அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 71

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!

அல்லாஹ் கூறுகிறான் :

அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத்தோழருக்கும், நாடோளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.(அல்குர்ஆன் : 4:36)

''அபூதர்(ரலி) அவர்களிடம் அழகிய மேலாடை இருக்கக் கண்டேன். அவரது ஊழியரிடமும் அதே போல் அழகிய மேலாடை இருக்கக் கண்டேன். இதுபற்றி அவர்களிடம் கேட்டேன் அப்போது அவர்கள், நபி(ஸல்) அவர்கள் காலத்தில் தாம் அடிமை ஒருவரை ஏசியதாகவும், அவரின் தாயார் பற்றி பழித்துக் கூறியதாகவும் கூறிவிட்டு, அப்போது நபி(ஸல்) அவர்கள் ''(அபூதர்ரே!) நீர் இன்னும் அறியாமைக் காலத்தவராக உள்ளீர். அவர்கள் (அடிமைகள்) உங்களின் சகோதரர்கள் ஆவர். உங்களின் கைகளுக்கு கீழே அவர்களை அல்லாஹ் ஒப்படைத்து உள்ளான். எனவே தன் கையின் கீழ் தன் சகோதரர் இருந்தால், தான் சாப்பிடுவதிலிருந்து அவருக்கு உண்ணக் கொடுக்கட்டும்! தான் உடுத்திய ஆடை போல் உடுத்தக் கொடுக்கட்டும்! அவர்களால் இயலாத ஒன்றைச் செய்யக் கூறி, அவர்களை சிரமப்படுத்த வேண்டாம். அவர்களுக்கு சிரமமான வேலை தந்தால், அவர்களுக்கு துணையாக நீங்களும் உதவுங்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: மஹ்ரூர் இப்னு சுவைத் (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1360)

''உங்களில் ஒருவருக்கு, அவரது ஊழியர் உணவைக் கொண்டு வந்து கொடுத்ததும், அவரை தன்னோடு உட்கார வைக்க இயலவில்லையானால், (ஊழியரான) அவருக்கு அதில் ஒரு கவளம் அல்லது இரண்டு கவளம் உணவைக் கொடுத்து விடட்டும். ஏனெனில், அவர்தான், இவரின் உணவைச் (சமைக்க) சிரமம் மேற்கொண்டார்''  என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி) ( ரியாளுஸ்ஸாலிஹீன்:1361 )

''குழப்பம் நிறைந்த காலத்தில் வணங்குவது, என்னிடம் ஹிஜ்ரத் செய்து வருவது போலாகும் என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: மஹ்கல் இப்னு யஸார் (ரலி) அவர்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1366)

கடனை நிறைவேற்றுதல், கடனை மன்னித்தல்

அல்லாஹ் கூறுகிறான் :

நீங்கள்  எந்த நன்மையைச் செய்தாலும், அல்லாஹ் அதை நன்கு அறிந்தவன். (அல்குர்ஆன் : 2:215)

என் சமுதாயமே! அளவையும், நிறுவையையும் நேர்மையாக நிறைவாக்குங்கள்! மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள்! (அல்குர்ஆன் : 11:85)

''ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, தன் கடனைத் திருப்பித் தரும்படிக் கேட்டு கடுமையாக நடந்து கொண்டார். நபித்தோழர்கள் அவரைத் தாக்க முயன்றனர். உடனே நபி(ஸல்) அவர்கள், ''அவரை விட்டு விடுங்கள். (கடன் தந்த அவருக்கு) உரிமை காரணமாக ஏதேனும் பேசிட அனுமதி உண்டு'' என்று கூறிவிட்டு, பின்பு ''அவர் தந்த ஒட்டகை போன்ற ஒரு ஒட்டகையை அவருக்கு வழங்குங்கள்''என நபி(ஸல்) கூறினார்கள். ''இறைத்தூதர் அவர்களே! அந்த ஒட்டகையை விட மிக உயர்ந்த ஒட்டகையே எங்களிடம் உள்ளது'' என்று நபித்தோழர்கள் கூறினர். அதையே கொடுங்கள் நிச்சயமாக உங்களில் சிறந்தவர், அழகிய முறையில் கடனை நிறைவேற்றுபவரே'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1367)

''விற்கும் போதும், வாங்கும் போதும் கடனை வசூலிக்கும் போதும், மென்மையாக நடக்கும் மனிதருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக'' என்று நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.  (அறிவிப்பவர்: ஜாபிர்  (ரலி) அவர்கள் (புகாரி) ( ரியாளுஸ்ஸாலிஹீன்:1368)

''மறுமை நாளின் சிரமங்களை விட்டும் அல்லாஹ் தன்னைக் காப்பாற்றிட விரும்புகின்றவர், (தம்மிடம் கடன் பெற்ற) ஏழைக்கு கால அவகாசம் அளிக்கட்டும்! அல்லது அவருக்கு விட்டுக் கொடுத்து (தள்ளுபடி செய்து) விடட்டும்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1369)

''ஒருவர் மக்களுக்கு கடன் வழங்குபவராக இருந்தார். அவர் தன் ஊழியரிடம், ''நீ கடன் பெற்று திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்படுபவரிடம் சென்றால் அவருடைய கடனை தள்ளுபடி செய்து விடு! இதனால் அல்லாஹ் நம்மை விட்டும் (குற்றத்தை) தள்ளுபடி செய்யக் கூடும்'' என்று கூறினார். (மரணத்திற்குபின்) அல்லாஹ்வை அவர் சந்தித்தபோது, அவரை விட்டும் அவரின் குற்றங்களை அல்லாஹ் தள்ளுபடி செய்து விட்டான் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1370 )

''உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் ஒருவரிடம் (மறுமை நாளில்) கேள்வி – கணக்கு கேட்கப்படும். அப்போது அவரிடம் நன்மை எதுவும் இருக்காது. ஆனால், அவர் மக்களிடம் கொடுக்கல் - வாங்கல் செய்து கொண்டு, வசதியாக வாழ்ந்து வந்தார். (அத்தோடு) துன்பப்படுவோருக்கு கடனை தள்ளுபடி செய்திட தன் ஊழியர்களுக்கு கட்டளையிட்டு இருந்தார். (இதன் காரணமாக) ''தள்ளுபடி செய்வதில் இவரை விட நானே அதிக தகுதி வாய்ந்தவன். அவரின் பாவங்களை தள்ளுபடி செய்யுங்கள் என அல்லாஹ் கூறுவான் என்று நபி(ஸல்) கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூமஸ்ஊத் அல்பத்ரீ (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1371 )

''அல்லாஹ் தன் அடியார்களில் ஒரு அடியாருக்கு செல்வத்தை வழங்கி இருந்தான். அவரிடம் (மறுமையில்) ''உலகில் என்ன செய்தாய்?'' என்று கேட்பான். அல்லாஹ்விடம் எவரும் எதையும் மறைக்க மாட்டார்கள். அவன், ''இறைவா! எனக்கு உன் செல்வத்தை வழங்கி இருந்தாய்.  அதன் மூலம் மக்களிடம் வியாபாரம் செய்து கொண்டிருந்தேன். தர்மம் வழங்குவது, என் குணத்தில் இருந்தது.

வசதியானவர்களிடம் இலகுவாக நடந்து கொண்டேன். துன்பப்பட்டவனுக்கு கால அவகாசம் அளித்தேன்!'' என்று கூறுவார். அப்போது அல்லாஹ், ''நான் உன்னை விட (விட்டுக் கொடுக்க) தகுதியானவன். என் அடியாரின் (பாவங்களை) தள்ளுபடி செய்யுங்கள்'' என்று கூறுவாhன்.

உக்பா இப்னு ஆமிர் (ரலி), அபூமஸ்ஊத் அன்சாரீ (ரலி) இருவரும் ''இவ்வாறே நபி(ஸல்) அவர்களிடமிருந்து நாங்கள் கேட்டோம்'' என்று கூறினர். (அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1372 )

''சிரமப்படும் கடனாளிக்கு அவகாசம் அளித்தால், அல்லது கடனை தள்ளுபடி செய்தால் அவருக்கு அல்லாஹ் மறுமை நாளில் தன் அர்ஷுக்கு கீழே நிழல் அளிப்பான். அந்நாளில் அவனது நிழலைத்தவிர வேறு நிழல் இருக்காது'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1373 )

''நபி(ஸல்) அவர்கள் ஓர் ஆண் ஒட்டகையை என்னிடம் விலைக்கு வாங்கினார்கள். அதற்கான கிரயத்தை (காசுகளை) நிறுத்துக் கொடுத்தார்கள். அப்போது சற்றுக் கூடுதலாக திருப்பித் தந்தார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1374 )

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்

அலாவுதீன் S.

3 கருத்துகள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

வெள்ளி மேடை தரும் வெற்றிப் பரிசு....
அலாவுதீன்(காக்காவின்) அற்புத விளக்கு...!
வெள்ளிக் கொடை...

sabeer.abushahruk சொன்னது…

மருந்து மட்டுமல்ல; மார்க்கம் விளங்கிய நம்பிக்கையாளர்களுக்கு இது விருந்தும்கூட!

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா!

sabeer.abushahruk சொன்னது…

மருந்து மட்டுமல்ல; மார்க்கம் விளங்கிய நம்பிக்கையாளர்களுக்கு இது விருந்தும்கூட!

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா!