:::: தொடர் - 7 ::::
தலைவரின் தகைமைக்குச் சான்று பகரும் காரணிகளுள் ஒன்று, அவர் ஏற்றெடுக்கும் தற்பொறுப்பாகும். இதை ஆங்கிலத்தில் commitment என்பர். தன்னிகரற்ற தூதரைப் பொருத்தவரை, அந்தப் பொறுப்பு தன்னிகரற்ற ஒன்றாகும். அத்தகைய பொறுப்பால் வார்த்தெடுக்கப்பட அவர்களின் தோழர்கள் அதற்காக தம் உயிரையே பணயம் வைக்கக் காத்திருந்தனர்; வைக்கவும் செய்தனர் என்பதை வரலாறு பெய்ப்பிக்கின்றது! இது எவ்வாறு சாத்தியமாயிற்று? அண்ணலார் அவர்களே அதற்கு முன் மாதிரியாகத் திகழ்ந்து, இறைச் செய்தியை மக்களுக்கு அறிவித்தும், அல்லாஹ்வின் பாதையில் தமது உயிரைப் பணயம் வைக்கவும் காத்திருந்தார்கள்; அதனால்தான் நபி(ஸல்) வரலாற்றில் இதற்கு ஏராளமான சான்றுகள் நிறைந்து காணப்படுகின்றன.
நமக்கெல்லாம் தெரிந்த ‘பத்ருப் போர்’ என்ற நிகழ்வின்போது அண்ணலார் (ஸல்) நடந்து கொண்ட முறை, இதற்கு மிகப் பெரிய சான்றாக விளங்குகின்றதல்லவா ? பத்ரை நோக்கிப் படை நடத்தியபோது, அப்படையினர் நோன்பு நோற்றிருந்தனர்! பல நாள்கள் பசியை அடக்கியிருந்தனர்! அவர்களிடம் துருப்பிடித்துப் போன போர்க் கருவிகள் மட்டுமே இருந்தன! ஒரு பெரும் போருக்காக அவர்கள் ஆயத்தமாக இருக்கவில்லை!.
நபியவர்களின் உத்தரவின் பேரில், குரைசித் தலைவர் அபூசுஃப்யானின் வணிகக் கூட்டத்தை வழி மறித்து, ஷாம் நாட்டிலிருந்து அவர் கொண்டு வந்து கொண்டிருந்த பொருள்களை பறிப்பதுதான் அவர்களின் நோக்கம்! அரேபியாவின் வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் மக்கத்து முஜாஹிர்களிடருந்து கொள்ளையடித்த பொருள்களை ‘ஷாம்’ நாட்டுச் சந்தையில் விற்றார்கள். அப்பொருள்களைத்தான் அபூசுஃப்யான் விலைக்கு வாங்கியிருந்தார்! அவற்றைத்தான் முஸ்லிம்கள் கவர்ந்து வரப் புறப்பட்டிருந்தனர். அவர்களிடம் இரண்டு குதிரைகளும் எழுபது ஒட்டகங்களும், பாதுகாப்பைக் கருதி, துருப்பிடித்துப் போயிருந்த போர்க்கருவிகளும் மட்டுமே இருந்தன!
தோழர்கள் மூவர் சேர்ந்து ஓர் ஒட்டகத்தில் மாறி மாறிப் பயணம் செய்ய வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது! அது எப்படி என்று தயங்கி நின்றவர்களைச் செயல்படத் தூண்டும் விதத்தில் தமக்குக் கிடைத்த ஒட்டகத்தில் அலீ (ரலி) அவர்களையும், அபூ லுபாபா (ரலி) என்ற தோழரையும் தமக்குப் பின்னால் அமர வைத்திருந்தார்கள். மக்களிடமிருந்து எந்த தியாகத்தைத் தம் தோழர்களிடமும் எதிர்பார்த்து, முஸ்லிம்களின் படைத் தளபதியாக முன்னணியில் நின்று புறப்பட்டார்கள்! இதுதான் எல்லா படைப் புறப்பாட்டின்போதும் அவர்கள் கடைபிடித்த தலைமத்துவ முன்மாதிரியாகும்!
ஹிஜ்ரி ஐந்தாம் ஆண்டில் நடந்த அகழ்ப் போரின்போதும் இதே மாதிரியான வழிகாட்டலில், தம் தோழர்களை ஆயத்தம் செய்வான் வேண்டி, ஆலோசனைக்கு அழைத்தார்கள். சுமார் பத்தாயிரம் பேர் கொண்ட குறைஷியரின் பெரும் படையை எப்படி எதிர்கொள்ளலாம் எனத் தோழர்களிடம் ஆலோசனை செய்தார்கள். அவர்களுள், பாரசீகத்திலிருந்து வந்து முஸ்லிமாக மாறியிருந்த சல்மான் அல்ஃபாரிஸி என்ற தோழர், தமது நாட்டில் பேராபத்து வந்த போதெல்லாம், குதிரை வீரர்கள் பாய்ந்து வந்து தாக்குதல் நடத்த முடியாத வகையில், அகழ் வெட்டி விடுவது வழக்கம் என்று பரிந்துரை செய்தார்கள். நபியவர்கள் அப்பரிந்துரையை ஏற்று, தோழர்களை மதீனத்துப் பாறை நிலத்தில் அகழ் தோண்டுமாறு கட்டளையிட்டார்கள் கடுமையான பாறைகளால் சூழப்பட்ட கிழக்கு மேற்குப் பக்கங்களையும், பேரீச்ச மரங்கள் தடுப்பாக இருந்த தெற்குப் பகுதியையும் விட்டுவிட்டு, மதீனாவின் வடக்குப் பகுதியில் அகழைத் தோண்டுமாறு பணித்தார்கள். பத்து பேர் கொண்ட குழுக்களாகப் பிரித்து, அவர்கள் அந்தப் பாறை நிலத்தில் 40 அடி நீலத்திற்கு, குதிரைப் படை வீரர்கள் தாண்டி வந்து தாக்காத அளவுக்கு அகழ் வெட்டுமாறு அன்புக் கட்டளை இட்டார்கள். இந்தக் கட்டளையை ஏற்று அகழ் வெட்டத் தொடங்கினர் அருமைத் தோழர்கள். அண்ணல் அவர்களும் தோழர்களுக்குத் துணையாக நின்று உதவி புரிந்தார்கள்.
அகழ் வெட்டும் அவர்களின் ஆர்வத்தை கண்டு மகிழ்ந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இறைவ்னிடம் இறைஞ்சத் தொடங்கினார்கள். அவ்விறைஞ்சல் ஒரு கவியடியாகவே அமைந்து விட்டது:
இறைவா எமது வெகுமதியோ
இறவா மறுமை வாழ்க்கையதே
நிறைவாய் மதினா மக்காவின்
நேசர்க்(கு) இரக்கம் காட்டிடுவாய்!
இந்த உணர்ச்சி ததும்பும் பாடலைக் கேட்டவுடன், ஆர்வத்துடன் அகழ் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தோழர் ஒருவர் நபியவர்களின் கவியடிகளைக் கேட்டு ஆர்வம் பொங்க அதையே பாடி ஆனந்தமடைந்தார்.
இயலாமையால் ஒதுங்கி நின்ற நபித் தோழர்களுள் ஒருவர், நபியவர்களும் அப்பணியில் ஈடுபட்டதைக் கண்டு உணர்ச்சிப் பெருக்கோடு இவ்வாறு பாடினார்:
உன்றன் தூதர் பணிசெய்ய
உற்றுப் பார்த்து நாங்களெல்லாம்
நீசர் யாரும் இலரன்றோ!
அகழ் போரின்போது தாமே முன் நின்று பணி செய்த அண்ணலாரின் அரிய முன்மாதிரி, அவர்களை ஒப்பற்ற தலைவர் என்று உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டியது!
இருள் கவிzந்து இரவு நேரம் வந்தவுடன், தோழர்கள் கடின உழைப்பால் களைத்திருந்ததால், உறங்கச் சென்று விட்டனர். ஆனால், அவர்களின் தலைவரான அண்ணல் நபி (ஸல்) மட்டும் உறங்காமல் விழித்திருந்து கருணையாளன் அல்லாஹ்விடம் கையேந்தி அழுது இரைஞ்சிக் கொண்டிருந்தார்கள்!
இக்காலத்து தலைவர்களைப் போல் அல்லாமல், இறுதித் தூதரான முஹம்மத் (ஸல) அவர்கள் தோழர்களுடன் இணைந்து பணியில் ஈடுபட்டார்கள்! இந்த முன்மாதியும், அண்ணலாரின் தன்னிகரற்ற தலைமைத்துவத்திற்கு போதிய சான்றாகும்.
தொடரும்
அதிரை அஹ்மது
2 Responses So Far:
//இறைவா எமது வெகுமதியோ
இறவா மறுமை வாழ்க்கையதே
நிறைவாய் மதினா மக்காவின்
நேசர்க்(கு) இரக்கம் காட்டிடுவாய்!// இரண்டாவது வரியில், "இறவா " என்று இருக்கவேண்டும்.
//உன்றன் தூதர் பணிசெய்ய
உற்றுப் பார்த்து நாங்களெல்லாம்
நின்றோ மாயின் எம்மைவிட
நீசர் யாரும் இல்லையன்றோ!// "இலரன்றோ" என்று இருக்கவேண்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
திருத்தம் பதிவுக்குள் பதிக்கப்பட்டு விட்டது...
ஜஸாக்கல்லாஹ் ஹைரன் !
Post a Comment