Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வழக்குக் கூண்டில் - வறுமைக்கோடு... ! - குறுந்தொடர் - 1 18

அதிரைநிருபர் பதிப்பகம் | March 28, 2012 | , ,


குறுந்தொடர்- 1. 
வழக்குக் கூண்டில் வாய்பொத்தி நிற்கும் வறுமைக்கோடு.

அண்மைக் காலமாக இந்திய அரசின் திட்ட கமிஷனின் அளப்பறிய கடாட்சத்தாளும் கருணையாலும் "வறுமைக்கோடு"என்ற வார்த்தையைக் கேட்டு வருகிறோம். கடந்த வாரம் ஊடகங்களிலும், பாராளுமன்றத்திலும் (வழக்கமான சந்தைக்கடை கூச்சலுடன்)இந்த வார்த்தை எதிரொலித்தது. வறுமைக்கோட்டுக்கு கீழே என்றும், வறுமைக்கோட்டுக்கு மேலே என்றும் வார்த்தை சிலம்புச்சண்டைகள் நாடெங்கும் அரங்கேறின. இதைப்பற்றி சில கருத்துக்களை இந்த பதிவில் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 

கோடுகளைப்பற்றி நாம் பேசப்போனால் சின்ன வயதில் நாம் அடித்து விளையாடிய நொண்டிக்கோடு விளையாட்டில் இருந்து, பூப்பந்து, கால்பந்து, கிரிக்கெட்,டென்னிஸ் ஆகிய இன்னபிற விளையாட்டுகளின்  மைதானங்களின் கோடுகளிலிருந்து ,  நாடுகளுக்கிடையே போடப்படும் எல்லைக்கோடுகள் வரையும், பூமிப்பந்தின் மேல் இருப்பதாக புவி இயலில் படித்த பூமத்திய ரேகை, கடக ரேகை மற்றும் மகர ரேகை வரை நமக்குத் தெரியும். அண்ணன்மாரே! தம்பிமாரே! வறுமையும் நமக்குத்தெரியும், புரியும். கொடிது! கொடிது! வறுமை கொடிது! அதனினும் கொடிது இளமையில் வறுமை! என்று ஒளவையார் பாடியதாக ஆறாம் வகுப்பிலேயே மனப்பாடப்பகுதியில் படித்து இருக்கிறோம். ஆனால் வறுமைக்கோடு தெரியாதே!

வறுமைக்கோடு என்பது என்ன? பொருளாதாரக் கண்ணோட்டத்தில் வறுமையையும்,வறுமைக்கோட்டையும் விளக்குவதானால் முதலில் வறுமை என்பதை சுருக்கமாக இப்படி விளக்கலாம். 

உயிர்வாழத்தேவைப்படும் குறைந்தபட்ச அத்தியாவசியமான பொருள்களையோ, சேவைகளையோ அல்லது சாதனங்களையோ பெறமுடியாத நிலையில் இருப்பவர்களை வறுமையில் அல்லது ஏழ்மையில் இருப்பவர்களாக விளங்கலாம். STATE OF ONE WHO LACKS AN USUAL AND SOCIALLY ACCEPTABLE AMOUNT OF MONEY, SERVICES OR MATERIAL IN HIS POSSESSION. 

இதில் குறைந்தபட்சத்தேவை என்பதை வரையறுக்கும் அளவுகோலுக்கு பொருளாதார மேதைகள் வறுமைக்கோடு POVERTY LINE  என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள். இந்த அளவுகோலுக்கு அதிகமாக துய்ப்பவர்களுக்கு வறுமைக்கோட்டுக்கு மேல் இருப்பவர்கள் ABOVE POVERTY LINE என்றும் , இந்த அளவுகோல் அளவு கூட துய்க்க/பெற முடியாதவர்களுக்கு வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பவர்கள் BELOW POVERTY LINE  என்றும் அழைக்கப்படுகிறார்கள். 

எந்த ஒரு பொருளாதார அளவுகோலுக்கும் ஒரு அடிப்படை (BASE) இருக்கும். அந்த அடிப்படையை வைத்தே பொருளாதார புள்ளி விவரங்கள் அளவிடப்பட்டு வளர்ச்சிக்கான திட்டங்கள் தீட்டப்படும். இந்த அடிப்படை என்பது உயிரற்ற உடலுக்கு ஊதிவிடும் சுவாசம் போன்றது.  இந்த அடிப்படையைத் தேர்வு செய்வது என்பது மிக மிக முக்கியம்.  ஏணி வைத்து ஏற வேண்டிய உயரத்துக்கு ஏணி வைத்து ஏறவேண்டும். கால் பெருவிரலை ஊன்றி உன்னி ஏறவேண்டியதுக்கு பெருவிரலின் சக்தியே  போதும். இமய மலை ஏறவேண்டி இருக்கும்போது ஏணியைக்கொண்டுபோனால் எதுவும் நடக்காது. கையால் எடுக்க முடிந்த காரியத்துக்கு கேட்டர்பில்லர்(CATERPILLAR) தேவை இல்லை. உங்கள் ஜேப்பில் உள்ள பணத்தை எடுக்க ஜெ சி பி(JCB) தேவையா?. 

அதனால்
- அளவுகோலை உண்டாக்க அடிப்படை (BASE).
-அதன் மூலமான புள்ளி விபரங்கள் (FACTS).
-அந்த புள்ளிவிபரங்களை உள்ளடக்கிய திட்டம் (PLAN).
- திட்டத்தின் அடிப்படையில் செயல் (EXECUTION).

ஆகியன தேவை. இந்த அடிப்படைதான் நாம் போடும் திட்டத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும். இது ஒரு நாட்டுக்கு மட்டுமல்ல ஒரு வீட்டுக்கும் பொருந்தும் .

வறுமைக் கோட்டுக்கான அடிப்படை என்ன?எதைவைத்து வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்களைக் கணக்கிடுவது? ஆகிய கேள்விகளுக்குரிய விடை நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. ஆனால் இந்தியா எடுத்துக்கொண்ட அடிப்படை இமயமலை ஏறுவதற்கு ஏணி கொண்டுபோன கதையாக இருக்கிறது என்பதுதான் இந்த ஆக்கத்தின் ஹை லைட். 

வறுமைக்கோட்டின் அடிப்படை பிலிப்பைன்ஸ் நாட்டில் அந்நாட்டு மக்களின் வாங்கும் சக்தியாகும். அமெரிக்காவில் ஒரு வருடத்தில் – ஒரு குடும்பத்தின் மொத்த வருமானம் அடிப்படையாகும். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் HDI  என்று அழைக்கப்படும் HUMAN DEVELOPMENT INDEX  என்பதை அடிப்படையாக வைத்துள்ளது. இந்த HUMAN DEVELOPMENT INDEX  என்ற அடிப்படையே  உலகில் பரவலாக பெரும்பான்மை நாடுகளால் பின்பற்றப்படுகின்ற அடிப்படையாகும்.  இலங்கை போன்ற நாடுகள் தங்களது அரசியல், இன , மொழி அடிப்படையில் வித்தியாசமான அணுகுமுறைகளைக் கையாளுகின்றன. மக்கள் நலம் பேணாத அரசுகள் உள்ள நாடுகள் இது பற்றி கண்டு கொள்வதே இல்லை. அங்கேயெல்லாம் வந்தானுக்கு வந்தான் போனானுக்கு போனான். 

ஏழ்மையில் உழலும் மக்களை நோக்கிய அரசின் உதவும் கரங்களை நீளச்செய்யும் இந்த வறுமைக்கோடு நிர்ணயம் இந்தியாவைப் பொறுத்தவரை கேலிக்கூத்து ஆக்கப்பட்டிருக்கிறது. அதாவது இந்திய திட்ட கமிஷனின் அறிவிப்பின் பிரகாரம் இந்தியாவில் வசிக்கும் எந்த ஒரு குடிமகனும் அவன் நகர்ப்புறத்தில் வசித்தால் ஒரு நாளைக்கு Rs. 29/=  ம் கிராமப்புறத்தில் வசித்தால் Rs. 22/= ம் ஈட்ட முடிந்தால் அவன் வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளவன் ; அவனை வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவன் என்று கருதி அரசின் நலத்திட்டங்களின் பயன்களை அவனுக்கு வழங்கவேண்டியதில்லை என்று கூறாமல் கூறி இருக்கிறது. அதாவது ஒரு நாளைக்கு Rs. 29/=  சம்பாதித்தால் இந்திய அரசின் திட்ட கமிஷனின் பார்வையில் அவன் பணக்காரன். இந்த அளவுகோல் எவ்வளவு தவறானது என்று ஒரு பொருளாதாரம் படித்தவனிடம் கேட்க வேண்டியதில்லை. ஒரு பொட்டுக்கடலை விற்பவன் கூட கூறிவிடுவான். 

திட்ட கமிஷனின் இந்த கூற்றைப் பார்க்கும்போது இது திட்ட கமிஷனா? அல்லது நாம் திட்டுவதற்கான கமிஷனா என்று கேட்கத்தோன்றுகிறது. (இவ்வளவு நாள் இப்படி கலவாணிப் பயல்களோடவா சகவாசம் வைத்து இருந்தோம்?) எந்தப் பொருளாதார கோட்பாட்டின் அடிப்படையில் இப்படி ஒரு நகைப்புக்குரிய அளவுகோலை வைத்து நிர்ணயம் செய்தீர்கள் என்று கேட்டால் அவர்கள் சொல்லும் பதில் இன்னும் நகைப்புக்குரியது. அதாவது கிராமப்புறத்தில் உள்ளவர்கள் உயிர்வாழ 2400  கலோரி சக்தியும் , நகர்ப்புறத்தில் உள்ளவர்கள் உயிர்வாழ 2200 கலோரி சக்தியும் போதுமாம். இந்த அளவு கலோரி உள்ள உணவுகளை இந்த Rs. 22/= & Rs. 29/= ல் பெற்றுக்கொள்ள முடியுமாம். 

இந்த அளவு கலோரி உணவு உண்ட இந்த வறுமைக்கோடு என்ற பாவப்பட்ட ஜீவன்,  இந்த விவாதம் நடக்கும் நமது வழக்கு மன்றத்தில் வாய் பொத்தி நிற்கிறது காரணம் தளர்ச்சி. பேசக்கூட முடியவில்லை. 

இந்த விவாதம் பொருந்துமா? 

இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து பார்க்கலாம். 

-இபுராஹீம் அன்சாரி

18 Responses So Far:

Yasir said...

//ஒரு பொருளாதாரம் படித்தவனிடம் கேட்க வேண்டியதில்லை. ஒரு பொட்டுக்கடலை விற்பவன் கூட கூறிவிடுவான்.// விளங்கமாட்டேங்குதே இந்த முதேவிகளுக்கு.....அழகான தகவல்கள் மிடுக்கான எழுத்துநடை..தொடரட்டும் உங்கள் தொடர்...தொடர்ந்து வந்து படிப்போம்...எவ்வளவு எழுதினாலும் நாங்க சளைக்காமல் படிப்போம் அவ்வ்வளவு நல்ல அறிவுப்பசிக்கு விருந்தளிக்கும் ஆக்கங்கள்

Shameed said...

ஒரு வாழைப்பழத்தில் 100 கலோரி சக்தி உள்ளது மனிதனுக்கு தேவையான 2200 கலோரிக்கு சுமார் 22 வாழைபழம் தேவைப்படும் ஒரு வாழைப்பழம் 5 ரூபாய் என்றால் நாலு வாழைப்பழம் 400 கலோரி வாங்கியது போக மீதி ரெண்டு ரூபாய்க்கு எதுவுமே வாங்க முடியாது இவர்கள் போட்டிருக்கும் கோடுகள் நாட்டுமக்களுக்கு கேடுகள் தான்

மாமாவின் காட்டுரை விவரமான விளக்கமாக இருந்தது

sabeer.abushahruk said...

இதோ மற்றுமொரு ராக்கெட் பற்றவைத்தாயிற்று. வறுமைக்கோட்டின் விளக்கம் பொட்டுக்கடலை விற்பவர்க்கும் விளங்கும் எனக்கு விளங்காதா என்ன?

காக்கா, கோட்டை வேண்டுமானால் அழிக்காமல் இருக்கட்டும்; இதன் கேட்டை ஒழிக்க வேண்டாமா?

சொல்ற விஷயத்தில் நியாயம் இருப்பதால் நல்லா சப்தமாகவே சொல்லுங்கள் காக்கா 

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இந்திய குடிமகன் வறுமைக் கோட்டைத் தாண்டியாதாக ஒரு நாள் கூட பக்கத்து நாட்டுக்காரன் கம்ப்ளெயிண்ட் செய்யவே இல்லையே ?

அப்போ எப்படி இவய்ங்க சொல்லுவாங்க நாங்க இன்னும் தாண்டவில்லைன்னு !?

//திட்ட கமிஷனின் இந்த கூற்றைப் பார்க்கும்போது இது திட்ட கமிஷனா? அல்லது நாம் திட்டுவதற்கான கமிஷனா என்று கேட்கத்தோன்றுகிறது. (இவ்வளவு நாள் இப்படி கலவாணிப் பயல்களோடவா சகவாசம் வைத்து இருந்தோம்?)//

திட்டமிட்டு திட்ட வேண்டிய கலவாணிப் பயல்வோ !

Noor Mohamed said...

//அண்மைக் காலமாக இந்திய அரசின் திட்ட கமிஷனின் அளப்பறிய கடாட்சத்தாளும் கருணையாலும் "வறுமைக்கோடு"என்ற வார்த்தையைக் கேட்டு வருகிறோம்//

காக்கா, திட்டக் கமிஷனா? (அல்லது) திருட்டுக் கமிஷனா? மெகா திருட்டுக்கு திட்டம் தீட்டித்தான் திருட முடியும். அதற்கு சட்டமும் வளைந்து கொடுக்கும். அதுதான் சுதந்திரம் பெற்ற 65 ஆண்டுகால அரசின் வேதனை நிறைந்த சாதனைகள்.

அலாவுதீன்.S. said...

/// (இவ்வளவு நாள் இப்படி கலவாணிப் பயல்களோடவா சகவாசம் வைத்து இருந்தோம்?)///

இப்படிப்பட்ட கலவாணிப் பயல்கள் இருப்பதால்தானே இந்தியா வல்லரசாகிறது என்று (ஏழைகளின் வயிற்றில் அடித்தும் அவர்களின் பிணங்களின் மேல் நின்று கொண்டு) வாய்ச்சவடால் அடிக்க முடிகிறது அரசியல் வியாதிகளால்.

திட்டக் கமிஷன் என்னும் கலவாணி பயல்கள் அனைவரையும் அழைத்து உனக்கு ஒரு நாளைக்கு 29ரூபாய் சம்பளம். வாழ்ந்து காட்டுடா அறிவுள்ளவனே என்று உடனே அரசாணை போட வேண்டும்.

இந்த மாதிரி மூளை வரண்டவர்களை எல்லாம் தண்ணி இல்லாத காட்டிற்கு சிறிது நாளைக்கு அனுப்பி வைத்தால் என்ன?

சகோதரர் இபுறாஹிம் அன்சாரி அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். நல்ல தெளிவான விளக்கம். விளங்க வேண்டிய பயல்களுக்கு விளங்க வேண்டுமே என்பதுதான் கவலை.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்."இந்த அளவுகோல் எவ்வளவு தவறானது என்று ஒரு பொருளாதாரம் படித்தவனிடம் கேட்க வேண்டியதில்லை. ஒரு பொட்டுக்கடலை விற்பவன் கூட கூறிவிடுவான்". ஹாஹாஹா... பொட்டில் அடித்ததுபோல் கேள்வி!இது ஆரம்ப அத்தியாயம்தானே இனிதான் இருக்கு செம விருந்து! அடிமை கோடு என்னும் கேடை அழிக்கும் ஆற்றல் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக. ஆமீன்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். நான் கருத்து எழுதிவிட்டு சபீர்காக்காவின் கருத்தை படித்து பார்தேன் அவர்கள் நான் பதிந்தை முன்னமே பதிந்துவிட்டார்கள். பரவாயில்லை நானும் ஒரு மேதை சிந்திக்கும் அளவிற்கு சிந்தித்து இருக்கேன்.
----------------------------------------
அல்லாஹ்வே!
ஆக்குபவன், அழிப்பவன் நீ!
நீ உருவாக்காத எந்த பொருளும் இல்லை!
நீ உருவாக்காமல் விட்டதை
இந்த கெட்ட மனித சமுதாயம்
உருவாக்கி பார்க்கிறது!
அதில் - இந்த வருமைகோடும் ஒன்று!
கருனை அளிப்பவனே!
எனக்கும் ஒரு வரம் அளிப்பாயா?
நான் வேண்டும் வரம் ஒரு அழிப்பான்!(Rubber)
என்கையால் எவ்வளவுக்கு வறுமைக்கோட்டை
அழிக்கமுடிகிறதோ,
அவ்வளவுக்கு நான் அழிக்கனும்!
நீ எங்களுக்கு வறுமை ஒழிக்கும் கொடையாம்,
தானம் செய்வதை
சொல்லித் தந்தாய்!
நாங்களோ அந்த கொடையின்
மகத்துவம் மறந்தோம்.
இன்னும் வறுமை
ஏற்ற தாழ்வு கோட்டை வைத்திருக்கிறோம்.
அல்லாஹ்வே! எங்களை மன்னிப்பாயாக!!
மீண்டும் கேட்கிறேன் எனக்கு அதிகமாய்
அழிப்பான் தருவாயா? இந்த அவலங்களை அழிக்க!

Ebrahim Ansari said...

நண்பர் அலாவுதீன்! தம்பி கிரவுன்!

அலைக்குமுஸ்ஸலாம். வரஹ்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

கோட்டின் மீது கேடு விளைவிக்கும் கோமாளிகளுக்கு பொட்டு பொட்டுண்டு குத்துன மாதிரி இருக்கு.இபுராஹிம் அன்சாரி காக்காவின் வறுமை அம்பு.

அரசியல் குட்டையில் நீந்துகின்ற அட்டைகள் ஏழைகளின் உதிரத்தை உரிந்து கொண்டுத்தான் இருக்கின்றன

இப்னு அப்துல் ரஜாக் said...

விநியோக முறையை முறையாக பேணாததால் இந்த சறுக்குதல்.capitalism,communism மற்றும் மற்ற இசம்கள் எல்லாம் தோற்றுக் கொண்டுள்ளதை நம் கண்களாலேயே கண்டு வருகிறோம்.ISLAMISM மட்டுமே
வெல்லும்,இஸ்லாமிய முறையை பேணினால்,நாடு செழிக்கும்,மக்கள் சந்தோஷமாக வாழலாம்.so called முஸ்லிம்,அரபு நாடுகள் இஸ்லாத்தை முழுமையாக பேணாத காரணத்தால் தான் வீழ்ச்சி நோக்கி செல்கின்றன.

இப்ராஹீம் அன்சாரி காக்கா,உங்கள் கட்டுரைகள் எங்கள் சிந்தனையை தூண்டுகின்றன.நன்றி ஐயா

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி கிரவுன் அவர்களே!

//மீண்டும் கேட்கிறேன் எனக்கு அதிகமாய்
அழிப்பான் தருவாயா? இந்த அவலங்களை அழிக்க!//

அருமையான சமூக அக்கறையுள்ள வரிகள். பரந்த பாராட்டுதலுக்குரிய சிந்தனை. எல்லாம் வல்ல இறைவன் தங்களின் கைகளில் நிறையத் தருவானாக!

அனைவரும் கேட்கவேண்டியது.

crown said...

Ebrahim Ansari சொன்னது…

அன்புள்ள தம்பி கிரவுன் அவர்களே!

//மீண்டும் கேட்கிறேன் எனக்கு அதிகமாய்
அழிப்பான் தருவாயா? இந்த அவலங்களை அழிக்க!//

அருமையான சமூக அக்கறையுள்ள வரிகள். பரந்த பாராட்டுதலுக்குரிய சிந்தனை. எல்லாம் வல்ல இறைவன் தங்களின் கைகளில் நிறையத் தருவானாக!

அனைவரும் கேட்கவேண்டியது.


-----------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா!துவாவிற்கும் , பெருந்தன்மைக்கும் நன்றி! அல்லாஹ் எல்லாருக்கும் இதுபோல் அழிப்பான் கொடுத்து வறுமை,ஏற்றதாழ்வு கோடுகளை ஒழிக்க அருள் புரிவானாக. ஆமீன்.

அப்துல்மாலிக் said...

இத்தனை நாளா வறுமைக்கோடு பத்தி பத்தியா தெரியாம முழிச்சிட்டிருந்த சாமானியனுக்கும் புரியும்படி விளக்கம் காக்கா. 26 ரூவாய் சம்பாதிச்சா அவன் பணக்காரன் 26 கோடி அடிக்கிறவன் ஏழை பாவம் தெருக்கோடிலே(?) நிக்கிறானாம். படிச்ச, முன்னாள் பொருளாதார அமைச்சர், பலநாடுகளின் பொருளாதார வீழ்ச்சியை தூக்கி நிறுத்தியவர் ஆளும் ஆட்சியிலா இப்படி?, வழக்கம் போல் இங்கேயும் மவுனம் ஒன்றேதான் பதிலா?

Ebrahim Ansari said...

தம்பி அப்துல் மாலிக்!

எளிமை! இனிமை! அருமை! அதுவே அதிரை நிருபர்.
தம்பி அபூ இப்ராஹீம்! ( சரியா சொல்றேனா?)

//26 கோடி அடிக்கிறவன் ஏழை பாவம் தெருக்கோடிலே(?) நிக்கிறானாம்.// குற்றம் அவர்களுடையதல்ல! நம்முடையது - மக்களிடம் மாற்றம் வரவேண்டும்.

மாடு மேய்ப்பவர்கள் மடையர்களாக இருந்தால் மாடு கூட மச்சான் என்று கூப்பிடுமாம்.

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, தெளிந்த நடையில் பாமரர்க்கும் விளங்கும்படி வழக்குக் கூண்டில் வறுமைக்கோட்டை நிறுத்தி விசாரிப்பதற்கு மிக்க நன்றி!

அரசு வழக்குரைஞர் வரப்போவதில்லை. இறுதியில் எக்ஸ்ப்பார்ட்டி தீர்ப்புதான்!

அப்பப்ப இதுமாதிரி கோரிக்கை வப்பம்ல ...

Ebrahim Ansari said...

அன்புள்ள சகோதரர் ஜமீல் அவர்களுக்கு,

வ அலைக்குமுஸ்ஸலாம். தங்களின் பின்னூட்டம் காண மிக்க மகிழ்ச்சி.
தங்களைப்போன்ற பலரும் பாராட்டும் சிந்தனையாளரிடமிருந்து பெற்ற அங்கீகாரமாக கருதுகிறேன்.

அப்பப்ப நாங்களும் உங்களிடம் தலைப்பு கேப்பம்ல.

இன்ஷா அல்லாஹ் நாளை சந்திக்கலாம்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அழகான சிந்தனையை கிள்ளி எழுப்பும் புள்ளியியல் பாடம் இது.

"இளமையில் வந்த வறுமையும்; வயோதிகத்தில் வந்த செல்வமும் வேதனையானதே அன்றி வேறில்லை" என்ற சொல்லை ஒரு எதார்த்தமான கட்டுரையில் வடித்துள்ள‌ இபுறாகிம் அன்சாரி காக்கா அவர்களை வாழ்த்துவதை விட வேறு என்ன வேலை?

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு