அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!). உலகத்தில் உள்ள ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பலவாறான பண்டிகை தினங்கள் உள்ளது. அவர்களின் பண்டிகை தினங்களில் தங்கள் மன விருப்பப்படி எந்த வரைமுறையும் இல்லாமல் பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளாத கேளிக்கை விளையாட்டுக்களில் ஈடுபடுவதை தாங்கள் கேட்டும், பார்த்தும் இருப்பீர்கள். பல நேரங்களில் மூட நம்பிக்கையின்படியே அவர்களின் விழாக்களும், பண்டிகைகளும் அமைந்து இருக்கும்.
வல்ல அல்லாஹ் வழங்கிய மார்க்கத்தில் எந்த வித மூட நம்பிக்கையும் இல்லாமல் மிக அழகாக மனித நேயத்துடன் நமது பெருநாளை நாம் கொண்டாடி வருகிறோம். இப்படிப்பட்ட அழகிய பெருநாள் தினத்தைப்பற்றி இந்த தொடரில் பார்ப்போம்.
ஃபித்ரா தொகை திருத்தம்:
தொடர் 6ல் ஃபித்ரா தொகை 20 திர்ஹம் என்று எழுதியிருந்தேன். தற்பொழுது நான் கேள்விப்பட்ட செய்தி : துபாயில் திர்ஹம் 15/= என்றும் அபுதாபியில் திர்ஹம் 20/= என்றும் அரசாங்கம் நிர்ணயித்த தொகையாம். இதன்படி தங்களின் ஃபித்ரா தருமத்தை கொடுக்கவும்.
தொழப்போகும் முன் சாப்பிடுதல்:
நோன்பு பெருநாள் தொழுகைக்கு முன் நபி(ஸல்) அவர்கள் சாப்பிட்டு விட்டு தொழச் செல்வார்கள். கீழ்கண்ட ஹதீஸ் விளக்கம் தருகிறது.
சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி(ஸல்) அவர்கள் புறப்பட மாட்டார்கள். மற்றோர் அறிவிப்பில் அவற்றை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. (அறிவிப்பவர்: அனஸ்(ரலி) புகாரி:953)
தொழும் நேரம்:
நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள். (அறிவிப்பவர்: அபூ ஸயீத்(ரலி) புகாரி:956)
பெருநாளன்று நபி(ஸல்)அவர்கள் முதல் காரியமாக தொழுகையைத்தான் முடித்திருக்கிறார்கள். ஆனால் நமது மக்களோ முதல் காரியமாக கறிக்கடைக்கு செல்பவர்களாக இருக்கிறார்கள். வளைகுடா நாடுகளில் உள்ளவர்களுக்கு முதல் காரியமாக தொழுகை கிடைத்து விடுகிறது.
வளைகுடா நாடுகளில் யார் வந்தாலும் வராவிட்டாலும் 6:45 மணிக்கு தொழுகை நேரம் என்று அறிவித்து விட்டால் சரியான நேரத்தில் தொழுகை தொடங்கி விடும். ஒரு ஜமாஅத் தொழுகைதான் இரண்டாவது ஜமாஅத் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் பரவலாக தமிழ்நாட்டில் சில இடங்களில் இரண்டு தடவை தொழுகையெல்லாம் நடக்கிறது. பெண்கள் தொழுகையும் இரண்டு ஜமாஅத்தாகத்தான் நடைபெற்று வருகிறது.
இப்படி செய்வதற்கு காரணம் சரியான நேரத்தில் காலையில் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்தபடி தொழ வைக்கப்படுவதில்லை. பெண்களும் வந்து தொழுவதற்கு வசதிகள் செய்யப்படுவதில்லை.
பல ஆண்டுகளுக்கு முன்னால் என் சிறு வயதில் வெளியூர் பள்ளி ஒன்றில் பெருநாள் தொழுகை நேரம் காலை 9:30 மணிக்கு என்று அறிவித்தார்கள். மக்கள் எல்லோரும் தொழ வந்து விட்டோம். மைக்கில் தக்பீர் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். 9 மணியாகிவிட்டது முக்கியானவர் வரவில்லையாம். யார் அவர்? ஊர் நாட்டாண்மையாம் (ஜமாஅத் தலைவர் மார்க்கம் அறியாதவர்) மைக்கில் அறிவிப்பு தொழுகை நேரம் நெருங்கிவிட்டது நாட்டாண்மை எங்கிருந்தாலும் (ஆங்காங்கே வெளியில் நின்று கொண்டு இருப்பவர்களும்) பள்ளிக்கு வரவும் நிறைய தடைவை அறிவிப்பு செய்த பிறகு ஒரு வழியாக அவர் வந்த பிறகுதான் தொழுகையை ஆரம்பித்தார் இமாம்.
சிறுபிள்ளையாக நான் இருக்கும்பொழுது மார்க்கம் அறியாதவர்கள் ஜமாஅத் தலைவர்களாக இருந்ததை பார்த்தேன். நான் 2011ஆம் வருடத்தில் இருக்கிறேன், இணையத்தள கடலில் மார்க்கம் நம்மை வீடு தேடி வந்த பிறகும் இன்று கூட அன்று பார்த்த மார்க்கம் அறியா தலைவர்களையே இன்றும் அதிகமான இடங்களில் பார்த்து வருகிறேன். வல்ல அல்லாஹ் நேர்வழி காட்டப் போதுமானவன்.
நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்து வழிகாட்டிய தூய மார்க்கத்தை அறிந்த இளைஞர் சமுதாயம் எல்லா ஊர் ஜமாஅத்திலும் அங்கம் வகிக்கும் நேரம் விரைவில் வருவதற்கு வல்ல அல்லாஹ் நல்லருள் புரியட்டும். என்னருமை சகோதரர்களே! இளைஞர்களே! மார்க்கத்தை அறிந்து கொள்ள நிறைய நேரத்தை ஒதுக்குங்கள். மார்க்கம் அறியா தலைவர்களை ஓரம் கட்டி, மார்க்கத்தை அறிந்த தொழக்கூடிய இறையச்சம் உடையவர்களை ஜமாஅத் தலைவர்களாக தேர்ந்தெடுங்கள்.
முன் பின் தொழுகை இல்லை:
பெருநாள் தொழுகைக்கு முன்பாகவும் பின்பாகவும் தொழுகை எதுவும் கிடையாது என்பதற்கு இந்த ஹதீஸ் விளக்கம் தருகிறது:
நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்னம் பின்னும் எதையேனும் தொழவில்லை. (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி), புகாரி:964)
திடலில் பெருநாள் தொழுகை:
நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள். (அறிவிப்பவர்: அபூ ஸயீத்(ரலி), புகாரி:956)
நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (திடலில் தொழுவதால் தடுப்பாக) நபி(ஸல்) அவர்களுக்கு முன்னால் ஓர் ஈட்டி நாட்டப்படும். நபி(ஸல்) அவர்கள் (அதை நோக்கித்) தொழுவார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி), புகாரி:972)
திடலில் தொழுவது காலம் காலமாக பின்பற்றப்படாமல் தொடர்ந்து இருந்து வருகிறது. ஊர்களில் சொந்தமாக தொழுகைக்காக திடல் ஏற்படுத்தாத காரணத்தினாலா? மார்க்கத்தின் தெளிவின்மையா?
பெருநாள் தொழுகையில் பெண்கள், கன்னிப்பெண்கள்,
மாதவிடாய் பெண்கள் கலந்து கொள்வது:
இரண்டு பெருநாள்களிலும் மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கிற கன்னிப் பெண்களையும் வெளியேற்றி (தொழும் திடலுக்கு) அழைத்துவருமாறும் அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழுகிற இடத்திற்குச் சென்று அவர்களின் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தொழும் இடத்தைவிட்டு மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கியிருக்க வேண்டும்' என்றும் கட்டளையிடப்பட்டோம்.
நபி(ஸல்) அவர்களின் இந்தக் கட்டளையைக் கேட்டுக் கொண்டிருந்த பெண்களில் ஒருவர் 'இறைத்தூதர் அவர்களே! எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்வதற்கு மேலாடை இல்லையெனில் என்ன செய்வது?' எனக் கேட்டதற்கு 'அவளுடைய தோழி தன்னுடைய (உபரியான) மேலாடையை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும்' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்' (அறிவிப்பவர்: உம்மு அதிய்யா(ரலி) புகாரி:982)
மேற்கண்ட ஹதீஸ் பெருநாள் தொழுகை திடலில் தொழ வைக்கப்பட வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறது. திடலில் தொழ வைத்தால்தான் மாதவிடாய் பெண்கள் வரமுடியும். மாதவிடாய் பெண்களுக்கு தொழுகை கடமையில்லை என்றாலும் தொழாவிட்டாலும் பயானை கேட்க முடியும், பிரார்த்தனை செய்யமுடியும். பெருநாளின் நன்மையை பெற்றுக்கொள்ள முடியும்.
பெருநாள் தொழுகை தொழும் முறை:
நபி(ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 7 தக்பீர்களும், இரண்டாம் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 5 தக்பீர்களும் கூறுவார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி), அபூதாவூத்)
நபி(ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தத் துவங்கினால் அவர்களின் இரு கண்களும் சிவந்து விடும். குரல் உயர்ந்து ஆக்ரோஷமாக வார்த்தைகள் வெளிப்படும். ராணுவத்தை எச்சரித்து வழி நடத்துபவர் போலாகி விடுவார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) , முஸ்லிம்)
இது போன்ற உரை நிகழ்த்தப்பட்டால் தொழுகைக்குப் பிறகு மக்கள் கட்டாயம் இருப்பார்கள். தொழுகை நடத்துவோர் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் தொழுகையை நடத்தி அதன் பின் ஆழமான உரையையும் நிகழ்த்த தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
துஆ(பிரார்த்தனை):
பெருநாளில் (தொழும் திடலுக்கு) நாங்கள் புறப்பட வேண்டுமெனவும் கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் நாங்கள் கட்டளையிடப் பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும் புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள். (அறிவிப்பவர்: உம்மு அதிய்யா(ரலி) புகாரி:971)
பெருநாள் தினத்தில் தொழுகை முடிந்த பிறகு பயான் நடக்கும். இந்த பயானை கேட்காமல் உடன் எழுந்து செல்பவர்களும் இருக்கிறார்கள். அல்லது பயான் முடிந்தவுடன் எழுந்து செல்பவர்களும் இருக்கிறார்கள். இங்கே பேணப்படாதது துஆ நானும் பல ஆண்டுகளாக பார்த்து வருகிறேன் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே துஆச் செய்கிறார்கள். எல்லோரும் உடனடியாக செல்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். இந்த புனிதமான பெருநாளின் துஆவை தவற விட்டு விடுகிறோம். சகோதர, சகோதரிகளே! இத்தனை நாள் நோன்பிருந்து பொறுமை காத்த நமக்கு பெருநாள் தொழுகை முடிந்த பிறகு ஒரு 10 அல்லது 20 நிமிடம் துஆ கேட்டுச் செல்வதால் என்ன குறைந்து விடப்போகிறது. இந்த பெருநாளின் துஆவை விட வேறு என்ன நமக்கு முக்கியமான காரியம் இருக்கும். சாப்பிடுவது, தூங்குவது, விருந்தினரை கவனிப்பது இதை தவிர வேறு என்ன இருக்கப்போகிறது. இவைகள் அனைத்தையும் விட துஆ மிக மிக முக்கியமானது என்பதை மறந்து விடாதீர்கள். தங்களுக்கு வேண்டியதை அனைத்தையும் கேளுங்கள் வல்ல அல்லாஹ்விடம் (கூட்டு துஆவில் அவர் அவருக்கு தேவைப்படுவதை கேட்க முடியாது. துஆ என்பது உள்ளார்ந்த ஆர்வமுடனும், அச்சத்துடனும் அவரவர் அடிமனதிலிருந்து வெளியாகி கேட்க வேண்டும். கூட்டு துஆவில் ஆர்வமும் இல்லை, அச்சமும் இல்லை என்பதை உணர்பூர்வமாக உணரக்கூடியவர்களுக்கு தெரியும்).
தொழுகை முடிந்த பிறகு துஆ கேட்காமல் உடனடியாக புறப்பட பிள்ளைகளை காரணம் காட்டுவார்கள். வீட்டிலிருந்து புறப்படும்பொழுதே அவர்களுக்கான தண்ணீர், திண்பண்டங்கள் தாங்கள் வரும்பொழுதே எடுத்து வந்திருந்தால் பிள்ளைகளும் தங்களை தொந்தரவு செய்யமாட்டார்கள். பெருநாள் துஆ மிக அவசியமானது என்பதை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். நமக்கு வேண்டிய அனைத்தையும் இன்றயை தினம் கேட்க வேண்டும்.
பெருநாள் தினத்தில் செல்லும் பாதை:
பெருநாள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதைகளை மாற்றிக் கொள்வார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) புகாரி:986)
நபி(ஸல்) பெருநாள் தொழுகைக்கு போகும்பொழுது ஒரு வழியாகவும், திரும்பி வரும்பொழுது வேறு வழியாகவும் வந்திருக்கிறார்கள்.
தொழுத பிறகு:
தொழுது விட்டு வீடு வந்து விட்டோம் பிறகு காலை உணவு தூக்கம், மதிய உணவு என்றும் சிலர் இருப்பார்கள், சிலர் சீட்டு விளையாடுவது, சினிமா பார்ப்பது, வீண் அரட்டை போன்ற பயன் இல்லாத காரியங்களை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். வல்ல அல்லாஹ் அளித்த புனிதமான பெருநாள் தினத்தில் அவனின் நினைப்போடு நாள் கழிய வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
இன்றைய தினம் நல்ல வழியில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு சில காரியங்கள் செய்யலாம். ஒரு குடும்பம் அவர்களாக சமைத்து அவர்கள் மட்டும் சாப்பிடுவதை விட்டு உறவினர்கள் அருகருகே இருப்பவர்கள் இரண்டு மூன்று அதற்கு மேலும் குடும்பங்கள் இருந்தால் ஒரே இடத்தில் அனைவரும் ஒன்று கூடி சமைத்து சாப்பிடலாம். (செலவுகளில் அனைவரும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்) உறவினர்கள் இல்லை என்றால் அருகில் நட்பில் உள்ள குடும்பத்துடன் சேர்ந்து சமைத்து சாப்பிடலாம். மாலை அவரவர் ஊரில் இருக்கும் பொழுது போக்கு இடமான கடற்கரை, பூங்காக்கள் என்று சென்று வரலாம். நல்ல விளையாட்டுக்கள் போன்ற நல்ல காரியங்களில் இந்த நாளை கழிக்கலாம். எல்லா நேரங்களிலும், தொழுகை இறை நினைவு இரண்டையும் மறந்த நிலையில் இல்லாமல் கவனமாக இருக்க வேண்டும்.
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே புனிதமான பெருநாள் நம்மை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. அன்றைய தினத்தில் முதல் வேலையாக தொழுகை ஆரம்பிக்கும் முன்பாக தொழும் இடத்திற்கு சென்று விட வேண்டும். கடைசி நேரத்தில் சென்று தொழுகை கிடைக்காமல் போய் விடுமோ என்ற பதற்றம் ஏற்படாது. தொழுகையை முடித்த பிறகு பொறுமையாக இருந்து உரையை கேட்ட பிறகு அதை விட பொறுமையாக இருந்து துஆச் செய்ய வேண்டும். உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் இந்த தினத்தில் வல்ல அல்லாஹ்விடம் கேட்க வேண்டும். (நேரத்தை பார்க்காமல் நிதானமாக அவசரப்படாமல் தங்களின் துஆவை கேளுங்கள்).
வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நோன்பு பெருநாள் தினத்தின் நன்மை அனைத்தையும் வழங்கி அவனின் மன்னிப்பையும், கருணையையும் பரக்கத்தையும் நமக்கு தாராளமாக வழங்கி நல்லருள் புரியட்டும்.
இன்ஷாஅல்லாஹ் வளரும்....
S. அலாவுதீன்
15 Responses So Far:
//(கூட்டு துஆவில் அவர் அவருக்கு தேவைப்படுவதை கேட்க முடியாது. துஆ என்பது உள்ளார்ந்த ஆர்வமுடனும், அச்சத்துடனும் அவரவர் அடிமனதிலிருந்து வெளியாகி கேட்க வேண்டும். கூட்டு துஆவில் ஆர்வமும் இல்லை, அச்சமும் இல்லை என்பதை உணர்பூர்வமாக உணரக்கூடியவர்களுக்கு தெரியும்)//.
அன்பிற்குரிய அலாவுதீன்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
மேலே மேற்கோல் காட்டியிருப்பதற்கும் கீழே மேற்கோல் காட்டியிருப்பதிலிருந்தும் எனக்கு விளங்குவதை நான் சொல்கிறேன். நீ திருத்து.
//வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நோன்பு பெருநாள் தினத்தின் நன்மை அனைத்தையும் வழங்கி அவனின் மன்னிப்பையும், கருணையையும் பரக்கத்தையும் நமக்கு தாராளமாக வழங்கி நல்லருள் புரியட்டும்.//
முதல் மேற்கோல் கூட்டுத்துஆ வேண்டாம் என்கிறது. ஆனால், நீயோ ஒரு கூட்டு துஆவோடுதான் கட்டுரையையே முடித்திருக்கிறாய்.
நான் என்ன சொல்கிறேன் என்றால், கூட்டுத்துஆ கூடாது எனபது தொழுகை மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்குக் கேட்கும்போது மட்டும்தான்.
எல்லா இடத்திலும் அல்ல. நீதான் விளக்க வேண்டும்.
அருமையானதொரு குறுந்தொடர் தந்து எங்களைப் பயனுறச் செய்த உனக்கு அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா என்று அ.நி. சார்பாக கூட்டுத்துஆ கேட்டுக்கொள்கிறேன். ஆமீன்.
ஈத் பெருநாள் பற்றிய அனைவரும் அறிய வேண்டிய தெளிவான கையேடு.
குறிப்பாக துஆவின் மகத்துவம் அவசியப்படுத்தப்பட்டுள்ளது.ஜஜாக்கல்லாஹ் ஹைர்.
அலாவுதீன்,
கீழ்கண்ட சந்தர்ப்பங்களில் கூட்டு துஆ தேவையில்லை என்பதில் நான் ஏற்கனவே உடன்படுவதால் விளக்கம் சொல்லி உன் நேரத்தை விரயம் செய்யாதே.
-ஃபர்லான தொழுகைக்குப் பின்னர்
-தனிப்பட்டத் தேவைகளுக்கான் காரியங்களின் போது.
கூட்டாக துஆ கேட்டதை நான் கண்ட இடங்கள் / உடன்படும் சந்தர்ப்பங்கள்:
-ஜுமுஆ தொழுகைக்கு முன்
-அரஃபாத் பெருவெளி (ஹஜ்ஜின்போது)
-இயற்கை சீற்றத்தலான அழிவின்போது
-மழை வேண்டி
உடன்படுபவ்ற்றை விளக்க வேண்டாம். முரணானவற்றைமட்டும் இங்கோ தனிப்பதிவாகவோ விளக்கு.
அதுபோது, யா அல்லாஹ் எங்கள் பாவங்களை மன்னித்துவிடு என்று கூட்டாகக் கேட்பதில் லாஜிக்கா என்ன தவறு என்று விவாதி.
(பெருநாளைக்கு இங்கே வரச்சொல்லி மனைவியும் மக்களும் அழைக்கிறார்கள். வாயேன் நிறைய பேசுவோம்)
அறியவேண்டிய விடயங்களை அந்தந்த தருணங்களில் அவசியம் வேண்டி அறிவுறுத்துவதில் முன்னோடியாக இருக்கிறீர்கள் !
ஏற்கனவே தெரிந்த விஷயங்கள்தானே என்று அலட்சியமேதும் செய்யாமல் நல்ல நினைவுட்டலின் பலனை நாமும் பெறுவோம் இன்ஷா அல்லாஹ்...
ஜஸாக்கல்லாஹ் ஹைர் !
கவிக் காக்கா கூட்டு துஆ பற்றிய உங்களின் விளக்கமும் அதற்குரிய தெளிவு வேண்டியும் கேட்டு வைத்திருக்கும் வினாவிற்கு விளக்கத்தினை நானும் எதிர்பார்க்கிறேன் இன்ஷா அல்லாஹ் !
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
அன்புச் சகோதரர் அவர்களுக்கு,
தெளிவுகள் உங்களின் ஆக்கத்திலிருந்து நிறைய கிடைக்கிறது - ஜஸாக்கல்லாஹ்.
தாங்கள் சொல்லிக் காட்டிய முறையே நானும் கூட்டு துஆவைப் பற்றி அறிந்திருந்தேன் இதுநாள் வரை, ஆனால் சகோதரர் கவி சபீர் அவர்களின் எடுத்து வைத்திருக்கும் கருத்தினையும் கருத்தில் கொள்ளத்தான் வேண்டும் நானும் அவர்களோடு காத்திருக்கிறேன் தங்களின் பதிலுக்காக.
அஸ்ஸலாமு அலைக்கும். மார்கம் நல்ல முறையில் போதிக்க படும் மதரஸாக்களில் பாடம் படித்தது போன்ற நல்லா மனதில் பதியும் வண்ணம் அமைந்த ஆக்கம் .வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நோன்பு பெருநாள் தினத்தின் நன்மை அனைத்தையும் வழங்கி அவனின் மன்னிப்பையும், கருணையையும் பரக்கத்தையும் நமக்கு தாராளமாக வழங்கி நல்லருள் புரியட்டும்.அருமையானதொரு குறுந்தொடர் தந்து எங்களைப் பயனுறச் செய்த உங்களுக்கு அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா என்று கேட்டு கொள்கிறேன் ஆமீன்.
தெளிவான பகிர்வு, நாம் அனைவரும் பெருநாள் தொழுகைய நிறைவேற்றி மகிழ்ச்சியில் திளைத்திட எல்லாம் வல்ல இறைவன் கருணைபுரியட்டும் ஆமீன்
சகோதரர்கள்/சகோதரிகள் அனைவருக்கு நோன்பு பெருநள் நல்வாழ்த்துக்கள்..!
அஸ்ஸலாமு அலைக்கும்.
அலாவுதீன் காக்கா பெருநாள் பிரசங்கத்தை அதிரை நிருபரிலையே செய்துவிட்டீர்கள். மாஷா அல்லாஹ் .
//திடலில் தொழுவது காலம் காலமாக பின்பற்றப்படாமல் தொடர்ந்து இருந்து வருகிறது. ஊர்களில் சொந்தமாக தொழுகைக்காக திடல் ஏற்படுத்தாத காரணத்தினாலா? மார்க்கத்தின் தெளிவின்மையா?//
நபி(ஸல்)அவர்கள்.காட்டி தந்த சுன்னத்தான வழிமுறை ஈத் தொழுகையை திடலில் தொழுவதுதான் என்று உலமா பெருமக்கள் அவ்வப்போது நினைவூட்டுகிறார்களே தவிர.அதை நடை முறைக்கு கொண்டு வர தயங்குகிறார்கள்.மார்க்கத்தின் மீது சரியான புரிந்துணர்வு இல்லாத நம் முன்னோர்களால்.
அவர்களின் வசதிக்கு ஏற்றவாறு.இரண்டு மூன்று ஜமாத்தாக ஈத் தொழுகையை.பள்ளியில்.நடத்தி இருக்கிறார்கள்.இன்று சமுதாயத்தில் .நல்ல விழிப்புணர்வின் காரணமாக.நமதூரில் ஒரே ஜமாத்தாக நடை பெறுவதை காண்கிறோம்.
அது போல் பல சகோதரர்களால் நபி(ஸல்)அவர்களின் சுன்னத்தை ஈத்காவில் நடை முறை படுத்துவதையும்.காண்கிறோம்.அல்ஹம்து
லில்லாஹ்
இன்று சமுதாயத்தில் தெளிவின்மை என்றுசொல்லமுடியாது
காரணம்.அந்தஅளவுக்கு குர்ஆன்,ஹதீஸுடைய,விளக்கங்கள்.சொற்ப்பொழி மற்றும் பதிவுகள் மூலமும்.மக்களுக்கு எடுத்து சொல்லப் படுகிறது.
அல்லாஹ்வின் தூதர் ஏற்றிய ஜோதியை அனைத்து விட்டு. தன் வறட்டு கவுரவத்தால் முன்னோர்கள் செய்தவற்றை மட்டும் கொடி பிடித்து கொண்டாடி மகிழ நினைப்பதுதான்.இதற்க்கு காரணம் .
இது போன்றவர்கள் ஈத்காவில் தொழுவதற்கு அவர்களின் மனதில் இடம் தருவார்களையானால்.திடல்கள் திரண்டு வருவதில் சந்தேகமே இல்லை. அல்லாஹ் அப்படி ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துவானாக.
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
கருத்திட்ட அனைத்து சகோதரர்களுக்கும் நன்றி!
சகோதரிக்கும் நன்றி!
ஜஸாக்கல்லாஹ் ஹைர்!
அன்பிற்குரிய சபீர்!
வஅலைக்கும் ஸலாம் (வரஹ்)
///முதல் மேற்கோல் கூட்டுத்துஆ வேண்டாம் என்கிறது. ஆனால், நீயோ ஒரு கூட்டு துஆவோடுதான் கட்டுரையையே முடித்திருக்கிறாய்.///
//வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நோன்பு பெருநாள் தினத்தின் நன்மை அனைத்தையும் வழங்கி அவனின் மன்னிப்பையும், கருணையையும் பரக்கத்தையும் நமக்கு தாராளமாக வழங்கி நல்லருள் புரியட்டும்.//
*******************************************************************************
கட்டுரையை முடிக்கும்பொழுது நான் கேட்டிருக்கும் துஆ, கூட்டு துஆ கிடையாது. நான் மட்டும் கேட்ட துஆ. அதிரை நிருபர் சார்பாகவும் வாசகர்கள் சார்பாகவும் என்று நான் முடிக்கவில்லை. அப்படி கேட்கவும் கூடாது. நான் தினமும் அத்தியாஹித்திலும் தனியாகவும் உலகில் உள்ள மூமினான ஆண் பெண் அனைவருக்கும் துஆ கேட்டு வருகிறேன். (நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறை) அந்த வகையில்தான் என்னுடைய அனைத்து கட்டுரையின் நடுவிலும் கடைசியிலும் என்னுடைய சொந்த துஆவாக எழுதியிருப்பேன். இது கூட்டு துஆ இல்லை.
அலாவுதீன் காகாவின் கட்டுரையும் பின்னுட்டமும் மிக தொளிவாக புரியும் படி இருந்தது.
அன்பிற்குரிய சபீர்!
/// -ஜுமுஆ தொழுகைக்கு முன்
-அரஃபாத் பெருவெளி (ஹஜ்ஜின்போது)
-இயற்கை சீற்றத்தலான அழிவின்போது
-மழை வேண்டி
உடன்படுபவ்ற்றை விளக்க வேண்டாம். முரணானவற்றைமட்டும் இங்கோ தனிப்பதிவாகவோ விளக்கு.
அதுபோது, யா அல்லாஹ் எங்கள் பாவங்களை மன்னித்துவிடு என்று கூட்டாகக் கேட்பதில் லாஜிக்கா என்ன தவறு என்று விவாதி. ///
************************************************************************************
நான் மார்க்கத்தை கற்றுக்கொள்ளும் மாணவனாக இருக்கிறேன். மார்க்கத்தை முழுமையாக அறிந்தவனும் கிடையாது. கேட்டறிவு, படிப்பறிவு, ஆய்வு பிறகு செயல்படுத்துவது இந்த நிலைமையில்தான் என்னுடைய மார்க்க அறிவு இருக்கிறது. நான் எதை சரி என்ற கண்டேனோ கடைபிடிக்கிறனோ அதை மட்டும்தான் என்னுடைய கட்டுரையில் வெளியிடுகிறேன். நான் கூறுவதில் தவறு இருப்பின் சுட்டி காட்டினால் திருத்திக் கொள்ளும் நிலையில்தான் இருக்கிறேன். மார்க்கத்தை விளங்கி தவறு இல்லாமல் பின்பற்ற வேண்டும் என்பதே என்னுடைய கொள்கை.
ஜூம்ஆ நாம் தொடர்ந்து கடைபிடிப்பது, மற்ற மூன்று விஷயங்களில் நான் கலந்து கொள்ளாதது இதுபற்றி விபரம் தெரிந்து நான்கிற்கும் என்னால் முடிந்தளவு நிறைவுறையில் தெரியப்படுத்துகிறேன். அல்லது தனிப்பதிவாக எழுதுகிறேன். இன்ஷாஅல்லாஹ்!
உனது கருத்திற்கு நன்றி! ஜஸாக்கல்லாஹ் ஹைர்!
***********************************************************************************
(பெருநாளைக்கு இங்கே வரச்சொல்லி மனைவியும் மக்களும் அழைக்கிறார்கள். வாயேன் நிறைய பேசுவோம்).
இன்ஷா அல்லாஹ்! பெருநாளைக்கு வருகிறேன்.
அன்புச்சகோதரர் லெ.மு.செ.அபுபக்கர் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
///பல சகோதரர்களால் நபி(ஸல்)அவர்களின் சுன்னத்தை ஈத்காவில் நடை முறை படுத்துவதையும்.காண்கிறோம்.அல்ஹம்து லில்லாஹ்
இது போன்றவர்கள் ஈத்காவில் தொழுவதற்கு அவர்களின் மனதில் இடம் தருவார்களையானால்.திடல்கள் திரண்டு வருவதில் சந்தேகமே இல்லை. அல்லாஹ் அப்படி ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துவானாக.///
ஊரில் நானும் பெருநாளன்று திடலில் தொழுதிருக்கிறேன்.(விடுமுறையில் ஒரு பெருநாளில் மட்டும்).
ஊரில் திடல் நிரந்தரமாக சொந்தமாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஒவ்வொரு பெருநாளிலும் திடலை தேடும் சூழ்நிலையில்தான் இருக்கிறது நிலைமை. எல்லா திடல்களும் மனைகளாகி கொண்டு இருக்கிறது. பள்ளிகளுக்கென்று ஒரு திடல் சொந்தமாக இருந்தால் மிக நல்லது.
தங்களின் கருத்திற்கு நன்றி! ஜஸாக்கல்லாஹ் ஹைர்!
Post a Comment