வேகம் விவேகமா?

தம்பி,

வேகம் குறை…
விரட்டுவது
விதியாகக் கூட இருக்கலாம்

உன் பைக்கில்
உருள்வது சக்கரங்களா ?
சாவின் கரங்களா ?

மழை நனைத்த சாலையும்
மணல் நிறைந்த பாதையும்
திறன் மிகுந்த யாரையும்
புரட்டிவிடும் சருக்கியே

உலகாள்பவன்
உனக்களித்த
உடலுறுப்புகளை
ஊனமாக்காதே

பேணிப் பாதுகாக்கும்
புலண்களை
ஊமையாக்காதே

காதில் கேட்பதற்காக
கைபேசியை
கழுத்தில் வைக்கும்போது
அது
அலைபேசியல்ல அன்பரே
அரிவாளென்று அறி

தீ சுடுமென்றோ
தீயவை கெடுக்குமென்றோ
சொல்லித் தெரிவதோ அறிவு

விபத்தின் விபரீதம்
விளங்காதா உனக்கு

முழங்கை
மூட்டு பிறழ்ந்தவன்
முழுக்கை யுடைந்தவன்
முகத்தில் தழும்பு படைத்தவன்
நடை குலைந்தவன்
நொண்டி நடப்பவன் என
எத்தனை ஆதாரங்கள்

போதாதென்று
அகால மரணங்கள்....

பெற்ற தாயை
பேதலிக்கவிட்டுப்
போய்ச் சேர்ந்தவர்

கட்டிய மனைவியின்
காத்திருப்பை நிரந்தரமாக்கி
கண்மூடியவர்

நண்பர்களை விட்டோ சேர்ந்தோ
நீள்துயில் கொண்டவர்

பேர் வைத்தப் பிள்ளைகளை
பாரில் தவிக்கவிட்டு - இறுதி
ஊர் போய்ச் சேர்ந்தவர்

தொலைதூரப் பயணத்தை
இரு சக்கரத்தில் கடந்தால்
தமிழ்நாட்டுச் சாலைகள்
தண்டுவடத் தட்டுகளை
மென்றுவிடும் தம்பி

வாழ்க்கையில் முந்து
வளைவுகளில் முந்தாதே

தொழிலில் காட்டு தோரணையை
தெருவில் காட்டாதே

விவேகத்தைக் காட்டு
வேகத்தைக் கூட்டாதே

உனக்காகக் காத்திருப்பவைகளை
உணராமல்
நீ காத்திருக்கும் மரணத்தை
எட்டிப் பிடிக்க
ஏன் இந்த வேகம்

வேகம் குறை
விரட்டுவது
விதியாகக் கூட இருக்கலாம்.

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

16 கருத்துகள்

Ebrahim Ansari சொன்னது…

பெற்றோரின் உழைப்பில் மஞ்சள் குளிக்கும் மகன்கள் நடத்தும் வாகன அட்டகாசம் தாங்க இயலவில்லை. ஒரு முறை தம்பி ஜாகிர் தனது பதிவில் இன்றைய இளைஞர்கள் வைத்திருக்கும் இரு சக்கர வாகனங்களுக்கு தங்களது உழைப்பில் இருந்துதான் எரிபொருள் செலவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலை இருக்குமானால் சாலைகளில் ஒரு பைக் கூட ஓடாது என்ற கருத்தில் எழுதியவைகளை எண்ணிப் பார்க்கிறேன்.

இப்போது பிள்ளைகளுக்கு பைக் வாங்கிக் கொடுப்பது பேஷன் ஆகிவிட்டது.
டேபிள் மேட் விளமபரத்தில் வருவத் போல் பக்கத்து வீட்டில் இருக்கு மேல் வீட்டில் இருக்கு கீழ் வீட்டில் இருக்கு நம்ம வீட்டில் இருக்கா என்பதாக ஆகிவிட்டது. உரிமம்- ஓட்டுவதற்குரிய வயது இவை எல்லாம் யாராலும் பரிசீளிக்கபடுவதில்லை.
காவல்துறையும் இவற்றைக் கண்டுகொள்வதில்லை. அப்படியே கண்டு கொண்டாலும் காந்தியைக் கண்ணால் பார்த்தால் போதும் ஹைவேசை பட்டாப் போட்டுக் கொடுத்துவிடுகிறார்கள்.

இரண்டு மூறு தினங்களுக்கு முன்பு நமதூரில் நடந்த விபத்தின் இரத்த வடுக்கள் காயும் முன் இந்தக் கவிதை வெளியாகி இருப்பது சிறந்த விழிப்புணர்வு.

தம்பி சபீர் அவர்களுக்கு பாராட்டல்ல நன்றி.

Unknown சொன்னது…

//வேகம் குறை
விரட்டுவது
விதியாகக் கூட இருக்கலாம்.//

உண்மை.

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Muhammad abubacker ( LMS ) சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

ஒவ்வொரு பயணத்துக்கு முன் ஓதப்பட வேண்டிய து'ஆவுக்கு பின் வாகன ஓட்டிகளால் ஒரு முறை படிக்கப்பட வேண்டிய எளிய கவி வரிகள் இது.

நினைக்கும் பொழுது வயித்தெ எரிகிறது விபத்துக்களால் வரும்
இளைஞர்களின் திடீர் அகால மரணங்கள்.

Muhammad abubacker ( LMS ) சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்.

மாஷா அல்லாஹ் .

கிளிப்பிள்ளைக்கு பாடம் நடத்துவது போல் அழகான வரிகள்.

விபத்தில் மரணமான நபரை பார்க்க செல்லும் இளைஞர்கள் அந்த நேரத்தில் கூட பைக்கை ஓட்டுவதில்லை பறக்கிறார்க்ள.

வால் போஸ்டர் அடித்து ஒட்ட வேண்டிய தரமிக்க போதனை.

ஜஜாக்கல்லாஹ் ஹைரா.

sheikdawoodmohamedfarook சொன்னது…

//விவேகத்தைகாட்டுவேகத்தைகூட்டாதே//நல்லஅறிவுரை.ஆனால்அவர்கள்செவிகளோ பின்னால்வரும்லாரியின் ஹரன் சத்தத்தை கூட மதிக்காமல்முன்னேசெல்லும்பஸ்ஸைமுந்திக் கொள்ளமுயலும்.மறுநாள்காலைமரணஅறிவிப்பை கேட்டதும்நாம்சொல்வது ''இன்னாளில்லாஹிவ இன்னா இளைஹி ராஜூவுன்'' .வெளிநாட்டில்தகப்பன்வெயிளும்மழையும் பார்க்காமல் சம்பாதித்த பணம்இ.ஸி.ஆர் .ரோட்டில் புகையாய்கறைகிறது.இதுயார்குற்றம்? 'செல்லவாப்பாவுக்கு''பைக்வாங்கிகொடுத்த தாய்குற்றம்.

crown சொன்னது…

அஸ்ஸலாமுஅலைக்கும்.மரணம் தேடி வரணும் ஆனால் நாம் தேடி போகக்கூடாது என்னும் எண்ணம் விதைக்கும் எச்சரிக்கை கவிதை!கேட்பார் யார் உளர்??????

crown சொன்னது…

காதில் கேட்பதற்காக
கைபேசியை
கழுத்தில் வைக்கும்போது
அது
அலைபேசியல்ல அன்பரே
அரிவாளென்று அறி
-----------------------------------------------
அறிவாள் உணர்! நல்ல நினைவுறுத்தல்! கவிவலிமையை சொல்வதை விட நாம் பிழைச்சி நடக்கனும் என்னும் எண்ணத்தின் வெளிப்பாடு இந்த கூப்பாடு!

crown சொன்னது…

முழங்கை
மூட்டு பிறழ்ந்தவன்
முழுக்கை யுடைந்தவன்
முகத்தில் தழும்பு படைத்தவன்
நடை குலைந்தவன்
நொண்டி நடப்பவன் என
எத்தனை ஆதாரங்கள்
---------------------------------------------
இத்தனை ஆதாரங்கள் ஆறா ரணமாய் இருக்க இன்னும் ஏன் இந்த ரணங்களும்,பினங்களும்!???????

crown சொன்னது…

உனக்காகக் காத்திருப்பவைகளை
உணராமல்
நீ காத்திருக்கும் மரணத்தை
எட்டிப் பிடிக்க
ஏன் இந்த வேகம்

வேகம் குறை
விரட்டுவது
விதியாகக் கூட இருக்கலாம்.
---------------------------------------------------------------
சரியாகத்தான் கவிஞர்சொல்லி இருக்கிறார் விரட்டுவது உந்தன் இறுதி,உறுதி விதியாய் இருக்கலாம்!இதை நீயே விதைக்காதே!எழுந்து பயிராய் வளர்!! உயிர் போயின் வாராது!கிளாஸ்மேட்,சக(கா)மேட் டுடன் சுற்றும் நீர் ஒரு ஹல்மெட் வாங்க யோசிப்பது ஏன்?தலைக்கு வந்தது கவசத்துடன் போகட்டுமே!இனியேனும் பெற்றவர்களுக்காக,பிள்ளைக்காக,மற்ற உறவுக்காவது வாழ்!!!!!!!!!!!

Yasir சொன்னது…

நண்பர் நெய்னா முகமது சொன்னது போல் வீட்டைவிட்டு பைக்கை எடுக்கும் முன், படித்து நெஞ்சில் நிற்க வைக்க வேண்டிய வரிகள் இது ,இதனைவிடவும் எளிமையாக சொல்வது சாத்தியப்படாது .அல்லாஹ் கொடுத்த பெற்றோர்கள் பாடுபட்ட வளர்த்த உயிரை மடைமை தனத்தால் போக்கிக்கொள்வது வருந்ததக்கது....அல்லாஹ் நம் அனைவரையும் காப்பானாக

Shameed சொன்னது…

வேகம் எனும் மூன்றேழுத்து
உயிர் எனும் மூன்றேழுத்தை
விழுங்கி சுற்றத்தாரினை கவலை
எனும் மூன்றேழுத்த்தில் ஆழ்த்திவிடும்

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும், சபீர் காக்கா,

நல்ல எச்சரிக்கை

//காதில் கேட்பதற்காக
கைபேசியை
கழுத்தில் வைக்கும்போது
அது
அலைபேசியல்ல அன்பரே
அரிவாளென்று அறி//


அவசரக்குடுக்கைகளுக்கு கண்ணத்தில் அடித்தது போல் இருக்கும் இந்த வரிகள்.

Unknown சொன்னது…

Assalamu Alaikkum

Dear brother Mr. AbuShahruk,

You have made wonderful effort to make awareness about bike riders' blind speed. Nice poem.

By speeding may try to save their time
It becomes their end of their own time

Now people leave their soul behind
Let us carry the soul along our body

Total community and school awareness are necessary now.

Thanks and best regards

B. Ahamed Ameen from Dubai

sabeer.abushahruk சொன்னது…

அல்லாஹ் கொடுத்த உயிரை அவசரம் அவசரமாகப் பறிகொடுக்கும் விபரீதங்களிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள அவனே அருள் புரிவானாக, ஆமீன்!