Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அன்புப் பெட்டகமும் ஆசை ஒட்டகமும் 4

அதிரைநிருபர் பதிப்பகம் | August 22, 2016 | ,

நபிமணியும் நகைச்சுவையும் - தொடர் : 11

வாஅக்ராஹ்! வாநாகத்தாஹ்! (ஓ, என் செல்லமே! என் ஆசை ஒட்டகமே!)

நாடோடிகளின் தூதுவர் அலறிப் புடைத்துக்கொண்டு வந்த வழியே திரும்பி ஓடினார்.

“ஓ, மதீனா வாசிகளே! அந்தோ! என் செல்லமான ஒட்டகம் பலியாக்கப்பட்டுவிட்டது. இனி நான் என்ன செய்வேன்?” என்று ஆவேசமாக அலறினார்.

இறையில்லத்தில் இருந்து இறங்கி வந்த வேகத்தில், அவரை இதமாய் அணைத்தது ஒரு கரம். அது அண்ணலின் திருக்கரம்! ஆறுதல் தரும் கரம்!

அந்த அருட்கரம் தொட்டதுமே அப்படியே அவர் அமைதியானார். அது எப்படிச்  சாத்தியம்? அந்தக்  கரத்தில் அப்படி என்னதான் இருந்தது?

அந்த இனிய கரம், சாதாரண கரமல்ல! மனித மனங்களையும் மனத்தின் உணர்வுகளையும் துல்லியமாக நாடி பிடித்துப் பார்க்கத் தெரிந்த உளவியல் மருத்துவரான உண்மைத் தூதரின் கரம்! 

அந்தக் கை, வெருங்கையல்ல! அருள் நிறைந்த கை. அறிவுப் பாதையிலிருந்து வெகுதூரம் விலகிப்போய்விட்ட, அறியாமை அந்தகாரம் எனும் அடிப்பாகமே இல்லாத, ஆழ்கிணற்றில் வீழ்ந்து கிடந்த விலங்குகளான அராபியர்களை, ஏகத்துவம் என்ற ஏணி மரம் கொண்டு கரை சேர்த்த கருணை மனிதரின் கை! இம்மையிலும் மறுமையிலும் அனைத்து முஃமின்களுக்கும் ஆதரவான ஒரே நம்பிக்கை!

இந்த இனிய கரங்களுக்குச் சொந்தமானவர் பற்றியே, தூயோன் அல்லாஹ் (ஜல்), இந்தத் தூதர் இடத்தில் உங்களுக்கு "உஸ்வத்துல் ஹஸனா" இருக்கிறது! என்கின்றான். 

ஒரு மனிதன் யாராக இருந்தாலும் சரியே! எத்தகைய சூழலில் அவன் இருந்தாலும் சரியே! எப்படிப்பட்ட தொல்லைகளால் தொடரப்பட்டவனாகவும் சோதனைகளால் சூழப்பட்டவனாகவும் வேதனைகளால் விரக்தியானவனாகவும் இருந்தாலும் சரியே! அந்தச்  சூழ்நிலைக் கேற்ற "அழகிய முன்மாதிரி"யும் அந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டிய பயிற்சி முறையும் அல்லாஹ்வின் அருட்சுடராம் அண்ணல் நபி (ஸல்) யிடம் இருக்கவே செய்தது. இன்றும் வரலாற்றில் அது வாழ்வு நெறியாக வாழ்கிறது!

இந்த மகோன்னதமான மாமனிதரின் வாழ்வு, எடுத்த எடுப்பிலேயே தாயும் தந்தையுமற்ற அனாதையாகவே ஆரம்பமாகியது!

பிறகு, ஆடு மேய்க்கும் இடையராக, கவனிப்பாரற்ற ஏழையாக, சின்னஞ்சிறு வியாபாரியாக, வணிகப்பயணியாக, குழுவின் தலைவராக, எல்லோருக்கும் நம்பிக்கையாளராக, நாணயம் மிகுந்தவராக, வாதி பிரதிவாதிகளுக்கு நடுநிலையானவராக, பேச்சில் வாய்மையானவராக, நடத்தையில் நேர்மையானவராக, நேசமான கணவராக, பாசமான தந்தையாக, ஜிப்ரீலின்  முன் சிறந்த மாணவராக, அருள்மறை ஏந்திய அல்லாஹ்வின் தூதராக, மார்க்கப் பிரச்சாரகராக, அயல்நாட்டில் தஞ்சமடைந்த அகதியாக, அரசியல் தலைவராக, தானைத் தளபதியாக, வேதத்தின் விரிவுரையாளராக, சட்டத்துறைச் சிற்பியாக, ராஜதந்திரியாக, பொறுமையின் சிகரமாக, குணமளிக்கும் மருத்துவராக, கவிஞனையும் இணங்கவைக்கும் நாவலராக, நகைச்சுவை விரும்பும் நல்ல நண்பராக, சமூக சீர்திருத்தவாதியாக, வான்வெளிப் பயணம் சென்றுவந்தவராக, வாரி வழங்கும் வள்ளலாக, வஞ்சகர்களை எதிர்த்துப் போராடிய போர்வீரராக, மதீனாவின் ஆட்சியாளராக, தலைசிறந்த நிர்வாகியாக, இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியாக, மேலும், தம் தோழர்கள் அனைவருக்கும் மிகச் சிறந்த தோழராக, எல்லாவற்றுக்கும் மேலாக, "தோழமை" என்ற சொல்லின் மொத்த வடிவமாகவே நின்றார்கள்!

அந்தி மயங்கும் சூரியன் அடிவானில் தஞ்சமடையும் நேரம். மெல்ல வருடிய கோடைக் காலத் தென்றல் காற்றால், சரசரவென ஒலித்தச் சருகுகளுடன் விளையாடிக் கொண்டிருந்த மாலைச் சூரியனின் பொன்னிறக் கதிர்கள் இருள் நெருங்கியதைத் தொடர்ந்து, அங்கு ஒளியேற்றி வைப்பது போல் விரைந்தேறி நகர்ந்து அருகேயிருந்த மலைக்குன்றின் உச்சியில் ஏறி நின்று வெளிச்சத்தைச்  சற்று  இதமாக வீசிக் கொண்டிருந்தன!

நாடோடிகளின் தூதுவர், தன் கொழுத்த இளம் ஒட்டகையிலிருந்து இறங்குவதையும் ஒட்டகையை மஸ்ஜிதுன் நபவீக்கு வெளியில் தனியே விட்டபின், அல்லாஹ்வின் தூதரிடம் அரசியல் உரையாட அவர் உள்ளே சென்றுவிட்டதையும் சில கண்கள் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தன. அவை பசியால் பஞ்சடைந்த கண்கள்!

தூக்கிவிட்டால் சுமப்பவர் எவரோ, தூண்டிவிட்டால் துள்ளி ஆடுபவர் எவரோ, அதே அந்-நுஐமான் இப்னு அம்ர் (ரலி) அப்போது சரியாக வந்து ஆஜரானார்!

“நண்பா! நாம் ஒட்டகக் கறி உண்டு எவ்வளவு காலமாகிவிட்டது கண்டாயா?” ஒருவர் அங்கலாய்த்தார்!

“அந்-நுஐமான் மனது வைத்தால், நாம் இப்போதே அறுத்துப் பொறித்துச்  சுவைத்து உண்ணலாமே” என்று உசுப்பேத்தினார் இன்னொருவர். “இதோ என்னை எடுத்துக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்லாமல், சொல்லி அழகாய் அமர்ந்திருக்கிறதே!” என்றார் பிரிதொருவர். “என்னையும் கொஞ்சம் சேர்த்துக்கொள் தோழா!” என்று கெஞ்சினார் மற்றொருவர்!

அர்த்தம் புரிந்துபோனது அந்-நுஐமானுக்கு. நகைச்சுவை நாயகருக்குக் கொஞ்சம் யோசனைதான். இலேசாகத் தயங்கினார்! எனினும் என்ன நினைத்தாரோ, உடனே செயல்பட்டார். கூட்டாளிகள் என்னால்தான் முடியும் என்று இவ்வளவு கெஞ்சுகிறார்கள். இதுகூடச்  செய்யாவிட்டால், நட்புக்கு என்னதான் அர்த்தம் இருக்கிறது! என்று அந்த ஒட்டகையை உடனே போட்டுத் தள்ளிவிட்டார்!

குர்பானி கொடுத்தாகி விட்டது!

நாடோடிகளின் தூதுவர், அரசியல் ஆலோசனை முடித்துக் கொண்டு வெளியே வந்தால், ஒட்டகை நின்ற இடத்தில், அதன் தும்புக் கயிறுதான் கிடந்தது. சற்று தூரத்தில் புத்தம் புது இறைச்சி பொறிக்கப்படும் சுவையான வாசனை மூக்கைத் துளைத்தது.

நாடோடி அரபிக்கு சட்டென்று புரிந்து போனது!

ஆத்திரம் பொங்க அரற்றி நின்ற அவர் மீது தம் அருட்கரத்தை வைத்த அண்ணலார், அவரை அமைதிப் படுத்திவிட்டு, கூட்டத்தைப் பார்த்துக்  கேட்ட கேள்வி:

“இதைச் செய்தது யார்?”

சப்தம் அடங்கிய சபையிலிருந்து ஒரு குரல் "அந்-நுஐமான்" என்றது. 

“எங்கே அந்-நுஐமான்?” 

அங்கே அந்-நுஐமான் (ரலி) உற்சாகமிகுதியால் ஒட்டகத்தை அறுத்துப் போட்டுவிட்டு, பிறகுதான் அந்தத் தகாத செயலை உணர்ந்தவராக, இந்தத்  தவற்றுக்கு என்ன தண்டனை கிடைக்குமோ என்ற உதறலில் எங்கு போய் ஒளிவது என்று யோசித்துப் பார்க்காமல், கண்ணுக்குக் கிடைத்த ஒரு வாகான தோட்டத்திற்கு ஓடிப்போய், அங்கிருந்த ஒரு சிறிய பொந்து போன்ற பள்ளத்தில்  புகுந்து ஒளிந்து கொண்டார்.

அந்நியரின் வாகனத்தை அனுமதியின்றி அறுத்துவிட்டோமே! இத்தகு செயலுக்கு என்ன தண்டனையோ என்று உள்ளுக்குள் உதறலெடுத்துக் கொண்டிருந்தது அவருக்கு!

அது அண்ணலாரின் பெரிய தந்தை ஜுபைர் இப்னு அப்துல் முத்தலிஃப் அவர்களின் மகளார் ளுபாஆ (ரலி) அவர்களுக்குச் சொந்தமான வீட்டைச் சுற்றியுள்ள ஒரு சிறிய தோட்டம்.

பள்ளத்தில் பதுங்கிக் கிடக்கும் அந்-நுஐமான் இப்னு அம்ர் (ரலி), சுதாரித்துக் கொண்டு எழுந்து ஓடிவிடக்கூடும் என்ற எச்சரிக்கையுடன், “நான் அந்-நுஐமானைப் பார்க்கவே இல்லையே! அல்லாஹ்வின் தூதரே” என்று நயமாக வாயால் சொல்லிக்கொண்டே, கையால் அவர் ஒளிந்துகொண்டிருக்கும் சாக்கடைப் புதரைச் சுட்டிக்காட்டினார் ளுபாஆ (ரலி) வின்  விவேகமான அண்டை வீட்டுக்காரர்.

தன் ஒன்றுவிட்ட சகோதரி ளுபாஆ பின்த் ஜுபைர் (ரலி) உடைய தோட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்ட இடத்துக்குச் சென்று, பேரீத்த ஓலை, இலை தழைகளையெல்லாம் பரபரவென்று அப்புறப்படுத்தித் தோண்டிப் பார்த்தால், கல்லறைப் பிணத்துக்கு உயிர்வந்துவிட்டதுபோல், பயத்தில் முகமெல்லாம் வெளிறிப்போய், அந்தக் குறுகிய பள்ளத்திலிருந்து வெளியானார் அந்-நுஐமான் இப்னு அம்ர் (ரலி). 

கண்ணின் மணி நேர் கருணைக் கடல் நபியவர்களுக்கு, அவரின் இக்கட்டான அந்நிலை கண்டு இரக்கம் சுரந்தது! மனித நெஞ்சங்களிலேயே, பரிவுடன் துடித்த கனிவு மிகு இதயங்களில் தலையாயது அல்லவா நமக்கெல்லாம் நேர்வழி காட்டிய, நானிலம் போற்றும் அந்த நாயகத்தின் உள்ளம்!

“உனக்கு ஏன் இந்தப் பரிதாப நிலை அந்-நுஐமான்?” அவர் முகத்தை மூடியிருந்த புழுதி, இலைதழை தூசுகளை எல்லாம் துடைத்து விட்டுக் கொண்டே பரிவுடன் கேட்டார்கள் அமைதியின் ஜோதி அண்ணல் நபி (ஸல்) அவர்கள். 

“எந்த மனிதர்கள் உங்களை என்னிடம் ஆள்காட்டி அனுப்பி வைத்தார்களோ, அதே ஆட்கள்தாம் என்னை, ஒட்டகையை ஒரு கை பார்க்கச் சொன்னார்கள் யா ரசூலல்லாஹ்” என்றார் வெகுளித் தனமாக!

காண்போரின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் அந்த மதி முகத்தின் மந்தகாசப் புன்னகை மாறாமல், அந்-நுஐமானை மன்னர் நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுன் நபவீக்கு அழைத்து வந்தார்கள். 

பாலைவன நாடோடிகளின் தூதுவருக்கு ஆறுதல் சொன்னது மட்டுமன்றி, அவர் இழந்ததைவிடச்  சிறந்த ஒட்டகம் ஒன்றைப் பகரமாக அளித்தார்கள் 'அன்புப்பெட்டகம்' அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.(1)

மனமகிழ்ச்சி கொண்டார் அந்த நாடோடிகளின் தூதுவர். இனிமை மிகு மொழியில், அழகுமிகு நடையில், பெருமானாரின் ஈகையை, இரக்கத்தை, ராஜரீகப் பெருந்தன்மையை, தயாள குணத்தை, வீரத்தை, விவேகத்தைப் புகழ்ந்து போற்றினார்!

அந்-நுஐமான் இப்னு அம்ர் (ரலி) யின் கை பிடித்து, அவரையும் நாடோடி அரபியையும் ஒட்டகைக் கறி விருந்துக்கு அழைத்துச் சென்றார்கள் ஓங்குபுகழ் நபியவர்கள். தோழர்களுடன் அனைவருக்கும் களிப்புடன் சேர்த்துக் கல்யாண விருந்துபோல் அமைந்தது அன்று! 

ஒட்டகத்தை இழந்தவரும் ஒட்டகத்தை அறுத்தவரும் ஒன்றாய் அமர்ந்து ஒரே மரவையில் உணவுண்ணுவதை ரசித்துப் பார்த்து நின்ற வெள்ளை மன வேந்தர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், அல்லாஹ் (ஜல்) வின் கருணையை  எண்ணி அர்த்தத்துடன் சிரித்தார்கள். அதைவிட ‘அதிஅழகு’ என்பது வேறு எங்கு நோக்கினும் இல்லவே இல்லை! (2)

ஆம்! 'அழகின் சிரிப்பு' என்றாலும் 'சிரிப்பின் அழகு' என்றாலும் இந்த இரண்டுமே அந்த ஒருவரையே சுட்டி நிற்கும்! அவர்தாம் 'அன்புப் பெட்டகம்' அண்ணல் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்!

o  o  o  o  0  o  o  o  o  
ஆதாரங்கள்:
(1) ஹயாத்துஸ் ஸஹாபாஹ் : 3/154
(2) அல்இஸாபாஹ் 3/570 : ரபீஆ இப்னு உஸ்மான் (ரலி) 
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
இக்பால் M. ஸாலிஹ்

4 Responses So Far:

Unknown said...

நண்பா,

சொல்ல வந்த கருத்தை விட அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு நீ தரும் அடைமொழிகள் பதிவு முழுவதும் பரவிக்கிடப்பது எனக்கு உன் தமிழ் மொழியின் வார்த்தை ( இன்னும் புகழ எத்தனையோ இருக்கின்றதுதான் ) பிரயோகத்தின் ஆழத்தை காட்டுகின்றது.

நீ சொல்கின்ற ஒவ்வொரு பண்பும் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு பொருத்தமான வார்த்தை என்றபோதிலும் இந்த அளவுக்கு வார்த்தைகளை மனதில் இருத்தி எடுத்து வருவது எல்லோருக்கும் வரும் கலை அல்ல.

உன் மாநபி போற்றும் வார்த்தை பிரயோகம் படிக்கும் எவரையும் அன்பு நபி
பற்றி எழுத ஆவலை தூண்டும் என்பது திண்ணம்.

அபு ஆசிப்.

sabeer.abushahruk said...

//மனித நெஞ்சங்களிலேயே, பரிவுடன் துடித்த கனிவு மிகு இதயங்களில் தலையாயது அல்லவா நமக்கெல்லாம் நேர்வழி காட்டிய, நானிலம் போற்றும் அந்த நாயகத்தின் உள்ளம்!//

Greatest truth!

Iqbal M. Salih said...

அஹ்லன் அப்துல் காதிர்!

இவ்வுலகில் பிறந்த மனிதர்களிலேயே, நம்மால் புகழப்படுவதற்கும் நேசிக்கப் படுவதற்கும் பின்பற்றப் படுவதற்கும் நம் தங்கத் தலைவரைவிட வேறு எவருக்கும் தகுதியிருக்கிறதா என்ன? அவர்கள் மீது அதிகமதிகம் ஸலவாத்துச் சொல்வதை நமக்கு நாமே கட்டாயமாக்கிக் கொள்வோமாக.

மிக விரைவில், நல்லதொரு தொடரைத் தருவாய் என்று நம்புகின்றோம், இன்ஷா அல்லாஹ்.

Iqbal M. Salih said...

Thanks for your heartfelt comments, Sabeer.
See you soon, insha Allah.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு