Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

எண்ணிலடங்கா இந்திய முஸ்லிம் தியாகிகள்...! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | January 21, 2015 | , , , ,

தொடரின் 18வது அத்தியாயம்.
வரலாற்றின் பக்கங்களில் மறைக்கப்பட்ட பல வீர வரலாற்று நாயகர்களின் வரலாற்றை கடந்த பல அத்தியாயங்களில் தந்தோம். இந்த தியாக வரலாற்றுக் கோபுரத்தின் கலசங்கள்தான் அவ்வரலாறுகள். ஆனால் இப்படிப்பட்ட கோபுரத்தின் அடித்தளமாகத் திகழ்கின்ற பல வரலாற்று நாயகர்களின் முழுவரலாறும் தேடிப்பார்த்தாலும் முழுமையான குறிப்புகள் கிடைக்காமல் நிலத்துக்குள் புதைந்துள்ள செங்கற்களைப் போல பலர் இருக்கிறார்கள். இந்த இந்திய மண்ணுக்காக தடியடி வாங்கி- இரத்தம் சிந்தி – சிறையில் அகப்பட்டு- தூக்கு மேடை ஏறிய பலரின் முழு வரலாறை நம்மால் திரட்ட முடியவில்லை. அவர்களைப் பற்றிய சிறு குறிப்புகளே கிடைக்கின்றன. உதாரணமாக கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. அவர்களைப் பற்றி படிக்கும்போதெல்லாம் அவரோடு இணைந்து நின்ற பல முஸ்லிம் தியாகிகள் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. ஆனால் அவர்களைப் பற்றிய முழு விபரங்களையும் திரட்டித்தர இயலவில்ல. இப்படி எண்ணிலடங்கா இஸ்லாமியத் தியாகிகளைப் பட்டியல் இடுவதே இந்தப் பதிவு. 

ஹாஜி ஷரியத்துல்லாஹ் :-

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வீரியம் வெளிப்பட்டதென்னவோ போராட்ட நடவடிக்கைகளில் காந்திஜியின் நுழைவுக்குப் பின்புதான் எனபது யாவரும் ஏற்கும் உண்மை. அதே நேரம், காந்திக்கும் முன்னோடியாக 19 – ஆம் நூற்றாண்டிலேயே மக்களைத் திரட்டி ஒரு போராட்டம் என்பதை முன்மாதிரியாக நடத்திக் காட்டியவர் ஒரு முஸ்லிம்தான் என்பதே வரலாறு காட்டும் உண்மை. இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டியவர் பெரைய்சி இயக்கம் (Farizis Movement) என்ற பெயர்கொண்ட விவசாயிகளைth திரட்டி ஒரு இயக்கமாக ஒன்று திரட்டி நடத்திக் காட்டியவர் ஹாஜி ஷரியத்துல்லாஹ் ஆவார். ஹாஜி ஷரியத்துல்லாஹ் அவர்களுக்கும் முன்னதாக 1820-ஆம் ஆண்டு கரம்ஷா என்பவரும் அவரது மகன் திப்பு என்பவரும் ஆன்மீக அடிப்படையிலும் மக்கள் உரிமை என்கிற அரசியல் அடிப்படையிலும் மக்களைத் திரட்டி ஆங்கிலேயருக்கு எதிராக நடத்திக் காட்டிய இயக்கம் , ஹாஜி அவர்களுக்கு ஒரு உந்து சக்தியாகத் திகழ்ந்தது. நில உடமையாளர்களான ஜமீன்தார்களின் விவசாயிகளுக்கு எதிரான கொடுமைகளுக்கு எதிராக அந்த விவசாயிகளின் உரிமைக்காகப் போராடும் இயக்கத்தைத் தொடங்கி நடத்திய திப்பு, 1825-ல் செர்பூர் (Sherpur) என்றழைக்கப்பட்ட பகுதியைக் கைப்பற்றி ஆட்சியும் அமைத்தார். 1830 முதல் 1840 வரை பத்தாண்டுகள் இந்த இயக்கம் ஆங்கிலேயருக்கு கனவிலும் பயமுறுத்தும் இயக்கமாக மாறியது. இந்த இயக்கத்தின் தாக்கமே ஹாஜி ஷரியத்துல்ல்லாஹ் அவர்களை கிழக்கு வங்காளத்தில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட ஆக்கமும் ஊக்கமும் தந்தன. 

ஆங்கிலேயரின் வசூல் முகவர்களாக இருந்த ஜமீன்தார்களிடம் தங்களது உரிமைகளைப் பறிகொடுத்த விவசாயத் தொழிலாளர்களை ஒன்று திரட்டி ஹாஜி ஷரியத்துல்லாவும் அவரது மகன் தித்தேமியானும் நடத்திய இயக்கம் ஆங்கிலேயருக்குப் பல நிர்வாக இடையூறுகளையும் வருமான இழப்புகளையும் ஏற்படுத்தியது. ஆங்கிலேயரால் கைது செய்யபப்ட்ட தித்தேமியான் புரட்சியைத்தூண்டிவிட்டார் எ ன்று குற்றம் சாட்டப்பட்டு 1860 –ல் தூக்குக் கயிற்றை தழுவினார். 

ஹாஜி ஷரியத்துல்லாவும் அவரது மகன் தித்தேமியானும் தொடங்கி நடத்திய பெரைய்சி இயக்கம் (Farizis Movement) தான் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றின் முதல் மக்கள் இயக்கம் என்பதை வரலாற்று ஆசிரியர் B.L.Grover, S. Grover A New Look At Modern History என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார். பாட நூல்களில்தான் இதுபற்றி நடுவில் பல பக்கங்களைக் காணோம். 

செய்யது அஹமது ராய்பரேலி:-

சுதந்திரப் போராட்டம் ஒரு புறம் காந்தியால் அஹிம்சை வழியில் அறப்போராட்டமாக அறிவிக்கப்பட்டு நடந்து கொண்டு இருந்தாலும் , மறு முனையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களால் ஆங்கிலேயருக்கு எதிராக சுதந்திரப் போர் பிரகடனமும் செய்யப்பட்டது. இந்தியாவுக்காக் ஒரு தனிக்கொடியை உருவாக்கி அதை அந்தமானில் ஏற்றி ஆங்கிலேயரை அதிர்ச்சியடையச் செய்தார் நேதாஜி. ஜப்பானியாரின் ஆளுமைக்குட்பட்ட சிங்கப்பூரில் ஆசாத் ஹிந்த் சர்க்கார் (Azad Hind Government ) என்ற தற்காலிக சுதந்திர அரசை தைரியமாக அறிவித்தார். நேதாஜியின் இந்த வீரமிக்க முயற்சிகளுக்கெல்லாம் அவரோடு தோளோடு தோளாக நின்றவர்கள் முஸ்லிம்களாவர். இவர்களில் முக்கியமானவர் செய்யது அஹமது ராய்பரேலி அவர்கள் ஆவார். 

செய்யது அஹமது ராய்பரேலி அவர்கள் அடிப்படையில் சமுதாய சீர்திருத்தம் வேண்டி வஹாபி இயக்கத்தைத் தொடங்கியவர் ஆவார். பின்னர் இந்த இயக்கம் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட இயக்கமாக உருவெடுத்தது. ஹாஜி ஷரியத்துல்லா மற்றும் அவரது மகன் திப்புவின் மறைவுக்குப் பிறகு அவர்களுடன் இருந்த தொண்டர்கள் செய்யது அஹமது ராய்பரேலி அவர்களின் இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். 

பாட்னாவைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கிய இந்த இயக்கம், இந்தியாவை தாருல் இஸ்லாம் (Darul Islam) அதாவது இஸ்லாமியர்களின் உலகம் என்று சுதந்திர நாடாக பிரகடனப் படுத்தியது. இதற்காக இராணுவத்தையும் அமைத்தது. அந்த இராணுவத்தின் குறிக்கோள் ஆங்கிலேயருக்கு எதிரான புனிதப்போர் என்றும் அறிவித்தது என்பதைவிட பிரகடனப்படுத்தியது. இத்தகைய நடவடிக்கைகளுக்காக செய்யது அஹமது அவர்கள் அனுபவித்த கொடுமைகள் அளவிலடங்காதவை. இவருடன் இணைந்து இருந்த காரணத்தால் விலாயத் அலி, ஹிமாயத் அலி, முகமது ஜாபிர், அமிர் கான் ஆகியோரும் பல கொடுமைகளுக்கு ஆளாயினர். நாடு கடத்தப் பட்டனர்; அந்தமானில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுள் அமீர்கானை நாடுகடத்தும் உத்தரவில் கையெழுத்து இட்ட நார்மன் என்கிற நீதிபதியை அப்துல்லா என்ற பெயருடைய இளைஞன் துப்பாக்கியால் சுட்டுப் பழி தீர்த்தார் . 

மெளலவி மிர்ஜா மஹதீ ஸாலிஹ் லக்னவீ :-

நாம் ஏற்கனவே மெளலவி அஹ்மதுல்லாஹ் ஷாஹ் அவர்களின் தியாக வரலாற்றை கண்ணீர் சிந்தி, படித்து இருக்கிறோம். அவரைப் போலவே மெளலவி மிர்ஜா மஹதீ ஸாலிஹ் லக்னவீ அவர்களும் ஒரு தனிமனிதராக இருந்தாலும் ஒரு பெரும் படைக்குரிய செயல்திறனோடு திகழ்ந்தார் என்று பெருமையுடன் குறிப்பிடலாம். சிறந்த போர்க்கலைப் பயிற்சி பெற்ற மெளலவி மிர்ஜா மஹதீ ஸாலிஹ் லக்னவீ அவர்கள் முத்தீகஞ்ச் பகுதியை தனது ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தார். அந்தப் பகுதிக்குள் ஆங்கிலேயர்கள் வாலாட்ட முடியாமல் வாகுடன் வைத்து இருந்தார். 

இவரை அடக்குவதற்காக கவுகாத்தியிலிருந்து அனுப்பி வைக்கப் பட்ட பறங்கியர் படை மிர்ஜா மஹதீ ஸாலிஹ் லக்னவீ அவர்கள் வகுத்திருந்த படைத் தடுப்பு வியூகத்தால் அவரது ஆளுகைக்குட்பட்ட பகுதிகளுக்குள் நுழைய முடியாமல் தவித்தது. முற்றுகை நீடித்துக் கொண்டே போன வேளையில் ஒரு அதிகாலை நேரம் பஜ்ர் தொழுகையை முடித்துக் கொண்டு வெளியே வந்த மிர்ஜா மஹதீ ஸாலிஹ் லக்னவீ அவர்களை சுற்றி வளைத்தது சூழ்ச்சிப் படை. ஆனாலும் மிர்ஜா மஹதீ ஸாலிஹ் லக்னவீ அவர்கள் தடுமாறவில்லை; தனது படைத்திறனைக் காட்டினார். தன்னந்தனியே நின்று போரிட்டு இருபது பேரை வெட்டி வீழ்த்தினார். அதற்குப் பரிசாக அவரது மார்பைத் துளைத்தது எதிரியின் துப்பாக்கியிலிருந்து பறந்து வந்த ஒரு முதல் குண்டு குண்டு; அதைத்தொடர்ந்து அவரைத்தேடி வந்த அனைத்து குண்டுகளையும் மார்பில் தாங்கிய வண்ணம் தக்பீர் முழங்கிக் கொண்டே மண்ணில் சாய்ந்தார். 

ஒரு துயரமான செய்தியை இங்குப் பதிவு செய்தே ஆகவேண்டும். இப்படி இந்த மண்ணின் விடுதலைக்காகப் போராடிய உலமாக்கள், மெளலவிகள் மரணமடைந்த போது அவர்களது இறந்த உடல் இரத்தக் கரை படிந்த சவத்துணிகளால் சுற்றப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட அவலச் செய்தியே அது. அந்த இரத்தக் கரைகளை, ஒரு தியாக வரலாற்றின் சத்திய ரேகைகள் என்று பேராசிரியர் மு. அப்துல் சமது தனது தியாகத்தின் நிறம் பச்சை என்ற நூலில் குறிப்பிடுகிறார். 

எம். ஜே. கலீலுர் ரஹ்மான் பாகவி :-

இன்றைய வியட்நாமில் , அன்று சைகோன் என்று அழைக்கப்பட்ட பெருநகரில் இருந்துகொண்டு இந்திய சுதந்திரத்துக்காகப் போராடியவர் மணிமொழி மெளலானா என்று அழைக்கப் பட்ட எம். ஜே. கலீலுர் ரஹ்மான் பாகவி அவர்களாவார். உணர்ச்சிப் பிழம்பாக இவர் எடுத்துவைத்த கருத்துக்கள் பலரை விடுதலைப் போராட்டத்தை நோக்கி ஈர்த்தன. 

மணிமொழி மெளலானா அவர்கள் “இந்தியாவை ஆங்கிலேயர் கைப்பற்றியது முஸ்லிம்களிடமிருந்தாகும். ஆகவே ஆங்கிலேயரிடமிருந்து இந்திய நாட்டை மீட்க முஸ்லிம்களே முன் நின்று போராட வேண்டும்" என்று முழங்கினார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தற்காலிக சுதந்திர இந்தியாவை அறிவிக்கும் முன்பே சைகோன் நகரில் “இன்டிபென்டன்ட் லீக் “ என்ற விடுதலை இயக்கத்தைத் தொடங்கி நடத்தியவர் மணிமொழி மெளலானா அவர்களாவார்கள். இந்த ஒரு அரிய பணியில் அவர்களுடன் இணைந்து நின்றவர் எஸ். ஏ. நூருத்தீன் என்பவராவார். இவர்கள் இருவரும் சைகோனில் இரகசியமாக நேதாஜியை சந்தித்துப் பேசிய நிகழ்வும் நடந்தது. “மெளலவி சாகிப்” என்று நேதாஜியால் பிரியமாக அழைக்கப்பட்ட மணிமொழி மெளலானா அவர்கள் நேதாஜி , இந்தியில் பேசிய வீர உரைகளை தமிழில் மொழி பெயர்த்து தொண்டாற்றியவர் ஆவார்கள். 

இரண்டாம் உலகப் போரில் ஜப்பானுக்கு உதவிய சுதந்திர இந்தியப் படையில் சிலருக்குத் தலைமை தாங்கினார் என்ற குற்றச்சாட்டு மணிமொழி மெளலானா அவர்கள் மீது ஆங்கில அரசால் சுமத்தப் பட்டு, அவருக்காக ஒரு தூக்குக் கயிறு காத்திருந்தது. ஆனால் அவர் நாடு கடத்தப் பட்டார். 

தனது தாய் மீது மாறாத அன்பு உடையவராக இருந்தார் மணிமொழி மெளலானா அவர்கள். நாடு கடத்தப் பட்டு 1946 – ல் நாட்டுக்குத் திரும்பிய மணிமொழி மெளலானா அவர்கள் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தனது தாயாரை சந்திக்கப் போகிறோம் என்கிற ஆவலுடன் நாடு திரும்பினார். ஆனால் தாய் மண்ணை மிதித்தபோது, அவர் வந்து சேர இரண்டாண்டுகளுக்கு முன்பே அவரது தாயார் இறைவனடி சேர்ந்த செய்தி இடி போல அவர் நெஞ்சில் இறங்கியது. ஆனாலும் நாட்டுக்காக தான் செய்த தியாகங்களுக்காத் தான் மனம் மகிழ்வதாகவே மணிமொழி மெளலானா அவர்கள் கூறினார்கள். 

ஹாஜி பக்கீர் முகமது :-

வ.உ.சிதம்பரனார் அவர்கள் கப்பல் வாங்கும்போது , தனது சொந்த பணத்தைக் கொண்டு மட்டும் வாங்கி விடவில்லை. உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களிடம் வசூல் செய்து தான் வாங்கினார். இதற்காக, பங்குகளை வாங்கி கொள்ளலாம் என்று அறிவிப்பும் வெளியிட்டார். கப்பல் கம்பெனியின் பங்குகளில் பெருவாரியானவற்றை ரங்கூனில் வசித்த உத்தமபாளையத்தை சேர்ந்த ஹாஜி பக்கீர் முகமது ராவுத்தர் அவர்கள் கொடுத்து உதவினார். ஆங்கில ஆக்கிரமிப்பாளர்களின் அடக்கு முறையால், கப்பல் கம்பெனி நஷ்டமான போதும், தனது பங்குத்தொகை எதையும் திருப்பி தர தேவையில்லை என்றும் பெருந்தன்மையாகத் தெரிவித்து விட்டார்.

இதற்கு நன்றி தெரிவித்து வ.உ.சி. எழுதிய கடிதம் தூத்துக்குடியில் உள்ள தமிழ்ப் பேராசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான பேராசிரியர் அ.சிவசுப்பிரமணியனிடம் இருக்கிறது. தியாகிகளை நினைவு கூறும் அரசாங்கம் ஹாஜி பக்கீர் முகமது ராவுத்தரை ஏன் நினைவு கூற தயங்குகிறது என்பது தெரியவில்லை. ஹாஜி பக்கீர் முகமது ராவுத்தரை அவரது தியாகத்துக்கான அங்கீகாரத்தை அவ்வளவு தொகையைத் தாரைவார்த்த அவரது குடும்பத்தினர் கேட்கிறார்கள். 

வ.உ.சி.சிலை திறப்பின் போது, இந்த விபரங்கள் அனைத்தும் தெரிந்த வ.உ.சி.யின் வாரிசுகளிடம் உத்தமபாளையத்துக்காரரைப் பற்றி மேடையில் பேசும் போது குறிப்பிடுங்கள் என்று முஸ்லிம் பெரியவர்கள் சிலர் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், அதனை சொல்ல அவர்களுக்கு என்ன தயக்கமோ தெரியவில்லை. தங்களுக்குத் தெரிந்த அந்த உண்மையை உலகுக்கு சொல்லாமல் மறைத்தனர். 

வ உ சி யின் கப்பல் கம்பெனியில் , 
  • ஹெச்.ஏ.ஆர்.ஹாஜி பக்கீர் முகமது சேட் அண்ட் சன்ஸ் கெளரவ செயலாளராகவும்
  • வ.உ.சிதம்பரம் பிள்ளை துணைச் செயலாளராகவும், இருக்க 
  • வழக்கறிஞர் சேலம் சி.விஜயராகவாச்சாரியார்
  • திருநெல்வேலி வழக்கறிஞர் கே.ஆர்.குருசாமி அய்யர்
  • கோழிக்கோடு வழக்கறிஞர் எம்.கிருஷ்ண நாயர்
  • தூத்துக்குடி வழக்கறிஞர் டி.எல்.வெங்கு அய்யர்
  • ஆகியோர் சட்ட ஆலோசகர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
கம்பெனியின் இயக்குநர்களாக 15 முக்கியப் பிரமுகர்கள் செயல்பட்டனர். அவர்களுள் புகழ்மிக்க வர்த்தகக் குழுவான ஹெச்.ஏ.ஆர்.ஹாஜி பக்கீர் முகமது சேட் அண்ட் சன்ஸ், முகமது ஹகீம் சேட், சி.வ. கப்பல் கம்பெனியைச் சேர்ந்த சி.வ.நல்லபெருமாள் பிள்ளை ஆகியோரும் அடங்குவர். 

இன்ஷா அல்லாஹ் ! இன்னும் இருக்கின்றன இந்தப் பட்டியலின் பக்கங்கள். 
இபுராஹீம் அன்சாரி

3 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அடிக்கடி ஞாபகப் படுத்திக் கொண்டே இருக்கனும்...

sabeer.abushahruk said...

கட்டாயம் ஞாபகம் வைத்துக்கொள்ளப்பட வேண்டிய முன்னோர்கள்.

sheikdawoodmohamedfarook said...

இந்தக்கட்டுரைபூசிமறைத்தசாயத்தைவெளுக்கவைத்துஉண்மையை உலகத்தின்கண்களுக்குகாட்டுகிறது!

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு