நாம் ஊரில் சிறுவர்களாக இருந்த அந்த சமயம் ரமளான் தலைப்பிறை பார்ப்பதிலிருந்து பெருநாள் பிறை பார்க்கும் வரை நடக்கும் நிகழ்வுகளையும், சந்தோசத்தையும் இப்படி ஒரு கட்டுரையில் அடக்கி ஒடுக்கி விட முடியாது.
ஒரு சமயம் பள்ளி முழு ஆண்டுத்தேர்வுகள் முடிவடைந்து வரும் நீண்ட விடுமுறையில் (ஏப்ரல், மே மாதங்களில்) ரமளான் நோன்பும் ஆரம்பமாகி படித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு மாணவ,மாணவியருக்கும் கல்வித்துறையில் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் கூடுதல் கொண்டாட்டத்தைக்கொண்டு வந்து சேர்க்கும்.
நோன்பு நேர கொண்டாட்டங்களில் சிறுவர்களுக்கு தலைமைக் கொண்டாட்டமாக திகழ்வது மாலை நேரங்களில் நம்மூர் குளங்களில் (குறிப்பாக செக்கடிக்குளம், ஆலடிக்குளம், செடியன் குளம், வெட்டிக்குளம், ஏரி...) குதித்து குளித்துக்கும்மாளம் இடுவது தான். காது, மூக்கு, வாய் மூலம் தண்ணீர் போனாலும் அது பற்றி சிறிதும் கவலைப்படாத அறியாத காலம்.
அவரவர் முஹல்லாப்பள்ளிகளில் நோன்பு கஞ்சி காய்ச்சும் சமயம் காய்கறி வெட்டிக்கொடுப்பது, கஞ்சிக்கோப்பைகளை அடுக்கி வைப்பது அல்லது பிற சிறுவேளைகளில் பணிவிடைகள் செய்வது சிறுவர்களுக்கு பிடித்தமான ஒன்று.
அந்த நேரத்தில் தன் சட்டையை முறையே இஸ்தரி (அயர்ன்) செய்து அணிவது நாகரிகத்தின் உச்சக்கட்டம்.
நமதூர் கடைத்தெருவில் உள்ள அன்சாரி கேப் மார்ட்டில் வண்ண,வண்ண தலைத்தொப்பிகள் விருப்பத்திற்கேற்ப வாங்கி அணிந்து உள்ளம் பெருமிதம் அடையும்.
பசியின் பகல் நேரங்களில் தெருவில் காணும் கண்ட திண் பண்டங்களையும் வாங்கி நோன்பு திறக்க வீட்டில் சேமித்து வைக்கும். இறுதியில் திண்ண முடியாமல் தெவிட்டிப்போகும்.
அஸர் தொழுகை முடிந்த உடனேயே நோன்பு திறக்க அது வீடாக இருந்தாலும், பள்ளியாக இருந்தாலும் உள்ளம் படபடப்புடன் பரபரப்படையும். அந்த நேரங்களில் எல்லோர் வீட்டிலும் குளிர்சாதனப்பெட்டி (ஐஸ்பெட்டி) இருக்காது. அக்கம்பக்கத்தில் யார் வீட்டில் இருக்கிறதோ அவர்கள் வீட்டிலிருந்து சொந்தபந்த உறவுமுறை கூறி ஐஸ் கட்டிகள் வாங்கி வந்து நல்ல சர்பத் தயாராகும்.
இன்னும் இருபது அல்லது இருபத்தைந்து நாட்களுக்குப்பின் வர இருக்கும் பெருநாளுக்கு பட்டுக்கோட்டையிலிருந்து துணிமணிகள் வாங்கி வந்து தெருவில் உள்ள டைலரிடம் தைக்க கொடுத்து அவர் ஒரு நாள் குறித்து ஒரு அட்டையில் நம் துணியின் ஓரத்தை நறுக்கி அதனுடன் நம் உள்ளத்தையும் சேர்த்தே அடித்து தருவார்.
மன ஓர்மையுடன் அந்த சிறுவயதில் தராவீஹ் 20 ரக்காத்களும் முறையே தொழுதுவிட்டால் அது பெரும் சாதனை தான். அடுத்தடுத்த நாட்கள் ஏதாவது ஒரு வகையில் அந்த மன ஓர்மை மக்கர் பண்ணி வெளியே இழுத்து வந்து மற்ற சிறுவர்களுடன் விளையாட வைத்து விடும்.
அன்று நம் வீட்டுப்பெண்கள் ஆர்வமுடன் வீட்டில் சிரத்தை எடுத்து செய்து தந்த திண்பண்டங்களெல்லாம் இன்று வீதியில் விற்க தொடங்கி விட்டன. அதனால் அவர்களுக்குள் இருந்த ஆர்வமும் மெல்ல,மெல்ல கம்பன் எக்ஸ்பிரஸ் போல் மறைந்து விட்டதாக பேச்சு.
அன்றைய சிறுவர்களுக்கு குதூகலத்துடன் கையில் / சட்டைப்பையில் காசும் உற்றார் உறவினர்கள் மூலம் வந்து சேரும். அந்த நேரங்களில் வகை, வகையான இரு சக்கர வாகனங்கள் அதிகம் ஊரில் இல்லை. எனவே தெருவில் அல்லது கடைத்தெருவில் (பரிதா அல்லது வின்னர்) வாடகை சைக்கிள் கடையில் சைக்கிள் எடுத்து சுற்றினோம். ஆசையாய் ஒரு ஐஸ்கிரீம் திண்ண வேண்டுமென்றால் கூட மெயின்ரோட்டிற்குத்தான் வர வேண்டும்.
அன்று மேனி தெரிய அணிந்த மார்ட்டின் சட்டையும், வருமுன்னே வருகையை அறிவிக்கும் சோலப்புரி செருப்பும், ஓமக்ஸ் வாட்சும், சல்லடையான பனியனும், முதலை மார்க் ஜட்டியும், கையில் கைக்குட்டையும், தலையில் விரும்பி அணிந்த தொப்பியும், மேனியில் பூசிக்கொண்ட நறுமண அத்தரும், திக்கிதிக்கி ஓதிய குர்'ஆனும் அன்றைய கால சரித்திர குறியீடுகள்.
குடும்ப சொந்த (சம்மந்த) பந்த உறவுகளை பலப்படுத்த வீட்டில் செய்து கொடுத்து பரிமாறிய நோன்புக்கஞ்சியும், வாடாவும் ஒரு இணைப்புப்பாலங்கள்.
இடையிடையே மின்சார வாரியத்தின் மின் துண்டிப்புகள் ஆயிரம் அல்லல்களை வீட்டுப்பெண்டிருக்கு தந்தாலும் அதை எல்லாம் சவாலாக ஏற்று சஹரு நேர உணவும் செம்மையாக செய்து முடிப்பர். அன்று அவர்கள் மண் சட்டியில் செய்து பரிமாறிய உணவின் சுவை இன்றுவரை கிடைக்காமல் போய் விட்டது. விறகடுப்பில் வைத்து நேற்று மண்சட்டி மூலம் ஆக்கிய மீன் ஆணமும், இன்று காய்ச்சிய தேங்காப்பால் கஞ்சியும் சொல்லாமல் வந்த சம்மந்தம் சுவையின் ஆனந்தம்.
இன்ஷா அல்லாஹ் நினைவுகள் தொடரும்...
- மு.செ.மு. நெய்னா முஹம்மது.
8 Responses So Far:
MSM(n): மண்ணின் மைந்தன் எழுதும் மறக்க முடியாத என்றும் அசைபோடத் தூண்டும் அருமையான நினைவுகள் !
அன்சாரி கேப் மார்ட் மட்டுமா ? இல்யாஸ் கேப் மார்ட் என்றும் இருந்ததே !
நம்மூரிலேயே ஸ்டைலாக சட்டை தைத்து தருவதில் இராமச்சந்திரன்னு டைலர் இருப்பாரே ? இன்னும் இருக்கார் போலும் !
நினைவாற்றல் ! மாஷா அல்லாஹ் !
இன்றைய இளைய ஆண்மகனின் மேலாடை பாலாடை போல்தான் இருக்கும் ஒருவித மிதப்பாக ! :)
ஹோம்சிக்:(
நெய்னாவின் நினைவு என்ற ஆற்றில் கசியும் தகவல்கள் ஆதிஅதிரைக்கே கொண்டு சென்று நெகிழ்வூட்டக்கூடியவை.அருமை நெய்னா.
இக்காலங்களில் அன்று பள்ளிப்பிள்ளைகளின் அர்ரஹ்மான் சூரா வீடுவீடாக சென்று ஓதுவதும் நெஞ்சில் நீங்கா அருமை நினைவுகள்.
//குடும்ப சொந்த (சம்மந்த) பந்த உறவுகளை பலப்படுத்த வீட்டில் செய்து கொடுத்து பரிமாறிய நோன்புக்கஞ்சியும், வாடாவும் ஒரு இணைப்புப்பாலங்கள்.//இது இன்றும் தொடரும் தொடர்பாலங்கள்.
கவி காக்கா:
நிறைய எழுதியிருப்பேங்கன்னு தெரியும் ஆனால் ஹோம்சிக் வந்திட்டதால் ஹோம்சிக்கோடு முடிசுட்டீங்க போலும்
அஸ்ஸலாமு அலைக்கும்.
சகோ; நெய்னாவின் நோன்புகால பழைய நினைவுகளை.இப்ப உள்ள நோன்புகாலங்களில் அந்த நிகழ்வுகளை நல்ல ஸ்கேன் இயந்திரத்தைக்கொண்டு கண்டுபிடிக்கவேண்டும்.
ஏக்கப் பெருமூச்சுதான் வருகிறது சகோ நைனா
To Bro மு.செ.மு. நெய்னா முஹம்மது.
நீங்கள் சொன்ன அதிராம்பட்டினம் இப்போது பெரும்பாலான இடங்களில் [Living Condition]"வாழும் வசதி" அற்று சிரமத்துடன் காட்சி அளிக்கிறது
MSM மின் கட்டுரை படித்து முடித்தவுடன் நோன்பு கஞ்சி குடித்து நோன்பு திறந்ததுபோல் உள்ளது
Post a Comment