ஞாபகம் வருதே - 1 [நிகழ்விடம் கோலாலம்பூர்]
ஒருநாள் காலை மணி 7.3o நான் தங்கி இருந்த வீட்டிலிருந்து பைக்கில் என் கடைக்குப் போனேன். நான் போன வழி கொஞ்சம் சுற்றுப்பாதை; அதோடு அந்த வழியில் காலை வேளையும் மாலை வேளையும் போக்குவரத்து அதிகம் இருக்கும் என்பதால் நான் அந்த வழியில் செல்வதில்லை. ஏனோ எனக்கே தெரியவில்லை அன்று மட்டும் ஏதோ யோசனையில் என்னையும் அறியாமல் அந்த வழியில் பைக்கை விட்டேன். போகும் போது கொஞ்சதூரத்தில் ரோட்டோரம் ஒரு இந்தியர் ஒருபைக்கைத் தள்ள முடியாமல் சிரமப்பட்டுத் தள்ளிக் கொண்டு போனார். பைக்கின் பின்பக்க கேரியரில் நிறைய செய்தி பத்திரிகை கட்டுகள் இருந்தது.
முன் பக்கத்திலும்கூட பத்திரிகை கட்டுகள் இருந்தது. அவர்அருகில் சென்று "ஏன் பைக்கைத் தள்ளிக் கொண்டு போகிறீர்கள்? ரிப்பேரா?’’ என்றேன்.
"இல்லே! பெட்ரோல் முடிஞ்சு போச்சுங்க! போடப் போறேன்!’’ என்றார்.
பெட்ரோல் பங்க் இருக்கும் இடம் கொஞ்சதூரம். போகும் வழியில் ஒரு உயரமான மேட்டில் பைக்கை ஏற்றி இறக்க வேண்டும். பைக்கிலும் முன்னும் பின்னும் நியூஸ் பேப்பர் கட்டுகள் வேறு. அவருக்கோ வயசு நாற்பத்து ஐந்து அல்லது ஐம்பது இருக்கலாம். ’பைக்கை பெட்ரோல் பங்குக்கு தள்ளிக் கொண்டு போவது சிரமம்’ என்று நினைத்தேன்.
"நீங்கள் கொஞ்ச நேரம் இங்கேயே நில்லுங்கள். நான் போய் பெட்ரோல் வாங்கிவர்றேன்’’ என்றேன். 50/# ரிங்கிட்டை என்னிடம் கொடுத்து நாற்பது ரிங்கிட்டுக்கு எண்ணெய் வாங்கினால் போதும்!’’ என்றார் [# மலேசிய நாணயத்தின் பெயர்] ”பணத்தை வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் கொண்டு வந்ததும் வாங்கிக் கொள்கிறேன். அதுவரை ஓரமாக பைக்கை போட்டு விட்டு அந்த மரநிழலில் நில்லுங்கள்!” என்று சொல்லி விட்டு அங்கிருந்து புறப்பட்டேன். பத்து பதினைந்து நிமிசம் கழித்து எண்ணெயுடன் அங்கு சென்றேன். எண்ணெயை வாங்கி ஊற்றியபின் என் கையில் கேனை கொடுத்து 50# ரிங்கிட் நோட்டை என்னிடம் தந்தார்.
பாக்கி 10# ரிங்கிட்டை திரும்பக் கொடுத்தேன். அதை அவர் வாங்காமல் “’ஒன்றும் தப்பாய் எடுத்துக் கொள்ளதீர்கள். நீங்கள் எண்ணெய் வாங்க போன பெட்ரோல் செலவுக்காக இதை வைத்துக் கொள்ளுங்கள்” என்றார் .
‘’இது மனிதனுக்கு மனிதன் செய்யும் சாதாரண உதவிதான். இது ஒன்றும் பெரிய உதவியல்ல! வைத்துக் கொள்ளுங்கள்” என்று பாக்கியை அவரிடமே கொடுத்து விட்டு புறப்படுங்கள், பேப்பர் போடணும் நேரமாகிறது” என்றேன்.
“அல்ஹம்துலில்லாஹ்! சமயத்தில் அல்லாஹ் உங்களை இங்கே அனுப்பி எனக்கு உதவி இருக்கிறான். இங்கே நான் உதவி தேடி நிற்பதை எத்தனையோ பேர் வேடிக்கை பார்த்துக் கொண்டேதான் போனார்கள். ஆனால், யாருமே உதவ முன்வரவில்லை. நீங்களும் எனக்கு உதவாமலிருந்தால் என் பேப்பர் டெலிவரி இன்னும் லேட்டாகும்! வாடிக்கைகாரர்கள் திட்டுவார்கள்” என்றார்.
“அல்ஹம்துலில்லாஹ்” என்று அவர் உச்சரித்ததை கேட்டு நான் திடுக்கிட்டேன். வைத்த கண் வாங்காமல் அவரையே பார்த்தேன். காது குத்தியதுக்கான துவாரம் அவர் காதில் இருந்தது. நான் ஒரு இஸ்லாமியன் என்று தெரிந்து கொண்ட அவர் என்னை திருப்தி படுத்த அவர் செவிவழி கேட்ட திருகுர்ஆன் வாசகங்களை என்னிடம் ஒப்பிக்கிறாறோ?” என்ற சந்தேகம் எனக்கு வந்தது. என் முகபாவனையிலிருந்து என் எண்ணத்தை புரிந்து கொண்ட அவர்” நானும் ஒரு முஸ்லிம்தான். முன்பு நான் ஒரு இந்து. என் இருபத்து ஐந்து வயதில் நான் இஸ்லாத்திற்கு மாறினேன்.
அதற்கு முன் நான் கொள்ளை, வழிப்பறி திருட்டு குற்றங்களுக்கு அடிக்கடி சிறை சென்றேன். ஒரு மலாய்க்கார சிறை அதிகாரி எனக்கு புத்திமதிகள் கூறியும் இஸ்லாமிய போதனைகளை அடிக்கடி எனக்கு சொன்னார். திருட்டு வழிப்பறி போன்ற கிரிமினல் வாழ்க்கையை விட்டு நல்லவழிக்கு வர என்னை தூண்டினார். நான் சிறையில் இருந்தபோது என்னிடம் கடுமையாக அவர் நடந்து கொள்ளவில்லை. அவரின் அன்பும் போதனையும் என் வாழ்க்கை திசையை மாற்றியது. இஸ்லாத்திற்கு மாறி வந்தேன்.
என்னை அவர் ஒரு மனிதனாக்கினார். இப்பொழுது என் பெயர் இலியாஸ் பின் அப்துல்லா. முன்பு காளிமுத்து!” என்று தன் அடையாளக் கார்டை காட்டினார்.
’’பேப்பர் போடணும்! நேரமாகுது, உங்கள் நேம்கார்டை கொடுங்கள். ஒரு நாளைக்கு உங்கள் இடத்திற்கு வந்துநான் இஸ்லாத்திற்கு மாறிய சூழலையும் சொல்கிறேன்’’என்றார்.
’’அஸ்ஸலாமு அலைக்கும்’’ சொல்லி அங்கிருந்து பறந்தார்.
இது நடந்து மூன்று மாதத்தில் நான் வியாபாரம் செய்த இடமும் தங்கும் இடமும் மாறியது. பழைய இடத்துக்கு அவர் வந்தாரா? இல்லையா என்பது தெரியவில்லை! அவர் முழுக்கதையும் கேட்க வாய்ப்பு இல்லாமல்போனது.
அன்று காலை நான் வெகுதொலைவில் உள்ள ஊர்களுக்குச் சென்று என் வாடிக்கையாளர்களிடம் சப்ளை செய்த புத்தகங்களுக்குப் பணம் வாங்க வேண்டும். ஆனால், எதிர்பாராமல் இங்கே எனக்கு வேறு ஒரு வேலை வந்து விட்டதால் வெளியூர் போகும் வேலையை என்னிடம் வேலை செய்யும் மலாய்க்கார பையனிடம் கொடுத்தேன். நேற்று வேனுக்கு 35# ரிங்கிட்டுக்கு பெட்ரோல் போட்டு கொஞ்ச தூரமே ஓடியதால் மீதமுள்ள எண்ணெய் அந்த ஊருக்கு கிட்டத்தட்ட போகவர போதும். இருந்தாலும் போகுமிடத்தில் ஏதும் முன்பின் எதிர்பாராமல் ஆகலாம்’ என எண்ணி அவனிடத்தில் 50# ரிங்கிட் கொடுத்து “பத்து ரிங்கிட் உன் சாப்பாட்டுக்கு எடுத்துக் கொள். பாக்கி பணத்தில் எண்ணெய் போட்டுக் கொள்!’’ என்று சொல்லியனுப்பினேன்.
ஏற்கனவே வேனில் போகவர ஓரளவு எண்ணெய் இருக்கிறது. அப்படியே அது போதாமல் போனாலும் திரும்ப வர இன்னும் ஐந்து ரிங்கிட்டுக்கு போட்டால் போதும். பெரும்பாலும் மலேசியாவில் டிரைவர்கள் முப்பது ரிங்கிட்டுக்கு பெட்ரோல் போட்டு நாற்பது ரிங்கிட்டுக்கு பில் கொண்டு வருவார்கள். இவனும் அப்படிப்பட்ட ஆசாமியா என்பதை தெரிந்து கொள்ள ஏற்கனவே வேனில் பெட்ரோல் இருப்பதை அவனிடம் காட்டிக் கொள்ளாமல் அவன் திருடுகிறானா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள இந்த தந்திரத்தைக் கையாண்டேன்.
முப்பது ரிங்கிட்டு எண்ணெய் போட்டு நாற்பது ரிங்கிட்டுக்கு பில் கொண்டு வரும் திருட்டுத்தனத்தை மனசாட்சியின் கண் கொண்டு பார்த்தால் அது திருட்டுமல்ல; பொய்யுமல்ல; மனசாட்சிக்கு எதிரானதுமல்ல என்று எண்ணத் தோன்றுகிறது*. ஏனெனில் ’சைலாக்’ போன்ற ரத்தம் குடிக்கும் தமிழ் முஸ்லிம் முதலாளிகளுக்கு அப்படி செய்வதில் தவறில்லைதான்; ஏனெனில் ஒரு நாளைக்கு காலை எட்டு மணியிலிருந்து இரவு ஒன்பது-பத்து வரை [சில கடைகளில் காலை ஆறு மணிக்கே வேலை தொடங்கும்] வேலையாட்களின் ரத்தத்தை உறிஞ்சி குடித்து [Sunday & public Holiday மட்டும் ’பெரிய’ மனசு பண்ணி அரை நாள் லீவு கொடுக்கும் ’தர்மவான்’ முதலாளிகளுக்கு இப்படி செய்வதில்’ தவறில்லையோ என்று ஆதங்கமாக இருக்கும்.!’ (இருப்பினும் ஒரு தவறுக்கு பதில் தவறு தீர்வாகாது;மார்க்கமும் அனுமதிக்காது*).
முப்பது ரிங்கிட் பில்லை நாற்பது ரிங்கிட்டாக மாற்றி பில்லுக்கு பத்து ரிங்கிட் கமிஷன் அடித்தால் தான் சம்பளகாரன் பிழைப்பு ஒருவழியாய் ஓடியடையும். ஆனால், நான் அவர்களைப் போல் வேலை செய்யும் ஆட்களின் ரத்தத்தை பிழிந்து குடிக்கவில்லை. காலை 8.30 மணிக்கு வேலை தொடக்கம். ஒரு மணி நேரம் சாப்பாட்டுக்கு. மணி 2 to 5.30 வரை வேலை. சனிக்கிழமை பகல் ஒரு மணியோடு வேலை முடிந்தது.
நான் வெளியூருக்கு அனுப்பிய மலாய்கார பையன் வேலைகளை முடித்து கோலாலம்பூர் திரும்பிவர அதிகபட்சம் மாலை மணி 6.30 அல்லது இன்னும் அதிகமானால்கூட மணி 7.30குள் வந்தாக வேண்டும். ஆனால் கடிகாரமோ எட்டு, எட்டரை, எட்டே முக்கால், என்று முள்ளை ‘டிக்-டிக்’ என்று நகர்த்தி தன் கடமையில் கண்ணா இருந்தது. கடிகார முள் ஓட ஓட என் நெஞ்சுக்குள் பீதியும் படபடப்பும் அதிகரித்தது.
துணை யாருமில்லாமல் ஒரே ஒருவன் மட்டுமே போயிருக்கிறான். விபத்து ஏதும் ஏற்பட்டு விட்டதோ? உயிருக்கு ஏதும் ஆபத்தோ?’’ என்ற அச்சம் என்னை அலைக் கழித்தது. என் கவலையறியாத கடிகாரமோ கொஞ்சங்கூட இரக்கமே இல்லாமல் தன் கருமமே கண்ணா இருந்தது. கொந்தளிக்கும் கடலில் சிறு துரும்பென என் மனமோ தத்தளித்து- தடுமாறியது. மணி பத்தரை. கடை வாசலில் ஒரு வேன் வந்து நின்றது. ஆவலோடு உற்றுப் பார்த்தேன். அது என் வேன் அல்ல.
வேன் கதவை திறந்து கொண்டு ’’பாரூக் அண்ணன்!’’ என்று ஒருவர் என்னை கூப்பிட்டுக் கொண்டே இறங்கினார். அது எங்கேயோ நான் கேட்ட பழக்கமான குரல். நான் வெளியே வந்து பார்த்த போது நீண்டகாலம் என் கடை அருகில் மளிகைக்கடை வைத்திருந்தவர் வந்து கொண்டிருந்தார். தற்போது வெகுதூரத்தில் சூப்பர் மார்கெட் வைத்திருக்கிறார். ஊர் வேதாரணியம் அருகில் உள்ள தோப்புத்துறை. நான் சொந்த தொழில் ஆரம்பித்தபோது எனக்கு பலவகையில் உதவியவர். தற்போது நான் வைத்திருக்கும் Vanகூட முன் பணம் கட்டாமலே வாங்கித் தந்து உதவியவர். எங்கோ பிறந்தவர்! எங்கோ வளர்ந்தவர்! பிழைக்கப் போன நாட்டில் அறிமுகமாகி சொந்த சகோதரன் போல் எனக்கு பலதடவை கைகொடுத்து உதவிய மனிதன்!
‘’பாரூக் அண்ணன்! நான் கிள்ளான்# [கிள்ளளான் கோலாம்பூருக்கு கிழக்கே சுமார் 40km தூரமுள்ள துறைமுக நகர்] போய் விட்டு வரும் வழியில் ஒரு வேன்ரோட்டு ஓரத்தில் நிற்பதை பார்த்தேன். கொஞ்ச தூரம் வந்தபின்’ அது உங்கள் வேனாக இருக்கலாமோ? ஏதும் ரிப்பேறோ?’ நீங்கள் தான்தனியே நிற்கிறீர்களோ?’’ என்ற சந்தேகம் வந்தது.
உங்கள் வேன் நின்ற இடத்திலிருந்து நான் வெகுதூரம் வந்து விட்டதால் வேகமாக கார்களும் லாரியும் போகும் அந்த ஹைவேயில் ரிவர்சில் போக முடிவில்லை. வெகுதூரம் போய் U-டேர்ன் எடுத்து அங்கே போனேன். உங்கள் பையன் நின்று கொண்டிருந்தான்”
அவனிடம் “என்ன விஷயம்? ஏன் இந்நேரத்தில் இங்கே நிற்கிறாய்? ஏதும் ரிப்பேரா?’ ’என்றுகேட்டேன். ’’ இல்லை! எண்ணெய் முடிஞ்சு போச்சு!’’ என்றான்.
“வரும் வழியில் தான் நிறைய பங்க் இருக்கிறதே! போட்டால் என்ன? காசு இல்லையா?’’ என்றேன்.
“காசு தந்து இருக்கிறார் போட மறந்து போச்சு’’என்றான்.
காசை வாங்கி எண்ணெய் வாங்கிக் கொடுத்தேன்.
‘’நேரமாகி விட்டதால் கடைக்கு வந்து கணக்கு கொடுத்து விட்டு என் வீட்டுக்கு திரும்ப பஸ் இல்லை. நான் வேனிலேயே வீட்டுக்கு போகிறேன். நாளைக்கு வருகிறேன் எனக்காக கடையில் காத்திருப்பார் சொல்லி விடுங்கள்.” என்றான்.
“அதோடு இந்த பையை உங்களிடம் கொடுக்கும்படி தந்தான். வசூல் செய்த பணம் இதில் இருக்கிறதாம்’’ என்றான்.
இதைக் கேட்ட என் மனம் அமைதியானது.
“உங்களுக்கு ரெம்போ சிரமம் தந்துவிட்டேன். எனக்காக ரொம்ப சிரமம் எடுத்து இருக்கிறீர்கள். இந்த உதவியை நான் மறக்கமுடியாது. ரொம்போ நன்றி!’’ என்றேன்.
“என்ன ஃபாரூக் அண்ணன்! நன்றி கின்றி’ என்றெல்லாம் பெரிய பெரிய வார்த்தைகள் சொல்கிறீர்கள்? மனிதரா பிறந்து விட்டு இன்னொரு மனிதருக்கு இதெல்லாம் செய்யாமல் வேறு எதைத்தான் அங்கே அள்ளிக் கொண்டு போகப் போகிறோம்?’’என்றார்.
’’அஸ்ஸலாமு அலைக்கும் போய் வருகிறேன்’’ என்று போய் விட்டார்.
அன்று காலை பேப்பர் காரருக்கு நான் செய்த உதவியின் பிரதிபலிப்பே இன்று இரவு அந்த தோப்புத்துறை காரரை அல்லாஹ் அனுப்பி உதவி இருக்கிறான்.
புகழ் அனைத்தும் அல்லாவுக்கே.!
இந்நினைவு என் மனம் விட்டு நீங்காத பசுமரத்து ஆணி போல் பதிந்து விட்டது.
S.முஹம்மது ஃபாருக்
12 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்பிற்குரிய ஃபாரூக் மாமா,
ஒரு வரவேற்பு: '
ஞாபகம் வருதே' தொடருக்காக முதற்கண் வரவேற்பு.
ஓர் எதிர்பார்ப்பு:
தங்கள் வாழ்நாட்களில் எத்தனையோ நல்ல விஷயங்கள், தீயவைகள், அனுகூலங்கள், ஏமாற்றங்கள், உபகாரங்கள், துரோகங்கள் என்று அனுபவப்பட்டிருப்பீர்கள். அவற்றில் எங்களுக்கான படிப்பினை இருப்பவற்றைத் தொகுத்து இந்தத் தொடரில் வழங்க வேண்டும்.
ஒரு நன்றி:
தங்கள் அனுபவங்களை தொகுத்து மனமுவர்ந்து எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் தங்களுக்கு அதிரை நிருபர் வாசக வட்டம் சார்பாக நன்றி.
ஒரு துஆ:
இந்தத் தொடரை நீண்ட நெடுந்தொடராகத் தர அல்லாஹ் தங்களுக்கு நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும் தந்தருள்வானாக, ஆமீன்.
இனி, இந்த வார அத்தியாயத்தைப் பற்றி.
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் என்பதற்கொப்ப, இன்னா மட்டுமல்ல இனியவையும் முற்பகல் செய்யும் பிற்பகல் விளையும் என்பதை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.
இதில் வில்லன்களே இல்லாமல் எல்லோரும் நல்லவர்களாகவும் பிறர்க்குதவும் தன்மையினராகவும் இருப்பது மகிழ்வளிக்கிறது.
எந்த ஒரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை இருப்பதெல்லாம் நியூட்டனின் விஞ்ஞானம்.
எந்த ஒரு தவறான வினைக்கும் அதற்கெதிரான அதைப்போன்ற தவறான எதிர்வினை ஆற்றாமல் நந்நயம் செய்துவிடல் மெஞ்ஞானம்.
உதவுவதும் உதவியவர்களை நினைவுகூர்ந்திருப்பதும் இந்த அத்தியாயத்த்கின் படிப்பினை.
ஃபாரூக் மாமா,
உங்கள் எழுத்தை வாசிப்பது எனக்கு இப்படி இருக்கிறது:
சுபுஹூ தொழுகைக்குப்பின் ஈஸிஆரில் ஏரி வரை விரைவாக நடந்து திரும்பி நடக்கும்போது நண்பன் சொல்லி வரும் சுவாரஸ்யமான விஷயங்களைப் போல!
லுகர் தொழுதபின் லஞ்ச்சுக்கு வீட்டுக்குப் போகுமுன் சின்னப் புளிய மர நிழல் மேடையில் நண்பர்களுடனான கலந்துரையாடலைப் போல!
அஸர் ஜமாத்துடன் தொழுத பின் பள்ளிவாசலின் படிக்கட்டுகளில் அமர்ந்து பேசும் மார்க்க விஷயங்களைப்போல, தொடர்ந்து ரயிலடி குளிர் மேடையில் அமர்ந்து அனுபவிக்கும் கடற்காற்றைப் போல!
மஃரிபுக்குப் பிறகு அமர்ந்து செவியுறும் தீன் பேச்சு போல!
இஷா தொழுகைக்குப் பிறகு வீடு போகும்வரை நண்பர்களுடனான அரட்டையைப் போல!
மொத்தத்தில், கோடைகாலத்தில் அப்போதிருந்த ஒரே பெரிய ஜும்ஆ பள்ளியில் ஜும்ஆ தொழுதுவிட்டு வேர்க்க விறுவிறுக்க நடந்து வந்து நூர் கடையருகில் போடப்பட்ட தற்காலிக சர்பத் கடையில் வரிசையிடம் வாங்கிக் குடிக்கும் நீர்மோர் போல!
மேலும்,
பெருநாள் தொழுகை முடிந்து ஆரத்தழுவிச் சொல்லும் முகமன் போல!
மாஷா அல்லாஹ்!
அன்புள்ளமருமகன்சபீர்அபுசாருக்குஅஸ்ஸலாமுஅலைக்குக்கும்.// ஒருஎதிர்பார்ப்பு. உங்கள் வாழ்நாளில் எத்தனையோ நல்லவிசயங்கள் ................துரோகங்கள்// யென வரிசையிற்ற அத்தனையும் நடந்திருக்கிறது. அதையெல்லாம் இன்சா அல்லா எழுதுகிறேன். வாழ்த்துகளுக்கும் ஊக்கத்திற்கும்நன்றி!.
அஸ்ஸலாமுஅலைக்கும்! பாருக்காக்காவின் வாழ்வில் நடந்த பல மனதில் தங்கிய சம்பவங்களை பற்றிய இத்தொடர் ஆரம்பமே மனபுழுக்கத்திற்கு திறந்த சாளரம் போல இருக்கு!இதில் அனுபவத்தின் சுவடு ஆங்காங்கே பதிந்திருக்கு! நல்லமனிதர்களும் இன்னும் இருக்கிறார்கள் என்பது ஆறுதல்!
Assalamu Alaikkum
Dear Uncle,
A good moral contained personal story that motivates to do good for others.
Great people in this world are choosing the privilege of giving to others than getting from others. Its the strategy for becoming rich(not only in money).
Jazakkallah khair
B. Ahamed Ameen from Dubai
அன்புமிக்க ஃபாரூக் மாமா அவர்களுக்கு...
உங்களின் அனுபவத்தை படிக்கும்போது நீங்கள் வைத்திருந்த ஆபீஸ், வேன் எல்லாம் என் கண் முன்னே வந்து நின்றது போல் உள்ளது.
நீங்கள் சொன்ன அந்த மனிதர் [ தோப்புத்துறை ] இப்போது பெரிய ரெஸ்டாரன்ட் வைத்திருக்கிறார் என நினைக்கிறேன். நீங்கள் தங்கியிருந்த பக்கத்தில் உள்ள "வில்லா" வை அன்று பார்த்தேன்..பெயின்ட் எல்லாம் அடித்து சுத்தமாக வைத்திருக்கிறார்கள். நீங்கள்முன்பு இருந்த 2 ஜாலான் அப்துல்லாஹ் இப்போது மாடர்ன் ஸ்டைல் ரெஸ்டாரன்ட் ஆகிவிட்டது.
முன்பு நாம் வேலை பார்க்கும்போது அதே இடத்தில் ஒரு வீடு வாங்க வேண்டும் என நினைப்பேன். இப்போது அந்த இடங்களில் கார் நிறுத்தக்கூட இடம் இல்லாமல் ஒரே கமர்சியல் மயம்.
மாலை வேலை உங்களோடு ஒரு அம்பாசிடர் காரில் கண்ணாடியை இறக்கிவிட்டு [ ஏர்கண்டிசன் இல்லாமல் ] வெளிக்காற்றை உள் வாங்கி
இடை இடையே ஹாரன் சத்தத்துடன் ஈ சி ஆர் ரோட்டில் இலக்கு இல்லாமல் பல ஊர்களைக்கடந்து பேசிக்கொண்டே போய் , திரும்பலாம் என்று முடிவெடுத்தவுடன் ஒரு சாலையோர டீக்கடையில் டீ குடித்து ....இருட்டியயவுடன் வீடு திரும்ப ஆசை.
உடன் சபீரும் / இப்ராஹிம் அன்சாரி அண்ணனும் கூட வந்தால் இன்னும் சுவாரஸ்யம் கூடும்.
பார்ப்போம் ..இறைவன் தான் இதற்கு மனசு வைக்க வேண்டும்.
எளிமை! இனிமை.! மனித குணங்களின் மகத்தான வெளிப்பாடுகள். அருமை.
-------------------------------------------------------------------------------------------------------------
தம்பி ஜாகிர் எனக்கும் அப்படி ஒரு ஆசைதான். இப்படி நானும் பேராசிரியர் அப்துல் காதரும் தம்பி நூர் முகமதும் மரியாதைக்குரிய ஹாஜா முகைதீன் சாரும் பேசிய பொது வெளியான விஷயங்களை நான் எழுதியது நினைவுக்கு வருகிறது.
கடந்த இரண்டு மூன்று மாதங்களுக்கு முன் எங்களது பாட்டனார் வணிகம் செய்த அறந்தாங்கிக்கு மச்சானுடன் சென்று அவர்கள் வைத்திருந்த அரிசி அரவை மில் மற்றும் வாழ்ந்த இடங்களைப் பார்த்து திரும்பினோம். அப்போது எனது வாப்பா அவர்கள் நண்பர்களுடன் இளமையில் அமர்ந்து இருந்த அரசமரத்தைக் காட்டினார்கள். இதயம் இனிமையாக பிசையப்படுவதை உணர்ந்தேன்.
அசை போடுவது ஒரு அழகிய அனுபவம்.
மருமகன்ஜாகிருக்கு.நீஎழுதியஅத்தனைஆசைகளும் கிட்டத்தட்டஓராண்டுகளாக படுக்கையில் படுத்ததும் நெஞ்சுக்குள் வந்துகண்ணீரில்ஈரமாக்குகிறது. //E.C.Rரோட்டில்இலக்குஇல்லாமல்அம்பாஸிடர்காரில்....// அந்த ஆசை எனக்கும்உண்டு.அம்பாஸிடர்காரில்என்னஅதைவிடஉயர்ந்தகார்லே போகலாம்.அல்லாஹ்நாடுவான்.
/நீங்கள்சொன்னஅந்ததோப்புத்துறைமனிதர்பெரியரெஸ்டாரன்ட்வைத்திருக்கிறார்//எனக்குஉதவியவர்இவரின்தம்பி!
//அசைபோடுவதுஒருஅழகியஅனுபவம்// மைத்துனர்இப்ராஹிம்அன்ஸாரிசொன்னது./எனக்குஅசைபோடுவதுஅழகியஆசை.ஆற்றுபேருக்குவற்றியபோதும்அங்கேதோண்டும்ஊற்றுபெருக்கால்வரும்நீர்!மானசீகமாகவரும்மகிழ்ச்சியின்பிம்பம்
//ஆற்றுப் பெருக்கு
வற்றியபோதும்
அங்கே
தோண்டும்போது
தோன்றும்
ஊற்றுப்பெருக்கால்
வரும்நீர்! //
100 likes !
Post a Comment