Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

எந்தப் பாதை உங்கள் பாதை? 5

அதிரைநிருபர் பதிப்பகம் | January 19, 2015 | , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

யாரோ ஒருவர் போட்ட ஒரே பாதையில் காலம் காலமாக பயணம் செய்வதைவிட அதனினும் சிறந்த வேறு ஒரு பாதையை அமைக்கும் மனிதனையே இந்த உலகம் போற்றுகிறது. எந்தப்  பாதையை நீங்கள் பார்த்தாலும் அதை போட்டவரின் அடையாளத்தை அதில் காணலாம். உங்கள் அடையாளத்தை காட்டும் பாதை ஒன்றை நீங்களும் போடலாமே!”


மேற்கண்ட வரிகள் சென்ற நூற்றாண்டின் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த சிறந்த கவிஞரான அந்தோனியோ மச்சாதோ(Antonio Machado) என்பவர் எழுதிய ஒரு கவிதையின் சாரம்.

நம் நாடு சுதந்திரம்  பெறுவதற்கு முன் மூன்றே மூன்று ஆரம்பப்  பள்ளிகள்  மட்டுமே நமது ஊரில் இருந்தன . அவை 

1.     இந்து மாணவர் ஆரம்ப பாட சாலை 
2.     பெண்கள் ஆரம்ப பாட சாலை 
3.     தட்டாரத் தெருவில் இருந்த முஸ்லீம் ஆண்கள் ஆரம்ப பாட சாலை.

இவற்றுள்  இரண்டில் ஒன்றைத்தான்  மாணவர்கள் தேர்ந்தெடுத்துப்  படித்தார்கள். இந்தப்  பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டும் தான் படிக்க முடியும். உயர்நிலைப்  படிப்பு படிக்க விரும்பினால் நம் ஊருக்கு தெற்கே ஆறு அல்லது ஏழு கிலோ மீட்டர் தூரமுள்ள ராஜாமடம் சென்று அங்குள்ள உயர் நிலை பள்ளியில்தான் படிக்க வேண்டும். இப்பொழுது போல் பேருந்து வசதி இல்லாத காலம். அதிகாலையில் பகல் சாப்பாட்டை டிபன் பாக்சில் எடுத்துக்கொண்டு சில மாணவர்கள் நடந்தே சென்று படித்தார்கள். பகல் சாப்பாடு என்பது இன்று போல் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படும் இரட்டை முட்டை போட்ட லாப்பையோ, பாம்பே டோஸ்டோ, சிக்கன் பர்கரோ , சேமியா பிரியாணியோ, வெஜிடபிள் பிரியாணியோ அல்ல. பெரும்பாலும் நீர்ச்சோறு அல்லது பழைய சோறு என்று அழைக்கப்படும் சாப்பாடும் ஒரு துண்டு ஊறுகாய் அல்லது நாலு பச்சை வெங்காயம்தான்.

உயர் கல்வி பெற முடியாத மற்ற மாணவர்கள் கடிதம் எழுதவும் கை எழுத்து போடவும் தெரிந்தால் போதும் என்ற மன நிறைவோடு கல்விக்கு ஒரு முழுக்கு போட்டார்கள். இவர்களுக்கு கடிதம் எழுத கொஞ்சம் தெரியுமே தவிர. ஆங்கில எழுத்தில் அட்ரஸ் எழுதத்  தெரியாது. தமிழே அரைகுறையாக எழுதுவார்கள். ‘ஆண்டவன் துணை செய்வானாகவும்’ என்று எழுதத் தெரியாமல் ‘ஆண்டவன் தூணை செய்வானாகவும்’ என்று  எழுதிய சம்பவங்களும் நடந்தன.   ஐந்தாம் வகுப்பு வரை A B C  என்று தொடங்கும் ஆங்கில அகர வரிசை எழுத்துக்கள் பரம ரகசியமாகவே பாதுகாக்கப்பட்டது. அந்தக்காலத்தில் உயர் நிலைப்  பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்த பின்தான் A B C  யை காணும் பாக்கியம் மாணவர்களுக்குக் கிட்டியது. இப்படி அடிப்படையில் உயர் கல்வி பெறமுடியாத சூழ்நிலைதான் மூட்டை தூக்கிகளாகவும், எடுபிடி வேலை செய்பவர்களாகவும், சமையல்காரர்களாகவும் பிழைப்பு நடத்த மலேயா, சிங்கப்பூர் என்று கடல் கடந்து செல்லக் காரணமானது.

ராஜாமடம் என்ற ஊரையும் அதிராம்பட்டினத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் அதிராம்பட்டினத்தின் ஒரு தெருவுக்குக்  கூட ராஜாமடம் ஈடாகாது. ஆனால் அந்த ஊரில் உயர்நிலைப்  பள்ளி இருந்தது. அந்தப் பள்ளி பனை மரம் போன்றோ அரளிச்  செடி போன்றோ  தானாக முளைக்கவில்லை. கல்வியின் அவசியத்தை உணர்ந்த சிலர் அங்கே வசித்து வந்தார்கள். அவர்கள் அரசின் கதவை தட்டினார்கள்; கதவு திறந்தது;. கேட்டார்கள்; கிடைத்தது.

அன்றைய சூழலில் கல்வியின் மகிமை அறியாதிருந்த நம்மூர் பெரும் தலைகள் கேட்கவில்லை; அதனால் கிடைக்க வில்லை. அதிராம்பட்டினத்தின் வாசிகளான நாம் “ஐந்தே போதும் ஐந்துக்கு மேல் வேண்டவே வேண்டாம்” என்ற சுலோகத்தை சொல்லிக் கொண்டே காலம் கடத்தினோம். பெண்களுக்கு அதுவும் கிடையாது.

எல்லோரும் படித்து முன்னுக்கு வந்தால் நம் V I P அந்தஸ்து போய்விடும் என்ற பயம் ஒரு பக்கம், சபை கூடி “நாயம்” பேசி பரம்பரை பரம்பரையாக நாட்டாமைப்  பட்டத்தை காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போகுமோ என்ற அச்சத்தால் தற்காப்பு நடவடிக்கையாக உயர் கல்விக்கு வழி காணாமல் இருந்தார்கள்.

ஆனால் “எதற்கும் ஒரு காலமுண்டு பொறுத்திரு மகனே”” என்று விஸ்வநாதன் தன் குரலில் பாடிய பாடலை நீங்கள் கேட்டிருக்க கூடும்.

ஆம்! அந்தப் பொறுமையின்  விடியல் 25.06.1949ல் உதித்தது ஒரு வேர் கொண்ட உதய சூரியன்; அதிரை மண்ணில் அது பதித்தது தன் வேர்களை. அந்த நாள் அதிராம்பட்டினத்தில் காதர் மொய்தீன் உயர்நிலை பள்ளியின் பிறந்த நாளாகும். இந்தக் கல்விக் குழந்தையை கரங்களில் ஏந்தி தொட்டிலில் இட்டவர் கண்ணியம் மிக்க காயிதே மில்லத் ஜனாப் முகமது  இஸ்மாயில் சாகிப்  அவர்களாவார்கள்.   அது வேரோடும் கிளையோடும் விழுதோடும் கூடிய ஆலமரம் போல வளர்ந்தது.


அதைத் தொடர்ந்து மற்றும்மொரு நல்ல மரம் நடப்பட்டது. அதுதான் காதர் முகைதீன் கல்லூரியாகும். நட்ட மரங்கள் இரண்டுமே நல்ல மரங்கள். பூத்தன , காய்த்தன, கனிந்தன . இந்தப் பழத் தோட்டத்தை மேலும் சிறப்பாக்க பெண்களுக்கான தனி மேல்  நிலைப் பள்ளியும் தொடங்கப்பட்டது. மாஷா அல்லாஹ்.  

ஆயிரம் ஆயிரம் பறவைகள் வந்து தன் கல்விப்  பசி போக்க கனியுண்டு களித்தன . இளைப்பாற வந்தவர்களுக்கு  நிழல் கொடுத்தது. அது நடுவூரில் பழுத்த நல்ல மரமாக எல்லோர்க்கும் கல்வி எனும் கனி கொடுத்தது. ஆனாலும் வெளியூர் பறவைகள் இந்த மரங்களில் வந்து தங்கி கல்விப் பழம் கொத்திப் பயன் அடைந்ததைப் போல் உள்ளூர்ப் பறவைகள் தேடி வரவில்லை.  


மர்ஹூம் காதர் முகைதீன் அப்பாவின் நன்கொடையை குடத்திலிட்ட விளக்காகவே வைக்காமல் குன்றில் இட்ட தீபமாக மாற்றி பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய மாணவர் மாணவியரின் கல்விக் கண்கள் திறக்க வழி செய்த மர்ஹூம்  S.M.S சேக் ஜலாலுதீன் அவர்களை நாம் மறக்க முடியாது. அல்லாஹ் அவர்களுக்குத்  தன்னிடம் உள்ள நல்லிடத்தை கொடுக்க துஆ செய்வோமாக. காலம் இதை மறந்து விடாது. இது காலம்  காலந்தோறும் பேசப்படும் காதர் முகைதீன் அப்பா விட்டுச்சென்ற அடையாளங்கள். அதற்கு மெருகூட்டி அதை நமது ஊரில் பழுத்த நல்ல மரமாக்கிய மர்ஹூம் S.M.S  சேக் ஜலாலுதீன் அவர்களின் அடையாளங்கள்.

அரசாங்கம் கை கொடுக்காத அதிராம்பட்டினத்துக்கு தனது  வள்ளல்  சிந்தனையால் கல்வி வளம் கொடுத்த மர்ஹூம் காதர் முகைதீன் அப்பா அவர்களின் திரண்ட சொத்தும், மர்ஹூம் சேக் ஜலாலுதீன் அவர்களின் சலிக்காத  உழைப்பும் கல்விக்காகக்  கை கொடுத்தாலும் உள்ளூர்வாசிகள் எந்த அளவுக்கு அவர்களின் மடிகளில் தானாக கனிந்து விழுந்த பழத்தை பயன்படுத்தி வெற்றி கண்டார்கள் என்பது கேள்விக்குறியே. உயர்நிலைப் பள்ளி திறக்கப்பட்டதும், அதில் சேர்ந்து படிப்பதற்கு உள்ளூரில் அவ்வளவு ஆர்வம்  காட்டப்படவில்லை. எனது இளமைப் பருவத்தில் ஐந்தாம் வகுப்பிலிருந்து தேர்வு பெற்றதும் நானும் எனது நண்பர்களும் ஆறாம் வகுப்பில் சேர்ந்து தொடர்ந்து படிப்பதற்காக முயற்சி  செய்தபோது எங்களை ஊக்கப்படுத்துவதற்கு பதிலாக,  ‘என்ன ஹை ஸ்கூலா ? போய் இங்க்லீஷ் படிக்கப் போறியலோ? படிச்சு பெரிய கலெக்டர் ஆயிடுவியலோ?’ என்றெல்லாம் சில பெரிசுகள் நையாண்டி செய்தன. அதில் ஒருவர் எங்களை நோக்கிக் கேட்ட கேள்வியும் அதற்கு நான் சொன்ன பதிலும் எனது நினைவுப் பதிவேடுகளில் இன்னும் உள்ளன. 

சின்னப் புளிய மரம். இது கடற்கரைத் தெருவின்  போதி மரம்  அல்ல. வம்பு பேசுவோர் வலிய வந்து கூடும் மடம். மலேசியாவிலிருந்து விடுமுறையில் வருபவர்கள்  கூடி தாயக்கட்டை, ஆடுபுலி ஆட ஒன்று கூடும் இடம். அத்துடன் அடுத்தவன் வீட்டில் அம்மி நகருதா ஆட்டுக்கல் நகருதா என்ற  ஊர் ‘பசாது’ களுக்கும் அங்குக்  குறைவு இருக்காது.

அன்றொருநாள் நானும் என்னுடன் புதிதாக உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தவர்களும் ஒன்றாக பள்ளிக்கு நடந்து போய்க்கொண்டு இருந்தோம். (அன்றெல்லாம் ஹீரோ ஹோண்டா பைக்கும் இல்லை; அதை வாங்கித்தர அன்றைய வாப்பாமார்களுக்கு வசதியும் இல்லை). அப்படிப் போய்க் கொண்டு இருக்கும்போது  தெருவின் முக்கியஸ்தர் எங்களைத் தடுத்து நையாண்டித் தொனியில், “ நீ யார் மவன்டா? எத்தனாவது படிக்கிறே? “     என்று கேட்டார். என் நண்பர்கள் பதில் சொன்னார்கள். நானும் சொன்னேன். “ அது சரி இங்க்லீஷ் படிக்கிறியளே! பலாச்சுளைக்கு இங்க்லீஷில் எப்புடிச்  சொல்லணும்? தெரியுமா?” என்று கேட்டார். உண்மையில் எங்களில் யாருக்கும் இதற்கு விடை தெரியாது. எனது நண்பர்கள் தெரியாது தெரியாது என்று சொல்லிவிட்டார்கள். கேலிச் சிரிப்புடன் அவர் என்னிடமும் கேட்டார். ஏற்கனவே பள்ளிக்கு நேரமாகிவிட்டது . இந்த வெட்டிக்குளத்துக்கு   அருகில் வெட்டியாக உட்கார்ந்து கொண்டு  எங்களை வேதனைப் படுத்தும் அந்தப் பெரிய மனுஷனுக்கு ஒரு நோஸ்கட் கொடுக்க வேண்டுமென்று எண்ணி  நான் பதில் சொன்னேன். “ பலாச்சுளைக்கு இங்க்லீஷ் என்னன்னு  நான் லண்டனுக்குப் போயி,  பலா  பழம் வியாபாரம் செய்யும் போது பலா பழத்திற்கு இங்கிலிஷில் எப்படி சொல்வதென்று தெரிந்து கொள்கிறேன். 

இப்போ நாங்க ஸ்கூலுக்குப்  போகனும்  “ என்று அந்தப் பெரியவரிடம் சொல்லிவிட்டு விறு விறு என்று நடையைக் கட்டினேன்.     இது பற்றி அவர் என் மாமா இடம்  புகார் செய்ததாக பின்பு கேள்விப்பட்டேன். இப்படியெல்லாம் படிப்புக்குத் தடை செய்பவர்கள் இருந்தார்கள். இதற்குக் காரணம் அடிப்படையில் நமது ஊரார் சாய்ந்தால் சாயுற பக்கக் கொள்கைகளையும், செக்குமாடு சித்தாந்தத்தையும் கடைப்பிடித்து வந்ததே. புகைவண்டி நிலையத்தையே நமதூருக்குள் வேண்டாம் தூரமாகப் போகட்டும் என்று ஊரைவிட்டு தூரமாக  ஒதுக்கியவர்களாயிற்றே . ஆரம்பத்தில் இன்றுள்ள வண்டிப் பேட்டையில்தான் நமதூரின் ரயில் நிலையம் அமைய இருந்ததாம்.

பிற்காலங்களில் கூட நமது ஊர்க்  கல்லூரியில் இருந்த பட்டப் படிப்புகளின் பாடப்பிரிவுகளையே சென்னை, திருச்சி போன்ற  வெளியூர்க் கல்லூரிகளில் சேர்ந்து படித்த நம்மூர்வாசிகளின் பிள்ளைகள் ஏராளம். அதற்கு சொல்லப்பட்ட காரணம் அதிராம்பட்டினத்தில் படித்தால் இங்க்லீஷ் டெவலப் ஆகாது என்பதே. ஆனால் உற்று நோக்கினால் அதிரையிலே பிறந்து அதிரையிலேயே படித்து வளர்ந்தவர்கள்தான் பேராசிரியர்களாகவும் தலைமை ஆசிரியர்களாகவும் பரிணமித்தார்கள். வெளியூர்க் கல்லூரிகளில் போய் படித்தவர்கள் அவ்வளவாக பிரகாசிக்கவில்லை.

இன்றைக்கு நமதூரில் பெண்களுக்கிடையில் நல்ல கல்வி விழிப்புணர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. பல பெண்கள் நமது கல்லூரியிலும், பள்ளிகளிலும் படித்து வருகிறார்கள். வள்ளல் காதர் முகைதீன் அப்பா அவர்கள் போட்ட கல்விப்  பாதையே இதற்குக் காரணம்.  இதேபோல் திருச்சியில் மர்ஹூம் ஜமால் முகமது அவர்களும் உத்தம பாளையத்தில் ஹாஜி கருத்த ராவுத்தர் அப்பா அவர்களும் மேல்விஷாரத்தில் வள்ளல் 'அப்துல் ஹக்கீம்' அவர்களும் தங்கள் தாங்கள் ஊர்களின்  கல்விப் பாதையை கருணை உள்ளத்துடன் போட்டு இந்த சமுதாயத்துக்கு நல்வழி காட்டினார்கள். இந்த மேன்மையான மக்களுக்காக நாம் து ஆச்செய்வோம்.   

அதுபோல் நீங்களும் ஒரு நல்ல பாதை போட்டு அதில் உங்களின் அடையாளத்தை பதிக்க வேண்டும் என்ற வேட்கையில் நான் ஸ்பெயின் நாட்டு கவிஞர் அந்தோனியோ மச்சாதொவின் கவிதை வரிகளை ஆரம்பத்தில் எடுத்து காட்டினேன். உங்களுக்குப்  பின் உங்கள் அடையாளத்தை உலகில் பதிக்க நீங்கள் ஒரு பாதை போட வேண்டும். 

எந்தப் பாதை உங்கள் பாதை?. 

முகமது பாரூக்

5 Responses So Far:

sabeer.abushahruk said...

நல்ல வழிகாட்டல்.

கல்விகற்க கஷ்டப்பட்டதை கேட்கவே கஷ்டமாக இருக்கிறது.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா ஃபாரூக் மாமா.

Unknown said...

Assalamu Alaikkum

Dear Uncle,

Nice article starting with a nice quote.

Every child is born with a potential to learn and develop as a great individual. Its based on how an individual think for himself(choosing own unique path) and intend to live extraordinary live.

Thanks a lot an interesting education oriented article.

Expecting more of your experienced thoughts.

Jazakkallah khair

B. Ahamed Amee from Dubai.

Unknown said...

//மேல்விஷாரத்தில் வள்ளல் அப்துல் ரஹீம் அவர்களும்//

அப்துல் ரஹீமில்லை. 'அப்துல் ஹக்கீம்.'

கல்வி விழிப்புணர்வுக்கு ஏற்ற கட்டுரை.

Anonymous said...

//மேல்விஷாரத்தில் வள்ளல் அப்துல் ரஹீம் அவர்களும்//

அப்துல் ரஹீமில்லை. 'அப்துல் ஹக்கீம்.'//

திருத்தம் பதிக்கப்பட்டு விட்டது...

ஜஸாக்கல்லாஹ் ஹைரன் !

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு