Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பொய் வழக்கு... என்ன கொடுமை? 3

அதிரைநிருபர் பதிப்பகம் | May 27, 2014 | , , , ,

2003ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி மாலை மணி 4:30.

முஃப்தி அப்துல் கையூமின் வீட்டுக் கதவு தட்டப்படுகிறது. திறந்தார். வந்தவர்கள் புலனாய்வுத் துறையிலிருந்து வந்திருப்பதாகக் கூறினர். "என்ன விஷயம்?" என்று முஃப்தி கேட்க, "ஸஹாப் உன்னைப் பார்க்க விரும்புகிறார்" என்றனர். குஜராத்தில் 'ஸஹாப்' என்றால் யாரைக் குறிக்கும் என்று அங்கு எல்லாருக்கும் தெரியும்.

"நான் போயிருக்கக் கூடாதுதான். ஆனால் வேறு வழியில்லை" என்று பதினொரு ஆண்டுகளைச் சிறைச்சாலையில் கழித்து, நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்ட பின்னர் 'தி ஸிட்டிஸன்' இணைய இதழுக்குப் பேட்டியளித்த முஃப்தி கூறுகிறார்.

வாகனத்தில் ஏறி உட்கார்ந்ததும் கண்கள் கட்டப்படுகின்றன. வாகனம் அஹ்மதாபாத்திலுள்ள புலனாய்வுத் துறையின் தலைமையகத்தில் போய் நிற்கிறது. விசாரணை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முஃப்திக்கு உடனேயே சித்திரவதை தொடங்குகிறது. "எவ்வளவு கொடூரமான, எத்தனை வகையான சித்திரவதைகளை வேண்டுமானாலும் நீங்கள் கற்பனை செய்துகொள்ளுங்கள். அவையெல்லாம் நான் அனுபவித்தவற்றுக்கு ஈடாகாது" என்கிறார் முஃப்தி.

"நினைவு தடுமாறி மயங்கி விழும்வரை அடித்தார்கள்; மின்சார அதிர்வுகளை உடலில் பாய்ச்சினார்கள். நினைவு திரும்பியதும் 'அக்'ஷர்தம் கலாச்சார மண்டபத்தில் நடந்த தாக்குதலில் உன்னுடைய பங்கு என்ன?' எனக் கேட்டனர். அதுவரை எதற்காக நான் இங்கு அழைத்து வரப்பட்டேன்; சித்திரவதை செய்யப்படுகின்றேன் என்றே எனக்குத் தெரியாது. நான் அலறினேன். 'எனக்கு வன்முறையிலெல்லாம் நம்பிக்கை கிடையாது. என்னுடைய மார்க்கம் வன்முறையைப் போதிப்பதல்ல. வன்முறைக்கு நான் எதிரானவன். நீங்கள் சொல்லுவதில் நான் ஈடுபடவில்லை' என்று வேண்டிய மட்டும் கதறினேன். கேட்கத்தான் ஆளில்லை. ஒருநாள் இரண்டுநாள் இல்லை. பதினொரு நாட்கள் (ஆகஸ்ட் 28 வரை) நான் தாங்கவியலாத சித்திரவதைக்கு ஆளானேன். அதுவரைக்கும் நான் சட்டத்துக்குப் புறம்பாகக் கைது செய்யப்பட்ட விஷயமே வெளி உலகுக்குத் தெரியாது"

"என்னுடைய மஹல்லாவைச் சேர்ந்த பெண்கள், எனக்காகவும் என்னைப் போலவே 'காணாமல் போன' மற்றவர்களுக்காகவும் ஒரு போராட்டத்தைத் தொடங்கியிருந்தனர். 2003செப்டம்பர் 23ஆம் தேதி என்னிடமும் மற்ற ஐவரிடமும் 'ஒப்புதல் வாக்குமூலம்' என்பதாக வெற்றுத் தாளில் அதிகாரிகள் கையெழுத்து வாங்கிக் கொண்டனர். கூடுதலாக, முர்த்தஸா என்பவருக்கும் அஷ்ரஃப் அலீ என்பவருக்கும் நான் எழுதுவதாகத் தனித் தனியாக இரண்டு கடிதங்களை அதிகாரிகள் சொல்லச் சொல்ல நான் எழுத, அக்கடிதங்களைப் பெற்றுக் கொண்டு, அந்த நரகத்திலிருந்து எங்களைச்  சிறைச்சாலைக்கு அனுப்பினர். 

சிறைச்சாலை அதிகாரிகளும் மனிதர்கள்தாமே! எங்களைப்போல் எத்தனையோ பேரைப் பார்த்தவர்கள். நாங்கள் குற்றம் செய்யாத அப்பாவிகள் என்பது அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. சிறை அதிகாரிகள் எங்களை நல்ல முறையில் நடத்தினர்"

முஃப்தி அப்துல் கையூம், விசாரணை என்ற பெயரில் சட்ட விரோதமாக அழைத்துச் செல்லப்பட்டபோது அவருக்கு வயது 31. அவருடைய ஐந்து வயது மற்றும் எட்டுமாதக் கைக்குழந்தை இருவரும் இப்போது பதின்ம வயதை அடைந்திருக்கின்றர். 'பயங்கரவாதி'யின் மனைவி எத்தனையோ துன்பங்களையும் அவப் பெயரையும் சுமந்துகொண்டு இரு பிள்ளைகளையும் வளர்த்தெடுத்தார்.

முஃப்தி சிறையிலிருந்த காலத்தில் அவருடைய தந்தை இறந்து போனார். முதிய தாய் விதவையானார். தந்தையின் ஜனாஸாத் தொழுகையில் கலந்துகொள்ளக்கூட முஃப்திக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

2002 செப்டம்பர் 24, மாலை மணி 4.45.

குஜராத் மாநிலம் காந்தி நகரில் 23 ஏக்கர் பரப்பளவில் எழுப்பப்பட்டுள்ள சுற்றுலா கேந்திரமான அக்'ஷர்தம் கலாச்சார ஆலயத்தின் புறவாசல் எண் மூன்றின் அருகில் ஒரு வெள்ளை நிற அம்பாஸ்டர் கார் வந்து நின்றது.

அதிலிருந்து இறங்கிய இருவர், தம் பொதிகளைச் சுமந்தவர்களாக உள்ளே நுழைய முயன்றனர். காவலாளி தடுக்கவே, புறவாசல் கதவின் மீதேறி உள்ளே சென்றனர்.

பின்னர் தம் பொதிகளிலிருந்து துப்பாக்கிகளை எடுத்து, இலக்கில்லாமல் சுட்டனர்; கையெறி குண்டுகளையும் வீசினர். (2008இல் மும்பையில் மாவீரர் கார்கரே கொல்லப்பட்டபோது நடந்த தாக்குதல் போலவே இதுவும் இலக்கற்றதாக இருந்தது. இதிலும் சுரேஷ் எனும் முக்கியமான ஒரு கமாண்டோ கொல்லப்பட்டார்).

கலாச்சார மையத்தின் உள்ளேயிருந்த காவலர்களுக்கு வயர்லெஸ் மூலமாகத் தாக்குதல் செய்தி அனுப்பப்பட்டது. உள் கதவுகள் மூடப்பட்டன. உள்ளூர் காவல்துறையினரும் தேசிய பாதுகாப்புப் படையினரும் 15 நிமிடங்களுக்குள் வந்து சேர்ந்தனர். அப்போதைய துணைப் பிரதமர் எல்.கே. அத்வானியின் உத்தரவின் பேரில் கருப்புப் பூனை கமாண்டோக்களும் பறந்து வந்தனர். அந்த நேர இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்ட பயங்கரவாதிகள் பொருட்காட்சியகத்தின் முதலாவது மண்டபத்துக்குள் நுழைந்து மறைந்து கொண்டனர்.

கமாண்டோக்கள் கலாச்சார மையத்தைச் சுற்றி வளைத்துக் கட்டுப்பாட்டுக்குள் எடுத்தபோது 32 அப்பாவிகள் உயிரிழந்திருந்தனர்; 80 பேர் படுகாயம் அடைந்திருந்தனர்.

பயங்கரவாதிகள் தம் பதுங்குமிடங்களை அடிக்கடி மாற்றிக் கொண்டனர். கமாண்டோக்கள் தொடர்ந்து போராடி மறுநாள் 24 செப்டம்பர் 2002 காலை 6.15 மணியளவில் இரு பயங்கரவாதிகளையும் சுட்டு வீழ்த்தினர்.

இவை அத்தனையும் குஜராத்தின் முதல்வராகவும் உள்துறை அமைச்சராகவும் மோடி பதவியேற்ற அடுத்த ஆண்டு நடைபெற்ற தாக்குதல் பற்றிய சுருக்கக் குறிப்புகளாகும்.

அக்'ஷர்தம் கலாச்சார மையத் தாக்குதல் தொடர்பான விசாரணை, குஜராத்தின் முன்னாள் காவல்துறை துணை இயக்குநரும் சொஹ்ராபுத்தீன் குழுவினர் உட்படப் பலரைப் போலி என்கவுண்டரில் கொலை செய்து தற்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருப்பவருமானவன்சாராவிடம் ஒப்படைக்கப்பட்டது.

கலாச்சார மையத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளாக முர்தஸா ஹாஃபிஸ் யாசீன் மற்றும் அஷ்ரஃப் அலீ முஹம்மது ஃபாரூக் ஆகிய இருவரும் பாகிஸ்தானைச் சேர்ந்த லக்'ஷரே தொய்பா அமைப்பினர் என்றும் குஜராத் முதல்வர் மோடியைக் கொல்ல வந்தவர்கள் என்றும் பின்னர் இலக்கை மாற்றிக் கொண்டார்கள் என்றும் காவல்துறையினரால் கூறப்பட்டனர்.

பாகிஸ்தானிலிருந்து வந்த இரு பயங்கரவாதிகளுக்கும் உடந்தையாக உள்ளூர் ஆட்கள் வேண்டுமே! அதற்கு என்ன செய்வது?
முஸ்லிம்களின் பொருளாதார உதவியுடன் தொடக்கக் கல்வியிலிருந்து ஐப்பீஎஸ் வரை படித்த வன்சாரா, அப்பாவி முஸ்லிம்களை அள்ள ஆரம்பித்தார்.

(1) ஆதம் சுலைமான் அஜ்மீரி, (2) ஷான் மியான் (எ) ச்சாந்த் கான் (உ.பி), (3) முஃப்தி அப்துல் கையூம் மன்சூரி, (4) முஹம்மது சலீம் ஷேக், (5) மவ்லவீ அப்துல்லாஹ் மியான் காதிரி, (6)அல்த்தாஃப் ஹுஸைன் மாலிக்.

ஆகிய அறுவரைக் கைது செய்து ஒவ்வொருவருக்கும் தனித்தனி கதை வசனம் எழுதியது குஜராத் காவல் துறை. ஆதம் சுலைமான் அஜ்மீரி, பயங்கரவாதிகள் தங்குவதற்குத் தம் சகோதரரின் வீட்டைக் காலி செய்து கொடுத்தாராம். அல்த்தாஃப் ஹுஸைன் மாலிக், ஆயுதங்கள் வெடி மருந்துகள் சப்ளை செய்தாராம். எந்த இடத்தைத் தாக்குவது என்பதை இலக்கு நிர்ணயித்து வாகன வசதி செய்து கொடுத்தவர்கள் முஃப்தி அப்துல் கையூம் மன்சூரியும் மவ்லவீ அப்துல்லாஹ் மியான் காதிரியுமாம். இதில் முஃப்தி அப்துல் கையூம் மன்சூரி இரு கடிதங்களை உருது மொழியில் எழுதி பயங்கரவாதிகளின் பாக்கெட்டுகளில் ஆளுக்கு ஒன்று வைத்து அனுப்பினாராம். மேற்காணும் அறுவரைத் தவிர மேற்கொண்டு 28 பேரை காவல்துறை இதுவரை தேடி வருகிறதாம்.

மேற்காணும் கதை வசனம் குஜராத்தின் POTA சிறப்பு நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டு, கடந்த ஜூலை 1, 2006இல் (1) ஆதம் சுலைமான் அஜ்மீரி, (2) ஷான் மியான் (எ) ச்சாந்த் கான் (உ.பி), (3) முஃப்தி அப்துல் கையூம் மன்சூரி ஆகிய மூவருக்கு மரண தண்டனையும் முஹம்மது சலீம் ஷேக்குக்கு ஆயுள் தண்டனையும் மவ்லவீ அப்துல்லாஹ் மியான் காதிரிக்குப் பத்தாண்டு சிறையும் அல்த்தாஃப் ஹுஸைன் மாலிக்குக்கு ஐந்தாண்டு சிறை தண்டனையும் விதித்து POTAசிறப்பு நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது. குற்றத்துக்கான சான்றுகளாக, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் 'எழுதிக் கொடுத்த' ஒப்புதல் வாக்குமூலங்களும் பயங்கரவாதிகளின் பாக்கெட்டுகளில் 'கண்டெடுக்கப்பட்ட' முஃப்தி எழுதியதாகக் காவல்துறை கூறிய இரு கடிதங்களும். 

குற்றம் சாட்டப்பட்ட அறுவரும் தாங்கள் அனைவரும் நிரபராதிகள் என்பதாகக் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

"மூன்றும் மூன்றும் ஆறு; கணக்கு சரியாத்தானே வருது" என்பதாக மூவருக்குத் தூக்கையும் மூவருக்குச் சிறையையும் குஜராத் உயர் நீதிமன்றம் கடந்த 30.5.2010 அன்று உறுதி செய்தது.

குற்றம் சாட்டப்பட்ட அறுவருக்காகத் தொடர் போராட்டம் நடத்திய ஜமாஅத்துல் உலமா ஹிந்தின் சட்டத்துறையில் பொறுப்பு வகிக்கும் மவ்லவீ அஷ்ரஃப் மதனீ, உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கை நகர்த்தினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.கே. பட்நாயக், நீதிபதி வி. கோபால கவ்டா ஆகிய இருவர் அடங்கிய பெஞ்ச், கடந்த 16.5.2014 வெள்ளிக்கிழமை, "குற்றம் சாட்டப்பட்ட அறுவரும் நிரபராதிகள்" எனத் தீர்ப்பு வழங்கியது. அத்துடன் நில்லாமல், "நாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் சவாலான இந்த வழக்கில் புலன் விசாரணை அமைப்புகளின் கையாலாகாத் தனத்தை எண்ணி வேதனைப் படுகிறோம்" என்று நீதிபதிகள் இருவரும் குறிப்பிட்டுள்ளனர்.

கமாண்டோக்களின் துப்பாக்கிக் குண்டுகளினால் துளைக்கப்பட்ட பயங்கரவாதிகளின் குருதியில் குளித்த ப்பேண்ட் பாக்கெட்டுகளிலிருந்து 'எடுக்கப்பட்ட' முஃப்தி அப்துல் கையூம் மன்சூரியின் கடிதங்கள் மட்டும் இரத்தக் கறை இல்லாமல், தூசி படியாமல், மடிப்புக் கலையாமல் இருந்ததை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கவனித்துவிட்டனர். பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது 25 செப்டம்பர் 2002; அவர்களின் ப்பேண்ட் பாக்கெட்டுகளில் இருந்து 'எடுக்கப்பட்ட' கடிதம் எழுதப்பட்டதோ 23 செப்டம்பர் 2003இல்.

மேலும், "விலை மதிப்பற்ற பல உயிர்களை பலி கொண்ட பயங்கரவாதத் தாக்குதலில், உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்த வேண்டிய காவல்துறை, அப்பாவிகளைக் கைது செய்ததோடு அவர்களுக்குக் கடுமையான தண்டனை வாங்கிக் கொடுப்பதில் முனைப்புக் காட்டியது. குற்றம் சுமத்தப் பட்டவர்களிடமிருந்து 'பெறப்படும்' ஒப்புதல் வாக்குமூலங்கள் செல்லாது எனும் அடிப்படையான சட்டக் கோட்பாட்டைக் கீழ்க் கோர்ட்டுகள் கவனத்தில் கொள்ளவில்லை" என்று நீதிபதி கோபால கவ்டா குஜராத் காவல்துறையையும் கீழ்க் கோர்ட்டுகளையும் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

POTA சட்டம் கடந்த 30.8.2003 காலாவதியானது. அதற்குள் கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்களை POTA வழக்குக்குள் கொண்டுவந்து, அவர்களைத் தூக்கில் போட்டுவிடவேண்டும் என்பதே காவல்துறையின் கனவாக இருந்தது என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சான்றுகளின் மூலம் உறுதி செய்தனர்.

“எனவே, ஜுலை 1, 2006இல் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் ஆணையையும் புறந்தள்ளியும் ஜுன் 1, 2010இல் குஜராத் உயர்நீதி மன்றம் வழங்கிய பொதுத் தீர்ப்பை மறுத்துரைத்தும் அனைத்துக் குற்றவாளிகளையும் குற்றமற்றவர்கள் என விடுவிக்கிறோம்” என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

"கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் வலப்புற ப்பேண்ட் பாக்கெட்களிலிருந்து உருது மொழியில் எழுதப்பட்ட கடிதங்களை 'எடுத்ததாக'க் கூறிய பிரிகேடியர் சீத்தாபதியை POTA சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கவேயில்லை. மேலும் 46-60 தோட்டாக்களால் துளைக்கப்பட்ட பயங்கரவாதிகளின் உடைகள் 12 ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. அவை புழுதியும் உறைந்துபோன இரத்தமும் படிந்தவையாயிருந்தன.

பயங்கரவாதிகளின் ப்பேண்ட் பாக்கெட்டுகளைத் துளைத்த தோட்டா, அவற்றிலிருந்து எடுக்கப்பட்ட உருதுக் கடிதங்களைத் துளையிடவில்லை என்பது நம்பும்படியாக இல்லை" என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தம் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அப்பாவிகளைக் குற்றவாளிகளாகக் காட்டுவதற்கு நாடகமாடிய குஜராத் காவல்துறையினரை யார் தண்டிப்பது?

காவல்துறையின் செல்லாத ஆவணங்களை ஏற்றுக்கொண்டு, அப்பாவிகளுக்குத் தூக்குத் தண்டனை வழங்கிய சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளையும் வழக்கு என்னவென்றே படித்துப் பார்க்காததோடு, அப்பாவிகளைக் கைது செய்த குஜராத் காவல்துறை துணை இயக்குநர் வன்சாராவை விசாரிக்காமலேயே தீர்ப்பெழுதிய குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதிகளை யார் தண்டிப்பது?

விசாரணை என்ற பெயரில் சட்ட விரோதமாக அடைத்து வைத்துச் சித்திரவதை செய்த புலனாய்வு அதிகாரிகளை யார் தண்டிப்பது?

எல்லாவற்றுக்கும் மேலாக, ஆறு நிரபராதிகள் இழந்த இளமைக் காலப் பதினொரு ஆண்டுகளை யாரால் திருப்பித் தர முடியும்?

அவர்தம் குடும்பங்கள் அடைந்த சொல்லொணாத் துயரங்களையும் துன்பங்களையும் அவப் பெயர்களையும் பொருளாதார இழப்புகளையும் எதைக் கொண்டு ஈடு செய்வது?

இந்தக் கொடுமைகளுக்கு யார் முற்றுப் புள்ளி வைப்பது?

இது போன்ற கொடுமைகள் இனி இந்தியாவில் தொடர்ந்து அல்லாஹ் நாடினால் நடைபெறலாம், இன்றைய கால சூழலில் இவைகளை எதிர்க்கொள்ள சமுதாய இயக்கங்கள் தயாராக வேண்டும். தங்களின் ஈகோக்களை நிரந்தரமாக தூக்கி எறியும் தருணம் இப்போதுதான் என்பதை ஒட்டுமொத்த முஸ்லீம் இயக்கங்கள் உணர்ந்தால் சரி. உணர்வார்களா?

நன்றி: சத்தியமார்க்கம் இணையதளம்

தொடர்புடைய சுட்டிகள்:-

3 Responses So Far:

adiraimansoor said...

அஸ்ஸலாமு அலைக்கும்

///இது போன்ற கொடுமைகள் இனி இந்தியாவில் தொடர்ந்து அல்லாஹ் நாடினால் நடைபெறலாம், இன்றைய கால சூழலில் இவைகளை எதிர்க்கொள்ள சமுதாய இயக்கங்கள் தயாராக வேண்டும். தங்களின் ஈகோக்களை நிரந்தரமாக தூக்கி எறியும் தருணம் இப்போதுதான் என்பதை ஒட்டுமொத்த முஸ்லீம் இயக்கங்கள் உணர்ந்தால் சரி. உணர்வார்களா?///

இந்த வர்த்தையை முஸ்லீம்களின் காவலாளிகள் என்று தன்னைத்தானே நினைத்துக்கொண்டு மமதையில் வாழும் இயக்கத் தலைவர்களுக்கு திரும்ப திரும்ப ஒளிக்கச் செய்யவேண்டும்

இப்னு அப்துல் ரஜாக் said...

உண்மை நிலையை உரைக்கும் இக் கட்டுரையை அனைவரும் பகிர வேண்டும்.நன்றியுடன் நானும் மீள் பதிவிட்டுள்ளேன்.

http://peacetrain1.blogspot.com/

Ebrahim Ansari said...

மத சார்பற்ற நாட்டை மத சார்பற்ற அரசு ஆளும் போது ஏற்பட்ட கொடுமை இங்கு பகிரப்பட்டு இருக்கிறது.

ஒரு மத்திய அரசுக்குக் கட்டுப்பட்ட மாநில அரசு இருந்தபோது ஏற்பட்ட கொடுமை இது.

அன்று இவற்றைப் பற்றி எல்லாம் முறையிட ஒரு இடமாவது இருந்தது.

மங்கை சூதகமானால் கங்கையில் முறையிடலாம் ஆனால் கங்கையே சூதகமானால் என்கிற நிலைமை.

அல்லாஹ் பாதுகாப்பானாக! அதிகமதிகம் பொறுமையும் வணக்கமும் துஆக்களும் தேவைப்படும் நிலைமை.

ஒரு வேளை அல்லாஹ் கொடுத்தும் பார்ப்பான் கெடுத்தும் பார்ப்பான் என்று சொல்வார்களே அந்த நிலையாகக் கூட இருக்கலாம்.

அல்லாஹ் போதுமானவன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு