Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

என்றும் இனிக்கும் நம் (பழைய) நோன்பு கால நினைவுகள். 22

தாஜுதீன் (THAJUDEEN ) | July 26, 2010 | , , , ,

ஒரு காலத்தில் நம்மூரில் புனித ரமளான் நோன்பு வர இருக்கின்றது என்றாலே ஆண், பெண், பெரியவர் முதல் சிறியவர் வரை ஒரு இனம் புரியாத பரபரப்பு                                             நம்முள் தானாகவே ஒட்டிக்கொள்ளும் அந்த நாள் நம் வாழ்வில் வந்த நாள்.

இன்று உலக வெப்பமயமாதலால் பனி போர்த்திய அண்டார்ட்டிக்கா கண்டமே ஐஸ் கிரீம் போல் உருகி வந்தாலும், ஓசோன் மண்டலத்தில் ஓட்டை ஏற்பட்டிருந்தாலும் நம் பழைய கால நினைவுகள் மட்டும் ஒரு போதும் பழுதடைவதில்லை.

அன்று நமக்கு அறிவுரை சொன்ன எத்தனையோ பெரியவர்களும், மார்க்கத்தை முறையே போதித்த மார்க்க அறிஞர்களும், "மாக்காண்டி" என்று பயமுறுத்தப்பட்டவர்களும், அதனால் பயந்து அடம் பிடிப்பதை அடக்கிக்கொண்டு உணவு உட்கொண்ட சிறுவர்களும். அவர்களில் எத்தனையோ பேர் இன்று மண்ணோடு மண்ணாகி விட்டார்கள். நமக்கு முன் இறைவனடி போய்ச்சேர்ந்து விட்டார்கள்.

நம்ம ஊர் குறிப்பாக வயதான பெண்மணிகள் அவர்களுக்கென்று அரபு, ஆங்கில, தமிழ் மாதங்கள் போக பன்னிரண்டு மாதங்கள் தனியே உருவாக்கி அதை நடு ராத்திரியில் எழுப்பிக்கேட்டாலும் வரிசை தவறாது கச்சிதமாக சொல்வார்கள். (கீழே நான் குறிப்பிட்ட வரிசை சரியா? அல்லது தவறா? என்று நம்மூர் மூத்த குடிமகன்கள் சொன்னால் நல்லது) ஷிர்க் எது? பித்'அத் எது? என்று விளக்கமாக தெரியாத காலம் அது என்று சொல்லலாம்.

1. முஹர்ரம்
2. சேலாந்திரி
3. நாகூர் ஆண்டவர் கந்தூரி
4. மையதுநாண்டவோ கந்தூரி
5. முத்துப்பேட்டை கந்தூரி
6. கோட்டப்பட்டிணம் கந்தூரி
7. கடற்கரைப்பள்ளி கந்தூரி
8. காட்டுப்பள்ளி கந்தூரி
9. விராத்து
10.நோம்பு
11.இடையத்து
12. ஹஜ்ஜூ

புனித ரமளானை வரவேற்க விராத்து மாதத்தில் பெண்கள் காட்டும் பரபரப்பும், சுறுசுறுப்பும் நம்மை திகைக்க வைக்கும். ஆம். அவர்கள் வீடு வாசல் கழுவி, ஒட்டடை அடித்து, அரிசி மாவு இடிக்க வீட்டுக்கு ஆள் வரவைத்து, உரல், உலக்கைகளெல்லாம் அக்கம்பக்கத்து வீட்டில் இரவல் வாங்கி இடித்தும் (அது ஒரு மெஹா ப்ராஜெக் மாதிரி நடக்கும்), மளிகைக்கடை சாமான்கள் சிட்டை போடப்பட்டு நோன்புக்கு தேவையான எல்லா சாமான்களும் வாங்கி சுத்தம் செய்து அரைக்க வேண்டியதை அரைத்தும், டப்பாவில் அடைக்க வேண்டியதை அடைத்தும் எல்லாம் முறையே செய்யப்பட்டு தயார் படுத்தி வைப்பார்கள்.

நோன்பு வருவதற்கு ஒரு சில நாட்கள் முன்பே நம் முஹல்லாப்பள்ளிகளெல்லாம் அதை வரவேற்க தயாராகிக்கொண்டிருக்கும். சில பள்ளிகளில் வெள்ளையும் அடிப்பார்கள். மினாராக்களில் வண்ண விளக்குகள் மாற்றப்பட்டு நம் உள்ளங்களில் மத்தாப்பு கொளுத்தப்படும். நோன்பு கஞ்சி காய்ச்ச அங்கு தென்னங்கீற்றால் ஆன கொட்டகை போட மாட்டு வண்டியில் கீற்றும், கம்பும் அங்கு வந்திறங்கும். அத்துடன் நம் குதூகலமும் வந்திறங்கும். இவற்றை எல்லாம் இக்கால சிறுவர்கள் அனுபவிக்கிறார்களா? இல்லையா? என்பதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். கம்ப்யூட்டர் யுகமாகிப்போன இக்காலத்தில் நிச்சயம் அவற்றை எல்லாம் தொலைத்தவர்களாகத்தான் அவர்கள் இருப்பர் என்பது என் நம்பிக்கை.

இன்று பெய்த‌ மழையில் துளிர் விடும் புல்,பூண்டு போல ஆங்காங்கே திடீரென தோன்றும் சம்சா, இரால் மண்டை புதைத்த வாடா விற்கும் கடைகள்.

(நீர் மூழ்கி) ஆழ்குழாய்க்கிணறுகளெல்லாம் இல்லாத அக்காலத்தில் குளங்களெல்லாம் அடுத்து வரும் மழைக்காலம் வரை தண்ணீரை தன்னகத்தே தாங்கி நின்றது நாமெல்லாம் குதித்து/குளித்து கும்மாளமிடுவதற்காக.

கண்களெல்லாம் சிவந்து, காதிலும், மூக்கிலும் கொஞ்சம் வாயிலும் தண்ணீரை தடையின்று உள்ளே செல்ல அனுமதித்து விட்டு பிறகு நோன்பு திறக்கும் சமயம் மிக சங்கையாக மரியாதை இல்லா வாடாவையும், முக்கோண‌ சம்சாவையும் கஞ்சிக்கோப்பையில் பிய்த்துப்போட்டு வெகுநேரம் ஆடாமல், அசையாமல் இருந்து மீனைக்கவ்வுவதற்காக காத்திருக்கும் கொக்கு போல இடி முழக்கமென இறங்கும் 'நகரா' சப்தத்தில் நோன்பு திறக்கும் து'ஆ கூட முழுவதும் சொல்ல நேரமில்லாதவர்களாய் மடக்கென தன் வரண்ட வாயிக்குள் கவிழ்த்த கஞ்சிக்கோப்பை நினைவுகள் இன்று உங்களுக்கு கொஞ்சமும் இல்லையா?

அந்த காலத்தில் சஹாபாக்கள் பதுருப்போருக்கு படையுடன் களத்திற்கு சென்றது போல் நோன்பு பிறை 17ல் பதுரு ரொட்டி வாங்க தெருதோறும் பொட்டியுடன் சென்று போரில் வென்று கனிமப்பொருள்களை கவர்ந்து வருவது போல் பொட்டி நிறைய (தேங்காய், அரிசி மாவு ரொட்டி, சர்க்கரை, வெள்ளடை) சாமான்களுடன் முஹல்லாப்பள்ளிக்கு கொண்டு வந்து சேர்த்த அந்த நினைவுகள் இன்று வந்து ஏனோ வந்து நம்மை ஏக்கமடையச்செய்கின்றது?

அன்று நோன்பு கால இரவில் இளம்காற்றில் ஒலி பெருக்கி மூலம் கரைந்து வரும் பள்ளிகளின் ஹிஜ்பு/குர்'ஆன் வசனங்களும், அதற்குப்பின் கொடுக்கப்பட்ட நார்சாவையும் இன்றும் அனுபவிக்க வேண்டும் என்று உள்ளம் அலைபாயுது ஏனோ?

அன்றிருந்தவர்கள் இன்றில்லை நம்மிடம். இன்றிருக்கும் நாமோ நாளை இருப்பதில் எவ்வித நிச்சயமும் இல்லை. நாம் எல்லாம் ஒரு நாள் நம்மைப்படைத்தவனிடம் மீளக்கூடியவர்களாக இருக்கின்றோம்.

உச்சி நேர பெரும் பசியில் ஆசை, ஆசையாய் வாங்கிச்சேர்த்து வைத்த திண்பண்டங்களும், நோன்பு நோற்றதும் வேண்டா/வெறுப்பாய் தீண்டாமல் காலை நேர வீட்டு வேலைக்காரிக்கு உணவாய் ஆகிப்போகும் அத்தனையும்.

அன்று நாம் வெகுதூர வெள்ளைக்கார நாடுகள் செல்லாமல் அரபு நாட்டுடன் அடக்கமாய், அமைதியாய் இருந்தோம். குடும்பம், உறவு பேணினோம். அன்பும், அரவணைப்பும் அதிகம் கண்டோம். இன்றோ நம் வீட்டு பெரும் தேவைகளுக்காக அழகாய் தன் மெழுகால் கட்டப்பட்ட தேன்கூட்டை கல்லெறிந்து சிதைத்தது போல் எட்டு திசைக்கும் திரும்பி ஒன்று சேர இயலாதவர்களாய் தேனீக்கள் போல் பறந்து போனோம்.

சீரும் சிங்கங்களும், பாயும் புலிகளாய் நோன்பு கால இரவில் ஆடித்தீர்த்த விளையாட்டுக்களும், தூக்கில் தொங்கும் மின் விளக்கின் கீழ் ஆடிய கேரம் போர்டு விளையாட்டும் கடைசியில் தேவையில்லாமல் கொண்டு வந்து சேர்த்த தெரு சண்டைகளும் இன்று இல்லாமல் போனதில் நமக்கு (வருத்தம் கலந்த) சந்தோஷம் தான்.

அயர்ந்து உறங்கும் நம் வீட்டுப்பெரியவர்களை சஹர் நேரத்தில் அலாரம் வைத்தாற்போல் வந்தெழுப்ப வரும் (தப்ஸ் அடிக்கும்) சஹர் பக்கிர்சாவும், அவருடன் (அரிக்கலாம்பு) விளக்கு எடுத்து வரும் சிறுவனும் இன்றும் இருக்கிறார்களோ? இல்லையோ? தெரியவில்லை.

மேனி தெரிய அணிந்த மார்ட்டின் சட்டையும், பாக்கெட்டிற்குள் பளபளக்கும் பத்து ரூபாய் சலவை நோட்டும், அதன் மேல் கம்பீரமாக காட்சி தரும் ஹீரோ பேனாவும், காதில் சொறுகப்பட்ட நறுமண அத்தரில் நனைத்த பஞ்சும், காலில் சரசரவென சப்தம் செய்யும் சிகப்பு நிற பூ வைத்த சோலாப்பூரி செருப்பும் அதை நினைக்கும் இன்றும் நம் உள்ளத்தில் பேரின்ப நீர்வீழ்ச்சியை உண்டாக்கி அதில் வண்ண,வண்ண வானவில்லை வரச்செய்கின்றது.

புனித ரமளான் மாத கடைசிப்பத்து நாட்களின் மகத்துவம் குர்'ஆனிலும், ஹதீஸிலும் அதிகம் சொல்லப்பட்டதை சரிவர‌ விளங்காமல் கடைசிப்பத்தை கடைத்தெருவிலும், துணிமணி எடுக்க பட்டுக்கோட்டை, தஞ்சாவூருக்கு படையெடுத்துச்சென்றதும், உள்ளூர் தையல்கடைக்காரர்களை பண்டிகைகால ரேசன்கடைகள் ரேஞ்சுக்கு ஆக்கி அதில் அநாவசியமாய் ஆனந்தமும் கண்டோம்.

பள்ளிகளில் தராவீஹ் தொழுகையில் செய்த சிறுபிள்ளைத்தனமான குசும்புகளும், பாதியில் தொழுகையில் உறங்கிய உறக்கமும் பின் நார்சாவை நினைத்து வந்த சுறுசுறுப்பும் அதை வரவழைத்த‌ தேனீரும் நீர் அண்டார்டிக்காவே சென்றிருந்தாலும் உம்மை மெல்ல அசை போட வைக்கும் அந்த நினைவுகள்.

இவைகளெல்லாம் இன்று இல்லாமல் போனாலும் கடந்த காலத்தை இங்கு மெல்ல அசை போட ஆட்களுமா இல்லாமல் போய்விடுவார்கள்?

மேலே என்னால் ஞாபகப்படுத்த முடிந்ததை இங்கு எழுதி விட்டேன். ஏதேனும் உங்கள் நினைவுகளிலிருந்து விடுபட்டு இருப்பின் நீங்கள் பின்னூட்டம் மூலமோ அல்லது தனி கட்டுரை மூலமோ தாராளமாக தொடரலாம் என் அன்பிற்கினியவர்களே.

நம்மை நெருங்கிக்கொண்டிருகும் புனித ரமளானின் பரக்கத்தால் வல்ல ரப்புல் ஆலமீன் ஹலாலான நம் எல்லாத்தேவைகளை பூர்த்தி செய்தும், பெரும் ஆபத்துக்களிலிருந்தும், விபத்துக்களிலிருந்தும், விபரீதங்களிலிருந்தும் நம்மை காத்தருளி, ஈருலகிலும் எல்லாப்பாக்கியங்களையும் பெற்றவர்களாய் எம்மை ஆக்கி, உலக ஆசாபாசங்களுக்காக இஸ்லாத்திலிருந்து தடம்புரளாமல் கடைசி மூச்சு உள்ளவரை இஸ்லாத்தின் இன்பத்தை சுவைத்தவர்களாய், அச்சுவையுடனே எம்மை படைத்த உன்னிடம் நாங்களெல்லாம் வந்து சேர வேண்டும் அதற்கு ரப்புல் ஆலமீனான நீ எங்களுக்கு நல்லருள் புரியவேண்டும் (ஆமீன் யாரப்பல் ஆலமீன்) என்று அவனை இறைஞ்சிக்கேட்டு கொண்டவனாய் என் கட்டுரையை இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.

இன்ஷா அல்லாஹ் என்றும் பசுமையான நம் நினைவுகள் தொடரும்......

மு.செ.மு. நெய்னா முஹம்மது

27.07.2010

22 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

முதலில் ஒரு சொட்டு MSM(n)முத்திரையுடன் ! தொடரும் (N)பின்னூட்டங்கள்..

அப்துல்மாலிக் said...

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது மாதிரி கஞ்சிக்கொட்டகைகளும்/வெள்ளை சாந்துகளுமே சாட்சி நோன்பின் வருகைக்கு.

இரவு பகலாகவும் பகல் இரவாகவும் மாறுவதை சொல்ல மறந்துட்டியே நெய்னா

அப்துல்மாலிக் said...

//1. முஹர்ரம்
2. சேலாந்திரி
3. நாகூர் ஆண்டவர் கந்தூரி
4. மையதுநாண்டவோ கந்தூரி
5. முத்துப்பேட்டை கந்தூரி
6. கோட்டப்பட்டிணம் கந்தூரி
7. கடற்கரைப்பள்ளி கந்தூரி
8. காட்டுப்பள்ளி கந்தூரி
9. விராத்து
10.நோம்பு
11.இடையத்து
12. ஹஜ்ஜூ//

எழுதுவதற்கு முன் உங்க வாப்புச்சாவிடம் ஃபோன் போட்டு கேட்டியோ, கலக்கல்

Azeez said...

நைனா காக்கா நோம்பு திறந்ததும் கவாப் கடையை நோக்கி படையெடுக்கும் சிறுவர்களை பற்றி சொல்லவேஇல்லையே ?....முன்பெல்லாம் ஒரு பிலேட் அஞ்சு ரூவாதான் அனா இப்போ பத்து ரோவவாம்,

chinnakaka said...
This comment has been removed by the author.
chinnakaka said...

காலங்கள் கடந்தாலும் கடல் தாண்டி வாழ்ந்தாளும் கஞ்சி கோப்பையையும் காருவா வாடாவையும் மறக்கமுடியவில்லைதான்

பெருநாள் இரவு என்றவுடன் முதலி ஞாபகம் வருவது சைக்கிள் கடையும் புதிதாக முளைக்கும் செககடி மோட்டு இறைச்சி கடையும் தான் 27ம் கிழமை அன்றே பெருநாள் ராத்திக்காக சைக்கிள் புக்கிங் பன்னியது இன்னும் ஞபகத்தில் இருந்து அகழவில்லை.

இன்றோ எனது பிள்ளைகள் மோட்டார் சைக்கிளில் வலம் வருகிறார்கள் இது நாகரிக வள்ர்ச்சியாக இருக்கலாம் ஆனால் அவர்களது உள்ளங்களில் நோன்பு என்றவுடன் நமக்கு ஏற்பட்ட குதுகளங்கள் அப்படியே இருக்கின்றன.

அன்று நமது தாய் தந்தையர் நம்மை கண்டி வளர்த்தது போல் நம்மாள் கண்டிக்க முடியவில்லை என்பது வருத்தமாக இருந்தாலும் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியால் தொலைபேசி மூலம்மும் இன்டர்நெட் மூலமும் தொடடர்பில் இருப்பது ஆறுதலக உள்ளது அல்ஹம்து லில்லாஹ்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தல நோம்பு புடிச்சுருந்தேனா அப்போ பிரியானிதான் நார்ஷான்னு சொல்லி அடக்கி வச்சுட்டு சீணிச் சோறு பொவுரும்போது அழுதேன் இப்பவும் அப்படியே இனிக்குது(ங்க) ! - சரி அப்போ நீங்களெல்லாம் எப்புடியீந்தீய ?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அப்பாவின் கைகளை பிடித்துக் கொண்டு இரவுத் தொழுகைக்கு செல்லும் வேட்கையே அலாதியான இன்பம், இன்னும் வித்ருத் தொழுகையில் கிடைக்குமே ஒரு சுக்கு-டீ ஆஹா...

கிளித்தட்டு கோட்டை அழித்து விட்டு ஓடும்போதும் சரி, சஹர் நேரம் நெருங்கியதும் வீட்டுக்கு தனியாக செல்ல பயந்துகிட்டு (சந்துகளில்) சத்தம் போட்டுக் கொண்டே செல்லும் சேட்டைகளும், சுபுஹு தொழுகைக்காக பாங்கு சொல்ல போட்டி போடுவதும் அப்போது "அஸ்ஸலாத் ஹைருன் மினன்னவ்" மறப்பதும் ! நிழலாடுகிறதே MSM(n)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அதெல்லாம் இருக்கட்டும் பிறை காண்பதிலும், கண்டதை சொல்வதிலும் தலைதெறிக்க ஓடி வீடுகளுக்கு வரும்போது எத்தனை தடவை விழுந்தோம் (கணக்கு வச்சுக்கல ஏன்னா இப்படியெல்லாம் எழுதுவோம் அப்போ தெரியாதே !)

Yasir said...

இந்த கட்டுரையை படிக்கும் போது..ஒரு கனம் நான் துபாயில் இருப்பதையே மறந்து..இந்த வார்த்தைகளின் மாயஜாலத்தில் ஊருக்கு போய் நோன்பை முடித்து வந்த திருப்தி ..இதுவே ஒரு நல்ல எழுத்தாளனின் வெற்றி .சகோ.நெய்னா & ஜாஹிர் இந்த திறமையை பெற்று இருக்கிறார்கள்..பெருநாள் பிறை கண்டு பிரச்சனை இல்லாமல் பெருநாள் கொண்டாடிய வருடங்கள் குறைவே...சகோ.நெய்னா சகர் பக்கிரிசா ரொம்ப கஷ்டப்பட்டு இறந்து போனார்..அவர் பட்ட வேதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாதது..அல்லாஹ் கரீம்....நோன்பு இரவு தேங்கா திருடும் அலிபாபாக்களிம் நினைவும் வந்து போகிறது...

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

நம்ம தஸ்தகீரெ காணோம்? ஊட்லெ என்னா விராத்து மாச‌ ஒட்ரெ அடிக்கிறியளா? இல்லெ மாவு இடிக்கிறியெளா? இல்லெ சாந்தடிகிறியளா? இதுக்கெல்லாம் கலிபோர்னியாவுலெ ஆள் கெடெக்கிதா? புள்ளெயெலுவொ எல்லாம் தலெ நோன்பு புடிச்சாச்சா? வர்ர நோன்புக்கு என்னா நார்சா கொடுக்கப்போறியெ? ச்சே உண்மையிலேயே நாம் வழுப்பமான நம்ம ஊரு சங்கதிகளெ மிஸ் பண்ணுறோம். என்னா செய்றது இதெ எல்லாம் அனுபவிக்கலாமுண்டு ஊருக்கு போனா அங்குள்ள வெலெ வாசி கண்ணு முழி பிதுங்க வக்கிது? நம்ம எல்லாரையும் அல்லாஹ் தான் காப்பாத்தனும்.. வரட்டா....

Unknown said...

சூப்பர் ..நைனா...........

நீ எழுதுவதை பத்திர படுத்திகொள் ......ஒரு 50 வருடம் கழித்து எதிர்கால சந்ததியினருக்கு நம் வாழ்கை முறையை அறிந்துகொள்ள வசதியா இருக்கும் ...

Zakir Hussain said...

Bro மு.செ.மு. நெய்னா முஹம்மது எழுதியதை படிக்கும்போது நோன்பு காலத்தில் அடிக்கும் "வரண்டகாத்து" என் மேல் பட்டதை உணர்ந்தேன். காலங்களின் கட்டாய மாற்றத்தை அழகாக பதிவு செய்திருக்கிறீர்கள். அந்த திறமையை தந்த வல்ல இறைவனுக்கே எல்லா புகழும்.

நானும் என் சின்ன வயதை என் எழுத்துக்களில் பதிந்து இருக்கிறேன். யார் எங்கு இருந்தாலும் சரி அவர்களின் வேர் அவரவர் ஊர்தான். ஆனால் இன்று வரை புரியாத புதிர் இப்படி கண் இமைகளுக்குள் கனவை சுமந்து செல்லும் நாம் திரும்பி வெளிநாடு புறப்படும் போது ஏன் இப்படி மனம் முழுக்க கவலைகளை சுமந்து வருகிறோம்....யாராவது எழுதலாமே...இது உறவுகளின் நாடகமா / கடன்களின் கொடூர முகமா / இல்லை எதிர்காலத்தின் மீது உள்ள சுமத்தப்பட்ட பயமா?


பூமியில் உள்ள பிறச்சினைகளை தீர்ப்பதிலேயே வானத்தின் வெண்பஞ்சு மேகங்களை பார்த்து ரசிக்கும் நமக்குள் இருந்த அந்த சிறுவனை சாகடித்து விட்டோம்.

Zakir Hussain

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சவுரு பக்கிரிசா உங்களை இன்னும் எழுப்பலையா (சாஹுல், கிரவ்ன், உ.அ. மற்றும் பட்டினை நோன்பு பிடித்திருக்கும் நட்புகள்)

தாஜுதீன் (THAJUDEEN ) said...

ஒரு காலத்தில் ரமலானில் ஏற்படும் இருந்த பரபரப்பு இப்போது இல்லாவிட்டலும், இந்த கட்டுரையின் மூலம் நமமை நம்முடைய சிறு வயது காலத்துக்கு அழைத்து சென்றுவிட்டார் அன்பு சகோதரர் நெய்னா.

old memories are gold memories, வாழ்த்துக்கள்.

Shameed said...

சூப்பர் சூப்பர் நைனா

செடியன் குளத்து மேட்டில் விளாம் பழம் அடிப்பதும் ராஜாமடம் ஏறியில் நடதுபோய் குளிப்பதும் பாம்பு பிடிப்பதும் .அந்தகாலம் திரும்பவருமா

Shameed said...

அபுஇபுறாஹிம் says
சவுரு பக்கிரிசா உங்களை இன்னும் எழுப்பலையா (சாஹுல், கிரவ்ன், உ.அ. மற்றும் பட்டினை நோன்பு பிடித்திருக்கும் நட்புகள்)

இப்போது தான் சவுரு பக்கிரிசா மேளம் காதில் விழுந்தது (கொஞ்சம் பிஸிப்பா) ஒரே நேரத்திலே நோன்பு காஞ்சி (நோன்பு கால நினைவுகள்)(பார்வையில் ஹிஜாபின்) அப்புறம் பிரியாணி சமாசாரம் ( அஜினோ மோட்டோ)
எல்லாத்தையும் ஒண்ணா உள்ளே தள்ளியதுலே திட்டு முட்டா போச்சி

Adirai khalid said...

எங்கோ இன்னும் ஊசலாடிக்கொண்டிருக்கும் நம் பாலிய நினைவுகள்

கால‌த்தின் க‌ட்டாயத்தால் புதைக்கப் பட்ட ஈர என்ன‌ங்கள்

தூசிபடிந்த அந்த கால ஞாபகங்கள்

அனைத்தையும் நோன்புக் கால ஒட்டடை குச்சிகளால் தூசுதட்டி, சாந்து அடிக்கும் பக்குவம் நெய்னாவுக்கு கைவந்தகலை.

மனசெல்லாம் வெள்ளை அடித்த உணர்வு

அந்த கால நினைவுகளை மிக அழகாக‌ மீள்பதிவு செய்ததற்க்கு வாழ்துக்கள் !!!

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

சகோ. அபுஇபுறாஹிம் சொல்வது போல் நோன்பு நேரங்களில் அட்டூழியம் புரியும் சைத்தான்கள் அம்மாதம் முழுவதும் கட்டப்பட்டு விடும் என்று நமக்கு தைரியம் ஊட்டும் வார்த்தைகள் குர்'ஆனை மேற்கோள்காட்டி நமக்கு உலமாக்கள் பல முறை போதித்திருந்தும் நமக்குள் ஏற்படும் ஒரு இனம் புரியாத மன பயத்தால் தராவீஹ் தொழுகைக்குப்பின் சஹர் வரை விளையாடும் விளையாட்டுக்களுக்குப்பின் வீட்டிற்கு தனியே செல்ல பயந்து முடுக்கில் (சந்து) சப்தமிட்டு செல்வதும் பேய்,பிசாசுகள் பிடிக்காமல் இருக்க சட்டை பாக்கெட்டில் பழைய கிழிந்த குர்'ஆன் தாளை (அது பழைய அரபி செய்தித்தாளாக கூட இருக்கலாம் அரபி எழுத்து இருந்தால் போதும் என்ற நிலை) எடுத்து வைத்துக்கொள்வதை இன்று நினைத்தாலும் சிரிப்புடன் கொஞ்சம் வெட்கமும் வருகிறது. யார்ட்டையும் சொல்லிப்புடாதியெ நல்லாயீர்ப்பியெ.........

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அட அதானே பார்த்தேன் பள்ளிக்கு எடுத்துகிட்டுபோற குர்ஆனில் நுனிப்பகுதி கிழிபட்டிருந்தது இப்போதான் வெளங்குது.. :) அதிருக்கட்டும் மோதினாருக்கு நிகராக பெருநாள் அன்னைக்கு துண்டுபோட்டு (விளையாட்டுக்காகத்தான்) அங்கே விழும் பணத்தை எடுத்துகிட்டு மனோரா செல்லும் ஒர் இளங்கன்று பயமறியா கூட்டத்தை அடுத்த நாள் பள்ளிவாசலுக்கு ஏறவிடாம விரட்டும் பெரிசுகள் (மறக்க முடியுமா MSM(n))

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

பொருளாதார நெருக்கடிகளும், குடும்பத்தின் பெரும் தேவைகளையும் எதிர் நோக்கியுள்ள இந்த சூழ்நிலையில் எவருக்கேனும் தான் சாமான் வாங்கிய தன் மூலம் கிடைத்த‌ பரிசுக்கூப்பனால் சுமார் 40 அல்லது 50 லட்சங்கள் மதிப்புள்ள ஒரு மெர்சிடஸ் காரோ அல்லது பி.எம்.டபுள்யூ காரோ பரிசாக எதிர்பாராமல் கிடைத்தால் அவர் எந்தளவுக்கு ஆனந்தமும், சந்தோசமும் அடைவாரோ அந்த பேரின்பத்தை அன்றே நாங்கள் பெருநாள் தொழுகைக்காக எங்கள் முஹல்லா பள்ளியில் போட்டி போட்டுக்கொண்டு வரிசையில் நின்று 'நஹரா' அடித்து பெற்றுக்கொண்டோம்.

Unknown said...

//விளையாட்டுக்களுக்குப்பின் வீட்டிற்கு தனியே செல்ல பயந்து முடுக்கில் (சந்து) சப்தமிட்டு செல்வதும் பேய்,பிசாசுகள் பிடிக்காமல் இருக்க சட்டை பாக்கெட்டில் பழைய கிழிந்த குர்'ஆன் தாளை (அது பழைய அரபி செய்தித்தாளாக கூட இருக்கலாம் அரபி எழுத்து இருந்தால் போதும் என்ற நிலை) எடுத்து வைத்துக்கொள்வதை இன்று நினைத்தாலும் சிரிப்புடன் கொஞ்சம் வெட்கமும் வருகிறது. யார்ட்டையும் சொல்லிப்புடாதியெ நல்லாயீர்ப்பியெ.........//
இதை விட யாராலும் எழுதமுடியாது ......இதை படித்தவுடன் நம்ம அனீஸ் நினைவுதான் வருகிறது ....அவன் வீடிற்கு செல்லோம்போது ... இறைவனிடம் கையேந்துங்கள் என்ற சத்தமஹா பாடியது உன் எழுத்தின் மூலம் சற்றுமுன் நடந்தது போல் உள்ளது .

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு