Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

16

அதிரைநிருபர் பதிப்பகம் | January 24, 2015 | , , ,

தொடர் பகுதி - இருபத்து நான்கு


மாதரார் தங்கள் மகளென்று பார்த்திருக்க - மாப்பிள்ளை முன் வந்து மணவறையில் காத்திருக்க - காதலாள் மெல்லக் கால் பார்த்து நடந்து வர – கன்னி இளம் கையில் கட்டி வைத்த மாலை தர - காளைத் திருக்கரத்தில் கனகமணிச் சரம் ஜொலிக்க- ஆனந்தம் பாடு என்று ஆன்றோர் குரல் ஒலிக்க – கொட்டியது மேளம்! குவிந்தது கோடி மலர்! கட்டினான் மாங்கல்யம் ! என்று கவியரசு கண்ணதாசன் ஒரு திருமணத்தை வர்ணித்துக் காட்டுவார்.

அதே போல அரபுகள் ஆவென்று வாய்பிளக்க- உலக நல்லோர்கள் ஓவென்று ஓலமிட- பாதகச் செயல்களை, படைத்தவன் பொறுமையாய்ப் பார்த்திருக்க- பாலஸ்தீனத்தின் மண்ணின் துகள்களோடு ‘செம்புலப் பெயல் நீர்போல அன்புடன்’ கலந்து நின்ற அரபுகள் அகதிகளாய் மூட்டை கட்ட- ‘கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில் வை’ என்று ஐக்கிய நாடுகள் சபை இஸ்ரேலை தனிநாடாக அறிவித்து உலகுக்கு அறிமுகம் செய்துவைத்தது.

ஹிட்லரின் கொலை முகாம்களில் இருந்து தப்பித்து வந்த யூதர்கள் ஏற்கனவே பாலஸ்தீனத்தில் குவிந்து கூடத் தொடங்கி இருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் இந்த அறிவிப்பு இளைப்பாறுதல் தந்தது.

வரலாற்றின் சுவடிகளில் பல வடுக்களை ஏற்படுத்தக் காரணமான இந்த தனிநாடு அமைப்புக்குப் பின்னால் இஸ்லாத்துக்கெதிராகவும் அரபு மக்களுக்கெதிராகவும் அமைந்திருந்த சதிவலைகளின் இழைகளை நாம் இந்த இடத்தில் சுட்டிக் காட்டக் கடமைப் பட்டு இருக்கிறோம்.

கி.மு என்று குறிப்பிடப்படுகிற கிறிஸ்து பிறப்பதற்கு முன்பிருந்தே வரலாற்று ரீதியான பகைமை என்று பார்த்தால் அது யூதர்கள் மற்றும் கிருத்தவர்களுக்கு இடையிலேதான் இருந்து வந்தது. கிருத்துவத்தை யூதர்கள் இழிவு படுத்திய நிகழ்வுகளை வரலாற்றின் வழிநெடுக நாம் காண முடியும். அதேபோல் யூதர்களை கிருத்துவர்கள் கொன்றொழித்த வரலாறுகளையும் நாம் காண முடியும். யூதர்களை தங்களின் நாடுகளில் வைத்திருப்பது ஆபத்து என்று ஐரோப்பிய கிருத்தவ நாடுகள் யூதர்களைப் பொட்டலம் கட்டி வெளியேற்றிய நிகழ்வுகளையும் ஏற்கனவே நாம் குறிப்பிட்டு இருக்கிறோம்.

ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்தவரை யூதர்களை கண்ணியப்படுத்தியே வந்திருக்கிறது என்பதை நாம் காண முடியும்.

எந்த மனிதனுக்கும் பிறப்பிலேயே மேன்மை அல்லது இழிவு என்பது மனதை பாதிக்கும் விஷயமாகும். ஒரு தனி மனிதனை இழிவாகப் பிறந்தவன் எனபது அவனது தன்மானத்தையும் சுய மரியாதையையும் சுரண்டிப்பார்க்கும் செயலாகும்.

இதோ இந்த ஐரோப்பியர்கள் இன்று கொடி தூக்கும் இந்த யூதர்கள், ஹஜரத் ஈசா நபி ( அலை) அவர்கள் பிறந்த பொழுது அவர்களின் பிறப்பை கேவலப்படுத்தி அவதூறுகளைக் கிளப்பினார்கள். ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ் தனது திருமறையில் ஹஜரத் ஈஸா நபி (அலை) அவர்களின் பிறப்பை மேன்மைப்படுத்தி தொட்டில் குழந்தையாக இருந்த ஈசா நபி(அலை) அவர்களையே தனது அருளால் பேசவைத்து தன் மீது யூதர்களால் ஏவப்பட்ட பிறப்பின் இழிவையும் அவதூறையும் தானே துடைத்தெறிந்த நிகழ்வை சூரா மரியத்தில் காண்கிறோம்.

அதே போல ஹஜரத் ஈசா நபி ( ஸல்) அவர்களைக் கைது செய்து தலையில் முள் கிரீடம் சூட்டி சிலுவையை சுமக்கவைத்து சாட்டையால் அடித்துக் காறி உமிழ்ந்த யூதர்களின் கூற்றை மறுத்து, யூதர்கள் கைது செய்ததும் சிலுவையை சுமக்க வைத்ததும் சிலுவையில் அறையப்பட்டதும் யூதர்கள் ஈசா நபி ( ஸல்) அவர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த அவர்களைப் போன்ற ஒருவர்தானே தவிர அல்லாஹ் ஈசா நபி ( ஸல்) அவர்களை தன்னளவில் காப்பாற்றி உயர்த்திக் கொண்டான் என்பதுடன் மீண்டும் அவர்கள் உலகுக்கு வருவார்கள் , தனக்கு இழிவு ஏற்படுத்திய சிலுவையை உடைப்பார்கள் , தஜ்ஜாலை அழிப்பார்கள் என்பதும்தான் ஹஜரத் ஈசா நபி ( ஸல்) அவர்களைப் பெருமைப் படுத்தி இறைவன் மற்றும் அவனது அருள் தூதர் பெருமானார் ( ஸல் ) அவர்கள் அளித்திருக்கும் வார்த்தைப்பாடுகள். முஸ்லிம்கள் தங்களின் ஈமானின் ஒருபகுதியாக நம்பும் இத்தகைய செயல்கள் இஸ்லாத்தின் நாடி நரம்புகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன.

ஆனால், யாரை முஸ்லிம்கள் புனிதப் படுத்துகிறார்களோ அந்த இயேசு கிறிஸ்து என்றும் தேவகுமாரன் என்றும் கிருத்தவர்களால் சொல்லப்படும் ஈசா நபி ( ஸல்) அவர்களை பலவகைகளிலும் இழிவு படுத்தியவர்கள்தான் யூதர்கள்.

கிருத்தவர்களால் கொண்டாடப்படும் இயேசு கிருஸ்துவை பெருமைப்படுத்திய முஸ்லிம்களை அனாதரவாக்கி விட்டு இயேசு கிருஸ்துவை அவர்களின் பிறப்பு முதல் இறப்புவரை கேவலப்படுத்திய யூதர்களுக்கு , அரசியல் ரீதியாக உதவிகள் பல செய்து முஸ்லிம்கள் வாழ்ந்து வந்த இடங்களைப் பிடுங்கி யூதர்களிடம் கொடுக்க ஐரோப்பிய மற்றும் அமெரிக்க கிருத்துவ நாடுகள் முன்னணியில் நின்றன என்றால் அதன் காரணங்கள் யாவையாக இருக்கும் என்று நாம் சிந்திக்க வேண்டும்.

இன்னொரு வரலாற்று நிகழ்வையும் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறோம். பெருமானார் ( ஸல்) அவர்கள் மக்காவில் வாழ்ந்த காலத்தில் அவர்களுக்கு நபித்துவம் வழங்கப்பட்டபின் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரு சின்னஞ்சிறு முஸ்லிம்களின் கூட்டம் தாங்கள் ஏற்றுக் கொண்ட ஓரிறைக் கொள்கையை எதிர்த்து தங்கள் முன்னால் குத்தீட்டிகளை நீட்டிய குறைஷிகளின் கொடுமைகளில் இருந்து தப்பித்து அபிஷீனிய நாட்டுக்கு அகதிகளாக ஹிஜ்ரத் செய்தார்கள். அவ்வாறு ஹிஜ்ரத் செய்தவர்களை திருப்பிக் கட்டி இழுத்துவர மக்காவிலிருந்து குறைஷிகள் ஒரு தூதுக்குழுவை அனுப்பி வைத்தார்கள். அந்தத் தூதுக் குழுவினர் அபிஷீனிய நாட்டின் அரசர் நஜ்ஜாஷி அவர்களின் அவையில், மலைஎனப் பரிசுப் பொருள்களைக் கொட்டி அகதிகளைத் தங்களுடன் திருப்பி அனுப்பும்படிக் கோரினார்கள். அகதிகளாக வந்த முஸ்லிம்களை தனது அவைக்கு அழைத்த நஜ்ஜாஷி மன்னர், அவர்களை விசாரித்தபோது பெருமானார் ( ஸல்) அவர்களின் தூதுத்துவத்தையும் இறைவன் வஹி மூலம் தனது வார்த்தைகளை வழங்குவதையும் எடுத்துச் சொன்னார்கள். அப்படி வழங்கப்பட்ட திருமறையின் சில வசனங்களை ஓதிக் காட்டும்படி சொன்னதற்கு சூரா மரியத்திலிருந்து ஓதப்பட்ட வசனங்களைக் கேட்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்த மன்னர் நஜ்ஜாஷி அந்த இறை வசனங்கள் யாவும் உண்மை என்றும் அவை கிருத்தவர்களின் நம்பிக்கையை மெய்ப்படுத்துகின்றன என்றும் கூறி அகதிகளாக வந்த முஸ்லிம்களை திருப்பி அனுப்ப மறுத்து பரிசுப் பொருட்களை பொட்டலம் கட்டி குறைஷிகளில் முகத்தில் தூக்கி வீசினார். பின்னொரு நல்ல நாளில் நஜ்ஜாஷி மன்னர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என்பதும் சரித்திரம்.

அதே போல் யூதர்கள் இறைவனைத் தொழுத ஜெருசலம் இருந்த திசை நோக்கியே பெருமானார் ( ஸல் ) அவர்களும் சஹாபாக்களும் இறைவனின் திசை மாற்றல் உத்தரவு வரும்வரை தொழுது கொண்டிருந்தார்கள் என்பதையும் , தவ்ராத் வேதத்தில் கூறப்பட்ட விதி முறைகளின் அடிப்படையிலேயே யூதர்கள் நோன்பு நோற்ற நாட்களிலும் அத்துடன் ஒருநாள் கூடுதலாகவும் நோன்பு நோற்றார்கள் என்றும் யூதர்களின் நம்பிக்கையை கண்ணியப்படுத்தியக் காட்சிகளையும் காண்கிறோம். பெருமானார் ( ஸல் ) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து வந்ததற்குப் பிறகு , யூதர்களுடன் பல அம்சங்கள் கொண்ட சமாதான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை செய்துகொண்டதையும் காண்கிறோம்.

இதுபோல பல சான்றுகள் மூலம் கிருத்துவத்தை மட்டுமல்ல யூதர்களையும் இஸ்லாம் கண்ணியப்படுத்திய வரலாறெல்லாம் இஸ்ரேலை உருவாக்கிக் கொடுத்த ஐரோப்பிய அமெரிக்க கிருத்தவர்களுக்குத் தெரியாமலா இருந்தது?

அவர்களுக்குத்தெரியும். ஆனால் பொருளாதார ஆதிக்கப் போட்டி நிறைந்த இந்த உலகில் இஸ்லாத்தைப் பரவவிட்டால் தங்களுக்குக் கொட்டிக் கொடுக்கும் வட்டித்தொழில் நசிந்துவிடும்; தங்களது மதுபானத் தொழில் ஒழிக்கப்படும்; தங்களின் சூதாட்டங்களுக்குத் தடை வரும்; தங்களது வணிக ஏகபோகங்களை இஸ்லாம் ஏப்பம் விட்டுவிடும் என்றெல்லாம் எண்ணித்தான், யூதர்களைப் பகடைக் காயாகப் பயன்படுத்தி இஸ்லாம் தழைத்தோங்கி வேர்விட்டு வளர்ந்த அரபு நாடுகளுக்கு மத்தியில் இஸ்ரேல் என்ற நாட்டை ஈன்றெடுத்துக் கொடுத்தார்கள். ஐந்து நேரங்களிலும் அல்லாஹு அக்பர் முழங்கும் அராபிய பூமியில் உலகமே ஒதுக்கித் தள்ளிய குப்பைகளை கொலுமண்டபத்தில் ஏற்றினார்கள்.

அதுமட்டுமா காரணம்? குணத்தால் கொடியவர்களென்று படைத்த இறைவனால் பட்டம் சூட்டப்பட்ட யூதர்களை தங்கள் நாட்டில் வைத்துக் கொள்ள விரும்பாத ஐரோப்பிய நாடுகள் அவர்களை அப்படியே விட்டு விட்டால் தங்கள் நாடுகளில் தங்கிவிடக்கூடும் அதற்கு இடம் தரக் கூடாது என்றே தனிநாடு என்ற ஒற்றை ஆசைகாட்டி யூதர்களைப் புறந்தள்ளவே அந்நாடுகள் ஒன்றிணைந்து இஸ்ரேலை உருவாக்கின என்ற ஒரு கருத்தும் உலகின் அரசியல் அரங்கில் நிலவுகிறது.

இப்படிப்பட்ட உள்நோக்கம் கொண்ட இஸ்லாத்துக்கு எதிரான உலக நாடுகள்தான் பரம்பரைப் பகைவர்களுக்கு மத்தியில் இஸ்ரேல் என்கிற சவலைப் பிள்ளைக்கு சக்திவாய்ந்த சகல ஆயுதங்களையும் கொடுத்து அந்த நாட்டை சகலகலாவல்லவனாக மாற்றிவைத்து படம் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இஸ்ரேல் உருவான பிறகு மனித குலத்துக்கு எதிராக நடக்கும் அத்துமீறல்களை எதிர்த்துப் பேச ஐ. நா . சபைக்கு நா இல்லாமல், வல்லரசுகளுக்கு முன்னால் ஒரு நாயைப் போல நாவைத் தொங்கப் போட்டுக் கொண்டு இருக்கிறது.

எப்படியோ, இஸ்ரேல் உருவாகிவிட்டது; மண்ணின் மைந்தர்கள் ஆன முஸ்லிம்கள் ஒடுக்கப்பட்டார்கள்; அன்றாடம் துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள்; ஆனால் தங்களின் மண் மட்டும் அவர்களின் கண்ணை விட்டும் கருத்தைவிட்டும் போகவில்லை. தாங்கள் அனுபவிக்கும் அத்தனை துன்பங்களுக்கிடையிலும் தங்களின் பாலஸ்தீன மண்ணை அவர்கள் துறந்து தாங்களாக ஒருபோதும் வெளியேறவில்லை.

இன்று உலகம் கண்டு வரும் எண்ணற்ற அரசியல் பிரச்னைகளுக்கு இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டதும் – அந்த நாட்டில் பிறந்து வாழ்ந்த அரபு மக்கள் அன்னியர்கள் போல ஆக்கப்பட்டு காஸா போன்ற ஒரு இடத்தில் ஓரங்கட்டப்பட்டதும் அடிப்படைக் காரணங்கள் என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். அகில உலகத்தின் அரசியல் முடிச்சின் முனை , எங்கே சுற்றினாலும் அது பாலஸ்தீனத்தில்தான் கிடைக்கும்; அவிழும்.

முஸ்லிம்களாகிய பாலஸ்தீனியர்களை நாம் வென்று விட்டோம்; வெளியேற்றி விட்டோம்; அகதிகளாக ஆக்கிவிட்டோம்; அன்றாட வாழ்வுக்கு அலைபாய வைத்துவிட்டோம் என்றெல்லாம் இஸ்ரேலும் மேற்கத்திய நாடுகளும் மகிழ்ச்சியில் மல்லாந்து கொண்டு மனப்பால் குடிக்க வேண்டாம்.

இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டது என்பது அரசியல் மைதானத்தில் விளையாடும் ஒரு விளையாட்டல்ல . இவர்களின் இந்தச் செயல் ஒரு வரலாற்று துரோகம் என்பதும் அதையும் விட மேலாக இவ்வுலகைப் படைத்து பரிபாலித்துவரும் இறைவனோடு இவர்கள் விளையாடும் விபரீத விளையாட்டு என்பதை ஐரோப்பிய அமெரிக்க கிருத்தவ நாடுகள் உணரும் காலம் வந்தே தீரும்.

ஒருவேளை வல்லரசுகள், தங்களின் இந்தச் செயலை ஒரு விளையாட்டு என்றே எடுத்துக் கொண்டாலும் இந்த விளையாட்டின் முதல் பாதியைத்தான் இன்றைய உலகம் கண்டு வருகிறது. முதல் பாதியை அமெரிக்காவும் ஐரோப்பாவும் கிருத்துவ யூதக் கூட்டணி என்கிற அவர்களின் தவறான உறவில் பிறந்த இஸ்ரேலும் வென்றிருக்கலாம். ஆனால், ஆட்டத்தின் அடுத்த பாதியை ஆக்ரமித்து ஆடப்போவது அல்லாஹு சுபஹானத்துல்லாஹ்தான் . அதுவே இறுதி வெற்றி. அதுவரை உலகம் அவசரப் படாமல் இருக்கட்டும். ஒரு காலம் வரும் ; இந்தக் காக்கைகள் கூட்டம் ஒழியும் .

அல்லலுற்று ஆற்றாது அழுத கண்ணீர் செல்வத்தைத் தேய்க்கும் படையல்லவா?

மேற்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதாரப் பெருமுதலைகள் என்கிற பூர்ஷ்வாக்களின் வளர்ச்சி, அவர்களில் பலர் யூத விந்தணுக்களின் வித்தைகளுக்குப் பிறந்தவர்கள் என்கிற உணர்வு, கிழக்கு ஐரோப்பாவில் நீடித்து வந்த நிலபிரபுத்துவம், ரஷ்யாவில் ஏற்பட்ட மாற்றங்கள், இரு உலகப் போர்களிலும் ஜெர்மனியின் தோல்வி, அதனால் திணிக்கப்பட்ட ஒப்பந்தம் , புதிதாக வல்லரசாக உருவெடுத்த அமெரிக்காவின் எழுச்சி ஆகிய அரசியல் காரணிகளே இஸ்ரேல் உருவாகவும் இன்று அரபு உலகை ஆட்டிப் படைக்கவும் காரணங்களாயின.

ஒரு விஷயத்தை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இரண்டாம் உலகப் போரின் மையப் புள்ளி ஜெர்மனிதான். போரைத் தூண்டியதும் போரை ஆரம்பித்ததும் ஜெர்மனிதான். ஆனால் போரை முடிவுக்குக் கொண்டு வந்த அணுகுண்டுகள் நியாயமாக ஜெர்மனியின் மீதுதானே வீசப்பட்டு இருக்க வேண்டும்? ஆனால் எங்கே வீசப்பட்டன ? ஜப்பானிய நகரங்களின் மீதுதானே வீசப்பட்டன? ஏன்?

ஏனென்றால் ஜெர்மனி ஒரு கிருத்துவ நாடு . ஜெர்மனியை சுற்றி உள்ள இதர ஐரோப்பிய நாடுகளும் கிருத்தவ மதத்தைப் பின்பற்றும் நாடுகள். ஆனால் ஜப்பான் பின்பற்றுவதோ புத்த மதத்தை. ஆகவே Blood is thicker than Water என்ற அடிப்படையில் அழிந்தால் ஜப்பான் அழியட்டுமென்று ஜப்பான் மீது அணுகுண்டுகள் அமெரிக்காவால் வீசப்பட்டன. எதிரிகளாக இருந்தாலும் கிருத்தவர்கள் அமெரிக்காவால் காப்பாற்றப்பட்டார்கள். அமெரிக்கா வீசிய அணுகுண்டுகளின் அனல் காற்று இன்றுவரை ஜப்பானில் வீசிக் கொண்டிருக்கிறது.

ஆனால் நண்பர்களே! நன்கு அறிந்து கொள்ளுங்கள் இந்த அரசியல் காரணங்கள் அனைத்தையும் மீறி அகிலத்தை படைத்த அல்லாஹு உடைய ஆன்மீகக் காரணங்கள் உலகில் இறக்கப்படும்போது , இஸ்ரேல் மீது இரக்கப்பட யாரும் இன்றி இந்த அரசியல் காரணங்கள் அனைத்தும் தலை குப்புறப் புரட்டப்படும். யூதர்களுக்குப் பாடம் புகட்டப்படும். இப்படிப் புரட்டப் போகிறவனும் புகட்டப்போகிறவனும் அவனோ இவனோ அல்ல. அல்லாஹ்! ஆம்! அல்லாஹ்!

இந்த நிலைமைகளுக்கான பல செய்திகளை ஆதாரங்களோடு இறைவனின் திருமறை எடுத்துச் சொல்கிறது. இறைவனின் அருள் தூதரும் நிறையவே மொழிந்து இருப்பதன் பதிவுகள் அறிஞர் பெருமக்களால் ஆய்ந்து தரப்பட்டு இருக்கின்றன.

அவைகள்?

இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம்.

இபுராஹீம் அன்சாரி

16 Responses So Far:

Muhammad abubacker ( LMS ) said...

,அஸ்ஸலாமு அலைக்கும்

கல் வெட்டில் பொறிக்கப்பட வேண்டிய வரலாறுகள்.

Muhammad abubacker ( LMS ) said...
This comment has been removed by the author.
sheikdawoodmohamedfarook said...

வஞ்சகத்தில்வந்தவாழ்வுகொஞ்சநேரமே; இறுதியில்நின்றுநிலைப்பது உண்மைமட்டுமே. சோகமும் சூழ்ச்சியும்பிண்ணிய வரலாற்றை காவியம் போல்சொல்லும்நடைக்குஆயிரம்சல்யூட்.

Ebrahim Ansari said...

தம்பி எல் எம் எஸ் அபுபக்கர்.
அவர்களுக்கு வ அலைக்குமுஸ் சலாம்.
ஜசாக்கலாஹ் . எதிர்பார்த்தபடி முதல் கருத்து தங்களுடையதே.

ZAKIR HUSSAIN said...

//இஸ்ரேல் மீது இரக்கப்பட யாரும் இன்றி இந்த அரசியல் காரணங்கள் அனைத்தும் தலை குப்புறப் புரட்டப்படும். யூதர்களுக்குப் பாடம் புகட்டப்படும். இப்படிப் புரட்டப் போகிறவனும் புகட்டப்போகிறவனும் அவனோ இவனோ அல்ல. அல்லாஹ்! ஆம்! அல்லாஹ்!//

அப்போது நிறைய பேர் இஸ்லாத்திற்கு வருவார்கள்...தாய் மதத்துக்கு வா...ஒன்னு விட்ட கொழுந்தியா மதத்துக்கு வா என்று அழைப்பவர்களும் சேர்ந்து..

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய காக்கா,

ஒவ்வொரு வரலாற்று நிகழ்வுகளையும் காரம் குறையாமல் எவ்வளவு அழகாகச் சுருக்கிச் சொல்லிக்காட்டுகிறீர்கள்! மாஷா அல்லாஹ்!!!

உலகளாவிய சதிகளையும் அரசியல் சாணக்கியத்தையும் சொல்லும்போது பிரமிப்பாய் இருக்கிறது; துரோகங்களையும் ஏமாற்றங்களையும் சொல்லும்போது பாதிக்கப்பட்டவர்கள்மீது இரக்கமும் பச்சாதாபமும் ஏற்படுகிறது; போர்களைச் சொல்லும்போது மயிர்க்கூச்சரிகிறது; இனி என்ன எனும்போது ஆர்வம் மேலிடுகிறது!

முதல் தரமான எழுத்தை வாசிக்கும் வாய்ப்பை எமக்கு அளித்துவரும் தங்களுக்கு
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா!

sabeer.abushahruk said...

//அரபுகள் ஆவென்று வாய்பிளக்க- உலக நல்லோர்கள் ஓவென்று ஓலமிட- பாதகச் செயல்களை, படைத்தவன் பொறுமையாய்ப் பார்த்திருக்க- பாலஸ்தீனத்தின் மண்ணின் துகள்களோடு ‘செம்புலப் பெயல் நீர்போல அன்புடன்’ கலந்து நின்ற அரபுகள் அகதிகளாய் மூட்டை கட்ட- ‘கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில் வை’ என்று ஐக்கிய நாடுகள் சபை இஸ்ரேலை தனிநாடாக அறிவித்து உலகுக்கு அறிமுகம் செய்துவைத்தது.//

உண்மையிலேயே இந்தப் பாதகச் செயல் எண்ணி வேதனையும் கோபமும் வந்தாலும் தங்கள் உவமானமும் வர்ணனையும் புன்னகையில் துவங்கி சிரிப்பில் முடிந்தது.

இது தானாகவே வந்து விழுந்தவை எனில் நீங்கள் பிறவிச் சிந்தனையாளர்/எழுத்தாளர். யோசித்து எழுதியவை எனில் தாங்கள் பக்குவப்பட்ட இலக்கியவாதி.

யார் நீங்கள், காக்கா?

sabeer.abushahruk said...

//உள்நோக்கம் கொண்ட இஸ்லாத்துக்கு எதிரான உலக நாடுகள்தான் பரம்பரைப் பகைவர்களுக்கு மத்தியில் இஸ்ரேல் என்கிற சவலைப் பிள்ளைக்கு சக்திவாய்ந்த சகல ஆயுதங்களையும் கொடுத்து அந்த நாட்டை சகலகலாவல்லவனாக மாற்றிவைத்து படம் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இஸ்ரேல் உருவான பிறகு மனித குலத்துக்கு எதிராக நடக்கும் அத்துமீறல்களை எதிர்த்துப் பேச ஐ. நா . சபைக்கு நா இல்லாமல், வல்லரசுகளுக்கு முன்னால் ஒரு நாயைப் போல நாவைத் தொங்கப் போட்டுக் கொண்டு இருக்கிறது.//

இது சவுக்கடி அல்ல; அதுக்கும் மேலே

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பிற்கினிய இப்ராஹிம் அன்சாரி காக்கா, தங்களின் தொடர் ஆக்கங்கள் சிலவற்றை நெடுநாட்களுக்குப் பிறகு இன்று வாசித்தேன். அல்ஹம்துலில்லாஹ். வரலாற்றுக் கலஞ்சியம் அவை.

தங்களின் எழுத்துகள் முஸ்லிம்கள் மட்டுமின்றி பிறமத வாசகர்களையும் ஈர்க்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஜஷாக்கல்லாஹ்.

தொடர்ந்து எழுத அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் நோயற்ற வாழ்வையும் வழங்கப் பிரார்த்திக்கிறேன்.

அன்புடன்,
N.ஜமாலுதீன்

Shameed said...

//ஏனென்றால் ஜெர்மனி ஒரு கிருத்துவ நாடு . ஜெர்மனியை சுற்றி உள்ள இதர ஐரோப்பிய நாடுகளும் கிருத்தவ மதத்தைப் பின்பற்றும் நாடுகள். ஆனால் ஜப்பான் பின்பற்றுவதோ புத்த மதத்தை. ஆகவே Blood is thicker than Water என்ற அடிப்படையில் அழிந்தால் ஜப்பான் அழியட்டுமென்று ஜப்பான் மீது அணுகுண்டுகள் அமெரிக்காவால் வீசப்பட்டன. எதிரிகளாக இருந்தாலும் கிருத்தவர்கள் அமெரிக்காவால் காப்பாற்றப்பட்டார்கள். அமெரிக்கா வீசிய அணுகுண்டுகளின் அனல் காற்று இன்றுவரை ஜப்பானில் வீசிக் கொண்டிருக்கிறது.//

கட்டுரையின் கருத்துக்கள் சிந்திக்க வைக்கின்றது

sheikdawoodmohamedfarook said...

ரெம்போநாளாஎனக்கொருசந்தேகம்!சைக்கில்டயர்வெடித்தாலும்பலூன் வெடித்தாலும்''இஸ்லாமியபயங்கரவாதிகுண்டுவைத்துவிட்டான்''என்றும் செய்திகள்வருது.சமீபத்தில்கடலில்விழுந்துமறைந்தமலேசியவிமானத்தில்மூன்று ஈரானியபயங்கரவாதிகள் இருந்தார்கள். ''அவர்களே விமானத்தை கடத்தி விட்டார்கள்''என்றவதந்திபறவியது. பஸ்சிலோ-ரயிலிலோ எவனோ ஒருத்தன்வெத்தலைபாக்குபையே மறந்து வைத்து விட்டு போனால் கூட ''தாடிவச்சபாய்தான்அங்கேஇருந்தார்'' என்ற வீண்பழி எல்லாம் இஸ்லாமியனே சுமக்க வேண்டிய திருக்கிறது. மேலும்ஒருஇஸ்லாமியநாட்டுக்கும்இன்னொருஇஸ்லாமியநாட்டுக்கும் இடையேராக்கெட்டுகள்பறக்கிறது. இதெல்லாம்யார்செய்தபாவம்.தெரிந்தவர்கள்சொல்லுங்களேன்?

Ebrahim Ansari said...
This comment has been removed by the author.
Ebrahim Ansari said...

முகமன் கூறிய அனைவருக்கும் வ அலைக்குமுஸ் சலாம்.

அன்புள்ள தம்பி ஜாகிர்! தம்பி கவிஞர் சபீர் இவர்களுடன் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக தம்பி ஜமாலுதீன் அவர்களும் கருத்து இட்டு இருப்பது மிகவும் மகிழ்வாக இருக்கிறது. ஆர்வமூட்டுவதாகவும் இருக்கிறது.

தம்பி ஜமாலுதீன் அவர்களைப் போன்ற சமூக நல ஆர்வலர்கள் இந்தத் தொடரைத் தொடக்கம் முதல் படிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

தம்பி இப்னு அப்துல் ரஜாக் அவர்கள் ஒற்றை சொல்லில் சொன்னாலும் சிங்கம் சிங்கிலாகத்தான் வருமென்பதாக உணர்கிறேன்.

இன்ஷா அல்லாஹ் இன்னும் இரண்டு வாரங்களில் இத்தொடர் நிறைவுற இருக்கிறது.

மீண்டும் ஒரு உணர்வுபூர்வமான தொடருடன் சந்திக்க அனைவரும் துஆச் செய்ய வேண்டுகிறேன்.

Ebrahim Ansari said...

அன்புள்ள மச்சான் அவர்களுக்கு

தங்களின் உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் படித்து கருத்திட்டத்துடன் அலை பேசியிலும் அழைத்து பேசியது குறித்து மகிழ்ச்சி.

உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள். இன்று இன்ஷா அல்லாஹ் சந்திக்கிறேன்.

அப்துல்மாலிக் said...

தொடர்ந்து படித்தும் பிரமித்தும்போகிறேன்
கருத்திடமுடிவதில்லை, ஜஜாக்கல்லாஹ் ஹைர் காக்கா

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு