இந்தத் தலைப்பில் கடந்த வாரத்தில் நாம் விவாதித்த போது, இப்போது பதவி ஏற்றுள்ள புதிய மத்திய அரசு எதிர் கொள்ள இருக்கும் பல சவால்களைப் பட்டியலிட்டுக் காட்டி இருந்தோம். அவைகளில் பல சவால்கள் பொதுவாக எந்த அரசு பதவிக்கு வந்தாலும் எதிர் கொள்ள வேண்டிய சவால்கள்தான். இப்போது பொறுப்புக்கு வந்துள்ள நரேந்திர மோடியின் அரசுக்கென்று பிரத்தியேகமாக - சில சவால்களை மட்டும் இந்த அத்தியாயத்தில் விவாதித்து நிறைவு செய்யலாம்.
காரணம், மற்ற எந்த அரசையும் விட நரேந்திர மோடியின் அரசு உண்மையிலேயே சில வித்தியாசமான சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு பதவி ஏற்றுக் கொண்ட அமைச்சரவைப் பட்டியலைப் பார்த்தாலே இது ஒரு வித்தியாசமான அரசு என்பதையும் வித்தியாசமான சவால்களை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிற அரசு என்பதையும் நாம் உணரலாம். நரேந்திர மோடியின் தலைமையில் அமைந்துள்ள அமைச்சரவை நாடு முழுதுக்குமான மாநிலங்களுக்கு சரிநிகர் சமமானமான பிரதிநிதித்துவம் இல்லாத அமைச்சரவையாக அமைக்கப் பட்டிருப்பது ஒரு ஆரம்ப வித்தியாசம். அத்துடன் தனித்தனி அமைச்சர்களால் கையாளப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் ஒரே அமைச்சரிடம் இணைத்துக் கொடுக்கப்பட்டிருப்பது இன்னொரு வித்தியாசம். உதாரணமாக, அருண் ஜெட்லி வசம் நிதி மற்றும் இராணுவத்துறைகள் தரப்பட்டு இருப்பதாகும்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியமான எட்டு துறைகள் ஒதுக்கப்பட்டும் அதற்கு அண்டை மாநிலமான பீகாருக்கு அதே போல ஐந்து அமைச்சர்களை ஒதுக்கி இருக்கும் முடிவைப் பார்க்கும் போதும் மராட்டிய மாநிலத்துக்கும் நான்கு அமைச்சர்களை பதவியில் அமர்த்தி இருக்கும் போதும் தென் இந்தியாவுக்கு வழங்கப் பட்டு இருக்கிற அமைச்சரவைப் பிரதிநிதித்துவம் பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது. கேரளத்திலிருந்து ஒரு அமைச்சர் கூட இல்லை; தமிழ் நாட்டுக்கு ஒன்றே ஒன்று; ஆந்திராவுக்கு ஒன்றே ஒன்று; கர்நாடகத்துக்கு இரண்டு மட்டுமே என்று அமைச்சரவையில் வெளிப்படையாக தென்னகம் புறக்கணிக்கப் பட்டிருப்பது “வடக்கு வாழ்கிறது! தெற்கு தேய்கிறது ! “ என்று ஒரு காலத்தில் எழுந்த கோஷம் மீண்டும் எழுப்பப்பட வேண்டிய அவசியத்துக்கு நாட்டைத்தள்ளி இருக்கிறதோ என்று எண்ண வேண்டி இருக்கிறது.
அதே நேரம் தனது கட்சி, அதிக உறுப்பினர்களை வென்று எடுத்த மாநிலங்களுக்கு அதிகப் பிரதிநிதித்துவம் தரப் பட்டு இருக்கிறது என்கிற பிஜேபியின் வாதமும் ஏற்க முடியாமல் இருக்கிறது. காரணம் மொத்தம் 25 பாராளுமன்றத்தொகுதிகளையும் வென்றெடுத்த இராஜஸ்தானுக்கும் கூட ஒரு அமைச்சரைக் கூட ஒதுக்கவில்லை. ஆனால் ஆச்சரியப்படும் விதத்தில், தேர்தலில் தோல்வியுற்ற அருண் ஜெட்லி மற்றும் ராகுல் காந்தியால் தோற்கடிக்கப் பட்ட ஸ்மிருதி இராணி ஆகியோர் கூட அமைச்சர்களாக்கப் பட்டிருக்கும் போது வெற்றி பெறாத மாநிலங்களில் இருந்தும் , பிரதமர் நினைத்து இருந்தால் அமைச்சர்களைக் கொண்டு வந்து நாட்டின் எல்லா மாநிலங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் அளித்து இருக்க முடியும். ஆனால் இதை மேற்கொள்ளாதது இந்த அரசின் ஆரம்பப் போக்கு களின் மீது ஐயம் கொள்ளவே வைக்கிறது.
மாநிலவாரியான பிரதிநிதித்துவம் சரியாகப் பின்பற்றப்படாதது மட்டுமல்லாமல் மொழிவாரி, இனவாரி, மதவாரியான பிரதிநிதித்துவங்களும் இந்த அரசின் ஆரம்ப அமைச்சரவையில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. உதாரணமாக நாட்டின் மக்கள் தொகையில் 18% இருக்கும் முஸ்லிம்களின் பிரதிநிதியாக நஜ்மா ஹெப்துல்லா என்கிற ஒரே ஒரு அமைச்சர் மட்டுமே பதவியில் அமர்த்தப் பட்டு இருக்கிறார். இதே பிஜேபியில் நீண்டகாலமாக குழல் ஊதிக் கொண்டிருந்த முகத்ர் அப்பாஸ் நக்வி, ஷா நாவாஸ் ஹுசேன், அண்மையில் ஆசையுடன் இணைந்த எம் ஜே அக்பர் போன்றவர்கள் நரேந்திர மோடியின் கண்ணுக்கும் கருத்துக்கும் தென்படவில்லை. மேலும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான பிரதிநிதித்துவத்தையும் அமைச்சரவையில் பூதக்கண்ணாடி வைத்துத் தேட வேண்டி இருக்கிறது. காரணம் தலித்துகளும் பழங்குடியினரும் கூட புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்குரிய போதுமான பிரதிநிதித்துவம் தரப்படவில்லை. இந்தப் போக்குகளை அரசின் மீது ஐயம் கொள்ள மட்டுமல்ல அச்சம் கொள்ளவும் வைக்கிறது. “ MINIMUM GOVERNMENT; MAXIMUM GOVERNACE ” குறைந்த எண்ணிக்கையிலான அமைச்சரவை அதிக சாதனைகளை செய்யும் என்பது மேடைப் பேச்சுக்கு அழகாக இருக்கும். நிர்வாகத்துக்கு சரியாக வருமா என்பது போகப் போகத்தான் உரியவர்களால் உணரப்படும். முட்டிக் கொண்டபின் குனிவது அரசியலுக்குப் புதிதல்ல.
அமைச்சரவை பதவி ஏற்ற நாளில் இரண்டு முக்கிய சம்பவங்கள் மக்களின் கவனத்தை கவர்ந்துள்ளன. ஒன்று, இதுவரை இல்லாத முன்மாதிரியாக தெற்காசிய கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் பதவி ஏற்பு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தது . இரண்டு , சுதேசிப் பொருள்கள் – தொழில் முன்னேற்றம் என்றெல்லாம் பேசி ஆட்சிக்கு வந்த கட்சியின் அமைச்சரவை பதவி ஏற்பு விழா அன்று இதுவரை இந்தியாவில் சாலையெங்கும் ஓடிக் கொண்டு இருக்கும் அம்பாசிடர் கார் நிறுவனம் அதன் உற்பத்தியை நிறுத்தி தொழிற்சாலைக்கு மூடுவிழா நடத்தப் போவதான அறிவிப்பு.
தெற்காசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கையை – அதன் அதிபர் ராஜபக்சேயை பதவி ஏற்பு விழாவுக்கு அழைத்தது தேவையற்ற சர்ச்சைகளைக் கிளப்பி , இதன் காரணமாக தமிழ்நாடு உட்பட பல மாநில முதலமைச்சர்களும் பாரதிய ஜனதாவின் கூட்டணிக் கட்சியாகிய மதிமுக வும் பதவி ஏற்பு விழாவைப் புறக்கணிக்க வேண்டிய நிலையை உருவாக்கிவிட்டது. இந்த அரசின் முக்கிய சவால்களின் ஒன்றாக நாம் கருதுவது எல்லை நாடுகளான உறவில் நிச்சயம் பல முன்னேற்றங்களை இந்த அரசு உருவாக்கிக் காட்ட வேண்டுமென்பதும்தான். காரணம் காங்கிரஸ் ஆளும்போது இவற்றில் முன்னேற்றம் இல்லை என்று காங்கிரஸ் ஆட்சியைக் குறை சொன்னார்கள்.
அதே நேரம் எல்லை நாடுகளின் நமது நல்லுறவுக்கு அச்சுறுத்தலாக இருப்பது சீனா போன்ற வளர்ச்சி அடைந்த நாடு, நமது எல்லையில் இருக்கும் நாடுகளின் மீது செலுத்தும் செல்வாக்கு ஆகும். பூடானை மிக சுலபமாக சீனா தனது வலையில் வீழ்த்தும். இந்தியாவால் உருவாக்கப்பட்ட வங்க தேசம் பல பிரச்னைகளில் இந்தியாவின் நிலைப் பாட்டை எதிர்த்து வருகிறது. யார் கை நீட்டினாலும் ஏற்கும் நிலையில்தான் வங்க தேசத்தின் பொருளாதாரம் இருக்கிறது. பாகிஸ்தானுடன் நமது உறவைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஆப்கானிஸ்தானும் நம்மோடு அவ்வளவு திறந்த மனதுடன் இல்லை. இந்த நாடுகளின் உறவில் முன்னேற்றம் காண்பது முக்கியமான சவாலாகும்.
இலங்கையில் தனி ஈழம், இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை பெற்றுத்தருவது, மீனவர் பிரச்னை, போர்க்குற்றவாளியாக சர்வதேச நீதிமன்றத்தில் ராஜபக்சேயை நிறுத்துவது உட்பட பல்வேறு பிரச்னைகளில் இந்தியா தலையிட வேண்டிய உள்நாட்டு அரசியல் நிர்ப்பந்தம் இருக்கிறது. இத்தகைய பிரச்சனைகளில் இதற்கு முன் இருந்த அரசு செயல்படவே இல்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்து நரேந்திர மோடி இப்பொது பொறுப்பேற்று இருக்கிறார். இந்த அரசு, இலங்கைப் பிரச்சனையை எப்படி கையாளப் போகிறது என்று உலகமே ஆவலுடன் எதிர் பார்க்கிறது. இந்தியாவின் தீவிர தலையீடு அதிகரிக்கும்போது , இலங்கையை ஒரு எதிரி நாடாக சீனாவின் ஆதவுடன் கையாளவேண்டிய நிலையும் ஏற்படும். இந்தியாவை இலங்கை எதிர்க்கும் நிலை ஏற்பட்டால் அதற்கு பாகிஸ்தானும் உதவக்கூடும். இதை உத்தேசித்துத்த்தான் காங்கிரஸ் ஆட்சி இலங்கையுடன் ஒரு மென்மையான போக்கைக் கடைப் பிடித்து வந்தது. நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்றால் தமிழக மீனவர் பிரச்சனைகளை ஊதித் தள்ளிவிடுவார் என்றெலாம் மிகப் பெரிய எதிர்பார்ப்பும் இருக்கிறது. இந்த எல்லை நாடுகள் பற்றிய சவாலை மோடி எப்படி கையாளப் போகிறார் எவ்வாறு பிரச்சனைகளைத் தீர்க்கப் போகிறார் என்பது பொறுத்துப் பார்க்க வேண்டிய விஷயமே.
மேலே குறிப்பிட்டுள்ள இரண்டாவது விஷயம் தொழில் வளர்ச்சி. கடந்த பத்தாண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி மேற்கொண்ட உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் ஆகிய கொள்கைகளின் காரணமாக இந்தியா, உலகப் பொருள்களின் சந்தையாகிவிட்டது. இதனால் உள்ளூர்த் தொழில்கள் அழிந்துவிட்டன. அழிந்து வருகின்றன. அதற்கு அழகிய உதாரணம்தான் அம்பாசிடர் கார் தயாரிப்பு நிறுத்தப் பட்டிருக்கும் அறிவிப்பு. இது போல இன்னும் பல அறிவிப்புகள் வரலாம். சாதாரண கோலி சோடாவிலிருந்து அன்னியப் பொருள்களுக்கு அடிமைப்பட இந்திய சமுதாயம் பழக்கப்படுத்தப் பட்டு விட்டது. கலாச்சாரம், பண்பாடு ஆகியவை பற்றி வாய் கிழிய எப்போதும் பேசும் பிஜேபி இந்தக் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் இந்த மண்ணின் பாரம்பரியத் தொழில்களும் கலைகளும் அழியாமல் பார்த்துக் கொள்வதில் தனது கவனத்தை செலுத்த வேண்டும். தற்சார்புக் கொள்கையை கைவிடாமல் இருந்தாலே இறக்குமதி குறையும். உள்நாட்டுத்தொழில்கள் வளரும்.
உதாரணமாக, உலகமெல்லாம் பட்டாசு வெடி போன்றவைகளுக்கு நமது சிவகாசிக்கு ஆர்டர் கொடுத்துக் கொண்டு இருக்கிற நேரத்தில் நமது நாட்டில் இருந்து சீனா சென்று இவற்றை வாங்கி வரும் போக்கு நமது அந்நிய செலாவணியை அழிக்கிறது என்பதை நிச்சயம் இந்த அரசு உணரும் என்று எதிர்பார்க்கலாம். நம்மால் செய்ய முடிந்த தொழில்களை இன்னும் ஊக்கமாக செய்து உற்பத்தியைப் பெருக்குவதற்கு வேண்டிய உதவிகளை செய்தாலே வேலை வாய்ப்புகள் பெருகி தனி நபர் வருமானம் பெருகிட வாய்ப்பு இருக்கிறது.
காங்கிரஸ் ஆட்சியில் விலைவாசிகள் வானுயரத்துக்கு ஏறிவிட்டன என்ற குற்றச்சாட்டு அனைத்துத் தரப்பினராலும் முன்வைக்கப்பட்டது. நரேந்திர மோடி மற்றும் பிஜேபியினர் தங்களின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலும் பாராளுமன்றத்திலும் தொலைக்காட்சி விவாதங்களிலும் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் விலைவாசி குறைக்கப்படுமென்று மக்கள் முன்னால் சத்தியம் செய்யாத குறையாக வாக்குறுதிகளை வழங்கினார்கள். மக்களும் இந்த அளவுக்கு பிஜேபிக்கு வாக்குகளை வாரி வழங்கிட புதிய ஆட்சி வந்தால் விலைவாசி குறையும் என்று முழுக்க முழுக்க நம்பியதும் முக்கியமான காரணம். மக்களின் இந்த நம்பிக்கையை பிஜேபி அரசு ஒரு முக்கிய சவாலாக எடுத்துக் கொண்டு விலைவாசிகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது ஒரு முன்னுரிமை தரப்பட வேண்டிய காரியமாகும்.
கடந்த காலத்தில் விலைவாசி ஒரு நிலைத்த தன்மை இல்லாமல் இருந்ததற்கு முக்கியமான காரணம் எண்ணெய் விலையை எண்ணெய் வணிக நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளும் உரிமை வழங்கப்பட்டதுதான் என்று ஒரு மிகப்பெரும் குற்றச்சாட்டு இருந்தது. இப்போது இந்த உரிமை எண்ணெய் நிறுவனங்கள் இடமிருந்து பறிக்கப்படுமா என்று தெரியவில்லை. இத்தகைய விலை நிர்ணய உரிமையை பிஜேபி விமர்சித்து வந்தது. இப்போது இதற்கான மாற்று ஏற்பாடு என்ன என்பது இந்த புதிய அரசின் முன் உள்ள மிகப் பெரிய சவால்களில் ஒன்றாகும்.
பிஜேபி ஆட்சி அமைக்கிறது என்ற செய்திகள் வந்த உடனேயே பங்கு சந்தைகளில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்பட்டது. இதனால் வர்த்தகங்கள் பெருகப்போகின்றன என்றும் உற்பத்தி பெருகப் போகிறதென்றும் ஊடகங்கள் அந்த பலூனை ஊதிப் பெரிதாக்கின. சாதாரண பொதுமக்கள் இந்த செய்திகளைப் பார்த்து விலைவாசிகள் உடனே குறையப் போகின்றன என்று நம்பத் தொடங்கினார்கள். இப்படி பங்கு சந்தை ஏற்றம் என்பது பொருளாதார மறுமலர்ச்சியின் தொடக்கம் என்று நம்பக் கூடியவர்களுக்குச் சொல்கிறேன். இந்த நாட்டில் பங்கு சந்தை வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மொத்த வணிக சமுதாயத்தில் ஒரே ஒரு சதவீதத்தினர் மட்டுமே.
இரண்டாவதாக பங்கு சந்தை வணிகம் என்பது ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் நடப்பது ஆகும். புதியதாக ஒரு அரசு பெரும்பான்மையுடன் அமைகிறது அதனால் சில குறிப்பிட்ட நிறுவனங்கள் இலாபம் ஈட்டும் என்கிற கண்களைக் கறுப்புத் துணி கொண்டு இறுகக் கட்டிக் கொண்டு காசைப் போடுகிற ஒரு நம்பிக்கையில் அந்தப் பங்குகளை வாங்குவதும் விற்பதுமாகும். இதை சில முகவர்களும் ஊக்குவிக்கிறார்கள். குதிரைகளின் மீது பணம் கட்டுவதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக நான் கருதவில்லை. ஆகவே ஒரு யூக அடிப்படையில் நடைபெறும் சூதாட்டத்தை வைத்து பொருளாதாரம் உயரப் போகிறது என்று எண்ணுவதும் நம்புவதும் எதிர்பார்ப்பதும் தவறான அணுகுமுறை.
உண்மையான பொருளாதார வளர்ச்சி என்பது உற்பத்திப் பெருக்கத்திலும் , நாட்டின் தன்னிறைவு போக எஞ்சியதை ஏற்றுமதி செய்வதிலும்தான் இருக்க முடியும். வெறுமனே பங்குச் சந்தை ஏறிவிட்டது என்று அதை பொருளாதார வளர்ச்சியோடு முடிச்சுப் போடுபவர்கள் பகல் கனவு காணும் பத்தாம்பசலிகளே. ஆகவே புதிய அரசுக்கு இது புரியாத விஷயம் அல்ல. அந்த வகையில் விலைவாசி குறையவும் பொருளாதாரம் உயரவும் உற்பத்திப் பெருக்கத்துக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது இந்த அரசின் முன் இருக்கும் முக்கியமான சவாலாகும்.
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் கறுப்புப் பணத்தை நாட்டுக்குக் கொண்டு வருவது பற்றி பெருமளவில் பாரதீய ஜனதா எதிர்க் கட்சி வரிசையில் இருந்து பேசி இருக்கிறது. இப்போது அதிகாரத்துக்கு வந்திருக்கிற அந்தக் கட்சி இதை எவ்வாறு கொண்டுவரப் போகிறது என்று நாடு எதிர்பார்க்கிறது. இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அமைச்சரவையின் முதல் கூட்டத்திலேயே கறுப்புப் பணத்தை நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து அறிக்கைத் தர ஒரு சிறப்புப் புலனாய்வுக்குழு அமைக்கபட்டிருப்பது நம்பிக்கை தரும் விஷயம் . ஆனாலும் இதன் செயல்பாடுகளை விளைவுகளை வைத்தே கணக்கிட முடியும்.
கடந்த பல ஆண்டுகளாகவே நாட்டின் முதுகெலும்பான விவசாயம் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது. விவசாயத் தொழிலாளர்கள் தங்களின் தொழிலை விட்டுவிட்டு நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டார்கள். விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டுவிட்டன. விவசாயம் என்பது ஒரு இலாபகரமான தொழிலாக இல்லை என்பதை மக்கள் உணர்ந்து அதை புறக்கணித்துவிட்டனர். விவசாயத்தைப் புறக்கணிப்பது இந்தியாவைப் பொறுத்தவரை பொருளாதாரத்துக்கு அதுவும் கிராமப் பொருளாதாரத்துக்கு பெரும் சவாலாக அமையும். இதனால் உற்பத்திக் குறைவு ஏற்பட்டுவிட்டது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நாட்டு மக்களுக்குக்காக தொலைக் காட்சியில் உரையாற்றிய நரேந்திர மோடி நாட்டின் ஒவ்வொரு மூல முடுக்கில் இருக்கும் ஒவ்வொரு விவசாயிக்கும் அவருடைய விவசாயத்தேவைக்குரிய தண்ணீர் வழங்கப்படுமென்று உறுதியளித்தார். இதனால் இந்த அரசு விவசாயத்தில் மறுமலர்ச்சி ஏற்பட நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று நாட்டின் விவசாயிகள் எதிர் பார்க்கிறார்கள். உண்மையில் விவசாயத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்துவதும் இந்த அரசின் முன் உள்ள முக்கிய சவாலே.
விவசாயத்தில் மறுமலர்ச்சி அல்ல ஒரு புரட்சியே ஏற்பட வேண்டுமானால் பல ஆண்டுகளாகவே பாரதீய ஜனதா முன்னிறுத்துகிற நதி நீர் இணைப்புத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். “வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால், மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம் “ என்று பாரதியார் பாடினார். ஒரு புறம் பெருமளவு நீர் வீணாக கடலில் கலக்கிறது; மறுபுறம் நீரின்றி வரட்சியில் பல மாநிலங்களின் நிலங்கள் தங்களின் உயிரைவிட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த அரசு நதி நீர் இணைப்புத்திட்டங்க்களை புரட்சிகரமான முறையில் மேற்கொண்டால் காலம் காலத்துக்கும் நாட்டில் வளமான பொருளாதார மறுமலர்ச்சி ஏற்பட அடிகோலிய பெருமை இந்த அரசுக்கு சேரும். தானே முன்னிறுத்திய இந்த சவாலை இந்த அரசு எப்படி நிர்வாகப் படுத்தப் போகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.
அடுத்து இந்த அரசு எப்படி நடந்து கொள்ளப் போகிறது என்று எதிர்பார்க்க வைக்கும் இன்னொரு உணர்வு பூர்வமான விஷயம், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூகத்தினருக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டுப் பிரச்சனையாகும். மண்டல் கமிசன் அறிக்கை வெளியிடப்பட்டு அதை வி பி சிங் அரசு ஏற்றுக் கொண்டு உத்தரவிட்ட போது அதை எதிர்த்து நாடெங்கும் மாணவர்களைத் தூண்டிவிட்டு கிளர்ச்சி செய்த கட்சி ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஜாதி ரீதியான வர்ணாசிரமக் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சாமியார்களின் முக்கியத்துவம் - இந்த ஆட்சிக்கு முன் வரிசையில் அமர்ந்து ஆசீர்வாதம் வழங்கிக் கொண்டிருக்கும் காட்சிகளை - பதவி ஏற்பு விழாவில் காண முடிந்தது. நாடு இன்றும் இருக்கும் நிலையில் இந்த இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் புதிய அரசு கை வைக்காமல் காப்பாற்றித் தொடர வேண்டுமென்றே அடித்தட்டு மக்கள் ஆசைப்படுகின்றனர். உயர் ஜாதியினரின் கட்சி என்ற முத்திரையை பெற்றுள்ள பிஜேபி ஆட்சி இட ஒதுக்கீடு விஷயத்தில் எவ்வாறு நடந்து கொள்ளப் போகிறது என்பதற்கு விடை சொல்ல காலம் காத்திருக்கிறது.
அதே போல் இந்த அரசு வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்கிற செய்திகள் வெளியான நாட்கள் முதல் சிறுபான்மையினரின் பாதுகாப்பு முதலிய அம்சங்கள் நாடெங்கும் பதட்டத்தையும் பயத்தையும் தோற்றுவித்து இருப்பதை மறுக்க இயலாது. ஒரு வளர்ச்சியை முன்னோக்கியுள்ள நாடு நாட்டின் மண்ணின் மைந்தர்களை பிரித்துப் பார்க்காமல் சமமாக தொடர்ந்து நடத்துவது நாட்டில் அமைதியை நிலை பெறச் செய்யும். அமைதி இழந்த நாடுகளின் பக்கம் வெளிநாட்டின் முதலீடுகளோ உள்நாட்டின் முதலீடுகளோ தொழில் வளர்ச்சியோ ஏற்படாது. ஆகவே மக்களின் ஜாதி இன பேத மோதல்களை உருவாக்காத வகையில் ஆட்சியின் காய்களை நகர்த்திச்செல்வதும் இந்த ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள சவால்தான். இதைபற்றி நமது எந்த விமர்சனத்தையும் இப்போது பதிவு செய்ய விரும்பவில்லை. நன்மைகளே தொடரும் என்ற நம்பிக்கையுடன் புதிய அரசுக்கு வாழ்த்தையும் வரவேற்பையும் சொல்லி
“இந்திய நாடு என்வீடு
இந்தியன் என்பது என் பேரு
எல்லா மக்களும் என் உறவு
எல்லோர் மொழியும் என் பேச்சு”
என்கிற உணர்வும் உத்வேகமும் நாட்டின் எல்லா மக்களிடமும் வளர்ந்தோங்கவும் கடந்தகால கருப்பு வரலாறுகளை இந்த நாடு மறந்துவிட்டு அனைவரும் அவரவருக்கு அரசியல் சட்டத்தில் வழங்கப் பட்ட உரிமைகளை நிலைநாட்டவும் ஒன்றுபட்டுப் பாடுபட்டு நாட்டை உயர்த்தவும் உறுதி எடுத்துக் கொண்டு உழைக்கும் விதத்தில் எதிர்கால ஆட்சி அமைய வேண்டுமென்ற நல்ல எண்ணத்துடன் அனைவரும் கரம் கோர்ப்போமாக!
இபுராஹீம் அன்சாரி
11 Responses So Far:
//வெறுமனே பங்குச் சந்தை ஏறிவிட்டது என்று அதை பொருளாதார வளர்ச்சியோடு முடிச்சுப் போடுபவர்கள் பகல் கனவு காணும் பத்தாம்பசலிகளே//
சரியான செய்தி
அஸ்ஸலாமுஅலைக்கும். முகப்புத்தகத்தில் ஹாஜா கனியின் பக்கதில் பி.ஜே.பி பற்றி நான் போட்ட கமெண்ட் இந்த கவர்மென்டுக்குப்பொருந்தும்.
-----------------------------------------------------------------------------------------------------
தாமரை கொடியில் பூக்கும்,இவர்கள் தாமரை கொடிய பூ! நீரில் பூக்கும் நெருப்பு(பூ) சுற்றி குளத்தில் பூத்தாலும் நம் குலத்தை அழிக்க வந்த நெருப்பு(பூ)!
///ஒரு நம்பிக்கையில் அந்தப் பங்குகளை வாங்குவதும் விற்பதுமாகும். இதை சில முகவர்களும் ஊக்குவிக்கிறார்கள். குதிரைகளின் மீது பணம் கட்டுவதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக நான் கருதவில்லை. ஆகவே ஒரு யூக அடிப்படையில் நடைபெறும் சூதாட்டத்தை வைத்து பொருளாதாரம் உயரப் போகிறது என்று எண்ணுவதும் நம்புவதும் எதிர்பார்ப்பதும் தவறான அணுகுமுறை. ///
சூதாட்டத்தின் மறு பெயர்தான் பங்கு சந்தை என்று தெளிவர விளக்கி இருப்பது மிக அருமை காக்கா
///தாமரை கொடியில் பூக்கும்,இவர்கள் தாமரை கொடிய பூ! நீரில் பூக்கும் நெருப்பு(பூ) சுற்றி குளத்தில் பூத்தாலும் நம் குலத்தை அழிக்க வந்த நெருப்பு(பூ)!///
நம் சமுதாயம் ஒன்றிணைந்தால் கொடிய பூ பூக்கும் குளத்தை தூர்வவாரிவிடலாம்.
அந்த நெருப்(பூ)வில் அவர்கள் பருப்பு ஒன்னும் வேகாது
நேர்மையான எதிர்பார்ப்புகளை உள்ளடக்கிய நிறைவான கட்டுரை.
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா!
காக்கா,
இனி மின்வெட்டே கிடையாது என்னும் நிலை சட்டென எப்படி ஏற்படுகிறது?
ஆயிரத்தெட்டு காரணங்கள் சொல்லி மின் வெட்டை ஞாயப்படுத்தியவர்களுக்கு ஆட்சிமாற்றம் மூலம் வாய்த்தது மந்திரக் கோலா அலாவுதீன் பூதமா?
மன்னிக்கவும்,
பதிவுக்குத் தொடர்பில்லை என்றாலும் யாருக்கு வெவரம் தெரியும் என்று நாம் நினைக்கிறோமோ அவர்களிடம்தானே கேட்க முடியும்!
அதனால்தான் மேற்கண்ட கேள்வியைத் தங்களிடம் கேட்டுள்ளேன்.
நேர்மையான எதிர்பார்ப்புகளை உள்ளடக்கிய நிறைவான கட்டுரை.
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா!
adiraimansoor சொன்னது…
///தாமரை கொடியில் பூக்கும்,இவர்கள் தாமரை கொடிய பூ! நீரில் பூக்கும் நெருப்பு(பூ) சுற்றி குளத்தில் பூத்தாலும் நம் குலத்தை அழிக்க வந்த நெருப்பு(பூ)!///
நம் சமுதாயம் ஒன்றிணைந்தால் கொடிய பூ பூக்கும் குளத்தை தூர்வவாரிவிடலாம்.
அந்த நெருப்(பூ)வில் அவர்கள் பருப்பு ஒன்னும் வேகாது
-----------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.அருமையான சிந்தனை மச்சான்!
Assalamu alaikkum.
Jasak Allah hairan to all.
Thambi Sabeer,
you gave me the subject for the next article. Insha Allah.
I have lost my internet connection. using my friend's res.
Pls bear wit me . I come back insha Allah tomorrow on restoration of my internet connection.
Post a Comment