Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நோன்புக்கு பிறகு... 33

ZAKIR HUSSAIN | August 31, 2011 | , ,

நோன்புக்கு பிறகு சிலருக்கு செறிமானக்கோளாறுகள் தலைதூக்கக் கூடும்.இப்படி செறிமானப் பிரச்சினை உள்ளவர்கள் ஏற்கனவே [நோன்பு இல்லாமலே] செறிமானக் கோளாறு இருந்திருக்கக் கூடும். நோன்பு முழுக்க ஹதீஸ், இபாதத் என இருந்து விட்டு நபி ரசூல் [ஸல்] சொன்ன ஒரு சின்ன விசயத்தை கவனம் செலுத்தாமல் அதை தூக்கி பரன் மீது போட்டு விட்டு 30 நாளும் விட்டுப்போன சாப்பாட்டை எல்லாம் கிரடி கார்டு கம்பெனி மாதிரி கடைசி பைசா வரை வசூலிப்பது மாதிரி சாப்பாட்டை எல்லாவற்றையும் ஒரெ நாளில் அல்லது 2, 3 நாளில் சாப்பிட நினைக்கும் "ஜின்" தனம் தான் இதற்கெல்லாம் காரணம் சரி நபி [ஸல்] என்ன சொன்னார்கள் [உணவு விசயத்தில்] என்பது தெரியும் stomach பகுதியில் 1 பகுதி உணவு, 1 பகுதி தண்ணீர், 1 பகுதி காலியாக இருக்க வேண்டும் [மொத்தமெ 3 பிரிவுதான்காரணம் உணவு உள்ளே போனவுடன் இயற்கையாக அமிலம் [HCL/ Muriatic acid] உணவுடன் கலக்க ஆரம்பித்துவிடும்இந்த நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் வரக்காரணம் இந்த படத்தை பார்த்தால் தெரியும் sphincter பகுதி இயற்கையாக மூட விடாமல் நாம் செய்யும் தவறுதான். 


நீங்கள் கொஞ்சம் பெரிய அளவில் ஒரு ஆட்டிறைச்சித் துண்டை உள்ளே அனுப்பிவிட்டால் அதை தள்ளுவதற்கு உங்கள் குடல் சிரமப்படலாம், உடனே அது வாயுவை அனுப்பி உணவை அடுத்த ஸ்டேஜுக்கு கொண்டு செல்லும்அதற்கு குடலில் வெற்றிடம் தேவை. சமயத்தில் ஆட்டிறைச்சிதானே என்று நீங்கள் சாப்பிட்டு விட்டாலும் அந்த ஆட்டின் லைஃப் ஸ்டைல் உங்களுக்கு தெரியாதுஅது ஏற்கனவெ “Gym” க்கு போய் மிஸ்டர் ஆடு 2011 என பட்டம் வாங்கியிருந்து அதன் இறைச்சி பூப்போல இருக்கும் என நீங்கள் நினைத்தால் அதற்கு பெயர் தான் 'அறியாமை' சரி இப்படியெல்லாம் கவனமாக இருந்தால் 200 வருசம் வாழ முடியுமா? என 'க்ரோர்பதி' கேள்வியெல்லாம் நீங்கள் கேட்கலாம்பதில், முடியாதுதான் இருந்தாலும் வாழும் காலங்களில் நிம்மதியாக வாழ இவை உதவும்.

சிலர் வாழும் நாடுகளுக்கு தகுந்த மாதிரி தனது உணவு பழக்கத்தை வைத்துக்கொள்வதில்லை. Carbohydrate அதிகம் சாப்பிட்டாலும் அது செரிப்பதற்கு பிரச்சினை இல்லாத ஊர்கள் சவூதி, துபாய் போன்ற வெயில் கடுமையான ஊர்கள். அந்த ஊர்களில் வெழுத்துகட்டும் பிரியாணியை குளிர் அதிகம் உள்ள நாடுகளிலும் வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க சொன்னமாதிரி சாப்பிட்டால் see in hospital very soon. அதற்காக சவுதி, துபாய் போன்ற வெயில் நாடுகளுக்கு இப்படி வெளுத்துக்கட்ட N.O.C கிடைத்து விட்டது என நினைத்து விட வேண்டாம்.

சில சமயங்களில் நான் ஊர் போயிருக்கும் போது சிலர் என்னிடம் தனது மெடிக்கல் ரிப்போர்ட்டை காண்பிப்பார்கள் “டாக்டர் ஒன்னுமில்லேன்னு சொல்லிட்டான்” என சொல்வார்கள். இது வரை யாரும் ஒரு nutritionistஐ பார்த்ததாக இதுவரை என்னிடம் யாரும் சொன்னதில்லை. இதற்க்கு முன் ஒருமுறை சாப்பிடும் பழக்கங்கள் விசயமாக ஒருமுறை எழுதியிருக்கிறேன். http://adirainirubar.blogspot.com/2010/07/blog-post_17.html [பசிக்காக சாப்பாடு]

ஜென் & தடுமல் [ ZEN & COLD ]
ஒரு ஜென் ஞாநி இடம் படித்த ஒரு மாணவன் இரவு நேரத்தில் அவருக்கு தெரியாமல் சுவர் ஏறிக் குதித்து நடு இரவில் ஊர் சுற்றப் போய்விட்டான்,


சுவரின் பக்கத்தில் ஒரு சின்ன கல் இருந்தது [அவன் சுவர் ஏற உதவிய கல்], இதைப்பார்த்த ஜென் ஞாநி அந்த கல்லை அகற்றி விட்டு அங்கேயே சுவற்றுக்கு கீழே உட்கார்ந்து இருந்தார், இரவில் ஊர் சுற்றி வந்த மாணவன் கல் என நினைத்து ஞாநியின் தலையில் காலை வைத்து இறங்கியவுடன் அவனுக்கு பயம், ஞானி தண்டித்து விடுவாரோ என “ ஏன் இரவில் ஊர் சுற்றுகிறாய் ? தடுமல் பிடித்துக்கொள்ளும்” – என்றார் அந்த ஞாநி, ஞாநி காத்திருந்ததின் purpose அதுதான், பெரும்பாலும் வாழ்க்கையின் purpose யிலிருந்து நாம் வேறுபட்டு செயலாற்றுகிறோம்.

- ZAKIR HUSSAIN

அமீரகத்தில் அதிரையின் ஆளுமை ! - பெருநாள் சந்திப்பு: காணொளி 13

அதிரைநிருபர் பதிப்பகம் | August 30, 2011 | , , ,

அல்லாஹ்வின் திருப் பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...









அல்லாஹ் அக்பர், அல்லாஹ் அக்பர்
அல்லாஹ் அக்பர்
லாயிலாஹ இல்லல்லாஹ்
அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அக்பர்
வலில்லாஹில் ஹம்து !

நம்மையெல்லாம் படைத்து பாதுகாத்து வரும் அந்த ஓர் இறையை போற்றி, அல்லாஹ்வின் கிருபையால், ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் அதிரைச் சகோதரர்களின் நோன்பு பெருநாள் சந்திப்பினை நல்லுள்ளம் கொண்ட அதிரை இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.


இன்று (30-ஆகஸ்ட்-2011) தேரா - துபாய், ஈத்கா மைதானத்தில் பெருநாள் தொழுகை முடிந்ததும், ஏராளமான அதிரைச் சகோதரர்களின் சங்கமம் வங்கக் கடலின் வெந்நிற நுரை பொங்கியெழும் சந்தோஷமான ஆர்ப்பரிக்கும் சகோதரர்களின் உணர்வை அங்கே காண முடிந்தது.

இது ஒரு கன்னி முயற்சிதான், ஆனாலும் கண்கொள்ளா காட்சி. இனிவரும் காலங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகளை தொடர்ந்து நடத்திட தூண்டும் ஆர்வமும் ஒவ்வொரு சகோதரர்களின் முகத்திலும் கண்டதென்னவோ சொல்லாமல் சொல்லியது.... இங்கு வராதவர்களும் வந்திருக்கலாமோ என்றும் ஏங்க வைத்தது.

நல்லுறவையே நடுவில் வைத்து நாலாபுறமும் இருக்கும் அதிரைச் சகோதரர்களை அரவனைக்க விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து சங்கமித்த சகோதரர்கள் மற்றும் இந்நிகழ்வை ஏற்பாடு செய்த சகோதரர்கள் அனைவருக்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைர் !

இத்தருணத்தில் ஒரு முக்கிய விடயத்தை பதிகிறோம், உங்களின் மடிக் கணினி அல்லது, மேசைக் கணினி, அல்லது கையடக்க கணினி, அல்லது அலைபேசி இவைகளில் எதனைத் திறந்ததும் இன்று மின்னஞ்சல் ஒன்றினை கண்டிருப்பீர்கள் அதுதான், அதிரை கல்விச் சேவையகம் அறிமுகம் ! அங்கே எடுத்து வைக்கப்பட்டிருக்கும் நலனைக் கருத்தில் கொண்டு உங்களின் பங்களிப்பை (குழுமத்தில் இணைவதிலும்) செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்...

كل عام و انتم بخير

ஜஸாக்கல்லாஹ் ஹைர் !


- அதிரைநிருபர்-குழு

நோன்பு பெருநாள் ! 12

அதிரைநிருபர் பதிப்பகம் | August 30, 2011 | ,


اللّهُ أكبر اللّهُ أكبر 

اللّهُ أكبر 

لا إلَهَ الا اللّه 

اللّهُ أكبر اللّهُ اكبر 

و لِلّه الحمدَ 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

كل عام و انتم بخير


அதிரைநிருபர் - குழு

பெருநாள் கொண்டாடுவது எப்படி? 4

அதிரைநிருபர் | August 29, 2011 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இந்த வருட புனித ரமழான் மாதம் இன்றுடனோ அல்லது நாளைய தினத்திலோ  நிறைவை எட்டி பெருநாளை கொண்டாட ஆயத்தமாக உள்ளோம். இத்தருணத்தில் பெருநாளை எப்படி நாம் கொண்டாட வேண்டுமென்பது தொடர்பாக இலங்கை மவ்லவி நாசர் அவர்கள் நேற்றைய முன்தினம் (27-ஆகஸ்ட்-2011) துபாய் - தவ்ஹீத் இல்லத்தில் நிகழத்திய ரமழான் தொடர் சொற்பொழிவின் காணொளியினை உங்கள் பார்வைக்காக பதிகிறோம். இது ஒரு அவசியமான உரை என்பதால் சிறிது அவகாசம் எடுத்து பொருமையுடன் இந்த காணொளியை முழுமையாக கண்டு பயனடைய அன்புடன் வேண்டுகிறோம்.


இந்த காணொளி உரையின் சாரம் கேட்ட பின்னராவது நம்முடைய பெருநாள் கொண்டாட்டத்தை நபிவழியில் அமைத்து அனைவரோடும் அன்பையும்,சந்தோசத்தையும் ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்துகொண்டு சகோதரத்துவத்தை வலுப்படுத்த முயற்சிகளெடுப்போம், இன்ஷா அல்லாஹ் !.

- அதிரைநிருபர் குழு

நம்ம ஊர் - அதிரைப்பட்டினம் ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | August 29, 2011 | , ,

நான் மலர்ந்து வளர்ந்த மண்
நல்லோரும் பெரியோரும்
நிரப்பமாய் இருக்கும் மண்
கடல்கரை கொண்ட மண்

தென்னைகள் தலைவிரித்தாடி
கல்விக்கண் திறக்க பல கோடி
கொடுத்துவந்த கொடைவள்ளல்
மலர்ந்து வாழ்ந்து மறைந்த மண்

பள்ளிகள் பலபெற்று பாங்கினொலி
பரவக்கேட்டு படைத்தவனை தொழ
பரவசமாய் பள்ளி செல்லும் பலர்
பேரானந்தம் அடைந்து கொள்வர்

சொந்தபந்த உறவு முறை கூறி 
சகலமானவரையும் வளைத்துபோட்டு
வாழ்வியலின் இலக்கணம் கண்டு
வாழவந்தோரையும் வாரியணைக்கும் மண்

திருமண பந்த உறவு முறிவு கூட
மரண வேளையில் ஒன்றோடொன்று கூடும்
தியாகம் பலசெய்தேனும் தாய்த்திருநாட்டிற்கு
நலவுகள் பல கோடி தேடித்தரும் மண்

கடல் ஒட்டிய கரை ஓரம்
அலயாத்திக்காடு அழகாய்த்தெரியும்
ஊரின் நடுவே உயரமாய்
தக்வாப்பள்ளி மினாராவும் இருக்கும்

மாலை நேர மாசற்ற தென்றல்
மண்ணின் மைந்தர்களை மயக்கும்
பகல் பொழுதில் உண்ட உணவு
இரவுவரை கொடுக்கும் நல்ல கிரக்கம்

வானில் அசைந்தாடும் வண்ணப்பட்டம் 
நம் சிறுவர்களின் எண்ணத்தின் ஓட்டம்
நல்லதை நாடும் பெரியவர் கூட்டம்
தெருதோறும் நிரப்பமாய் இருக்கும்

பல குறைகள் கண்டபொழுதிலும்
நிறைகள் பல உண்டெனக்கொள்ளும்
நம்மூர், நம்மூர் தான் என வாய்
புகழ்ந்து வாழ்த்தி உள்ளம் குளிரும்

தோப்புகள் இல்லங்களாகிப்போனாலும்
எங்கள் எண்ணங்கள் உயர்ந்தே நிற்கும்
காசு பணம் கையில் வந்து போனாலும்
மரணத்தின் நினைவில் மக்கள் வாழும்

மாசற்ற உள்ளமும் மாண்புமிகு பண்புகளும்
நேசமற்ற எவரையும் கூட நெருங்கவைக்கும்
அருகில் அமரவைத்து நல்லவிருந்து படைக்கும்
பிரதிபலனேதுமின்றி பெருமிதம் அடைந்துகொள்ளும்

வெண்முகிலையே (துப்பட்டி) தன்மேனியில் சுற்றி
வேண்டாத பார்வைக்கு நல்ல வேலியமைத்து
வெட்கமுடம் எம் பெண்டிரும் வீதியில் செல்வர்
வீட்டினரின் நல்வாழ்வுக்கு இறைவனை வேண்டிநிற்பர்

காலங்கள் பல ஓடிப்போனாலும் நாம்
உலகின் எந்த மூலையில் ஆனாலும்
நான் பிறந்த மண்ணே எனக்கு
நல்லதோர் பிருந்தாவனம்

ஆயிரம் பல தொல்லைகள் எமக்கு
விசமிகள் வழியே வந்து போனாலும்
அதை எல்லாம் மறந்து படைத்தவனிடமே
கை ஏந்தி போரின்றி வெற்றிக்கொள்ளும் 

அன்பான பெரியவர் பலர் எமக்கு
அன்றாடம் சொன்ன அறிவுரை பல
அகிலத்தின் எந்த மூலைக்கு சென்றாலும்
அமைதியாய் எம்மை ஆட்சி செய்யவைக்கும்

ஊரைப்பற்றி ஆயிரமே இங்கு அளந்தாலும்
அது அமைதியாய் தான் என்றும் இருக்கும்
காலச்சூழ்நிலையில் நாம் தான் அதை
கண்டும் காணாதது போல் ஆகிப்போனோம்

நாகரிக முன்னேற்றத்தில் இன்று  
கிராமம்கூட மிளிர்ந்துவரும் வேளையில்
நான் பிறந்த மண்ணை இப்படி வறிய 
கோலத்தில் அழுக்கும் குப்பையுமாய் காண
உள்ளம் கனக்கிறது மொளனமாய் ஓலமிட்டுஅழுகிறது

சுட்டெரிக்கும் பாலைவனத்தில் வாழ்ந்தாலும்
குளிரூட்டும் சோலைவனத்தில் இருந்தாலும்
உள்ளத்திற்கு பால்வார்க்கும் என் மண்ணை
என்னால் மட்டுமல்ல எவரால் தான் எளிதில்
மறந்து இருந்து விட முடியும்?


என் அன்பிற்கினிய அதிரைநிருபர் குழுமத்திற்கும், அதன் தூண்களாய் இருக்கும் வாசக அன்பர்களுக்கும், சகோதர, சகோதரிகளுக்கும், நண்பர்கள், உறவினர்கள் என் மண்ணின் எல்லா மைந்தர்களுக்கும் என் இனிய உளம்கனிந்த ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்களும், ஈருலக எல்லாப்பாக்கியங்கலும் குறைவின்றி ஏக இறைவனிடமிருந்து அவன் அருள்மழையில் பெறச்செய்ய அவனிடமே உள்ளம் உருகி பிரார்த்திக்கின்றேன்.

ஈத் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.

அன்பில் அடைக்கலமாகும்....

- மு.செ.மு. நெய்னா முஹம்மது.

நோன்பாளிகளே! – 7 15

அதிரைநிருபர் பதிப்பகம் | August 28, 2011 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!).  உலகத்தில் உள்ள ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பலவாறான  பண்டிகை தினங்கள் உள்ளது. அவர்களின் பண்டிகை தினங்களில் தங்கள் மன விருப்பப்படி எந்த வரைமுறையும் இல்லாமல் பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளாத கேளிக்கை விளையாட்டுக்களில் ஈடுபடுவதை தாங்கள் கேட்டும், பார்த்தும் இருப்பீர்கள். பல நேரங்களில் மூட நம்பிக்கையின்படியே அவர்களின் விழாக்களும், பண்டிகைகளும் அமைந்து இருக்கும்.

வல்ல அல்லாஹ் வழங்கிய மார்க்கத்தில் எந்த வித மூட நம்பிக்கையும் இல்லாமல் மிக அழகாக மனித நேயத்துடன் நமது பெருநாளை நாம் கொண்டாடி வருகிறோம். இப்படிப்பட்ட அழகிய பெருநாள் தினத்தைப்பற்றி இந்த தொடரில் பார்ப்போம்.

ஃபித்ரா தொகை திருத்தம்:
தொடர் 6ல் ஃபித்ரா தொகை 20 திர்ஹம் என்று எழுதியிருந்தேன். தற்பொழுது நான் கேள்விப்பட்ட செய்தி : துபாயில் திர்ஹம் 15/=  என்றும் அபுதாபியில் திர்ஹம் 20/=  என்றும் அரசாங்கம் நிர்ணயித்த தொகையாம். இதன்படி தங்களின் ஃபித்ரா தருமத்தை கொடுக்கவும்.

தொழப்போகும் முன் சாப்பிடுதல்:
நோன்பு பெருநாள் தொழுகைக்கு முன் நபி(ஸல்) அவர்கள் சாப்பிட்டு விட்டு தொழச் செல்வார்கள். கீழ்கண்ட ஹதீஸ் விளக்கம் தருகிறது.

சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி(ஸல்) அவர்கள் புறப்பட மாட்டார்கள். மற்றோர் அறிவிப்பில் அவற்றை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. (அறிவிப்பவர்:  அனஸ்(ரலி) புகாரி:953)

தொழும் நேரம்:
நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள். (அறிவிப்பவர்:  அபூ ஸயீத்(ரலி) புகாரி:956)

பெருநாளன்று நபி(ஸல்)அவர்கள் முதல் காரியமாக தொழுகையைத்தான் முடித்திருக்கிறார்கள். ஆனால் நமது மக்களோ முதல் காரியமாக கறிக்கடைக்கு செல்பவர்களாக இருக்கிறார்கள். வளைகுடா நாடுகளில் உள்ளவர்களுக்கு முதல் காரியமாக தொழுகை கிடைத்து விடுகிறது.

வளைகுடா நாடுகளில் யார் வந்தாலும் வராவிட்டாலும் 6:45 மணிக்கு தொழுகை நேரம்  என்று அறிவித்து விட்டால் சரியான நேரத்தில் தொழுகை தொடங்கி விடும். ஒரு ஜமாஅத் தொழுகைதான் இரண்டாவது ஜமாஅத் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் பரவலாக தமிழ்நாட்டில் சில இடங்களில் இரண்டு தடவை தொழுகையெல்லாம் நடக்கிறது. பெண்கள் தொழுகையும் இரண்டு ஜமாஅத்தாகத்தான் நடைபெற்று வருகிறது.

இப்படி செய்வதற்கு காரணம் சரியான நேரத்தில் காலையில் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்தபடி தொழ வைக்கப்படுவதில்லை. பெண்களும் வந்து தொழுவதற்கு வசதிகள் செய்யப்படுவதில்லை.

பல ஆண்டுகளுக்கு முன்னால் என் சிறு வயதில் வெளியூர் பள்ளி ஒன்றில் பெருநாள் தொழுகை நேரம் காலை 9:30 மணிக்கு என்று அறிவித்தார்கள். மக்கள் எல்லோரும் தொழ வந்து விட்டோம். மைக்கில் தக்பீர் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். 9 மணியாகிவிட்டது முக்கியானவர் வரவில்லையாம். யார் அவர்? ஊர் நாட்டாண்மையாம் (ஜமாஅத் தலைவர் மார்க்கம் அறியாதவர்) மைக்கில் அறிவிப்பு தொழுகை நேரம் நெருங்கிவிட்டது நாட்டாண்மை எங்கிருந்தாலும் (ஆங்காங்கே வெளியில் நின்று கொண்டு இருப்பவர்களும்) பள்ளிக்கு வரவும் நிறைய தடைவை அறிவிப்பு செய்த பிறகு ஒரு வழியாக அவர் வந்த பிறகுதான் தொழுகையை ஆரம்பித்தார் இமாம்.

சிறுபிள்ளையாக  நான் இருக்கும்பொழுது மார்க்கம் அறியாதவர்கள் ஜமாஅத் தலைவர்களாக இருந்ததை பார்த்தேன்.  நான் 2011ஆம்  வருடத்தில் இருக்கிறேன், இணையத்தள கடலில் மார்க்கம் நம்மை வீடு தேடி வந்த பிறகும் இன்று கூட அன்று பார்த்த மார்க்கம் அறியா தலைவர்களையே இன்றும் அதிகமான இடங்களில் பார்த்து வருகிறேன். வல்ல அல்லாஹ் நேர்வழி காட்டப் போதுமானவன்.

நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்து வழிகாட்டிய தூய மார்க்கத்தை அறிந்த இளைஞர் சமுதாயம் எல்லா ஊர் ஜமாஅத்திலும் அங்கம் வகிக்கும் நேரம் விரைவில் வருவதற்கு வல்ல அல்லாஹ் நல்லருள் புரியட்டும். என்னருமை சகோதரர்களே! இளைஞர்களே! மார்க்கத்தை அறிந்து கொள்ள நிறைய நேரத்தை ஒதுக்குங்கள். மார்க்கம் அறியா தலைவர்களை ஓரம் கட்டி, மார்க்கத்தை அறிந்த தொழக்கூடிய இறையச்சம் உடையவர்களை ஜமாஅத் தலைவர்களாக தேர்ந்தெடுங்கள்.

முன் பின் தொழுகை இல்லை:
பெருநாள் தொழுகைக்கு முன்பாகவும் பின்பாகவும் தொழுகை எதுவும் கிடையாது என்பதற்கு  இந்த ஹதீஸ் விளக்கம் தருகிறது:

நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்னம் பின்னும் எதையேனும் தொழவில்லை. (அறிவிப்பவர்:  இப்னு அப்பாஸ்(ரலி),  புகாரி:964)

திடலில் பெருநாள் தொழுகை:
நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள். (அறிவிப்பவர்:  அபூ ஸயீத்(ரலி), புகாரி:956)

நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (திடலில் தொழுவதால் தடுப்பாக) நபி(ஸல்) அவர்களுக்கு முன்னால் ஓர் ஈட்டி நாட்டப்படும். நபி(ஸல்) அவர்கள் (அதை நோக்கித்) தொழுவார்கள். (அறிவிப்பவர்:  இப்னு உமர்(ரலி), புகாரி:972)

திடலில் தொழுவது காலம் காலமாக பின்பற்றப்படாமல் தொடர்ந்து இருந்து வருகிறது. ஊர்களில் சொந்தமாக தொழுகைக்காக திடல் ஏற்படுத்தாத காரணத்தினாலா? மார்க்கத்தின் தெளிவின்மையா?
  
பெருநாள் தொழுகையில் பெண்கள், கன்னிப்பெண்கள்,  
மாதவிடாய் பெண்கள் கலந்து கொள்வது:

இரண்டு பெருநாள்களிலும் மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கிற கன்னிப் பெண்களையும் வெளியேற்றி (தொழும் திடலுக்கு) அழைத்துவருமாறும் அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழுகிற இடத்திற்குச் சென்று அவர்களின் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தொழும் இடத்தைவிட்டு மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கியிருக்க வேண்டும்' என்றும் கட்டளையிடப்பட்டோம்.

நபி(ஸல்) அவர்களின் இந்தக் கட்டளையைக் கேட்டுக் கொண்டிருந்த பெண்களில் ஒருவர் 'இறைத்தூதர் அவர்களே! எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்வதற்கு மேலாடை இல்லையெனில் என்ன செய்வது?' எனக் கேட்டதற்கு 'அவளுடைய தோழி தன்னுடைய (உபரியான) மேலாடையை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும்' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்' (அறிவிப்பவர்: உம்மு அதிய்யா(ரலி) புகாரி:982)

மேற்கண்ட ஹதீஸ் பெருநாள் தொழுகை திடலில் தொழ வைக்கப்பட வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறது. திடலில் தொழ வைத்தால்தான் மாதவிடாய் பெண்கள் வரமுடியும். மாதவிடாய் பெண்களுக்கு தொழுகை கடமையில்லை என்றாலும் தொழாவிட்டாலும் பயானை கேட்க முடியும், பிரார்த்தனை செய்யமுடியும். பெருநாளின் நன்மையை பெற்றுக்கொள்ள முடியும்.

பெருநாள் தொழுகை தொழும் முறை:
நபி(ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 7 தக்பீர்களும், இரண்டாம் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 5 தக்பீர்களும் கூறுவார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி), அபூதாவூத்)

நபி(ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தத் துவங்கினால் அவர்களின் இரு கண்களும் சிவந்து விடும். குரல் உயர்ந்து ஆக்ரோஷமாக வார்த்தைகள் வெளிப்படும். ராணுவத்தை எச்சரித்து வழி நடத்துபவர் போலாகி விடுவார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) , முஸ்லிம்)

இது போன்ற உரை நிகழ்த்தப்பட்டால் தொழுகைக்குப் பிறகு மக்கள் கட்டாயம் இருப்பார்கள். தொழுகை நடத்துவோர் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் தொழுகையை நடத்தி அதன் பின் ஆழமான உரையையும் நிகழ்த்த தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

துஆ(பிரார்த்தனை):
பெருநாளில் (தொழும் திடலுக்கு) நாங்கள் புறப்பட வேண்டுமெனவும் கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் நாங்கள் கட்டளையிடப் பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும் புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள். (அறிவிப்பவர்: உம்மு அதிய்யா(ரலி) புகாரி:971)

பெருநாள் தினத்தில் தொழுகை முடிந்த பிறகு பயான் நடக்கும். இந்த பயானை கேட்காமல் உடன் எழுந்து செல்பவர்களும் இருக்கிறார்கள். அல்லது பயான் முடிந்தவுடன் எழுந்து செல்பவர்களும் இருக்கிறார்கள். இங்கே பேணப்படாதது துஆ நானும் பல ஆண்டுகளாக பார்த்து வருகிறேன் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே துஆச் செய்கிறார்கள். எல்லோரும் உடனடியாக செல்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். இந்த புனிதமான பெருநாளின் துஆவை தவற விட்டு விடுகிறோம். சகோதர, சகோதரிகளே! இத்தனை நாள் நோன்பிருந்து பொறுமை காத்த நமக்கு பெருநாள் தொழுகை முடிந்த பிறகு ஒரு 10 அல்லது 20 நிமிடம் துஆ கேட்டுச் செல்வதால் என்ன குறைந்து விடப்போகிறது. இந்த பெருநாளின் துஆவை விட வேறு என்ன நமக்கு முக்கியமான காரியம் இருக்கும். சாப்பிடுவது, தூங்குவது, விருந்தினரை கவனிப்பது இதை தவிர வேறு என்ன இருக்கப்போகிறது. இவைகள் அனைத்தையும் விட துஆ மிக மிக முக்கியமானது என்பதை மறந்து விடாதீர்கள். தங்களுக்கு வேண்டியதை அனைத்தையும் கேளுங்கள் வல்ல அல்லாஹ்விடம் (கூட்டு துஆவில் அவர் அவருக்கு தேவைப்படுவதை கேட்க முடியாது. துஆ என்பது உள்ளார்ந்த ஆர்வமுடனும், அச்சத்துடனும் அவரவர் அடிமனதிலிருந்து வெளியாகி கேட்க வேண்டும். கூட்டு துஆவில் ஆர்வமும் இல்லை, அச்சமும் இல்லை என்பதை உணர்பூர்வமாக உணரக்கூடியவர்களுக்கு தெரியும்).

தொழுகை முடிந்த பிறகு துஆ கேட்காமல் உடனடியாக புறப்பட பிள்ளைகளை காரணம் காட்டுவார்கள். வீட்டிலிருந்து புறப்படும்பொழுதே அவர்களுக்கான தண்ணீர், திண்பண்டங்கள் தாங்கள் வரும்பொழுதே எடுத்து வந்திருந்தால் பிள்ளைகளும் தங்களை தொந்தரவு செய்யமாட்டார்கள். பெருநாள் துஆ மிக அவசியமானது என்பதை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். நமக்கு வேண்டிய அனைத்தையும் இன்றயை தினம் கேட்க வேண்டும்.

பெருநாள் தினத்தில் செல்லும் பாதை:
பெருநாள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதைகளை மாற்றிக் கொள்வார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி)  புகாரி:986)

நபி(ஸல்) பெருநாள் தொழுகைக்கு போகும்பொழுது ஒரு வழியாகவும், திரும்பி வரும்பொழுது வேறு வழியாகவும் வந்திருக்கிறார்கள்.

தொழுத பிறகு:
தொழுது விட்டு வீடு வந்து விட்டோம் பிறகு காலை உணவு தூக்கம், மதிய உணவு என்றும் சிலர் இருப்பார்கள், சிலர் சீட்டு விளையாடுவது, சினிமா பார்ப்பது, வீண் அரட்டை போன்ற பயன் இல்லாத காரியங்களை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். வல்ல அல்லாஹ் அளித்த புனிதமான பெருநாள் தினத்தில் அவனின் நினைப்போடு நாள் கழிய வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

இன்றைய தினம் நல்ல வழியில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு சில காரியங்கள் செய்யலாம். ஒரு குடும்பம் அவர்களாக சமைத்து அவர்கள் மட்டும் சாப்பிடுவதை விட்டு உறவினர்கள் அருகருகே இருப்பவர்கள் இரண்டு மூன்று அதற்கு மேலும் குடும்பங்கள் இருந்தால் ஒரே இடத்தில் அனைவரும் ஒன்று கூடி சமைத்து சாப்பிடலாம். (செலவுகளில் அனைவரும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்) உறவினர்கள் இல்லை என்றால் அருகில் நட்பில் உள்ள குடும்பத்துடன் சேர்ந்து சமைத்து சாப்பிடலாம். மாலை அவரவர் ஊரில் இருக்கும் பொழுது போக்கு இடமான கடற்கரை, பூங்காக்கள் என்று சென்று வரலாம். நல்ல விளையாட்டுக்கள் போன்ற  நல்ல காரியங்களில் இந்த நாளை கழிக்கலாம். எல்லா நேரங்களிலும், தொழுகை இறை நினைவு இரண்டையும் மறந்த நிலையில் இல்லாமல் கவனமாக இருக்க வேண்டும்.

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே புனிதமான பெருநாள் நம்மை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. அன்றைய தினத்தில் முதல் வேலையாக தொழுகை ஆரம்பிக்கும் முன்பாக தொழும் இடத்திற்கு சென்று விட வேண்டும். கடைசி நேரத்தில் சென்று தொழுகை கிடைக்காமல் போய் விடுமோ என்ற பதற்றம் ஏற்படாது. தொழுகையை முடித்த பிறகு பொறுமையாக இருந்து உரையை கேட்ட பிறகு அதை விட பொறுமையாக இருந்து துஆச் செய்ய வேண்டும். உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் இந்த தினத்தில் வல்ல அல்லாஹ்விடம் கேட்க வேண்டும். (நேரத்தை பார்க்காமல் நிதானமாக அவசரப்படாமல் தங்களின் துஆவை கேளுங்கள்).

வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நோன்பு பெருநாள் தினத்தின் நன்மை அனைத்தையும் வழங்கி அவனின் மன்னிப்பையும், கருணையையும் பரக்கத்தையும்  நமக்கு தாராளமாக வழங்கி நல்லருள் புரியட்டும்.
இன்ஷாஅல்லாஹ் வளரும்....
S. அலாவுதீன்

கொசு ஒரு தொடர்கதை... 26

ZAKIR HUSSAIN | August 27, 2011 | ,

கொசுவைப்பற்றி உங்களுக்கு தெரிந்தது, படித்தது, மற்றவர்கள் சொல்லக்கேட்டது அனைத்தயும் அவுட் ஆஃப் சிலபஸ் ஆக்கி, [ இன்னும் சொல்லப் போனால் சமச்சீர் கல்வி புத்தகத்தில் கலஞர் எழுதிய கவிதை மாதிரி கருப்பு மையிட்டு அழிக்ககூடிய அளவுக்கு] எல்லாமே புதிதாக பாடம் எடுக்க கூடியது அதிராம்பட்டினத்து கொசுக்கள். கொசுவுக்கு மூலை சிறியது, சிந்திக்க தெரியாது என இன்னும் நீங்கள் பேசிக் கொண்டிருந்தால் உங்கள் காலில் உட்கார்ந்து கடித்து கொண்டிருக்கும் ஒரு குரூப் கொசுக்கள் "என்னப்பா இவன் பொறெக்கிறுக்கு வந்தவன் மாதிரி பொழம்புரான்னு மதுரைத்தமிழில் கிண்டல் அடிப்பது உங்கள் காதுக்கு எட்ட வாய்ப்பில்லை.


பொதுவாக கொசு கடித்தால் கவனம் கொசுவின் உடம்பில் கருப்பும் வெள்ளையுமாக கோடு இருந்தால் அது டிங்கி கொசு, இந்த கொசுவிடம்தான் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று எல்லா மெடிக்கல் ஜர்னல்களும் சொல்கிறது, ஆனால் நம் ஊரில் இருக்கும் எல்லா கொசுவுக்கும் கருப்பு வெள்ளைக்கோடு உடம்பில் இருக்கிறது என்பது எந்த மெடிக்கல் கொம்பனுக்கும் தெரியாது என நினைக்கிறேன்.

கொசுவை குடும்பம் குடும்பமாக பழிவாங்க நான் எலக்ட்ரிக்ட் பேட் எல்லாம் கொண்டு போனேன்... பேட்டை தூக்கிய உடன் என் முகத்துக்கு பக்கத்தில் வந்து நிற்க்கும் அளவுக்கு சி பி எஸ் சிலபஸில் படித்த பிள்ளைகள் மாதிரி புத்திசாலி கொசுக்களை என்னதான் செய்வது.

இரவில் படுக்கும் முன் கொசுவலை கட்டிய கட்டிலில் படுத்தால் பிரச்சினை சால்வ்ட் என யாரும் எழுதுமுன் நிற்க:

நானும் முயற்சித்தேன். இதற்காக நல்ல கொசுவலை வாங்கி கட்டினேன். ஆனால் இந்த கொசுக்கள் நேராக உயரத்துக்கு போய் பிறகு கொசுவளையில் நுழைய ஏவுகனை மாதிரி நுழையும் அந்த திறமையை இப்போது கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் அறிய வாய்ப்பு இல்லை.

சின்ன வயதில் ஜக்கரியா தியேட்டரில் பார்த்த ஒரு பிளாக் & ஒயிட் படத்தில் “நாலு பக்கம் ஏரி நடுவுலெ தீவு தீவுக்கொரு ராஜா” னு ஒரு பாட்டு வரும்...எங்க வீடு இருக்கும் சூழ்நிலை இப்போது அப்படித்தான் ஆகி விட்டது . குடிபோன சமயத்தில் தனியாக அழகாக இருந்த வீடு இப்போது நாலு பக்கம் சாக்கடையுடன் தினமும் கொசுக்களுடன் போராடுவதுடனும் இருக்கிறது.

நம் ஊர் கொசுக்கள் ஏறக்குறைய போலீஸ் மாதிரி.. அதிலும் திட்டமிடல் , தாக்குதல் என்ற பிரிவு எல்லாம் உண்டு.

இரவில் கரண்ட் வேறு ஞாயமான நேரம் கட் ஆகிவிடுகிறதா...சரி விழித்துக் கொண்டிருக்கும் நேரம் கொசு அடிக்கலாம் என்று கொசு வலைக்குள் உள்ள கொசுவை அடிக்கும்போது பார்க்க வேண்டும்... கந்தூரியில் வான வேடிக்கை விடும்போது வெடித்து சிதறும் பட்டாசு மாதிரியே அந்த இருட்டில் தெரியும். [தெறிக்கும்]

கொசுக்கள் கடிப்பது மட்டுமில்லை அது எல்லாம் ஆளத்தோட்டம் ரவுடிகள் மாதிரி வாயில் பிளேடு வைத்துக் கொண்டு அழைக்கிறது என்றால் எதற்கும் நீங்கள் எழுமிச்சை தேய்த்து குளிப்பது நல்லது என யாராவது எனக்கு இ-மெயில் அனுப்பலாம்!! [ நம்புங்கப்பா]

படுக்கும் முன் ரூமை அடைத்து விட்டு கொசு வர்த்தி அல்லது கொசு மருந்து கொழுத்தி விட்டு [2 மணி நேரம்] பிறகு நீ தூங்கியிருக்களாம் என சபீர் துபாயிலிருந்து எனக்கு மெனக்கட்டு டெலிபோன் செய்யும்போது..' அது சரி அந்த 2 மணி நேரமும் நான் நிராயுதபானியாக நிற்கும்போது தாக்கும் கொசுவுக்கு என்ன செய்வது என்றவுடன். மறுமுனையில். "நோ கமென்ட்ஸ் ப்ளீஸ்"


Eagle Story
Eagle என்ற பறவைக்கு கருடனா, பருந்தா என பெயர் சரியாக தெரியாததால் என எழுதுகிறேன். விசயம் மொழியில் இல்லை. நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம் இதனிடத்தில் நிறைய இருக்கிறது.

Eagle 70 வருடம் வாழக்கூடியது. அது மிக உயரமான இடத்தில் தான் கூடு கட்டும் தனது குஞ்சுகளை தன் கூட்டில் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு வசதியாக வாழ விடாமல் ஏற்கனவே போட்டு வைத்திருந்த தனது சின்ன சின்ன இறகுகளை எடுத்து வெளியே போட்டு விடும். அப்போதுதான் கூட்டில் உள்ள முட்கள் அந்த குஞ்சுகளின் இறகு வராத சதைகளில் குத்தி வசதி இல்லாமல் வெளியேறப்பார்க்கும். பிறகு தனது குஞ்சுகளை மிக உயராமான அளவுக்கு வானத்தில் தூக்கிக்கொண்டு பறந்து திடீர் என்று கீழே போட்டு விடும் கீழே விழும் வேகத்தில் குஞ்சுகள் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள தனது சிறகை அடித்து பறக்க முயற்சிக்கும். கீழே பூமியில் விழும் தருணத்தில் அந்த தாய்பறவை அப்படியே வந்து தனது வாயால் தனது பிள்ளையை கவ்விக்கொண்டு மறுபடியும் அதே ப்ராக்டிஸ்.

35 வருடத்தில் தனது அலகும், கால் நகங்களும் வளர்ந்து [வலைந்து] உணவுகளை வேட்டையாட விடாமல் தடுக்கும். அந்த இக்கட்டான சூழ்நிலையில் மீதம் உள்ள தனது பாதி ஆயுள் காலத்தை எதிர் கொள்ள இந்த பறவை ஒரு சில நாட்களுக்கு உணவு உண்ணாமல் ஒரு உயரமான இடங்களில் இருக்கும் பாறைகளில் தன் அலகையும், கால் நகங்களையும் தேய்த்து, உடைத்து சரி செய்து கொள்ளும்.

மாற்றங்களை எதிர்கொள்வதையும், தனது சந்ததியினரை யாரிடமும் எதிர்பார்த்து இல்லாமல் தானாகவே வாழ்க்கையை எதிர்கொள்ள பயிற்சி அளிப்பதில் இந்த பறவை என் மனம் கவர்ந்த பறவை.

- ZAKIR HUSSAIN

பேறு பெற்ற பெண்மணிகள் - தொடர் - 4 3

அதிரைநிருபர் பதிப்பகம் | August 27, 2011 | , ,

குடும்பத்தை இழந்தேன் !

"முஸ்லிமான அந்த ஐரோப்பிய இளைஞரைச் சந்தித்ததிலிருந்து என் இதயத்திலிருந்த இறுக்கம் விலகிச் சென்றதை உணர்ந்தேன். நானும் என் தோழிகளும், அவரும் அவருடைய தோழர்களுமாக ஒன்றாகவே கூடியிருப்போம். ஆனால், எனக்குக் கிடைத்த பெரும் பேறு, என் தோழிகளுக்கு கிடைக்கவில்லை! முன்பு நானும் அவர்களைப் போல் ஆடல், பாடல், விளையாட்டு, நீச்சல், ஸ்கேட்டிங், விடுமுறையை இன்பமாகக் கழிப்பது போன்ற எல்லாவற்றிலும் ஈடுபட்டுத்தான் வந்தேன். ஆனால், அந்த வாலிபர் என் வாழ்வில் குறுக்கிட்டது முதல், (காதல் என்று நினைக்காதீர்கள்!) என் வாழ்வில் வசந்தம் வீசத் தொடங்கிற்று"

இவ்வாறு கூறும் பெண்மணி, முஸ்லிமான முன்னோடிகளுள் ஒருவர்! ஜெர்மனியைச் சேர்ந்த இவர் 1934இல் பிறந்தபோது, அந்நாட்டின் மீது போர் மேகம் சூழ்ந்து இருந்தது! இவரது சிறுமிப் பருவத்தில் உயிர் வாழ்வதே உறுதியற்றதாக இருந்தது! இவருடைய தாய், இவருக்குத் தந்தை என்று ஒருவரை அறிமுகப்படுத்தினார். அவர் எப்போதாவது ஒருநாள் திடீரென்று வீட்டுக்கு வருவார், சிறிதே நேரத்தில் அழைப்பொலி கேட்டுப் போர்ப் பணிக்குப் புறப்பட்டு விடுவார்!

தாயின் பணியோ, போர் வீரர்களுக்குக் கம்பளித் தொப்பியும் கையுறையும் பின்னுவது. அடிக்கடி குண்டு வெடிக்கும் பேரொலி கேட்டு அதிர்ந்து போவாள் அச்சிறுமி!

அவரது வீட்டுகு அருகில் இருந்த ஒரு பெரிய மாளிகை, போரில் காயம் பட்ட வீரர்களுக்குச் சிகிச்சை செய்யும் மருத்துவமனையாக மாற்றப்பட்டிருந்தது. இவ்வாறு, உறுதியற்ற தன் இளமைக் காலம் பற்றி விவரிக்கிறார் சகோதரி ஃபாத்திமா.

போர்க் காலச் சூழ்நிலையில் ஜெர்மனி தன் கடவுள் நம்பிக்கையை இழந்து, நாத்திக நிலைக்குத் தள்ளப்பட்டது. அந்நாட்டிலிருந்த கிறிஸ்தவர்கள் தம் திருச்சபையைச் சார்ந்திருப்பதை இயலாத ஒன்றாகக் கருதினர். அதனால் அக் காலகட்டத்தில் நிறையப் பேர் திருச்சபையிலிருந்து வெளியேறுவதை ஒரு பொழுது போக்காகவே கொண்டிருந்தனர்.

மக்கள் பொதுவாகக் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக வெளியில் காட்டிக் கொண்டார்களே தவிர, உண்மையில் அவர்களின் வாழ்க்கை அதற்கு நேர் மாற்றமாயிருந்தது.

"நான் ஏழு வயதுச் சிறுமியாக இருந்தபோது, என் நம்பிக்கைக்குரிய - என்னை விட வயதில் மூத்த தோழி ஒருத்தி, 'கடவுள் இல்லை' என்ற எண்ணத்தை என் இதயத்தில் விதைத்தாள், 'ஆம் கடவுள் என்ற படைப்பாளன் இருந்தால், என் குழந்தைப் பருவம் ஆதரவற்று அலைக் கழிக்கப்பட்டிருக்குமா?' என்று சிந்தித்தேன். அந்த எண்ணமே அப்போது எனக்குச் சரியெனப்பட்டது. எனவே, என் இளமை முதல் உலகைக் கூடுதலாக நேசிக்கத் தொடங்கினேன்" என்கிறார் ஃபாத்திமா ஹீரான்.

ஒரு விதமாகப் போர் ஓய்ந்தது. அந்தப் போரில் ஜெர்மனிக்குத் தோல்வி! போர் நின்றவுடன் அவ்விளம் பெண்ணின் சிந்தனை, வியக்கத் தக்க வகையில் இறைவனைத் தேடுவதன் பக்கம் திரும்பிற்று. அத்தருணத்தில்தான் அந்த ஐரோப்பிய வாலிபரைச் சந்தித்தார் ஃபாத்திமா! கிறிஸ்தவ மதப் பிரிவுகளில் கிடைக்காத கடவுளை அந்த வாலிபர் மூலமே கண்டு கொண்டார்!

"அவரைச் சந்தித்த சில நிமிடங்களிலேயே, அவருடைய அமைதியான தோற்றத்தையும் ஆன்மிகமான அணுகுமுறையையும் கண்டு, அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று கேட்டேன் அவர் கூறிய மறுமொழி என்னை வியப்பில் ஆழ்த்திற்று!"

"நான் முஸ்லிம்!" இவ்வாறு அமைதியாகக் கூறிய அந்த இளைஞர், அமைதியான - அழகான புன்முறுவல் ஒன்றை உதிர்ந்தார்.

ஃபாத்திமா ஹீரன் கூறுகின்றார் " "என்னுள் - என் இதயத்தின் அடித்தளத்தில் இனம் புரியாத ஏதோ ஒரு மாற்றம் ஏற்படத் தொடங்கிற்று. அந்த மாற்றத்துடனே என் சிறுமிப் பருவத்தில் கதை கேட்பதுபோல், என் காதையும் கவனத்தையும் அந்த இளைஞரின் பக்கம் திருப்பினேன். என் ஆர்வத்தைப் புரிந்து கொண்ட அவர் தொடர்ந்து விளக்கினார்"

மனிதன் முதற்கொண்ட படைப்பினங்கள் அனைத்தும் வல்லமையுள்ள அல்லாஹ் என்ற இறைவன் ஒருவனுக்கே கட்டுப்பட்டவை. அதனால், அவையனைத்தும் இஸ்லாமிய இயற்கைத் தன்மையிலேயே இருக்கின்றன. அவற்றின் அனைத்துச் செயல்பாடுகளும் இறைவனின் ஆணைக்குக் கட்டுப்பட்டவை. அப்படிக் கட்டுப்படாவிட்டால், அவற்றுக்கு இன்றியமையாமல் தேவைப்படும், பொருள்களும் தன்மைகளும் இல்லாமல் போய்விடும்.

அறிவுக்கு இயைந்த அருமையான விளக்கம்! இஸ்லாத்தைப் பற்றி ஜெர்மன் மொழியில் நான் அதுவரை படித்த நூல்களெல்லாம் காழ்ப்பு உணர்வுடன் எழுதப் பட்டவை. இஸ்லாத்தைப் பற்றி உண்மையான நூல், அந்த இளைஞரின் உருவில் என் முன் நின்று கொண்டிருக்கிறது என்று உணரத் தொடங்கினேன்.

"நம்புங்கள்! அந்த இளைஞரே பிற்காலத்தில் என் கணவரானார்! என் கணவரிடம் இஸ்லாத்தைப் பற்றி அடிக்கடி விளக்கம் கேட்பேன். சளைக்காமல் விளக்கம் கூறுவார். சில மாதங்களில் நான் இஸ்லாத்தை ஏற்கும் பக்குவத்தை அடைந்தேன், நான் வாசித்தபயனுள்ள நூல்களுள் குறிப்பிடத்தக்கது, அறிஞர் அஸத் எழுதிய "The Road to Mecca" என்ற நூலாகும். அதிலிருந்து ஏராளமான தகவல்களை அறிந்து கொண்டேன்.

"இஸ்லாமியக் கடமைகளுள் முதலாவதாக நான் பழகிக் கொண்டது தொழுகையாகும். நான் தொழுதுவது, என் பெற்றோருக்குத் தெரியாமல், இரகசியமாகத்தான்! 1959ஆம் ஆண்டு நோன்பு மாதத்தில் நோன்பு நோற்கத் தொடங்கினேன். இறைவனுக்காகவே கலப்பற்ற எண்ணத்துடன் செய்யும் எந்தச் செயலும் பாரமாகத் தோன்றாது"

அவ்வாண்டே முறையாக 'ஷஹாதா' மொழிந்து, இஸ்லாமிய அறநெறியில் அடியெடுத்து வைத்தார் ஃபாத்திமா ஹீரன். அதன் பின்னர் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். ஜெர்மனியில் இஸ்லாமிய நடைமுறையுடன், அடையாளத்துடன், கொள்கையுடன் வாழ்வது அவர்களுக்கு இயலாததாகப்பட்டது. அவருடைய கணவர் பணியாற்றிய அலுவலகத்தில் நடுப்பகல் (லுஹர்) தொழுகைக்காக 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்வதற்கு அவருடைய மேல் அதிகாரிகள் அனுமதியளிக்கவில்லை! அது போன்றே ஃபாத்திமாவும் முழு ஹிஜாபுடன் தனது அலுவலகத்தில் பணியாற்றுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது! எனவே, கணவனும் மனைவியும் பொறுமையுடன் தாம் சம்பாதித்த பணத்திலிருந்து சேமிக்கத் தொடங்கினர். அவர்களின் நோக்கம், போதுமான பணம் சேர்ந்ததும், ஏதேனும் இஸ்லாமிய நாட்டுக்கு புலம் பெயர்ந்து சென்று விடுவதாக இருந்தது.

அந்த நாட்களில் அவர்களுக்குப் பாக்கிஸ்தான் என்ற முஸ்லிம் நாடு தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்ததால், பாக்கிஸ்தானில் வேலைக்கு விண்ணப்பம் செய்திருந்தார்கள், எண்ணியதற்கேற்ப, பணியமர்வும் கிடைத்தது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் வசிக்கத் தொடங்கினார்கள்.

"என்ன செய்வது? என்னருமைத் தாயையும் தந்தையையும் தங்கையையும் சகோதரர்களையும் அங்கே ஜெர்மனியில் விட்டுவிட்டு வந்தேன். நாங்கள் ஒரு பாசமுள்ள குடும்பமாக வாழ்ந்து வந்தோம்! அச்சூழலை விட்டு வந்தது இழப்புத் தான்! ஆனால், எனக்கு இதய அமைதியைத் தந்த இஸ்லாத்தை அடையாதிருந்தால், அது பேரிழப்பல்லவா? இஸ்லாத்தின் மூலம் எனக்குக் கிடைத்த இதய அமைதி, என் குடும்பத்தை இழந்ததற்கு ஈடாயிற்று! இல்லையில்லை, அதைவிட மேலாகும்!" என்று கூறி, நம் இதயத்தைக் கவர்கிறார் சகோதரி ஃபாத்திமா ஹீரன்.

தொடரும்.. 
- அதிரை அஹ்மது


இந்த அருமையான புத்தகத்தை நம் அதிரைநிருபர் வலைத்தளத்தில் தொடராக பதிந்திட அனுமதி தந்த IFT நிறுவனத்தாருக்கு எங்கள் உளமார்ந்த நன்றியும் துஆவும் என்றும் நிலைத்திடும் இன்ஷா அல்லாஹ்...

ஆ மீ ன் . . . . ! 30

அதிரைநிருபர் பதிப்பகம் | August 26, 2011 | , , ,

யா ரஹ்மானே எங்களின் பாவம்
நீங்கிடச் செய்வாயே!
இந்த சங்கை மிகுந்த ரமளானின் பொருட்டால்
ரஹ்மத்தைச் சொறிவாயே!

பசியினை மறந்தோம் தாகமும் பொறுத்தோம்
உடல் நலம் காப்பாயே!
உனை துதிக்கவே பிறந்தோம் தூக்கமும் துறந்தோம்
மன நலம் காப்பாயே!

திருமறை வசனம் தினம் தினம் பயின்றோம்
அறிவினைத் தருவாயே!
எங்கள் திருநபி வாழ்ந்த வழிதன்னில் வாழ்வோம்
நேர் வழி தருவாயே!

நேரத்தில் தொழுதோம் நிறைவாகத் தொழுதோம்
ஏற்று நீ அருள்வாயே!
இந்த ரமளானின் சிறப்பாம் உபரியும் தொழுதோம்
உவப்புடன் ஏற்பாயே!

சஹரினில் விழித்தோம் வயிறார புசித்தோம்
பரக்கத்தைத் தருவாயே!
இன்று மஃரிபு வரைக்கும் மன நிறைவோடு
பொறுமையும் தருவாயே!

தீயதைத் துறப்போம் தேவையைக் குறைப்போம்
தைரியம் தருவாயே!
எங்கள் இதயத்தில் ஈமான் உறுதியாய் விளங்க
ஆசியும் புரிவாயே!

இரவினில் விழித்தோம் இறை உனை துதித்தோம்
ஈடேற்றம் அருள்வாயே!
இரு கரம் விரித்து ஏந்தியே கேட்டோம்
நிஃமத்தைச் சொறிவாயே!

சக்காத்து கணக்கோடு சதக்காவும் கொடுத்தோம்
தவுளத்தைச் சொறிவாயே!
புனித ரமளானின் பெயரால் பொருளையும் பகிர்ந்தோம்
பொருந்தியும் கொள்வாயே!

ஒற்றுமைக் கயிற்றை உறுதியாய்ப் பிடிக்க
உளமாற்றம் அருள்வாயே!
ஓரிறை ஈமான் உலகெங்கும் நிலவ
இஃக்லாசைத் தருவாயே!

இனி வரும் வருடம் பொறுமையாய் இருப்போம்
போய் வா ரமளானே!
எங்கள் பாவங்கள் கழித்து வாழ்க்கையை அளித்த
வளமான ரமளானே!

(குறிப்பு: முதல் நான்கு வரிகள் நம்தூரின் பழமை வாய்ந்த ‘நோன்பை வழியனுப்பும்” பாடலிலிருந்து நன்றியுடன் எடுத்தாண்டுள்ளேன்)


- சபீர்
Sabeer abuShahruk




Please press PLAY button to hear again from the below audio player



நோன்பாளிகளே! – 6 11

அதிரைநிருபர் | August 25, 2011 | , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!).  இந்த தொடரில் நோன்பு பெருநாள் தர்மம் - ஸதக்கத்துல் ஃபித்ர் கொடுப்பதின் அவசியத்தைப் பற்றி பார்ப்போம்.

பித்ரு ஸகாத்:

பித்ரு ஸகாத் என்பது நோன்பு வைத்திருக்கும்போது நோன்பாளி வீணான காரியங்களில் ஈடுபட்டதற்குப் பரிகாரமாகவும், ஏழைகளின் (அன்றைய) உணவுக்கு வழியாக இருப்பதற்காகவும் நபி(ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி), அபூதாவூத்).

பித்ராவின் நோக்கம்:

ரமலானை தொடர்ந்து வரும் நோன்பு பெருநாளில் ஏழைகள் பயன் அடைந்து மகிழ்ச்சியுடன் அவர்களும் பெருநாளை கொண்டாடவும், நோன்பாளிக்கு தருமமாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளதை ஹதீஸ் மூலம் விளங்க முடிகிறது.

நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கி ‘‘இன்றைய தினம் ஏழைகளைத் தேவையற்றவர்கள்’’ ஆக்குங்கள் என்றும் கூறினார்கள்.(அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) பைஹகீ, தாரகுத்னீ)


ஃபித்ரா யார்? கொடுக்க வேண்டும்:

நோன்பு நோற்றவர்கள், நோற்காதவர்கள், வசதியானவர்கள், வசதியற்றவர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும். ஒருவர் தன் குடும்பத்தின் பெருநாள் தினத்தின் செலவு போக கொடுக்கும் சக்தி உள்ள அனைத்து முஸ்லிம்கள் மீதும் இந்தப்பெருநாள் தருமம் கட்டாய கடமையாக இருக்கிறது.


ஃபித்ரா பெருநாள் தர்மத்தின் அளவு எவ்வளவு:

முஸ்லிமான ஆண்கள் பெண்கள், பெரியவர், சிறியவர், அடிமை, சுதந்திரமானவர் ஆகிய அனைவருக்கும் பேரீத்தம்பழம் அல்லது கோதுமை ஆகியவற்றிலிருந்து பெருநாள் தர்மம் தலா ஒரு 'ஸாவு' என்று நபி(ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தனர். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) புகாரி).

நாங்கள் நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு அளவு ஏதேனும் உணவையோ ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையையோ அல்லது ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழத்தையோ அல்லது ஒரு ஸாவு அளவு பாலாடைக் கட்டியையோ அல்லது ஒரு ஸாவு அளவு உலர்ந்த திரட்சையையோ கொடுப்போம். (அறிவிப்பவர்: அபூ ஸயீதில் குத்ரீ(ரலி) புகாரி:1506).

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் பெருநாள் அன்று ஒரு ஸாவு உணவை தர்மமாகக் கொடுத்து வந்தோம். அக்காலத்தில் தீட்டாத கோதுமையையும் உலர்ந்த திராட்சையும் பாலாடைக் கட்டியும் பேரீச்சம் பழமும்தான் எங்களின் உணவாக இருந்தன. (அறிவிப்பவர்: அபூ ஸயீதில் குத்ரீ(ரலி) புகாரி:1510).


ஃபித்ரா  பெருநாள் தருமம் எப்பொழுது கொடுக்க வேண்டும்:

பித்ரு ஸகாத்தை பெருநாள் தொழுகைக்கு மக்கள் புறப்படுமுன்பே வழங்கிவிட வேண்டுமென நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி), புகாரி).

நபித்தோழர்கள் பெருநாளைக்கு ஒருநாள் முன்பாக அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பாக இத்தர்மத்தை வழங்குபவர்களாக இருந்தனர். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி), புகாரி).

நமது உணவு அரிசியாக இருப்பதால் அரிசியைத்தான் தர்மமாக வழங்கி வருகிறோம். ஊரில் ‘‘ஒரு ஸாவு அரிசிக்கு’’ எவ்வளவு பணம் வருகிறது என்று நிர்ணயம் செய்து அதன்படி கூட்டாக வசூலித்து ஏழைகளுக்கு வழங்கி வருகிறார்கள்.

அரிசியை மட்டும் கொடுத்தால் ஏழைக்கு அரிசி மட்டும்தான் சேரும். குழம்பு மற்ற உணவுகள் தேவைப்படும். அதனால் பணமாக வசூலித்து பெருநாள் அன்று செய்யப்படும் உணவுகளுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வசூல் செய்பவர்கள் கொடுத்து வருவதை பார்த்து வருகிறோம்.

வளைகுடா நாடு: யு.ஏ.இல் ஒரு நபருக்கு ஃபித்ராபணம் 20 திர்ஹம் என்று நிர்ணயம் செய்திருக்கிறார்கள்.

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! தாமதப்படுத்தாமல் பெருநாளைக்கு முன்பாக இந்த ஃபித்ராவை (பெருநாள் தர்மத்தை)  கொடுத்து நன்மையை பெற்றுக்கொள்ளுங்கள்.

இன்ஷாஅல்லாஹ் வளரும்.. .
-- S. அலாவுதீன்


|| நோன்பாளிகள் 1 || நோன்பாளிகள் 2 || நோன்பாளிகள் 3 || நோன்பாளிகள் 4 || நோன்பாளிகள் 5 ||  நோன்பாளிகள் 6 ||

ஐக்கியம்... ! 41

அதிரைநிருபர் பதிப்பகம் | August 24, 2011 | , , ,

ஐக்கியமே - சமூகத்தின்
ஆரோக்கிய மென
ஐயமற கொள்வோம் !

ஐக்கியம் எனும்
வாக்கியம்
ஒற்றுமை எனக்கொள்வதே !

கேளீர் !
ஒற்றுமை...
இதுநாம்
வேண்டும் நற்பண்பு!

சமத்துவத்தின்
சமாதான மொழி!
ஒற்றுமையும் நன்மையும்
இரட்டை குழந்தைகள்!

ஓற்றுமை
நம்மிலிருந்து பிறருக்கும்
தொடர வேண்டிய
தொடர் ஓட்டம்
இதில்..
வெற்றி யென்பது உறுதி !

வேற்றுமை
ஒரு நோய் !
ஒற்றுமையை
குழைத்திடும் கிருமி..
தாக்கியதும் தோல்விதான்

ஆகையால் !
ஒற்றுமையை போற்றுவது
கோழி தன் குஞ்சுகளைக் காத்திட
பருந்திடம் போராடிடும்
விழிப்பு வேண்டும்

வேற்றுமையில்
சிறு பகையும் அச்சுறுத்தும்.

ஒற்றுமையெனும்
படைகள் துணையிருந்தால்
வல்லரசாய்
பகைசூழ வந்தாலும்
மெல்ல சாகும்
பின்
முழுதும் வீழ்ந்து மடியும்.

வேற்றுமையில் ஒற்றுமை
காண வேண்டாம்
ஒற்றுமையில் ஒற்றுமை
காண நேர்ந்தால்
வேற்றுமையும் ஒற்றுமையைத் தேடிவரும்

- CROWN

ரமழானின் கடைசி பத்து - பழைய நினைவுகளிலிருந்து... 12

அதிரைநிருபர் பதிப்பகம் | August 23, 2011 | , ,


இறையருட்கொடைகளை நம்மீது குறைவின்றி பொழியும் இந்த புனித ரமழான் நம்மை விட்டு மெல்ல,மெல்ல நகர்ந்து கொண்டிருப்பதை அறியாமல் இறுதியில் நாம் ஒரு மாதம் செய்த நல்லமல்களுக்கு இறைவன் கொடுக்கும் கூலியாய் வரும் ஈத் பெருநாளை புதிய சட்டை, வேட்டி, தொப்பி, கைக்குட்டை, செருப்பு, நறுமண செண்ட், கைக்கடிகாரத்திற்காக சிறுவயது உள்ளம் பெருமிதம் கொண்டு பேரானந்தம் அடைந்து அந்த நாளை எண்ணி ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் ஒரு காலத்தில்.

ஊரில் ஒவ்வொரு பள்ளிகளும் ஒரு மாத இரவுத் தொழுகையில் ஓதி வந்த திருக்குர்'ஆனை மெல்ல,மெல்ல முடித்து இறுதியில் 30வது ஜூஸ்வின் சிறிய சூராக்களை ஓத ஆரம்பிக்கும்.

ஊரில் சில பள்ளிகள் அலங்கரிக்கப்பட்டு 27ம் இரவு தொழுகைக்காகவும் அதற்குப்பின் இரவுத் தொழுகையில் ஓதி முடிக்கப்படும் திருக்குர்'ஆன் "தம்மாம்" விடப்பட்டு (சவுதி தம்மாம் அல்ல) இதுவரை தொழுகைக்கு கட் அடித்த பெருசு, சிறுசுகள் யாவும் பேணுதலுடன் அனைத்து ரக்காத்துக்களுடன் பிளஸ் மூன்றையும் தொழுது முடிக்கும். நல்ல பிரியாணி நார்சாவாய் பிளாஸ்டிக் பைக்குள் நைந்து கிடக்கும். வீடு செல்லும் வரை காத்திருக்காத சில உள்ளங்கள் மொளனமாய் அதை அங்கேயே பிரித்து மேயும்.

ஒரு பள்ளியில் வாங்கிய நார்சாவுடன் அடுத்த பள்ளிக்கு செல்ல நேரம்/வாய்ப்பு தேடும். கிடைத்தால் அதையும் நன்கு பயன்படுத்திக்கொள்ளும்.

தெரு தையல்கடைக்காரரின் கடையோ நியாயவிலைக்கடை (ரேசன்)போல் கூட்டம் அலைமோதி நிற்கும். சொன்ன தேதியில் அவர் துணிமணிகளை தைத்து கொடுத்து விட்டால் உள்ளம் அவரை கின்னஸ் புத்தகத்தில் வர வேண்டியவர் என வெறும் வாயில் புகழ்ந்து தள்ளும்.

பெரும்பாலும் ஜகாத் கடைசி பத்தில் நம் ஊரில் விநியோகிக்கப்படுவதால் அதை நன்கறிந்த மாற்று மத வெளியூர் கூட்டம் கூட தலையில் தொப்பியுடன், கிழிந்த மேல்துணி அணிந்து பஸ், ரயில் ஏறி எப்படியும் ஊர் வந்து சேரும். தெரிந்த சில இஸ்லாமிய வார்த்தைகளை நாவில் அரைகுறையாய் உச்சரித்து காசு கேட்டு வாங்கிச்செல்லும்.

சென்னையிலிருந்து வந்த தொழிலதிபர்களின் பிள்ளைகளும் உள்ளூர் தொழிலதிபர்களின் பிள்ளைகளுடன் ஒன்று சேரும். உற்சாகம் ஊரில் கலைக்கட்டும் இதனால் சில சிறு சண்டைகளும் அரங்கேறும்.

ஏழை, பணக்காரர் ஏற்ற இறக்கமின்றி எல்லோரிடமும் காசு நிரப்பமாய் வந்து சேரும்.

பெருநாளுக்கு எடுக்கும் வேட்டி 80x80, 60x60, 60x40  என்று பள்ளிக்கூட கணக்கு பாடம் நடத்தும். அந்த குழப்பத்திலும் உள்ளம் குறைந்த காசு எது என்று பார்த்து அதையே வாங்கி உடுத்தி மகிழும்.

பெருநாள் இரவு ஊர் சுற்ற கடைத்தெரு பரீதா, வின்னர் வாடகை சைக்கிள் கடைகளில் முன் பதிவு செய்யும். 
வரும் வழியில் தலைக்கேற்ற தொப்பியை இலியாஸ், அன்சாரி கேப் மார்ட்டில் வாங்கி அணிந்து மகிழும். தொழுகை முடிந்ததும் அதை மடித்து எக்களில் சொறுகி வைக்கும்.

வருடத்தில் செல்லாத சொந்த பந்த வீடுகள் செல்ல உள்ளம் துடிக்கும் வர இருக்கும் (பெருநாள் காசு) வருவாயை எண்ணி பெருமிதம் கொள்ளும்.

பெருநாள் இரவு பிறை பார்ப்பதில் ஏற்பட்ட குழப்பம் இறுதியில் முஹல்லாப்பள்ளியில் (மரைக்காப்பள்ளி) உலமாக்களின் முடிவுக்கு கொண்டுவரப்படும். அவர்களின் நல்ல முடிவுக்கு பொறுமையின்றி காத்திருக்கும். நாளை பெருநாள் இல்லை நோன்பு என்று முடிவானால் சந்தோசப்படவேண்டிய உள்ளமோ கனத்த இதயத்துடன், கவலையுடன் வீடு திரும்பும்.

பெருநாள் பிறையை பார்க்க உள்ளம் பரவசம் அடைந்து அவசரப்படும். அது பார்க்கப்படாவிட்டாலும் ஏன் பார்க்கப்படவில்லை? என்று அறியாமல் உள்ளம் கேள்வி கேட்கும்.

பெருநாள் இரவு இறைச்சிக்கடைகளெல்லாம் பேரிரைச்சல் அடையும். ஆட்டின் உறுப்புகளை தனித்தனியே கூறுபோட்டு ஆடர் செய்யும். இது வரை வேண்டாவெறுப்பாய் இருந்த இறைச்சிக்கடைக்காரனும் வேண்டப்பட்டவனாய் ஆகிப்போவான். உள்ளம் வருடம் முழுவதும் அவனிடம் கறி வாங்குவது போல் பவ்வியமாக பேசி காரியம் சாதிக்க கிட்னி பக்கம் கண் திரும்பும்.


பெருநாளுக்கு எடுத்த வேட்டியில் ஒட்டப்பட்ட லேபிள் அவசரத்தில் கிழிக்கப்பட்டு அவ்விடத்தில் கருங்காக்கை ஒன்று போட்ட வெள்ளை எச்சம் போல் காட்சி தரும்.

கண்ட இடத்தில் உட்கார்ந்து எழ கருப்பு கம்பாயம் போட்ட வேட்டி கை கொடுக்கும். இன்று கம்பனையும் காணவில்லை கம்பாயம் போட்ட வேட்டியணிந்தவர்களையும் காண இயலவில்லை.

புது சட்டை அவசரத்தில் பிரிக்கும் பொழுது எடுத்த குண்டூசி சில சமயம் கையை நன்கு பதம் பார்க்கும். ஆடு அறுக்கும் முன்பே நம் கையில் காவு வாங்கும்.

சல்லடை போன்ற பனியனும் அது வெளியில் தெரிய கண்ணாடி போல் அணிந்த மார்ட்டின் சட்டையும் அதன் பாக்கெட்டில் வைத்த சலவை பத்து, இருபது ரூபாய் நோட்டுக்களும், சப்தம் வர அணிந்த சோலப்புரி செருப்பும் அந்த காலத்தின் சரித்திரக்குறியீடுகள்.

எவ்வித பிரயோஜனமும் இல்லாமல் இரவு நேர ஓவர்டைம் வேலையை பெண்கள் அனல்பறக்கும் அடுப்பங்கரையில் பார்த்து நல்ல ருசிக்கு பொறித்த ரொட்டி சுட்டெடுத்து, வட்லப்பம், கடல்பாசி, இடியப்பம், கறியாணம் என கலைக்கட்டும் அடுப்பங்கரை சளைக்காத வீட்டுப்பெண்கள். (ஜப்பானாக இருந்தால் பை நிறைய பார்த்த ஓ.டி.க்கு பணம் பார்த்திருப்பார்கள் பாவம்)

மல்லிகைப் பூக்காரி கூட இரவு நேரத்தில் நம் தெரு வீதி உலாவருவாள். நல்ல வியாபாரத்தையும் செய்து முடிப்பாள்.

பெருநாள் இரவு முழுவதும் பேய்பிசாசு பயமின்றி நண்பர்களுடன் சுற்றி விட்டு பெருநாள் காலை சுபுஹ் தொழுக்கைக்கு எழும்ப அலும்பு பண்ணும். வீட்டினரின் ஓலத்தில் வேண்டா வெறுப்பாய் எழுந்து கண்சிமிட்டி கூசும். வீட்டுப்பெரியவர்களின் அதட்டலில் கடைசியில் பல் துலக்காமல் பள்ளி வந்து சேரும்.

குளித்து புத்தாடை அணிந்து நறுமணத்தைலம் அங்குமிங்கும் உடலில் தடவி பள்ளிக்கு வந்து தொழுகைக்கு அமரும். பெரியவர்களுடன் சேர்ந்து கலிமாவும் கூறும். தொழுகை முடிந்ததும் பள்ளியின் வெளியே விரிக்கப்பட்ட விரிப்பில் தன் பாக்கெட்டிலிருந்து பள்ளி சாபுக்கு சலவை நோட்டு பத்தோ, இருபதோ அல்லது இயன்றதைப்போட்டு மகிழும்.

காலை மெல்ல, மெல்ல பொறித்த ரொட்டி சுவையுடன் பெருநாளும் நம்மை விட்டு மெல்ல, மெல்ல எட்டப்பார்வை போல் மறையத்துவங்கும். தெருவில் விற்கும் ஜஸ்கிரீம் உண்டு ஆசைத்தாகம் தீரும். பெருநாள் பகல் நல்ல பிரியாணி உண்டு அயர்ந்து போகும். சாய்ங்காலப்பெருநாள் சக நண்பர்களுடன் மல்லிப்பட்டினம் மனோரா காணத்தூண்டும்.

பெருநாள் மாலை தட்டுத்தடுமாறும் உள்ளங்களை ஒண்றிணைத்து மன ஓர்மையுடன் நமதூர் ஜாவியாவில் மாலை நேர திக்ரு மஜ்லிஸ் ஒன்று சேர்க்கும்.

எல்லாம் முடிந்து வீடு திரும்பியதும் சென்ற ரமழானுக்காக வருந்தத்துவங்கும் செய்வதறியாது விழிக்கும். வருடம் முழுவதும் ரமழானாய் இருக்கக்கூடாதா? என உள்ளத்துக்குள் கேள்வி எழுப்பி பதிலின்றி மொளனமாய் உறங்கிப்போகும்.

சென்ற ரமழான்களை எண்ணிப்பெருமிதம் கொள்வதுடன் கையில் இருக்கும் ரமழானை நன்கு அமல்கள் செய்து பயன்படுத்துவோம். இறைவனின் பொருத்தத்தைப்பெருவோம் இன்ஷா அல்லாஹ்...

நம்மை விட்டு பிரிந்து இறைவனடி சேர்ந்த அனைவருக்காகவும் இறைஞ்சுவோம்...

மலரும் நினைவுகளுடன் நிகழ்கால நிகழ்வுகளுடன்..

மு.செ.மு. நெய்னா முஹம்மது.


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு