Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அப்பாவுக்கு நேர்ந்த ஆபத்து...(உண்மைச்சம்பவம்) 35

அதிரைநிருபர் பதிப்பகம் | March 17, 2012 | , , , ,


வருடம் 1982ஆக இருக்குமென நினைக்கிறேன். அஃதொரு வறண்ட வெயில் காலம். ஊரின் குளங்களெல்லாம் மெல்ல மெல்ல வற்றி காய்ந்து தன் சேற்று மேனியில் கட்டம் போட்டு கடல்பாசி வெட்டிக்கொண்டிருந்த நேரம் அது. ஆழ்குழாய்க்கிணறுகள் எல்லாம் ஊரில் எங்கோ அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்திருக்க வாய்ப்புண்டு.

ஈன்றெடுத்த ஒரே மகளும் தன் கணவனின் உத்யோகத்தாலும், வேண்டுதலாலும் பாசமிகு பெற்றோர்களை கவனிக்க வீட்டில் வேலைக்கு ஒரு பெண்ணை நியமித்து விட்டு மன இறுக்கத்துடன் மகளும் தன் குழந்தைகளுடன் திருச்சிக்கு இடம் பெயர நேர்ந்தது.

வீட்டு வேலை செய்யும் பெண்ணின் கவனிப்பிலும், வீட்டிற்கு மகன்களின் மற்றும் அவர்களின் துணைகளின் அடிக்கடி வருகையாலும் வயதான தாய், தந்தையின் வாழ்க்கை மெல்ல மெல்ல சிரமங்கள் பெரிதின்றி நகர்ந்து கொண்டிருந்தது. அக்கால இரவு நேர வீடுகளில் அரிக்கலாம்பும், முட்டை விளக்கும், குத்து விளக்கும் ஆட்சி செய்து வந்த நேரம். மண்ணெண்ணெய் இல்லாத வீடுகள் இருந்திருக்க வாய்ப்பில்லை.

பரந்த நீர் நிறைந்த குளத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தாமரைப்பூ பூத்திருப்பது போல் ஊரில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓட்டு வீடுகள் சூழ நடுவே மாடி வீடுகள் ஒரு சில இருந்த சமயம் அது. பணங்காசுகள் எல்லோரிடமும் பற்றாக்குறையாகவே இருந்து வந்தாலும் பாசமும், நேசமும், அன்பும், பண்பும் அபரிமிதமாக இருந்து வந்த காலம் அது.

கடிதப்போக்குவரத்துகளெல்லாம் கொடி கட்டிப்பறந்து பாசங்கள் இங்குமங்குமாக பரிவர்த்தனைகள் செய்து கொண்டிருந்த நேரம்.

குதிரை வண்டிகளெல்லாம் அதன் அடிப்பக்கம் தொங்கும் சாக்கில் நிரப்பப்பட்ட புற்கள் காண்போருக்கு நிரை மாத கர்ப்பிணி போல் தோற்றமளித்து கொலுசுக்கு மாறாக சலங்கை ஒலி எழுப்பி குதூகலமாய் தெருதோரும் ஓடிக்கொண்டிருந்த காலம் அது.

எது எப்படியோ? தொழுகையின் நேரங்கள் ஒலி பெருக்கியில் பாங்காய் ஒலித்தாலும் அல்லது நகரா மூலம் முழங்கினாலும் பெரியவர் முதல் சிறியவர் வரை ஐங்கால தொழுகையை சங்கையுடன் நிறை வேற்றியே வந்தனர்.

பாச மகளைப்பிரிந்து வாழும் அந்த பெரியவரும் எது எப்பாடானாலும் தவறாது ஐங்கால தொழுகையை நிறைவேற்றி வருவதுடன் அதிகாலைத் தொழுகைக்கு முந்தைய தொழுகையான தஹஜ்ஜத் தொழுகையையும் சிறப்புடன் பல வருடங்கள் நிறைவேற்றி வரும் பழக்கமுடையவர்களாக இருந்து வந்தார்கள்.

குழாயைத்திறந்தால் படுக்கையறையிலேயே வெந்நீரும், குளிர்ந்த நீரும் பவ்வியமாய் அருவி போல் கொட்டும் இக்காலம் போல் அல்ல அக்காலம். தண்ணீர் தேவைகளுக்கு கொல்லைப்புறமுள்ள கிணற்றடிக்கே வந்தாக வேண்டும் அது எந்த நேரமாக இருந்தாலும் சரி.

அயர்ந்த உறக்கத்தை முறித்துக்கொண்டு அவரும் எழுந்து விட்டார் அதிகாலை 3 மணியளவில் அந்த அல்லாஹ்வை தொழுது நிற்க. காது கேளாத, வாய் பேச இயலாத வயதான மனைவியும் உறங்க, அவர்களுக்கு துணையாய் வேலை செய்யும் பெண்ணும் உறங்கிக்கொண்டிருக்க யாருமறியா வண்ணம் கொல்லை கதவை திறந்து வெளியே வந்து அங்கு மின் விளக்கின் வெளிச்சம் இருந்ததோ? இல்லை நிலா வெளிச்சம் தந்ததோ? தெரியவில்லை ஒழு செய்ய கிணற்றடிக்கு வந்து விட்டார் அந்த பெரியவரும்.

கிணற்றின் சுற்றுச்சுவரும் கொஞ்சம் உயரம் குறைவாகவே இருந்திருக்கிறது. வழக்கம் போல் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க கயிற்றை பற்றிப்பிடித்தவர் கால் இடறி வழுக்கி யாருமறியா வண்ணம் கிணற்றுக்குள் விழுந்து விட்டார் அந்த பெரியவர். இறைவனின் கிருபையால் தன்னை வணங்க இவ்வளவு சிரத்தை எடுக்கும் அந்த வயதான பெரியவருக்கு கிணற்றுக்குள் நெஞ்சளவே இருக்குமாறு தண்ணீரை தேக்கி வைத்திருந்தான் இறைவன் அச்சமயம். இருண்ட கிணற்றுக்குள் அந்த இறைவனே துணையாய் இருந்திருப்பான் பெரியவருடன்.

கிணற்றுக்குள் விழும்பொழுது பக்கவாட்டு சுவர்கள் பெரியவரின் தலையை நன்கு பதம்பார்க்காமல் இருக்கவில்லை. நெஞ்சளவு நீரில் நிலைகுலைந்து செய்வதறியாது தவித்து நின்ற அப்பெரியவரின் தலையிலிருந்து ரத்தம் சொட்டிக்கொண்டே கிணற்று நீரின் நிறத்தை மெல்ல மெல்ல சிகப்பு நிறமாக மாற்றிக்கொண்டிருந்தது.

தாம் கிணற்றுக்குழ் விழுந்து கிடப்பது மெல்ல மெல்ல சுய நினைவுக்கு தெரிய வர பகல் பொழுதில் வெளியில் நின்று சப்தம் போட்டாலே காதுகேளாமல் அயர்ந்து தூங்கும் மக்களுக்கு மத்தியில் அதிகாலைக்கு முன் கிணற்றுக்குள் இருந்து சப்தமிட்டால் எவருக்கு கேட்டு விடப்போகிறது? (கொஞ்சம் சப்தம் குறைவாக டெலிபோனில் பேசினாலே கிணற்றுக்குள் இருந்து பேசுவது போல் விளங்குகிறது என்பார்கள் இக்காலத்தில்)

அந்த பெரியவரும் தன் முயற்சியை கைவிட வில்லை. பாவம் இடையிடையே கொஞ்சம் ஓய்வு எடுத்து உதவிக்கு யாரும் வரமாட்டார்களா? என்ற நம்பிக்கையில் வீட்டின் வேலை செய்யும் பெண் விழித்தெழுந்து காலை ஆறு மணிக்குப்பிறகு கொல்லையை சுத்தம் செய்ய வரும் வரை 'பாத்தும்மா, பாத்தும்மா' என்ற சப்தம் மட்டும் கிணற்றிலிருந்து வந்து கொண்டே தான் இருந்திருக்கிறது.

அந்த பெண்மணியும் காலையில் எழுந்து நேரம் ஆகி வழக்கம் போல் கொல்லைப்புறம் வரும் சமயம் எங்கிருந்தோ வேதனையான ஒரு முணகல் சப்தம் கேட்கிறதே? அது எங்கிருந்து கேட்கிறது? என்று நாலாப்புறமும் சுற்றிப்பார்த்து மெல்ல மெல்ல கிணற்றின் பக்கம் வந்து அதற்குள் உற்றுப்பார்க்க செந்நீரின் நடுவே வீட்டுப்பெரியவரே உதவி கேட்டு அதற்குள் நிற்பது அறிந்து அதிர்ந்து போய் அப்படியே அவர்களை விட்டு விட்டு வெளியில் சென்று சில ஆண்களின் உதவி கேட்டு அவர்களை அழைத்து வந்து கிணற்று வாளியை இறக்கி  பெரியவரை அமரச்சொல்லி மெல்ல மெல்ல கயிற்றை மேலிழுத்து அவர்கள் வெளிக்கொண்டு வரப்பட்டார்கள்.

சுமார் அதிகாலை 3 மணியிலிருந்து காலை 7, 8 மணிவரை கிணற்றுக்குள் ரத்தக்கசிவுடன் வாழ்க்கைப்போராட்டத்தில் இருந்து வெளிக்கொண்டு வரப்பட்ட அந்தப்பெரியவர் பிறகு குடும்பத்தினர் உதவியுடன் முறையே சிகிச்சை அளிக்கப்பட்டு  இன்னும் சில காலம் உலகில் வாழ இறைவனால் அருளப்பட்டது.

பிறகு காயங்கள் மறைந்து தழும்புடன் நலம் பெற்ற பின் தன் மகளையும், பேரப்பிள்ளைகளையும் காண காய்,கறிகளுடன் திருச்சிக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் அங்கு வந்த பின் தான் மகளுக்கே நடந்த சம்பவங்கள் தெரியவரும். ஒரு வேளை உடனே கேள்விப்பட்டு மன வேதனையடையாமலிருக்க சம்பவம் குடும்பத்தினரால் மறைக்கப்பட்டிருக்கலாம். தொலைத்தொடர்புகளும் அவ்வளவாக வளர்ந்திராத காலம் அது.

இதுவே என் அப்பாவிற்கு அவர்கள் வாழ்வில் நேர்ந்த பேராபத்து.

அவர்கள் தான் நமதூர் காதிர் முகைதீன் கல்லூரிக்கு எதிரே அமைந்துள்ள எம்.எஸ்.எம். நகரை உருவாக்கிய மர்ஹூம் ஹாஜி. மு.செ.மு. முஹம்மது அபுல்ஹசன் அப்பா ஆவார்கள்.

காலம் சென்ற அன்னாரின் அவர்களின் துணைவியாரின் இன்னும் காலம் சென்ற எத்தனையோ நம் குடும்ப, ஊர் பெரியவர் முதல் சிறியவர்கள் வரை அனைவரின் பாவங்களையும் மன்னித்து அவர்களின் கப்ருகளை சுவர்க்கத்தின் பூஞ்சோலையாக ஆக்கி வல்ல ரப்புல் ஆலமீன் அவர்களுக்கெல்லாம் நல்லருள் புரிவானாக....ஆமீன்.....

சொல்ல வந்த சேதி: எது வேண்டுமானாலும் எப்பொழுதும் சம்பவிக்கலாம் என்றிருக்கும் சூழ்நிலையில் வயதான தாய், தந்தையரை பெற்ற பிள்ளைகள் அல்லது அவர்களில் யாரேனும் ஒருவர் கடைசி வரை பொறுப்பேற்று உடனிருந்து கவனிப்பதே நல்லது. உடன் இருந்து கவனிக்க இயலாதவர்கள் அவர்களை அருகில் இருந்து கவனித்து வருபவர்களுக்கு வேண்டிய உதவிகளை தாராளமாக செய்ய கடமைப்பட்டுள்ளனர்.

பெற்றக்கடனுக்கு இது கூட செய்யவில்லை என்றால் எப்படி???

நெஞ்சம் நெகிழும் நினைவுகளுடன்....

-மு.செ.மு. நெய்னா முஹம்மது

35 Responses So Far:

இப்னு அப்துல் ரஜாக் said...

நெஞ்சை பிழியும் சம்பவம்.

//சொல்ல வந்த சேதி: எது வேண்டுமானாலும் எப்பொழுதும் சம்பவிக்கலாம் என்றிருக்கும் சூழ்நிலையில் வயதான தாய், தந்தையரை பெற்ற பிள்ளைகள் அல்லது அவர்களில் யாரேனும் ஒருவர் கடைசி வரை பொறுப்பேற்று உடனிருந்து கவனிப்பதே நல்லது. உடன் இருந்து கவனிக்க இயலாதவர்கள் அவர்களை அருகில் இருந்து கவனித்து வருபவர்களுக்கு வேண்டிய உதவிகளை தாராளமாக செய்ய கடமைப்பட்டுள்ளனர்.

பெற்றக்கடனுக்கு இது கூட செய்யவில்லை என்றால் எப்படி???//

உண்மையான,எல்லாரும் ஏற்று நடக்க வேண்டிய செய்தி.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

உன் உம்மா வீட்டு அப்பாவின் சோகமான நிகழ்ச்சியை காலம் கடந்து அ.நி ரில் அறிவதை வேதனை படுகிறேன்.யாருக்கு எவ்வித அசம்பாவங்களும் நடக்க வேண்டாம்.

// //சொல்ல வந்த சேதி: எது வேண்டுமானாலும் எப்பொழுதும் சம்பவிக்கலாம் என்றிருக்கும் சூழ்நிலையில் வயதான தாய், தந்தையரை பெற்ற பிள்ளைகள் அல்லது அவர்களில் யாரேனும் ஒருவர் கடைசி வரை பொறுப்பேற்று உடனிருந்து கவனிப்பதே நல்லது. உடன் இருந்து கவனிக்க இயலாதவர்கள் அவர்களை அருகில் இருந்து கவனித்து வருபவர்களுக்கு வேண்டிய உதவிகளை தாராளமாக செய்ய கடமைப்பட்டுள்ளனர்.

பெற்றக்கடனுக்கு இது கூட செய்யவில்லை என்றால் எப்படி???//

ஆழ குழிதோண்டி நிரப்ப வேண்டிய செய்தி.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பு நண்பர் எம் எஸ் எம் நெய்னா அவர்களே!

காலை வேளையில் கண்களின் ஓரம் கசிய வைத்துவிட்டீர்களே!

உங்கள் அப்பா அவர்களுடன நானும் மாணவப்பருவத்தில் பேசிய நினைவு வருகிறது.

வழக்கமாக நாங்கள் படிப்பதற்கு அவர்கள் கல்லூரிக்கு எதிரே கட்டி இருந்த வாடகை கட்டிடத்துக்கு செல்வது வாடிக்கை. - எதிரே ஒரே வயல் வெளிதான் . ( இன்றைய எம்.எஸ்.எம். நகர்)

அதில் ஒரே ஓட்டமாக நீண்ட -காற்றோட்டமான சிமின்ட் தரை எங்களுக்கு கணித பயிற்சிக் கூடம்.

மாலை நேரத்தில் அப்பா அங்கு வருவார்கள். எங்களை யார் எவர் எந்தக்குடும்பம் என்றெல்லாம் விசாரிப்பார்கள்.

அந்த நினைவுகள் வந்தன எனக்கு.

வஸ்ஸலாம்.

இப்ராஹீம் அன்சாரி

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இந்த அசம்பாவிதம் இன்னும் என் நினைவில் இருக்கிறது...அந்த காலை நேரக் கூக்குரல் கேட்டு ஓடிச் சென்று பார்த்ததும் தான் அதிர்ந்தோம்... கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேர போராட்டம் அப்பா அவர்களை வெளியில் கொண்டுவர...

காலம் சென்ற எத்தனையோ நம் குடும்ப, ஊர் பெரியவர் முதல் சிறியவர்கள் வரை அனைவரின் பாவங்களையும் மன்னித்து அவர்களின் கப்ருகளை சுவர்க்கத்தின் பூஞ்சோலையாக ஆக்கி வல்ல ரப்புல் ஆலமீன் அவர்களுக்கெல்லாம் நல்லருள் புரிவானாக....!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நினைவுக்கு கொண்டு வந்து கண்களை கலங்கச் செய்த அப்பாவின் துயரச் செய்த சம்பவம்!

காலம் சென்ற எத்தனையோ நம் குடும்ப, ஊர் பெரியவர் முதல் சிறியவர்கள் வரை அனைவரின் பாவங்களையும் மன்னித்து அவர்களின் கப்ருகளை சுவர்க்கத்தின் பூஞ்சோலையாக ஆக்கி வல்ல ரப்புல் ஆலமீன் அவர்களுக்கெல்லாம் நல்லருள் புரிவானாக!

அருமை அப்பாவின் நெஞ்சம் நெகிழும் நினைவுகளுடன்....
-மற்றொரு பேரன்,
மு.செ.மு ஜஹபர் சாதிக்.

Anonymous said...

எம்.எஸ்.எம். நெய்னா அப்பாவுடைய சோகமான நிகழ்ச்சிகள் எனக்கு இப்போ தான் நினைவுக்கு வருகிறது.

அவர்கள் இரண்டு, மூன்று தடைவை கிணற்றில் விழுந்து எழுந்துவிட்டார்கள். இருந்தாலும் அவர்கள் தன்னுடைய வணக்க வழிபாடுகளை விடவில்லை. அவர்கள் இறைவனுக்காக இரவு நேரத்தில் எழுந்து நின்று வணங்குவார்கள்.

தன்னுடைய தஹ்ஜத் தொழுகையை விடமாட்டார்கள் அவர்கள் இரவு நேரத்தில் விடுபடாமல் தொழுது வந்தார்கள். அப்போ எம்.எஸ்.எம். நெய்னா திருச்சியிலும்,மைசூரிலும் இருந்து வந்தார். நெய்னாவுக்கு சிறு வயதிலையை நிறைய அனுபவங்கள் இருக்கிறது.

கடைசியாக சென்னையில் பல்லாவாரத்தில்
இருந்து படித்து வந்தார். அவருடைய அனுபவங்கள் எனக்கு நன்றாக தெரியும். நெய்னா அப்பாவுடைய அனுபவங்கள் நிறைய உள்ளது நெய்னாவை தினமும் ஸுபுஹ் தொழுகைக்கு அழைத்துவிட்டு போவார்கள்.

அதுமட்டுமல்லாமல் அதிகாலையிலையை ஜாவியாளுக்கு கூட்டிக்கிட்டு போவார்கள்.

அவர்களுக்கு ஆகிரத்தில் நற்பதவியை கொடுப்பானாகவும் ஆமீன். அதைப்போல் நம் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் ஆகிரத்தில் நற்கூலியை தந்தருள்வானாகவும் ஆமீன்.

Kavianban KALAM, Adirampattinam said...

//பணங்காசுகள் எல்லோரிடமும் பற்றாக்குறையாகவே இருந்து வந்தாலும் பாசமும், நேசமும், அன்பும், பண்பும் அபரிமிதமாக இருந்து வந்த காலம் அது.//
உண்மையிலும் உண்மை!!

ஏங்குகின்றோம் அக்காலம் மீண்டும் வாராய்
எண்ணிப்பார் மனமென்றுச் சொன்னீர்ப் நேராய்
தூங்குகின்றோம் பெரியோரை மதிக்கா வண்ணம்
துளியளவு முயற்சியின்றிப் போகும் எண்ணம்
பாங்குசொல்லி யழைத்ததுமே விரைந்து சென்றுப்
பள்ளிவாச(லில்)தொழுதகாலம் கண்ணி லின்றுத்
தாங்கிநிற்கும் நினைவலைகள் வியப்பிற் றானே
தனிவழியைப் பார்த்துநிதம் நிற்பேன் நானே!

ZAKIR HUSSAIN said...

உங்கள் அப்பாவிடம் நானும் முன்பு பேசியிருக்கிறேன். சபீர் அப்போது சவுதிக்கு போன ஆரம்ப காலம் அவனுக்கென்று ஒரு நிலம் வாங்க MSM நகரில் உங்கள் அப்பாவிடம் பேச நேர்ந்தது. முன்பு பழைய போஸ்ட் ஆபிசுக்கு பக்கத்தில் இருந்த பத்திரம் ரெஜிஸ்டர் ஆபிசில் [ஜன்னலுக்கு அதே பச்சைகலரில் பெயின்ட் அடிப்பதை இன்னும் யாரும் விட்டபாடில்லை].


ஒரு வெள்ளைக்கைலியும் , வெள்ளை சட்டையும் ,தொப்பி & பெரியவர்கள் போடும் சால்வை மாதிரியான வெள்ளைத்துண்டுடன் ஒரு பிசினஸ் ஜென்டில்மேனை பார்த்த அனுபவம் இருந்தது.

Anonymous said...

இந்த காலத்தில் உள்ளவர்கள் தன்னுடைய வயதான தாய்,தந்தையரை கவனிப்பதில்லை. வேலைக்கு ஆட்களை வைத்து விட்டு ஏதோ சம்பளம் என்று கொடுத்துவிட்டு தன்னுடைய பெற்ற தாய்,தந்தையரை கண்டுகொள்வதில்லை.

தன்னுடைய தாய்,தந்தையர்கள் எவ்வளவு கஸ்ட்டப்படுகிறார்கள் என்பது அப்போ உள்ளவர்களும் சரி, இப்போ உள்ளவர்களும் சரி அதை சிந்திப்பதில்லை. தாய், தந்தையரை தான் வீட்டு வேலைக்காரிடம் ஒப்படைத்து விட்டோமே இனி நமக்கு என்ன பணிவிடை இருக்கிறது என்று நினைக்கிறார்கள்.

தாய்,தந்தையர்கள் உயிருடன் இருக்கும்போதை அவர்களுக்கு பணிவிடை செய்வதில்லை. அவர்களை அனாதையாக விட்டுட்டு வெளி ஊர்களுக்கும், வெளி நாடுகளுக்கும் செல்கின்றனர். இந்த கொடுமையை யாரிடம் போய் சொல்வது.

பெற்றோர்களுடைய பெயரில் வயல்,தோப்பு,நிலங்கள் என்று இருந்தால் அதை அவர்கள் உயிருடன் இருக்கும் போதை தன்னுடைய பெயருக்கு மாற்ற வேண்டுமே என்ற எண்ணம் வந்து விடுகிறது. அப்பொழுது மட்டும் கண்களுக்கு தனது பெற்றோர்களை தெறுகிறது.

பெற்றோர்களும் அந்த சொத்துக்களுக்கு கையெழுத்து போட்டுவிட்டால் அத்துடன் முடிந்து விட்டது என்று எண்ணுகின்றனர்.

Noor Mohamed said...

நெய்னாவின் வரிகள் நெஞ்சுருக வைத்துவிட்டன.

நான் சிறு வயதில் போஸ்ட் ஆபீசில் நின்று கொண்டிருக்கும் போது, மர்ஹூம் ஹாஜி. மு.செ.மு. முஹம்மது அபுல்ஹசன் அப்பா INLAND LETTER வாங்கி அதில் கடிதம் எழுதிக் கேட்பார்கள். எந்த பகுதியிலும் இடைவெளி கொடுக்காமல் முழுதுமாக கடிதத்தை நிரப்பி எழுதி அவர்களுக்கு கொடுக்கவேண்டும். சில நேரங்களின் அவர்களிடம் செய்திகளையெல்லாம் உள் வாங்கிக் கொண்டு, அதை முறைப்படுத்தி நிறைவாய் எழுதிக் கொடுத்து அவர்களிடம் பாராட்டுப் பெற்றிருக்கின்றேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு ஆகிரத்தில் நற்பதவியை கொடுப்பானாக. ஆமீன்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

சுபஹானல்லாஹ்!!! எல்லாவற்றுடன் ஆச்சரியமான ஒன்று இங்கு உண்டெனில் அது அ.நி. கட்டுரைக்கு தகுந்த குட்டை சுவருடைய கிணற்றை எங்கிருந்து தான் தேடிப்பிடித்து கொண்டு வந்து இங்கு இணைத்தார்களோ? தெரியவில்லை.

இதன் மூலம் தமக்கு வரும் ஒவ்வொரு கட்டுரைக்கும் அவர்கள் கொடுக்கும் தனிக்கவனமும், அக்கறையும் தான் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

கிணற்றில் வாளியையும் காணோம், கயிற்றையும் காணோமே? இப்பொழுது தேவையில்லை என்று யாரும் கடலைக்காரவனிடம் போட்டு விட்டார்களோ?

பாராட்டுக்கள் அதிரை நிருபருக்கும், அதன் எடிட்டராக்காவுக்கும் மற்றும் தொடரந்து கருத்திடும் அனைத்து அன்பர்கள், நண்பர்களுக்கும்.

அப்துல்மாலிக் said...

அக்கால பெரியவர்கள் தன் வேலையை தானே கஷ்டப்பட்டு (இப்போது போல் ஈசியாக கைக்கு எதுவும் கிடைத்துவிடுவதில்லை) செய்த வேலைகள் இப்போ உள்ள ஜெனரேஷன் ஒரு துளிக்கூட செய்வதில்லை அ செய்ய விரும்புவதில்லை என்னையும் சேர்த்தே...

ஒரு நிகழ்வை கண்முன்னே கொண்டுவந்து அதற்கு தக்க நெத்தியடியாக பெற்றோரையும் பெரியவாளையும் கவனிக்க தவறவேண்டாம் என்ற அட்வைஸும் நெகிழ வைத்தன, அந்த அப்பாவை கேள்விப்பட்டிருக்கேன் பார்த்திருக்க வாய்ப்பில்லை, அல்லாஹ் அவர்களுக்கு சொர்க்கைத்தை கபூலாக்கிவைப்பானாகவும்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோ. MSM நெய்னா முஹம்மது,

நீங்கள் குறிப்பிட்டுள்ள சம்பவம் உண்மையில் மறக்க முடியாத சம்பவம்.

பேரப்பிள்ளைகளிடம் அதிக பாசம் காட்டும் நல்ல அப்பாக்களில் MSM அபுல்ஹசன் அப்பாவும் ஒருவர், அவர்களின் கப்ருகளை சுவர்க்கத்தின் பூஞ்சோலையாக ஆக்கி வல்ல ரப்புல் ஆலமீன் அவர்களுக்கெல்லாம் நல்லருள் புரிவானாக!

KALAM SHAICK ABDUL KADER said...

இப்றாஹிம் அன்சாரி காக்கா அவர்கள் குறிப்பிட்டுள்ள அதே இடத்தில் அடியேனும் tuition class (accountancy & basic English grammar) நடத்தியிருக்கின்றேன். நான் பாடம் நடத்திய இடங்களில் என்னை மிகவும் கவர்ந்த இடம் அவ்விடம் மட்டுமே.
1) காற்றோட்டமான இடம் (அன்னாரின் கபுரும் காற்றோட்டமாக அமைக)
2) நல்ல வெளிச்சம் தரும் ( அன்னாரின் கபுரும் வெளிச்சமாக அமைக)
3) விசாலமான வயற்பரப்பு (அன்னாரின் கபுரும் விசாலமாக அமைக)
4) அவ்விடம் இன்று MSM நகராகக் கட்டிடங்கள் உருவாகி விட்டன (அன்னார்க்கு சுவனத்தில் உயர்வான இடம் கட்டப்பட்டிருகும்)

ஹாபிழ் முஹம்மத் அப்துல்லாஹ் அவர்களின் வாப்பா என்று நினைக்கின்றேன், சரியா MSM?

Anonymous said...

// ஹாபிழ் முஹம்மத் அப்துல்லாஹ் அவர்களின் வாப்பா என்று நினைக்கின்றேன், சரியா MSM?//

அபுல் கலாம் காக்கா அவர்களை நீங்கள் சொன்னது சரிதான்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அபுல் கலாம் காக்கா, உங்களின் து'ஆ இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படட்டுமாக....ஆமீன்.

தங்கள் குறிப்பிட்ட படி ஹாபிழ் முஹம்மது அப்துல்லாஹ் அவர்களின் தகப்பனார் தான் மேலே கட்டுரையில் குறிப்பிட்டுள்ள என் அப்பா.

நம் கடற்கரை உப்புக்காற்று மெல்லக்கடந்து ஏரிப்புறக்கரையை தாலாட்டிய பின் வயல்வரப்புடன் நிமிர்ந்து நிற்கும் கருவேலமரங்களில் புகுந்து ஆட்டம் போட வைத்து எம்.எஸ்.எம். நகரின் முகப்பில் கட்டப்பட்டிருந்த அந்த நீண்ட திண்ணையைக்கொண்ட விடுதி முன் படுத்துறங்கும் அந்த காலம் இன்று கனவுகளில் கூட வந்து செல்வதில்லை ஏனோ?

பெட்டி படுக்கையுடன் கம்பனின் கடைசிப்பெட்டியில் ஏறிச்சென்று விட்டதோ என்னவோ?

சின்ன‌ப்ப‌ய‌ல் என‌க்கே அந்த‌ கால‌ங்க‌ளை நினைத்து உள்ள‌ம் ஏங்கி தவிக்கும் பொழுது என்னை விட‌ வ‌ய‌திலும், அனுப‌வ‌த்திலும் மூத்த‌ உங்க‌ளுக்கெல்லாம் உள்ள‌த்தில் அவை என்ன‌ பாடுப‌டுத்தி நிற்குமோ? அந்த‌ அல்லாஹ்விற்கே வெளிச்ச‌ம்.

வெறுத்து ஒதுக்கும் இந்த‌க்கால‌த்தை கூட‌ வரும் கால‌த்தில் இளைய‌ ச‌முதாய‌ம் ஒப்பிட்டு க‌விதை வடித்து க‌ல‌ங்கி நிற்குமோ? தெரிய‌வில்லை.

சுருங்க‌க்கூறின், இன்று ப‌ர‌வ‌லாக மக்களிடம் ப‌ண‌ம் இருந்தும் கிடைக்கும் ச‌ந்தோச‌த்தில் த‌ர‌ம் இல்லை.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாம அலைக்கும்(வரஹ்)

//// காலம் சென்ற எத்தனையோ நம் குடும்ப, ஊர் பெரியவர் முதல் சிறியவர்கள் வரை அனைவரின் பாவங்களையும் மன்னித்து அவர்களின் கப்ருகளை சுவர்க்கத்தின் பூஞ்சோலையாக ஆக்கி வல்ல ரப்புல் ஆலமீன் அவர்களுக்கெல்லாம் நல்லருள் புரிவானாக....! ////

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
//// காலம் சென்ற எத்தனையோ நம் குடும்ப, ஊர் பெரியவர் முதல் சிறியவர்கள் வரை அனைவரின் பாவங்களையும் மன்னித்து அவர்களின் கப்ருகளை சுவர்க்கத்தின் பூஞ்சோலையாக ஆக்கி வல்ல ரப்புல் ஆலமீன் அவர்களுக்கெல்லாம் நல்லருள் புரிவானாக....! ////

KALAM SHAICK ABDUL KADER said...

தம்பிகள் அபூபக்கர் (அமேஜான்)மற்றும் MSM நெய்னா முஹம்மத் ஆகியோர்க்கு ஜஸாக்கல்லாஹ் கைரன். உண்மையில் நீங்கள் குறிப்பிட்ட அந்தத் தென்றலின் சுகம் இந்த “ஏசி” காற்றுத் தருமா? அக்கடற்காற்றினால் உண்டாகும் சுகத்தினை அனுபவக்கவும் நான் போதிக்கும் பாடங்கள் மனதில் பதியவும் வேண்டியே அவ்வறையினை வாடகைக்கு எடுத்தோம். பிறகு, மாணவர்களில் சிலரின் ஒத்துழைப்பின்மைக் காரணமாக அவ்வறையினை விட்டு விட்டாலும் தொடர்ந்து அக்காற்றினை அனுபவிக்க வேண்டுமென்ற என் பேரவாவின் காரணமாக ”மிஸ்கின் பள்ளிவாசலில்” அந்த டியூசன் வகுப்பினைத் தொடர்ந்தேன்.

அன்புத் தம்பி அபூபக்கர் (அமேஜான்):
உங்களின் CV ஐ எனது மின்மடல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறேன்:
kalamkader2@gmail.com, kalaamkathir7@gmail.com
உங்களுடைய ஆங்கில மொழிப் புலமையினை வளர்த்துக் கொண்டால் நேர்முகத்தேர்வில் வெல்ல முடியும். என்னோடுத் தொடர்பு கொண்டு அலைபேசியில் பேச வேண்டுகிறேன் 0971-50-8351499

Unknown said...

மறக்கவே முடியாத நிகழ்ச்சி ...........!!
அடி சக்கே என்று சிரித்துக்கொண்டே சொல்லும் முகம் நினைவுக்கு வந்தது .....!!!!
MSM அப்பா ஒரு பக்க Gentleman !!!
அவர்கள் ஒரு விசயத்தை DEAl செய்யும் விதம் மிகவும் பக்குவுமாக இருக்கும் .

sabeer.abushahruk said...

கண்கள் பனித்துவிட்டன. அப்பா கிணற்றுக்குள் விழுந்தும் பிழைத்ததற்கு அவர்களின் நல்லமல்களே காரணமாக இருந்திருக்கும்.

அல்லாஹ் அவர்களுக்கு சுவனத்தை நல்கட்டும்.

தலைத்தனையன் said...

என்றுமே சிரித்த முகம் கொண்ட அப்பா எனக்கு மாமா முறை. ஏழுபோல் முதுகு வளைந்த நிலையிலும் அவர்கள் ஊன்றுகோல் ஊண்டி எல்லா வக்துகளுக்கும் பள்ளி சென்று ஜமா'அத்துடன் தொழுது வந்தது நம் போன்றவர்களுக்கு பெரிய படிப்பினையும், நம் ஒடித்து எறியப்படவேண்டிய சோம்பேறித்தனத்திற்கு பாடமும் ஆகும்.

MOHAMED THAMEEM

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும்,


MSM அப்பா : பேத்தியே! உனக்கு ரெண்டு பொக்கிசம் சொல்லி தருகிறேன் ! அதை நீ கடைசிவரையிலும் ஓதி வரணும் !

உம்மு யூசுப் : சொல்லுங்க அப்பா !

MSMஅப்பா : மக்ரிபுக்கும் இஸாவுக்கும் இடையில் வாக்கியா சூராவும் ,தபாரகல்லதி சூராவும் ஓதனும் , தொடர்ந்து ஓதினால் உலகில் இரண அபிவிருத்தியும் ,கபுரில் கஷ்டங்கள் ஏற்படாமலும் நம்மை காப்பாற்றும் அதனால் நீ தினமும் இதை ஓதி வரணும் !

உம்மு யூசுப் :சரிங்கப்பா !

Anonymous said...

அபுல்கலாம் காக்கா அவர்களுக்கு என்னுடைய ஜஸாக்கல்லாஹ் கைரன். இன்ஷா அல்லாஹ் நான் என்னுடைய சீவியை அனுப்பிவைக்கிறேன் உங்களுக்கு.

உங்கலமாதிரியான காக்காமார்கள் தான் இந்த சின்ன பயனுக்கு தேவை நல்லா ஊக்க படுத்துவதற்கு. இன்ஷா அல்லாஹ் உங்களுடன் அலைபேசியில் தொடர்பு கொள்கிறேன்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

நண்பர் அப்துல்ரஹ்மானின் உம்மு யூசுஃப் மூலமான அப்பான நினைவூட்டல் அருமை.

அப்பா தெருவில் நடந்து வந்தாலே அந்த வழியே நின்று அரட்டை அடித்துக்கொண்டிருக்கும் வாலிபக்கூட்டம் 144 தடை உத்தரவு போட்டது போல் அப்பாவைக்கண்டதும் கலைந்து விடும். காரணம் அவர்கள் வழிய சென்று அவர்களை பள்ளிக்கு தொழ கண்டிப்புடன் அழைப்பதால். அதனால் அந்த வாலிபக்கூட்டம் என் அப்பாவிற்கு எஸ்.பி. அப்பா (Superintendent of Police) என்று பெயர் வைத்து அழைத்தார்கள். அப்படி அழைத்தவர்களுக்கு இன்று ஞாபகமில்லாமல் இருக்கலாம். அப்படி அழைத்ததை கேட்ட எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது
அல்ஹம்துலில்லாஹ்...

Shameed said...

நெய்னாவின் அப்பா ஆக்காம் இங்கு அனைவரது அப்பாக்களையும் நினைவு படுத்தி விட்டது காலம் சென்ற அனைத்து அப்பாக்களுக்கும் இறைவன் ஆகிரத்தில் நற்கூலியை தந்தருள்வானாகவும் ஆமீன்.

KALAM SHAICK ABDUL KADER said...

Dear Brother Abubakr (Amezan),
I received your CV and forwarded to my contacts.

Insha Allaah I shall contact you tomorrow by mobile.

Everything we shall discuss then.

Regards,

ABULKALAM

Yasir said...

மிகவும் மனதை பாதிக்கவைத்த பதிவு..அப்பாக்களின் அன்பே தெரியாத நான் இதனைபடிக்கும் ஒரு ஏக்கத்தை ஏற்படுத்துகிறது...அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து நல்லோர்கள் கூட்டத்தில் சேர்ப்பானாக

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அப்பா உயிருடன் இருக்கும் காலத்திலேயே அவர்களின் பாசமிகு மூத்த மகன் (மர்ஹூம் முஹம்மது சேக்காதி மாமா) இனிப்பு நீரால் சில காலம் அவதிப்பட்டு பின் மரணிக்க நேர்ந்தது. அவர்களின் ஜனாசாவைப்பார்த்து அப்பா சொல்லி அழுதது "நான் தான் முன்னாடி போய் சேர்ந்திருக்க வேண்டும். நீ எனக்கு முன்னாடி போய் சேர்ந்திட்டியே தம்பீ" என்று சொல்லி வயதான காலத்தில் அழுதது அதை பல வருடங்கள் கழித்து இன்று நினைக்கும் பொழுது நெஞ்சை உலுக்குகிறது.

ZAEISA said...

அஸ்ஸலாமு அலைக்கும்............
bro ......msm .........
உங்கள் அப்பாவை நினைவுபடுத்தி,எழுதியிருந்தீர்கள்.மர்ஹூம் உங்கள்
அப்பாவுக்கு என்றுமே சிரித்த முகம்தான்.கணமான குரலிருந்தும் சாந்தமாகத்தான் பேசுவார்கள்.ஹாபிழ்.அப்துல்லாஹ் மகனோடு ரொம்பவும்
பூரிப்பாக நடந்து போவது என் நினைவில் உண்டு.எங்கயோ போன உங்க
ஒரு மாமாவை நீங்கள் பார்த்ததுண்டா........?

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோ. ஜயிசா (தங்களின் முழுப்பெயர் தெரியவில்லை..மன்னிக்கவும்)

தங்களின் கருத்திடலுக்கு மிக்க நன்றி. நான் இவ்வுலகை எட்டிப்பார்க்குமுன் என் பெற்றோர்கள் அண்டை மாநிலமான கர்நாடகாவில் உள்ள மைசூரில் பணிநிமித்தமாக குடும்பத்துடன் வசித்து வரும் பொழுது உடன் பிறந்த ஆறு சகோதரர்களுடன் நடுவில் பிறந்த ஒரே ஒருத்தியான‌(என் தாயாரை)பாசமிகு சகோதரியை காண ஆவல் கொண்டு ஊரிலிருந்து வாய் பேச இயலாத ஒரு சகோதரன் மொழி தெரியாத அண்டை மாநிலத்திற்கு வீட்டில் யாரிடமும் சொல்லாமல் பேருந்துகள் சில ஏறி எங்கோ சென்றவர் (என் மாமா) இன்று வரை வீடு திரும்பவில்லை. அவர்கள் இன்று உலகில் எங்கோ ஒரு மூலையில் உயிருடன் இருக்கிறார்களா? இல்லை இறைவன் நாட்டப்படி த‌ன் உல‌க‌ ப‌ய‌ண‌த்தை முடித்துக்கொண்டு ம‌றுல‌க‌ம் சென்று விட்டார்க‌ளா? அவ‌ர்க‌ளையும், ந‌ம்மையும் ப‌டைத்த‌ அந்த‌ அல்லாஹ்வுக்கே ந‌ன்கு விள‌ங்கும்.

நான் பிற‌க்குமுன் ம‌ர‌ணித்த‌ என் மூத்த‌ ச‌கோத‌ர‌ன், மூத்த‌ ச‌கோத‌ரி, காணாம‌ல் போன‌ என் மாமா, வாழ்வில் கண்டிராத‌ என் வாப்பிச்சா வீட்டு மு.செ.மு. அப்பா இன்னும் எத்த‌னையோ வாழ்வில் க‌ண்ட‌, க‌ண்டிராத‌ பெரிய‌வ‌ர்க‌ளையும், சிறிய‌வ‌ர்க‌ளையும் இறைவ‌ன் நாளை ம‌றுமை நாளில் ஒரு சேர‌ காண‌ ந‌ம‌க்கெல்லாம் ந‌ல்ல‌ருள் புரிய‌ வேனும்....ஆமீன்..

தாங்க‌ள் காணாம‌ல் போன‌ என் மாமா ப‌ற்றி எதேனும் தெரிந்திருந்தால் தெரிவியுங்க‌ளேன். தெரிந்து கொள்ள‌ ஆவ‌லாக‌ உள்ளேன்.

வ‌ஸ்ஸ‌லாம்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அந்த‌ கால‌ங்க‌ளில் அப்பா கையில் ஐஃபோன் இருந்திருந்தால் ஃபோட்டோ எடுத்து வைத்து காணாப்போன மாமாவை ந‌ம‌க்கு காட்டி இருப்பார்க‌ள். என்ன செய்வது? கொடுத்து வைக்க‌வில்லை.

ZAEISA said...

bro .........msm ...........,
உங்கள் இன்னும் திரும்பாமலிருக்கும் மாமா அவர்களை தினமும் பார்த்த
அனுபவம் எனக்குண்டு.உங்க பெரியம்மாவின் முகத்தோற்றம்.சுறு சுறுப்பான
நடை,ஒரு பட்டான் இளைஞ்ச்னைப் போன்ற தேகம்.அவர்களின் வாப்பா[உங்க
அப்பா]ஏரியாவில் தான் புழக்கம் அதிகம்.உங்கள் ஏக்கம் தீர அல்லாஹ் உங்க மாமா திரும்பி வர அருள்வானாக.......ஆமீன்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

சகோ. ஜயிசா, தங்களின் அறிய தகவலுக்கு நன்றி.

என் தாயாரை காண ஆவலுடன் மைசூர் புறப்பட்டு சென்ற வாய் பேச இயலாத, காது கேளாத, மொழியறிவு எதுவும் இல்லாத அந்த மாமா தான் காணாமல் போன பின் வாழ்வில் என்ன, என்ன வேதனைகளையும், சோதனைகளையும் அனுபவித்திருப்பார்களோ? எம்மால் யூகிக்க முடியவில்லை. அல்லாஹ் உலகில் அவர்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நல்லருள் புரிய வேனும்....ஆமீன்.

திருச்சி சையத் இப்ராஹீம் Trichy Syed Ibrahim திருச்சிக்காரன் திருச்சி்காரன் said...

Dear Sir, Me Syed Ibrahim From Dubai, Native Trichy.
I used to view your blogspot now and then.Especially this article "அப்பாவுக்கு நேர்ந்த ஆபத்து...(உண்மைச்சம்பவம்)" I couldnt able to control my tears. I am in no way related to adirai but this article made me to shed tears and to feel as if my relation had the same experience.
Thanks for the writer / and the editor.
Please continue this article as the new generations are very fast and going towards hell only.

Wasslaam.

syedibrahim_a@yahoo.com

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு