Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

23

அதிரைநிருபர் பதிப்பகம் | January 31, 2015 | , , ,

தொடர் பகுதி - இருபத்தி ஐந்து

இஸ்ரேல் உருவாக்கப்பட்டதும் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்டு தனிநாடாக உருவாக்கப்பட்டதும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் நடைபெற்ற உலக வரலாற்று நிகழ்வுகள். இரண்டு செயல்களுக்கும் சூத்திரதாரி பிரிட்டன்தான். ஒரு பிரச்னையைத் தீர்க்க வேண்டுமென்றால் ஒரு புதிய பிரச்னையை பூதத்தின் அளவுக்கு உருவாக்கி வைத்துவிட்டுத் தீர்ப்பது என்பது பிரிட்டனின் அரசியல் மூளையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் காணப்படும் குறுகிய புத்தியின் வெளிப்பாடு என்பதும் உலகறிந்த உண்மை . 

ஆனால் அடிப்படையில் இந்த இரண்டு வரலாற்று நிகழ்வுகளுக்கும் வேறுபாடுகள் உள்ளன. 

இந்தியா தனது சொந்த நாட்டை, அடக்கி ஆண்டு கொண்டிருந்த ஆங்கில ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றது. அதற்கு இந்தியா கொடுத்த விலை – நாட்டுப் பிரிவினை. நாடுகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டாலும் இந்தியாமற்றும் பாகிஸ்தானில் வாழ்ந்த மக்கள் காலம் காலமாக அந்தப் பகுதிகளில் வாழ்ந்து வந்தவர்கள்தான். ஒன்று பட்டு வாழ்வது ஒத்துவராது என்று அந்தந்தப் பகுதி மக்கள் கருதிய காரணத்தால் இந்தியா, பிரிவினை என்கிற கசப்பு மருந்தை உண்ண ஒப்புக் கொண்டது. 

ஆனால்,  

எங்கெங்கிருந்தோ மூட்டை முடிச்சுகளுடன் வந்து குவிந்த யூதர்களுக்கு ஏற்கனவே இருந்த பாலஸ்தீனத்தைப் பங்கு போட்டுப் பிரித்துக் கொடுத்தது பிரிட்டன். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை பங்காளிகளுக்கிடையே ஏற்பட்ட பாகப்பிரிவினை என்று நாம் ஒப்பிட்டால் பாலஸ்தீனம் பிரிக்கப்பட்டு இஸ்ரேல் உருவாக்கப்பட்டதை , வாங்காத கடனுக்காக ஒரு வீட்டை , ஆமைபோலப் புகுந்த ஐ. நா., அமீனாவாகி ஜப்தி செய்தததற்கு ஒப்பிடலாம். ஒன்று பிரிக்கப்பட்டது மற்றது திணிக்கப்பட்டது. 

இல்லாத நாட்டை உருவாக்கும் இழி செயலை நியாயப்படுத்த ஏற்கனவே ஐரோப்பா முதலிய நாடுகளில் சுக வாழ்வு வாழ்ந்து சுகித்துக் கொண்டிருந்த யூதர்களை எல்லாம் இஸ்ரேல் நாட்டுக்கு பயணச்சீட்டுப் போட்டுக் கொடுத்து வரவழைத்து கூட்டத்தைத் திரட்டினார்கள். 

பாலஸ்தீனம் எவ்வாறு பிரிக்கப்பட்டது? 

ஐ . நா அறிவித்த திட்டப்படி பாலஸ்தீனம் இரண்டாகப் பிரிக்கப்படும். ஒரு பகுதி இனி இஸ்ரேல் என்று அழைக்கப்படும். மற்றொரு பகுதி பாலஸ்தீன் என்ற நிகழும் பெயரிலேயே நின்று நிலவும். இரு பகுதிகளிலும் அரபு இனத்தவர்களும் யூதர்களும் வசிப்பார்கள். 

ஜெருசலம் என்கிற அந்த புனிதப் பகுதியில் அதிகமதிகம் அராபிய கிருத்தவர்கள் வசித்து வந்தாலும் இப்போது அமையப்பெற்ற அரசியலமைப்பில் அராபிய கிருத்துவர்களுக்கென்று இன்னொரு இடம் அல்லது நாடு தனியாக ஒதுக்கப்படாததாலும் முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்கும் ஜெருசலம் ஒரு புனிதமான இடம் என்பதாலும் ஜெருசலமும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் ஐ நா சபையின் கண்காணிப்பிலும் பாதுகாப்பிலும் இருக்கும்.

ஆக, பாலஸ்தீன் என்கிற புனித பூமியை என்கிற ஆப்பத்தை ஐ. நா குரங்குகள், வல்லரசு வல்லூறுகளின் துணையோடு மூன்று நிலைகளாகப் பங்கு வைத்தன. இதனால்தான் இன்றைய வழக்குகளும் வடிக்கப்படும் இரத்தமும் .

இந்தப் பிரிவினைத் திட்டம் வெளியான அன்றிரவே பாலஸ்தீன அரபுகள் கைகளில் கிடைத்த ஆயுதங்களை எல்லாம் தூக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்த ஆயுதங்கள் துப்பாக்கிகள்தான் என்று இல்லை. தங்களின் தோட்டங்களில் கிடந்த ஆலிவ் மரத்தின் கிளைகளைக் கூட கரங்களில் தூக்கிக் கொண்டு தெருவுக்கு வந்துவிட்டார்கள் என்று ஒரு குறிப்புக் கூறுகிறது. தங்கள் தேசத்தின் மண்ணை அள்ளித் தலைகளில் போட்டுக் கொண்டு கதறினார்கள். நெஞ்சில் அடித்துக் கொண்டு அலறினார்கள். அரபியர்களின் இந்தக் கதறலும் கண்ணீரும் காலம் கடந்தவை என்பதை இந்தத் தொடரைப் படித்துவரும் நண்பர்கள் புரிந்து கொள்ளலாம். 

அரபுகளைப் பொறுத்தவரை விதைக்கின்ற காலத்தில் வீணே ஊர் சுற்றிவிட்டு அறுவடைக் காலத்தில் அரிவாளை எடுத்துக் கொண்டு வயல்வெளிக்குப் போனவனின் கதியில்தான் நின்றார்கள். தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டது இனி ஜான் என்ன முழம் என்ன?

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே! அவர் சிந்தையில் ஆயிரம் சிறப்புகள் சேர்ந்து சிறந்ததும் இந்நாடே! ஹஜரத் உமர் ( ரலி ) அவர்களின் காலத்தில் அல்லாஹ்வின் போர்வாள் என்று அழைக்கப்பட்ட காலித் பின் வலீத் (ரலி) மற்றும் அபூஉபைதா (ரலி ) ஆகியோரின் வீரத்தின் வித்தாக வென்றெடுக்கப்பட்டதும் இந்நாடே! சன்மார்க்கப் பிரியர் சலாஹுதீன் அய்யூபி ( ரஹ் ) அவர்களால் மீட்டெடுக்கப்பட்டதும் இந்நாடே! 

ஊணுடம்பு மக்காத உயர்ந்த நபிமார்களின் உடல்கள் உறங்குவதும் இந்நாட்டிலே! தேன் சுனை நீர்வளமும் திசைதோறும் மலைவளமும் கால்படும் இடமெல்லாம் இடறிவிடும் திராட்சைக் கொடிவளமும் கண்டவர்கள் யாவரும் மயங்கும் காட்சிகளும் கொண்டதும் இந்நாடே! இந்த நாட்டை எம்மைக் கேட்காமலேயே எம்மிடமிருந்து பறித்துப் பங்கு வைத்த பாவிகளை கண்டதும் வெட்டக் காலம்கடந்து திரண்டனர் அரபிகள்.  

அரபுநாடுகளின் கூட்டமைப்பு ஒன்று கூடி கஹ்வா குடித்துவிட்டு ஒரு கண்டனத் தீர்மானத்தை இயற்றியது. ஐ. நா சபையோ யார் வீட்டுத் தோட்டத்துக்கோ யாரெல்லாரையெல்லாம்     சொந்தக்காரனாக்கிவிட்டு தனது பொதுச் சபையில் ஒப்புக்காக ஒரு தீர்மானத்தை முன்வைத்தது. தீர்மானத்தை முப்பத்து மூன்று நாடுகள் ஆதரித்து ஜால்ரா அடித்தன. தீர்மானத்தை எதிர்த்து அரபுநாடுகளும் , இந்தியா, துருக்கி, கியூபா உட்பட்ட சில நாடுகள் மட்டுமே  எதிர்த்தன. புதிதாக உருவாகி இருந்த பாகிஸ்தானும் தீர்மானத்தை எதிர்த்தது. தீர்மானம் நிறைவேறியது. 

தீர்மானத்தை ஆதரித்த நாடுகளின் பட்டியலையும் தீர்மானத்தை எதிர்த்த நாடுகளின் பட்டியலையும் பார்த்தால் எண்ணிக்கையில் மட்டுமல்ல வலிமையிலும் வளத்திலும் தங்களை வளர்த்துக் கொண்ட நாடுகள் இஸ்ரேலின் பிறப்பை ஆதரித்து தோரணம் கட்டி கேக் வெட்டிக் கொண்டாடின என்பதைக் காண முடியும். . அன்றைய நாட்களில் தங்களின் சொந்த நாடுகளில் அடித்த அரசியல் புயலையே தாக்குப் பிடிக்க இயலாத நோஞ்சான் நாடுகளே இஸ்ரேலை அங்கீகரிக்க மறுத்தன. உதாரணமாக, இரண்டாம் உலகப் போருக்குப் பின் பிரிட்டனைப் பின் தள்ளி வல்லரசுகளாக உருவெடுத்த அமெரிக்காவும் சோவியத் யூனியனும் இஸ்ரேலை ஆசீர்வதித்தன. அதே போல வலிமை வாய்ந்த பிரான்ஸ், நியூசிலாந்து , ஸ்வீடன், போலந்து, நெதர்லாந்து போன்ற நாடுகளும் ஆதரித்த நாடுகளில் அடங்கும். 

அன்றைய நாட்களில் அவித்துத் தின்ன நிலக்கடலை கூட கிடைக்காத அரபு நாடுகளும் , ஆப்கானிஸ்தான் போன்ற பட்டியலில் மட்டுமே பெயர் உள்ள நாடுகளும் , நாட்டுப் பிரிவினையால் வகுப்புக் கலவரங்கள் மற்றும் சமஸ்தான இணைப்புப் பிரச்னைகளில் மூழ்கிக் கிடந்த இந்தியா , பாகிஸ்தான் போன்ற நாடுகள் மட்டுமே இஸ்ரேலை எதிர்த்தன. ஆகவே வலிமைவாய்ந்த அணிகளின் ஆதரவுடன் இஸ்ரேல் தோள் தட்டியது; பாலஸ்தீனம் துவண்டு போனது. 

பாலஸ்தீனத்தின் எல்லைகளில் இருந்த ஜோர்டான், எகிப்து, சிரியா, லெபனான் முதலிய நாடுகளில் இருந்து பெயரளவுக்கு சில வீரர்கள் உதவிக்கு வந்தார்கள் . ஈராக் முதலிய நாடுகளில் இருந்தும் சிலநூறு வீரர்கள் வந்தார்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இவர்கள் அனைவருடனும் இணைந்து இஸ்ரேல் பிறந்த அன்றே பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கென்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் பெரிய கலவரத்தில் ஈடுபட்டார்கள். மீண்டும் யூதர்களின் பிணங்கள் குவிய ஆரம்பித்தன. 

இப்படிக் கலவரத்தில் ஈடுபட்டு யூதர்களைத் தாக்கினால் அவர்கள் பயந்து கொண்டு நாட்டைக் காலி செய்துவிட்டு ஓடிவிடுவார்கள் என்று அரபுகளும் பாலஸ்தீனத்து மக்களும் நினைத்து வன்முறை ஆட்டம் ஆடினார்கள். இந்தக் கலவரத்தில், கொல்லப்பட்ட யூத இனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் அழவில்லை; நாடு கைவிட்டுப் போகிறதே என்கிற நினைப்பில் கொன்றவர்களும் அழுதார்கள் என்பதுதான் வினோதம்.  கொல்லப்பட்டவர்களுடைய கதறலின் சத்தத்தையும் மீறி, கொல்லத் துணிந்தவர்களுடைய கதறலின் சத்தம்தான் மத்திய தரைக் கடலின் அலைகளிளும் அதைச்சார்ந்த மலைகளிலும் எதிரொலித்தது. 

ஆனால் தங்களின் மீது விழுந்த ஆரம்ப அடிகளை யூதர்கள் தாங்கிக் கொண்டார்கள். அவர்களுக்குத் தெரியும். இன்னும் சில நாட்களில் தங்களுக்கென்று ஒரு அரசியல் அமைப்பு, தனிக் காவல் நிலையம், தனி இராணுவம், தனி நிர்வாகம் என்று ஒரு அமைப்பு ஏற்படத்தான் போகிறது. வல்லரசுகளின் துணை நமக்கு இருக்கிறது. அப்போது வட்டியும் முதலுமாகத் திருப்பி அடிக்கலாமென்ற எண்ணத்தில் தங்களின் நாடு பிறந்த அன்றே தங்களின் மீது விழுந்த பிணங்களை எண்ணிப் பார்த்து ஏற்றுக் கொண்டார்கள். பிறகு யூதர்கள் திருப்பி அடிக்கத் தொடங்கினார்கள். 

இஸ்ரேல் பிறந்த அன்றே தொடங்கிய இந்த சண்டை ஒரு வருடம் நீடித்தது. இறுதியில்   ஐ. நா. தலையீட்டால் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதை உண்மையாக சொல்வதென்றால் ஐ. நா. தலையிட்டதால் என்று சொல்லக் கூடாது; சகோதர அரபு நாடுகள் தலையிடாததால் என்றுதான் சொல்ல வேண்டும். பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய அண்டை நாடுகள் ‘செத்த மாட்டில் உன்னி’ இறங்குவதுபோல் பாலஸ்தீன மக்களுக்கான ஆதரவை மனப்பூர்வமாக காட்டாமல் ஒதுங்க ஆரம்பித்தன. 

சவூதி அரேபியா போன்ற சகோதர நாடுகள் அப்போதுதான் தங்களிடம் எண்ணெய் வளம் இருப்பதை நுகர்ந்து கொண்டிருந்தன. இந்த நேரத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் வல்லரசுகளை எதிர்த்து நின்றால் அவைகள் தங்களின் அடிமடியில் கையை வைத்துவிட்டால் என்ன செய்வது என்று கண்டனத் தீர்மானம் போடுவதுடன் கடமை முடிந்தது என்று ஒதுங்கி நின்றன. ஆகவே கிட்டத்தட்ட பாலஸ்தீன மக்கள் அரசியல் ரீதியாகவும் மார்க்க ரீதியாகவும் அனாதைகளாக நின்றனர். இஸ்ரேல் இதை நமுட்டுச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தது. ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். முஸ்லிம்களின் ஒற்றுமை என்பது மார்க்க ரீதியானது மட்டுமே; அந்த ஒற்றுமை அரசியல் ரீதியானதாக என்றுமே இருந்ததில்லை. 

அதனால்தான் ஐ. நா அறிவித்த போர் நிறுத்த ஒப்பந்தம் கூட பாலஸ்தீன நாட்டை அந்த மக்களிடமிருந்து இன்னும் கூறு போட்டு , அவர்களுக்கு ஆதரவாக போரில் இறங்கிய அரபு நாடுகளுக்கும் பங்கு போட்டுக் கொடுத்தன. அவைகளும் ஹி ஹி என்று இளித்துக் கொண்டு பெற்றுக் கொண்டன. 

எப்படி என்றால் !

பாலஸ்தீனத்தின் மேற்குக்கரை ( West Bank ) என்று அழைக்கப்படும் ஜோர்டான் நதியின் மேற்கு பகுதியை ஜோர்டான் நாட்டுக்கும் கிழக்கில் மத்திய தரைக் கடலை ஒட்டி இருக்கும் காஸா ( Gaza Strip ) என்கிற பகுதியை எகிப்துக்கும் தாரைவார்த்துக் கொடுத்தது ஐ. நா. 

கையறு நிலையில் கதறிய பாலஸ்தீனத்து மக்கள், தங்களின் பூமி இப்படி இஸ்ரேல், ஜோர்டான், எகிப்து ஆகிய நாடுகளால் பங்கு போடப்பட்டு சின்னாபின்னமாக்கபட்டதைப் பார்த்து கண்ணீர் வடிப்பதைத் தவிர வேறு வழி இல்லாமல் நின்றார்கள். எதிரிகள் பறித்துக் கொண்டது பாதி என்றால் கூட இருந்தவன் பறித்துக் கொண்டது மீதி என்ற நிலை ஆகிவிட்டது. 

ஆனாலும் அவர்களின் முன்னாள் ஒரே ஒரு வழிதான் இருந்தது. அதுவே அகதிகளாக தங்களின் பூமியை விட்டு வெளியேறுவது. அப்படித்தான் அரபுலகின் அனைத்து நாடுகளுக்கும் பாலஸ்தீனர்கள் சோகமுகங்களை சுமந்தவண்ணமும் எஞ்சிய துணிகளை அணிந்து மானத்தை மறைத்த வண்ணமும் அகதிகளாகப் போனார்கள். அவர்கள் அதிகம் சென்றது அடுத்த வாசலில்  இருந்த லெபனானுக்குத்தான். 

மீண்டும் 1967-ம் ஆண்டு எகிப்தும் ஜோர்டானும் சிரியாவும் இஸ்ரேலுடன் இன்னொரு போரை நடத்தின. போரின் முடிவு இந்த நாடுகள் படுதோல்வி அடைந்தன என்பது மட்டுமல்ல முன்பு ஐ. நா. பாலஸ்தீனத்திலிருந்து பிரித்துத் தந்த மேற்குக் கரை ஜோர்டானிடமிருந்தும் காஸாப்பகுதி எகிப்து இடமிருந்தும் போரின்மூலம் பிடுங்கப்பட்டு அவை இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டன. இவ்வாறு மேற்குக் கரையும் காஸாத்துண்டும் இஸ்ரேல் உடைய கைகளுக்கு வந்தன. இவற்றில் சில பகுதிகள்தான் இன்று பாலஸ்தீனம் என்று அழைக்கப்படுகிறது. பரிதாபத்துக்குரிய பாலஸ்தீனர்கள் அங்கு தினம் தினம் செத்து செத்துப் பிழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். 

1948-ல் இஸ்ரேலில் 10 லட்சம் யூதர்கள்தான் இருந்தார்கள். இன்று 60 லட்சத்துக்கும் மேல். உலகெங்கிலும் இருந்து யூதர்கள் அங்கு வந்து சேர்ந்துவிட்டனர். இஸ்ரேலில் அவர்கள் வசித்தாலும் வசிக்காவிட்டாலும் அவர்களின் முகவரி அதுதான் என்று ஆகிவிட்டது. 

இதுதான் ஒரு முகவரி இல்லாத இனம் முகவரியைத் தேடிக் கொண்டதும் ஒரு அகவரியும் முகவரியும் பெற்று ஆண்டுகொண்டிருந்த சமுதாயம் அனைத்தையும் இழந்த கதையும். இதுதான் ஒரு பூமாலை குரங்குகளின் கைகளில் சிக்கிச் சீரழிந்த கதை. இதுதான் ஒரு புனித பூமி நிராகரிப்போர்களால் இன்று பூட்டப்பட்டுக் கிடக்கும் கதை. 

ஒடுக்கப்பட்டவர்கள் அதோடு ஒதுங்கிப் போகாமல் போராடத் தலைப்பட்ட வரலாறும்- போராட்டங்களும் – இன்றுவரை அவர்கள் படும் அவதிகளும் இரத்தத்தைத் தொட்டு எழுத வேண்டிய வரிகள். இத்தொடரின் இரண்டாம் பகுதியாக விரைவில் காணலாம். இன்ஷா அல்லாஹ். 

அதற்கு முன் பாலஸ்தீனம் பற்றி அகில உலகின் நிலைப்பாடு , ஐ. நா சபையின் நிலைப்பாடு பற்றி மட்டும் அலசும் உலக அரசியல் அரங்குகள் இவ்வுலகைப் படைத்த அல்லாஹ்வின் நிலைப்பாட்டைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டாமா? இந்தக் கூட்டத்தின் ஆட்டம் முடியப் போகும் எச்சரிக்கைகளை ஆராய்ந்து அறியவேண்டாமா? 

இன்ஷா அல்லாஹ் அவற்றைக் குறிப்பிட்டு எழுதி அடுத்த வாரம் இந்தத் தொடரை நிறைவு செய்யலாம்.

இபுராஹிம் அன்சாரி

23 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

இஸ்லாமியர்களின்சிதைவுக்குஅவரகளின்ஒற்றுமை இன்மையே காரணம மேற்க்குபாகிஸ்தான்கிழக்குபாகிஸ்தான்என்றுஇந்தியாவிலிருந்து பிரிந்துபோனஒரேபாகிஸ்தானைபூட்டோவின்இனவெறிகிழக்கு பாகிஸ்தானைபங்களாதேசாகமாற்றியது.உலகஅளவில்இஸ்லாமியர்களின்பின்னடைவுக்குமற்றவர்களைகுறைகூறுவதுநமதுபலவீனத்தைதிசை திருப்புவதாகும்.காவியம்போல்இந்தவரலாற்றுவரிகள்சுவைத்தபோதும் இஸ்லாமியர்களின்ஒற்றுமைஇன்மைநினைக்கநினைக்ககசக்கிறது.

sheikdawoodmohamedfarook said...

//நம்மில்ஒற்றுமைஇன்றில்அனைவர்க்கும்தாழ்வே//என்றுதலைப்பாகட்டியபாரதியார்பாடியபாடலை இங்குஎடுத்துக்காட்டினால்''ஒருகாபிரின்பாடலைஎப்படி நீஇங்கேநீ போடலாம்?''என்று வம்புக்குவருவோரும்உண்டு .உருதுதெரிந்துஇருந்தால்அல்லாமாஇக்பாலைஅலசிபாக்கலாம நான்பாவிஉருதுபடிக்கலையே!

sabeer.abushahruk said...

السلام عليكم ورحمة الله وبركاته

அன்பிற்குரிய காக்கா,

இயல் இசை நாடகம் என்னும் தமிழின் முச்சுவையையும் பிழிந்து தருகிறது நீங்கள் கையாளும் மொழி!

எனக்கென்னவோ, நீங்கள் எழுதினால் நெருப்பு என்னும் வார்த்தைச் சுடுமோ, தேன் என்று எழுதினால் இனிக்குமோ என்று தோன்றுமளவுக்கு இத் தொடரின் எல்லா வார்த்தைகளும் அவற்றிற்குண்டான அர்த்தங்களை மூளைக்குள் செலுத்துகின்றன.

எத்தனை பெரிய வரலாறு! என்னென்ன உலகளாவிய சம்பவங்களின் தொகுப்பு! எவ்வளவு நீண்ட நெடிய காலகட்டத்தின் வாழ்க்கை! இவை யாவற்றையும் அறிய வேண்டுமெனில் நாங்கள் நாள் கணக்கில் செலவிட வேண்டியிருக்கும்.

ஆனல் அவற்றை வாரம்தோறும் இலகுவாக எங்களுக்குச் சொல்லிக்காட்டிய தங்களுக்கு அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

மாஷா அல்லாஹ்!

sabeer.abushahruk said...

//இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை பங்காளிகளுக்கிடையே ஏற்பட்ட பாகப்பிரிவினை என்று நாம் ஒப்பிட்டால் பாலஸ்தீனம் பிரிக்கப்பட்டு இஸ்ரேல் உருவாக்கப்பட்டதை , வாங்காத கடனுக்காக ஒரு வீட்டை , ஆமைபோலப் புகுந்த ஐ. நா., அமீனாவாகி ஜப்தி செய்தததற்கு ஒப்பிடலாம். ஒன்று பிரிக்கப்பட்டது மற்றது திணிக்கப்பட்டது. //

10,000 லைக்ஸ்

(என்ன செய்ய, இந்த ஃபேஸ்புக் யுகத்தில் சொந்தமாகக் கருத்திடுவதைவிட எத்தனை லைக்ஸ் என்பதுதான் சமூக அங்கீகரிப்பாகப் போய்விட்டது)

sabeer.abushahruk said...

//அவர்கள் அதிகம் சென்றது அடுத்த வாசலில் இருந்த லெபனானுக்குத்தான். //

/// அடுத்த வாசலில்///

456 லைக்ஸ்

sabeer.abushahruk said...

//அரபுகளைப் பொறுத்தவரை விதைக்கின்ற காலத்தில் வீணே ஊர் சுற்றிவிட்டு அறுவடைக் காலத்தில் அரிவாளை எடுத்துக் கொண்டு வயல்வெளிக்குப் போனவனின் கதியில்தான் நின்றார்கள்.//

2,540 லைக்ஸ்

sabeer.abushahruk said...

//ஒரு புனித பூமி நிராகரிப்போர்களால் இன்று பூட்டப்பட்டுக் கிடக்கும் கதை. //

ஒரு
புனித பூமி
நிராகரிப்போர்களால்
இன்று
பூட்டப்பட்டுக் கிடக்கும் கதை.

திரட்டப்பட்ட யூதர்களால்
மிரட்டப்பட்டும் விரட்டப்பட்டும்
சிதறடிக்கப்பட்டச் சமூகத்தின்
கையறு நிலையின்
கண்ணீர்க் கதை

சன்மார்க்கச்
சகோதர தேசங்களால்
இறக்கி வைக்கப்பட்டச் சுமை

பற்றி எரியும் தேசத்தைப்
பற்றிய கவலையில்
சின்னஞ்சிறு வெற்றிகளால்
சமாதானமாகிப் போகும்
சவலைப்பிள்ளைகளின் பரிதாபக் கதை

என் சகோதரர்களை
என்னையும் அவர்களையும் படைத்த
அல்லாஹ் பாதுகாப்பானாக, ஆமீன்.

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி சபீர் அவர்களுக்கு,

வ அலைக்குமுஸ் சலாம்.

இது தொடரின் இருபத்தி ஐந்தாம் அத்தியாயம் .
தொடரின் ஒன்றாம் அத்தியாயம் முதல் தாங்கள் அளித்துவரும் ஆர்வத்துக்கு நான் மிகவும் கடமைப் பட்டு இருக்கிறேன்.

ஜசாக்கால்லாஹ் ஹைர் .

Ebrahim Ansari said...

அன்புள்ள மச்சான் அவர்களுக்கு,
கருத்துக்கு நன்றி.

Ebrahim Ansari said...

அன்புள்ள மச்சான் அவர்களுக்கு,
கருத்துக்கு நன்றி.

sabeer.abushahruk said...

காக்கா,

கரும்பு திண்ண கூலியா?

உணர்வுபூர்வமான வரலாற்றுச் சம்பவங்களை எடுத்துச் சொல்லத்தான் எம் சமூகத்தில் நாதியில்லை; சொல்வதைக் கேட்டுக்கொள்பவர்களுக்கு நீங்கள் கடமைப்பட்டுள்ளதாகச் சொல்வது எங்களுக்கு வெட்கம்.

இப்படியாகத்தான் தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிக்கப் பழகிய எம் சமூகம் அறிவில் பின் தங்கி தற்காலிக ஊடகச் சிற்றின்பங்களை 'லைக்ஸ்'வதில் காலத்தைச் செலவழிக்கிறது.

கற்பிக்கவும் தெரியாது கற்பித்தால் கற்கவும் விரும்பாது. எங்கள் மாணவப் பருவத்தில் நாங்கள் எல்லாம் பள்ளிக்கூடம் போகும்போது ஒரு கூட்டம் க்ளாஸைக் கட்டடித்துவிட்டு சினிமாவுக்குப் போனது. அதுகளெல்லாம் இப்ப பப்பரப்பா என்று வாழ்கிறது. இப்ப சினிமாவுக்குப் பதிலாக ஃபேஸ் புக் மற்றும் இன்ன பிற எண்ட்டர்ட்டய்னர்கள்.

உறுப்படும்ன்றீங்க?

ZAKIR HUSSAIN said...உறுப்படும்ன்றீங்க?


பாஸ்...எப்டி பாஸ் உறுப்படும்?..பொறுப்பற்று ஆற்றும் செயல்கள் எல்லாம் வாழ்க்கையின் வீண்விரயங்களையே கொண்டுவந்து சேர்க்கும்.

பணம் பொறுப்பில்லாமல் செலவு செய்தால் வறுமை

மனம் பொறுப்பில்லாமல் அலைந்தால் வெறுமை.

நேரம் பொறுப்பில்லாமல் செலவழித்தால் சோர்வு.

வார்த்தை பொறுப்பில்லாமல் கொட்டினால் வருத்தம்.

வயதை பொறுப்பில்லாமல் செலவழித்தால் விரைவில் முதுமை.

கமென்ட்ஸ் பொறுப்பில்லாமல் எழுதினால்.........

ZAKIR HUSSAIN said...

To Brother Ebrahim Ansari,

உங்களைப்போல் உண்மையான சரித்திரம் எழுதுவோர்கள் இல்லாமல் போனதால், ஒரு மிகப்பெரிய சரித்திர தவறே தமிழ்நாட்டு / இந்திய வரலாற்றுப்புத்தகங்களில் பதியப்பட்டு மாணவர்களை ஆரம்பத்திலேயே தவறான தகவலுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

sabeer.abushahruk said...

//பணம் பொறுப்பில்லாமல் செலவு செய்தால் வறுமை

மனம் பொறுப்பில்லாமல் அலைந்தால் வெறுமை.

நேரம் பொறுப்பில்லாமல் செலவழித்தால் சோர்வு.

வார்த்தை பொறுப்பில்லாமல் கொட்டினால் வருத்தம்.

வயதை பொறுப்பில்லாமல் செலவழித்தால் விரைவில் முதுமை.//

1,000 லைக்ஸ்!

இப்னு அப்துல் ரஜாக் said...

அற்புதம்
உண்மை
வசீகரம்
உங்கள் கட்டுரை
அல்லா அருள் புரிவானாக

இப்னு அப்துல் ரஜாக் said...

I don't know how to congratulate you for this article which is reflects our true story.so I ask Allah to grant you jannaththul firthouse and good health,wealth,long life etc...
Barakkallah fee

இப்னு அப்துல் ரஜாக் said...

For Allah 's sake I love you brother ibrahim ansari kaka.
You have done a great job.
Expecting more...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தம்பி அப்துல் லத்தீஃப் தம்முடைய பொறுமைக்கும், சுட்டிக் காட்டுவதில் சூறாவளியாக இருப்பற்கும் கைமேல் பலன் கண்டதை மகிழ்கிறேன் !

//For Allah 's sake I love you brother ibrahim ansari kaka.
You have done a great job.
Expecting more... //

நாங்களும்தான் இன்ஷா அல்லாஹ் !

அப்துல்மாலிக் said...

Masha Allah, Dear Bro you have DONE good job, thoroughly understand the history of Palestine and Israel , Jazakkallah

Ebrahim Ansari said...

அன்புள்ள நெறியாளர் அவர்களுக்கும், தம்பி மாலிக், தம்பி ஜாகிர் ஆகியோரின் அன்பான கருத்துக்களுக்கும் ஜசக் அல்லாஹ் ஹைரன்.

இன்ஷா அல்லாஹ் புத்துணர்வுடன் மீண்டும் தொடர்வோம்.

இதற்கிடையில் மீண்டும் நேற்று இன்று நாளை தொடர் தொடர இருக்கிறது. இன்ஷா அல்லாஹ்.

Ebrahim Ansari said...

கர்நாடகத்தில் கைத்தடி. இன்ஷா அல்லாஹ் நெறியாளர் அறிவிக்கலாம்.

Anonymous said...

///Ebrahim Ansari சொன்னது…
கர்நாடகத்தில் கைத்தடி. இன்ஷா அல்லாஹ் நெறியாளர் அறிவிக்கலாம்.////

இன்ஷா அல்லாஹ் காக்கா...

ஜஸாக்கல்லாஹ் ஹைரன், அடுத்த தொடருக்கும் சுடரேற்றியமைக்கு....

sabeer.abushahruk said...

//கர்நாடகத்தில் கைத்தடி.//

முன் வரிசையில் எனக்கொரு இடம் ப்ளீஸ்

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு