குடும்பத்தை இழந்தேன் !
"முஸ்லிமான அந்த ஐரோப்பிய இளைஞரைச் சந்தித்ததிலிருந்து என் இதயத்திலிருந்த இறுக்கம் விலகிச் சென்றதை உணர்ந்தேன். நானும் என் தோழிகளும், அவரும் அவருடைய தோழர்களுமாக ஒன்றாகவே கூடியிருப்போம். ஆனால், எனக்குக் கிடைத்த பெரும் பேறு, என் தோழிகளுக்கு கிடைக்கவில்லை! முன்பு நானும் அவர்களைப் போல் ஆடல், பாடல், விளையாட்டு, நீச்சல், ஸ்கேட்டிங், விடுமுறையை இன்பமாகக் கழிப்பது போன்ற எல்லாவற்றிலும் ஈடுபட்டுத்தான் வந்தேன். ஆனால், அந்த வாலிபர் என் வாழ்வில் குறுக்கிட்டது முதல், (காதல் என்று நினைக்காதீர்கள்!) என் வாழ்வில் வசந்தம் வீசத் தொடங்கிற்று"
இவ்வாறு கூறும் பெண்மணி, முஸ்லிமான முன்னோடிகளுள் ஒருவர்! ஜெர்மனியைச் சேர்ந்த இவர் 1934இல் பிறந்தபோது, அந்நாட்டின் மீது போர் மேகம் சூழ்ந்து இருந்தது! இவரது சிறுமிப் பருவத்தில் உயிர் வாழ்வதே உறுதியற்றதாக இருந்தது! இவருடைய தாய், இவருக்குத் தந்தை என்று ஒருவரை அறிமுகப்படுத்தினார். அவர் எப்போதாவது ஒருநாள் திடீரென்று வீட்டுக்கு வருவார், சிறிதே நேரத்தில் அழைப்பொலி கேட்டுப் போர்ப் பணிக்குப் புறப்பட்டு விடுவார்!
தாயின் பணியோ, போர் வீரர்களுக்குக் கம்பளித் தொப்பியும் கையுறையும் பின்னுவது. அடிக்கடி குண்டு வெடிக்கும் பேரொலி கேட்டு அதிர்ந்து போவாள் அச்சிறுமி!
அவரது வீட்டுகு அருகில் இருந்த ஒரு பெரிய மாளிகை, போரில் காயம் பட்ட வீரர்களுக்குச் சிகிச்சை செய்யும் மருத்துவமனையாக மாற்றப்பட்டிருந்தது. இவ்வாறு, உறுதியற்ற தன் இளமைக் காலம் பற்றி விவரிக்கிறார் சகோதரி ஃபாத்திமா.
போர்க் காலச் சூழ்நிலையில் ஜெர்மனி தன் கடவுள் நம்பிக்கையை இழந்து, நாத்திக நிலைக்குத் தள்ளப்பட்டது. அந்நாட்டிலிருந்த கிறிஸ்தவர்கள் தம் திருச்சபையைச் சார்ந்திருப்பதை இயலாத ஒன்றாகக் கருதினர். அதனால் அக் காலகட்டத்தில் நிறையப் பேர் திருச்சபையிலிருந்து வெளியேறுவதை ஒரு பொழுது போக்காகவே கொண்டிருந்தனர்.
மக்கள் பொதுவாகக் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக வெளியில் காட்டிக் கொண்டார்களே தவிர, உண்மையில் அவர்களின் வாழ்க்கை அதற்கு நேர் மாற்றமாயிருந்தது.
"நான் ஏழு வயதுச் சிறுமியாக இருந்தபோது, என் நம்பிக்கைக்குரிய - என்னை விட வயதில் மூத்த தோழி ஒருத்தி, 'கடவுள் இல்லை' என்ற எண்ணத்தை என் இதயத்தில் விதைத்தாள், 'ஆம் கடவுள் என்ற படைப்பாளன் இருந்தால், என் குழந்தைப் பருவம் ஆதரவற்று அலைக் கழிக்கப்பட்டிருக்குமா?' என்று சிந்தித்தேன். அந்த எண்ணமே அப்போது எனக்குச் சரியெனப்பட்டது. எனவே, என் இளமை முதல் உலகைக் கூடுதலாக நேசிக்கத் தொடங்கினேன்" என்கிறார் ஃபாத்திமா ஹீரான்.
ஒரு விதமாகப் போர் ஓய்ந்தது. அந்தப் போரில் ஜெர்மனிக்குத் தோல்வி! போர் நின்றவுடன் அவ்விளம் பெண்ணின் சிந்தனை, வியக்கத் தக்க வகையில் இறைவனைத் தேடுவதன் பக்கம் திரும்பிற்று. அத்தருணத்தில்தான் அந்த ஐரோப்பிய வாலிபரைச் சந்தித்தார் ஃபாத்திமா! கிறிஸ்தவ மதப் பிரிவுகளில் கிடைக்காத கடவுளை அந்த வாலிபர் மூலமே கண்டு கொண்டார்!
"அவரைச் சந்தித்த சில நிமிடங்களிலேயே, அவருடைய அமைதியான தோற்றத்தையும் ஆன்மிகமான அணுகுமுறையையும் கண்டு, அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று கேட்டேன் அவர் கூறிய மறுமொழி என்னை வியப்பில் ஆழ்த்திற்று!"
"நான் முஸ்லிம்!" இவ்வாறு அமைதியாகக் கூறிய அந்த இளைஞர், அமைதியான - அழகான புன்முறுவல் ஒன்றை உதிர்ந்தார்.
ஃபாத்திமா ஹீரன் கூறுகின்றார் " "என்னுள் - என் இதயத்தின் அடித்தளத்தில் இனம் புரியாத ஏதோ ஒரு மாற்றம் ஏற்படத் தொடங்கிற்று. அந்த மாற்றத்துடனே என் சிறுமிப் பருவத்தில் கதை கேட்பதுபோல், என் காதையும் கவனத்தையும் அந்த இளைஞரின் பக்கம் திருப்பினேன். என் ஆர்வத்தைப் புரிந்து கொண்ட அவர் தொடர்ந்து விளக்கினார்"
மனிதன் முதற்கொண்ட படைப்பினங்கள் அனைத்தும் வல்லமையுள்ள அல்லாஹ் என்ற இறைவன் ஒருவனுக்கே கட்டுப்பட்டவை. அதனால், அவையனைத்தும் இஸ்லாமிய இயற்கைத் தன்மையிலேயே இருக்கின்றன. அவற்றின் அனைத்துச் செயல்பாடுகளும் இறைவனின் ஆணைக்குக் கட்டுப்பட்டவை. அப்படிக் கட்டுப்படாவிட்டால், அவற்றுக்கு இன்றியமையாமல் தேவைப்படும், பொருள்களும் தன்மைகளும் இல்லாமல் போய்விடும்.
அறிவுக்கு இயைந்த அருமையான விளக்கம்! இஸ்லாத்தைப் பற்றி ஜெர்மன் மொழியில் நான் அதுவரை படித்த நூல்களெல்லாம் காழ்ப்பு உணர்வுடன் எழுதப் பட்டவை. இஸ்லாத்தைப் பற்றி உண்மையான நூல், அந்த இளைஞரின் உருவில் என் முன் நின்று கொண்டிருக்கிறது என்று உணரத் தொடங்கினேன்.
"நம்புங்கள்! அந்த இளைஞரே பிற்காலத்தில் என் கணவரானார்! என் கணவரிடம் இஸ்லாத்தைப் பற்றி அடிக்கடி விளக்கம் கேட்பேன். சளைக்காமல் விளக்கம் கூறுவார். சில மாதங்களில் நான் இஸ்லாத்தை ஏற்கும் பக்குவத்தை அடைந்தேன், நான் வாசித்தபயனுள்ள நூல்களுள் குறிப்பிடத்தக்கது, அறிஞர் அஸத் எழுதிய "The Road to Mecca" என்ற நூலாகும். அதிலிருந்து ஏராளமான தகவல்களை அறிந்து கொண்டேன்.
"இஸ்லாமியக் கடமைகளுள் முதலாவதாக நான் பழகிக் கொண்டது தொழுகையாகும். நான் தொழுதுவது, என் பெற்றோருக்குத் தெரியாமல், இரகசியமாகத்தான்! 1959ஆம் ஆண்டு நோன்பு மாதத்தில் நோன்பு நோற்கத் தொடங்கினேன். இறைவனுக்காகவே கலப்பற்ற எண்ணத்துடன் செய்யும் எந்தச் செயலும் பாரமாகத் தோன்றாது"
அவ்வாண்டே முறையாக 'ஷஹாதா' மொழிந்து, இஸ்லாமிய அறநெறியில் அடியெடுத்து வைத்தார் ஃபாத்திமா ஹீரன். அதன் பின்னர் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். ஜெர்மனியில் இஸ்லாமிய நடைமுறையுடன், அடையாளத்துடன், கொள்கையுடன் வாழ்வது அவர்களுக்கு இயலாததாகப்பட்டது. அவருடைய கணவர் பணியாற்றிய அலுவலகத்தில் நடுப்பகல் (லுஹர்) தொழுகைக்காக 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்வதற்கு அவருடைய மேல் அதிகாரிகள் அனுமதியளிக்கவில்லை! அது போன்றே ஃபாத்திமாவும் முழு ஹிஜாபுடன் தனது அலுவலகத்தில் பணியாற்றுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது! எனவே, கணவனும் மனைவியும் பொறுமையுடன் தாம் சம்பாதித்த பணத்திலிருந்து சேமிக்கத் தொடங்கினர். அவர்களின் நோக்கம், போதுமான பணம் சேர்ந்ததும், ஏதேனும் இஸ்லாமிய நாட்டுக்கு புலம் பெயர்ந்து சென்று விடுவதாக இருந்தது.
அந்த நாட்களில் அவர்களுக்குப் பாக்கிஸ்தான் என்ற முஸ்லிம் நாடு தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்ததால், பாக்கிஸ்தானில் வேலைக்கு விண்ணப்பம் செய்திருந்தார்கள், எண்ணியதற்கேற்ப, பணியமர்வும் கிடைத்தது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் வசிக்கத் தொடங்கினார்கள்.
"என்ன செய்வது? என்னருமைத் தாயையும் தந்தையையும் தங்கையையும் சகோதரர்களையும் அங்கே ஜெர்மனியில் விட்டுவிட்டு வந்தேன். நாங்கள் ஒரு பாசமுள்ள குடும்பமாக வாழ்ந்து வந்தோம்! அச்சூழலை விட்டு வந்தது இழப்புத் தான்! ஆனால், எனக்கு இதய அமைதியைத் தந்த இஸ்லாத்தை அடையாதிருந்தால், அது பேரிழப்பல்லவா? இஸ்லாத்தின் மூலம் எனக்குக் கிடைத்த இதய அமைதி, என் குடும்பத்தை இழந்ததற்கு ஈடாயிற்று! இல்லையில்லை, அதைவிட மேலாகும்!" என்று கூறி, நம் இதயத்தைக் கவர்கிறார் சகோதரி ஃபாத்திமா ஹீரன்.
3 Responses So Far:
//எனக்கு இதய அமைதியைத் தந்த இஸ்லாத்தை அடையாதிருந்தால், அது பேரிழப்பல்லவா? இஸ்லாத்தின் மூலம் எனக்குக் கிடைத்த இதய அமைதி, என் குடும்பத்தை இழந்ததற்கு ஈடாயிற்று! இல்லையில்லை, அதைவிட மேலாகும்!" என்று கூறி, நம் இதயத்தைக் கவர்கிறார் சகோதரி ஃபாத்திமா ஹீரன்.//
ஆம் ! நம் யாவரின் இதயத்தைக் கவர்கிறார் !
நம் ஈமானைச் சுய பரிசோதனை செய்து கொள்ளத் தூண்டுகிறது பேறு பெற்ற பெண்மணிகளின் ஸ்திரமான கொள்கைப்பிடிப்பான வாழ்க்கை நெறி.
நல்லாச் சொல்லிக்காட்டுகிறீர்கள் அஹ்மது காக்கா. நன்றி.
இது மாதிரி பல நிகழ்வுகளில் இஸ்லாத்தின் பெருமைகளை பற்றி கூறகேட்கும்போது நம்மை முஸ்லீமாக படைத்த அந்த இறைவனுக்கு என்றென்ரும் நன்றிக்கடன் பட்டிருக்கோம், அல்ஹம்துலில்லாஹ்
Post a Comment