பெரும் மதிப்பிற்குரிய பேராசிரியர் M H J அவர்களுக்கு,
தங்களுக்கு அறிவுரை கூறும் அளவுக்கு எனக்கு அனுபவம் உள்ளதாக நான் நினைக்கவில்லை, இருப்பினும் பலரின் ஆதங்கத்தை உங்கள் பார்வைக்கு கொண்டு வர விழைந்ததன் வெளிப்பாடே இந்த கடிதம். இறுதி நேரத்தில் மறுப்பு தெரிவிக்கும் சாத்தியக் கூறுகள் குறைவானதே என்பதை அறிவேன், இருப்பினும் நிகழ்ச்சியின் பாதகத் தன்மையை முன்கூட்டியே எடுத்துரைக்க விரும்பியதே இக்கடிதத்தின் நோக்கம்.
புதிய கல்விக் கொள்கை குறித்து தந்தி தொலைகாட்சி நடத்தும் மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் தாங்கள் கலந்துகொள்ள விருப்பதாக அறிந்தேன். காவி மயம் என்ற தலைப்பில் தாங்களும், காவியம் என்ற தலைப்பில் பாஜக மற்றும் இந்துமக்கள் கட்சியை சேர்ந்தவரும் பேசவிருப்பதாகவும் அறிந்தேன்.
இருதரப்பிலும் பேச்சாளர்களாக தலா மூவர் என்ற அடிப்படையில் விவாத நிகழ்ச்சி நிகழ்த்துவதே மறைமுக கருத்து திணிப்புக்கான முயற்சிகள் என்பது அப்பட்டமாக தெரிகிறது. தாங்கள் எப்படி சம்மதித்தீர்கள். புதியக் கல்வி கொள்கை குறித்து எத்தனையோபேரை அழைக்க முடியும் என்ற போதும் ஓர் முஸ்லிமை கொண்டு எதிர்கருத்து கூற வைப்பதன் சூழ்ச்சியை நீங்கள் உணரவில்லையா?
உங்கள் கல்வியின் மூலம் நீங்கள் பெற்ற அறிவாற்றல் பற்றியும், பல மேடைப்பேச்சுக்களின் வாயிலாக உங்களின் வாதத்திறமை பற்றியும் நாம் அறிவோம். எதிர்தரப்பினரின் கருத்துக்களை கோபம் கொள்ளாமல், தர்க்க ரீதியில் தகர்த்தெறிக்கும் திறன் அல்லாஹ் உங்களுக்கு நிரப்பமாய் தந்துள்ளதையும் அறிவோம். இருந்தபோதும் கூட பேச்சாளர்களுக்கு ஒதுக்கப்படும் நேரம் குறித்து பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்ட உங்களுக்கே தெரியும். அப்படியிருக்க, நேர அடிப்படையில் குறைவான கருத்துக்கள் உங்கள் தரப்பிலிருந்தும், அதிகபட்ச கருத்துக்கள் காவியமயம் என்ற தரப்பிலும் பேச வைப்பதன் மூலம் மக்கள் மனதில் உளவியல் ரீதியாய் தந்தி தொலைகாட்சியினரும் பாண்டே வகையறாக்களும் புகுத்தவிருக்கும் தாக்கங்கள் பற்றி நீங்கள் சிந்திக்கவில்லையா?
கல்வியாளர் என்ற அடிப்படையில் உங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தால், பாஜகவும் ஹிந்துத்துவாவின் உறுப்பினருக்கும் அங்கு என்ன வேலை ? புதியக் கல்வி கொள்கைக என்பது எதனைச் சார்ந்தது என்றே தெரியாத பாமர மக்களும் நடுத்தர வர்க்கத்தினருக்குமே இன்னும் அதனைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தாத நிலையில், சாதக பாதகங்களை அலசுவதற்கு தகுதியான நபர்களைக் கொண்டு நடத்தப்பட வேண்டிய நிகழ்ச்சியினை மதசண்டையாக உருமாற்றும் பாண்டேயின் சதியினை தெரிந்தே ஏற்பது வேதனையளிக்கிறது. புதியக்கல்வி கொள்கையை "இந்து-முஸ்லிம்" பிரச்சனையாக மட்டுமே சித்தரிக்க முயலும் இது போன்ற நிகழ்ச்சிகளில் தெரிந்தே நாம் பலிகாடாவாவது வருத்தமளிக்கிறது.
இனி என்ன செய்ய! நேரம் குறைவு தான். வாக்களித்ததை நிறைவேற்றும் நிலையில் நாம் இருக்கிறோம். இருப்பினும் உங்கள் எதிர்ப்பை சுட்டி காட்ட இன்னும் உங்களுக்கு வாய்ப்பிருப்பதாகவே கருதுகிறேன். தயவு செய்து மதச்சாயத்தை வெளுக்க, நடுநிலையாளர்களை பேசுவதன் அவசியத்தை உணர்ந்து , நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுங்கள்.
உங்களால் முடியும் என்று கருதியே இந்த மடல்... எல்லாவற்றிற்கும் மேல் அல்லாஹ்வின் நாட்டம்.
ஆமினா முஹம்மத்
5 Responses So Far:
பாராட்டவும் ஏற்றுக்கொள்ளவேண்டிய அறிவுபூர்வமான கருத்தும்இந்தவேண்டுகோள் கடிதத்தில் இருக்கிறது.தர்க்கத்தை தவிர்ப்பது நலம்.
ஆமாம். தர்க்கத்தை தவிர்ப்பது நலம்.
இது மக்கள் மன்றம். மக்கள் சார்பாகவும் பேசலாமா? அப்படியானால் அதிரை நிருபர் சார்பாக யாரையாவது அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யலாமே. - பேராசிரியருக்கு உதவியாக.
3 க்கு 3 என்பதே சரி, ஒரு பேசும்போது அடுத்த இருவர் சரியான கருத்தை பற்றி சிந்திச்சு பதில் அளிக்க ஏதுவாக இருக்கும். மேலும் சிறந்த இஸ்லாமிய பேராசியர்களை இயக்க பிரச்சினையையும் தாண்டி அழைத்துக்கொள்வது மிக்க நலம்
இன்ஷா அல்லாஹ், அல்லாஹ்வின் உதவியால் சாதிப்பார் பேராசிரியர் அவர்கள். நாம் துஆ செய்வோம்.
Post a Comment