Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பிடி நழுவிய பொழுதுகள்! 14

அதிரைநிருபர் பதிப்பகம் | January 28, 2015 | , , , ,

நீர்த்தேக்கம் உடைந்து
ஊர்த்தாக்கும் வரை
கண்டுகொள்ளாமல் விடப்பட்ட
அணைக்கட்டின் கசிவு

குரும்பு என்று
அரும்பிலேயே
அலட்சியமாய் விட்டுவிட்ட
சிறுவனின் முதற்குற்றம்

உஷ்ணத் தொடுகைக்குத்
தயாராகும்வரை
ஒன்றுமில்லை என்றிருந்த
விடலைகளின் ஓரப்பார்வை

ஒரு துளிதானே சிறு பொறிதானே
என விடப்பட்ட
பிழையான கணிப்புகளால்தான்
பெரு வெள்ளமோ கடும் நெருப்போ
அழித்து அடங்கும்

உல்லாச ஊஞ்சலில்
காற்றைக் கிழித்தாடும்
களிப்பான கணங்கள்கூட
ஒரு நொடி
பிடி நழுவவே
வலியோடு முடிகின்றன

பற்றிப் பிடிப்பதில்
வெற்றியடைதல் போதாது
கைக்கு எட்டி
வாய்க்கும் வாய்ப்புகள்
வாய்க்கும் எட்டும்வரை
அடி வழுவாது
பிடி நழுவாது பிடி

அகலப்பாதை கனவால்
பிடி நழுவிய பொழுதன்றோ
இருந்த இருப்புப் பாதையையும்
ஊர்ந்த ரயிலையும்
ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது

ஓடிப்போகும்
ஜோடிக்குப் பின்னாலும்
வாடிப்போகும்
வாழ்க்கைக்குக் காரணமாகவும்
தோற்றுப் போகும்
தொழிலுக்குத் துவக்கமாகவும்
இன்னும்
இல்லை யென்றாகிப்போன
இயல்பான இன்பத்திற்கும்
பிடி நழுவிய பொழுதொன்று
இருந்தே தீரும்

பிடி இறுகட்டும்

ஒடித்துவிடாமல் வளைக்கவும்
வெடித்துவிடாமல் அனைக்கவும்
ஆரம்பமே
அருமையான தருணம்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

14 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

பிஞ்சு விட்ட கை
நெஞ்சு தொட்ட கவிதை !

கருவோ "பிடி நழுவிய பொழுதுகள்"

சொல்ல வந்ததோ சுற்றத்தல் நழுவிய பொழுதுகளும் அதன் தாக்கமும் !

அருமை காக்கா....

sheikdawoodmohamedfarook said...

//அடிவழுவாதுபிடிநழுவாதுபிடி// பிடியைநழுவவிட்டவர்கள் மாற்றார்வீட்டுபடி ஏறிநிற்க்கும்நிலை வரும். முன்கூட்டியேஉஷார்படுத்தும் கவிதை. ''வருமுன் காவாதான்வாழ்கை எறிமுன்வைத்தூறுபோல கெடும்'' இதுதிருக்குறள்.

sabeer.abushahruk said...

அபு இபு,

படத்தைக் கொடுத்து பாடம் சொல்லச்சொன்னது நீங்கள். தெரிந்ததைச் சொன்னேன்.

படம் பாதிப் பாடத்தையும் தலைப்பு மீதி பாடத்தையும் சொல்லிவிட, தொடர்ந்து எழுதி முடித்தது விளக்கங்களேயாகும்.

வாசித்து, புரிந்து கருத்திட்டமைக்கு ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்!

sabeer.abushahruk said...

//பிடியை நழுவவிட்டவர்கள் மாற்றார் வீட்டுபடி ஏறி நிற்கும் நிலை//

ஃபாரூக் மாமா,

அந்த நிலை எந்த மனிதனுக்கும் ஏற்படக்கூடாத ஒரு கொடிய நிலை. தன்னைச்சார்ந்திருப்பவர்களின்மீதும் தான் சார்ந்திருப்போர்மீதும் அன்பின் பிடியை நழுவ விடவே கூடாது.

வாசிதது கருத்திட்டமைக்கு ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்.

அதிரை.மெய்சா said...

பிடி நழுவிய பொழுதுகள்
மனம் கனத்திடும் வடுவுகள்
திடம் கொடுத்துப் பிடித்தலில்
திண்ணமாய் நீங்கிடும் தீங்குகள்

புடம்போட்ட தங்கமாய்
புரிதலில் பொலிவுடன்
உன் கவி வரிகள்
இனம் கண்டு பிடித்தவர்
ஏற்ப்பனர் வாழ்வினில்
உன் வார்த்தையை

sabeer.abushahruk said...

நன்றி மெய்சா,

பிடி நழுவாத பொழுதுகள் வாய்க்க வாழ்த்துகள்!

வாசித்து கருத்திட்டமைக்கு ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்.

Unknown said...

//பற்றிப் பிடிப்பதில்
வெற்றியடைதல் போதாது
கைக்கு எட்டி
வாய்க்கும் வாய்ப்புகள்
வாய்க்கும் எட்டும்வரை
அடி வழுவாது
பிடி நழுவாது பிடி//

'பழம் நழுவி பாலில் விழுந்தது போல்' என்ற பழமொழி நல்லவர்களுக்கோ, திறமையானவர்களுக்கோ இல்லை போலும்....!!

sabeer.abushahruk said...

//பழம் நழுவி பாலில் விழுந்தது போல்' என்ற பழமொழி நல்லவர்களுக்கோ, திறமையானவர்களுக்கோ இல்லை போலும்....!!//

ஹஹ்ஹா,

தம்பி ஜாஃபர்,

பழம் நழுவி கீழே விழாமல் பாலில் விழுதல் நல்லவர்களுக்கும் அதிர்ஷ்டக்காரர்களுக்கும் நிகழலாம்.

பழம் பறித்து பாலில் இடுவதே திறமையானவர்களின் அடையாளம். முன்னது எப்போ எப்படி நிகழும் என்று சொல்ல இயலாதபோது பின்னதோ நம் இஷ்டப்படி நிகழ்த்தலாம்.

தங்கள் கருத்திற்கு ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்.

crown said...

அஸ்ஸலமுஅலைக்கும்.கவிஞரின் பலமான பிடி!பீடிகை போடாமல் நேரடியாக ஒரு பிடித்தம் வரும்படி பிடி நழுவாது பிடித்திருக்கு!

crown said...

நீர்த்தேக்கம் உடைந்து
ஊர்த்தாக்கும் வரை
கண்டுகொள்ளாமல் விடப்பட்ட
அணைக்கட்டின் கசிவு
--------------------------------------------------------------
இப்படி சூதனம் இல்லாமல் ஏற்படும் சீரழிவு அது ஊரழியும் படி அமைவதும் ஒட்டுமொத்த இனத்தின் கண்ணீர் கசிவுக்கும் காரணமாகிவிடுவதும் இது நேராமல் ஒரு பிடித்தமான திட்டமும்,செயலும் அவசியம்!

crown said...

உல்லாச ஊஞ்சலில்
காற்றைக் கிழித்தாடும்
களிப்பான கணங்கள்கூட
ஒரு நொடி
பிடி நழுவவே
வலியோடு முடிகின்றன
--------------------------------------------------
விளையாட்டும் கவனமின்மை இருப்பின் வினையாகும் பின் அது வலியாகும் என்பதை அழகாய் வார்தையைப்பிடித்து பிடித்தமான சித்திரம்!அருமை கவிஞரே!

crown said...

அகலப்பாதை கனவால்
பிடி நழுவிய பொழுதன்றோ
இருந்த இருப்புப் பாதையையும்
ஊர்ந்த ரயிலையும்
ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது
---------------------------------------------------------------------
ஆம் நம் சமுதாயம் தடம் புரண்ட தருணம் இனியேனும் ஒரு பிடிமானம் வரணும் என எச்சரிக்கும் பச்சைக்கொடி இது!

crown said...

பிடி இறுகட்டும்

ஒடித்துவிடாமல் வளைக்கவும்
வெடித்துவிடாமல் அனைக்கவும்
ஆரம்பமே
அருமையான தருணம்!
-----------------------------------------------------------------
ஆரம்பத்தை பற்றி அருமையான முடிவு!தெளிவான பிடி அவசியம்!படிக்கும் படியும்,படித்து ஒரு பிடி ,பிடிக்கவும் சொன்ன பாடம் ஜோர்!!!!!!!!!!!!

sabeer.abushahruk said...

السلام عليكم ورحمة الله وبركاته

அன்பிற்குரிய க்ரவ்ன்,

வேலைசோலியாக இருக்கலாம் என்றே வருந்தி அழைக்கவில்லை. இருப்பினும் 'மூக்கில் வேர்த்திருக்கும்' என்று தெரியும்.

அனைக்கட்டின் நீர்க்கசிவை நான் சொல்ல, ஒட்டுமொத்த இனத்தின் கண்ணீர் கசிவை நீங்கள் 'இடம் பொருள் ஏவல்' பார்த்து பொருத்திக் காட்ட;

ஊஞ்சல் பிடித்த கை நழுவியதை நான் சொல்ல, பிடித்த வார்த்தைகளைப் பிடித்து நீங்கள் கொஞ்ச;

அகலப் பாதை கனவு கைநழுவிக் கலைந்ததை நான் குறிப்பிட, தடம் புரண்டதாக நீங்கள் உங்கள் மொழியின் செறிவை நிரூபிக்க;

பிடி இறுகட்டும் என்று நான் ஆரம்பிக்க; அதுவே நல்ல படிப்பினை என்று நீங்கள் முடிக்க;

பதிவை அலங்கரிக்கிறது உங்கள் கருத்து!

ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு