Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மண்டியிட மறுத்த மருதநாயகம் 19

அதிரைநிருபர் பதிப்பகம் | May 24, 2014 | , ,

தொடர் - 25

அன்பானவர்களே! துரதிஷ்டவசமாக இந்தத்தொடரில் ஒரு திரைப்படத்தைப் பற்றி பேசவேண்டிய நிலைக்கு ஆளாகி இருக்கிறோம். அதற்கும் காரணம் இருக்கிறது. ஒரு சிறு குறிப்பைத் தரவே இது பற்றிக் குறிப்பிட வேண்டியதாக இருக்கிறது. 

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பலரின் வாழ்க்கை வரலாறுகள் திரைப்படமாக உருவாக்கப்பட்டு ஆவணப் படுத்தப் பட்டிருக்கின்றன. சிலருடைய வரலாறுகள் தொலைக் காட்சிகளில் தொடராக வெளிவந்து இருக்கின்றன. அந்த வரிசையில் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் என்றெல்லாம் வரலாற்றுத் திரைப் படங்கள் வந்திருக்கின்றன. அதே போல,  நடிகர் கமல்ஹாசனால் தயாரிக்கத் தொடங்கப்பட்டு ஆரம்ப ஏற்பாடுகளும் செய்யப்பட்டு படப்பிடிப்பின் தொடக்க விழாவும் பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் அவர்கள் முன்னிலையில்  வரலாறு காணாத வகையில் நடத்தப்பட்டு சில காட்சிகளும் படமாக்கப்பட்டன. ஏன் திரைப்படத்தின் டிரியிளர் கூட வெளியிடப்பட்டது. ஆனால் இந்த வரலாற்றுப் படம் நிறைவு பெற்று வெளியாகி ஆவணப்படுத்தப்படவில்லை. இதற்கு அநேக காரணங்கள் சொல்லப்பட்டாலும்  நாம் காரணமாகக் காண்பது இந்த வரலாற்றின் நாயகன் கான் சாகிப் என்று அழைக்கப்பட்ட   18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முகமது யூசுப் கான் என்ற முஸ்லிம் வீரரைப் பற்றிய கதை இதுவாகும்என்பதுதான். இந்தத்தொடரின் நிறைவாக இந்த வீரத்திருமகனின் வெளிவராத பல தகவல்களுடன் கூடிய அவரது வரலாற்றைப் இரண்டு அத்தியாயங்களாகப் பகிர்வதில் மகிழ்கிறேன். 

மருதநாயகம் என்றழைக்கப்பட்ட கான் சாகிப் அவர்களின் வீர வரலாற்றைப் பட்டியலிடும் முன் அவரது சொந்த வாழ்வை சற்று சுருக்கமாகச் சொல்லலாம். கான் சாகிப் மருத நாயகம் அவர்களின் வரலாறு பல வரலாற்றாசிரியர்களால் தனி நூலாகவே வெளியிடப்பட்டு இருக்கின்றன. அவ்வளவு பெருமை வாய்ந்த நிறைய சம்பவங்களை உள்ளடக்கிய வரலாறு அவருடையதாகும். அவற்றை இயன்ற வரை சுருக்கித் தந்து இருக்கிறேன். 

பண்டைய இராமநாதபுரம் மாவட்டத்தையும் இன்றைய சிவகங்கை அருகில் உள்ள  பனையூர் என்கிற கிராமத்தில் பிள்ளைமார்கள் இனத்தில் 1725 ஆம் ஆண்டு பிறந்தவர்தான் மருத நாயகம்.  அந்நாளில் பனையூர் கிராமத்தில் பல குடும்பங்கள் இஸ்லாத்தைத் தழுவின. மருத நாயகத்தின் குடும்பமும் அவற்றில் ஒன்று. இஸ்லாத்தைத் தழுவிய பின் மருத நாயகம், இஸ்லாமிய முறையில்  யூசுப்கான் என்று பெயர் சூட்ட்டபட்டார். இளமையில் கல்வியில் நாட்டமில்லாமல் பெற்றோரின் பேச்சுக்கும் அடங்காமல் திரிந்த யூசுப் கான் அங்கு சுற்றி இங்கு சுற்றி பாண்டிச்சேரிக்கு  சென்றார். அவர் பாண்டிச்சேரி சென்ற காலம் பாண்டிச்சேரி பிரெஞ்சு அரசின் ஆதிக்கத்தில் இருந்தது. அன்றைய பாண்டிச்சேரியின் கவர்னர் மான்சர் காக்ளா என்பவர்  வீட்டில் எடுபிடி வேலைக்காரர்களில் ஒருவராக தன்னை இணைத்துக் கொண்டார்.  பிரெஞ்சுக்காரரின் வீட்டில் வேலை பார்த்த காரணத்தால் பிரெஞ்சுக்காரர்களின் அனைத்துப் பழக்கங்களும் யூசுப்கானுக்கு அத்துப் படியானது. அங்கேயே  வளர்ந்து பிரான்சு நாட்டைச் சேர்ந்த மாஸா என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டதுடன் வாழ்வின் அடுத்த படிக்கட்டில் ஏறி , பிரான்சு நாட்டின் போர்ப் படையிலும் ஒரு வீரராகச் சேர்ந்தார். 

ஓடுகிற சிலரது கால்கள் ஒரு இடத்தில் நிற்காது. பாண்டிச்சேரியிலிருந்து ஏதோ காரணத்தால் வேலையைவிட்டு நீக்கப்பட்ட யூசுப்கான் அங்கிருந்து தஞ்சாவூர் சென்றார். பிரான்சின் போர்ப்படையில் தான் வேலை பார்த்த அனுபவத்தை வைத்து கிழக்கிந்தியக் கம்பெனியின்  பிரிட்டிஷ் படையில் தன்னை சேர்த்துக் கொண்டார்.  இதற்காக இவருக்கு உதவியவர் பர்டன் எனும் ஆங்கிலேயர். கிழக்கிந்தியக் கம்பெனியின் பிரிட்டிஷ் படையில் வேலைக்குச் சேர்ந்த யூசுப்கானுக்கு ராபர்ட் கிளைவின் கீழ் பணியாற்றும்  சந்தர்ப்பம் கிடைத்தது. அத்துடன் பிரெஞ்ச், ஆங்கிலம், உருது ,  போர்ச்சுகீஸ் ஆகிய மொழிகளையும் சரளமாக பேசக் கற்றுக் கொண்டார்.  இதனால் இவரது திறமைகள் கண்டறியப்பட்டு நெல்லூருக்கு பதவி உயர்வு பெற்று மாற்றப்பட்டார். ஹவில்தாராகவும் சுபேதார் ஆகவும் பதவிகள் இவரைத் தேடி வந்தன. 

அந்த நேரம் ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக் காரர்களும் இந்தியாவில் , ஏதோ அவர்கள் அப்பன் வீட்டு சொத்துக்கு அடித்துக் கொள்வது போல் 1750 ஆம்  ஆண்டுகளில்  அடித்துக் கொள்ள ஆரம்பித்தனர்.  இப்போர்களில் யூசுப்கான் ஆங்கிலேயர் பக்கம் நின்று அவர்களுக்கு வெற்றி பெற்றுக் கொடுக்க பேருதவியாக இருந்தார். இதில் முதல்  போர் ஆற்காட்டின் நவாப் பதவிக்காக நடந்த போராகும்.  இந்தப் போரில் பெற்ற வெற்றிக்குக் கைமாறாக மதுரை மற்றும் திருநெல்வேலியில் வரிவசூலிக்கும் உரிமையை  ஆங்கிலேயருக்கு அளித்தார் ஆற்காட்டு நவாப். அத்துடன் போர் நடைபெற்றபோது யூசுப்கானின் தீரத்தைக் கண்ட  நவாப்  யூசுப்கானைப் பற்றி நல்லதாக நாலு வார்த்தை ராபர்ட் கிளைவிடம் கூறினார்.  இதனை முன்னிட்டு யூசுப்கானுக்கு இன்னும் பல பயிற்சிகளைக் கொடுத்து தங்களுடன் இருத்திக் கொள்ள அவருக்கு  ஐரோப்பிய இராணுவ முறைகள் கற்றுக் கொடுக்கப்பட்டன. 

இதனை அடுத்து ,  சென்னையை முற்றுகையிட்டுக் கைப்பற்ற வந்த பிரெஞ்சுப் படையை கொரில்லாத் தாக்குதல் நடத்தி பிரெஞ்சு தளபதி தாமஸ் ஆதர்லி என்பவனை துண்டை காணோம் துணியக் காணோம் என்று ஓட வைத்தார் யூசுப் கான்.  இந்த வெற்றி யூசுப்கானின் வாழ்வில் முக்கிய மைல் கல்லாக அமைந்தது. இவ்விதம் பிரெஞ்சுக் காரர்களோடு ஆங்கிலேயர் நடத்திய அனைத்துப் போர்களிலும் ஆங்கிலேயரின் வெற்றிக்கு யூசுப்கான் அடித்தளமாக இருந்தார். இதனால் ஆங்கிலேயரால் யூசுப் கானுக்குத் தங்கப் பதக்கம் வழங்கப் பட்டது. அது முதல் யூசுப் கான் “கமாண்டோ கான் சாஹிப்”  என்று அன்புடன்  அழைக்கப்பட்டார். 

இதற்குப் பின் கான் சாகிப் விஸ்வரூபம் எடுத்தார். ஆங்கிலேயருக்கு எங்கே எந்தப் பிரச்னை என்றாலும் கூப்பிடு கான் சாகிபை என்கிற நிலை ஏற்பட்டது. ஆங்கிலேயருக்கு அடங்க மறுத்த பாளையக்காரர்களை அடக்கச் சென்ற கான் சாகிப் பாஞ்சாலங்குறிச்சியின் படைத்தளபதியாக இருந்த வீரன் அழகு முத்துக் கோனைக் கொன்றார். ஆங்கிலேயரின் கட்டளைப் படி மறவர்களுடைய பாளையங்களைத் தாக்கி வெற்றி கொண்டார். பூலித்தேவனை தோற்கடித்தார். மதுரையில் குழப்பம் ஏற்பட்டபோது அங்கும் சென்று அமைதியை நிலைநாட்டினார். கப்பம் கட்ட மறுத்த  பாளையக்காரர்களையும் அடக்கி ஆங்கிலேயருக்கும் ஆற்காட்டு நவாபுக்கும் கப்பம் மூலம் வரும் வருமானம் நின்று  போய்விடாமலிருக்க வழிவகை செய்தார்.      இவ்வாறெல்லாம் ஆங்கிலேயர்கள் இட்ட கட்டளைகளை சிரமேற்கொண்டு சிறப்பாக பணியாற்றிய கான் சாகிபுக்கு கிழக்கிந்தியக் கம்பெனி,  யாரும்  நினத்துப் பார்க்க முடியாத பரிசை பதவி உயர்வாக   வழங்கியது. 

பாண்டிச்சேரியில் ஒரு பிரெஞ்சு கவர்னர் வீட்டில் எடுபிடி வேலையாளாக தனது வாழ்வைத்தொடங்கிய யூசுப் கான்  என்கிற கான் சாகிப்  1757 –ல்  மதுரைக்கு கவர்னராக்கப்பட்டார். சாயாக் கடையில் வாழ்வைத்தொடங்கி நாட்டின் பிரதமராக ஒருவர் உயர முடிந்த வரலாறு இன்று படைக்கப்பட்ட வரலாறு. இன்றைய வரலாற்றுக்குப் பின் பல காரணிகள் இருக்கின்றன. ஆனால் எடுபிடி வேலைக்காரரான யூசுப்கான் ,   கவர்னராக உருவெடுத்ததன் பின்னணியில் யூசுப் கானின்  உழைப்பு மட்டுமே காரணியாக இருந்தது.

மதுரை கவர்னராக நியமிக்கப்பட்ட கான் சாகிப் வரிவசூலை பாக்கி இல்லாமல் செய்ததால் தென்மாவட்டத்தின் கவர்னராக திருநெல்வேலிக்கும் சேர்த்து நியமிக்கப்பட்டு இன்னொரு பதவி உயர்வும்  பெற்றார்.  இவ்வாறு தென்னாட்டில் ஆங்கிலேயரின் பிரதிநிதியாக அசைக்க முடியாத ஆட்சியாளராக மாறினார் கான் சாகிப். இந்தப்பதவியை ஒரு ஆட்சியாளரின் அளப்பரிய சாதனைகளின் காலமாக மாற்றினார் கான் சாகிப்.  தென் மாவட்டத்துக்கான கவர்னராகக் நியமிக்கபப்ட்ட கான் சாகிப் உண்மையிலேயே ஒரு அஞ்சா நெஞ்சன் ; (பெயரளவு அஞ்சா நெஞ்சர்கள் பின்னர் மதுரையில் தென்மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப் பட்டது அண்மைக்கால அரசியல் கதை.) 

அந்த நேரம் கான் சாகிப் செய்த ஒரு சாதனை இன்று முஸ்லிம்களின் மீது குற்றம் சாட்டுவோர் கவனித்து தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டிய சாதனையாகும்.  இந்த சாதனைகளை வரலாறுகள் மறைத்து வருகின்றன. 

மதுரையின் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்னையில்   சில சொத்துக்கள் இருந்தன. அந்த சொத்துக்கள் யாவும் பல மலை முழுங்கி மகாதேவன்களால் சூறையாடப்பட்டன.  கவர்னர் கான் சாகிப் களவாணிகள் சூறையாடிய மீனாட்சி அம்மன் கோயிலின் சொத்துக்களை சுரண்டிய கும்பல்களுடன் மோதி, அந்த சொத்துக்களை மீட்டு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். இன்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சொத்துக்கள் பல,  கான் சாகிபால் மீட்கப்பட்டவையே. 

மதுரையைச் சுற்றிய  பகுதிகளில் திருடர்களும், வழிப்பறிக் கொள்ளைக்காரர்களும்   தாங்க முடியாத அளவுக்கு மக்களுக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தனர். மக்களுக்கு மத்தியில் அமைதியற்ற சூழ்நிலை நிலவி வந்தது. கவர்னர் கான் சாகிப் களத்தில் இறங்கினார். கள்ளர்கள் ஒழிக்கப்பட்டனர். நத்தம் என்கிற பகுதியில் மட்டும் 2000க்கும் மேற்பட்ட திருடர்கள் கொல்லப்பட்டதாக ஒரு குறிப்புக் கூறுகிறது. 

மதுரையைச் சுற்றி  இருந்த நீர் நிலைகளை செப்பனிட்டு சீர்படுத்தி பாசன வசதிகளை மேம்பாடு அடையச் செய்தார். இடிந்து கிடந்த பல அரசின் கட்டிடங்களைப் பழுது பார்க்கச் செய்து மக்களின் பயனுக்கு கொண்டுவந்தார். வணிகர்கள் முதல் அனைவரும் கான் சாகிப் கவர்னராக இருந்த போது  பாதுகாப்பாக இருந்ததாக உணர்ந்தனர். நிர்வாகம் மேம்பட்டது. மக்கள் மகிழ்வுடன் வாழ்ந்தனர். 

பிரான்சு நாட்டின் வீரர்கள் பொறாமையால் காவிரியில் கரிகால சோழனால் கட்டப்பட்டிருந்த கல்லணையை தகர்த்து தமிழக விவசாயிகளின் நலனை சீரழிக்கத் துணிந்தபோது அந்த முயற்சியை முறியடித்து கல்லணையைக் காப்பாற்றினார். இதனால் தஞ்சை விவசாயிகளின் வாழ்வுமட்டுமல்ல -  ஆங்கிலேயர் மற்றும் மராட்டிய மன்னர்களின் உறவும் பகைமை மறைந்து நல் உறவானது கான் சாகிபின் முயற்சியால்தான். இன்றளவும் கர்நாடகத்தில் இருந்து வரும் காவிரி நீர் கான் சாகிப் பெயரை நன்றியுடன்  சொல்லிக் கொண்டுதான் ஓடும். இதனை துர்க்காதாஸ் எஸ் கே சுவாமி என்கிற வரலாற்றாசியர் “காவிரியைக் காத்த கான் சாகிபு”  என்று குறிப்பிடுகிறார். 

கான் சாகிபுக்கு முன்பு,  மதுரைச் சீமையை ஆண்ட பரக்கத்துல்லா என்பவரின் நிர்வாகத்தில் இருந்த போது மதுரைக் கோயில் ஒன்றின் முன்பாக அந்தக் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ஒரு முஸ்லிம் துறவிக்காக தர்கா போன்ற  ஒரு பள்ளியைக் கட்ட  அனுமதி அளித்து இருந்தார். இதற்கு அந்தப் பகுதியில் வாழ்ந்த இந்து சகோதரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கான் சாகிப் பதவிக்கு வந்ததும் இந்த முறையீட்டில் நியாயம் இருப்பதை உணர்ந்து அந்த முஸ்லிம் துறவியை அந்த இடத்திலிருந்து அப்புறப் படுத்தி, இடத்தைக் கைப்பற்றி  கோயில் நிர்வாகத்திடம் திரும்ப  ஒப்படைத்தார். 

அதே போல் கான் சாகிப் கவர்னராக வருவதற்கு முன் அபகரிக்கப்பட்ட மதுரை அழகர் கோயிலைக் கைப்பற்றி மீண்டும் அதே கோயில் நிர்வாகத்திடமே ஒப்படைத்தார் என்று கே. என் . இராதா கிருஷ்ணன் என்பவர் குறிப்பிடுகிறார்.  

மதுரை மற்றும் திருநெல்வேலியில் விவசாயிகள் மற்றும் நெசவுத்தொழிலாளர்களுக்கு தொழில் வளர்ச்சிக்காக முன் பணம் கொடுத்து அவர்களது உற்பத்தியை பெருக்கச் செய்து நெசவுத்துணிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யுமளவுக்கு வழி செய்து அவர்களது வாழ்வை வளமாக்கினார்.  

பாண்டிய மன்னர்கள் காலத்தில் அம்பா சமுத்திரம் அருகே உள்ள நதியுண்ணி என்கிற அணை பழுதாகிக் கிடந்ததை அறிந்த கான் சாகிப் அதனைப் புதுப்பித்துக் கொடுத்து தாமிரபரணி பாயும் பகுதிகளின் விவசாயிகளின் நன் மதிப்பைப் பெற்றார்.  

இவ்வளவு நன்மைகள் செய்துவந்த கான் சாகிப் மருத நாயகம் அவர்களின் புகழ் பட்டி தொட்டி எங்கும் பரவியது. 

திருவில்லிபுத்தூர் அருகே முகமது கான் சாகிப் புரம் என்று ஒரு ஊரே மக்களால் பெயர் சூட்டப்பட்டு உருவானது. அந்த ஊரே இன்று மம்சாபுரம் என்று  அழைக்கப்படுகிறது.  தெற்கட்டான்  செவ்வலுக்கு தென்புறம் ஒரு பெரிய மேடு இருக்கிறது. இப்போது அந்த இடம் கான்சாமேடு என்று அழைக்கப்படுகிறது. மதுரை மற்றும் அதனை சுற்றிய பகுதிகள் பலவற்றிலும் கான்சாகிப் பெயரில் தெருக்கள் பெயர் சூட்டபப்ட்டன. அவை இன்றும் இருக்கின்றன. மதுரை தெற்கு மாசி வீதிக்கும் தெற்கு வெளி வீதிக்கும் இடையில் உள்ள கான்சா மேட்டுத்தெரு இன்றும் இவர் பெயரை சொல்லிக் கொண்டு இருக்கிறது. மதுரை கீழ வெளி வீதிக்கும் இராமநாதபுரம் சாலைக்கும் மூன்று சாலைக்கும் இடையில்  உள்ள இடம் இவர் பெயரால் கான் பாளையம் என்று இன்றும் அழைக்கபடுகிறது.  வீராணம் ஏரியிலிருந்து பாசனத்துக்காக வெட்டப்பட்ட இடம் இவர் பெயரால் கான் சா வாய்க்கால் என்று அழைக்கப்படுகிறது. 

ஆற்காட்டு நவாபுக்கும் அவர் மூலம் ஆங்கிலேயருக்கும் இப்படி கான் சாகிப் புகழ் பெறுவதைப் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. அதனால் ஆரம்பித்தது பிரச்னை. பொறாமை கொண்ட ஆற்காடு நவாப் முகமது அலி யூசுப் கானின் செல்வாக்கைக் குறைக்க திட்டமிட்டான். அதனால் நண்டு வேலையை ஆரம்பித்தான்.  கான் சாகிப் ஒரு மக்கள் செல்வாக்குப் பெற்ற தலைவனாக உருவாவதை ஆற்காட்டு நவாப்பும் ஆங்கில ஆட்சியையும் விரும்பவில்லை. 

இதனால் வந்தது மதுரைக்கு சோதனை. இந்த சோதனை கான் சாகிபின் உடலைக் கண்டந்துண்டமாக வெட்டும் வரை ஓயவில்லை. 

காணலாம். அடுத்த வாரம் இன்ஷா அல்லாஹ். மாவீரன் கான்சாகிபின் தியாக வரலாற்றோடு   இந்த வரலாற்றுத் தொடரும் நிறைவுறும். 

இபுராஹீம் அன்சாரி

19 Responses So Far:

இப்னு அப்துல் ரஜாக் said...

அருமையான தொடர்.காக்கா இத் தொடரை நிறுத்தி விடாதீர்கள்.உங்கள் மூலம் உண்மை வரலாறுகள் இன்னும் வெளிவரட்டும்.மருத நாயகத்தை கமல் வெளியிட வேண்டும் என அதிரை நிருபர் ரசிகர் மன்றம் சார்பாக வேண்டுகோள் விடுகிறேன்.

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி இப்னு அப்துல் ரஜாக் அவர்களுக்கு,

தங்களின் அன்புக் கட்டளைக்கு மிக்க நன்றி.

இறைவன் உதவியால் இந்தத் தொடரில் அவரங்க சீப் , கஜினி முகமது, மன்னர் பகதூர் ஷா , பேகம் ஹஜரத் மகல் , மூன்று குஞ்சாலி மரைக்காயர்கள் , சிராஜ் உத் தொளா , திப்பு சுல்தான், அவிழ்த்தார் ஷேக் உசேன், ஹாஜி ஷரியத்துல்லாஹ், மவுலானா அஹமதுல்லாஹ் ஷா, மவுலானா தனசரீ, ஹஜரத் மொஹானி, மவுலானா முகமதலி சவுகத் அலி, பீர் அலி, கைர் முகமது , வைக்கம் அப்துல் காதர் , ஹாஜி கருத்த ராவுத்தர், பக்கீர் முகமது, சதாவதானி செய்குத் தம்பி பாவலர் , மணிமொழி மவுலானா முதலிய பலரின் வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்களை தங்கள் அனைவர் முன்னும் பகிரும் வாய்ப்பை அல்லாஹ் தந்தான். அதற்காக அந்த இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.

கூடியவரையில் இந்தத்தலைப்பில் வெளிக் கொண்டுவர வேண்டிய செய்திகளைக் கொண்டு வந்து விட்டோம் என்றே கருதுகிறேன். தங்களின் மனதில் யாரும் விடுபட்டு இருந்ததாக கருதினால் அன்புடன் தெரிவிக்க வேண்டுகிறேன்.

இன்ஷா அல்லாஹ் து ஆச் செய்யுங்கள் விரைவில் இந்தத் தொடரை நூல் வடிவில் தருவதற்கான ஆயத்தப் பணிகளில் இருக்கிறோம். அதிரை நிருபர் ரசிகர் மன்றம் ( ஹஹஹாஹ்) ஆதரவு தரும் என்று நம்புகிறோம்.

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

அழகான அத்தியாயம்; வெற்றிப்படிகளின்மீதான மாவீரரின் ஏற்றம் மெய்சிலிர்க்க வைக்கிறது.

இங்கேயும் கான் சாஹெப் என்னும் பெயரில் நிருவனங்கள், வனிக வளாகங்கள் பல இருக்கின்றன. அவை நம் நாயகனின் பெயரில் இருப்பதின் அர்த்தம் இந்த அத்தியாயத்தை வாசித்து உணர்ந்து கொண்டேன்.

எத்தனையோ கான்கள் கலைத்துறையில் வடக்கே கொடிகட்டிப் பறந்தாலும் இந்த அற்புத வரலாற்றைப் படமாக்க தெம்பில்லையே!!!

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா!

Anonymous said...

Glad to have found your site. Keep up the good work! DB Product Review

sheikdawoodmohamedfarook said...

நாட்டுக்கு தொண்டு செய்வோரை துண்டுதுண்டாக வெட்டிஎறியும் குணமும்'' நாட்டுக்கு நாட்டுக்கு'' 'என்றுகூறி தன் வீட்டுக்கே தேடிக்கொள்வோருக்கு தோளில் துண்டு போட்டு பாராட்டு விழா நடத்துவதும் இந்த நாட்டின் ரத்தநாளங்களில் ஓடும் பித்தம்'பித்தம் தெளிய மருந்தொன்று இருக்குது'' என்று ஒருவர் பாடினார்.அந்தமருந்தின் பாச்சா எல்லாம் இங்கே செல்லுபடிஆகாதுங்கோ!

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். இதைபாருங்கள்!
http://www.dinamalar.com/news_detail.asp?id=982476

sheikdawoodmohamedfarook said...

இந்த வரலாறு நூல்வடிவு பெறவேண்டும் என்பதே என் அவா! நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும்.

Ebrahim Ansari said...

தம்பி சபீர்!

வ அலைக்குமுஸ் சலாம்.

துபாயில் நிறைந்து காணப்படும் கான் சாஹிப் நிறுவனங்கள் அடிப்படையில் பாகிஸ்தான் நாட்டு முதலாளிகளுடையது என்று கருதுகிறேன்.

sabeer.abushahruk said...

புரிகிறது காக்கா,

இருப்பினும் சுதந்திர இந்தியாவுக்கு முன்னால் ஒன்றாயிருந்த பாகிஸ்தானியர் நம்ம ஹீரோவின் விரத்திருப்பெயரில் லயித்து தம் சந்ததியனருக்கு அவ்வாறே பெயரிட்டு வம்சாவழியாகத் தொடர்ந்து வந்திருக்கலாம் என்பதே என் துணிபு.

Ebrahim Ansari said...

அன்பின் தம்பி சபீர்!

தங்களின் கருத்து பலவகையிலும் ஏற்கப்படத் தக்கது.

He was born a Hindu, acquired knowledge from a Christian and died as a Muslim . History has many stories about this remarkable man, popularly known as Khansa, an abbreviation of Khan Sahib. As it is said and believed that the fall of a great man is always great and tragic, so it was with this soldier-cum-warrior and a ruler who was hanged as a rebel.

எனக்கு என்னவோ கமலஹாசன் தனது கரங்களில் வந்த ஒரு நல்ல வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டார் என்றே தோன்றுகிறது.

adiraimansoor said...

//துரதிஷ்டவசமாக இந்தத்தொடரில் ஒரு திரைப்படத்தைப் பற்றி பேசவேண்டிய நிலைக்கு ஆளாகி இருக்கிறோம்.///

காக்கா சில உண்மை வரலாறுகளை எடுத்து சொல்வதற்கும் அதில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்து சொல்வதற்கும் திரைப்படத்தை உதாரணமாக காட்டுவது தப்பில்லை என நினைக்கின்றேன்
படம் என்பது மக்களிடையே கருத்துக்களை மிக இலகுவாக கொண்டு செல்லும் ஒரு மீடியாவே
டிஸ்கவரி சேனலில் டாக்குமென்டரி படம் மூலம் நாம் எத்தனையோ அற்புதமான காட்சிகளையும் அல்லாஹ்வின் படிப்புகளையும் கான்கின்றோம் மீடியாகளை இப்படி பட்ட விஷயங்களுக்கு உபயோகிப்பதை யாரும் விரும்பாமல் இருக்க மாட்டார்கள்
அப்படி கடந்தகால வரலாறுகளை எடுத்துசொல்லும் இப்படிப்பட்ட படங்களையும் இந்த இனத்தில் நாம் சேர்க்கலாம்
மருது நாயகம் படத்தை வளரவிடாமல் தடுத்து

உண்மைக்கு புரம்பான கட்டுக்கதைகளை படமாக எடுக்காமல் இப்படிபட்ட வீரர்களின் வரலாற்றை
எடுக்க கமலாஹாசன் விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடங்கி முஸ்லீம்களின் வீர வரலாற்றை மக்களுக்கு எடுத்துக்காட்டி முஸ்லீம்களின் மீது உள்ள காழ்புனர்வுகள் தீர்வதற்கு வழி செய்ய வேண்டும்
மருது நாயகம் படத்தை வளரவிடாமல்
முட்டுக்கட்டைகள் போட்டது காவி சாயம் பூசப்பட்டவர்களின் கைங்கரியமாகத்தான் இருக்கும் அவர்கள் யார் என்பதும் இதுவரை தெரியாமல் இருக்காது

இப்னு அப்துல் ரஜாக் said...

//கூடியவரையில் இந்தத்தலைப்பில் வெளிக் கொண்டுவர வேண்டிய செய்திகளைக் கொண்டு வந்து விட்டோம் என்றே கருதுகிறேன். தங்களின் மனதில் யாரும் விடுபட்டு இருந்ததாக கருதினால் அன்புடன் தெரிவிக்க வேண்டுகிறேன். //
இவ்விஷயங்களில் எங்களை விட மாஷா அல்லாஹ் நீங்களே நன்கு அறிந்தவர்கள்.
"தெரியாததை தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்"என்ற குரான் வசனத்துக்கு ஒப்ப,இந்த விஷயத்தை உங்களிடம் ஒப்படைக்கிறோம்.காக்கா நீங்கள் தேடிப் பிடித்து,தந்து நாங்களும் கற்று - நம் சமுதாயமும் உணர வேண்டும் நம் முன்னோர்கள் எவ்வளவு பெரிய தியாகம் செய்துள்ளார்கள் இந்த இந்திய நாட்டுக்கு என்று.
பிளீஸ் காக்கா

இப்னு அப்துல் ரஜாக் said...

//இன்ஷா அல்லாஹ் து ஆச் செய்யுங்கள் விரைவில் இந்தத் தொடரை நூல் வடிவில் தருவதற்கான ஆயத்தப் பணிகளில் இருக்கிறோம். அதிரை நிருபர் ரசிகர் மன்றம் ( ஹஹஹாஹ்) ஆதரவு தரும் என்று நம்புகிறோம்.//

இன்ஷா அல்லாஹ்,விரைவில் இது புத்தகமாக ரிலீஸ் ஆக வாழ்த்துக்கள்,அல்லாஹ் அருள் புரியட்டும்.அதிரை நிருபர் ரசிகர் மன்றம் (ஹாஹா)இன்ஷா அல்லாஹ் கை தட்டாது,விசில் அடிக்காது,ஆனால் இறைவனிடம் கை ஏந்தும்.
நெறியாளர் அவர்களே,ரசிகர் மன்றம் ஓகே வா?

Ebrahim Ansari said...

//அதிரை நிருபர் ரசிகர் மன்றம் (ஹாஹா)இன்ஷா அல்லாஹ் கை தட்டாது,விசில் அடிக்காது,ஆனால் இறைவனிடம் கை ஏந்தும்.//

தம்பி இப்னு அப்துல் ரஜாக் அவர்களை ரசிகர் மன்றத் தலைவராக ஆககிவிடலாமா என்றும் நெறியாளர் சொல்லலாம்.

தம்பி இப்னு அப்துல் ரஜாக் அவர்களின் அன்புக்கு நன்றி. இன்ஷா அல்லாஹ் அவரகளது அன்பான கட்டளை ஏற்றுக் கொண்டு இன்னும் சில வரலாறுகளைத் தேடித்தர முயற்சிக்கிறோம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//பாண்டிச்சேரியில் ஒரு பிரெஞ்சு கவர்னர் வீட்டில் எடுபிடி வேலையாளாக தனது வாழ்வைத்தொடங்கிய யூசுப் கான் என்கிற கான் சாகிப் 1757 –ல் மதுரைக்கு கவர்னராக்கப்பட்டார். சாயாக் கடையில் வாழ்வைத்தொடங்கி நாட்டின் பிரதமராக ஒருவர் உயர முடிந்த வரலாறு இன்று படைக்கப்பட்ட வரலாறு. இன்றைய வரலாற்றுக்குப் பின் பல காரணிகள் இருக்கின்றன. ஆனால் எடுபிடி வேலைக்காரரான யூசுப்கான் , கவர்னராக உருவெடுத்ததன் பின்னணியில் யூசுப் கானின் உழைப்பு மட்டுமே காரணியாக இருந்தது.//

தும்மல் வரவேண்டியவர்களுக்கு வரனும் ! இருந்தாலும்... வரலாறு சொல்லபடும்போது உண்மைகள் உரசித்தான் பர்க்ககும், போர் என்று வந்தால் வாளின் சுழற்சி சுற்றத்தையும் சுவைக்க வைக்க வைக்கும் !

//தென் மாவட்டத்துக்கான கவர்னராகக் நியமிக்கபப்ட்ட கான் சாகிப் உண்மையிலேயே ஒரு அஞ்சா நெஞ்சன் ; (பெயரளவு அஞ்சா நெஞ்சர்கள் பின்னர் மதுரையில் தென்மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப் பட்டது அண்மைக்கால அரசியல் கதை.) //

சரியான நேரத்தில் சுட்டப் படவேண்டியதை சுட்டித்தான் ஆக வேண்டும் !

sheikdawoodmohamedfarook said...

'இப்ராஹீம்அன்ஸாரி ரசிகர்மன்றம்' ஆரம்பிக்க ஆணையிடு தலைவா! உன் ஆணையே தலைமேல் ஏற்று நாடெங்கும்அயிரம் 1000 மன்றங்களை திறந்து காட்டுகிறோம்!
இப்படிக்கு உன் கண்ணசைவுக்கு காத்திருக்கும்ரசிகன் கச்சைகட்டி கபீர்தாஸ் ரசிகன்குடி.ராசிபுரம்[post]திருநெல்வேலிமாவட்டம்.PC.614780997865479

Ebrahim Ansari said...

தம்பி அபு இப்ராஹீம் அவர்களுக்கு,

தொடரில் இடையில் சொருகப்பட்ட இக்கால சம்பவங்களின் ஒப்பீட்டை ஒருவரும் கவனித்து கருத்திடவில்லையே என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். ஜசாக் அல்லாஹ்.

Ebrahim Ansari said...

மச்சான் SMF அவர்களுக்கு,

கமென்ட்ஸ்களில் கலக்கும் உங்களுக்குத்தான் ரசிகர் மன்றம் முதலில் ஆரம்பிக்க வேண்டும்.

Unknown said...

பிள்ளை என்பது சாதியா...??? பட்டமா...???

பிள்ளை என்பது பட்டமே...

பிள்ளை என்கிற பட்டம் பறையர்களுக்கு உண்டு...ஈ.வெ.ராமசாமிக்கு "பெரியார்" என்ற பட்டம் வழங்கிய பறையர் பேரின தமிழச்சி பெண் விடுதலை போராளி மீனாம்பாள் சிவராஜ் அவர்களின் தாத்தாவின் பெயர் "பெ.மா.மதுரை பிள்ளை" ஆவார்.

ஆகவே...மருதநாயகத்திற்கு பிள்ளை என்கிற பட்டம் உள்ளத்தால் அவர் பிள்ளைமார் இனத்தை சார்ந்தவர் என்று கூறிவிட முடியாது...

அவர் வெள்ளாளர் இனத்தவர் அல்ல...சாம்பவ குல வேளாளர் இனத்தவர் அதாவது உழவுப் பறையர்...

பனையூரில் வாழ்ந்த சாம்பவ குல வேளாளர்கள் பலர் இஸ்லாம் தழுவினர்..அதில் மருதநாயகம் குடும்பமும் அடங்கும்..

சேனாதிபதி.ஜெ.மு.இமயவரம்பன் என்பவர் தனது "மறைக்கப்பட்ட பறையர் வரலாறு" நூலில் பல ஆதாரங்களுடன் பனையூர் முன்பு பறையனூர் என்று அழைக்கப்பட்டு வந்ததையும் , மருதநாயகம் பறையர் பேரினத்தில் பிறந்து கான்சாகிப்பாக மாறியவர்...ஆகியவற்றை பல்வேறு ஆதாரங்களுடன் நிருபித்துள்ளார்...

"மார்க்கம் மாறினாலும் மறையோர் குலத்தவன் எங்கள் மருதநாயகம்"

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு