நான் சிறு பிள்ளையாக இருக்கும் சமயம் என் வீட்டில் மட்டுமல்ல என்னைபோன்று சிறுவர்கள் இருக்கும் வீட்டிலெல்லாம் அவர்களுக்கு தாய்மார்கள் சோறூட்ட அன்புடன் அம்புலிமாவை (நிலாவை) காட்டி ஊட்டுவார்கள். அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு சற்று பயம் காட்டும் விதமாக மாக்காண்டி, பூச்சாண்டி,பேயி, சாக்குமஸ்தான், பிள்ளை பிடிப்பவன் என்று ஏதேதோ சொல்லி அச்சத்துடன் உணவை ஊட்டி விடுவார்கள். உணவுடன் பயத்தையும் உண்டு வளர்ந்தோம்.
அதனால் ஒரு அச்ச உணர்வுடனேயே சிறுவயதில் வளர்க்கப்பட்டோம் இருளைக்கண்டால் பயம், தனிமையில் செல்ல பயம், சமீபத்தில் மரணமடைந்தவர்கள் வீட்டருகே செல்ல பயம், உச்சி பொழுதில் பயம், சூரியன் மறைந்தால் பயம் உதயம் இப்படி பயம் அன்றாடம் நம் வாழ்வில் கலந்து விட்ட ஒன்றாகவே நாம் வளர்க்கப்பட்டோம்.
அந்த பக்கம் செல்லாதே, இந்தப்பக்கம் செல்லாதே, அந்த மரத்தடியில் உண்டு, இந்த குளக்கரையில் உண்டு, அது ஒரு பேய் வீடு என்று யாரும் அறியா, ஊர்ஜிதம் செய்யப்படாத மர்மக்கதைகள் பல சொல்லி நாம் சிறுவயதில் அச்சத்துடன் வளர்த்தெடுக்கப்பட்டோம்.
மீன் சாப்பிட்டு விட்டு கை, வாயை நன்கு கழுவி நறுமணம் பூசாமல் வெளியில் செல்வதனாலும் மற்றும் இரவில் மல்லிகைப்பூ நறுமண சென்ட் பூசி தனியே செல்வதனாலும் பேய் எளிதில் நம்மை பிடித்து விடும் என்று பயமுறுத்துவார்கள். அதனால் மீன் சாப்பிட்டு பின் வெளியில் கிழம்பும் சமயம் பாண்ட்ஸ் பவுடரை நன்றாக பூசி சென்றோம். என்ன செய்வது? யார்ட்லி பவுடர் எல்லாம் அப்பொழுது புழக்கத்தில் இல்லை.
ஆனால் இது வரை யாரும் பேய், பிசாசுகளை நேரில் கண்டிருக்கிறார்களா? என்றால் தெளிவான பதில் இதுவரை இல்லை. ஆனால் அது பற்றிய கதைகளும், மர்மங்களும், அச்சங்களும் மர்மப்புதையல் போல் இன்றும் பொதிந்து கிடக்கிறது நம்மிடையே கேரளாவைப்போல்.
சிலர் அதன் சப்தத்தை கேட்டிருக்கிறேன் அல்லது தூரத்தில் நெருப்பெறிய கண்டிருக்கிறேன் அல்லது ஒரு ஒளியைப்போல் கண்டிருக்கிறேன், நிழலைப்போல் கண்டிருக்கிறேன் என்று எதேதோ அச்சத்திற்கு தகுந்த வடிவம் கொடுத்து நம்மிடம் சொல்லி எல்லோரையும் உரைய வைத்து விடுவார்கள்.
இரவு ஒன்பது மணிக்கெல்லாம் ஊர் ஓசையின்றி அடங்கிப்போகும் நம்மூர் போன்ற சிற்றூர்களில், கிராமப்புறங்களில் வாழும் மக்களிடம் தான் இது போன்ற இனம்புரியாத அச்சம் நிலவி வருவது இயற்கை. ஒரு சில தைரியமான ஆண்களும், பெண்களும் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருக்கத்தான் செய்கிறார்கள். போக்குவரத்து இரவு பகலாய் ஓடிக்கொண்டிருக்கு மின்விளக்கு வெளிச்சம் அதிகம் உள்ள நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு இது போன்ற அச்ச உணர்வு இயற்கையில் இருப்பதில்லை. இரவு ஒரு மணிக்கு கூட தனியே வெளியில் சென்று வந்து விடுவார்கள்.
ரமளான் மாதத்தில் அல்லாஹ்வே குர்'ஆனில் அட்டூழியம் புரியும் சைத்தான்கள் கட்டப்பட்டுவிடும் என்று குறிப்பிட்டு சொல்வதால் நம் மக்கள் ரமளானில் மட்டும் ஆண்களும், பெண்களும் இரவு நேரங்களில் பயமின்றி வெளியில் சென்று வர அச்சப்படுவதில்லை. சிறுவயதில் ரமளான் அல்லாத காலங்களில் இஷா தொழுகை முடிந்து நண்பர்களுடன் தெரு முனையில் சிறிது உரையாடி விட்டு சந்தில் (முடுக்கு) உள்ள வீட்டிற்கு திரும்பி வர யாராவது பெரியவர்கள் சந்தில் செல்கிறார்களா என்று காத்துக்கிடந்து அல்லது தெரிந்த ஆயத்தை பயத்துடன் ஓதி வேகமாக வீடு திரும்பிய அனுபவமும் உண்டு. அடுத்த சந்தில் வீடு உள்ள ஒரு நண்பன் தனிமையில் இரவில் வீடு செல்லும் பொழுது நாகூர் ஈ.எம். ஹனீஃபா பாடல்களை (இறைவனிடம் கையேந்துங்கள்....) சப்தமாக பாடிக்கொண்டு வேகமாக ஓடி செல்வான் என நண்பன் ஒருவன் சொல்ல அறிந்தேன். இப்பொழுது நினைத்தால் சிரிப்பு தான் வரும் அந்த நேரத்தில் வரவழைக்கப்படும் தைரியம் அலாதியானது தான்.என் சொந்தக்கார வீட்டின் முன் நன்கு குலை,குலையாக காய்த்து நிழல் தந்து கொண்டிருந்த மாமரத்தில் பேய் இருப்பதாக பல பேர் சொல்லி அதை அவ்வீட்டினர் வெட்டிவிட்டனர். பிறகென்ன மாங்காய் ஊறுகாயாக இருந்தாலும், மாம்பழமாக இருந்தாலும் காசு கொடுத்து தான் இனி அவர்கள் வெளியில் வாங்க வேண்டும்.
என்ன தான் தைரியமாக பகலில் பேய்,பிசாசு சமாச்சாரத்தில் வியாக்கியானம் படித்தாலும் எவரேனும் இரவில் நான் மைத்தாங்கரையில் (மையவாடி) தனியே பாய் போட்டு படுத்து வருவேன். இரவில் குளக்கரையில் தனிமையில் படுத்துறங்குவேன் என்று வீராப்பு பேசி சவால் விட்டு அதில் வெற்றி கண்டவர்கள் யாரேனும் என் வாழ்நாளில் நான் கண்டதில்லை. நீங்கள் கண்ட யாரேனும் உண்டா?
நடு இரவில் நாய் ஊளையிட்டாலே பேய் வருவதற்கு அறிகுறி என்பார்கள். (பேய் வருவதற்கு முன்னரே நாயிக்கு எஸ்.எம்.எஸ். எப்படி கொடுக்கின்றது என்று தெரியவில்லை).
ஊரில் சில பெரியவர்கள் நம் கண்ணுக்கு புழப்படாத குர்'ஆனில் சொல்லப்பட்டுள்ள ஜின்களை தன் வசப்படுத்தி அதை தனக்கு பணிவிடைகள் செய்ய பணித்திருந்தார்கள் என சிலர் கூறக்கேட்டிருக்கிறேன். அதில் நல்ல ஜின்களும் உண்டு, பிறருக்கு கேடு விளைவிக்கும் கெட்ட ஜின்களும் உண்டு என்று சொல்வார்கள். இதில் உள்ள மர்மங்களையும், மாச்சரியங்களையும் இதையெல்லாம் படைத்து அதன் கட்டுப்பாட்டை தன் வசம் வைத்துள்ள வல்ல ரஹ்மானே நன்கறியக்கூடியவன்.
முப்பத்தாறு வருட உலக அனுபவத்தில் பல அச்சங்களையும், அதனால் வரும் பயங்களையும் சொல்லக்கேட்டிருக்கிறேன் அதனால் அஞ்சியும் இருக்கிறேன். ஆனால் அதன் உண்மைக்கருவை இதுவரை எங்கும் நான் கண்டதில்லை. அதைக்காண முயற்சி எடுக்க விரும்பவும் இல்லை அதற்கு போதிய தைரியமும் மனவசம் இல்லை.
இரவில் ஆவுசம் (பேயின் ஒரு வகை) கத்தியதை கேட்டிருக்கிறேன் என்று என் நண்பன் ஒருவன் சொல்லவும் கேட்டிருக்கிறேன். இந்த மர்ம முடிச்சுகளுக்கெல்லாம் தெளிவான தீர்வு நிச்சயம் இறைவேதத்தில் இல்லாமல் இல்லை என்பதை நாம் அறிவோம்.
கல்லூரி படிக்கும் சமயம் ஒரு நாள் சுபுஹ் பாங்கு சொல்லியதும் எழுந்து தொழுவதற்காக தனியே மரைக்காப்பள்ளி சென்று கொண்டிருந்தேன். செல்லும் வழியில் சில வீடுகளில் பெண்கள் அதிகாலையில் எழுந்து வீட்டின் முன் சுத்தம் செய்து பெருக்கி தெரு குழாயில் வரும் தண்ணீரையும் பிடித்துக்கொண்டிருப்பர். அவ்வாறு சற்று தூரத்தில் அவர்கள் இருக்கும் சமயம் நான் தனியே நடந்து சென்று கொண்டிருந்தேன். திடீரென என்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. கால்கள் ஒன்றோடொன்று பிண்ணிப்பிணைந்து கயிறால் கட்டியது போல் என்னால் நகர முடியாமல் போனதை உணர்ந்தேன். தூரத்தில் உள்ள பெண்கள் என்னை பார்த்து எதுவும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக அப்படியே கைலியை கட்டுவது போல் அங்கேயே நின்று விட்டேன். சிறிது நேரத்திற்கு பின் என் நடையை தொடர்ந்தேன் பள்ளியை நோக்கி. அந்த நேரம் எனக்கு உடல் நலக்குறைவு எதுவும் இல்லை. நன்றாகத்தான் உறங்கினேன் பிறகு விழித்தெழுந்தேன். எனக்கறியாமல் வந்த உடல்நலக்குறைவா? இல்லை தீய (சைத்தான்) சக்தி ஏதும் என்னை குறிக்கிட்டதா? என்பதை இன்றும் என்னால் ஊர்ஜிதம் செய்ய இயலவில்லை. அல்லாஹ்வுக்கே எல்லாம் வெளிச்சம்.
என் நண்பன் ஒருவன் ஒருநாள் சுபுஹ் தொழுகைக்காக பாங்கொலி கேட்காமல் எப்பொழுதும் போல் எழுந்து செக்கடிப்பள்ளி சென்றிருக்கிறான். அவன் செல்லும் பொழுது வழியில் யாரும் இல்லை. பள்ளியும் வந்து விட்டது. ஆனால் பள்ளியின் வாயில்கள் பூட்டப்பட்டிருக்கின்றன. காரணம் ஒன்றும் அறியாதவனாய் கேட்பதற்கு யாரும் அங்கில்லாமல் வீடு திரும்பி விட்டான். கடைசியில் வீட்டில் கடிகாரத்தை எதார்த்தமாக பார்த்திருக்கிறான் மணி இரவு ஒன்று தான் ஆனது. அச்சத்தில் அப்படியே உறங்கி இருப்பான்.
இன்னொருவர் இரவில் வெளியூர் சென்று தனியே வீடு திரும்பும் பொழுது யாரோ அவர் பெயரை எங்கிருந்தோ கூப்பிட்டது போல் இருந்ததாக ஒரு பிரம்மை அவருக்கு. உடனே அதிர்ச்சியில் மூன்று நாட்கள் கடும் காய்ச்சலில் அவதிப்பட்டதாக கேள்விப்பட்டேன்.
நான் கல்லூரி படிப்பு முடித்ததும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் திருப்பூரில் ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்தேன். விடுமுறையில் ஊர் வரும் பொழுது பஸ்ஸில் இரவில் திருப்பூரிலிருந்து புறப்பட்டு தஞ்சாவூருக்கு அதிகாலை ஒன்றரை மணிக்கு வந்திறங்குவேன். பிறகு தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டை, பிறகு பட்டுக்கோடையிலிருந்து அதிரைக்கு சுமார் அதிகாலை மூன்றரை மணிக்கு வந்திறங்குவேன். சேர்மன் வாடி வந்திறங்கியதும் சந்தோசத்துடன் பயமும் என்னை பற்றிக்கொள்ளும். எப்படி தனியே வீடு செல்வது? செக்கடி மோடு வழியே செல்வதாக இருந்தால் குளக்கரையில் ஒருவர் சமீபத்தில் அகால மரணமடைந்துள்ளார். சரி வேறு வழியை தேர்ந்தெடுத்து வாய்க்கால் தெரு பக்கம் செல்லலாம் என்றால் அங்கு ஒரு பெண்ணும் சமீபத்தில் அகால மரணமடைந்துள்ளார். பிறகு எப்படி வீடு செல்வது? சுபுஹ் பாங்கு சொல்லும் வரை சேர்மன் வாடியில் உள்ள ஹாஜியார் கடையில் உட்கார்ந்து இருந்து விட்டு பிறகு பாங்கு சொன்னதும் வீட்டு பெரியவர்கள் வீட்டை திறந்து பள்ளிக்கு செல்ல வெளியில் வரும் சமயம் அவர்களுடன் மெல்ல,மெல்ல எப்படியோ சிரமப்பட்டு வீடு வந்து சேர்வேன். திக், திக் என்று தான் இருக்கும். அந்த நேரம் இடையில் ஒரு பூனை குறிக்கிட்டாலும் எமக்கு ஒரு டைனோசரே குறிக்கிட்டு சென்றது போல் பகீரென்றிருக்கும். இதெல்லாம் என் வாழ்வில் மறக்க இயலா பயம் கலந்த மலரும் நினைவுகள்.
ஒரு முறை மரைக்காப்பள்ளியில் இயங்கி வரும் மத்ரஸத்துந்நூர் ஹிஃப்ள் மத்ரஸாவில் அக்கம் பக்கத்து ஊரில் உள்ள சில மாணவர்கள் ஓதிக்கொண்டிருந்தனர். மத்ரஸாவிற்கு பக்கத்திலேயே அவர்கள் தங்க அறைகளும் ஒதுக்கப்பட்டிருந்தது. ஒரு கோடை காலத்தின் இரவில் பழைய மரைக்காப்பள்ளியின் வராண்டாவில் படுக்க மாணவர்கள் சென்றிருக்கிறார்கள். அதில் ஒரு மாணவன் பள்ளியின் உள் கதவின் குறுக்கே படுத்துறங்கி இருக்கிறான். ஒரு மூலையில் நம் ஊரைச்சார்ந்த ஒரு நபரும் படுத்துறங்கி இருக்கிறார். நடு இரவில் பள்ளியின் கதவறுகே படுத்துறங்கிய அந்த மாணவன் அவனறியாது "ஓ வென ஓலமிட்டவனாக" தண்ணீர் ததும்பிக்கொண்டிருக்கும் அருகில் உள்ள ஹவுதில் விழுந்து அதனுள் இருக்கும் பாசிக்குள் புதைந்து விட்டான். உடனே திடுக்கிட்டு எழுந்த அந்த நபர் ஓடிச்சென்று அல்லாஹ் அக்பர் என்று சொல்லி ஹவுதுக்குள் புதைந்திருப்பவனை தைரியத்தை வரவழைத்து உள்ளே இறங்கி வெளியே கொண்டு வந்திருக்கிறார். மறுநாள் காலையில் நானே அந்த மாணவனிடம் நடந்த சம்பவத்தை பற்றி கேட்டேன். அவன் என்ன நடந்தென்று அவனுக்கே தெரியாமல் போனதை அச்சத்துடன் சொன்னான். அல்லாஹ் பாதுகாத்தான் அந்த நேரம் யாரும் அவனை கவனிக்கவில்லை எனில் அவன் இறந்திருக்கக்கூடும். அந்த நாள் முதல் பள்ளியின் குறுக்கே படுத்துறங்குவதால் வரும் விபரீதங்களை அறிந்து கொண்டேன்.
இப்பதிவு யாரையும் அச்சமூட்டி தேவையற்ற பயத்தை ஊட்டுவதற்காக அல்ல. கண்டதற்கெல்லாம் பயந்து, பயந்து வாழ்வில் நல்ல பல வாய்ப்புகளையும், உரிமைகளையும், உடமைகளையும் மற்றும் பெற வேண்டியவைகளை அநியாயமாக நாம் இழந்திருக்கிறோம் என்று சொல்ல வந்தேன். இருளால் நமக்கு வரும் இரவு பயங்களால் சில சமூக விரோதிகளும், திருடர்களும், தவறான தொடர்புள்ளவர்களும் தங்கள் தீய செயல்களை அரங்கேற்றிக்கொள்ள வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள நாம் அனுமதிக்க கூடாது.
இதுவரை வாழ்நாளில் பேய்பிடித்த மனிதர்களை பார்த்திருக்கிறேன். ஆனால் அவர்களை பிடித்த பேயை ஒரு தடவை கூட பார்த்ததில்லை. அதனால் பிடிக்காத பேயை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? என்று யாரும் கேட்டுவிடாதீர்கள்.
இன்றைய சிறுவர்களுக்கு பயம் காட்ட பூச்சாண்டி போல் வேசமிட்டு திடீர் அச்சமூட்ட முயன்றாலும் "என்னா இது ஜெட்டிக்ஸ்லெ வர்ர மாதிரி இருக்கு, ஹாரி பாட்டர்லெ வர்ர மாதிரி இருக்கு" என்று அலட்சியமாக சொல்லி விடுவார்கள் பயமின்றி. வாழ்வில் என்ன தான் தைரியமான ஆளாக இருந்தாலும், சரியான பயந்தாங்கொல்லியாக இருந்தாலும் ஒரு நாள் எல்லாவற்றையும் தனியே தவிக்க விட்டு விட்டு இவ்வுலகை விட்டு இருண்ட கபுர் குழிக்குள் செல்லத்தான் போகிறோம். இறைவனன்றி வேறு எவர் எம்மை பாதுகாத்திட இயலும்?
நிச்சயம் இது போன்ற சம்பவங்கள் உங்கள் வாழ்நாட்களில் குறிக்கிட்டிருக்கலாம். இங்கு எழுதுங்கள் நாமும் தெரிந்து கொள்வோம்.
மலரும் நினைவுகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்.
மு.செ.மு.நெய்னா முஹம்மது
இது MSM கைவண்ணத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு மீள்பதிவு !
இது MSM கைவண்ணத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு மீள்பதிவு !
23 Responses So Far:
நெய்னா
திக் திக் நெஞ்சு தில்லானா
ஒரு இங்லீஸ் பேய் படம் பார்த்த மாதிரி இருக்கு
வேப்ப மர உச்சியிலே பேய் ஒன்று நிக்கிதின்னு
சொல்லி வைபங்க
நம் வீரத்தையே முளையிலேயே
கிள்ளி வைப்பாங்க என்று
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
சும்மாவா பாடினாரு
நெய்னா
எனக்குள் விட்டலாச்சாரியார் கதைகலெல்லாம் நிறைய உண்டு ஆனால் அதை இங்கே பகிர நேர்ம்தான் இல்லை
Assalalmu Alaikkum
Dear brother Mr. Naina Mohammed,
Good article which explores fears from your life's background.
Actually a child is not knowing the fear at all at the initial state. Either parents or the siblings infuse the feeling of fear in the child. They think that its a strategy to control the child not to be naughty or adamant to obey. Its not a healthy approach.
Everywhere in the society from home to school, career, social life, there can be a threat as a strategy to control the people's behavior.
Even in religions there are two approaches to control the human behavior. One by encouraging him/her to pursue good deeds to reach paradise. And another one by discouraging bad deeds by warning the severe punishment of hell fire.
Fear, the feeling is in everyone of the human beings in different levels. But the individuals should become self aware and try to know the truth which sets the mind at poise and powerful.
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai.
//நடு இரவில் நாய் ஊளையிட்டாலே பேய் வருவதற்கு அறிகுறி என்பார்கள். (பேய் வருவதற்கு முன்னரே நாயிக்கு எஸ்.எம்.எஸ். எப்படி கொடுக்கின்றது என்று தெரியவில்லை).// ஹஹஹஹஹஹ்ஹா. அசல் நெய்னா பிராண்டு நெய்.
நெய்னா வின் கை வண்ணம் எல்லாமே புதுசா படிப்பது போன்ற புத்துணர்வு!
//நடு இரவில் நாய் ஊளை இட்டாலே// ஊளை வரும் முன்னே: பேய் வரும்பின்னே! அது ஊளையல்ல:சைரன் ஓசை.அது சாதார்னமான பேயல்ல.மூன்றடுக்கு பாதுகாப்பில் வரும் V.I.P.பேய் !
நடுஇரவில் புதைகுழிக்கு போய் பேயாடி நாளைக்கு குலுக்கும்லாட்டரியின் முதல் பரிசு நம்பர் கேட்க்கும் பழக்கம் மலேசியாவில் நிறைய உண்டு. பேய் சொன்ன நம்பர் வந்து விட்டால் பேய் கேட்ட ஆடு மாடு பலி கொடுத்து விடவேண்டும். அப்படி கொடுக்காமல் கடையில் வேலைசெய்யும் சம்பளகாரர்களுக்கு சொல்லும் கிக்கிரி புக்கிரி சால்ஜாப் சொல்லி பேயே ஏமாற்றினால் ஊருக்கு தந்தி வரும். மூன்றாம்நாள் மூனாம் ஹத்தம்.
எனக்கு பேய்லைலாம் நம்பிக்கையில்லை; அதுக்காக நடுராத்திரியில் மையத்தாங்கரைக்கு போய்ட்டு வர்ர பந்தயத்துக்கெல்லாம் நான் வரலே.
பேயாவது கீயாவது!
இருந்தாலும் அந்த காலத்ல பேய் பிடிச்சி ஆடுவாங்களே, அவங்கள பார்த்தா பயமாயிருக்கும்.
அப்புறம்...ஹிஹி... ஒரு குறிப்பிட்ட வயசுவரைக்கும் மோகினிப்பிசாசின் அழகு பிடிக்கும்ப்பா..வொயிட் ட்ரெஸ்ல அலைபாயும் கூந்தலோடு இனிமையான குரல்ல பாடிக்கிட்டு...ரொம்ப பிடிக்கும்ப்பா.
நெய்னா,
மறுபடியும் பயங்காட்டிட்டியலே (மீள்பதிவு)
////நடுஇரவில் புதைகுழிக்கு போய்
பேயாடி நாளைக்கு குலுக்கும்லாட்டரியின் முதல் பரிசு நம்பர் கேட்க்கும் பழக்கம் மலேசியாவில் நிறைய உண்டு. பேய் சொன்ன நம்பர் வந்து விட்டால் பேய் கேட்ட ஆடு மாடு பலி கொடுத்து விடவேண்டும். அப்படி கொடுக்காமல் கடையில் வேலைசெய்யும் சம்பளகாரர்களுக்கு சொல்லும் கிக்கிரி புக்கிரி சால்ஜாப் சொல்லி பேயே ஏமாற்றினால் ஊருக்கு தந்தி வரும். மூன்றாம்நாள் மூனாம் ஹத்தம்.///
இது என்னப்பா உட்டாலங்கடி குடு குடு
இது ஒரு மீள்பதிவாக இருந்தாலும் படிக்கும் பொழுது மீண்டும் பழைய நினைத்து பயமுறச்செய்கிறது. ஒரு நேரத்தில் பயந்தால் எந்நேரமும் ஓதிப்பார்க்க உம்மா இருந்தது. இப்பொழுது நிஜம் போய் நினைவுகள் சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டது. மீள் பதிவு செய்த அ.நி.க்கு நன்றிகள் பல.
முன்னாடியெல்லாம் பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி தேர்வுக்காக இரவில் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து நமது கா.மு. மெல் நிலைப்பள்ளிக்கு சைக்கிளில் சென்று படித்து வருவோம். தக்வாப்பள்ளி மையவாடி அருகில் வந்துவிட்டால் பயத்தில் எல்லோரும் கோரசாக சைக்கிள் பில் அடித்துக்கொண்டு வீடு வந்து சேர்வோம்.
ஒரு தடவை என்னால் நண்பர்களுடன் ஒரு இரவு பள்ளிக்கு செல்ல இயலவில்லை. அடுத்த நாள் என்னிடம் இப்படி பயம் உறைய சொன்னார்கள் " அந்த இரவில் பள்ளியில் குறுக்கே நின்ற ஒரு மாட்டை விரட்ட ஒரு நண்பன் தன் கையால் மாட்டைஅடித்ததாகவும் கை அந்த மாட்டின் உடம்புக்குள் சென்று வந்ததாகவும் சொன்னார்கள்" பிறகு அது ஒரு பொய் என்றும் சொன்னார்கள். எப்புடியெல்லாம் பொரளியக்கெழப்புனாங்கைய்யா.......
பேய்க்கதைகளும் அதன் சம்பவச்செய்திகளும் இரவில் கேட்க யாருக்கும் கொஞ்சம் திக்திக்குண்டு அடிக்கத்தான் செய்யும்.
பகலெல்லாம் மியாவ்,மியாவ்ண்டு கத்திக்கிட்டு திரிஞ்ச ஊட்டுப்பூனெ கூட ராத்திரியிலெ அப்புடியே பச்சப்புள்ள மாதிரியே கத்துமுங்க.....
எதுவுமே இல்லை நாங்களெல்லாம் மைத்தாங்கரையிலேயே பாய் போட்டு படுத்துட்டு வர்ர பரம்பரை என்பவர்கள் யாரேனும் ஒரு சவாலுக்காக இரவில் பள்ளிவாசலின் முக்கிய வாயிலின் குறுக்கே படுத்து உறங்கி விட்டு வர தைரியம் உண்டோ? (ஏன் இந்த விபரீத விளையாட்டு?)
///எதுவுமே இல்லை நாங்களெல்லாம் மைத்தாங்கரையிலேயே பாய் போட்டு படுத்துட்டு வர்ர பரம்பரை என்பவர்கள் யாரேனும் ஒரு சவாலுக்காக இரவில் பள்ளிவாசலின் முக்கிய வாயிலின் குறுக்கே படுத்து உறங்கி விட்டு வர தைரியம் உண்டோ? (ஏன் இந்த விபரீத விளையாட்டு?)///
நெய்னா நான் தயார்
விளையாட்டை எங்கே வைத்துக்கொள்ளலாம்
நெய்னா நான் தயார்
விளையாட்டை எங்கே வைத்துக்கொள்ளலாம்
தம்பி மன்சூர் தைரிய சாலிதான். சவூதியில் இருந்து கொண்டு இப்படி சவால் விடலாமா? வாங்க மரைக்கா பள்ளிக்கு - அதுதான் உங்கள் களம்.
ஒருவேளை உங்கள் இருவருக்கும் சொந்தக்காரப் பேயாக இருந்தால் நம்ம புள்ளைக என்று ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டுப் போகவும் வாய்ப்பு இருக்கிறது.
மன்சூராக்கா, வாணாம் ரியாத்ல எல்லாப்பள்ளியாசலும் ரொம்ப பொழக்கமா இரிக்கிம். அதுனாலெ இ.அ. காக்கா சொல்றாப்ல மரைக்காப்பள்ளியில இருட்டுக்கசமா இருக்கிற ஒரு ராத்திரி வச்சிக்கிடலாமா? அதான் சாம்சாங்க் கேலக்ஸி 5 லாம் வந்திரிச்சில ரொம்ப எஃபக்டா ஒளி,ஒலி காணொளி ஒன்று ரெடி பண்ணிடலாம் அப்புறம் "கால்கள் இரண்டும் இல்லாப்பேய்களும்" என கட்டுரையின் தலைப்பை மாத்திக்கிட வேண்டியது தான்.
இப்பதானே ஊரிலிருந்து வந்தேன்
இன்னொருதடவை மரைக்கா பள்ளிவாசல் மயத்தான் கரையிலே விளையாட்டு லீவு கொடு என்று சொன்னால் அவ்வளவுதான் அத்தனை பேயும் இங்கே வந்துவிடும்
அப்புரம் நான் பேயா கிளம்பவேண்டிவரும்
இடத்தை சொல்லிட்டியல்ல
இன்னொரு மீல் பதிவு போடும்போது வச்சிக்கிடலாம்
மோகினிப் பிசாசு வந்தா லெட் மி நோ ப்ளீஸ்
நாலு நாளா எந்த போயோ வந்து தமிழ் டைப் அடிக்க உடாமே அடந்தரசி பன்னிபுடிச்சு இப்போ msm போட்ட பேய் கதையா பார்த்ததும் ஓடி போச்சி
abeer.abushahruk சொன்னது…
//மோகினிப் பிசாசு வந்தா லெட் மி நோ ப்ளீஸ்//
எனக்கும் லெட் மி நோங்க
மோகினி பிசாசுதான் நிறைய வீட்டிலே சுற்றி திரிந்து கொண்டு அவர்களின் மாப்பிள்ளைமார்களின் இரத்தத்தை உறிஞ்சி எடுத்துக்கொண்டு இருக்குதே
அட்ரஸ் எதுவும் வேண்டுமா
சுமார் அம்பது வருஷத்துக்கு முன்னே மெய்தீன்பீவி என்ற இளம்பெண் அவுலியாக்கள் தர்காதலைமாட்டில் பேயாடி உள்ளதுபடியுள்ளபடிபுட்டு புட்டு வச்சது.வஞ்சனை செய்வினைகளை எடுத்தது.பெரும்பாலான செய்வினைகள் தம்பதிகளுக்கு பிளவையுண்டுபண்ணுவதாகவே இருந்தது.செய்வினை செய்தவர்கள்எல்லாம் மாப்பிளை கூடப்பிறந்த ராத்தா தங்கச்சிகளே.பல தம்பதிகளின் பிணக்குகளை மைதீன் பீவியைபிடித்தபேய் சுமூகமாக தீர்த்துவைத்தது.அது கட்டபஞ்சாயத்து செய்து 'தம்பதிகளைசேர்த்து வைக்கிறேன்' ஒருஇலட்சம்கொடு ரெண்டுலெட்சம்கொடு என்றுபேரம்பேசவில்லை .மைதீன்பீவிக்குரூவா நூறோ அம்பதோ கொடுப்பார்கள். கொடுத்ததைமுகம் சுளிக்காமல் அந்தப்பெண் வாங்கி கொள்ளும்.ஆனால்நன்றிசொல்லாது.இது இந்தியப்பேய். இதுபேய்களிலே ஒரு நல்லபேய்.இறக்கமுள்ளபேய்.
Post a Comment