Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

புதிய மத்திய அரசு எதிர்நோக்கியுள்ள சவால்கள் 8

அதிரைநிருபர் பதிப்பகம் | May 22, 2014 | , , , ,

அண்மைப் பாராளுமன்றத் தேர்தல்கள் முடிந்து பாரதீய ஜனதாவின் அறுதிப் பெரும்பான்மை ஆட்சி நரேந்திர மோடியின் தலைமையில் ஏற்பட்டதும் இந்த புதிய வித்தியாசமான அரசு எப்படி நடந்து கொள்ளப் போகிறதோ என்கிற கேள்விகளும் உடனே மனதில் எழுந்தபோது கூடவே சிறு வயதில் வகுப்பாசிரியர் சொன்ன ஒரு கதை நினைவுக்கு வந்தது.

ஒரு நாடு இருந்தது. அந்த நாட்டுக்கென்று ஒரு வித்தியாசமான சட்டமிருந்தது. அந்த சட்டத்தின்படி , அந்த நாட்டுக்கு யார் வேண்டுமானாலும் மன்னராக வர முடியும். ஆனால் அந்தப் பதவி ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே. அதன்படி மன்னராக ஆசைப்பட்டு முன் வருகிற மன்னர் வெறும் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே அரசராக பதவி வகிக்க முடியும். ஐந்து ஆண்டுகள் ஆண்டு முடித்த பின்னர் அந்த மன்னரை அந்த நாட்டின் குறுக்கே ஓடும் ஒரு ஆழமான ஆற்றின் மறு கரையில் கொண்டு போய் விட்டுவிடுவார்கள் . அந்த ஆற்றின் மறுகரை ஒரு அடர்ந்த காடு . அங்கு மனிதர்களே கிடையாது. கொடிய காட்டு மிருகங்களே வசித்து வந்தன. அந்தக் காட்டில் நுழையும் எந்த மனிதரையும் அந்த மிருகங்கள் கொன்று தின்றுவிடும். இதுவே வித்தியாசமான சட்டம். இந்த சட்டத்தின் நிபந்தனைகளை ஏற்பவர் அந்த நாட்டின் மன்னராக ஐந்தாண்டுகள் பதவி வகிக்க முடியும். இதன்படி மன்னராக ஆசைபப்ட்டு முடி சூட்டிக் கொண்டவன் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு மரணத்தையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்து மன்னர் பதவியை ஏற்றுக் கொள்ள பலரும் தயங்கினாலும் , ஐந்தாண்டுகள் மன்னராக இருந்து அனுபவித்துவிட்டு சாகலாமே என்ற அசட்டு தைரியத்தில் சிலர் மன்னராக வர முன்வருவதுண்டு. அவ்விதம் வருபவர்கள் தங்களின் ஐந்தாண்டு பதவிக்காலம் முடிந்ததும் ஒப்பந்தபப்டி காட்டுக்கு அனுப்பபப்ட்டு உயிர்நீத்தனர்.

இவ்விதம் பதவியேற்ற ஒரு மன்னனுக்கு அன்று ஐந்தாண்டு நிறைவு நாள். அவரைக் காட்டுக்கு அனுப்பும் வைபவத்துக்காக நாடே ஆற்றங்கரையில் திரண்டு இருந்தது. மன்னர் தனது வழக்கமான ஆடை அலங்காரங்களுடன் ஆற்றங்கரைக்கு வந்தார். தனது கரங்களில் தங்க வாளையும் ஏந்தி இருந்ததுடன் மன்னருடைய பதவி காலத்தில் அணிந்து இருந்த அனைத்து வைர வைடூரிய நகைகளையும் அணிந்து இருந்தார். இன்னும் அரை மணி நேரத்தில் சாகப் போகிற அரசருக்கு இவ்வளவு அலங்காரம் ஏன் என்று மக்கள் வியந்தனர். ஆனாலும் மன்னரை அக்கரையில் கொண்டு விடத் தயாரான படகு கொண்டு வரப்பட்டது. அந்தப் படகைப் பார்த்ததும் மன்னருக்குக் கோபம் வந்தது.

''ஒரு நாட்டின் மாமன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக்கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது? எனது சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்! '' என்று அரச கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன. சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகானபடகு ஆற்று நீரைத் கிழித்துக்கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.

மக்கள் திகைத்து நிற்க, மன்னன் மகிழ்வுடன் கையசைக்க படகுப் பயணம் தொடர்ந்தது. மிகவும் அதிசயபப்ட்டு அதிர்ச்சி அடைந்தவன் படகை ஓட்டிச் சென்ற படகோட்டியே. காரணம், இதுவரை அந்தப்படகோட்டி மறுகரைக்கு அழைத்துச் சென்ற மன்னர்கள் அனைவரையும் சவக்களை முகத்தில் தாண்டவமாடக்கண்டவன் இப்போதுதான் முதன்முதலாக மகிழ்ச்சிறேகைகள் படர்ந்த முகத்தோடு ஒரு மன்னனைப் பார்க்கிறான். ஆகவே பொறுமை இழந்தவனாக் மன்னனிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்பினான்.

“மன்னா! மாமா மன்னா! நீங்கள் எங்கே போகிறீர்கள் தெரியுமா? ”

“ தெரியுமே! ஆற்றின் மறுகரைக்குப் போகிறேன். “

“ அங்கே போனவர்கள் போன இடமும் தெரியுமா? அது வெறும் காடு மட்டுமல்ல சுடுகாடு என்றும் தெரியுமா? அங்கே சென்றவர்கள் இங்கே திரும்பியதில்லை என்றும் தெரியுமா? “

“ தெரியுமே ! அதுதான் மகிழ்ச்சியோடு போகிறேன் “

“ இவ்வளவும் தெரிந்தும் எப்படி இவ்வளவு மகிழ்ச்சியோடு சொல்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லையே! “

“ ஓ அதுவா? நீ கேட்டதனால் சொல்கிறேன். கேள்! நான் ஆட்சி ஏற்ற முதலாண்டில் ஆயிரம் வேட்டைக்காரர்களை மறு கரையில் இருந்த காட்டுக்கு அனுப்பி அங்கிருந்த கொடிய மிருகங்களை வேட்டையாடிக் கொன்று அழிக்கச் செய்தேன். இப்போது அங்கே ஒரு கொடிய மிருகம் கூட இல்லை. இரண்டாவது ஆண்டில் சில ஆயிரம் நல்ல விவசாயிகளை அங்கு அனுப்பினேன். அவர்கள் சும்மா கிடந்த நிலத்தைக் கொத்தி சோம்பல் இல்லாமல் ஏர் நடத்தி காட்டைத்திருத்தி உழுது பயிரிட்டு விவசாயம் செய்தார்கள் . இப்போது அது பொன் விளையும் பூமியாகிவிட்டது. மூன்றாம் ஆண்டில் பல கட்டிடக்கலை வல்லுனர்களையும் தொழிலாளர்களையும் அனுப்பி அங்கு வீடு வாசல்களைக் கட்டச் சொன்னேன். இப்போது அந்தக் காடு நல்ல ஒரு நாடாக ஆகி இருக்கிறது. அரண்மனை, அந்தப்புரம் உட்பட அனைத்து வசதிகளும் அயல்நாட்டு தூதர்கள் வந்து தங்கும் வசதிகளும் கூடவே அங்கு அமைந்துவிட்டன. நான்காம் ஆண்டுக்குள் பல அரசு ஊழியர்களை அங்கு குடும்பத்துடன் குடியேறச் செய்தேன். இப்போது அங்கு நல்ல நிர்வாகமும் நடைபெற்று வருகிறது. இப்போது ஐந்தாம் ஆண்டில் மன்னனாக நானும் போகிறேன். எல்லோரும் நினைக்கிறார்கள் நான் சாகப் போகிறேன் என்று. ஆனால் உண்மையிலேயே நான் நிர்மாணித்த அந்த நாட்டை நான் ஆளப் போகிறேன் . அதுவே எனக்கு மகிழ்ச்சிக்குக் காரணம். “

படகோட்டி அசந்து போனான். தனக்கும் அந்த புதுநாட்டிலேயே ஒரு வேலை போட்டுத்தர மன்னனிடம் வேண்டி நின்றான் என்று கதை முடியும்.

இந்தக்கதையில் பல படிப்பினைகள் உண்டு. காடாக இருந்தாலும் திட்டமிட்டு செயல்பட்டால் அதையும் நாடாக்கி ஆள முடியும் என்று இந்தக்கதை நிருபிக்கிறது. அரசுக்கு மட்டுமல்ல தனி மனித வாழ்வுக்கும் இது பொருந்தும். புத்திசாலித்தனமான திட்டமிடல் - அந்தத் திட்டத்தை நிறைவேற்றுதல் ஒரு தனி மனிதனுக்கும் ஒரு அரசுக்கும் அவசியமான தேவைகளாகும்.

கடந்த பத்தாண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் எந்த நன்மையையும் ஏற்படவில்லை. இந்த நாடு பல வீழ்ச்சிகளை சந்தித்தது . பல சரிவுகளையும் சீர் குலைவுகளையும் சந்தித்தது என்றெல்லாம் குற்றம் சாட்டி, அவை மக்கள் மன்றத்திலும் எடுபட்டு இன்று புதிய அரசு நரேந்திர மோடி தலைமையில் பதவி ஏற்றுக் கொண்டுள்ளது. பழைய அரசு செய்த தவறுகளை – எவை எல்லாம் தவறுகள் என்று புதிய அரசமைத்தோர் சொன்னார்களோ அவை சார்ந்த துறைகளை இப்போது வந்துள்ள இந்த அரசு எப்படிக் கையாண்டு அவர்களின் வாதப்படி காடாகிப் போன இந்த நாட்டை செம்மைப் படுத்தி நாடாக்கப் போகிறார்கள் என்று கவனிக்க வேண்டியதும் எதிர்பார்ப்பதும் நமது கடமை.

இப்போது பிஜேபி பெற்றுள்ள வெற்றியின் மூலம் அந்தக் கட்சிக்கு இருந்த அரசியல் நெருக்கடிகள் அருகிவிட்டன; ஆனால் நிர்வாக நெருக்கடிகளை இந்தப் புதிய அரசு கண்டிப்பாக சந்தித்தே ஆக வேண்டும். ஒரு மாற்றம் வேண்டுமென்று நினைத்த மக்களின் ஆதரவை பெற்று ஆட்சிக்கு வந்த கட்சிக்கு இத்தகைய பொறுப்புக்கள் அதிகம்.

இப்போது புதியஅரசு எதிர் நோக்கியுள்ள தலையாய சவால்களாக நாம் பார்ப்பது.
  • விலைவாசி உயர்வு
  • டாலருக்கெதிரான ரூபாயின் மதிப்பில் நிலையற்ற நிலை
  • தொழில் வளர்ச்சிக் குறைபாடுகள்
  • பல்வேறு துறைகளிலும் ஊழலில் வெறியாட்டம்
  • எண்ணெய் விலை ஏற்றதாழ்வுகள்
  • வங்கி வட்டி விகிதத்தின் நிலையற்ற தன்மை
  • வெளிநாடுகளில் கறுப்புப் பணம் – அவற்றை வெளிக் கொணரும் நடவடிக்கைகள்
  • உற்பத்திப் பெருக்கம்
  • சேது சமுத்திரத் திட்டம் மாற்றுப்பாதையிலாவது சாத்தியமா?
  • விவசாய வளர்ச்சி- கிராமப் பொருளாதார வளர்ச்சி
  • நேரடி அன்னிய முதலீடு தொடர்பான நிலைப்பாடு
  • ஏற்றுமதி இறக்குமதிப் பிரச்னைகள்
  • மத்திய மாநில உறவு மேம்பாடுகள்
  • மாநிலங்களுக்கிடையான நதி நீர்ப் பங்கீடு
  • நாடு தழுவிய நதி நீர் இணைப்புத் திட்டங்கள்
  • நடப்புக் கணக்குப் பற்றாக்குறை
  • இட ஒதுக்கீட்டுக் கொள்கைகள்
  • உலக மயமாக்கலின் பிரச்சனைகள்
  • முந்தைய அரசின் திட்டங்களை தொடர்வதா? விடுவதா?
  • ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகள்
  • இலங்கைத் தமிழர் பிரச்னை
  • தமிழக மீனவர் பிரச்சனைகள்
  • அஸ்ஸாமில் அன்னிய நாட்டினர்
  • சிறுபான்மையினரின் பதட்டம் , சந்தேகம், பயம்
  • பொதுத்துறை நிறுவனங்களை ஊக்குவிப்பதா? தனியார்மயத்தை தாராளமாக்குவதா? 
  • அணுசக்தி உலை மற்றும் மின்திட்டங்களின் எதிர்காலம் 
  • அரசியல்வாதிகளின் மீதான நடப்பில் உள்ள வழக்குகளைத் தொடர்வது
  • கடந்த ஆட்சியில் நடந்த ஊழல்களின் மீதான விசாரணையை ஏவுதல் / வழக்குத்தொடரல்
  • ஆர் எஸ் எஸ் , சங்க பரிவார் அமைப்புகளின் செயல் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு / நிராகரிப்பு
  •  வராக் கடன் வசூல்
  • எல்லை நாடுகளுடன் நட்புறவு

மேற்கண்ட பட்டியலில் உள்ளவைகளுக்கு அதிகமாகவும் மேலும் பல பிரச்சனைகளும் சவால்களும் கேள்விகளும் புதிய அரசின் முன் இருக்கலாம்.

தேர்தலுக்கு முந்திய தேர்தல் அறிக்கையில் சில உணர்வு பூர்வமான – நாட்டின் மக்களுக்கிடையே பிளவு ஏற்படுத்தும் சில ஆபத்தான திட்டங்களை பாரதீய ஜனதா கட்சி முன் வைத்தது. அத்தகைய திட்டங்கள் வெறுமனே மக்களின் உணர்வுகளைத் தூண்டி அதிகாரத்தை வென்றெடுக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டால் இந்த நாடு அமைதியான நாடாக இன்னும் சொல்லப்போனால் ஒரு வல்லரசாக உருவெடுக்கும் வகையிலும் தனது அடிகளை எடுத்துவைக்க இயலும். அதற்கு மாறாக, அமைதிக்கு ஆபத்தான அந்தத் திட்டங்கள் செயல்வடிவம் பெறுவதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டால் வளர்ச்சியின் நாயகன் என்று நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்டதற்குப் பொருள் இல்லாமல் போய்விடும். காரணம், அமைதி நிலவாத நாடுகளின் பொருளாதாரம் வளர்ந்ததாகவோ வளர்ச்சி அடைந்ததாகவோ, ஒரு வரலாற்றை வங்காளக் கடலில் வலைவீசித்தேடினாலும் காணமுடியாது. ஆகவே நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச்செல்ல நினைக்கும் எந்த ஒரு அரசும் மக்களிடையே அமைதியைக் குலைக்கும் அழிவுப் பாதையை தேர்வு செய்யாது. அப்படிச் செய்வது அறிவுபூர்வமான செயலாக இருக்காது.

நம்மைப் பொறுத்தவரை, நாட்டின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் நலிந்து போய்க்கிடக்கும் பல தொழில்கள் பேணி வளர்க்கப் பட வேண்டும். தங்களுக்கு ஆளும் பொறுப்பு அளிக்கப்பட்டால், ரூபாயின் மதிப்பு உலக நாணய செலவாணிச் சந்தையில் உயரும் விதத்தில் திட்டங்கள் தீட்டப்படுமென்று பிஜேபி கூறியது. இப்போது மக்கள் அதற்கு ஆளும் பொறுப்பை அளித்து இருக்கிறார்கள். தாங்கள் வாக்களித்தபடி நாட்டின் பொருளாதாரத்தை உயரச் செய்வதற்குரிய நல்ல நடவடிக்கைகளை இந்த புதிய அரசு எடுக்க வேண்டும்.

ஏற்றுமதி அதிக்க வேண்டுமானால் உற்பத்தித்துறையை முதலில் உயர்த்திப் பிடிக்க வேண்டும். கிராமப்புறப் பொருளாதாரத்தை வளர்க்கும் விதத்தில் விவசாயத்துக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் இந்த அரசு செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு வேண்டிய அளவுக்கு நிதி ஆதாரங்களை ஏற்பாடு செய்து கொடுக்கவேண்டும். பல பெரிய தொழில்களுக்கும் டாடா போன்ற பெரிய கார்பரேட் நிறுவனங்களுக்கும் 0.1% சதவீத ரேட்டில் வங்கி நிதி உதவிகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் விவசாயிகளுக்கு 4 % முதல் 7% வரை நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள் இன்றைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் நிதி ஆதாரங்களை இலகுவாக்க புதிய வளர்ச்சியின் நாயகன் முயல வேண்டும்.

இறக்குமதி வரியாக இன்று 30% வரை வசூலிக்கப்பட்டாலும் இறக்குமதியாகும் பொருள்கள், உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களின் விலையை விட விலை குறைவாகக் கிடைக்கின்றன. ஆகவே இந்தியா ஒரு பன்னாட்டு சந்தையாக மாறுவதால் உள்நாட்டுத் தொழில்கள் நசிந்து வருகின்றன. இந்த அம்சத்தை புதிய அரசு தனது கவனத்தில் எடுத்துக் கொண்டு உள் நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களின் விலைகளைக் குறைக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

விவசாயத்துக்கு சரியான ஊக்குவிப்பு இல்லாததால் விவசாயம் நசிந்து போய் உற்பத்திக் குறைவு ஏற்பட்டு உணவுப் பொருள்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் அவல நிலைக்குத் தள்ளப் பட்டிருப்பதை புதிய அரசு உணர வேண்டும். இதனால் அந்நிய செலாவணி நாட்டில் இருந்து வெளியாகிக் கொண்டிருப்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். பன்னாட்டு நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு இந்தியா ஒரு சந்தையாக மாறியது பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் என்பதை பிஜேபி ஏற்கனவே சொல்லி வந்திருக்கிறது. இத்தகைய குற்றச்சாட்டுகள் வெறுமனே மன்மோகன் அரசின் மேல குற்றம் சாட்ட மட்டுமதானா அல்லது இதற்கு மாற்றுத் திட்டம் வைத்திருக்கிறதா என்பதை புதிய அரசு நிருபித்துத் தனது தனித்தன்மையை செயல்வடிவில் காட்ட வேண்டும்.

பிஜேபி தேர்தலில் வெற்றி பெற்றுக் கொண்டு இருக்கிறது என்கிற செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிற போதே பங்குச் சந்தைகளில் பங்குகளின் விலைகள் உச்சத்தைத் தொட்டன. பங்குச் சந்தை என்பதே ஒரு வகையில் ஊக வணிகத்தின் ஒரு வடிவமே. ஊக வணிகம் என்பது விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும் என்பது பொருளாதாரத்தின் பாலபாடம். விலைவாசி உயர்வைக் காரணம் காட்டி ஆட்சியை மாற்றிவிட்டு ஆட்சிக்கு வந்து அரியணை ஏறிய ஒரு ஆட்சி , தனது ஆட்சியிலும் விலைவாசியைக் கட்டுப்படுத்தத்தவறினால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மீண்டும் மக்கள் மன்றத்தின் முன் நிற்கவேண்டிய நிலையில் தங்களுக்கும் தோல்வி ஏற்படும் என்பது உணர வேண்டும். காட்டில் விளையும் கத்தரிக்காய்க்கு கம்ப்யூட்டர் முன் அமர்ந்து கொண்டு விலையை நிர்ணயிக்கும் ஆன் லைன் வர்த்தகத்தை இந்த அரசு கட்டுப் படுத்தக் கூடாது ; ஒழித்துக் கட்ட வேண்டும்.

பெரிய கார்பரேட் கம்பெனிகளின் ஆதரவில் ஆட்சிக்கு வந்துள்ள கட்சி என்று பிஜேபி மீது ஒரு குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இந்தக் குறையை பிஜேபி அரசு நீக்கிக் கொண்டு தன்னை ஒரு பொதுநல அரசு என்று நிரூபிக்க வேண்டுமானால் , Non- Corporate Sectors என்று சொல்லப்படுகிற பல்வேறு வகையான சிறு குறுந்தொழில்களை வளர்ப்பதில் இந்த புதிய அரசு ஆர்வம் காட்ட வேண்டும். வெறும் டெக்னாலஜியை மட்டும் பரவலாக அரசு இறக்கி விடுமானால் சிறு குறுந்தொழில்கள் அழிந்துவிடும். மேலும் சிறு குறுந்தொழில்களின் வளர்ச்சி, வேலை வாய்ப்புகளை குறிப்பாக சுய வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும். சீனா போன்ற மக்கள் தொகை பெருகிய நாடுகள் தங்களின் மக்கள் வளத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்தி பொருளாதாரத்தில் மேலை நாடுகளுக்கு சவால்விடும் நிலைக்கு உயர்ந்திருப்பதற்கு குடிசைத்தொழில்கள் முதல் நடுத்தர தொழில்களின் வளர்ச்சிக்கான அரசின் ஆக்கமும் ஊக்கமுமே காரணம் என்கிற உலகறிந்த உண்மையை இந்த அரசு அலட்சியப்படுத்திவிட இயலாது.

இந்தத் தலைப்பில் இன்னொரு வாரமும் பேசவேண்டும். இன்ஷா அல்லாஹ் சந்திக்கலாம். 

இபுராஹீம் அன்சாரி

8 Responses So Far:

adiraimansoor said...
This comment has been removed by the author.
adiraimansoor said...

///இப்போது புதியஅரசு எதிர் நோக்கியுள்ள தலையாய சவால்களாக நாம் பார்ப்பது.///

என்று ஒரு பெரிய லிஸ்டே தயார் செய்து பதிந்துள்ளீர்கள்

காக்கா இனிந்த இந்தியா காட்டுக்குள்ளே இவ்வளவு கொடிய மிருகங்களா? செத்தார் நரேந்திர மோடி
இவ்வளவு இருப்பது ஏற்கனவே நரேந்திர மோடிக்கு தெரிந்திருந்தால் ஆட்சி செய்வதற்கே நரேந்திர மோடி ஆசைபட்டிருக்கமாட்டாரே

ஒருவேலை நீங்கள் எழுதியபடி கடைசி அரசாரா இருந்தாலும் இருக்கலாம்

எல்லாம் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே

adiraimansoor said...

///தேர்தலுக்கு முந்திய தேர்தல் அறிக்கையில் சில உணர்வு பூர்வமான – நாட்டின் மக்களுக்கிடையே பிளவு ஏற்படுத்தும் சில ஆபத்தான திட்டங்களை பாரதீய ஜனதா கட்சி முன் வைத்தது. அத்தகைய திட்டங்கள் வெறுமனே மக்களின் உணர்வுகளைத் தூண்டி அதிகாரத்தை வென்றெடுக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டால் இந்த நாடு அமைதியான நாடாக இன்னும் சொல்லப்போனால் ஒரு வல்லரசாக உருவெடுக்கும் வகையிலும் தனது அடிகளை எடுத்துவைக்க இயலும். அதற்கு மாறாக, அமைதிக்கு ஆபத்தான அந்தத் திட்டங்கள் செயல்வடிவம் பெறுவதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டால் வளர்ச்சியின் நாயகன் என்று நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்டதற்குப் பொருள் இல்லாமல் போய்விடும். காரணம், அமைதி நிலவாத நாடுகளின் பொருளாதாரம் வளர்ந்ததாகவோ வளர்ச்சி அடைந்ததாகவோ, ஒரு வரலாற்றை வங்காளக் கடலில் வலைவீசித்தேடினாலும் காணமுடியாது. ஆகவே நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச்செல்ல நினைக்கும் எந்த ஒரு அரசும் மக்களிடையே அமைதியைக் குலைக்கும் அழிவுப் பாதையை தேர்வு செய்யாது. அப்படிச் செய்வது அறிவுபூர்வமான செயலாக இருக்காது.///

காக்கா
மிக தெளிவான கருத்தாடல்மட்டுமல்ல புதிதாக பொறுப்பு ஏற்றிருக்கும் நரேந்திர மோடியி அவர் ஏற்கனவே செய்த குற்றங்கள் மறைவதற்கு இது சரியான சந்தர்ப்பம் இதில் அவர் வெளியிட்ட மனித குலத்திற்கே அச்சுருத்தலாக இருக்கும் அந்த தேர்தல் அறிக்கையை நீங்கள் சொல்வது போன்று நடைமுறை படுத்தாமல் தூக்கி குப்பையில் போட்டால் அமைதியான இந்தியா உருவாகும் இல்லையென்றால் நிம்மதி இழப்பது நாம் மட்டுமல்ல நரேந்திர மோடியும்தான் என்பது நீங்கள் எழுதி இருக்கும் இந்த பதிவின் மூலமாகவே எடுத்துக்கொள்ளாலாம்
சபீரின் பானியில் அல்லாஹ் ஆத்திக் ஆபியா

"அல்லாஹ் ஆத்திக் ஆபியா" இந்த வார்த்தை ஒரு துவாவாக இருந்தாலும் இந்த சிரிய துஆவில் உள்ளே பல விஷயங்கள் அடங்கி இருக்கின்றன எல்லா பின்னூட்டங்களிலும் சபீர் அதிகபடியாக உபயோகப்படுத்தும் இந்த துவாவை இன்ஷா அல்லாஹ் நானும் இனி சபீர் பானியிலே என் கரங்களையும் உயர்த்தப்போகின்றேன்

Unknown said...

ஒரு நாடு எவற்றால் சிறப்படைகிறது? இயற்கை வளங்கள், செல்வச் சிறப்பு ஆகியவை தேவையே. எனினும் அவற்றினும் மேலானது அங்கு வாழும் மக்களின் மனவளம். அத்தகைய மக்கள் வாழும் நாடே சிறந்தநாடு என்கிறார் ஒளவையார்.


நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே.



sheikdawoodmohamedfarook said...

ஆற்றின் மறுகரைக்கு வந்து சேர்ந்துவிட்டார் மோடி![Congratulations Mr.Modi]கதையில்சொன்னபடி காட்டிலுள்ள மிருகங்களைஎல்லாம் ஒழித்து அதை மக்கள் வாழும் நாடாகமாற்றவில்லை;காடுகாடாகவேஇருகிறது;
மேடுமேடாகவே இருக்கிறது;பள்ளம் படுகுழிகள் பாதாளங்கள் யாவும்முன் உள்ளதுபோல் உள்ளது. அதில்மாற்றமில்லை.இனிஅதை நீங்களே மாற்ற வேண்டும்.அவற்றை எல்லாம்மாற்றவே வந்திருக்கிறீர்கள்.ஆக நீங்கள் பாடுபட்டுத் தேடிதலையில் சூடியது தங்ககிரீடமல்ல;முள்கிரீடம்.இங்கு குவிந்துள்ள குப்பைகளையும் கூலங்களையும் அகற்றும் பணிகள் நிறையவே உங்களுக்கு காத்திருக்கிறது.
சிறப்பான ஆட்சியை தருவீர்கள் என்றுஉங்கள் ஆதரவாளர்களும் உங்களால் எதிரிகள் என்று அல்லது உங்களையே தங்களின் பரமஎதிரி என்றும் கருதிய உங்கள் எதிர்ப்பாளர்களும் எதிர்பார்க்கிறார்கள்.அவற்றை எல்லாம் உங்களின் சக்திக்கு முடிந்தவரை நிறைவேற்றும் பெரிய பொறுப்பை நீங்களே வேண்டிவாங்கி இருக்கிறீர்கள். இந்த-தெய்வீக பொறுப்பை’ ‘தெய்வத்திற்கு செய்யும் ஆராதனையாக-தொழுகையாக செய்து முடிப்பீர்கள் என்று ஆதிபாராசக்தியை ஆராதனை செய்பவர்களிலிருந்து அல்லாவை தொழுபவர்கள் வரை எதிர்பார்க்கிறார்கள்.
அல்லாவைபள்ளிவாசலில் தொழுபவர்கள் இந்துக்களின்எதிரியல்ல.காரணம் தொழுகை என்பது தூய தமிழ்ச்சொல்.உங்கள்[இந்துக்களின்] தெய்வங்களை புகழ்ந்து அப்பர்,சுந்தரர் அருள்மணிவாசகர்முதலானோர் பாடிய தேவாரம்.திருவாசகம் போன்ற பக்தி பாடல்களிலும் திருவள்ளுவரின் திருக்குறளிலும் தொழுகை என்ற சொல் வருகிறது. ஒருநாட்டை ஆட்சிசெய்ய வருவோனின் முதல் தகுதி அவன் மனைவிமக்கள்பிள்ளைகுட்டிபோன்றசொந்த-பந்தபாசமில்லாதவனாக இருக்கவேண்டுமென்று கிரேக்கநாட்டின்சிந்தனையாளன் அரிஸ்டாட்டிலோ அல்லது பிளாட்டோவோ சொன்ன நினைவு. அந்த பிள்ளை குட்டி சுமை உங்களுக்கு இல்லை.நீங்கள் திருமணம் ஆனபின் அந்தசுமை வேண்டாமென்று பிர்மாசாரியத்தை மேற்கொண்டீர்கள். உங்கள் ஆட்சியின் ஓடம் அமைதியானநதியினிலே தடைஇல்லாமல் ஓடஇந்த அதிரைநிருபர் தலையங்கத்தில் சொல்லப்பட்டவைகளில் நீக்கவேண்டியதை நீக்கி ஆக்கவேண்டியதை ஆக்கி நாட்டைநல்வழியில் நடத்திஆட்சி செய்வீர்கள் என மக்கள் நம்பும் இந்த தருணத்தில் அவர்களுக்கு உங்கள் மீது ஒருசந்தேகமும் அச்சமும் பீதியும் இருக்கிறது.!
அது சிறுபான்மையோர் மீது நீங்கள்திட்டமிட்டு காட்டிய அடாவடித்தனமும் வெறுப்பும்.அதை மீண்டும் நடத்தாமல்‘நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்! இனிநடப்பவை நல்லவையாக இருக்கட்டும்!’ என்று ஆட்சியை சிறப்புடன்செய்யுங்கள்.அப்பொழுதுதான்’’ மாபெரும் சபையில் நீ நடந்தால்அங்கு மாலைகள் விழவேண்டும்’என்ற பாடல்காஷ்மீர் முதல் கன்யாகுமரிவரை நீங்கள் எங்கெங்குபோகிறீர்களோ அங்கெங்கெல்லாம் இந்தப் பாடல்ஒலித்துக்கொண்டே இருக்கும்! நமஸ்தே! மோடிஜி!

sabeer.abushahruk said...

செம்ம கத!

ஆற்றின் அக்கறையையும் நாட்டின்மீதான அக்கறையையும் நேர்த்தியாக இழைத்த சிந்தனை சிறப்பாக இருக்கிறது.

பட்டியல் துல்லியமானதாக, அச்சம் தருவதாக உள்ளது. மோடி கெலிச்சாரா மாட்டிக்கின்னாரா என்பது போகப்போகத்தான் தெரியும்.

சும்மா மோடியை வைதுகொண்டே இருக்காமல், இந்தியர்கள் அவருக்குத் தந்திருக்கும் வாய்ப்பை உணர்ந்து, ஆயாளோட நடவடிக்கைகளின்மீது கண்வைப்பதே புத்திசாலித்தனம்.

இப்னு அப்துல் ரஜாக் said...

சும்மா மோடியை வைதுகொண்டே இருக்காமல், இந்தியர்கள் அவருக்குத் தந்திருக்கும் வாய்ப்பை உணர்ந்து, ஆயாளோட நடவடிக்கைகளின்மீது கண்வைப்பதே புத்திசாலித்தனம்.

Ebrahim Ansari said...

//சும்மா மோடியை வைதுகொண்டே இருக்காமல், இந்தியர்கள் அவருக்குத் தந்திருக்கும் வாய்ப்பை உணர்ந்து, ஆயாளோட நடவடிக்கைகளின்மீது கண்வைப்பதே புத்திசாலித்தனம்.//

இனி நான் எழுதும் பதிவுகள் இந்த அடிப்படையிலேயே அமையும்.

நமது பிரச்னைகளை நாகரிகமாக எடுத்துச் சொல்வதே அழகு.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு