அதிகாலை வேளை. சுற்றுலா சென்ற இடத்தில் திடீரென என் மகனை காணவில்லை. "அவனுக்கு நம் போன் நம்பர் நினைவிருக்குமா?, கூட்டத்தில் யாரிடம் கூச்சம் விட்டு , போன் வாங்கி என்னை தொடர்புகொள்வான்" என்ற புலம்பலில் ஆரம்பிக்கிறது தேடலின் பதற்றம்.. போன வாரம் கூட இதேபோல் என் 3வயது மகள் என் கைப்பிடிக்குள் இருந்து நழுவி எங்கோ செல்ல "எங்கே அவளை தேடுவேன், வாகனங்கள் மிகுந்த பகுதியை கடந்திருப்பாளா? அழுதழுது மூச்சு விட முடியாமல் தவித்தபடி யாரிடத்திலேனும் அடைக்கலமாகியிருப்பாளா" என்றெல்லாம் நினைத்து வெதும்பி அலைந்து தேடிய பின்னர் கிடைத்தாள். இம்முறை என் மகன்! தேடலின் ஆரம்பப்புள்ளியிலேயே வலிகள் நெஞ்சை அடைக்க நீரால் நிரம்பிய கண்களை வலுகட்டாயமாய் திறந்துக்கொண்டேன்.. நிம்மதியாய் கட்டிலில் உறங்கும் மகனை பார்த்த பின் ஒரே அலைவரிசையில் மூச்சுக்காற்று உள்ளூம் வெளியேயும் சென்றது. ஆம்! இரண்டு நிகழ்வுகளும் கனவு தான் ! ஆனால் "ச்ச, கனவா" என வழக்கம் போல் புறம்தள்ள முடியாத ரணம் அது ! எழுத்துக்குள் அகப்படாத பரிதவிப்பு !
இந்த கனவு குறித்த சிந்தனைகளில் மூழ்கியபடியே வேறொரு தேவைக்கு கூகுள் தேடலில் தொலைந்தபோது பர்வீனா பற்றிய தகவல் கிடைத்தது எதார்த்தமான ஆச்சர்ய பொருத்தம்! எனக்குள் சொல்லிக்கொண்டேன் 'என்னே பொருத்தம்' .
உங்கள் குழந்தைகளை நீங்கள் தொலைத்ததுண்டா? லட்சத்தில் ஒருவருக்கு தொலைத்த அனுபவம் இருக்கலாம்.. அவர்களின் தேடல் ரணங்களின் நீட்சியாய் இருக்கலாம். ஆனாலும் பொதுவாய் இச்சூழல் அரிதிலும் அரிது !. கொடுத்துவைத்தவர்களல்லவா நாம் ? நம் குழந்தைகள் போல் பாதுகாப்பான சூழலில் வாழ்க்கை அமைந்த அதிஷ்ட்டசாலி குழந்தைகள் அல்ல காஷ்மீரிகள்.
புரிந்திருக்கும்..பர்வீனா யாரென்று. அத்துடன் இக்கட்டுரையை நீங்கள் 'பத்தோடு பதினொன்றென' முடித்துக்கொள்ள அவ்வடையாளம் போதுமானதாய் இருக்கலாம். 12 வயதில் திருமணம் செய்துகொடுக்கப்பட்டு வீடே கதியென கிடந்த சராசரிப் பெண்ணின் குரல் திடீரென ஓர்நாள் ஆக்ரோசமாய் அலறியதையும், ஓர் தனிமனுஷியின் போராட்டம் மக்களின் அமைப்பாய் உருமாற்றமானதும் மனசாட்சியுடையவர்களால் எளிதில் கடந்துவிடக்கூடிய செய்தியல்ல! இறந்துவிட்டாலும் அது சிலகால இழப்பின் வேதனையுடன் முடிந்துபோகும், ஆனால் தம் பிள்ளை என்னவானான் என்றே தெரியாமல் ஒவ்வோர் நாளும் வலியுடன் முடித்து வலியுடனே ஆரம்பமாகுமே! அத்தகைய கண்ணீரை நீங்கள் நிச்சயம் அறிந்திட வேண்டும். உங்கள் குடும்பத்தின் பொருளாதாரத் தேவையை நிறைவேற்றிக்கொண்டிருக்கும் குடும்பத்தலைவனோ, எதிர்காலத்தை வளப்படுத்த காத்திருக்கும் உங்கள் மகனோ சட்டென உங்களில் இருந்து காணாமல் போனால் அந்நொடியே வாழ்க்கைச்சூழல் தலைகீழாய் சுழலுமே, அதன் மரணவலி புரிய வேண்டும்.
"யாரும் ஒரு தாயின் வலியை புரிந்துகொள்ளவில்லை, நான் பாதிக்கப்பட்டவள், என்னைப்போல் பாதிக்கப்பட்டோர் பலர் காஷ்மீரில் உண்டு, APDP என் வலிகளைச் சுமந்த, என்னைப்போன்று நூற்றுக்கணக்கான தாய்களின் கண்ணீரையும் பிறப்பிடமாய் கொண்ட அமைப்பு" என அப்பெண் புகழ்பெற்ற லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் அறிமுகம் செய்த போது அரங்கம் கனத்தது!
" ராணுவ உயர் அதிகாரி என்னை அழைத்து, கேஸ் வாபஸ் வாங்கிக்கொள்ள என்னிடம் பேரம் பேசினார் , 10 லட்சமென்றும் 20 லட்சமென்றும் அரசு வேலையொன்றை வாங்கி தருவதாகவும் , ஆசை காட்டினார். என் மகனுக்கான தேடலுக்கு அவர்கள் நிர்ணயித்த விலை இவை அனைத்தும். ஆனால் ஒரு அன்னையால் எப்படி தன் மகனை விற்க முடியும்?" என்று அவரின் குரல் அலிகார் பல்கலைகழக மேடையில் ஒலித்த போது அரங்கம் முழுதும் அதிர்ந்தது!
பிலிப்பைன்ஸ், தாய்லாந்த், இந்தோனேஷியா, ஜெனிவா, கம்போடியா, லண்டன் போன்ற பல்வேறு நாடுகளில் தான் உருவாக்கிய APDP அமைப்புக்காக கலந்துகொண்டு உலக நாடுகளின் கவனத்தை திருப்பி வரும் பர்வீனா அதிகம் படித்தவரல்லர். 1990 வரை சந்தோஷங்களும், கொண்டாட்டங்களும் மிகைத்திருந்த குடும்பத்தின் தலைவி என்பதை தவிர்த்து எந்த பெரிய பின்புலமும் அடையாளமும் அல்லாதவர். வீட்டை விட்டு அதிகம் வெளியே செல்லாதவர் அன்றைய நாளில் ஆரம்பித்த ஓட்டம் இன்றும் நின்றபாடில்லை! தனக்கு மட்டும் அன்று ஓடியவர் இன்று தன்னுடன் சேர்த்து பல குடும்பங்களுக்காகவும் போராடுகிறார்.
என்ன தான் நடந்தது ? அவரே அந்நிகழ்வைச் சொல்லக் கேட்போம்,
18 ஆகஸ்ட் 1990,
அன்றைய அபாயகரமான இரவு, என் அன்றாட நிகழ்வுகளை அடியோடு புரட்டிபோடும் என நான் எதிர்பார்க்கவில்லை. என் மகன் ஜாவீத் படிப்பதற்காக என் சகோதரன் வீட்டில் தங்கச் சென்றிருந்தான். அன்றிரவு தேசிய பாதுகாப்புப் படையை ( NSG) சேர்ந்த சில கமேண்டோக்கள் ரெய்ட் எனும் பெயரில் அப் பகுதிக்கு வந்து, என் மகனை இழுத்துக்கொண்டு சென்றார்கள். அப்போது 16 வயது அவனுக்கு. எவ்வித சர்ச்சைக்குரிய அமைப்புகளின் வாடையும் உணராத மென்மையான குணம் கொண்ட பாலகன் அவன். பள்ளி சென்றது போக மீத நேரம் எனக்கு உதவியாக இருப்பான். அந்த வருடம் கூட அவன் தான் பள்ளியின் முதல் மாணவன்.
பக்கத்துவீட்டு பெண் ஓடிவந்து கதவு தட்டி பதட்டமாய் சொன்னாள். சற்று நேரம் கருப்பான ஓர் இருட்டுக்குள் அடைபட்டவளைப்போல் செய்வதறியாது ஸ்தம்பித்தேன். அனைத்து காவல்துறை விசாரணை மையங்கள் மற்றும் இராணுவ முகாம்களிலும் தேடினேன். பயனில்லை. அடுத்த நாள் காவல்நிலையம் சென்று புகார் அளித்தேன். என் மகன் பற்றிய தகவல் ஒன்றேனும் அவர்கள் சொல்லக்கூடும் என எடுபிடி வேலை பார்க்கவும் நான் தவறவில்லை. பின்னர் தான் தெரியவந்தது அவர்கள் எப்.ஐ.ஆர் கூட பதியவில்லை. மாறாக என்னை B.B கண்டோன்மெண்ட் இராணுவ மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்கள். அங்கில்லை. 2ம் முறை சென்றேன், வீண். மூன்றாம் முறை சென்றும் வெறுங்கையுடன் திரும்பினேன்! என் மகன் ஜாவீத் அங்கே இல்லை.
தொடர்ந்து அடுத்தாண்டு வரை இப்படியாக அலைகழிக்கப்பட்டேன். போலிஸின் பொய்கள் ஒரு கட்டத்தில் சளிப்பான போது அருகிலுள்ளோர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டேன். கூட்டத்தை கலைத்தார்கள்.. மீண்டும் போராடினேன்... நீதிமன்றத்தை அணுகும்படி அவர்களின் கையை விரித்தார்கள். வழக்கை கோர்ட்டில் பதிந்தேன், வருடம் முழுக்க விசாரணை ஓடியதே தவிர என் மகன் என்னிடம் வந்து சேரவில்லை. ஒரே ஒரு பலன் எனில் என் மகன் மூன்று ராணுவ அதிகாரிகளால் பிடித்துச் செல்லப்பட்டது மட்டும் உறுதியானது அங்கே ! எம்.எல்.ஏ முதல் முதலமைச்சர் வரை சென்று முறையிட்டேன். என் வலிகளும், என் தேடல்களும் யாருக்கும் ஒரு பொருட்டாகவே இல்லை. அடர்ந்த காட்டுக்குள் தனி ஒருத்தியாய் கதறி அழுவது போன்றதான நிலை அது ! அந்த நேரத்தில் தான் என்னைப்போலவே பலரும் தங்கள் கணவனை காணவில்லை என்றும் மகனை தேடியும் காவல்நிலையத்துக்கும், கோர்ட்டுக்குமாய் அலைந்துகொண்டிருந்தார்கள். அவர்களுடன் போராட தீர்மானித்தேன். 1994ம் ஆண்டு காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் சங்கம் (Association of Parents of Disappeared Persons:APDP) உருவாக்கினேன் " . முடித்தார்.
இப்படியாக உருவாக்கப்பட்ட அமைப்பில் மூவாயிரம் குடும்பங்கள் உறுப்பினர்களாய் உள்ளார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் தேடல் கதை உண்டு! அவையெல்லாம் படித்திட நமக்கு நேரமில்லை, பலருக்கோ தேவையும் இல்லை! APDPஐ சார்ந்தவர்கள் பொது இடங்களில் அடிக்கடி ஒன்றுகூடுவதன் மூலம் நம் வலியும், நம் தேவையும் குறித்து பலரின் கவனத்தை பெற முடியும் என ஓர் பாதிக்கப்பட்டவர் ஆலோசணை முன்வைக்க, அதனை ஏற்று பர்வீனா அன்று முதல் ஒவ்வொரு மாதமும் 10ம் தேதி ஶ்ரீநகரின் லால்சவுக் பகுதில் ஒன்று கூட்டுகிறார். மௌனமாய் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் பங்கேற்கிறார்கள். ஒவ்வோர் மாதமும் 15,30 ஆகிய இருதேதிகள் மொத்தமாய் ஒன்று கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கிறார்கள். தங்கள் தேவைகளை அதிகாரவர்க்கத்திடம் முறையிடுகிறார்கள்.
APDPயின் அலுவலகத்தில் அவர்களே தயாரித்த காலண்டர் , அலுவல் பயன்பாட்டிற்கு உண்டு. அதிலும் மாதவாரியாக தொலைந்து போனவர்களின் வரைகோட்டுப் படங்கள்... APDPயின் சார்பில் நடக்கும் பேரணி, கூட்டங்களிலும் காணாமல் போனவர்களின் படங்கள்! கழுத்தில் மாட்டியிருக்கும் அடையாள அட்டையிலும் ஒவ்வொரு தாயின் தொலைந்து போன குடும்ப ஆண்கள்! இப்படியாக அவர்களின் ஒவ்வொரு போராட்ட முன்னெடுப்பிலும் அவர்களின் நோக்கம் , மௌனங்களின் சத்தங்கள் உலகுக்கு எதிரொலிக்கும் யுக்தியை கையாள்கின்றனர். இத்தனைக்கும் காரண கர்த்தா பர்வீனா என்ற இரும்புப் பெண்மணி...
பர்வீனாவை காஷ்மீர் குடும்பங்கள் கொண்டாடுகின்றன. காஷ்மீரின் இரும்பு மனுஷி என புகழாரம் சூட்டுகின்றன. காஷ்மீர் மட்டுமல்லாது தன் அமைப்புக்காய் அவர் வெளிமாநிலம் செல்லுமிடமெல்லாம் இளைய பட்டாளம் அவரை கௌரவிக்கின்றனர். பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆர்வத்துடன் பலர் பர்வீனாவின் அமைப்பில் இணைகிறார்கள். இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க பல்வேறு நாடுகளுக்கும் சென்று காஷ்மீரின் நிலைகளை விவரிக்கிறார். தொலைந்துபோனவர்களைத் தேடுவதற்கான போராட்டத்திற்கு ஆதரவு திரட்டுகிறார். " எங்கள் குடும்ப ஆண்கள் உயிரோடு இருக்கிறார்களா , இறந்துவிட்டார்களா என்றாவது இந்த அரசு எங்களுக்கு சொல்லிவிட வேண்டும். ஆம்... 1989 ம் ஆண்டு வரையில் ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். அப்படியாக கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கேனும் ஆறுதல்பட்டுக்கொள்ள கல்லறைகள் நினைவிடமாய் உண்டு. ஆனால் எங்களின் உறவுகளோ என்னவானார்கள் என்றே தெரியாமல் ஒவ்வோர் நாளும் வலியுடன் கழிக்கிறோம்" என்று வேதனையுடன் ஒவ்வோர் முறையும் முறையிடுகிறார்.
அவரின் வலிகொண்ட பயணத்துக்கு சிறு ஊக்குவிப்பாய் விருதுகளும் பாராட்டுக்களும் குவிந்தவண்ணமுள்ளன. 2005ம் ஆண்டு நோபல் பரிசுக்காய் பரிந்துரைக்கப்பட்டார். CNN IBN 2011ம் ஆண்டின் சிறந்த இந்தியர்களுக்கான விருதுக்கு பர்வீனாவை பரிந்துரைத்த போது நிராகரித்தார். "இந்திய ஊடகங்கள் காஷ்மீர் விஷயத்தினை சித்தரிக்கும் விதம் , உண்மையிலிருந்து எப்போதும் வித்தியாசப்பட்டதாகவே இருக்கிறது" என்ற காரணத்தையும் முன் வைத்தார். இப்படித்தான் ஓர் முறை லால்சௌக்கில் அனைத்து குடும்பங்களும் வழக்கம் போல் 10ம் தேதி ஒன்று கூட, டெல்லியை சேர்ந்த ரிப்போர்ட்டர் பேட்டி எடுத்துள்ளார். எத்தனை குடும்பங்கள் உங்களுடன் சேர்ந்து இந்த போராட்டத்தில் இப்போது கலந்துகொண்டுள்ளன என அவர் கேட்ட கேள்விக்கு பர்வீனா சொன்னார் "300". ஆச்சா? அடுத்தநாள் பத்திரிக்கையில் இப்படியாக செய்தி வருகிறது, மொத்தம் 300 பேர் காணாமல் போயுள்ளார்கள் என்று.
APDP கணக்கீட்டின்படி 5,000-6,000 காணாமல் போனவர்கள் வழக்குகள் அவர்கள் அமைப்பில் பதிவாகியுள்ளன. அவர்கள் மதிப்பீட்டின் படி சுமார் 8000-10000 பேர் காணாமல் போயிருக்கலாம். ஆனால் காஷ்மீர் அரசு 2009 ல் வெளியிட்ட அறிக்கையில் 3,429 வழக்குகள் பதிவானதாகவும், இவர்கள் 1990-1999 க்குள் காணாமல் போனவர்கள் என்றும் கணக்கு வெளியிட்ட போது "மாநில அரசு 'விஷயங்களை மறைப்பதில்" மிகச்சிறப்பாய் செயலாற்றுகிறது" என்று அதிரடியாய் அறிக்கை விட்டார். மாநில மத்திய அரசுகளை தொடர்ந்து சாடி வரும் இவர் அனைத்து காலகட்டத்திலும் சொல்வது இதுதான் " இதை சொல்வதில் எனக்கொன்றும் பயமில்லை ! உண்மைகளைச் சொல்லிக்கொண்டே இருப்பேன், அதனை யாரும் தடுக்க முடியாது".
"உங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் ஒரு சிறைச்சாலையை பார்த்ததுண்டா? என் 26 ஆண்டுகால வாழ்க்கையில் பல சிறைச்சாலைகளுக்கு சென்றுவந்துவிட்டேன்! இன்னும் தொடர்வேன்..என் மகன் பத்திரமாய் எங்கோ ஓரிடத்தில் இருக்கிறான் என்ற நம்பிக்கை துளி அளவு இருக்கும் வரையிலும் தேடுவேன். மரணம் ஒன்று மட்டுமே என் தேடலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்" என்ற அவரின் சொற்கள் மீண்டும் என் கெட்ட கனவை மீட்டன. சில நொடிகூட பர்வீனாவாய் கற்பனை செய்துகொள்ள முடியவில்லை. முடிவுறா சோகங்களும் கண்ணீர்களுமான வாழ்க்கைப்பயணங்களில் ஆழ்த்தப்பட்டவர்களுக்கு சிறு ஆறுதலேனும் தருவதற்கான வழிகளை வலிகளுடன் யோசிக்கிறேன்!
ஆனாலும் பர்வீனாவை இன்னும் ஓரிரு நாளில் மறந்திருப்போம்! எனில்
அன்னையர் தினம் கொண்டாடும் போது கொஞ்சமேனும் நம் உள்ளங்கள் கூனிகுறுகட்டுமாக!!!!
ஆமினா முஹம்மத்
4 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும்.படிக்கும் வரியெங்கும் ஒருவித வலி , நெகிழ்சி, திடமான பெண்ணின் முயற்சி,செயலாற்றல் எல்லாம் காணமுடிந்தது, தன் மகன் தொலைந்தார் என அத்துடன் இல்லாமல் இனி எந்த சகோதரிகளும் ,சகோதரனும் தொலைந்துவிடக்கூடாது என்னும் தூய எண்ணம் அவ்வாறு தொலைந்தவர்களுக்கு ஆறுதல் சொல்வதல்லாமல் அவர்களின் தேடலிலும் பங்கு கொள்ளுதல் இப்படி போற்றதக்க பெண்! மேலும் இங்கே என் சகோதரி ஆமீனா அவர்களை பற்றி சொல்லவேண்டும். வளரும் எழுத்தாளரில் இவர் வளர்ந்த ,செயலாற்றல் மிக்க திறமையான எழுத்தாளர். வாழக,வளர்க்க மேன்மேலும்.ஆமீன்.
//வழிகளை வலிகளுடன் யோசிக்கிறேன்! //
///அன்னையர் தினம் கொண்டாடும் போது கொஞ்சமேனும் நம் உள்ளங்கள் கூனிகுறுகட்டுமாக!!!! ///
எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த தாய்களுக்கும் மனைவிமார்களுக்கும் அவரவர் தேடல்களை பெற்றுத் தருவானாக ஆமீன்.
//வழிகளை வலிகளுடன் யோசிக்கிறேன்! //
///அன்னையர் தினம் கொண்டாடும் போது கொஞ்சமேனும் நம் உள்ளங்கள் கூனிகுறுகட்டுமாக!!!! ///
எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த தாய்களுக்கும் மனைவிமார்களுக்கும் அவரவர் தேடல்களை பெற்றுத் தருவானாக ஆமீன்.
//உங்கள் குழந்தைகளை நீங்கள் தொலைத்ததுண்டா? லட்சத்தில் ஒருவருக்கு தொலைத்த அனுபவம் இருக்கலாம்.. அவர்களின் தேடல் ரணங்களின் நீட்சியாய் இருக்கலாம். ஆனாலும் பொதுவாய் இச்சூழல் அரிதிலும் அரிது !. கொடுத்துவைத்தவர்களல்லவா நாம் ? நம் குழந்தைகள் போல் பாதுகாப்பான சூழலில் வாழ்க்கை அமைந்த அதிஷ்ட்டசாலி குழந்தைகள் அல்ல காஷ்மீரிகள். //
// உங்கள் குடும்பத்தின் பொருளாதாரத் தேவையை நிறைவேற்றிக்கொண்டிருக்கும் குடும்பத்தலைவனோ, எதிர்காலத்தை வளப்படுத்த காத்திருக்கும் உங்கள் மகனோ சட்டென உங்களில் இருந்து காணாமல் போனால் அந்நொடியே வாழ்க்கைச்சூழல் தலைகீழாய் சுழலுமே, அதன் மரணவலி புரிய வேண்டும்.//
// என்னைப்போலவே பலரும் தங்கள் கணவனை காணவில்லை என்றும் மகனை தேடியும் காவல்நிலையத்துக்கும், கோர்ட்டுக்குமாய் அலைந்துகொண்டிருந்தார்கள். அவர்களுடன் போராட தீர்மானித்தேன். 1994ம் ஆண்டு காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் சங்கம் (Association of Parents of Disappeared Persons:APDP) உருவாக்கினேன் "// .
எழுதப்பட்ட வரிகள் குறைவாக இருக்கலாம். அந்த வரிகளின் பின்னால் வடிக்கபட்டிருக்கும் வலிகள் அதிகம் . தாங்கிக் கொள்ளவே இயலாத வலிகள்.
அந்த வலிகள் வடுக்களாக மாறிக் கொண்டு இருக்கின்றன. வரலாறு கவனித்துக் கொண்டு இருக்கிறது. ஓநாய்களோ நாங்கள் ஓட்டுரிமை கொடுத்து தேர்தல் நடத்தினோம் என்று ஓலமிடுகின்றன.
அழகென்று நாம் எண்ணிக் கொண்டு இருக்கும் காஷ்மீரத்தின் இந்த அவலத்தை நமக்கும் படம் பிடித்துத் தந்த சகோதரி அவர்களுக்கு நன்றி.
பலருக்கும் எடுத்துச் சொல்லப்படவேண்டிய பரிதாபக் கதைகள் . சொல்வோம். இன்ஷா அல்லாஹ்.
Post a Comment