Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

முதல் "கணினித் தமிழ்ப் படைப்பாளரு"டன் ஒரு சந்திப்பு! 33

அதிரைநிருபர் பதிப்பகம் | March 27, 2012 | , , , ,


இந்தப் பதிவை நீங்கள் உங்கள் கணினித்திரையிலோ அல்லது பிரிண்ட் எடுத்தோ வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள் எனில் அதற்குப் பின்னணியில் மூலகாரணமாக இருந்த ஒருவரைப் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். 1980களின் இறுதியில் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் இயங்குதளம் பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் பெரும்பாலான கணினிகளில் ஆங்கிலம் கோலோச்சியபோது,சவூதி அரேபியாவிலுள்ள தமாம் மாநிலத்தின் சட்டத்துறையில் அலுவலச் செயலாளராக பணியாற்றியவரின் முயற்சியால் அது முதன்முதலாக சாத்தியமானது என்பது பலருக்கும் வியப்ளிக்கும் செய்தியாகவே இருக்கக்கூடும்.

பிரபல மார்க்க அறிஞர் இக்பால் மதனீ அவர்கள் தலைமையிலான குழு, திருக்குர்ஆனைத் தமிழில் மொழியாக்கம் செய்ததைத் தமிழில் தட்டச்சு செய்யும் பணிக்கு உதவியாக கணினியையும் பயன்படுத்த முனைந்தபோது, கணினிகளில் தமிழ் உள்ளீடு செய்யும் வசதிகள் அக்காலகட்டத்தில் இருந்திருக்கவில்லை. MS-Windows V-1 இல் BITMAP EDITOR என்ற மென்பொருள் உதவியால் சுயமாக தமிழ் எழுத்துருக்களை வரைந்து,மற்றொரு மென்பொருள் உதவியால் WINDOWS இயங்குதளத்தில் செயல்படும் கணினிகளில் வாசிக்கும்வகையில் மாற்றப்பட்டு உருவான முதல் எழுத்துருக்களுக்கு TOPAZ, DIAMOND, SAPPHIRE  என்ற பெயர்களிட்டு அழகு தமிழ் கணினியில் முதல் அங்கீகாரம் பெற்ற பெரும் பேறு இவராலேயே கிடைத்தது.

இந்தத் தகவலை துபாயிலிருந்து வெளியாகும் கல்ஃப் ந்யூஸ் (20.11.1993) ஆங்கில நாளிதழ், "Tamil in MS Windows" என்ற தலைப்பில் செய்தியாக வெளியிட்டுப் பாராட்டி இருந்தது. மற்றும் "விண்டோஸில் பவனிவரும் தமிழ்" எனும் தலைப்பில் (ஜென்னி) ஒரு கட்டுரையைத் தமிழ்க் கம்ப்யூட்டர் இதழ் (28.8-10.9.1995) வெளியிட்டது. MS WINDOWSல் இயங்கக் கூடிய பல எழுத்துருக்கள் இப்போது புழக்கத்தில் வந்து விட்டன.ஆனால்90 களின் தொடக்கத்தில் எம் எஸ் விண்டோஸில் இயங்கக் கூடிய எல்லா மென்பொருளையும் தமிழில் காட்டச் செய்தவர் அவர்!.

1995களில் இணையம் பரவலாகப் புழக்கத்திற்கு வரத்தொடங்கியபோது, பல்துறை எழுத்தாளர் சுஜாதா போன்றோர் "மின்னம்பலம்" என்ற தமிழ் இணைய தளத்தில் எழுதி வந்தார்கள்.இங்கொன்றும் அங்கொன்றுமாக ஓரிரு தமிழ் தளங்களே இருந்தன. கணினியில் தமிழ் வாசிக்க அதற்கான எழுத்துருவைத் தரவிறக்கம் செய்தபிறகு, கணினியில் தேவையான மாற்றங்களைச் செய்தால்தான் அந்தந்த நாடுகளுக்கேற்பத் தமிழைத் தெளிவாக வாசிக்க முடியும்.

இந்தச்சூழலில்தான் அகிலத்திற்கே அருட்கொடையாக வந்த திருக்குர்ஆன் தமிழிலும் இணையவலம்வர வேண்டும் என்ற முயற்சியில் இறங்கி, http://sites.google.com/site/tamilquraan2/ 'இணையத்தில் இறைமறை' என்ற முதல் இஸ்லாமியத் தளம் மட்டுமின்றித் திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பும் முதல்முதலாய் இணையத்தில் இவரால் வலம் வந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

இவை மட்டுமின்றி, தமிழகத்தில் வெளியாகும் தினமணி போன்ற நாளிதழ்களில் அவ்வப்போது வெளிவரும் சில கட்டுரைகளில் இஸ்லாத்திற்குப் புறம்பான குற்றச்சாட்டுகளுக்கு "அதி.அழகு" என்ற பெயரில் (முஸ்லிம் பெயரில் எழுதப்படும் வாசகர் கடிதங்கள் புறக்கணிக்கப்பட்டதால்) வாசகர் கடிதமாகவும், கட்டுரையாகவும் அனுப்புவதும் இவரது பொழுதுபோக்கு.

கணினி மற்றும் இணைய வல்லுனர்களை உலகத் தரப்படுத்த வழங்கப்படும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் MCSE சான்றிதழைத் தமது 50+ வயதில் பெற்று, நவீன கல்விக்கு வயது ஒரு தடையில்லை என்பதற்கு முன்மாதிரியாக விளங்கினார். அதிரையர்களின் மின்மடல் குழுமங்களில்,பகிர்ந்து கொள்ளப்பட்ட உரையாடல்களில் சமூக அக்கரை கலந்த கருத்துக்கள் நறுக்குத் தெரித்தாற்போல் 'நச்'சென்று இருக்கும்.

தமிழ் மொழியில் மட்டுமின்றி ஆங்கிலம்,அரபி, உர்தூ, மலையாள மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.தாம் பெற்ற கல்வி ஞானத்தைத் தம்மைச் சுற்றியுள்ளவர்களும் கற்றுபயன்பெற வேண்டுமென்ற ஆவலில் ஷார்ஜாவின் மஸ்ஜித் அல் ஃகலஃப் பழைய கட்டிடத்தில் குர் ஆன் ஓதுவிக்கும் பணியிலும் இளைஞர்களின் பேச்சுத்திறனை வளர்க்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தார். துபையில் யில் இஸ்லாமிய வினாக்களுக்கு விடையளிக்கும் பொறுப்பும் ஏற்றிருந்தார்.சத்தியமார்க்கம்.காம் தளத்தில் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார். 2010 கோவையில் நடந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அதிரையின் அருந்தவப் புதல்வர்களில் ஒருவரான மர்ஹூம்.உமர்தம்பி (தமிழ் ஒருங்குரி எழுத்துக்களை உருவாக்கிய கணிமைக் கொடையாளர்) அவர்களுக்கு  இணைய மாட்டில் அரங்கம் அமையப் பெறவும் அதோடு சிங்கப்பூர் தமிழ் சங்கம் "தமிழ் இணைய அறிஞர்" என்ற விருது கிடைப்பதற்கான முயற்சிகளில் இவரது அர்ப்பணிப்பும் ஈடுபாடும் நிச்சயம் நன்றிக்குரியவை. 

தமிழகத்தின் பிரபல சமுதாய மற்றும் மார்க்க அறிஞர்கள் இக்பால் மதனீ, கமாலுத்தீன் மதனீ,அப்துல்காதிர் மதனீ, அப்துஸ் ஸமது மதனீ, பி.ஜைனுல் ஆபிதீன், மர்ஹூம்.காயல் S.K.   , காயல் ஹாமித் பக்ரீ, பேரா.ஜவாஹிருல்லாஹ், S.M. பாக்கர் என அமைப்புப் பேதமின்றி அனைவருடனும் தொடர்பிலிருந்ததோடு அதிரையின் மார்க்க வழிகாட்டி அமைப்பான 'தாருத் தவ்ஹீதை' உருவாக்கிய மூத்த தவ்ஹீத் பிரச்சாரர். பிரபல எழுத்தாளர் அதிரை அஹமது, "தோழர்கள்" நூருத்தீன் ஆகியோருடனும் தொடர்பிலிருந்து பல்துறை சிந்தனையாளர்களுடன் நட்பிலிருப்பது தற்காலத்தில் அரிய விசயமாகும்.
==================
இத்தனை சிறப்புகளையும் பெற்றிருந்தாலும் கொஞ்சம்கூடப் பெருமையின்றி எளிமையாக,குடத்திலிட்டவிளக்காக, தேனீயாய் உழைத்து ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ஷார்ஜா எக்ஸ்போ சென்டர் கணினிப்பிரிவில்உயர்பொறுப்பில் இருந்து, இம்மாதம் மார்ச்-2012 முதல் ஓய்வு பெற்றுள்ள நமது மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய கடற்கரைத்தெரு @ ஹாஜா நகர் ஜமீல் காக்கா அவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அதிரைவாசிகள்,மற்றும் பல ஊர்களைச் சேர்ந்த நண்பர்கள்,அபிமானிகள் இணைந்து இன்ஷா அல்லாஹ் மார்ச்-30,2012  (வெள்ளிக்கிழமை) அன்று துபாய் மம்சார் பூங்காவில் "அதி.அழகுடன் ஓர் அழகிய மாலை" என்ற சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். 

இச்சந்திப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் nainathambi@live.in / adiraiwala@gmail.com ஆகிய மின்மடல் முகவரியில் அல்லது 055-4212 575  /  050-4737200 என்ற செல்பேசி எண்களில் மார்ச்-28 ,2012 க்குள் தொடர்பு கொள்ளலாம். 

-அதிரைநிருபர் குழு

33 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அறவே தெரியாத அரிய தகவல்கள்!

அல்ஹம்து லில்லாஹ்.
தமிழ் மாமனிதர் ஜமீல் காக்கா அவர்கள் மார்க்கம், தமிழ், கணினி சேவைகளில் தொடர்ந்து ஈடுபட இறைவன் அவர்களுக்கு நீண்ட ஆரோக்கியத்துடன் கூடிய வாழ்வை தர துஆ செய்வோம்.

Noor Mohamed said...

பார்த்தேன். படித்தேன். பரவசமடைந்தேன். ஆனால் "அதி.அழகுடன் ஓர் அழகிய மாலை" என்ற சந்திப்பில் கலந்து கொள்ள முடியவில்லையே.

கணினிக்கு கன்னித் தமிழ் தந்த ஜமீல் காக்கா அவர்களின் நற்பணிகள் நாளும் சிறந்திட வல்ல இறைவன் அருள் புரிவானாக.

சேக்கனா M. நிஜாம் said...

சகோ. ஜமீல் அவர்களுக்கு என் வாழ்த்துகள்

மேலும் "அதி.அழகுடன் ஓர் அழகிய மாலை" என்ற சந்திப்பு நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவேற என் வாழ்த்தும் / துவாவும்

தங்களின் சமுதாயப் பணிகள் தொடர வேண்டும்................................

Yasir said...

ஜமீல்(காக்கா) என்ற ஜாம்பவானை பற்றி நாங்கள் சில அறிந்த / பல அறிந்திராத தகவல்கள்...அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ,நோய் நொடியற்ற வாழ்வைத்தர நாங்கள் அல்லாஹ்விடம் துவாச்செய்கிறோம்...மவுலிது,தர்ஹா வணக்கம்,இன்ன பல அநாச்சாரங்களை துடைத்தெறிய ஏற்பட்ட புரட்சிக்கு வித்திட்டவர் ஜமீல் காக்கா அவர்கள்

அவர்களிடம் இருந்து இன்னும் பல சமுதாய, மார்க்க பணிகளை எதிர்பார்த்து கடற்கரைதெரு சார்பாக மிகப்பெரிய பொறுப்பை காக்கா அவர்களுக்கு கடந்த அமர்வில் ஏகமனதாக வழங்கி இருக்கின்றோம்...காக்காவின் அவர்களின் பேச்சுக்கு செவிசாய்த்து அவர்களின் பணிக்கு உறுதுணையாக என்றும் நிற்போம்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஜமீல் காக்காவின் சமூக சேவை தொடர எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்வோமாக.

"அதி.அழகுடன் ஓர் அழகிய மாலை" சந்திப்பு நிகழ்ச்சியில் சந்திக்கலாம்.. இன்ஷா அல்லாஹ்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஆணித்தரமாக பேசக் கூடிய ஜமீல் காக்காவை தமாமில் 1993 ல் சந்தித்ததோடு சரி அதற்க்கு பிறகு சந்திக்க வாய்ப்பு இல்லாமல் போனது.

மேலும் "அதி.அழகுடன் ஓர் அழகிய மாலை" என்ற சந்திப்பு நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவேற ஏக இறைவன் உதவி செய்வானாக!

Anonymous said...

ஜமீல் காக்கா அவர்களை உங்கள் சமுதாய பணிகள் தொடர்ந்து மார்க்கத்திர்க்காகவும் செயல்படுவதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாகவும் ஆமீன்

Unknown said...

என் இணைய எழுத்துக்கு, சமீபத்திய வழிகாட்டி,தவறுகளை சுட்டிக் காட்டும் ஜாம்பவான். இவரைப் போன்றவர்களுடன் நட்பு பாராட்டுகிறோம் எனும்ப்போது, பெருமையாகவே இருக்கிறது.

ஜமீல் காக்கா அவர்கள்
நோய் நொடியற்று பல்லாண்டு வாழ வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன்.

Anonymous said...

இந்த இனிய மாலை பொழுதில் அதிரைநிருபர் இணைய தளத்தில் மிக பயனுள்ளதாக தந்துள்ளீர்கள் என்னுடைய துஆக்கள்.

Abu Easa said...

மாஷா அல்லாஹ்!

அல்லாஹ் காக்காவின் பனிகளைப் அங்கீகரித்துக் கொள்வானாக! இறுதிவரை அவன் பொருந்திக்கொண்ட நன்மக்களாக வாழ்ந்து மரனிக்க அருள்புரிவானாக!

மஅஸ்ஸலாம்
அபுஈசா

Ebrahim Ansari said...

சகோதரர் ஜெமீல் அவர்களுடன் நடைபெறவிருக்கும் சந்திப்பில் கலந்துகொள்ள ஆவலுடையவனாக இருக்கிறேன். இன்ஷா அல்லாஹ்.

ZAKIR HUSSAIN said...

ஜமீல் நானாவின் பணி இன்னும் தொடரும்..அதற்கு இடம் முக்கியமல்ல என நினைக்கிறேன். சந்திப்பு நிகழ்வு இனிதே நிறைவேற வாழ்த்துக்கள்.

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

மிகவும் எளியவனான என்னைப் பற்றி இத்துணை நீண்ட பதிவு / விளம்பரம் தேவையற்ற ஒன்று. ஒருவர் மீது கொண்ட அன்பு / மரியாதை எல்லை மீறும்போது இடறுதல் என்பது எவராலும் தவிர்க்க முடியாது என்பதற்கு அசைக்க முடியாத சான்றாகச் சில தவறான தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

1. நான் தம்மாமிம் சட்டத்துறை அலுவலகத்தில் (1981-1993) பணியாற்றியது உண்மைதான். அங்கு மொழிபெயர்ப்புப் பிரிவு ஒன்று இருந்ததும் உண்மையே. ஆனால், நான் மொழிபெயர்ப்பாளனாகப் பணியாற்றவில்லை; . அலுவலச் செயலாளனாகவே இருந்தேன். பேனாவால் எழுதப்பட்ட மொழிபெயர்ப்புகள், வழக்குகள் பற்றிய வாதங்கள் ஆகியவற்றைப் படித்துப் பார்த்து, பிழை ஏதுமிருந்தால் சரிசெய்து அதைக் கம்ப்யூட்டரில் (8" ஃப்ளாப்பி) ஏற்றி, இரு மொழிகளிலும் அச்சிட்டுக் கொடுப்பதும் எனது பணிகளுள் முக்கியமானவை. புகழ்பெற்ற இமாம்கள் பலரது நூல்களும் பல்வகையான சட்ட நூல்களும் அலுவலகத்தில் இருந்ததால், வாய்த்தபோது அவற்றை வாசித்ததில் அல்லாஹ்வின் அருளால் அரபு மொழியின் அடிப்படை அறிவு பெருகியது. அதற்கு தம்மாம் அலுவலகம் அடிக்கல்லாக இருந்தது என்பதே உண்மை.

2. அதிரை 'தாருத் தவ்ஹீத்' அமைப்பின் உருவாக்கம் என்பது மூத்த சகோதரர்களான அஹ்மது காக்கா, அன்வர் காக்கா ஆகியோரோடு எனது வலக்கரமாக விளங்கிய தம்பி நாசருடன் நான் அடங்கிய சிறு ட்டீம் ஒர்க். அதில் நான் ஓர் உறுப்பினன் மட்டுமே. ஊரிலிருந்தபோது ஈராண்டுகள் செயலாளனாகச் செயல்பட்டிருக்கிறேன்.

நல்லவேளை!

"இவர் வானத்தை வில்லாக வளைத்தவர்; மணலைக் கயிறாகத் திரிக்க வல்லவர்" என்று சேர்த்து எழுதாததுவரை மகிழ்ச்சி!

எனக்காக துஆச் செய்த சகோதரர்களுக்கு எனது நன்றி! ஜஸாஹுமுல்லாஹு கைரா!

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். பல் துறை வல்லுனனாய் இருக்கும் ஜமில் காக்காவுடன் ஆன சந்திப்பு இனிதே நடைபெற வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்.மேலும் இந்த வல்லுனர், அறிஞர் பணி ஓய்வு பெற்றுவிட்டார்கள் என்பது ஒருவகையில் கணம் கலந்த மகிழ்சி! இவர்களின் ஆலோசனையும்,பயன்பாட்டையும் அதிரை நிருபர் அதிகம் பயன் படுத்திகொள்ளவும். ஒரு சிறு திருத்தம்.
"இவை மட்டுமின்றி, தமிழகத்தில் வெளியாகும் தினமணி போன்ற நாளிதழ்களில் அவ்வப்போது வெளிவரும் சில கட்டுரைகளில் இஸ்லாத்திற்குப் புறம்பான குற்றச்சாட்டுகளுக்கு "அதி.அழகு" என்ற பெயரில் (முஸ்லிம் பெயரில் எழுதப்படும் வாசகர் கடிதங்கள் புறக்கணிக்கப்பட்டதால்) வாசகர் கடிதமாகவும், கட்டுரையாகவும் அனுப்புவதும் இவரது பொழுதுபோக்கு".- இதில் உள்ள வார்தையில்
இவரின் பொழுதுபோக்கு என்பது தவறாகும். இவ்வாறு சமூக அக்கறையுடன் செய்வது பொழுதுபோக்கு என்பதைவிட சமூதாய நோக்கு" என இருந்திருந்தால் இந்த அறிஞரின் சமூக அக்கறை விளங்கி இருக்கும்.(சமுதாய செயல்பாடுகளிலேயே பொழுதை போக்குபவர் என நீங்கள் கொண்டிருந்தாலும் அந்த இடத்தில் வரும் பொழுதுபோக்கு என்கிற வார்த்தை பொருள் பிழை என நான் என்ணுகிறேன் . பல மேதைகள் இருக்கும் இடத்தில் என் சுட்டி காட்டல் தவறாக இருந்தால் மன்னிக்கவும் ஆனால் இதற்கு ஜமில் காக்கா பதில் சொல்லவேண்டாம் காரணம் அவர்கள் தம்மை பற்றி உயர்வாய் சொல்லபட்டால் அதை இல்லை யென்று மறுத்து சொல்வார்கள். இதுதான் அறிஞர்களின் செயல்).அல்லாஹ் மிகப்பெரியவன்.

Anonymous said...

//நான் மொழிபெயர்ப்பாளனாகப் பணியாற்றவில்லை; . அலுவலச் செயலாளனாகவே இருந்தேன்.//

அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்..

ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா தங்களின் சுட்டலுக்கு..

அன்பின் வெளிப்பாடு அதோடு பழகு மொழி வேறு வாரம் ஒருமுறை வருவதால் மொழி(யை) பெயர்க்காமல் மொழி (உங்கள்) பெயர் சொல்வதையும் கவனித்து வருகிறோமா அதான் காக்கா...

திருத்தம் செய்து விட்டோம்...

அன்பால் இட்டதை அம்பால் பெயர்த்தும் விட்டேன்... :)

அதிரைக்காரன் said...

//நான் மொழிபெயர்ப்பாளனாகப் பணியாற்றவில்லை; . அலுவலச் செயலாளனாகவே இருந்தேன்//

கவனக் குறைவால் ஏற்பட்ட தவறான தகவலாக இருந்தாலும்கூட உங்கள் தன்னடக்கமான பதில் வாசகர்களுக்கு மேலும் வியப்பு ஏற்படுத்துகிறது.ஆம்! மொழிபெயர்ப்பாளர்-மொழி இலக்கனங்களில் புலமை பெற்றிருப்பது சாதனை அல்ல; அலுவலகச் செயலராக இருந்துகொண்டே படைத்திருக்கும் இந்த சாதனைகளைச் செய்திருப்பதன்மூலம் மாஷா அல்லாஹ்! உங்கள் மீதான ம(தி)லைப்பு கூடுகிறது.

N.ஜமாலுதீன்

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

மாஷா அல்லாஹ்!
ஜமீல் காக்காவின் சிறந்த பணிகளுக்கு: இம்மையிலும், மறுமையிலும் வல்ல அல்லாஹ் நன்மையை வழங்கி நல்லருள் புரியட்டும்.

தொடர்ந்து பணிகள் செய்திட அவர்களின் ஆரோக்கியத்திலும், நேரத்திலும், செல்வத்திலும் வல்ல அல்லாஹ் பரக்கத் செய்து அருள் புரியட்டும்.

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

சகோ. ஜமீல் அவர்களுக்கு என் வாழ்த்துகள்

இத்தளத்தில் மிக பயனுள்ள பதிவாகவும் இத்தளத்தை ஜொலிக்க வழிவகை தந்து மேலும் (இன்ஷா அல்லாஹ்) உங்களின் நற்ப்பணிகள்,மார்க்கம், தமிழ் மற்றும் கணினி சேவைகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்....

உங்கள் பிழைகளை மன்னிதருல்வனாக.........

Anonymous said...

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

ஜமீல் காக்கா அவர்களின் எழுத்துருக்களை குறித்து; சமரசம்' இதழும் சில வருடங்களுக்கு முன் கட்டூரை வெளியிட்டு சிறப்பித்திருந்தது. அதில் 4ம் வகுப்போ, 5ம் வகுப்போ படித்த இளைஞரின் சாதனை என சிலாகித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இன்ஷா அல்லாஹ் சந்திப்பின் போது உரிமையுடன் ஒரு குறு விமர்சனமும் செய்வேன் என்பதை இப்போதே சொல்லி வைக்கிறேன்.

அதிரைஅமீன்

sabeer.abushahruk said...

பல காலங்களுக்கு முன்பு ஒரு சென்சிட்டிவான நள்ளிரவில் சகோதரர் பி.ஜே. அவர்களை என் காரில் அதிரையிலிருந்து நானே அழைத்துச் சென்று பட்டுக்கோட்டையில் பஸ் ஏற்றி விட்டபோது எனக்கிருந்த சந்தோஷம் எங்கள் ஜமீல் காக்காவை அஜ்மானிலிருந்து மம்ஸார் பார்க்குக்கு அழைத்துச்செல்லவிருக்கும் எனக்கு ஏற்படுகிறது.

நான்தான் அழைத்துச் செல்வேன் என்று காக்காவிடம் ஏற்கனவே அப்பாய்ன்ட்மென்ட் வாங்கிவிட்டேன்.

ஏனோ தெரியவில்லை, காக்கா குறிப்பிடும் "அன்பின் எல்லை" எது என்று அவர்கள்மீது நான்கொண்டுள்ள அன்பிற்குப் புரியவில்லை.

காக்கா அவர்கள் தமக்கே உரிய தன்னடக்கத்தால் இன்னும் சப்தமாக அதட்டினாலும் பரவாயில்லை, இந்த சந்திப்பை ஏற்பாடு செய்வது குறித்து நாங்கள் திட்டமிடத் துவங்கிய முதல் நாள் முதற்கொண்டே உணர்ச்சிவசப்பட்டவர்களாகவே இருக்கிறோம். தகவல் திரட்டுவதில் தவறு ஏற்பட்டதே தவிர எங்கள் அன்பும் மரியாதையும் காக்காமேல் என்றுமே எல்லையில்லாமல்தான் இருக்கும். கான்ட் ஹெல்ப் இட் காக்கா.

N.A.Shahul Hameed said...

Dear Brothers,
Assalamu Alaikkum!!!
I am really elated to see the praising words about my dearest brother Jameel Kakka. He is one of our closest family friends and we always share our love and affection.
When I joined our college in 1976, my Brother Iqbal used to say about his elder brother Jameel Kakka. I do remember a joke shared by Iqbal ablut Jameel Kakka.
As he was working in the Law firm as an Administrative Officer, he was involved in editing and typing the texts. His boss, I was told, was calling him as "hello type writer" instead of calling him as "Hello typist". We remember this joke even today.
I respect Jameel Kakka for his self motivation, iniative to learn, his clear vision and his committment upon the ideology.
I have seen him passing his comments frankly sometimes and that too for truth and for the sake of others to correct their mistakes. He is such a daring personality to put forth his views to any audience when he feels that his views are correct. I think Iqbal's marriage was a milestone in the History of Adirai Weddings.
I remember an incident with Jameel Kakka, I feel it is worth mentioning at this juncture. (I think he would have forgottent it). One day Prof.Majeed from Jamal Mohamed College, Trichy, visited our College as a cCommission to start Arabic as Second Language to our students. After having the official formalities, Prof.Majeed asked me whenther I know Jameel Kakka. I replied him that he is my family friend I know him as well as all his family members. He asked me to take him to Jameel Kakka's house.
I took him to Jameel Kakka's Haja Nagar house. After seeing me he greeted and welcomed both of us. He took us inside the house. After talking for a while, Prof.Majeed asked me to wait outside the house as he wanted to talk something personal with Jameel Kakka. I stood up and started to go out. But my Jameel Kakka stopped me from going out and mentioned Prof.Majeed, Shahul is my family friend and whatevr we talk can be known to him also. He is not an alien to us. And they talked the matter in my presence. Kakka this incident really raised your image in my heart far and far above.
Likewise, when I visited Dubai in 1994, I attended the Margus where you taught the steps of "Imaan". Still it is ringing in my ears. Your clear idea about the content and the delivery method you used and the way you explained all impressed me a lot.
I wish you a happy, healthy and prosperous life and Pray Allah tha Almighty to shower His blessings upon your family and you always.
I think this is going to be the end of one stage of your career and the beginning of another phase of your career. I know very well the community will be benefitted very much upon your next phase of your career.
My Humble request to AN is that may you please Live Stream this program? So that we all located from various parts of the world may have a feeling of sharing the occasion.
Wassalam
N.A.Shahul Hameed

Mohamed Meera said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

நமது சமுதாயத்தில் சாதனையாளர்கள் பல பேர் இருக்கலாம். ஆனால் ஜெமில் காக்காவின் சாதனை அதிலிருந்து வித்தியாசப்பட்டது, பள்ளிக்கல்வி சிலவருடங்கள் மட்டுமே கற்றவர்.
ஆனால் கல்லுரி படிப்பில் உயர்கல்வி கற்றவர்களுக்கு ஆசான்,
விடாமுயற்ச்சி, கடின உழைப்பு, இரண்டின் மறுபெயர் ஜெமில்காக்க என்று சொல்லுவது மிகையாகாது.

ஜெமில்காக்கா அவர்களை சக தெருவாசி (கடற்கரைத்தெரு) , தவ்ஹீத் கொள்கைவாதி, கம்யூட்டர் பற்றி தெரிந்தவர் என்றவகையில் தான் தெரிந்து வைத்திருந்தேன்.
தமிழ் கம்யூட்டர் என்ற(1995)இதழில் ஜெமில்காக்காவின் பேட்டி வந்தபிறகு தான், அவரின் சாதனைகள் தெரிய வந்தது.

தமது சவுதி/அமீரக அநுபவங்களை ஜெமில்காக்க சிறு உரையாக நமக்கு பகிர்ந்தால், இளையோருக்கு ஒரு உந்து கோலாக இருக்கும்

முகமது மீரா

habeb hb said...

ஜமில் காக்கா;எது எப்படி ஆனாலும் அல்லாஹு உதவியால் மார்க்கபணி தொடரட்டும் உங்களால்

அப்துல்மாலிக் said...

பல அறியத்தகு சமுதாய விழிப்புணர்ச்சியில் முக்கிய பங்காற்றும் நம்மூர்வாசிகள் இருக்கிறார்கள் என்பதில் நானும் அந்த காலங்களில் வாழ்கிறேன் என்பதுவும் நினைத்து பெருமையே, ஜமீல் காக்கா அவர்களை பற்றி அறியத்தந்த அ.நி என் பாராட்டுக்கள், ஜமீல் காக்கா உடல் ஆரோக்கியத்துடன் பல வருடங்கள் இச்சமுதாயத்திற்காக பங்காற்ற எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்கிறேன்

இன்ஷா அல்லாஹ், சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள முயற்சிக்கிறேன்...

இப்னு அப்துல் ரஜாக் said...

ஜமீல் காக்காவின் இத்தகு சாதனைகள்,சேவைகளுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நற்கூலி தருவானாக.

காக்காவுக்கு அரபி மொழி புலமை இருப்பதனால்,அரபி மொழியின் இலக்கண்,இலக்கிய விவரங்களை குரான்,ஹதீஸ் மேற்கோளுடன் எழுதினால் எங்களுக்கு பயனாக இருக்கும்.
நம் வேத மொழியாகவும்,நம் உயிரைவிட மேலான நம் தலைவர்,மாமன்னர் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் மொழியாகிய அரபி மொழியை தெரிந்து கொள்ள எங்களுக்கு வாய்ப்பு கிட்டும்.இன்ஷா அல்லாஹ்

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

Dear Br. NAS,

I am the one of those who knew the motive between Sabeer against you. It was ‘Malformed Volley Ball Team’ ;-). He called me early this morning and asked me to beat you by a reply ;-).

தம்மாம் அலுவலக நிர்வாகி பஸ்ராவில் பிறந்தவர். என் தந்தைக்குச் சற்றே இளையவர். ஆங்கிலம் படிக்காதவர். ஆனால் ஆங்கிலம் பேசவேண்டும் என்ற ஆசை மிகுந்தவர். பிறரிடம் என்னை அறிமுகப்படுத்தும்போது, "Misther Jameel my Secretire also my typewriter" என்பார். சில வியாழக்கிழமைகளில் அலுவலகம் வந்ததும் என்னை விளித்து,

"Umm Yousuf told you"

"..."

"You eat my house" என்பார். எனக்குப் புரியும். உங்களுக்குப் புரிகிறதா?

***

இருவர் தனித்துப் பேசலாம்; மூவர் இரகசியம் பேசலாம். ஆனால், மூவர் இருக்கும்போது இரகசியம் பேசுவதற்காக ஒருவரை வெளியேற்றுவதையோ அவருக்குப் புரியாத மொழியில் மற்றோர் பேசிக்கொள்வதையோ இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

பேரா. அப்துல் மஜீத் பற்றிய நிகழ்வில், அவர் வருத்தப்படக்கூடும் என்று எனக்குத் தெரிந்தாலும் உங்களையும் உடனிருக்கச் சொன்னதற்கு அல்லாஹ்வின் தூதரின் அறிவுரைதான் காரணம். உங்களைப் போன்ற பேராசிரியர்கள் பலரோடு எனக்கு நட்பையும் அன்பையும் விதைத்த அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்கிறேன்.

குறிப்பாக, மொழி, மார்க்கம் ஆகிய இரு துறைகளிலும் எனக்கு வழிகாட்டியாகவும் உந்துசக்தியாகவும் இன்றளவும் திகழ்கின்ற ... .... ... அவர்களுக்கு இங்குப் பதிக்கப்பெறும் புகழ்மொழிகளில் கூடுதல் பங்குண்டு.

"ஊடகங்கள் என்பன ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருச்சாளி ஆக்கிவிடுகின்றன" என்ற குற்றச்சாட்டு உண்மைதான் போலும். அ.நி.யோடு அதன் பங்காளிகளும் சேர்ந்துகொண்டு என்னைப் பெருச்சாளி ஆக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது.

இதில், "கான்ட் ஹெல்ப் இட் காக்கா" எனும் சபீரின் அடங்காத்தனமும் அடக்கம்.

விதி வலிது!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//எனக்கு வழிகாட்டியாகவும் உந்துசக்தியாகவும் இன்றளவும் திகழ்கின்ற ... .... ... அவர்களுக்கு இங்குப் பதிக்கப்பெறும் புகழ்மொழிகளில் கூடுதல் பங்குண்டு.//

காக்கா, அந்த மதிப்பிற்குறிய "... .... ..." புள்ளிய் யாருன்னு சொல்லிடுங்களேன்... (தெரியும்னு கம்முன்னு இருந்திடவும் முடியவில்லை...)

உங்கள் தட்டெழுத்து மொழி(பெயர்ப்பி)யில் வந்தால் நலமாக இருக்கும் !

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//N.A.Shahul Hameed Said....My Humble request to AN is that may you please Live Stream this program? So that we all located from various parts of the world may have a feeling of sharing the occasion.//

சார் உங்களிடம் படித்த மாணவர்கள் இங்கு அமீரகத்தில் இருக்கும்போது நேரலை நிச்சயம் சாத்தியமே. சகோதரர்களுடன் ஆலோசனை செய்து நேரலை பற்றிய செய்தி விரைவில் வெளிவரும்.. இன்ஷா அல்லாஹ்....

N.A.Shahul Hameed said...

அஸ்ஸலாமு அலைக்கும் தாஜுதீன்,
உண்மையிலேயே எனக்குப் பெருமையாக இருக்கிறது. ஜஸாக்கல்லாஹூ ஹைரன்.

Wassalam
N.A.Shahul Hameed

Unknown said...

Maa'sa Allah....Alhamthulillah

அதிரைக்காரன் said...

சுட்டி தெரியவில்லை! http://adiraixpress.blogspot.com/2012/03/blog-post_6905.html

அன்புடன் புகாரி said...

வானத்தை வில்லாக மேகம் வளைக்கிறது
மணலைக் கயிராக கொத்தனார் திரிக்கிறார்
நானாவின் நாவாலேயே நிகழும் இதுவென
நானறிவேன் அவரோடு பழகியவன் என்பதால்!

ஜமீல் என்று சொல்லும்போதே புல்லட் புரப்பட்டு வருவதுபோலத்தான் இருக்கும் :)

அவரின் கர்வம் மிக்க தன்னம்பிக்கை அவரின் வளர்ச்சிக்கான வெற்றி என்றே உணர்கிறேன்.

நான் காக்கா, நானா என்று அழைப்பதில் நாட்டம் உள்ளவன் அல்ல. அண்ணன் அண்ணா அண்ணே என்று அழைப்பதையே விரும்பியவன். நானாதான் நான் முதலில் அழைத்த நானா :)

நேரில் கலந்துகொள்ள இயலாத தூரத்தில் இருக்கிறேன் என்றாலும், தாமதமாகவே அறிய நேர்ந்திருக்கிறது என்றாலும், நெஞ்சால் கலந்துகொள்ளும் சுகம் பெறவே இச்சிறு மடல்.

அன்புடன் புகாரி

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு