Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

புகை நமக்கு பகை 5

அதிரைநிருபர் | July 31, 2010 | , , ,

" எந்த மனிதனுக்கு அவனுடைய தீய செயல் அலங்காரமாக்கப்பட்டிருக்கிறதோ, மேலும் அதனை அவன் நல்லதென்று                        கருதிக் கொண்டிருக்கின்றானோ (அந்த மனிதனின் வழிகேட்டிற்கு எல்லையேதும் உண்டா என்ன?)
திண்ணமாக, அல்லாஹ் தான் நாடுவோரை நெறி பிறழச் செய்கின்றான். மேலும், தான் நாடுவோரை நேர்வழியில் செலுத்துகின்றான்...". (அல்குர்ஆன்' 35:8)

மனிதனைப் படைத்த இறைவன் மாபெரும் கொடையாளி; தான் எழுதுகோலைக் கெர்ணடு (எழுதக்) கற்றுக் கொடுத்தான்; இன்னும், அவன் வாழ வேண்டிய வாழ்க்கை நெறியையும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு எது நன்மையளிக்க வல்லது, எது தீங்கிழைக்கக்கூடியது என்று பிரித்தறிவித்தான்; அதுமட்டுமா....!

அவ்வாழ்க்கை நெறியின் வரம்பிற்குட்பட்டு வாழ்வது சாத்தியமே என்பதை மனிதர்களைக் கொண்டே உதாரணம் காட்டி மெய்ப்பித்தான்.

ஆயினும், மனிதன் -"இறைநெறியை" புறந்தள்ளிவிட்டு தன் மனோ இச்சைக்கு அடிமைப்பட்டவனாக வாழத் துவங்கியதால், தவறான செய்கைகளுக்கும் நியாயம் கற்பிக்கவே முற்படுகிறான்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஆரம்ப மனிதராகிய ஆதமை படைத்து அவரிடம் ஷைத்தானாகிய இப்லீஸை குறித்து எச்சரிக்கை செய்கின்றான்.

"ஆதமே! நிச்சயமாக இவன் உமக்கும், உம்முடைய மனைவிக்கும் பகைவனாகவான்; ஆதலால், உங்களிருவரையும் இச்சுவனபதியிலிருந்து திட்டமாக வெளியேற்ற (இடந்) தர வேண்டாம்; இன்றேல் நீர் பெரும் இன்னலுக்குள்ளாவீர்.." (என்று கூறி எச்சரித்தோம்) (அல்குர்ஆன் 20:17)

ஆனால் ஷைத்தான் அவருக்கு (ஊசலாட்டத்தையும்) குழப்பத்தையும் உண்டாக்கி: "ஆதமே! நித்திய வாழ்வளிக்கும் விருட்சத்தையும், அழிவில்லாத அரசாங்கத்தையும் உமக்கு நான் அறிவித்துத் தரவா? என்று கேட்டான். பின்னர் (இப்லீஸின் ஆசைவார்த்தைப்படி) அவ்விருவரும் அ(ம்மரத்)தினின்று புசித்தனர்; உடனே அவ்விருவரின் வெட்கத்தலங்களும் வெளியாயின; ஆகவே அவ்விருவரும் சுவர்க்கத்துச் சோலையின் இலையைக் கொண்டு அவற்றை மறைத்துக் கொளள்ளலானார்கள்; இவ்வாறு ஆதம் தம்முடைய இறைவனுக்குமாறு செய்து, அதனால் வழி பிசகி விட்டார். (அல்குர்ஆன் 20:120: 121)

இவ்வாறக - "மனித வர்க்கத்தை வழி கெடுக்கம்" ஷைத்தானைக் குறித்து இறைவன் தனது திருமறையில் பல இடங்களில் மனித சமூகத்திற்கு எச்சரிக்கை செய்கின்றான். அதில், ஒரு சிலவற்றை மட்டும் இங்கு காண்போம்.

மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை ஒருபோதும் ஏமாற்றி விட வேண்டாம்; இன்னும் (ஷைத்தானாகிய) ஏமாற்றுபவன் உங்களை அல்லாஹ்வை விட்டும் ஏமாற்றி விட வேண்டாம். நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான். ஆகவே, நீங்களும் அவனைக் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள். அவன், (தன்னைப் பின் பற்றும்) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்புக்கு உரியவர்களாய் இருப்பதற்காகவேதான். (அல்குர்ஆன் 35:5,6)

ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; இன்னும் எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை, ஷைத்தான் மானக்கேடானவற்றையும், வெறுக்கத்தக்கவற்றையும், (செய்ய) நிச்சயமாக ஏவுவான்;....... (அல்குர்ஆன் 24:21)

விசுவாசிகளே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள். தவிர, (இதனைத் தடை செய்யும்) ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான விரோதியாவான். (அல்குர்ஆன் 2:208)

மனித வர்க்கத்தின் மீது ஷைத்தான் இவ்வளவு "பகைமை" பாராட்ட காரணம் என்னவென்று திருகுர்ஆனின் ஒளியில் சிறிது காண்போம்:

இறைவன் மலக்குகளிடம்: "ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, மனிதனை நிச்சயமாக நான் படைக்கப் போகிறேன்" என்றும், அவரை நான் செவ்வையாக உருவாக்கி, அவரில் என் ஆவியிலிருந்து ஊதியதும், ' அவருக்கு சிரம் பணியுங்கள்' என்றும் கூறினான்.

அவ்வாறே மலக்குகள் யாவரும் சிரம் பணிந்தார்கள் இப்லீஸைத் தவிர. அவன் சிரம் பணியாது விலகிக் கொண்டான்.

"இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடன் நீயும் சேராமல் (விலகி) இருந்தமைக்கு காரணம் என்ன?" என்று (இறைவன்) கேட்டான். அதற்கு இப்லீஸ் "ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, நீ படைத்துள்ள (ஒரு) மனிதனுக்கு நான் சிரம் பணிவதற்கில்லை!" என்ற கூறினான். "அவ்வாறாயின், நீ இங்கிருந்து வெளியேறிவிடு; நிச்சயமாக நீ விரட்டப்பட்டடவனாக இருக்கிறாய்."

நீ பெருமை கொள்வதற்கு இங்கு இடமில்லை; நிச்சயமாக நீ சிறுமை அடைந்தோரில் ஒருவனாகி விட்டாய்.

"மேலும், நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள் வரை உன் மீது சாபம் உண்டாவதாக!" என்று (இறைவன்) கூறினான். (அதற்கு)இப்லீஸ் ''என்னுடைய இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக!" என்று கேட்டான்.

"நிச்சயமாக, நீஅவசாகம் அளிக்கப்பட்டோரில் ஒருவனாவாய்,"

"குறிப்பிட்ட நேரத்தின் நாள் வரும வரையில்" - என்று அல்லாஹ் கூறினான். (அதற்கு இப்லீஸ்,) "என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டு விட்டதால்; நான் இவ்வுலகில் (வழி கேட்டை தரும் அனைத்தையும்) அவர்களுக்கு "அழகாகத் தோன்றும் படி " செய்து(அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழி கெடுத்து விடுவேன்". இன்னும், அவர்கள் அனைவரையும் வழி கெடுத்து விடுவேன்". இன்னும், அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன்.

"பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும், அவர்கள் பின்னும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்; ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களகாக் காணமாட்டாய்" (ஆயினும்) " அவர்களில் அந்தரங்க சுத்தியுள்ள (உன்னருள் பெற்ற) உன் நல்லடியார்களைத் தவிர" என்று கூறினான்.

(அதற்கு இறைவன்) "நிச்சயமாக என் அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமுமில்லை உன்னைப் பின்பற்றி வழிகெட்டவர்களைத் தவிர" (இன்னும்) நிச்சயமாக, (உன்னைப் பின்பற்றும்) அனைவருக்கும் நரகமே வாக்களிக்கப்பட்ட இடமாகும். அதற்கு ஏழு வாசல்கள் உண்டு; அவ்வாசல்களில் ஒவ்வொன்றும் பங்கிடப்பட்ட (தனித்தனிப்) பிரிவினருக்குரியதாகும் என்று (இறைவன்) கூறினான்.  (அல்குர்ஆன் 15:28-44, 7:11018)

மேற்கானும் உரையாடலை மீண்டும் ஒருமுறை பார்வையிடுங்கள். முதலாவதாக: இறைவன் (ஆரம்ப மனிதராகிய) ஆதமைப்படைத்து அவருக்கு சிரம் பணிய கட்டளையிடுகின்றான். ஆனால் இப்லீஸ், அவருக்கு சிரம்பணிய மறுத்து இறை 'சாபத்திற்காளாகிறான்.'

2வதாக : இறந்தவர்களை எழுப்பப்படும் நாள் வரை அவகாசம் கேட்டு அதனை (இறைவனிடமிருந்து) பெறுகின்றான்.

3வதாக : (இப்லீஸ்) தான் வழிகேட்டில் விடப்பட்டுவிட்டதால் (அதற்கு காரணமான மனிதனை) தான் இவ்வுலகில் (வழிகேட்டைத் தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்களனைவரையும் வழிகெடுத்து விடுவதாக இறைவனிடமே சபதம் செய்கினறான்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஷைத்தானின் தாக்குதலிலிருந்து மீள்வதற்கான வழியை இறைவேதம் பின்வருமாறு எடுத்துரைக்கிறது.

"ஷைத்தான் ஏதாவதொரு (தவறான) எண்ணத்தை உம் மனத்தில் ஊசலாடச் செய்து (தவறு செய்ய உம்மைத்) தூண்டினால், அப்போது அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! மெய்யாகவே அவன் செவியேற்பவனாகவும், (யாவற்றையும் நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான்."

நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுகிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானிலிருந்து தவறான எண்ணம் ஊசலாடினால், அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கின்றார்கள். அவர்கள் திடிரென விழிப்படைந்து (ஷைத்தானின் சூழ்ச்சியைக்) காண்கிறார்கள்.... (அல்குர்ஆன் 7:200, 201)

இதுவரை எடுத்து எழுதப்பட்ட வசனங்கள் மூலமாக ஷைத்தானைக் குறித்து ஓரளவு விளங்கியிருப்போம். இனி,

ஒரு மனிதன் இஸ்லாத்தை முழுமையகா முறையாகப் பேணி வாழ எத்தனிக்கையில் அனைத்து செய்கைகளையும் சிந்தித்து சீர்தூக்கிப் பார்த்து செயலாற்ற வேண்டியுள்ளது. இல்லையேல் - மனித விரோதியான ஷைத்தான் நிச்சயமாக வழி கெடுத்து விடுவான். பொதுவாக மனிதன் சிந்தனை சக்தி நிறைந்தவன், சிந்திக்க கூடியவன்; ஆயினும், அனைவரும் சிந்தித்துதான் செயல்படுகிறார்கள் என்று கூற இயலாது. இங்கே ஒரு விஷயத்தை நாம் நன்றாக மனதில் நிறுத்த வேண்டும். அதாவது: ஒவ்வொரு செய்கைகளையும் சிந்தித்து செயலாற்றுகையில் அது தீமைகளுடன் (ஷைத்தானுடன்) கடுமையாகப் போராடும் வாழ்வாகவே அமையும்; எனினும் அவ்வாறு வாழ முயற்சித்து வெற்றி காணும் வாழ்க்கையில் தான் இம்மை, மறுமை மேன்மை கிட்டும்; மேலும் சமூகப்பண்பாட்டை வளப்பதாலும் பிறர் நலனில் அக்கறை கொள்வதிலும் ஒரு பற்றுதலை ஏற்படுத்தும்.

இனி பீடி, சிசரெட், புகையிலை, பான்மசாலா ( பான் பராக்....etc) ரகங்களை கீழ்வரும் தலைப்புகளில் இஸ்லாத்தின் பார்வையில் சீர்தூக்கிப் பார்ப்போம்:-

1. உடல நலம், 2. பெருமை, 3. பொய்யுரைத்தலை், 4. அமானிதம், 5. பிறருக்கு தீங்கிழைத்தல் , 6. வீண்' விரயம், 7. வியாபாரம், 8. அழகிய சொல்.

1.உடல் நலம்:
சிகரெட் பாக்கெட்டின் அட்டையில் அரசு ஓர் சட்டபூர்வமான எச்சரிக்கை விடுகின்றது. "CIGARATTE SMOKING IS INJURIOUS TO HEALTH" சிகரெட் புகைத்தல் உடல் நலத்திற்கு தீங்கானது."

உடல் நலத்திற்கு பாதகம் விளைவிக்கக்கூடிய உணவுகளிலிருந்தும், செயல்களிலிருந்தும் தவிர்ந்து நடக்க வேண்டியதை வலியுறுத்தும் விதமாக பின் வரும் இறை வசனங்கள் அமைந்திருப்பதை காணலாம்.

"நல்ல பொருள்களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள்; நல்ல அமல்களைச் செய்யுங்கள்"... (அல்குர்ஆன் 2:168, 172, 23:51, 5:88)

"(மேலும்) உங்களை நீங்களே ஆபத்திற்குள்ளாக்கிக் கொள்ளாதீர்கள்"... (அல்குர்ஆன் 2:195)

இவ்வாறு எடுத்துரைத்த போதும், அதனை ஏற்க மறுத்து மீண்டும் தவறான செய்கைகளைத் தொடர்ந்து செய்பவர்களைப் பற்றி இறை வசனம் ஒன்று இவ்வாறு இடித்துரைக்கிறது.

"நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம். அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்க்க மாட்டர்கள்; அவர்களுக்குக் காதுகள் உண்டு; ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனைகளைக்) கேட்க மாட்டார்கள். இத்தகையோர் கால்நடைகளை போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் கேடு கெட்டவர்கள். இவர்கள்தாம் (நம் வசனங்களை) அலட்சியம் செய்்தவர்கள்." (அல்குர்ஆன் 7:179)

மனித உடம்பில், 'ஜீன்கள்' எனப்படும் வம்சாவழி மரபு செல்கள் 50,000க்கும் அதிகமாக உள்ளன. இவை தான் தமது உடம்பின் ஒவ்வொரு அமைப்பையும் (நோய் எதிர்ப்புத் திறன் உட்பட) தீர்மானிக்கின்றன. இவற்றில் நூற்றக்கும் அதிகமான ஜின்களின் செயல்கள் மாறுபடும் போதுதான் அது புற்றுநோயாக (கேன்சராக) உருவெடுக்கிறது. பிறகு தன்னிச்சையாக செயல்பட்டு வெகுவேகமாகப் பரவும். இவை காரிஸீனோஜீன்கள் (Caricinogens) எனப்படுகின்றன.

புகையிலையில் உள்ள ஒருவகை நச்சசுப் பொருள்தான் இந்த காரிஸீனோஜீன்களை தூண்டி விடுகின்றன. பல வருட ஆராய்ச்சிக்குப் பிறகு புற்று நோய் வருவதற்கான முக்கிய காரணங்களை மருத்துவர்கள் பட்டியலிட்டிருக்கிறார்கள். அவற்றில் புகையிலையும் முக்கிய பங்கு வகிக்கிறது.

புற்று நோயால் பாதிக்கப்படுபவர்களில் 30% சதவிகிதத்தினர் புகைபிடிப்பவரும் 44% சதவிகிதத்தினர் மது அருந்திக் கொண்டு புகைப்பிடிப்பவர்களும் அடங்குவர்.

புகைப்பழக்கம், மூக்குப் பொடி, புகையிலை போடுதல், மது அருந்துதல், பான்பராக் உபயோகித்தல் ஆகிய தீய பழக்கங்களினால் உடல் நலம் பாதிக்கப்படுகையில் உடலின் முக்கிய உறுப்புகளான சிறுநீரகம், நுரையீரல், இருதயம், தொண்டை ஆகிய பகுதிகள் பாதிக்கப்படுவதுடன்; ஆஸ்த்தமா, நரம்புத் தளர்ச்சி, சிறு குடல் வீக்கம், மூளை வரட்சி உள்ளிட்ட பல நோய்களுக்கும் காரணமாகிறது.

ஓர் உதாரணம்: 2 அவுன்ஸ் நீரில் ஒரு சிகரெட்டை ஊறவைத்து "அந்த நீரை" ஒரு நாயின் உடலுக்குள் ஊசி மூலம் செலுத்தினால் சற்று நேரத்தில் அந்த நாய் இறந்து விடும் என்கின்ற அளவிற்கு சிகரெட்டில் நச்சுத்தன்மை அமைந்திருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

மேற்கண்ட தவறான பழக்க வழக்கத்தால், குறைவாகவோ, அதிகமாகவோ பாதிக்கப்பட்டவர்களை; அவர்களது சுற்றத்தாரோ அல்லது மருத்துவரோ மேற்படி தீய பழக்கத்தை விட்டுவிடும்படி ஆலோசனை கூறிய போதும் அதனை விட்டு மீள்பவர்கள் வெகு சொற்பமே!

இறைவசனம்: " நம்மிடமிருந்து வேதனை வந்த போது அவர்கள் பணிந்திருக்க வேண்டாமா? அதற்கு மாறாக அவர்களுடைய இருதயங்கள் இறுகிவிட்டன; அவர்கள் செய்து கொண்டிருந்ததையே, ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காட்டி விட்டான்."(அல்குர்ஆன் 6:43)

2.பெருமை:
பெருமையடித்தல் ஷைத்தானின் குணம் என்பதாக குர்ஆன்(7:13) கூறுகிறது.

இறைவனை - இறை வசனங்களை - இறை "கட்டளைகளை" புறக்கணிப்பவர்களை மறுமையில் (நரக) நெருப்பின் முன் கொண்டு வரப்படும். (அப்போது இறைவன் கூறுவான்)

"உங்களின் உலக வாழ்க்கையின் போது உங்களுக்குக் கிடைத்திருந்த மணமான பொருட்களையெல்லாம், வீண் செலவு செய்து, (உலக) இன்பம் தேடினீர்கள்," ஆகவே நீங்கள் பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டு, வரம்பு மீறி (வாழ்ந்து) கொண்டும் இருந்த காரணத்தால், இழிவு தரும் வேதனையை இன்று நீங்கள் கூலியாகக் கொடுக்கப்படுகிறீர்கள்." (அல்குர்ஆன் 46:20)

'பெரிய மனிதர்கள் என்று மக்களால் கருதப்படுபவர்களில் பலருக்கு இந்த புகைப் பழக்கம் ஒரு 'பெருமை'யான பந்தாவான - செயலாகவே உள்ளது.

நபி(ஸல்) அவர்கள்: "யார் மனதில் அணுவளவு பெருமை இருந்ததோ அவர் சுவனம் புக மாட்டார்" என்று கூறியதாக அபூஹுரைரா(ரழி) அறிவிக்கக் கூடிய ஹதீஸ் முஸ்லிம் நூலில் இடம் பெற்றுள்ளது. மேலும்,

"நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை." (அல்குர்ஆன் 4:36)

"அகப்ெபருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை." (அல்குர்ஆன் 31:18) என்று பெருமை தெளிவாகவே எச்சரிக்கப்பட்டடுள்ளது.

பெரும்பாலோரிடம் 'புகைப்பழக்கம்' எந்த பருவத்தில் எந்த நோக்கத்தில், எப்படி - ஆரம்பமாகிறது என்று ஆராய்கையில் - பருவம்: Teenage (என்று சொல்லக்கூடிய 13 to 19குட்பட்ட) வயதில் தான் பெரும்பாலோரிடம் இப்பழக்கம் ஆரம்பமாகிறது.

நோக்கம்: வெட்டிக் கும்பல் என அழைக்கப்படுகின்ற ஊர் சுற்றும் சோம்பேறிகளிடம் 'பொழுது போக்காகவும்; மாணவப் பருவத்தினருக்கு 'ஜாலி'யாகவும்; ரெளடிகளிடம் "பந்தா'வாகவும், ஏனையோருக்கு அலங்காரமான, "பெருமையான" செயலாகவுமே இப்புகைப் பழக்கம் திகழ்கிறது என்றால் அது மிகையில்லை.

காரணம்: இவர்களிடையே இப்பழக்கம் உருவாக காரணம் பெரும்பாலும், சக தோழர்களும், அஃதன்றி பெற்றோர், ஆசிரியர், முதலாளி ஆகியவர்களுமே எனலாம்.

இந்த (டீன் ஏஜ்) வயதை 'இள இரத்தம்" 'இளங்கன்று பயமறியாது' என்றெல்லாம் கூறுவார்கள். இவ்வயதில் சிந்திக்கும் திறன் இருந்தும் - புகைப்பது தவறு என்று உணர்ந்தாலும் மன இச்சையினால 'தவறை' - யாரும் பொருட்படுத்துவதில்லை. மேலும் நம் தகப்பனாரே குடிக்கிறார். நாம் குடித்தாலென்ன, நமது ஆசிரியர் அல்லது முதலாளி சிகரெட் பிடிப்பதைப் போன்று நாமும் பிடிக்க வேண்டும் ன்று மனதில் நினைத்து திரை மறைவில் இப்பழக்கம் உருவாகி பின்பு வெளிச்சத்திற்கு வந்து பிறகு நிறுத்த முடியாமல் 'நிலைத்து விடுகிறது.'

3.பொய்யுரைத்தல்:
பொடி போடுபவர்கள், புகைப்பிடிப்பவர்கள், புகையிலை போடுபவர்கள், மது அருந்துபவர்கள் ஆகியோரிடம் மேற்படி செயல்களை விட்டு விடும்படி அல்லது விடுவதற்கான முயற்சியை மேற்கொள்ளும்படி அறிவுருத்தப்பட்டால்; அறிவுறுத்துவோர், தங்கள் பெற்றோராயினும், அல்லது மனைவியாயினும், அல்லது தங்கள் மேலதிகாரியாயினும் அல்லது தோழர்களாயினும் ஆக யாராக இருந்தாலும் அவர்களிடம் இவர்கள் முயற்சிப்பதாகவோ அல்லது விட்டு விடுகிறேன் என்பதற்காவோ மிக சர்வ சாதாரணமாக வாக்குத்தருவார்கள். ஆயினும் தங்கள் பழக்கங்களை விட்டொழிக்க மாட்டார்கள். (ஒரு சிலரைத் தவிர), மேலும், மற்றவர்கள் அறியா வண்ணம் தங்கள் பழக்கத்தை தொடந்தே வருவார்கள். (சிலர் பகிரங்கமாகவே)

அல்லாஹ் கூறுகின்றான்: "வாக்குறுதி செய்தி விட்டு மாறு செய்யாதீர்கள்." (அல்குர்ஆன் 17:34) மேலும், "பொய் சொல்பவர்கள் அழிந்தே போவார்கள். அவர்கள் எத்தகையோரென்றால் மடமையினால் மறதியில் இருக்கிறார்கள்." (அல்குர்ஆன் 51:10,11)

இன்னும் நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: "நான்கு விஷயங்கள் யாரிடம் இருந்ததோ அவர் கலப்பற்ற நயவஞ்சகராகிவிட்டார். அவற்றில் ஏதாவது ஒன்று யாரிடம் இருக்குமோ, அவர் அதை விட்டு விடும் வரையில் நயவஞ்சகத்தின் ஒரு பகுதி அவரிடம் இருக்கும்."

1."அவர் பேசினால் பொய்யுரைப்பார். 2. ஒப்பந்தம் செய்தால் மோசடி செய்வார். 3. வாக்குறுதி கொடுத்தால் மீறி விடுவார். 4.தர்க்கம் செய்தால் உண்மையை மறைக்க முற்படுவார்" (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) நூல்: புகாரீ, முஸ்லிம்

"ஒரு விசுவாசி கோழையாக இருப்பானா? என்று நபி(ஸல்) அவர்களிடத்தில் கேட்கப்பட்டது; அவர்கள் ஆம்!" என்றார்கள். பிறகு, கருமியாக இருக்க முடியுமா? என்று கேட்கப்பட்டது. 'ஆம்' என்றனர். பிறகு "பொய்யனாக இருக்க முடியுமா? என்று கேட்கப்பட்டதற்கு இல்லை என்று பதில் சொன்னார்கள்." (அறிவிப்பாளர் : சஃப்வான் பின் ஸுலைம்(ரழி),நூல்: பைஹகீ

பொய்யுரைப்பவன் விசுவாசியாக இருக்க முடியாது என்பதை இந்த ஹதீதுகள் மூலம் அறியலாம்.

4.அமானிதம் :
மனிதனுக்கு இயற்கையாக அமைந்திருக்கும் உடல் அங்கங்களும் பிறகு கிடைக்கக் கூடிய செல்வங்களும் இறைவனால், அவனுக்கு அருட் கொடையாக வழங்கப்பட்ட அமானிதப் பொருட்களாகும்.

அவற்றை இறை நெறிக்குட்பட்டே பயன்படுத்திட வேண்டும். ஏனெனில், உடல் அங்கங்களை எம்முறையில் செலவழித்தோம் என்பது பற்றி நிச்சயமாக கேள்வி கணக்கு கேட்கப்படும்.

இன்னும், விசுவாசிகளின் தன்மைகளைப் பற்றி இறை'மறை' கூறுகையில்;

அவர்கள்...., வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள். இன்னும், அவர்கள் தங்கள் (இடம் ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருட்களையும், தங்கள் வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள்....., என்தகா எடுத்தியம்புகிறது. (அல்குர்ஆன் 23:3,8)

மேலும், (நபியே! ஒரு நாளை நீர் அவர்களுக்கு ஞாபகமுட்டும்:) அந்நாளில் அவர்களுடைய நாவுகளும் அவர்களுடைய கைகளும் அவர்களுடைய கால்களும் அவர்களுக்கு விரோதமாக, அவர்கள் செய்தவைகளைப் பற்றிச் சாட்சியம் கூறும்.(என்றும்) (அல்குர்ஆன் 8:27)

ஒவ்வொரு மனிதனுக்குமுள்ள பொறுப்புகளைப் பற்றி நபி(ஸல்) இவ்வாறு கூறுகிறார்கள்: "நீங்கள் ஒவ்வொருவரும் கண்காணிப்பாளராகவும் அது குறித்து அல்லாஹ்விடம் பதில் சொல்லக் கடமைப்பட்டவராகவும் இருக்கிறீர்கள்! ஆட்சித் தலைவர் கண்காணிப்பாளராக இருக்கிறார். (மறுமை நாளில்) அவருடைய குடி மக்கள் விஷயத்தில் அவரிடம் கேள்வி கணக்கு கேட்கப்படும். (மது அவர்களை 'குடி' மக்களாக ஆக்கியது பற்றி; விபச்சார விடுதி, ஆபாச சினிமா ஆகியவற்றை அனுமதிப்பது கொண்டு விபச்சாரகர்கள் பெறுகியது பற்றி; லாட்டரி,சூதாட்ட கிளப், (குதிரை) ரேஸ் போன்றவற்றின் மூலம் சூதாடி 'மக்களை' உருவாக்கியது பற்றி, இறைவனால் போதிக்கப்டாத பிரிவுக் பெயர்களைக் குறித்து பதில் சொல்லக் கடமைப்பட்டவரா இருக்கிறார். ஒவ்வொரு மனிதரும் அவரவருடைய மனைவி மக்களை நிர்வகிகப்பவராகவும், பதில் சொல்லக் கடமைப் பட்டவராகவும் இருக்கிறார். மனைவி, அவளது கணவரின் வீட்டைக் கண்காணிப்பவளாகவும் (வீட்டு நிர்வாகம் சம்பந்தமாக) பதில் சொல்லக் கடமைப்பட்டவளாகவும் இருக்கிறாள். ஓர் ஊழியர் அவருடைய எஜமானரின் பொருளைக் கண்காணிப்பவராகவும் (அல்லாஹ்விடத்தில் அதுபற்றிக்) கணக்கு கொடுக்க வேண்டிய பொறுப்புடையவராகவும் இருக்கிறார். எச்சரிக்கையாக இருங்கள்! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளராகவும் பதில் சொல்லக் கடமைப்பட்டவராகவும் இருக்கிறீர்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரழி) நூல்: புகாரி.

5. பிறருக்கு தீங்கிழைத்தல்:
"ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் முஸ்லிம்களில் மிகச் சிறந்தவர் யார்? எனக் கேட்டார். அதற்கு பிற முஸ்லிம்கள் எவரது நாவு, கரம் ஆகியவற்றின் தீமையிலிருந்து பாதுகாப்பு பெற்றார்களோ, அவர்தான் (சிறந்த) முஸ்லிம் எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்:அப்துல்லாஹ் இப்ன அம்ரு, இப்னு அல் ஆஸ்(ரழி), நூல்: முஸ்லிம்)

பீடி, சிகரெட் போன்ற புகைப் பழக்கமுள்ள வர்களின் வாயிலிருந்து கிளம்பும் நாற்றம் எல்லோரையும் வெறுப்படையச் செய்கிறது. அது பிறருக்கு பெரும் தொல்லையைத் தருவதுடன் தொழுகையின் போது பக்கத்திலிருப்பவருக்கு பெரும் கஷ்டத்தை உண்டாக்குகிறது. மூக்கு பொடி உபயோகமும் இப்படித்தான். அதன் கழிவுகள் பள்ளிவாயிலின் பாய்களிலும், விரிப்பிலும் படிந்து தொழுகிறவர்களுக்கு இடையூறை ஏற்படுத்துகின்றது.

உமர் இப்னு கத்தாப்(ரழி) அவர்கள் நிகழ்த்திய ஜும்ஆ பிரசங்கித்தல்:

ஜனங்களே! நிச்சயமாக நீங்கள் இரு செடிகளை உண்ணுகின்றீர்கள். அவ்விரண்டையும் கெட்டதாகவே தவிர நான் காணவில்லை. (அது) இந்த வெங்காயமும், பூண்டும்தான் எனக் கூறினார்கள். நிச்சயமாக நான்; "அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், பள்ளியில்(எந்த) மனிதரிடத்திலாவது இவ்விரண்டின் வாடகையை கண்டு விட்டால், அவரை வெளியேற்ற கட்டளையிடுவதை கண்டேன்" அவ்விரண்டையும் யாரேனும் உண்டால் முதலில் சமைத்து அதன் நாற்றத்தை நீக்கவும் என்றனர். அறிவிப்பவர் : ஜாபிர்(ரழி), நூல்: புகாரீ, முஸ்லிம்.

புகைப் பழக்கத்தால் உண்டாகும் துர்நாற்றம் பூண்டு, வெங்காயம் ஆகியவற்றின் நாற்றத்தை விட அருவெருக்கத்தக்கது ஆகும். மேலும் சிறிது நேரமே வாடை இருக்கக் கூடிய பச்சை வெங்காத்தையும் பூண்டையும் சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு வரக்கூடாது என்று தடுக்கப்பட்டுள்ளது என்றால் நிரந்நதரமாக இருக்கக்கூடிய இந்நாற்றத்தின் நிலை என்ன?

6 வீண் விரயம் ரூ வியாபாரம் :
....வீண் விரயம் செய்யாதீர்கள். நிச்சயமாக - அல்லாஹ். வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 6:141)

"நிச்சயமாக வீண் விரயஞ்செய்பவர்கள் ஷைத்தானின் - சகோதரர்களாவார்கள்" (அல்குர்ஆன் 17:27)

"எவனொருவன் அர்ரஹ்மானின் நல்லுபதேசத்தை விட்டும் கண்ணை மூடிக்கொள்வானோ - அவனுக்கு, நாம் ஒரு ஷைத்தானை ஏற்படுத்தி விடுகிறோம்; அவன் இவனது நெருங்கிய நண்பனாகி விடுகின்றனர்." (அல்குர்ஆன் 43:36)

எவன் - அவனை (ஷைத்தானை)ச் சிநேகிதனாக எடுத்துக் கொள்கிறானோ, அவனை அவன் நிச்சயமாக வழிகெடுத்துக் கொடிய வேதனையின் பால் செலுத்திவிடுவான் என்று விதிக்கப்பட்டு விட்டது. (அல்குர்ஆன் 22:4)

மனிதன் தன் நண்பனின் மார்க்கத்தைக் கடைப்பிடிப்பவனாக இருக்கிறான். எனவே உங்களில் எவர், எவரை நண்பர்களாக ஆக்கிக் கொள்கின்றீர்கள் என்பதை கவனிக்கவும். (நபி மொழி) அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி), நூல்: அபூதாவூத், திர்மிதி.

'இறைவன் - உங்களுக்கு வழங்கிய அருட்கொடைகளில் உங்கள் தேவை போக உபரியானவற்றை வீணே அழித்து விடாமல்:

"பந்துக்களுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் அவர்களுடைய பாத்தியதைகளகை கொடுத்து வரவும்." (செல்வத்தை) அளவு கடந்து வீண் செல்வு செய்ய வேண்டாம் என் குர்ஆனில் எச்சரிக்கின்றான். (அல்குர்ஆன் 17:26)

7. வியாபார ரீதியில் வீண் விரையம்:
25 பீடிகள் கொண்ட கட்டின் விலை ரூ. 2முதல் 3.ரூ.வரையும் 10 சிகரெட் கொண்ட பாக்கெட் ஒன்றின் விலை ரூ.1.50 முதல் ரூ.30.00 வரையும் உள்ளது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் சிகரெட் (திருச்சியில்) மட்டும் நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாயையும் தாண்டுவதாக ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.

தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் மட்டும் ஒரு நாளைய சிகரெட் விற்பனை. கோல்டுகிங், வில்ஸ் ஃபில்ட்டர்,கோல்டு பில்ட்டர், சிசர், கோல்டு ப்ளெய்ன், பெர்க்கிலி. கிளாசிக், இந்தியன் கிங்ஸ் முதலிய சிகரெட் வகைகளில் மொத்த விற்பனை சுமார் 5 கோடி ரூபாய்.

இதில், மிகப் பிரபல்யமான நிறுவனம் ஒன்று திருச்சி மாவட்டத்தில் மட்டும் வாரம் 400 மூட்டை வரை சப்ளை செய்கிறது. (சுமார் 30,000 பீடிகள் கொண்டது ஒரு மூடை). மற்றொரு கம்பெனியின் அன்றாட தயாரிப்பு மட்டும் 2 கோடி (பீடி)யைத் தாண்டுகிறது.

இன்றைய சூழ்நிலையில் வருந்தத்தக்கதொரு விஷயம் என்னவெனில் அதிகமான பீடி தயாரிப்பாளர்கள் - முஸ்லிம்களாய் இருப்பதுதான் அல்லது, முஸ்லிம்கள் என்று தங்களைக் கூறிக் கொண்டிருப்பதுதான்.மேலும், புகையிலை ரகங்களிலும் முன்னணியில் உள்ளனர்.

காரணம் யாதெனில் :
           1. ஹலால்(ஆகுமானதும்) ஹராம் (தடுக்ககப்பட்டதும்) முறையாக அறிந்து கொள்ளாமை.

           2. தவறெனத் தெரிந்தும் சொகுசான வாழ்க்கை வாழ பணம் சேகரிக்கும் முயற்சியில் (மனோ இச்சைக்கு அடிமைப்பட்டு) ஏற்படுத்தி கொண்ட எளிய வழி (மார்க்கம்).

           3.இறையச்சம் இல்லாமை.

முறையாக பொருளீட்டுவதைக் குறித்து அநேக இறைவசனங்களும், நபிமொழியும் இருக்கவே செய்கிறது. பொருளீட்டுவதில் இறைவனுக்கு அஞ்சி நடப்பதின் அவசியத்தை பின் வரும் வசனத்தின் மூலம் காணலாம்.

செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை) விட்டும் பராக்காக்கி விட்டது. நீங்கள் கப்ருகளைச் சந்திக்கும் வரை. அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். அவ்வாறல்ல -மெய்யான அறிவைக் கொண்டு அறிந்திருப்பீர்களேயானால் (செல்வத்தைப் பெருக்கும் அவ்வாசை உங்களை திசை திருப்பியிராது). நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள். பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள்.

பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்து) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் (கேள்வி) கேட்கப்படுவீர்கள். (அல்குர்ஆன் 102:1-3,5-8)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : "மக்கள் மீது ஒரு காலம் வரும்; (அப்பொழுது) மனிதன் அக்காலத்தவரிடமிருந்து தான் அடையும் எதனையும் ஹலாலானதா அல்லது ஹராமானதா என்பதைப் பொருட்படுத்த மாட்டான்." (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி),நூல்: புகாரீ, நஸயீ)

உண்மையில் இந்த நாட்டில் -இறைவனால் தடுக்கப்பட்ட வட்டியை 'முஸ்லிம்கள்' - என்று தங்களை கூறிக் கொள்ளும் ஒரு சிலர் (தொழிலாக) செய்துதான் வருகிறார்கள். ஆனால் அல்லாஹ் ரப்புல் ஆலமீன். வட்டியை மட்டும் தடை செய்யாமல் இருந்திருந்தால் இன்று முஸ்லிம்களில் அநேகர் பெரும் செல்வந்தர்களாய் ஆகி இருப்பார்கள். அது போன்று மதுவை விற்கலாம் என்று இறைவன் அனுமதித்திருந்தால் பெரும்பான்மையான முஸ்லிம்கள் கோடீஸ்வரர்களாகியிருப்பார்கள். இன்னும், அது போன்று சூதாட்டம் இறைவனால் தடுக்கப்படாமல் இருந்திருந்தால் இன்று வியாபாரம் செய்யக் கூடிய அதிகமான முஸ்லிம்கள் லாட்டரி சீட்டு விற்பனை செய்து, பல சூதாட்ட கிளப்களை நடத்தி லட்சாதிபதிகளாக திகழ்வார்கள். அது போன்று விபச்சாரத்தின் பக்கம் மக்களை திசை திருப்பக் கூடிய 'சினிமா'-க்களை இறைவன் தடை செய்யவில்லையெனில் நிறைய பட அதிபர்களும், ஸ்டார் ஹோட்டல் உரிமையாளர்களும், அதன் வழியாய் குபேரர்களாகவும் முஸ்லிம்களே முன்னணியில் இருப்பார்கள். ஆயினும் இவையாவும் இவ்வுலக வாழ்க்கையின் அற்ப இன்பங்களே!.... மேற்சொன்ன யாவும் இறைவனால் தடை செய்யப்பட்டதாலேயே நாட்டில் உண்மையான முஸ்லிம்கள் பெரும்பாலும் ஏழ்மையாகவும், நடுத்தரமான வாழ்வும் வாழ்ந்து வருகிறார்கள்.

வல்ல ரஹ்மான் நம் சமுதாய மக்கள் அனைவரையும் தவறான - இழிவான தொழில்களை விட்டும், வீண் விரயங்களும் துணை போவதை விட்டும் மாற்றி வேறு பல, நல்ல பலனுள்ள தொழில்களுக்கு அதிபர்களாக்கி வைப்பானாக! ஆமீன்! ஆமீன்!

8.அழகிய செயல்...!
மனித வாழ்க்கையின் பயணம் இப்படித் தொடங்குகிறது. முதலில் குழந்தைப்பருவம். பிறகு மாணவப் பருவம். அதன் பின் வாலிபம். கடைசியில் முதுமை.

குழந்தைகளுக்கு யாரும் இத்தகைய பழக்கத்தை கற்றுத் தருவதில்லை. மேலும் சிறு வயதில் யாருக்கும் இத்தகைய (புகை) பழக்கம் இருக்கவும் முடியாது. மாணவப் பருவத்தையும், வாலிபத்தையும் கடந்து முதுமையடைந்து விட்டவர்களிடம் (ஏற்கனவே இருந்தாலேயொழிய) புதிதாக இப்பழக்கம் உருவாவது மிகமிக அபூர்வம். எனவே இப்பழக்கம் ஒரு மனிதனிடம் உருவாகக்கூடிய கால கட்டமாக மாணவப் பருவத்தையோ அல்லது வாலிபப் பருவத்தையோ தான் கருத முடியும். ஒரு (நல்ல) மாணவரின் தந்தையிடம் ஆசிரியர் கூறுகிறார்: பையனை கொஞ்சம் கண்டித்து வையுங்கள் சேர்க்கைகள் சரியில்லை, கூடாத சகவாசத்தால் தவறான பழக்கங்களெல்லாம்....என்று.

ஒரு மாணவனிடம் இத்தகைய பழக்கம் காணப்படின் ஆசிரியரும் பெற்றோரும் அவனைக் கண்டிக்கவே செய்வார்கள். இதுவே நடைமுறை. கண்டிக்கத்தக்கதொரு செயல். அழகிய செயலா? அருவருக்கத்தக்க செயலா?

அன்றாடம் உத்யோகம் முடிந்து இல்லம் திரும்பும் யாரும் மனைவி மக்களுக்கு வாங்கிக் செல்லக் கூடிய (திண்பண்ட) பொருட்களில் காரம், பிஸ்கட், மிட்டாய், கேக் வகைகளைப் போன்று சிகரெட், பீடி வகைகளை வாங்கிச் செல்ல முன் வருவார்களா? ஒருக்காலும் முன்வர மாட்டார்கள். காரணம் அதன் தீமையை உணர்ந்திருப்பது தான். (மாறாக அது, தீமை இல்லை எனக் கூறுபவர்கள் தன் இல்லத்தாருக்கு தலைக்கு இரண்டு என்று வாங்கி தர முன் வருவார்களா?....

ஒரு மாணவன் தன் ஆசிரியரின் முன்போ அல்லது ஒரு தொண்டன் தன் தலைவரின் முன்போ அல்லது ஒரு மகன் தன் தந்தையின் முன்போ (சாதாரணமாக) உண்ணுவதையும் - பருகுவதையும் யாரும் தவறாகக் கருதமாட்டார்கள். ஆயினும் அவர்களின் முன்ப புகை பிடித்தலை நிச்சயமாக தவறாகவே கருதுவார்கள். காரணம் என்ன....!?

இது ஒரு முறைகேடான கண்ணியக் குறைவான செயல் என்பதனால் தானே! அது மட்டுமன்று. இன்னும், "பார் அவனுக்கு எவ்வளவு திமிர்....!" யார் முன்னால் எப்படி நடந்து கொள்கின்றான்!"

"ரொம்ப கொழுப்பு....." "வேறொன்றுமில்லை. எல்லாம் பணத்திமிர்...." என்றெல்லாம்....'ஏசுவதை" சாதாரணமாகவே நாம் கேட்கலாம்.... ஆக இவ்வாறெல்லாம் உள்ள புகைப் பழக்கம் மனிதனுக்கு தீங்கிழைத்தாலும் வாலிபப் பருவத்தில் அவனுக்கு அழகானதொரு செயலாகவே தோன்றுகிறது. இன்னும் இப்பருவத்தில் பெண்களை கேலி கிண்டல் செய்வதும், (அவர்களை) ரசிப்பதும் நண்பர்களுடன் 'ஜாலி'யாக மேற்சொன்னவைகளை செய்வதும் 'ஊர்' சுற்றுவதும் பழக்கமாகி பிறகு இதில் சில 'வழக்கமாக' - நிலைத்து விடுகிறது.

நிறைவாக ஒரு சில விஷயங்கள்.....

உலக வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்: "நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும், மேலும் உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்; பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்...., (எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையான வேதனையுண்டு; (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பம், அவன் பொருத்தமும் உண்டு - ஆகவே, 'இவ்வுலக வாழ்க்கை' - ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை. (அல்குர்ஆன் 57:20)

(முஃமின்களைப் பற்றி அல்குர்ஆனில் அத்தியாயம் 23/1-9, 40-ல் பார்க்க) ஹலால், ஹராம்:

"என் இறைவன் ஹராம் எனத் தடுத்திருப்பவையெல்லாம், வெளிப்படையான அல்லது அந்தரங்கமான, மானக்கேடான செயல்கள்; பாவங்கள்;...., (ஆகிய இவையே என்று நபியே!) நீர் கூறுவீராக:" அல்குர்ஆன் 7:33)

இறை வசனங்களை (சிந்திக்காமல்) விட்டு மனோ இச்சையை பின்பற்றாதீர்: "எவர் தம் இறைவனின் தெளிவான பாதையில் இருக்கிறாரோ அவர் என்னுடைய செயலின் தீமை அவனுக்கு அழகாகக் காண்பிக்கப்ட்டுள்ளதோ, இன்னும், எவர்கள் தம் மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றார்களோ அத்தகையோருக்கு ஒப்பாவாரா?" (அல்குர்ஆன் 47:14)

வரம்பு மீறாதீர்கள் : (இறைவனுக்கு பயந்து கொள்ளுங்கள்) "எவன் வரம்மை மீறினானோ - இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ - அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்."

"எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கி கொண்டானோ, நிச்சயமாக அவனுக்கு சுவர்க்கம் தான் தங்குமிடமாகும்." (அல்குர்ஆன் 79:37-39)

"வரம்பு மீறுபவர்களுக்கு அவர்களுடைய செயல்கள் (இவ்வாறு) அழகாகக்பட்டு விடுகின்றன.)" (அல்குர்ஆன் 10:12)

அபூபக்கர், பேட்டவாய்த்தலை

இந்தியாவுக்காக இந்திய வல்லுநர்களால் உருவான எபிக் வெப் பிரவுசர்‏ 15

அதிரைநிருபர் | July 31, 2010 | , , , ,

இந்திய வல்லுநர்களால் உருவாக்கப்பட்டு, செனற ஜூலை 14 வெளியாகியுள்ளது     எபிக் வெப் பிரவுசர்.
                         
 இதுவரை வெளிநாடுகளில் உருவான பிரவுசர்களை மட்டுமே பயன்படுத்தி வந்த நாம், இனி பெருமையுடன் இந்த இந்திய பிரவுசரைப் பயன்படுத்தலாம். இது இந்தியர்களுக்கு மட்டுமல்ல. உலகில் இணையத்தில் உலா வரும் எவரும் இதனைப் பயன்படுத்தலாம்.

பெங்களூரைச் சேர்ந்த ஹிடன் ரெப்ளெக்ஸ் (Hidden Reflex) என்ற நிறுவனம் இதனை மொஸில்லாவின் கட்டமைப்பில் உருவாக்கியுள்ளது. இதனை http://www.epicbrowser.com/  என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். இதனை இன்ஸ்டால் செய்தவுடன், இதன் பளிச்சிடும் வண்ணங்கள் நம்மை வரவேற்கின்றன. அழகான மயில் ஒன்று தோகை விரித்து ஆடும் காட்சி கிடைக்கிறது. இந்த பின்னணித் தோற்றத்தினை, இந்த தளம் தரும் தீம்களைப் பயன்படுத்தித் தாராளமாக, நமக்குப் பிடித்த வகையில் மாற்றிக் கொள்ளலாம். இதன் இடது ஓரத்தில் உள்ள கட்டத்தில், ட்விட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற தளங்களுக்கான நேரடி வாயில் கிடைக்கிறது. நாம் அடிக்கடி பயன்படுத்தும் பலவற்றிற்கான விட்ஜெட்டுகள் தரப்பட்டுள்ளன. கிளிக் செய்தால், நேராக அந்த தளங்களுக்குச் செல்கிறோம். இந்த தளங்கள் நமக்கு அசாத்திய வேகத்தில் தரப்படுகின்றன. பிரவுசரில் இருந்தவாறே, நம் கம்ப்யூட்டரில் உள்ள பைல்களைத் தேடிப் பெறலாம்.

இந்த பிரவுசரின் மிகச் சிறந்த அம்சம் இதனுடன் சேர்த்துத் தரப்படும் ஆண்ட்டி வைரஸ் பாதுகாப்பு ஆகும். இந்த பிரவுசர் மூலம் எந்த பைலை டவுண்லோட் செய்தாலும், அது வைரஸ் சோதனைக்கென ஸ்கேன் செய்யப்பட்ட பின்னரே, இறக்கம் செய்யப்படுகிறது. வைரஸ்கள் இருந்தால் அவற்றை அழிக்கிறது. அதே போல நாம் திறக்க இருக்கும் இணைய தளங்கள் வைரஸ் மற்றும் மால்வேர் தொகுப்புகளைப் பரப்பும் வகையுடை யதாய் இருந்தால், எச்சரிக்கை கொடுத்துத் திறக்காது. மேலும் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடும் வசதியினையும் இந்த பிரவுசர் அளிக்கிறது. இத்தகைய பாதுகாப்புடன் வடிவமைக்கப் பட்டிருக்கும் உலகின் முதல் பிரவுசர் இது எனக் கூறலாம்.

அடுத்ததாக, இண்டிக் டூல் மூலம், இதில் இந்திய மொழிகளைக் கையாளும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தமிழ் உட்பட 12 மொழிகளில் இதனைப் பயன்படுத்தலாம். இதில் தரப்படும் கட்டத்தில் கிரிக்கெட், டிவி உட்பட பல செய்திகளுக்கான தொடர்புகள் தரப்பட்டுள்ளன. லேட்டஸ்ட் சினிமா பாடல்கள், கிரிக்கெட் ஸ்கோர், மாநில மொழிகளில் செய்திகள், லைவ் டிவி, பங்குச் சந்தை தகவல்கள், நிகழ்ச்சிகள், வீடியோ காட்சிகள், தினந்தோறும் ஜோக் மற்றும் skins, maps, jobs, news, gmail, yahoo, games எனப் பலவகைகளில் இந்த தளம் அசத்துகிறது. இந்த பிரவுசரிலேயே ஒரு சிறிய விண்டோவில் யு–ட்யூப் தளத்தினை இயக்கி வீடியோ கிளிப்களைப் பார்க்கலாம்.

இவற்றுடன் ஒரு இலவச வேர்ட் ப்ராசசர், வீடியோ சைட் பார் மற்றும் கம்ப்யூட்டர் பிரவுசர் தரப்பட்டுள்ளன. பிரவுசரில் இருந்தே உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பைல்களையும் போல்டர்களையும் கையாள முடியும்.

இணைய தளப் பெயர்கள் பெரிதாகக் காட்டப்படுவதால், பெயர்களில் சிறிய அளவில் மாற்றம் செய்யப்பட்டு, பிஷ்ஷிங் புரோகிராம்களை அனுப்பும் தளங்களை எளிதில் அடையாளம் காண முடியும்.

நம் தனிப்பட்ட தகவல்கள் பதிந்திருந்தால் ஒரே ஒரு கிளிக் செய்து அவற்றை அழிக்க முடியும். பிரைவேட் பிரவுசிங் மேற்கொள்ளவும் ஒரே ஒரு கிளிக் போதும்.

மொஸில்லா கட்டமைப்பில் இந்த பிரவுசர் அமைக்கப்பட்டிருப்பதால், அதிவேகத்தில் தளங்கள் இறக்கப் பட்டுக் காட்டப்படுகின்றன. பைல்கள் டவுண்லோட் செய்யப்படுகின்றன. 1,500க்கும் மேற்பட்ட இந்திய தீம்கள் மற்றும் வால்பேப்பர்கள் தரப்பட்டுள்ளன. பயர்பாக்ஸ் பிரவுசரின் அனைத்து ஆட் ஆன் தொகுப்புகளும் இதிலும் செயல்படுகின்றன. ஏறத்தாழ 1,500 அப்ளிகேஷன்களுக்கு மேல் இந்த பிரவுசரின் ஆன்லைன் காலரியில் தரப்படுகிறது. இலவசமாக இவற்றைப் பயன்படுத்தலாம்.

பன்னாட்டளவில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6னைப் பயன்படுத்தக்கூடாது என்ற தகவல் முனைப்போடு வைக்கப்படும் நிலையில், இந்தியாவில் இன்னும் பெரும்பாலானவர்களால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6 பயன்படுத்தப் படுகிறது. அவர்கள் இனிமேலாவது இந்த இந்திய பிரவுசரைப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.

இந்த பிரவுசரைத் தயாரித்த தலைமைப் பொறியாளர் பரத்வாஜ் கூறுகையில், வைரஸ் உள்ளதா என ஸ்கேன் செய்வது , நம் பங்குகள் எந்நிலையில் மார்க்கட்டில் உள்ளன என்று காட்டுவது 12 இந்திய மொழிகளில் இதனைப் பயன்படுத்துவது, பயணத்திற்கான டிக்கெட்களைப் பதிவு செய்வது போன்ற வேலைகளையும் இதன் மூலம் மேற்கொள்ள லாம் என்று கூறி உள்ளார்.

சீனாவில் தயாரிக்கப்பட்ட மேக்ஸ்தான் என்ற பிரவுசர் அந்த நாட்டில் பிரபலமாயுள்ளது. மற்ற நாடுகளில் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் எபிக் பிரவுசர் மற்ற நாடுகளில், குறிப்பாக இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் இந்தியர்களால் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.

Be a proud of an Indian
தகவல்: சம்சுதீன் (ஜம் ஜம்), அப்துல் மாலிக், மு செ மு நெய்னா முகம்மது.

"தக்வா மதரஸா மஸ்ஜித்" புதிய பள்ளிவாசல் 2

அதிரைநிருபர் | July 30, 2010 | , ,

நம் பக்கத்து ஊர் மதுக்கூரில் புதிய பள்ளிவாசல் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி (01.08.2010) அன்று திறக்கப்பட உள்ளது.                                                     

இது பற்றிய செய்தியை நம் அதிரை நிருபரில் பதிவு செய்கிறோம்.  புதிதாக பள்ளிவாசல் திறப்பு விழாவுக்கு நம்மூர் மக்கள் அதிகம் கலந்துக்கொள்ள வேண்டுகிறோம்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இன்ஷா அல்லாஹ் வரும் 01 ஆகஸ்ட் 2010 ஞாயிறு காலை 9 மணியளவில் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் மாநகரில் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையாலும், கண்மணி நாயகம் ரசூல்(ஸல்) அவர்களின் துஆ பரக்காத்தாலும் புதிதாக உருவாக்கப்பட்ட "தக்வா மதரஸா மஸ்ஜித்" பள்ளிவாசல் திறக்கப்படவுள்ளது. இன்ஷா அல்லாஹ் விழா சிறப்பாக அமைய எல்லாம் வல்ல இறைவனிடத்தில் தூஆச் செய்யுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறோம்.

திறப்பு விழா சிறப்பு மலர் வெளியிடப்படுகிறது அதன் விழாவும் சிறப்படைய தூஆச் செய்யுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறோம்.





இப்படிக்கு,

தக்வா மதரஸா மஸ்ஜித் விழாக் குழு மற்றும்
சிறப்பு மலர் வெளியீட்டு குழு,
மதுக்கூர்.

நாதியற்றுக் கிடக்குதப்பா! கேட்பாரில்லை! 24

அதிரைநிருபர் | July 30, 2010 | , ,

கடந்த சில மாதங்களாக அதிரை நடுத்தெருவில் சாலை அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது, ஏனோ இன்னும் இது முடிவடையாமல் உள்ளது, இது பற்றிய ஒரு ஆதங்கம்.                          



Dear brothers,

Assalamu alaikum. Myself and other middle street dwellers are facing a crucial problem of prolonged delay in the construction of new road. Several months ago, it was promised to me by one of the leading personalities that the road construction will be completed 'within a month'. But I don't know for what reason it is delayed until now! I want to express my concern and disturbed feeling in an article. But, as you all know, our brothers are not receptive to constructive criticism. Therefore, I decided to compose a poem in Tamil which will not be read by all but a few educated mass. Readers may pardon me for this. If you understand the content of my poem, you may understand the reality of my feeling. Thanks for your taking trouble!


உடைத்தெடுத்தார் கீழ்ப்புறத்தின் படிகள் தம்மை

உயர்நோக்காம் சாக்கடையைச் சீர்ப டுத்த


இடைத்தரகர் பலபேர்கள் நின்றே செய்தார்


இதையடுத்து மாதங்கள் பலவாய் வீதி

துடைப்பதுபோல் தார்ச்சாலை அமைப்ப தற்காய்த்


தூரெடுத்துக் காவிமண்ணும் கல்லும் போட்டார்


நடுத்தெருவே காவிமயம் இதனால் ஆகி


நாதியற்றுக் கிடக்குதப்பா! கேட்பா ரில்லை!



Is there anybody from the undertakers who has got wisdom?

-அதிரை அஹ்மது

புகைப்படம் : நன்றி அதிரை எக்ஸ்பிரஸ்
குறிப்பு: புகைப்படம் மார்ச் மாதம் எடுத்தது.

”கல்வி விழிப்புணர்வும் முஸ்லிம்களும்” 13

தாஜுதீன் (THAJUDEEN ) | July 30, 2010 | , ,

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி டாக்டர் ஜாகீர் உசேன் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் டாக்டர். S.ஆபிதீன் தனது பேராசிரியர் பணியுடன்                                              தமிழகத்தின் பல்வேறு ஊர்களில்   இஸ்லாமிய பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே கல்வி விழிப்பு உணர்வு, மேற்படிப்பு குறித்த கருத்தரங்குகளை நடத்தி வருகிறார். மாணவர்களுக்காக பல ஊர்களுக்கு சென்று நிகழ்ச்சி நடத்தி வரும் இவர் தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

கல்வி வழிகாட்டும் முகாம், மேற்படிப்பு குறித்த ஆலோசனை முகாம், பெண் கல்வியின் அவசியம், வேலை வாய்ப்பு வழிகாட்டி மையம் என்ற தலைப்புகளில் தமிழகத்தின் நகரங்களில் மட்டுமன்றி பல்வேறு சிற்றூர்களிலும் முஸ்லிம் அமைப்புகளின் முயற்சியில் கல்விக் கருத்தரங்கங்கள் தொடர்ந்து நடத்தப்படுவது உண்மையிலேயே ஓர் உற்சாகமான விஷயம் தான்.

அதிக பண செலவு, உடல் உழைப்புடன் சமுதாயத்தில் கல்வி விழிப்பு உணர்வை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்படும் கல்வி கருத்தரங்குகளில் பாதிக்கும் மேல் போதுமான மாணவர்கள் வருகையின்றி ஓரு சடங்காகவே முடிந்து வருகிறது.

இது மாதிரியான நிகழ்ச்சிகள் சில ஊர்களில் தோல்வியடைவதும் அல்லது அவைகள் வெறும் சடங்குகளாகவே நடந்து முடிந்து விடுவதன் காரணத்தை ஆராயும் போது சில உண்மைகள் நாம் அறிய வந்தது. அந்த வகையில் …

கல்வி கருத்தரங்குகள் ஏற்பாடு செய்கின்ற அமைப்புகள், தங்களின் அமைப்பு சார்ந்த விளம்பரங்களில் காட்டுகின்ற ஆர்வத்தினை மாணவர்களை அழைத்து வருவதில் காட்டுவதில் மிகுந்த குறைபாடு தெரிகிறது. இதுபோன்ற கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் எங்கு நடைபெறுகிறது என்பதனைத் தேடி அலைந்து கலந்து கொள்கின்ற மாற்று சமுதாய மாணவர்களுக்கு மத்தியில் தங்களின் இல்லங்களுக்கு நேரடியாக வந்து அழைப்பிதழ் வைத்து அழைத்துச் செல்ல வேண்டும் என்று எதிர்பார்த்து முடங்கிக் கிடக்கிறது நமது இஸ்லாமிய மாணவச் சமுதாயம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சமுதாய விழிப்புணர்விற்காக இதையும் செய்யத் தயாராகிக் கொள்ள வேண்டும்.

நிகழ்ச்சி மாணவர்களுக்குத் தானே …! தமக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற அறியாமையில் ஒதுங்கி நிற்கும் பெற்றோர்களிடம் இது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டிய பொறுப்பு மாணவர்களுக்கு சரி நிகராக பெற்றோர்களுக்கும் உண்டு என்பதை ஏற்பாட்டாளர்கள் பெற்றோர்களுக்கு உணர வைக்க வேண்டும்.

அடுத்த கொடுமை. இன்றும் சில ஊர்களில் மிக அதிக பொருள் செலவில் ஏற்பாடு செய்து அதீத முயற்சியின் காரணமாக “கல்வி விழிப்பு உணர்வு மற்றும் மேற்படிப்பு வழிகாட்டும் முகாம்” என்ற பெயரில் மாணவர்களை அழைத்து வந்து முகாம்கள் நடத்துகின்றனர். மூன்று மணிநேர நிகழ்ச்சியில் உள்ளூர் பிரமுகர்களின் முகஸ்துதி வார்த்தைகள், வாழ்த்துரைகள், ஒருவருக்கொருவர் பொன்னாடை போர்த்திக்கொள்ளுதல் என்று இரண்டே முக்கால் மணிநேரத்தை விரயம் செய்துவிட்டு இறுதியாக சிறப்பு அழைப்பாளர்களிடம் பளீஸ் 10 -15 நிமிடத்திற்குள் முடித்துக் கொள்ளுங்கள், லுகருக்கு நேரமாச்சு…! என்று அன்புக் கட்டளையிடும் நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் 21/2 மணி நேரம் மாணவர்களுக்கு கூற வேண்டிய அறிவுரைகள் வெறும் 15 நிமிடங்களில் எந்த வகையிலும் எடுத்துக் கூற முடியவே முடியாது என்பதை புரிந்து கொண்டு நிகழ்ச்சி நிரலை சரி வர அமைத்துக் கொள்ள முயற்சி செய்யலாமே !

இதுபோன்று மாற்றிக் கொள்ளவேண்டிய, ஆதங்கப்பட வைக்கின்ற நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்தாலும் பல ஊர்களில் மிகவும் போற்றத்தக்க வகையில் கல்வி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதை மறுக்க முடியாது. உதாரணமாக, கடந்த 09.05.2010 அன்று கள்ளக்குறிச்சியில் இஸ்லாமிய கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி மையம் சார்பாக ஏற்பாடு செய்திருந்த கூட்டம் மிகவும் பிரமிப்பை ஏற்படுத்தியது. காரணம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் சிதறிக்கிடக்கும் சுமார் 1500 இஸ்லாமிய மாணவர்கள், கள்ளக்குறிச்சியின் மிகப்பெரிய மண்டபத்தில் காலை 9.00 மணிமுதல் 2.30 மணிவரை நடத்திய கருத்தரங்கில் (இஸ்லாமிய மாணவர்கள் மட்டும்) மிக ஆர்வத்துடன் கலந்து கொண்டது மிகவும் எழுச்சியாக இருந்தது. இது போன்ற வெற்றிகரமான நிகழ்ச்சிகள் ஏற்பாட்டாளர்களின் தியாகத்திற்கு கிடைத்த வெற்றி. அதற்கு அல்லாஹ்விற்கு நன்றி கூறிக் கொள்வோமாக !

பொதுவாக ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் – மே மாதங்களில் தான் இது போன்ற மேற்படிப்பு வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆனால், இனிவரும் ஆண்டுகளில் டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதத்திற்குள் மாணவர்களுக்கான மேற்படிப்பு குறித்த விவரங்களை தெரிவிக்கும் நிகழ்ச்சிகளை நடத்தி முடித்து விடவேண்டும். காரணம், பெரும்பாலான உயர் கல்வி நிறுவனங்கள் மார்ச் மாதத்திலேயே மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ள ஆரம்பித்து விடுகின்றன. +2 மற்றும் பட்டப்படிப்பு மாணவர்களின் மேற்படிப்பிற்கான இலக்கினை மார்ச் மாத இறுதியிலேயே அவர்களின் மனதில் விதைத்து விடவேண்டும்.

இன்னும், உயர் கல்விக்கு முஸ்லிம் மாணவர்களை வழி காட்டுகின்ற அதே வேளையில் உயர்கல்வி நிறுவனங்களில் தகுதியோடு சேர்வதற்கான அதிக மதிப்பெண்களைப் பெறுவது எப்படி என்ற சூட்சுமத்தையும் கற்றுத்தர வேண்டும். மாணவர்களின் மனதில் புதைந்து கிடக்கும் தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறிந்து அவர்களின் உயர் கல்வி இலக்கை இலகுவாக அடையும் “தன்னம்பிக்கை மேம்பாட்டுப் பயிற்சியையும் ஒவ்வொரு கல்வியாண்டின் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில் இஸ்லாமிய அமைப்புகள் அந்தந்த ஊர்களில் நடத்த முற்பட வேண்டும். இதுபோன்ற நிகழ்ச்சிகள் கண்டிப்பாக இஸ்லாமிய மாணவ சமுதாயத்தில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் துளியளவும் ஐயமில்லை.

ஆக, கல்வியின் மாண்பை உணராமல் பலகாலம் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த இந்த சமுதாயம் தூக்கம் கலைந்து புரண்டு படுத்து இப்பொழுதுதான் எழுந்து உட்கார முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இனி உட்கார்ந்து எழுந்து நின்று மற்றவர்களுக்கு நிகராக ஓட ஆரம்பிப்பதற்கு சில காலங்கள் கண்டிப்பாக அவசியம். அதற்காக சமுதாயத்தின் கல்வி விழிப்புணர்வு முயற்சிகளில் வல்ல இறைவன் நம்மை சோர்ந்து விடவோ அல்லது பின்வாங்கச் செய்துவிடவோ மாட்டான் என்ற உறுதியான நம்பிக்கை நமக்கு இருக்கிறது.
 
பேராசிரியர் ஆபிதீனைத் தொடர்பு கொள்ள : +91 99658 92706

Thanks : Samarasam Tamil Fortnightly ,May 16-31,2010

அதிரையின் ஆட்டோ விளம்பரங்கள் - ஓர் அலசல் 26

அதிரைநிருபர் | July 29, 2010 | , ,

எண்பதுகளில் சஊதியின் தலைநகர் ரியாதில் இருந்தபோது, நாங்கள் அமைத்த ஒரு சிறு அமைப்பான அதிரை நலச் சங்கத்திற்கு ஊரிலிருந்து விண்ணப்பம் ஒன்று வந்தது           - கீழத் தெருவைச் சேர்ந்த  அஹ்மது முஹிதீன் என்ற இளங்குருத்துக்குக் கண் பார்வை இழந்து போய்க்கொண்டிருப்பதாக. கமால் ஹுசைன், ஷரபுத்தீன் ஆகியோரின் தங்குமிடத்தில் ஒன்றுகூடினோம். அன்றையச் சூழ்நிலையில் பத்தாயிரம் சேர்ந்தது. உடனே அதை அனுப்பி, மேல்மருத்துவம் செய்யக் கோரினோம். பணத்தைப் பெற்றுக்கொண்டோர் செய்தார்கள் போலும். இறைவனின் நாட்டம் வேறு விதமாக இருந்துள்ளது; அச்சகோதரர் குணம் பெறவில்லை; கண் பார்வை அற்றவராகிவிட்டார்!

அவர்தான், நம்மூரின் ஆட்டோ விளம்பர மன்னன், 'அதிரையின் அற்புதம்', கீழத்தெரு அஹ்மது! இவருடைய கணீர்க்குரலை அதிரையின் தெருக்களில் கேட்கும்போது, காது கொடுத்துக் கேட்கவேண்டும் போல் இருக்கின்றது.

அதிரை பைத்துல்மாலின் நிரந்தர அறிவிப்பாளர் இவர். இவருக்கு பைத்துல்மால், 'வாழ்நாள் சாதனையாளர் விருது' இதுவரை கொடுத்திருப்பார்கள் என்றே நம்புகின்றேன்; எனக்குத் தெரியாது; கொடுத்திராவிட்டால், இனியாவது கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றேன். எழுதிக் கொடுக்கும் விளம்பரத்தை வாசிக்கக் கேட்டு, அப்படியே மனத்தில் பதிய வைத்து, அட்சரம் மாறாமல் அதையே தனது கணீர்க் குரலில் ஊர் மக்கள் கேட்க உரத்துக் கூறுவார்.

பேரூராட்சியின் அடாவடி விளம்பரங்களும் இவர் மூலமே கொடுக்கப்படுகின்றன. வீட்டுவரி, தண்ணீர்வரி, சொத்துவரி என்று அதிரையின் குறிப்பிட்ட சில தெருவாசிகளிடமிருந்து மட்டும் கறக்கும் பணம் எங்கே செல்கின்றது என்று நமக்குத் தெரியாது. இதில், கொடுத்தவர்களே மீண்டும் கொடுக்கும் அப்பாவித்தனம் வேறு. மனிதர்களின் மறதியைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் அலுவலர்களின் அடாவடித் தனம்!

ஒரு முறை என் வீட்டுக்கு இருவர் வந்து வீட்டுவரி கேட்டார்கள். கொடுத்ததும் கொடுக்காததும் எனக்குத் தெரியாது. அதனால், "லிஸ்ட்டைப் பார்த்து, எவ்வளவு என்று சொல்லுங்கள்" என்றேன். "போன தடவை எவ்வளவு கொடுத்தீர்களோ, அதுதான்" என்றார் வந்தவர் கூலாக. "அது எனக்குத் தெரியாது; கையிலிருக்கும் பட்டியலைப் பார்த்துச் சொல்லுங்கள்" என்றேன். தன் கையிலிருந்த பட்டியலில் தேடுவதுபோல் பாசாங்கு செய்துவிட்டு, இடையில் நான், "ஏன், இல்லையா?" என்று கேட்டபோது, "உங்க கீழ்புரம் லிஸ்ட் கொண்டுவரலீங்கோ" என்றார் அந்த 'அதிகாரி'. "பின்னே என்ன சிரைக்கவா வந்தாய்?" என்று கேட்கத் தோன்றியது; ஆனால், கேட்கவில்லை. அசடு வழியத் திரும்பிச் சென்றனர். வெளியில் சென்றிருந்த என் இல்லாள் திரும்பி வந்தபோது, நடந்ததைக் கூறினேன். "அதுதான் கட்டிவிட்டோமே!" என்று கூறி, பணம் கட்டிய ரசீதை எடுத்துக் காட்டினாள்.

சரி; இனி மற்ற ஆட்டோ விளம்பரங்களுக்கு வருவோம். அஹ்மதின் விளம்பரங்களுள் பெரும்பாலானவை, 'கமர்ஷியல்' விளம்பரங்கள்தாம். "லைலாத்தி, லைலாத்தி" - இது அடிக்கடிக் கேட்கும் விளம்பரம். 'சல்மான்ஸ்', 'லுக்மான்ஸ்' என்று கூறி, "உங்களுக்குப் பிடித்த வண்ண வண்ண ஆடைகளை வாங்கிச் செல்லுங்கள்" என்று அறிவிப்பார் அஹ்மது. "இலவசம், இலவசம், இலவசம்!" என்று கூறி, மக்களின் கவனத்தை ஈர்ப்பார். அதற்குப் பின்னணியில் செலவு இருக்கும்; அது வேறு கதை. இன்று காலை (29-07-2010) ஒரு புதிய அறிவிப்பு: "தமீம் இறைச்சிக் கடை!" இன்று முதல், நோன்பு 27 வரை சிறப்புத் தள்ளுபடியில் இறைச்சி விற்பனையாம். ஏற்கனவே 'கொலஸ்ட்ரால்', BP என்று நோய்கள் கூடி இருக்கும்போது, இறைச்சி விற்பனையில் 'ப்ரமோஷன்' வேறா?

மக்களுக்குப் பயனுள்ள விளம்பரங்கள் ஒரு சில. ஆனால், அவற்றை மக்கள் எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று நமக்குத் தெரியாது. 'ஷிஃபா' மருத்துவமனையின் சிறப்புச் சிகிச்சை அறிவிப்புகள், மாணவ மாணவிகளின் பள்ளிச் சீருடைகள் தயாரிப்பு, கல்வி நிறுவனங்களின் அறிவிப்பு முதலானவை.

விளம்பர அறிவிப்புகளுள், வட்டியை ஆதாரமாகக் கொண்ட வங்கிகள், இன்ஸ்யூரென்ஸ், மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் போன்றவையும் அடங்கும். "MGR ஐஸ்கிரீம்" வண்டி தவறாமல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வந்து, பிள்ளைகளை அடம்பிடிக்க வைக்கும்.

வேண்டுமென்றே மக்களின் வெறுப்பைத் தேடிக்கொள்வதற்காக, மாற்று மத அன்பர்கள் சிலர் அம்பாசிடர் கார்களில் இடையிடையே நம் பகுதிக்குள் வந்து, தம்மைச் சார்ந்தோரின் மரண அறிவிப்புகளைச் செய்கின்றனர். இதில், நம்மூரின் சுற்றுவட்டாரங்கள், பட்டுக்கோட்டை போன்ற இடங்களின் மாற்று மத அன்பர்கள் வந்து தொல்லை கொடுக்கின்றார்கள். தேவையற்ற இத்தகைய அறிவிப்புகள் அத்துமீறல்கள் என்பதை 'பேரூராட்சியின் ஆளுநர்கள்' சிந்திப்பார்களா?

நமதூர் ஆட்டோ விளம்பர நிலவரத்தை விரைவாக அலச நினைத்தபோது, எனது சிந்தனையில் வந்தவை இவைதாம். இதில், யாரையும் சாடுவதோ, அளவுக்கு மீறிப் புகழ்வதோ எனது நோக்கமன்று. பின்னூட்டமிடுபவர்களின் மனப்பாசறைகளில் இன்னும் ஏராளம் இருக்கலாம். பகிர்ந்துகொள்ளுங்கள், பார்ப்போம்.

-அதிரை அஹ்மது


29.07.10

மாவட்ட வக்ப் அலுவலகங்களின் முகவரிகள் 6

அதிரைநிருபர் | July 29, 2010 | , ,

தமிழகத்தில் நிறைய பள்ளிவாசல்களுக்கும், முஸ்லீம் ஸ்தாபனங்களும், வக்ப் சொத்துக்களும்                           தமிழநாடு வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது நாம் அறிந்ததே.     இதோ மாவட்ட வக்ப் அலுவலகங்களின் முகவரிகள்

சென்னை

வக்ப் ஆய்வாளர், 822 அண்ணா சாலை ,மக்கா மஸ்ஜித் வளாகம், மவுண்ட் ரோடு, சென்னை 600002 , தொலைபேசி:044 -28520477

காஞ்சிபுரம் & திருவள்ளூர்

வக்ப் ஆய்வாளர், பெரிய பள்ளிவாசல் வளாகம், பூவிருந்தவல்லி,சென்னை 600056, தொலைபேசி: 044 - 26494523

கடலூர் & விழுப்புரம்

வக்ப் ஆய்வாளர், (நூர் முஹம்மது ஷா அவுலியா தர்கா), 512 காந்தி ரோடு
பண்ருட்டி, கடலூர் மாவட்டம், தொலைபேசி: 04142 - 242660

வேலூர் & திருவண்ணாமலை

வக்ப் ஆய்வாளர், 12 / 16 காந்தி ரோடு, வேலூர் - 632004, தொலைபேசி: 0416 - 2225770

சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி & தர்மபுரி

வக்ப் ஆய்வாளர், எண் 4 A & 5 A , முதல் மாடி, திப்பு சுல்தான் மார்கெட் முதலாவது அக்ரகாரம், சேலம் - 636001, தொலைபேசி - 0427 - 2263126

கோயம்புத்தூர், ஈரோடு & நீலகிரி

வக்ப் ஆய்வாளர், எண்: 14 - 15 பள்ளிவாசல் வளாகம், அவினாசி சாலை உப்பிபாளையம், கோயம்புத்தூர் - 641018, தொலைபேசி - 0422 - 2380685

திருச்சி, புதுகோட்டை, கரூர் & பெரம்பலூர்

வக்ப் ஆய்வாளர், எண்: 12 கிலேடர் தெரு, திருச்சி - 2, தொலைபேசி - 0431 - 2703407

மதுரை, திண்டுக்கல் & தேனீ

வக்ப் ஆய்வாளர், எண்: 1 டவுன் ஹால் ரோடு பள்ளிவாசல், டவுன் ஹால் ரோடு, மதுரை - 625001, தொலைபேசி - 0452 - 2346053

ராமநாதபுரம், விருதுநகர் & சிவகங்கை

வக்ப் ஆய்வாளர், தர்பம்சயனம் சாலை, வெளிப்பட்டினம், ராமநாதபுரம் - 623 504, தொலைபேசி: 04567 - 220053

தஞ்சை, திருவாரூர் & நாகப்பட்டினம்

வக்ப் ஆய்வாளர், 27 நீதி நகர், ஜும்மா பள்ளிவாசல், கோர்ட் ரோடு தஞ்சாவூர் - 613 001, தொலைபேசி: 04362 273077

திருநெல்வேலி, தூத்துக்குடி & கன்னியாகுமரி

வக்ப் ஆய்வாளர், 54 ஹை ரோடு, திருநெல்வேலி - 627001, தொலைபேசி: 0462 - 2334062

இரண்டு அல்லது மூன்று மாவட்டத்திற்கு ஒரு அலுவலர் இருபதாலோ என்னவோ வக்ப் சொத்துக்கள் சமூக விரோதிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளன.

தகவல். இராஜகிரி கஜ்ஜாலி

கவர்ண்மென்ட் உத்தியோகம்..! 13

அதிரைநிருபர் | July 28, 2010 | , , ,

ஆரம்ப பள்ளி, வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது பக்கத்தில் சகவயதுடைய மாணவன் தன்னுடைய புது வகையான லெதர் பேக்கிலிருந்து ஜாமின்ட்ரி                                             பாக்ஸ் திறந்து அழகழகான நிறமும் வடிவமுடைய பென்சில்,                 பேனா, ரப்பர், ஸ்கேல் எடுத்து இது என் வாப்பா சிங்கப்பூரிலிருந்து அனுப்பிருக்காங்க என்று பெருமையடித்துக்கொண்டிருந்தான். அதைப்பார்த்த இவன் தன்மேல் வெறுப்பும் கோபமும் வருகிறது. நாம் ஏன் வெளிநாட்டிலிருக்கும் தந்தைக்கு மகனாக பிறந்திருக்கக்கூடாது, இங்கு ஏன் பிறந்தோம் என்று அழுதே விட்டான் தான் கொண்டுவந்திருக்கும் அழுக்கான பரக்கத்ஸ்டோர் என்று எழுதிருக்கும் மஞ்சள்பையையும் அதுலே கூருடைந்த ஒரு பெண்சிலும், சிறு துகள்களாக உள்ள சில கல்லுக்குச்சிகளும் இருப்பதை பார்த்து.

இவனுடைய தந்தை மாத சம்பளத்திற்கு வேலை செய்யும் ஆர‌ம்ப‌ப்ப‌ள்ளியின் தலைமையாசிரிய‌ர், எல்லாத்துலேயும் க‌ண்டிப்பு நேர‌ம் த‌வ‌றாமை ப‌டிப்பு, குரான் ஓதுத‌த‌ல், இறைதொழ செல்லுத‌ல், இப்ப‌டியாக‌... வீட்டிலேயிருந்து ப‌டித்துக்கொண்டிருக்கும்(ப‌டிப்ப‌து மாதிரி ந‌டிப்ப‌து)வெளியில் விளையாடும் கிளித்த‌ட்டு, க‌ண்டுவிளையாட்டு, சில்லுக்கோடுக‌ளால் போடும் கூக்குர‌லால் ம‌ன‌து எதிலேயுமே ல‌யித்திருக்காது. இப்போதும் அதே ம‌ன‌நிலை நாம் ஏன் இங்கே பிற‌ந்தோமென்று ஏனென்றால் வெளியே விளையாடும் ப‌ச‌ங்க‌ளின் த‌ந்தைக‌ள் வெளிநாட்டில் உத்தியோக‌ம். சிறுவ‌ய‌த்திற்கேயுரிய‌ ப‌டிப்பு/ஓதுத‌ல் த‌விர‌ அனைத்திலும் மன‌துசெல்லும் அதுலே இவ‌ர்க‌ள் ச‌ந்தோஷ‌மாக‌ இருக்கிறார்க‌ள், இதுலே தொலைக்காட்சி/சினிமா பார்ப்ப‌து. இதுமாதிரி தான் அனுப‌விக்காத‌ ஒவ்வொரு நிமிட‌மும் இதேம‌ன‌நிலையில் இவ‌னின் ம‌ன‌தும் அழுத‌து.

பல வருடம் கழித்து வேலைக்காக அப்ளைசெய்து கடைசியில் இவனே வெளிநாட்டில் வேலைப்பார்க்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டான். அந்த வெளிநாட்டுவேலை, கைநிறைய சம்பளம், நினைத்தமாதிரி வாழ்க்கை என்ற மனநிலையின் வெளிப்பாடாக கூட இருக்கலாம். ஆனால், எவ்வளவுதான் சம்பாதித்தாலும் குடும்பத்தாருடனும், தெரு/ஊரு ஆட்களுடனும் மனசு ஏனோ ரொம்ப தூரம் தள்ளியிருப்பதுபோல்தான் தோன்றுகிறது, இதே இவனின் தந்தை குறைந்த சம்பளம் வாங்கினாலும் நிறைவான வாழ்க்கை, தன் மனைவியை விட்டு என்றும் பிரியாநிலை, மகன்/மகள், பேரன்/பேத்தியை விட்டு பிரியாமல் அவர்களின் சுக/துக்கத்தில் பங்கெடுத்து, குடும்பத்திலும் ஊரிலும் நடக்கும் அனைத்துவகையான சுக/துக்கத்திலும் பங்கெடுத்து, தன் வேலை நேரம் போக பொதுப்பணியில் தந்தை ஈடுபத்தி தன்னாலான சேவையை இந்த சமுதாயத்திற்காக செய்தது எல்லாம் இந்த உத்தியோகத்தினால் மட்டுமே சாத்தியம்.

இன்று எத்தனையோ வெளிநாட்டு வாழ்கைப்பற்றி கவிதைகள், சம்பவங்கள் படித்தும் பார்த்தும்கொண்டிருக்கிறோம், இதுலே தங்கை கல்யாணம், பெற்றோரை கவனிப்பது, தனக்கென்று ஒரு வீடு, ஏதாவது பிஸினெஸ் பண்ண கொஞ்சம் பணம் இப்படிபட்ட காரணத்திற்க்காக வெளிநாடு செல்ல கட்டாயப்படுத்தபடுகிறது, ஆனால் இதன்மூலம் மேற்சொன்னதை முழுமனதோடு நிறைவேற்றிருக்கிறோமா? அப்படியே நிறைவேற்றுவதற்கு தன் இளமை, தளர்ச்சி, நோய்கள்தான் மிச்சமிருக்கிறாது. ஒரு நாள் ரிடையர் என்ற ஒன்று பெறும்போது நல்ல கம்பெனியில் வேலைசெய்தால் கிராஜுவிட்டி என்ற பணம் கிடைக்கும், அதை வைத்து தனக்கு வைத்தியம் செய்யவே போதுமானதாக இருக்கும், தன் மனைவிக்கோ, குழந்தைகளுக்கோ கடைசிவரை நிரந்தரமாக ஒன்றுமே விட்டுவைக்கவில்லை.

இதுவே கவுரவம் பாராமல் உத்தியோகம் செய்த இவனின் தந்தையால் எல்லாமே நிறைவேறியது, தான் வேலையிலிருந்து ஓய்வுப்பெற்றாலும் தனக்கென்ற ஒரு வருமானம். இன்று தான் இறந்தாலும் அந்த ஓய்வூதிய வருமானத்தில் ஒரு பகுதி தன் மனைவிக்கு வருகிறது, அவர் மனைவிக்கூட யாரிடமும் எந்த வித பண உதவிக்கூட எதிர்ப்பாராமல் வாழ வழிவகை செய்கிறது அந்த உத்தியோகம்.

இன்று திரும்பிப்பார்கிறான் தன் பள்ளிக்கால வாழ்வை, இவர்களுக்கு மகனாகப்பிறந்ததுக்கு இறைவனுக்கு நன்றிக்கூறுபவனாக..

ஆக்கம்: அப்துல் மாலிக்

என்றும் இனிக்கும் நம் (பழைய) நோன்பு கால நினைவுகள். 22

தாஜுதீன் (THAJUDEEN ) | July 26, 2010 | , , , ,

ஒரு காலத்தில் நம்மூரில் புனித ரமளான் நோன்பு வர இருக்கின்றது என்றாலே ஆண், பெண், பெரியவர் முதல் சிறியவர் வரை ஒரு இனம் புரியாத பரபரப்பு                                             நம்முள் தானாகவே ஒட்டிக்கொள்ளும் அந்த நாள் நம் வாழ்வில் வந்த நாள்.

இன்று உலக வெப்பமயமாதலால் பனி போர்த்திய அண்டார்ட்டிக்கா கண்டமே ஐஸ் கிரீம் போல் உருகி வந்தாலும், ஓசோன் மண்டலத்தில் ஓட்டை ஏற்பட்டிருந்தாலும் நம் பழைய கால நினைவுகள் மட்டும் ஒரு போதும் பழுதடைவதில்லை.

அன்று நமக்கு அறிவுரை சொன்ன எத்தனையோ பெரியவர்களும், மார்க்கத்தை முறையே போதித்த மார்க்க அறிஞர்களும், "மாக்காண்டி" என்று பயமுறுத்தப்பட்டவர்களும், அதனால் பயந்து அடம் பிடிப்பதை அடக்கிக்கொண்டு உணவு உட்கொண்ட சிறுவர்களும். அவர்களில் எத்தனையோ பேர் இன்று மண்ணோடு மண்ணாகி விட்டார்கள். நமக்கு முன் இறைவனடி போய்ச்சேர்ந்து விட்டார்கள்.

நம்ம ஊர் குறிப்பாக வயதான பெண்மணிகள் அவர்களுக்கென்று அரபு, ஆங்கில, தமிழ் மாதங்கள் போக பன்னிரண்டு மாதங்கள் தனியே உருவாக்கி அதை நடு ராத்திரியில் எழுப்பிக்கேட்டாலும் வரிசை தவறாது கச்சிதமாக சொல்வார்கள். (கீழே நான் குறிப்பிட்ட வரிசை சரியா? அல்லது தவறா? என்று நம்மூர் மூத்த குடிமகன்கள் சொன்னால் நல்லது) ஷிர்க் எது? பித்'அத் எது? என்று விளக்கமாக தெரியாத காலம் அது என்று சொல்லலாம்.

1. முஹர்ரம்
2. சேலாந்திரி
3. நாகூர் ஆண்டவர் கந்தூரி
4. மையதுநாண்டவோ கந்தூரி
5. முத்துப்பேட்டை கந்தூரி
6. கோட்டப்பட்டிணம் கந்தூரி
7. கடற்கரைப்பள்ளி கந்தூரி
8. காட்டுப்பள்ளி கந்தூரி
9. விராத்து
10.நோம்பு
11.இடையத்து
12. ஹஜ்ஜூ

புனித ரமளானை வரவேற்க விராத்து மாதத்தில் பெண்கள் காட்டும் பரபரப்பும், சுறுசுறுப்பும் நம்மை திகைக்க வைக்கும். ஆம். அவர்கள் வீடு வாசல் கழுவி, ஒட்டடை அடித்து, அரிசி மாவு இடிக்க வீட்டுக்கு ஆள் வரவைத்து, உரல், உலக்கைகளெல்லாம் அக்கம்பக்கத்து வீட்டில் இரவல் வாங்கி இடித்தும் (அது ஒரு மெஹா ப்ராஜெக் மாதிரி நடக்கும்), மளிகைக்கடை சாமான்கள் சிட்டை போடப்பட்டு நோன்புக்கு தேவையான எல்லா சாமான்களும் வாங்கி சுத்தம் செய்து அரைக்க வேண்டியதை அரைத்தும், டப்பாவில் அடைக்க வேண்டியதை அடைத்தும் எல்லாம் முறையே செய்யப்பட்டு தயார் படுத்தி வைப்பார்கள்.

நோன்பு வருவதற்கு ஒரு சில நாட்கள் முன்பே நம் முஹல்லாப்பள்ளிகளெல்லாம் அதை வரவேற்க தயாராகிக்கொண்டிருக்கும். சில பள்ளிகளில் வெள்ளையும் அடிப்பார்கள். மினாராக்களில் வண்ண விளக்குகள் மாற்றப்பட்டு நம் உள்ளங்களில் மத்தாப்பு கொளுத்தப்படும். நோன்பு கஞ்சி காய்ச்ச அங்கு தென்னங்கீற்றால் ஆன கொட்டகை போட மாட்டு வண்டியில் கீற்றும், கம்பும் அங்கு வந்திறங்கும். அத்துடன் நம் குதூகலமும் வந்திறங்கும். இவற்றை எல்லாம் இக்கால சிறுவர்கள் அனுபவிக்கிறார்களா? இல்லையா? என்பதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். கம்ப்யூட்டர் யுகமாகிப்போன இக்காலத்தில் நிச்சயம் அவற்றை எல்லாம் தொலைத்தவர்களாகத்தான் அவர்கள் இருப்பர் என்பது என் நம்பிக்கை.

இன்று பெய்த‌ மழையில் துளிர் விடும் புல்,பூண்டு போல ஆங்காங்கே திடீரென தோன்றும் சம்சா, இரால் மண்டை புதைத்த வாடா விற்கும் கடைகள்.

(நீர் மூழ்கி) ஆழ்குழாய்க்கிணறுகளெல்லாம் இல்லாத அக்காலத்தில் குளங்களெல்லாம் அடுத்து வரும் மழைக்காலம் வரை தண்ணீரை தன்னகத்தே தாங்கி நின்றது நாமெல்லாம் குதித்து/குளித்து கும்மாளமிடுவதற்காக.

கண்களெல்லாம் சிவந்து, காதிலும், மூக்கிலும் கொஞ்சம் வாயிலும் தண்ணீரை தடையின்று உள்ளே செல்ல அனுமதித்து விட்டு பிறகு நோன்பு திறக்கும் சமயம் மிக சங்கையாக மரியாதை இல்லா வாடாவையும், முக்கோண‌ சம்சாவையும் கஞ்சிக்கோப்பையில் பிய்த்துப்போட்டு வெகுநேரம் ஆடாமல், அசையாமல் இருந்து மீனைக்கவ்வுவதற்காக காத்திருக்கும் கொக்கு போல இடி முழக்கமென இறங்கும் 'நகரா' சப்தத்தில் நோன்பு திறக்கும் து'ஆ கூட முழுவதும் சொல்ல நேரமில்லாதவர்களாய் மடக்கென தன் வரண்ட வாயிக்குள் கவிழ்த்த கஞ்சிக்கோப்பை நினைவுகள் இன்று உங்களுக்கு கொஞ்சமும் இல்லையா?

அந்த காலத்தில் சஹாபாக்கள் பதுருப்போருக்கு படையுடன் களத்திற்கு சென்றது போல் நோன்பு பிறை 17ல் பதுரு ரொட்டி வாங்க தெருதோறும் பொட்டியுடன் சென்று போரில் வென்று கனிமப்பொருள்களை கவர்ந்து வருவது போல் பொட்டி நிறைய (தேங்காய், அரிசி மாவு ரொட்டி, சர்க்கரை, வெள்ளடை) சாமான்களுடன் முஹல்லாப்பள்ளிக்கு கொண்டு வந்து சேர்த்த அந்த நினைவுகள் இன்று வந்து ஏனோ வந்து நம்மை ஏக்கமடையச்செய்கின்றது?

அன்று நோன்பு கால இரவில் இளம்காற்றில் ஒலி பெருக்கி மூலம் கரைந்து வரும் பள்ளிகளின் ஹிஜ்பு/குர்'ஆன் வசனங்களும், அதற்குப்பின் கொடுக்கப்பட்ட நார்சாவையும் இன்றும் அனுபவிக்க வேண்டும் என்று உள்ளம் அலைபாயுது ஏனோ?

அன்றிருந்தவர்கள் இன்றில்லை நம்மிடம். இன்றிருக்கும் நாமோ நாளை இருப்பதில் எவ்வித நிச்சயமும் இல்லை. நாம் எல்லாம் ஒரு நாள் நம்மைப்படைத்தவனிடம் மீளக்கூடியவர்களாக இருக்கின்றோம்.

உச்சி நேர பெரும் பசியில் ஆசை, ஆசையாய் வாங்கிச்சேர்த்து வைத்த திண்பண்டங்களும், நோன்பு நோற்றதும் வேண்டா/வெறுப்பாய் தீண்டாமல் காலை நேர வீட்டு வேலைக்காரிக்கு உணவாய் ஆகிப்போகும் அத்தனையும்.

அன்று நாம் வெகுதூர வெள்ளைக்கார நாடுகள் செல்லாமல் அரபு நாட்டுடன் அடக்கமாய், அமைதியாய் இருந்தோம். குடும்பம், உறவு பேணினோம். அன்பும், அரவணைப்பும் அதிகம் கண்டோம். இன்றோ நம் வீட்டு பெரும் தேவைகளுக்காக அழகாய் தன் மெழுகால் கட்டப்பட்ட தேன்கூட்டை கல்லெறிந்து சிதைத்தது போல் எட்டு திசைக்கும் திரும்பி ஒன்று சேர இயலாதவர்களாய் தேனீக்கள் போல் பறந்து போனோம்.

சீரும் சிங்கங்களும், பாயும் புலிகளாய் நோன்பு கால இரவில் ஆடித்தீர்த்த விளையாட்டுக்களும், தூக்கில் தொங்கும் மின் விளக்கின் கீழ் ஆடிய கேரம் போர்டு விளையாட்டும் கடைசியில் தேவையில்லாமல் கொண்டு வந்து சேர்த்த தெரு சண்டைகளும் இன்று இல்லாமல் போனதில் நமக்கு (வருத்தம் கலந்த) சந்தோஷம் தான்.

அயர்ந்து உறங்கும் நம் வீட்டுப்பெரியவர்களை சஹர் நேரத்தில் அலாரம் வைத்தாற்போல் வந்தெழுப்ப வரும் (தப்ஸ் அடிக்கும்) சஹர் பக்கிர்சாவும், அவருடன் (அரிக்கலாம்பு) விளக்கு எடுத்து வரும் சிறுவனும் இன்றும் இருக்கிறார்களோ? இல்லையோ? தெரியவில்லை.

மேனி தெரிய அணிந்த மார்ட்டின் சட்டையும், பாக்கெட்டிற்குள் பளபளக்கும் பத்து ரூபாய் சலவை நோட்டும், அதன் மேல் கம்பீரமாக காட்சி தரும் ஹீரோ பேனாவும், காதில் சொறுகப்பட்ட நறுமண அத்தரில் நனைத்த பஞ்சும், காலில் சரசரவென சப்தம் செய்யும் சிகப்பு நிற பூ வைத்த சோலாப்பூரி செருப்பும் அதை நினைக்கும் இன்றும் நம் உள்ளத்தில் பேரின்ப நீர்வீழ்ச்சியை உண்டாக்கி அதில் வண்ண,வண்ண வானவில்லை வரச்செய்கின்றது.

புனித ரமளான் மாத கடைசிப்பத்து நாட்களின் மகத்துவம் குர்'ஆனிலும், ஹதீஸிலும் அதிகம் சொல்லப்பட்டதை சரிவர‌ விளங்காமல் கடைசிப்பத்தை கடைத்தெருவிலும், துணிமணி எடுக்க பட்டுக்கோட்டை, தஞ்சாவூருக்கு படையெடுத்துச்சென்றதும், உள்ளூர் தையல்கடைக்காரர்களை பண்டிகைகால ரேசன்கடைகள் ரேஞ்சுக்கு ஆக்கி அதில் அநாவசியமாய் ஆனந்தமும் கண்டோம்.

பள்ளிகளில் தராவீஹ் தொழுகையில் செய்த சிறுபிள்ளைத்தனமான குசும்புகளும், பாதியில் தொழுகையில் உறங்கிய உறக்கமும் பின் நார்சாவை நினைத்து வந்த சுறுசுறுப்பும் அதை வரவழைத்த‌ தேனீரும் நீர் அண்டார்டிக்காவே சென்றிருந்தாலும் உம்மை மெல்ல அசை போட வைக்கும் அந்த நினைவுகள்.

இவைகளெல்லாம் இன்று இல்லாமல் போனாலும் கடந்த காலத்தை இங்கு மெல்ல அசை போட ஆட்களுமா இல்லாமல் போய்விடுவார்கள்?

மேலே என்னால் ஞாபகப்படுத்த முடிந்ததை இங்கு எழுதி விட்டேன். ஏதேனும் உங்கள் நினைவுகளிலிருந்து விடுபட்டு இருப்பின் நீங்கள் பின்னூட்டம் மூலமோ அல்லது தனி கட்டுரை மூலமோ தாராளமாக தொடரலாம் என் அன்பிற்கினியவர்களே.

நம்மை நெருங்கிக்கொண்டிருகும் புனித ரமளானின் பரக்கத்தால் வல்ல ரப்புல் ஆலமீன் ஹலாலான நம் எல்லாத்தேவைகளை பூர்த்தி செய்தும், பெரும் ஆபத்துக்களிலிருந்தும், விபத்துக்களிலிருந்தும், விபரீதங்களிலிருந்தும் நம்மை காத்தருளி, ஈருலகிலும் எல்லாப்பாக்கியங்களையும் பெற்றவர்களாய் எம்மை ஆக்கி, உலக ஆசாபாசங்களுக்காக இஸ்லாத்திலிருந்து தடம்புரளாமல் கடைசி மூச்சு உள்ளவரை இஸ்லாத்தின் இன்பத்தை சுவைத்தவர்களாய், அச்சுவையுடனே எம்மை படைத்த உன்னிடம் நாங்களெல்லாம் வந்து சேர வேண்டும் அதற்கு ரப்புல் ஆலமீனான நீ எங்களுக்கு நல்லருள் புரியவேண்டும் (ஆமீன் யாரப்பல் ஆலமீன்) என்று அவனை இறைஞ்சிக்கேட்டு கொண்டவனாய் என் கட்டுரையை இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.

இன்ஷா அல்லாஹ் என்றும் பசுமையான நம் நினைவுகள் தொடரும்......

மு.செ.மு. நெய்னா முஹம்மது

27.07.2010

ஒரு பெண்ணின் வரிகளில்/பார்வையில் ஹிஜாபின் மகிமை 6

தாஜுதீன் (THAJUDEEN ) | July 26, 2010 | , , , ,

ஹிஜாப் தரும் சுதந்திரம்!















என்ன பார்க்கிறாய்?
என்னைப் பார்க்கும்போது
என்னில் என்ன பார்க்கிறாய்?
                                                                                                             
நான் சுதந்திரப் பறவையா?
கட்டுக்கோப்புக்குள் அடங்கியவளா?
இயந்திர உலகில் மாட்டியவளா?

கண்ணால் ஊடுருவி முகம் சுளிக்கிறாய்
கண்ணாடியாக என் மேனி தெரியாததாலோ?
கட்டுக்கோப்புடன் நானிருப்பதாலோ?



நாகரீகம் அறியாதவளாக
பிணைக்கப்பட்ட கைதியாக
நான் தெரிகிறேனோ உனக்கு?



எனக்கென்று சொந்தக் குரல்
எனக்கென்று சுயசிந்தனை இல்லை என்கிறாய்
வேண்டாவெறுப்பாக மூடிக்கொள்கிறேன் என்கிறாய்



மூடி மறைத்தால் - கூண்டு கிளியா?
முடியை மறைத்தால் - அநாகரீகமா?
காட்ட மறுத்தால் - திணிப்பா?

சிறு வட்டத்தில் அடைப்பட்டவளென்று எண்ணி
பரிதாபத்தோடும், எரிச்சலோடும் பார்க்கின்றாய்
'சுதந்திரத்தின்' பொருள் அறியாமலேயே

கவலையும், துயரமும்
கோபமும், வேதனையும் எனக்கு
கண்களின் ஓரம் கண்ணீரும் இருக்கு

கண்ணீரின் காரணம்
நீ என்னை ஒதுக்குவதாலும்
உன் கேலிக் கூத்தாலும் அல்ல
நீ உனையே ஒதுக்குவதால்
உனை நீயே ஏமாற்றிக் கொள்வதால்
இறுதி நாளில் பாவியாக நிற்கப் போவதால்



அடுத்தவர் கண்களுக்கு நான் அழகாக
காட்சிப் பொருளாக
வடிவமான சிலையாக இல்லாமலிருக்கலாம்



இஸ்லாம் எனக்களித்த சட்டத்தை மதிக்க விரும்புகிறேன்
அக அழகே முக அழகு என்னில் சொல்கிறேன்
ஆதிக்கம் இல்லாமல் என்னையே ஆள்கிறேன்



அமைதியில் என் அழகும்
பொறுமையில் என் மென்மையும்
ஒழுக்கத்தில் என் பெண்மையும் காணலாம்



மன வலிமை
சரியான முடிவெடுக்கும் திறன்
சிந்திப்பதை செயல்படுத்தும் பக்குவம் உண்டு



வாழ வழியில்லாமல் வறுமை விரட்டும்போதும்
உழைப்புக்கு ஊதியம் மறுக்கும் போதும்
குட்டைப் பாவாடையும், இறுக்கும் மேலாடையும்
கைகொடுக்கும் என்றாலும் வேண்டாம் என்பேன்



கிடைப்பது எனக்கு மதிப்பும், மரியாதையும்
கீழ்த்தர பார்வை என் மீது பட்டதில்லை
அந்நிய கைகள் எனைத் தொட நினைத்ததில்லை



அந்நிய மோகத்திற்கு அடிமைப்படவுமில்லை
ஆண்களின் உணர்வை சீண்டவுமில்லை
கண்களால் கற்பழிப்பவன் என் கண்ணில் பட்டதில்லை



உண்மையில் நானே சுதந்திரப் பறவை
விண்ணில் பறக்கும் என் சிறகே 'ஹிஜாப்'
அபயத்தை அளிக்கும் கவசமே 'அபாயா'
அணிந்துக் கொண்டு பறப்போம் சுதந்திரமாக!!






தகவல்: அப்துல் மாலிக், துபாய்.


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு