான வாழ்வை நாம் ஏற்படுத்தவில்லை. ஆகவே நீர் இறந்தால், அவர்கள் மட்டும் என்றென்றும் இருக்கப் போகிறார்களா? ஒவ்வோர் ஆன்மாவும் இறப்பைச் சுவைப்பதாகவே இருக்கின்றது. கெடுதியையும் நன்மையையும் கொண்டு தேர்வு செய்வான்வேண்டி, நாம் உங்களைச் சோதனை செய்கின்றோம். பின்னர் நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.” (21:34,35)
இது போன்று நபியவர்களின் இறப்பைச் சூசகமாகச் சுட்டிக்காட்டுவதாக இன்னும் பல வசனங்கள் நபியவர்களின் இறுதிப் பருவத்தின்போது இறங்கின. இவ்வாறு இறைவன் தன் தூதர்களின் அழைப்புப் பணி முடிவடையும்போது, அவர்களைத் தன்னளவில் அழைத்துக்கொள்வது இறை நியதியாக இருந்துள்ளது. இறுதித் தூதர் இறப்பைச் சந்தித்துவிட்ட பின்னர் தூதுத்துவத்தின் தொடர்பு நின்றுபோய்விடாது; மாறாக, அப்பொறுப்பு அவரைப் பின்பற்றியவர்களால் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நியதியை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். அவர்கள் அப்பொறுப்பை நிறைவேற்றும் காலமெல்லாம், இறையுதவி அவர்களுக்குக் கிடைத்துக்கொண்டே இருக்கும்.
‘ஹஜ்ஜத்துல் விதா’ என்னும் அவர்களின் விடை பெறும் ஹஜ்ஜின்போது அண்ணலார் மிகத் தெளிவாகவே மக்களுக்குத் தமது இறப்பைப் பற்றி அறிவித்துவிட்டார்கள்.
“என்னருமைத் தோழர்களே! ஹஜ்ஜின் செயல்பாடுகளை நான் செய்வது போன்றே நீங்கள் செய்யுங்கள். ஏனெனில், அடுத்த ஆண்டு ஹஜ்ஜின்போது நான் ஹஜ்ஜுக்கு வருவேனா என்பது எனக்குத் தெரியாது” என்றார்கள்.
முஆது பின் ஜபல் (ரலி) என்ற நபித் தோழரை யமன் நாட்டிற்கு அனுப்பியபோது, “முஆதே! நீர் அங்கிருந்து திரும்பி வரும்போது என்னைக் கண்டுகொள்ள மாட்டீர். எனது மண்ணறையையும் இந்த மஸ்ஜிதையும்தான் காண்பீர்” என்று கூறினார்கள்! அதைக் கேட்டு அந்தத் தோழர் ஆற்றாமையால் அழுதார்கள்!
அதே பருவத்தின்போது, “இறைச் செய்தியைக் கொண்டுவரும் ஜிப்ரீல் எப்போதும் ஒவ்வொரு முறைதான் ஓதிக் காட்டுவது வழக்கம். ஆனால், இந்த வருடம் இரண்டிரண்டு தடவை எனக்கு ஓதிக் காட்டி, அவற்றை உறுதிப் படுத்தினார்கள்” என்று நபியவர்கள் கூறினார்கள்.
ஒரு நாள் இரவின் இறுதியில் நபி (ஸல்) அவர்கள் தம் பணியாளரான அபூ முவைஹிபா என்பவரை எழுப்பி, “இறந்தவர்கள் அடக்கப்பட்ட ‘ஜன்னத்துல் பகீ’ என்ற அடக்கவிடத்திற்குச் சென்று, அங்குப் புதைக்கப்பட்டவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யுமாறு கட்டளை இடப்பட்டுள்ளேன்” என்று கூறி, அவருடன் அங்கு சென்றார்கள். அவ்விடத்தில் சென்று, “கப்ரில் அடங்கியுள்ளவர்களே! உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும். இப்போது உள்ள மக்கள் நுகரும் வேதனையைப் போன்று நீங்கள் நுகரவில்லை என்பதையிட்டு, உங்களுக்கு நற்செய்தி கூறுகின்றேன். இப்போது உள்ளவர்களுக்குச் சோதனையும் வேதனையும் புயலைப் போல் வந்துகொண் டிருக்கின்றன” என்று கூறிவிட்டு, அபூ முவைஹிபாவைப் பார்த்துக் கூறினார்கள்: “நான் இவ்வுலகின் செல்வங்களையும் சொத்து சுகங்களையும் கொடுக்கப்பட்டு, உலக முடிவு வரை வாழ்வதற்குமான தெரிந்தெடுப்பை வழங்கப்பட்டேன்; எனினும், நான் இப்போதே இறந்து, என் இரட்சகனைச் சந்திக்கும் நல்வாய்ப்பைத் தெரிவு செய்துவிட்டேன்.”
பின்னர் அந்த மண்ணறை வாசிகளை நோக்கி, அவர்களுக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள். அதன் பின்னர் தமது இல்லத்திற்குச் சென்றார்கள். வீட்டைச் சென்றடைந்தபோது, அவர்களின் இறப்பிற்கான இறுதி நோய் தொடங்கிவிட்டிருந்தது!
அன்னை ஆயிஷாவின் வீட்டிற்கு வந்து, அன்னையின் மடியில் பெருமானார் (ஸல்) அவர்களைக் கிடத்தியபோது, “ஆஹ்! ஆஹ்! என் தலையே!” என்று தம் தலைவலியைப் பற்றி ஆயிஷா (ரலி) முறையிட்டபோது, நபியவர்கள், “இல்லையில்லை. என் தலைதான் கனக்கிறது! ஆயிஷா! எனக்கு முன்னால் நீ இறந்தால், நானே உன்னைக் குளிப்பாட்டிக் கஃபனிட்டு, நானே உனக்குத் தொழுகையும் நடத்துவேன். உனக்கான இறுதிக் கடமைகளையும் நிறைவேற்றுவேன்” எனக் கூறினார்கள்.
அதற்கு அன்னையார் அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் அவர்களே, நான் இறந்து போனால், உங்களுக்கு மற்ற மனைவிகள் இருக்கின்றார்கள். அவர்கள் உங்களுக்குப் பணிவிடை செய்வார்கள். ஆகவே, நான் இறந்து போவதே மேல்” என்று கூறினார்.
இறைத்தூதர் அவர்களுக்குத் தலைவலி கூடிக்கொண்டே சென்றது. காய்ச்சலும் கடுமையானது. தோழர் ஒருவர் அண்ணலாரின் மேல் கை வைத்துப் பார்த்து, உடன் அகற்றிக்கொண்டார். அவ்வளவு சூடு! “என் கையைத் தொடர்ந்து வைக்க முடியாத அளவுக்கு உங்கள் ஜுரம் மிகக் கடுமையாக இருக்கின்றது!” என்றார் அத்தோழர்.
“ஆம். இறைத் தூதர்களான எங்களுக்கு, மற்றவர்களைவிட வேதனை இரு மடங்காகும்.” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபியவர்களின் அன்றைய முறை, அன்னை மைமூனா (ரலி) வின் வீட்டில் இருந்ததால், ஜுரம் சற்றுக் குறைந்தபோது, அவர்கள் எழுந்து மைமூனாவின் வீட்டிற்குச் சென்றார்கள். சிறிது நேரத்தில் அவர்களுக்குக் காய்ச்சல் மீண்டும் கூடிற்று. ஆகவே, தம் மனைவியரை ஆயிஷாவின் வீட்டிற்கு வரும்படிக் கூறிவிட்டு, அங்கே சென்றார்கள். மற்ற மனைவியர் அனைவரும் ஆயிஷாவின் வீட்டிற்கு வந்து பணிவிடை செய்ய அனுமதி பெற்றுக்கொண்டு அங்கே சென்றார்கள். அன்னாரின் தலை, துணியால் இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்தது. நபியவர்களின் ஒரு பக்கத்தில் மருமகன் அலீ (ரலி) அவர்களும், அடுத்த பக்கம் அப்பாஸ் (ரலி) அவர்களும் தாங்கிப் பிடித்திருந்தார்கள்.
பின்னர், மதீனாவின் ஏழு கிணறுகளிலிருந்து தண்ணீர் கொண்டுவந்து அண்ணலாரின் மீது ஊற்றினார்கள். அதனால், ஜுரம் தணிந்தது. அப்போது அலீ (ரலி) அவர்களும் அப்பாஸ் (ரலி) அவர்களின் மகன்களுள் ஒருவரும் தாங்கிப் பிடித்திருக்க, ‘மஸ்ஜித் நபவி’யின் பக்கம் அழைத்துச் செல்லப்பட்டார்கள். பின்னர் பிரசங்க மேடையில் ஏறி, மக்களுக்கு உபதேசம் செய்யலானார்கள். அதில், உஹதுப் போரில் உயிர்நீத்த தோழர்களுக்காக அவர்கள் துஆ செய்தார்கள். பெருமானார் (ஸல்) தம் தோழர்கள் மீது அளவு கடந்த பற்றும் பாசமும் கொண்டிருந்தார்கள். அத்துணைப் பற்றும் பாசமும் தம் தோழர்கள் மீது வைத்திருந்ததற்குக் காரணம், தமக்குப் பின் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்கிவிட்டுச் செல்ல வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருந்ததுதான்.
மக்காவிலிருந்து ‘ஹிஜ்ரத்’ செய்து வந்த ‘முஹாஜிரீன்’களைப் பார்த்துக் கூறினார்கள்: “என் அருமை ‘முஹாஜிரீன்’களே! நீங்கள் எண்ணிக்கையில் கூடிக்கொண்டு வருகின்றீர்கள். ஆனால், என்னருமை ‘அன்சார்’களான இந்த மண்ணின் மைந்தர்கள் குறைந்துகொண்டே வருகின்றனர். ஆகவே, அவர்களை கண்ணியப் படுத்துங்கள். முதலில் அவர்கள்தாம் ஆதரவு வழங்கினர். அவர்களின் குறைகளைப் பெரிது படுத்தாமல், அவர்களை மன்னித்துவிடுங்கள். மக்களே! உஸாமாவின் தலைமையில் செல்ல இருக்கும் படைக்கு வலுச் சேருங்கள். அவரின் தலைமையை ஏற்காமல் புரட்சி செய்யும் நீங்கள்தாம் முன்னர் அவருடைய தந்தை ஜெய்தின் தலைமையையும் எதிர்த்தீர்கள். ஜெய்து எவ்வாறு படைத் தளபதியாகப் பொருத்தமாக இருந்து வீரதீரச் செயல்கள் செய்து தனது பொறுப்பை நிறைவேற்றினாரோ, அது போன்று அவர் மகனும் செய்வார் என்ற நம்பிக்கை எனக்குண்டு.”
அதன்பின் சற்று நேரம் அமைதியானார்கள். சுற்றி இருந்தவர்களிடமும் அமைதி நிலவியது. பின்னர் அண்ணல் நபியவர்கள் பேசத் தொடங்கினார்கள்: “அடியார் ஒருவருக்கு இவ்வுலகும் இதன் வசதிகளும், மறுமையின் அழியாப் பேரின்பமும் அதன் நல்வாழ்வும் தேர்ந்தெடுப்பாகக் கொடுக்கப்பட்டது. அவ்வடியார் அழியாத மறுமை வாழ்வைத் தேர்ந்தெடுத்தார்.”
இதைக் கேட்டவுடன், அண்ணலாரின் அருமைத் தோழர் அபூபக்ர் (ரலி) அவர்கள் அழத் தொடங்கினார்கள். மக்களுக்கு இது புரியாப் புதிராக இருந்தது. நபித்தோழர்கள், “யா ரசூலுல்லாஹ்! நாங்களும் எங்கள் சந்ததிகளும் உங்களுக்கு அற்பணமாகட்டும்” என்றார்கள். அப்போது நபியவர்கள் இடைமறித்து, “நட்பாலும் தியாகத்தாலும் எனக்குப் பேருதவியாக இருந்தவர் இந்த அபூபக்ர்தான். அல்லாஹ்வையன்றி நான் யாரையும் தோழனாக எடுத்துக்கொள்வதாக இருந்தால், அபூபக்ரைத்தான் தேர்ந்தெடுப்பேன். நான் அல்லாஹ்வின் நேசன் (கலீல்). அபூபக்ர் என் தோழர். இந்தப் பள்ளியின் அனைத்து வாசல்களையும் அடைத்துவிடுங்கள்; அபூபக்ரின் வாசலைத் தவிர.
“அல்லாஹ் யூத கிருஸ்தவர்களைச் சபிப்பானாக! அவர்கள் தமக்கு அனுப்பப்பட்ட நபிமார்களைக் கடவுள்களாக ஆக்கினர். அரபுத் தீபகற்பத்தில் இஸ்லாமைத் தவிர வேறு எந்த மதமும் இருக்கக் கூடாது. தொழுகையைக் கடைப்பிடியுங்கள். உங்கள் பாதுகாப்பில் இருப்பவர்களை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சுங்கள். உஸாமாவின் தலைமையிலான படையை இப்போதே அனுப்புங்கள்” என்றார்கள்.
நபியவர்கள் அன்று கூட்டுத் தொழுகை தொழச் செல்லவில்லை. “அபூபக்ரை இமாமாக நிறுத்தித் தொழச் செய்யுங்கள்” என்று கட்டளையிட்டார்கள். தம் தந்தை இளகிய உள்ளம் படைத்தவர் என்பதால், தொழுகையின்போது ஏதேனும் அசம்பாவிதம் நிகழ வாய்ப்புண்டு என்றெண்ணி, ஆயிஷா (ரலி) எதிர்ப்புத் தெரிவித்தார்கள். தம்முடைய இயலாமையையும் பொருட்படுத்தாமல், ஆயிஷாவின் மீது சினங்கொண்டு, “நீங்களெல்லாம் நபி யூசுபின் பெண்ணினத்தார்தாமே” என்று இடித்துரைத்தார்கள். பிற்காலத்தில் தமது மறுப்புரைக்குக் காரணம் கூற விரும்பிய அன்னை ஆயிஷா அவர்கள்,”அல்லாஹ்வின் தூதர் நின்று தொழுத இடத்தில் மற்றொருவர் தொழுகையின் இமாமாக நின்று நடத்துவதை மக்கள் விரும்ப மாட்டார்கள்; அதனால்தான் நான் மறுப்புத் தெரிவித்தேன்” என்று கூறினார்கள்.
பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முந்திய இந்த நிகழ்வு எழுத்தளவில் இருக்கவில்லை. இருப்பினும், பொதுமக்களின் புரிந்துணர்வால் அது நடைமுறைப் படுத்தப்பட்டது. இன்றும்கூட அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இருக்கும் பழங்குடியினர் இடையே எழுத்தளவில் இல்லாமல், தலைவரின் வாய்மொழிக் கட்டளையே போதுமாக இருக்கின்றது. ஒருவரைத் தலைவராக ஏற்றுக்கொண்ட பின்னர், அவருடைய கட்டளையே சட்டமாக அங்கு மதிக்கப்படுகின்றது. இதைவிட உயர்ந்த நிலையில்தான், அன்று ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் நபியின் வாக்கை மக்கள் சட்டமாக ஏற்றுக்கொண்டனர். அவ்வடிப்படையில்தான் நபியின் பிரதிநிதித் தேர்வும் நடந்தது.
நபியின் பிரதிநிதித் தேர்வை எதிர்த்தவர்கள் ‘முனாஃபிக்கீன்’ என்ற நயவஞ்சகர்கள்தாம். அவர்கள் முஸ்லிம்களைப் போன்று வெளிப்படையாக நடித்து, இதயங்களில் நபிக்கு எதிரான கொள்கையைக் கொண்டவர்கள். இவர்களை அல்லாஹ் இறைமறுப்பாளர்களைவிட மோசமாகக் கடிந்துரைக்கின்றான். நபியின் இறப்பிற்குப் பின்னர் அவரது பிரதிநிதியாக வருவதற்கு, அவருடைய நெருங்கிய உறவினர்தான் தகுதியானவர்கள் என்ற கொள்கையை எடுத்து வைத்து, இஸ்லாமிய உம்மத்தில் பிளவை ஏற்படுத்தியவர்கள் இவர்கள்தாம். அன்றிருந்த நபித்தோழர்கள் தம் தலைவருக்குக் கட்டுப்படும் விஷயத்தில் மிக உயர்ந்திருந்தார்கள். அதனால், அண்ணலாரின் பிரதிநிதியாக அபூபக்ரை ஏற்றுக்கொண்டார்கள்.
அண்ணலார் (ஸல்) விரும்பியிருந்தால், தமது கட்டளையை எழுத்து வடிவில் அமைத்திருக்கலாம். ஆனால், அவர்களுக்குத் தெரியும், தாமும் தம் தோழர்களும் அபூபக்ரை எவ்வளவு உயர்ந்த நிலையில் வைத்திருந்தார்கள் என்று. பல சூழ்நிலைகளின்போது நபியவர்கள் அபூபக்ருக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தது மக்கள் அனைவருக்கும் தெரியும். முஹம்மது நபிக்குப் பின் வேறு நபியில்லை; நபியின் பிரதிநிதிதான் ஆட்சிப் பொறுப்புக்கு உரித்தானவர் என்பதை உண்மை என்று உள்வாங்கியவர்கள் நபித்தோழர்கள்.
தமக்குப் பின் இஸ்லாமிய அரசை நடாத்திச் செல்வதற்கு முழுத் தகுதி பெற்றவர் அபூபக்ர் என்ற முதன்மைத் தோழர்தான் என்பதைப் பல நிகழ்வுகளின்போது சூசகமாக மக்களுக்கு நபியவர்கள் உணர்த்தியிருந்தார்கள். அதனால், அபூபக்ரை நபியின் பிரதிநிதியாக ஏற்றுக்கொள்வதில் பொதுமக்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை.
ஹுதைபிய்யா உடன்படிக்கையின்போது தமக்கு இருந்த ஆட்சேபனையை நபியிடம் தெரிவிக்க உமர் (ரலி) அவர்கள் யாரிடம் சென்றார்கள்? அபூபக்ர் (ரலி) அவர்களையே தேர்ந்தெடுத்து, அவர்கள் மூலம் நபியவர்களிடம் தெரிவிக்கச் செய்தார்கள்.
பெண்ணொருவர் நபியவர்களிடம் எழுப்பிய கேள்விக்கு, “நாளை வாருங்கள்” என்றார்கள். அதற்கு அந்தப் பெண், “நீங்கள் இல்லாவிட்டால் நான் யாரிடம் கேட்பது?” என்றபோது, “அபூபக்ரிடம்” என்றார்கள். பின்னர் அப்பெண், “அபூபக்ர் இல்லாவிட்டால்...?” என்றபோது, “உமரிடம்” என்றார்களே. இதுதான் இஸ்லாமிய அடிப்படையில் தலைமைத் தேர்வாகும்.
அண்ணலார் (ஸல்) அவர்கள் கடுமையாக நோயுற்றது வியாழக்கிழமை. அவர்கள் இறந்துபோனதோ, திங்கள் கிழமை முற்பகலில். அவர்கள் விரும்பியிருந்தால், இடைப்பட்ட அந்த நான்கைந்து நாள்களில் அலீ (ரலி) அவர்களையோ, வேறு ஒருவரையோ கலீஃபாவாக இருக்கட்டும் என்று கூறியிருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. காரணம், அவர்கள் இறைக் கட்டளையினால் வழிநடத்தப்பட்டார்கள்.
அந்த இறுதி நாள்களின்போது ஒரு தொழுகைக்கு, அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுகை நடத்த வருவதற்குத் தாமதமாயிற்று. தொழுகை அழைப்பாளர், உமர் (ரலி) அவர்களை இமாமாக நிற்கச் சொன்னார். தொழுகையில் உமரின் குரலைக் கேட்ட நபியவர்கள், மக்கள் தமக்குப் பின் அபூபக்ர்தான் கலீஃபா என்ற தமது கட்டளையை ஏற்றுக்கொண்டார்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தார்கள். அல்லாஹ்வின் தூதரவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களைத் தமது கலீஃபாவாகத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதற்கான தெளிவான சன்றாகும் இது.
திங்கள் கிழமை அன்று மக்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை இமாமாகக் கொண்டு கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டிருந்தார்கள். அண்ணலார் (ஸல்) அவர்கள் தமது வீட்டுத் திரையை நீக்கி மஸ்ஜிதைப் பார்த்தார்கள். மக்கள் அபூபக்ரை இமாமாகக் கொண்டு தொழுகிறார்கள் என்பதைக் கண்டு மன அமைதி பெற்றார்கள்.
சற்று நேரத்திற்குப் பின், அலீ இப்னு அபீதாலிப் (ரலி) அவர்கள் ஒரு புறமும் ஃபழ்ல் இப்னு அப்பாஸ் (ரலி) ஒரு புறமும் தம்மைத் தாங்கிய நிலையில் மஸ்ஜிதிற்குள் நபியவர்கள் வந்தார்கள். தொழுதுகொண்டிருந்த தோழர்களுக்கிடையில் சிறிய சலசலப்பு ஏற்பட்டது. அது இறைத் தூதரின் வருகையால் ஏற்பட்ட சலசலப்புதான் என்றுணர்ந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் சற்றே பின்வாங்கினார்கள். அதற்குப் பெருமானார் (ஸல்) அவர்கள், தொழுகையைத் தொடருமாறு கூறிவிட்டு, அபூபக்ருக்கு அருகில் அமர்ந்து தமது தொழுகையை நிறைவேற்றினார்கள்.
தொழுது முடித்த பின், மக்களைப் பார்த்துப் பேசத் தொடங்கினார்கள்: “மக்களே! கரும் புகை போன்று இஸ்லாத்திற்கு எதிரான சோதனைச் சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளன! அதில் மாட்டிக்கொள்பவர்களுக்காக நரகம் ஆயத்தப் படுத்தப்பட்டு இருக்கின்றது! ஆனால், இனிமேல் அதற்கு நான் பொறுப்பாளியாக இருக்க மாட்டேன். குர்ஆனின் கட்டளைகளுள் எந்த ஒன்றையும் நடைமுறைப் படுத்தாமல் நான் இருந்ததில்லை. அது போன்றே, இறைவன் தடுத்த எந்த ஒன்றையும் நான் தடுக்காமல் இருந்ததில்லை. மன்னறைகளைத் தமது வணக்கத் தலங்களாக ஆக்கிக்கொண்டவர்களை அல்லாஹ் சபிப்பானாக!”
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தமது உடல் நலக் குறைவிலிருந்து மீண்டுள்ளார்கள் என்பதைக் கண்டு மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தார்கள். இளைஞர் உஸாமா (ரலி) அவர்கள் புனிதப் போருக்குச் செல்ல நபியவர்களிடம் இறுதி அனுமதியை வேண்டி நின்றார்.
அபூபக்ர் (ரலி) அவர்கள், “யா ரசூலில்லாஹ், தங்களுக்கு அல்லாஹ் இப்போது உடல் நலத்தைக் கொடுத்துவிட்டான். நாமனைவரும் ஒன்றாகத் தொழுதும் உள்ளோம். காரிஜாவின் மகளான என் மனைவியிடமிருந்து கோரிக்கை ஒன்று வந்துள்ளது. அதன்படி, இன்றையப் பகலை அவருடைய வீட்டில் கழிக்கவேண்டும் என்பதே அக்கோரிக்கை. எனக்கு அதற்கான அனுமதியைத் தருவீர்களா?” என்று கேட்டு நின்றார்கள். அண்ணலவர்களும் அதற்கான அனுமதியை வழங்கினார்கள். உமரும் அலீயும் தம் பணிகளைத் தொடர அனுமதி பெற்றுச் சென்றுவிட்டார்கள். அண்ணலவர்களும் மனைவி ஆயிஷாவின் வீட்டுக்குத் திரும்பினார்கள்.
ஆயிஷாவின் சகோதரரான அப்துர்ரஹ்மான் (ரலி) அவர்கள் நபி அவர்களின் சுகம் விசாரிப்பதற்காக அங்கு வந்து சேர்ந்தார்கள். அவருடைய கையில் பல் துலக்கும் குச்சியொன்று இருந்தது. அண்ணலவர்களின் பார்வை அதன் மீதே இருந்தது. அதைக் கவனித்த ஆயிஷா (ரலி) அவர்கள் தம் சகோதரரிடமிருந்து அக்குச்சியை வாங்கி, அதைத் தம் பற்களால் நளினப் படுத்தி, அண்ணலாரிடம் கொடுத்தார்கள். அண்ணலாரும் அதை வாங்கிப் பல் துலக்கத் தொடங்கினார்கள். அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் குர்ஆனின் 113, 114 ஆவது அத்தியாயங்களை ஓதி, அண்ணலவர்களின் கைகளில் ஊதி, அக்கைகளை அண்ணலாரின் உடம்பின் மீது தடவிக்கொள்ள உதவினார்கள்.
சற்று நேரத்தில் அண்ணலாரின் உடல் நிலை மோசமடைந்தது. அருகிலிருந்த தண்ணீர்ப் பாத்திரத்தில் கையை விட்டுத் தம் முகத்தில் தடவினார்கள். “மரண வேதனை என்பது உண்மைதான்” என்றும் அடிக்கடிக் கூறினார்கள்.
இறைத்தூதரின் இறுதி நேரம் நெருங்கிற்று! அன்னை ஆயிஷாவின் அறிவிப்பின்படி, “அண்ணலவர்கள் அடிக்கடி வானத்தைப் பார்த்தபடி, “மேலான தோழனாகிய அல்லாஹ்வின் பக்கம்” என்று மும்முறை கூறினார்கள். நான் நினைத்தேன், உயிரை வாங்கும் மலக்குல் மவ்த் வந்துவிட்டார் என்று. நான் அவர்களிடம் எம்முடன் இருப்பதைத் தேர்ந்தெடுக்குமாறு கேட்டேன். ஆனால், அவர்கள் அல்லாஹ்விடம் செல்வதையே தேர்ந்தெடுத்தார்கள். அவர்களின் தலை என் பக்கம் சரிந்தபோது, நான் வீறிட்டு அழுதுவிட்டேன்!”
இறுதித் தூதர் இறந்துவிட்டார்கள் என்ற செய்தி மதீனாவின் மூலை முடுக்கெல்லாம் பரவி, மக்கள் அனைவரும் பள்ளியில் கூடத் தொடங்கினார்கள். முதலில் உமர் (ரலி) அவர்களும் முகீரா (ரலி) அவர்களும் உள்ளே நுழைந்தார்கள். “அண்ணலார் உணர்வை இழந்துள்ளார்கள்; இறக்கவில்லை” என்றார்கள் உமர் (ரலி). “இல்லை. அவர்கள் இறந்துவிட்டார்கள்” என்றார்கள் முகீரா (ரலி).
“நீர் குழப்பத்தை விளைக்கும் மனிதர். இந்த நாட்டில் இருக்கும் நயவஞ்சகர்களைக் களையெடுக்கும் வரை அவர்கள் இறக்கப் போவதில்லை. நபி மூஸா (அலை) அவர்கள் தம் இறுதி நேரத்தில் நினைவிழந்தது போன்று, இவர்களும் நினைவிழந்துள்ளார்கள். யாரேனும் நபியவர்கள் இறந்து போனார்கள் என்று சொன்னால், எனது வாளால் அவர் தலையைக் கொய்துவிடுவேன்” என்று ஆவேசத்துடன் கூறினார்கள் உமர் (ரலி) அவர்கள்.
மதீனாவின் ‘சுன்ஹ்’ என்ற புறநகர்ப் பகுதியில் வசித்த அபூபக்ர் (ரலி) அவர்களுக்குச் செய்தி எட்டியது. அதிர்ச்சியோடு மஸ்ஜிதுன் நபிக்கு விரைந்தார்கள். யாருடனும் பேசாமல், பள்ளியை ஒட்டியிருந்த ஆயிஷாவின் வீட்டினுள் நுழைந்தார்கள். அங்குதான் அண்ணலவர்கள் கிடத்தப்பட்டிருந்தார்கள். முஹம்மத் (ஸல்) அவர்களின் முகத்தை மூடியிருந்த துணியை நீக்கிப் பார்த்தார்கள். அன்னாரின் முகத்தில் முத்தமிட்டுவிட்டு, அழுதவர்களாக, “உலகில் உயிரோடிருந்தபோதும் மணம் மிக்கவர்களாக இருந்தீர்கள். இப்போது இறந்த பின்னரும் மணமிக்க நிலையில் உள்ளீர்கள். உங்களுக்கு விதிக்கப்பட்ட இறப்பு நிகழ்ந்துவிட்டது” என்று கூறினார்கள்.
பின்னர் அபூபக்ர் (ரலி) அவர்கள் மஸ்ஜிதுக்கு வந்து, ‘நபி இறக்கவில்லை’ என்று கூறிக் குரல் எழுப்பிக்கொண்டிருந்த உமர் (ரலி) அவர்களைப் பார்த்தார்கள். “உமர்! அமருங்கள்!” என்றார்கள். ஆனால் உமரின் ஆவேசம் அடங்கவில்லை! எனவே, அபூபக்ர் அவர்கள் நேராகச் சொற்பொழிவு மேடைக்குச் சென்றார்கள். அன்னார் பேசத் தொடங்கியதும், மக்கள் உமரை விட்டுவிட்டு அபூபக்ரின் பக்கம் ஓடிவந்தார்கள்.
“மக்களே! அறிந்துகொள்ளுங்கள். எவர்கள் முஹம்மதை வணங்கிக்கொண்டி ருந்தார்களோ அவர்கள், முஹம்மது இறந்துவிட்டார்கள் என்று அறிந்துகொள்ளட்டும். எவர்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்கினார்களோ, அல்லாஹ் உயிரோடு இருக்கின்றான் என்பதை அவர்கள் அறிந்துகொள்ளட்டும்” என்று உரத்த குரலில் கூறிவிட்டு, அருள்மறை குர்ஆனின் ‘ஆலு இம்ரான்’ அத்தியாயத்தின் கீழ்க்காணும் வசனத்தை ஓதினார்கள்:
“முஹம்மது மனிதர்களுக்கு அனுப்பப்பட்ட தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னர் இறைத்தூதர்கள் பலர் இவ்வுலகில் இறந்து போயுள்ளார்கள். இவர் இறந்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டுவிட்டால், நீங்கள் (இறைநம்பிக்கையாளர்களாக) இல்லாமல் வழி மாறிச் சென்றுவிடுவீர்களா? இத்தகையோர் அல்லாஹ்வுக்கு எந்த இழப்பையும் ஏற்படுத்திவிடப் போவதில்லை. நன்றியுள்ள அடியார்களுக்கு, அவர்களின் செயலுக்குத் தக்க கூலியை அல்லாஹ் கட்டாயம் வழங்குவான்.” (3:144)
மேற்கண்ட இறைவசனத்தைக் கேட்டு விக்கித்து நின்ற உமர், “இந்த வசனம் குர்ஆனில் உள்ளதா?” என்று கேட்டார்கள். அன்னாருக்குத் தெரியும், அது இறைவசனம் என்று. இந்த வசனம் இப்போதுதான் இறங்கிற்றோ என்று புதினப்படும் அளவுக்கு அவர்களின் ஆவேசம் மிகைத்திருந்தது! அத்துடன், “என்னால் நிற்க முடியாமல், என் முழங்கால்கள் வலுவிழந்துவிட்டன” என்று கூறியவராக உமர் (ரலி) மயங்கி வீழ்ந்தார்கள்! அங்குக் குழுமியிருந்த பலரும், அபூபக்ர் (ரலி) அவர்கள் ஓதிய அந்த இறைவசனத்தையே திருப்பித் திருப்பி மொழிந்தவர்களாக இருந்தார்கள்.
நபியின் நல்லறத் தோழர்களுள், அபூபக்ரைப் போல் அண்ணலாரை நேசித்தவர்கள் யாருமில்லை. நபியும் மற்றவர்களைவிட அபூபக்ரை நேசித்தார்கள். நபியின் இறப்பினால் உணர்விழந்து மயங்கி வீழும் நிலைக்கு வருபவர் யாருமிருந்தால், அவர் அபூபக்ராகத்தான் இருப்பார். ஆனால் அந்த அபூபக்ர் நிலை குலையாமல் உறுதியாக நின்றார்கள்! வீரமும் துணிச்சலும் கொண்டிருந்த உமரோ, அண்ணலாரின் இறப்பை உறுதியுடன் அறிந்தவுடன், நிலை குலைந்து மயங்கி வீழ்ந்தார்!
இங்குதான் இந்த உம்மத்தை நபிக்குப் பின்னர் வழி நடத்துவதற்குச் சரியான தேர்வுக்குரியவர் அபூபக்ர்தான் என்பது நிரூபணமாயிற்று. தாம் பெற்ற பயிற்சியால் இந்தச் சமுதாயத்தை வழி நடத்துவதன் கட்டாயம், அந்தத் தலைவர் இறந்துவிட்டார் என்பது நிரூபனமானபோது, உறுதியுடன் நின்ற அபூபக்ரின் செயலால் வலுப் பெற்றது. அவர்களின் செயலால், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மிகச் சரியான ஆளைத்தான் சமுதாயத் தலைவராகத் தெரிவு செய்து பயிற்சியளித்துள்ளார்கள் என்பதுவும் விளங்குகின்றது.
இறைத்தூதரின் பொறுப்பு, இறைச் செய்தியை மக்களுக்கு எடுத்துரைப்பது மட்டுமன்று; அதை இனி வரும் சமுதாயங்களுக்கும் எடுத்துரைப்பதற்கான தலைமையை உருவாக்குவதும் அவருடைய பொறுப்பாகும். அபூபக்ரின் தேர்வால், இது உண்மைப் படுத்தப்பட்டது. இது ஒன்றே போதும், இந்தச் சமுதாயம் பதினான்கு நூற்றாண்டுகளாக, தலைமைத் தேர்வுக்கு எதை இலக்கணமாகக் கொண்டது, கொள்ளவேண்டும் என்பதை உலகறியச் செய்தது. இதனை மெய்ப்படுத்தும் விதத்தில், அடுத்து வந்த அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சித் தலைமை அமைந்தது. ரசூலுல்லாஹ் (ஸல்) அந்த ஆட்சியை அவர்களுடைய இறப்பிற்குப் பின்னர் பார்க்காவிட்டாலும், அவர்களின் தலைமைத் தேர்வு எவ்வளவு செம்மையானது என்பதை இச்சமுதாயம் சாட்சி கூறுவதாக அமைந்தது.
தலைவர் ஒருவரின் கடமை, தன் கட்டளைகளுக்குப் பணியும் செயல் வீரர்களை உருவாக்குவது மட்டுமன்று; அவருடைய கனவை நனவாக்கும் அடுத்த தலைமையை உருவாக்குவதும்தான். இதுதான் மிகச் சிரமமான கடமையாகும். முஹம்மத் (ஸல்) அவர்கள் இதைத் தமது வாழ்வில் முழுமையாகச் செய்து காட்டினார்கள். மேலும், இனி வரும் தலைமுறைகளுக்கும் அதே தலைமைத் தேர்வு அமையவேண்டும் என்பதைப் பதிவு செய்தும் சென்றார்கள். அவர்களைப் பார்க்காத, அவர்களின் வாழ்நாளில் பிறந்தே இருக்காத தலைமுறையினர்கூட அந்தத் தூதரின் வழிகாட்டல் தமக்கு நேரடியாக வந்தது போன்று பின்பற்றக் கடமைப் பட்டவர்களாக உணர்ந்தார்கள். அந்தத் தூதரைத் தம் பெற்றோர்களைவிடவும் பிள்ளைகளைவிடவும் உயர்வாக மதித்தார்கள். எவ்வித அர்ப்பணிப்புக்கும் ஆயத்தமாக இருந்தார்கள்.
இதற்குக் காரணமென்ன? ஒப்புயர்வற்ற தலைவராக அந்த இறைத்தூதரை மதிக்கச் செய்த காரணிகள் யாவை? அன்னாரின் எதிரிகள்கூட அவர்களை உயர்வாக மதிப்பிடும் அளவுக்கு அவர்களிடம் இருந்த திறமைதான் என்ன? நான் முன்பு எடுத்துக் காட்டிய ரோமப் பேரரசின் ஹிராக்லியஸின் முன் அபூசுஃப்யான் மொழிந்த மெய்ச்சான்று இதற்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டு அல்லவா?
அதிரை அஹ்மது