பங்காளி (வங்கதேசக்காரன்) ஒருவன் அரபி ஒருத்தனைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தான். இரண்டு மூன்றுபேர் பார்த்துக்கொண்டிருந்தார்களே தவிர யாரும் விலக்கிவிட எத்தனிக்கவில்லை. செம மாத்து மாத்திக் கொண்டிருந்தான். இரண்டு கைமுஷ்டிகளாலும் மாறிமாறி மண்டையில் குத்தினான். கொத்தாக முடியைப் பிடித்து இழுத்தான். பளார் பளார் என்று பிடறியில் அறைந்தான். குனிய வைத்து முதுகில் குத்தினான். அந்த அரபி ஓர் அடிகூட திருப்பி அடிக்கவில்லை. எல்லாவற்றையும் எருமையையும் மிஞ்சும் பொறுமையோடு வாங்கிக்கொண்டிருந்தான். அவன் கண்கள் மூடிக்கிடந்தன; உதடுகளில் ஓர் 'இளிப்பு' நிலவியது.
அவன் தலையை இரண்டு கைகளாலும் பூட்டுப் போடுவதுபோல பிடித்துக் கழுத்தை இடமும் வலமுமாக ஒடித்தான் பங்காளி. சடக் மடக்கென்ற சப்தத்திற்குப் பிறகு அரபி கண்களைத் திறந்தான். தான் வாங்கிய அடிகளுக்கெல்லாம் ஒரு கணக்குப் போட்டு 'ஷுக்ரன்' என்று நன்றி சொல்லி மேற்கொண்டு காசு கொடுத்து அரபி வெளியேறிய உடன் நான் என் முறைக்குத் தயாரானேன்.
அந்த பார்பரிடம்தான் நான் வழக்கமாக முடி வெட்டிக்கொள்வேன். முடி வெட்டி முடித்தப் பிறகு மஸ்ஸாஜ் என்ற பெயரில் நடந்த களேபரம்தான் நான் மேலே விளக்கியது.
எனக்குப் பக்கத்து நாற்காலியில் இருந்த கஸ்டமருக்கு மற்றொரு பங்காளி முகத்தில் படம் வரையும் லாவகத்தோடு மீசை தாடி மற்றும் கிருதாக்களை வடிவமைத்துக் கொண்டிருந்தான். பெரிய மால்களுக்குச் செல்வதற்காக இளைஞர்களால் செய்துகொள்ளப்படும் கட்டாய ஃபேஸ் கோட் (face code)அது. சில இடங்களுக்குச் செல்வதானால் எப்படி ட்ரெஸ் கோட் வைத்திருக்கிறார்களோ அதைப் போல இந்த ஃபேஸ் கோட். ஒருநாள் கூத்துக்கு மீசை என்பார்களே அதைப்போல ஒரு சில மணி நேரத்திற்கான ஏற்பாடு அது. நாளைக்கே முளைத்துவிடும் உரோமம் பற்றிய கவலை ஏதுமில்லை. அது அவ்வாறு முளைப்பதற்குள் எத்தனை இளம் யுவதிகளிடம் 'லைக்ஸ்' வாங்கியிருக்கும் என்பதே கனக்கு.
நான் எப்போதும் முடி மட்டும்தான் வெட்டிக்கொள்வேன். ஷேவிங், மீசை திருத்துதல் போன்றவற்றைச் செய்ய அனுமதிப்பதில்லை. இருப்பினும் அன்றைக்கு சற்று தாமதமாகப் போனதால் வீடு திரும்பி ஷேவிங் செய்ய நேரம் இருக்காது என்கிற கணிப்பில் 'கட்டிங் அன்ட் ஷேவிங்'குக்காக கழுத்தில் வெண்பட்டியும் தோளைப் போர்த்திய துண்டுமென தயாராகிப்போனேன்.
அம்மா சொல்லும் அம்புலிமாமா ஆன்றாஸி பக்ஷி கதைகளுக்குப் பிறகு அதிகம் தூக்கம் கண்ணைச் சொக்குவது பார்பரின் கத்தரிக்கோல் இயங்கும் சப்தம்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதுவும் ஒரு கத்தை உரோமத்தை வெட்டுவதற்குள் சரசரவென்று ஏழு எட்டுத் தடவை கத்தரிக்கோலை வெற்றாக நறுக்குவது அருமையான தாள லயத்தோடு தூக்கம் வரவழைக்கும். இருப்பினும் தூங்கக்கூடாது என்கிற வைராக்கியத்தில் அரைக்கண் மூடியே ஆனந்தம் காணும் தருணம் அது.
முடி வெட்டி முடித்ததும் ஒரு சமதள ஆடியைப் பிடித்து இடம், வலம் மற்றும் பின்புறங்களில் காட்டி வெட்டு சரிதானே என்று அங்கீகாரம் வாங்கிக்கொண்டு, ஷேவிங்கைத் துவக்கினான். மழித்து முடித்ததும் இன்னொரு முறை ஒரு எலெக்ட்ரிக் ரேஸரால் ஆட்டுத்தலையை வக்குவதுபோல் போட்டுத்தேய் தேயென்று தேய்த்து க்ரீம் பவுடர் ஆஃப்டர் ஷேவ்லாம் போட்டு வேலையை முடித்தபோது எனக்கு முகத்தில் லேசாக எரிச்சல் இருந்தது. என் விருப்பப்படி அமைத்திருந்த மீசையை அவன் இஷ்டப்படி முடித்துவிட்டிருந்தது சற்று கோபத்தை ஏற்படுத்தியது.
இனி மேற்கொண்டு என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள நீங்கள் மீண்டும் முதலிலிருந்து வாசிக்க வேண்டும், அரபி என்று வரும் இடத்தில் 'என்னை' வைத்து வாசித்துக் கொள்ளுங்கள். அப்படியே கீழ்க்கண்ட தலைப்பையும் வைத்துக் கொள்ளுங்கள்:
தலைப்பு: காசு கொடுத்து வாங்கும் அடி, குத்து!
Dubai Miracle Garden!
(ஒரு பார்வை)
அமீரகம்
அழகாகவும்
அழுத்தம் திருத்தமாகவும்
எழுதி வைத்த கவிதை
இந்தப் பூநகை
துபையின் புன்னகை
கான்க்ரீட் காடுகளின்
நடுவே
நாட்டின் பூக்காடு
விசா இமிக்ரேஷன் இல்லாமல்
சட்டெனப் போய்வரக்கூடிய
ஐரோப்பா
இந்த
மலர் வனத்துள் நுழைந்ததும்
மனம்
பட்டாம்பூச்சி ஆகிவிடுகிறது
ரயிலாகவும் மயிலாகவும்
ஒயிலாக அமைக்கப்பட்ட
ரகம் ரகமானப் பூக்கள்
பூக்களைப் பறிக்காதீர்கள்
என
அறிவிப்பு அவசியமில்லை
பூக்கள்தான்
முதலில்
கண்களைப் பறிக்கின்றன
கண்டதும்
உள்ளங்களையும்!
ஒற்றைப்பூவே உவகைத்தான்
ஒரு கொத்துப் பூக்களோ
உற்சாகம்
இந்த
ஓர் ஊர் நிறையப் பூக்கள்
உலகிற்கே
துபை தரும் சந்தோஷம்
இந்தப் பூங்கா
தூங்கா நகரின் செல்லம்
செயற்கையாய் உருவாக்கப்பட்ட
இயற்கை
அமீரகத்திற்கு
துபைதான் முகம் எனில்
இந்தப் பூங்காதான்
ஒப்பணை!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
12 Responses So Far:
சொந்தமும் இல்லே
பந்தமும் இல்லே
சொன்ன இடத்தில்
அமர்ந்து கொள்கிறார். - நாங்க
மந்திரி இல்லே
தந்திரி இல்லே
வணக்கம் போட்டு
தலையை சாய்க்கிறார்.
- என்று ஒரு பழைய பாடல் . இதை ஒரு சிகை அலங்கார நிலையம் வைத்திருப்பவர் பாடுவார். எனக்கு அந்த நினைவு வந்துவிட்டது. .
=========================================
சிலப்பதிகாரத்தில் ஒரு காட்சி உண்டு
மாதவி கோவலனின் தாய் தந்தைக்கு ஒரு கடிதம் கொடுத்து அனுப்புவாள். அந்தக் கடிதத்தை மூடும்போது மாதவியின் தலை முடியின் ஒரு முடி அந்தக் கடிதத்துடன் ஒட்டிக் கொள்ளும். தற்செயலாக அந்தக் கடிதம் கோவலனின் கரங்களுக்குச் சென்றுவிடும் . அப்போது அந்த தலை முடியின் நீளத்தைப் பார்த்த கோவலன் , மாதவியின் அந்த தலைமுடியில் இருந்து வீசும் நெய் வாசத்தை உணர்வான் என்று ஒரு வரி வரும் அந்த வரி
" உடனுறைந்த காலத்து உரைத்த நெய்வாசம் " என்று குறிப்பிடப்படும்.
அப்படி உடனுறைந்த காலத்து உரைத்த நெய்வாசம் இந்தக் கவிதையில் எனக்கு நான் துபாயுடன் உறைந்த காலத்தை நினைவூட்டியது.
பூமிக்குவந்த நிலவுக்குபுருவம்தீட்டியதுயார்?
அன்பிற்குரிய ஈனா ஆனா காக்கா,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நலம்தானே?
சிலப்பதிகாரக் காட்சியில் இலக்கிய ரசம் சொட்டுகிறது. ரசிக்க விடாமல் இவன்கள்தான் எல்லா இலக்கியங்களிலும் காட் கான்ஸெப்டை (God concept) நுழைத்து நம்மை விரட்டி அடிக்கிறார்களே!
தங்கள் நினைவாற்றலுக்கு ஒரு மாஷா அல்லாஹ்!
//பூமிக்கு வந்த நிலவுக்கு
புருவம் தீட்டியது யார்! //
ஃபாரூக் மாமா,
சூப்பர்!!!
புருவம் தீட்டாவிடில்
உருவம் துலங்காதெனவே
மொட்டு முகத்தில் சற்றே
தொட்டுத் தீட்டினர்!
இல்லாவிடில்
நிலவெனவே கணித்து
காலால் மிதித்திட
காத்திருக்கின்றனர்
ஆம்ஸ்ட்ராங்களும் ஆல்டிராங்களும்!
//உரைத்தநெய்வாசம்//இதுகோவலன்காலத்துகதை.இன்றோஉரைத்தநெய்வாசம்கண்டு ''இதுகோழிபிரியாணியா?ஆட்டுக்கடாபிரியாணியா?''என்றுதுள்ளியமாக சொப்புவோரும்உண்டு!
//இல்லாவிடில்
நிலவெனவே கணித்து
காலால் மிதித்திட
காத்திருக்கின்றனர்
ஆம்ஸ்ட்ராங்களும் ஆல்டிராங்களும்! ?//
கிளாசிக்... ! இதுதான் காக்கா உங்க டச் !
//இனி மேற்கொண்டு என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள நீங்கள் மீண்டும் முதலிலிருந்து வாசிக்க வேண்டும், அரபி என்று வரும் இடத்தில் 'என்னை' வைத்து வாசித்துக் கொள்ளுங்கள். அப்படியே கீழ்க்கண்ட தலைப்பையும் வைத்துக் கொள்ளுங்கள்://
அரபி தெரிந்த 'என்னை'ன்னு சேர்த்திருந்திக்கனும்... :)
பூவிலும் மென்மையாய்
புரிதலில் தன்மையாய்
பூவுக்கே பூச்சூட்டும்
புகழ்மணக்க உன்கவிதை
அமீரக துபாயை
அழகிய பூ மணக்கும் வரிகளில்
கவிதையாய்க் கோர்த்தாயே
உன்கரம் பதிந்த எழுத்தாலே
செயற்கையாய் உருவாக்கப்பட்ட
இயற்கை
----------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும். நச்''
//முடி வெட்டி முடித்தப் பிறகு மஸ்ஸாஜ் என்ற பெயரில் நடந்த களேபரம்தான் நான் மேலே விளக்கியது.//
மசஜ்ஜிக்கு மசாலா தடவி பொரிச்சி இல்லை இல்லை புரட்டி எடுத்துவிட்டீர்கள்
வாசித்த, கருத்திட்ட சகோதரர்களுக்கு நன்றி!
(இம்முறை விரிவான ஏற்புரைக்கு நேரம் இல்லாததால் பொறுக்கவும்)
Post a Comment