உலகின் முதல் மனிதர் ஆதம் நபி (அலை) அவர்கள் பேசிய மொழி தமிழா? - (1)
“ஆதம் (அலை) அவர்கள் இப்புவிக்கு வந்திறங்கிய பின்னர் எந்த மொழியில் பேசியிருப்பார்கள்?” - இப்படி ஒரு கேள்வி தேவையா?
மார்க்கத்தின் அடிப்படையில் இது போன்ற கேள்விகள் ஒரு வகையில் தேவையற்றவை என்று அறிஞர்கள் சிலர் கருதுகின்றனர். காரணம், இம்மையிலும் மறுமையிலும் நன்மையை அளிக்கக் கூடியதாக இந்தக் கேள்வி இருந்திருப்பின், அல்லது ஆதம் (அலை) அவர்கள் எந்த மொழியில் பேசினார்கள் என்பது முக்கியமான ஒரு செய்தியாக இருந்திருப்பின், அதனை அல்லாஹ் அல்குர்ஆனிலேயே அறிவித்திருப்பான். எனவே, இது தேவையற்ற ஒரு கேள்வி என்பது அந்த அறிஞர்களது கூற்று.
அவர்களின் கூற்றுப்படி இக்கேள்வி தேவையற்றதாக இருந்தாலும், இறைவனின் பிரதிநிதியாகத் திகழும் மனித குலத்தின் வரலாற்றை ஆராயும் வகையில் இந்தக் கேள்விக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கின்றது.
ஏனெனில், மனிதன் ‘குரங்கில் இருந்து தோன்றினான் என்று டார்வின் போன்ற மேற்கத்திய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதனையே, எல்லாப் பாடப் புத்தகங்களிலும் போதிக்கின்றனர். குறிப்பாகப் பள்ளிக்கூடங்களுக்குச் செல்லும் நம் குழந்தைகளும் அதனையே கற்கின்றனர். குரங்கிலிருந்து தோன்றிய கதை ஒரு புறமிருக்க, இப்போது, ‘மனிதன் எலியில் இருந்து தோன்றினான்’ என்றுகூடக் கூற ஆரம்பித்துள்ளனர். பார்க்க: http://nikalvu.com/postid272/
அல்லாஹ்வின் அருள்மறை அல்குர்ஆனோ, மனிதனைப் படைக்கும் முன்னர், அந்த வல்லமை மிக்க படைப்பாளன், மனிதப் படைப்பை வானவர்களிடம் அறிவித்தது பற்றி இவ்வாறு விவரிக்கின்றது:
وَإِذْ قَالَ
رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا
أَتَجْعَلُ فِيهَا مَنْ يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ
بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ [البقرة: 30].
“உம் இறைவன் வானவர்களிடம், ‘நான் இப்பூமியில் ஓரு பிரதிநிதியை உண்டாக்கப் போகிறேன்’ என்று கூறியபோது, ‘பூமியில் குழப்பம் விளைவித்து, இரத்தத்தை ஓட்டக்கூடியவர்களையா நீ ஆக்கப் போகிறாய்? நாங்கள் (இப்போது) உன்னை உன் புகழால் துதிக்கொண்டும், உன்னைத் தூய்மைப் படுத்திக்கொண்டும் இருக்கின்றோமே?’ என்று வானவர்கள் கூறினர். அதற்கு அவன், ‘நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்’ என்று கூறினான்.” (அல்குர்ஆன், 2-30)
وَعَلَّمَ آدَمَُ الأَسْمَاءَ
كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلاَئِكَةِ فَقَالَ
أَنْبِئُوْنِيْ بِأَسْمَاءِ هؤُلاَءِ إِنْ كُنْتُمْ صَادِقِيْنَ ( 31 ) قَالُوْا سُبْحَانَكَ لاَ عِلْمَ لَنَا إِلاَّ مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيْمُ
الْحَكِيْمُ
(
32 ) قَالَ يَا آدَمُ أَنْبِئْهُمْ بِأَسْمَائِهِمْ فَلَمَّا أَنْبَأَهُمْ بِأَسْمَائِهِمْ
قَالَ أَلَمْ أَقُلْ لَكُمْ إِنِّيْ أَعْلَمُ غَيْبَ السَّمَاوَاتِ وَالأَرْضَ
وَأَعْلَمُ مَا
تُبْدُوْنَ وَمَا كُنْتُمْ
تَكْتُمُوْنَ ( 33 ) (البقرة:31-33)
“அதுமட்டுமின்றி, அந்த முதல் மனிதருக்கு அனைத்துப் (படைப்புகளின்) பெயர்களையும் கற்றுக் கொடுத்தான். அதன் பின்னர், அவற்றை வானவர்களின் முன்னர் நிறுத்தி, ‘இவற்றின் பெயர்களைக் கூறுங்கள்’ என்றான். அவ்வானவர்கள், ‘இறைவனே, நீ மிக்க தூய்மையானவன். நீ கற்றுத் தந்ததைத் தவிர வேறு எந்த அறிவும் எங்களுக்கு இல்லை. நிச்சயமாக, நீயே மிகைத்தவனாகவும், நுண்ணறிவாளனுமாகவும் இருக்கிறாய்’ என்றனர். (அல்லாஹ்,) ‘ஆதமே, இவற்றின் பெயர்களை நீர் இவர்களுக்குக் கூறும்’ என்றான். அவர் அவற்றின் பெயர்களை அவர்களிடம் கூறியதும், ‘நான் வானங்கள் மற்றும் பூமியின் மறைவான விஷயங்கள் அனைத்தையும் அறிவேன் என்றும், நீங்கள் வெளியாக்கி வைப்பதையும், நீங்கள் மறைத்து வைப்பதையும் நான் அறிவேன் என்று உங்களுக்குக் கூறவில்லையா?’ என்று அல்லாஹ் கூறினான்.”
(அல்குர்ஆன், 2-31,32,33)
அல்லாஹ் முதல் மனிதராகிய ஆதமுக்கு அனைத்துப் படைப்பினங்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான் என்பதன் பொருள், வானங்கள், பூமியில் உள்ள அனைத்தைப் படைப்பினங்கள் பற்றிய அறிவையும் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தான் என்பதாகும் என்று அருள்மறை ஆய்வு அறிஞர்கள் கூறுகின்றனர்.
வல்ல இறைவன் முதல் மனிதராகிய ஆதம் (அலை) அவர்களுக்கு அனைத்துப் படைப்புகள் பற்றிய அறிவை அளித்ததுடன், அவர்களின் இனமாகிய மனித இனத்தின் உருவத்தையும் உடல் அமைப்பையும் மற்ற அனைத்துப் படைப்புகளை விட மிக அழகானவையாக ஆக்கி வைத்தான். அல்லாஹ்வின் அருள்மறை,
وَصَوَّرَكُمْ فَأَحْسَنَ صُوَرَكُمْ
“உங்களுக்கு உருவம் அளித்தான். இன்னும், அந்த உருவத்தை மிக அழகானதாக ஆக்கினான்” (அல்குர்ஆன்-64:4) என்றும்,
لَقَدْ خَلَقْنَا الإِنْسَانَ فِيْ أَحْسَنِ تَقْوِيْمٍ
“இன்னும் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் நாம் படைத்தோம்” (அல்குர்ஆன்-95:4) என்றும் மனிதனின் தோற்றத்தைச் சிறப்பித்துக் கூறுகின்றது.
இப்படியெல்லாம், அல்குர்ஆன் மனிதனின் படைப்பின் ஆரம்பத்தைப் பற்றி உயர்வாகக் கூறியிருக்க, டார்வின் போன்ற ஆராய்ச்சியாளர்கள் கருதுவது போல், மனிதன் குரங்கிலிருந்தும் எலியில் இருந்தும் தோன்றியிருப்பின், முதல் மனிதனின் ஆரம்ப மொழி கீச், கீச்சென்று கத்தும் குரங்கின் மொழியா? அல்லது சிக் சிக்கென்று கத்தும் எலியின் மொழியா? என்ற கேள்வியும் எழுகின்றது.
நவீன ஆராய்ச்சியாளர்கள் கூறும் இந்தக் கருத்து, மனிதனின் தோற்றத்தைப் பற்றி அல்குர்ஆன் கூறும் கருத்துகளுக்கு மாற்றமாக உள்ளது. குர்ஆனுடைய அறிவைக் கற்றுக்கொள்வது கட்டாயக் கடமையாகும். அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: طلب العلم فريضة على كل مسلم – “(அடிப்படையான மார்க்க) அறிவைத் தேடுவது முஸ்லிமான ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.” (பைஹகீ)
கடமையான ஒன்றை நிறைவேற்ற உதவும் மற்றொன்றும் கடமைதான். அதன்படி, கடமையான அறிவைப் புரிந்து கொள்ளவும் நிலை நாட்டவும் உதவும் பிற அறிவுகளை அறிந்துகொள்வதும் கடமையாகும்.
எனவே, இந்த அடிப்படையில், முதல் மனிதராகிய ஆதம் (அலை) அவர்கள் எந்த மொழியில் பேசியிருப்பார்கள் என்று ஆராய்வதும் தேவையான ஒரு கேள்வியாகத்தான் உள்ளது.
இக்கேள்வியை, மனித இனத்தின் வரலாறு மற்றும் அதன் துவக்கத்தை அல்குர்ஆனின் அடிப்படையில் விளங்கும் நோக்கத்திலும், மனிதன் குரங்கு அல்லது எலியிலிருந்து தோன்றி இருப்பான் எனும் குர்ஆனுக்கு மாற்றமான கருத்துகள் தவறானவை என்று விளங்கிக் கொள்ளும் நோக்கத்திலும் நாம் ஆராய்வதில் தவறு ஏதும் இல்லை என்பது எனது கருத்து. பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
اِنَّمَا الاَعْمَالُ بِالنِّيَّاتِ
“செயல்கள் அனைத்தும் அவற்றின் எண்ணங்களின் அடிப்படையில் தான் அமைந்துள்ளன.”
– புகாரி, முஸ்லிம்
- இன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்..
- அஹ்மது ஆரிஃப், எம்.காம்., எம்.ஃபில்.
- இயக்குநர், அரபிக் இன்ஸ்டிட்யூட் ஆஃப் காமர்ஸ், சென்னை-60092.