நாம் உலகில் வாழும் காலங்களில் ஆரோக்கியத்துடன் இருந்து அதே ஆரோக்கியத்துடன் எவருக்கும் எவ்வித தொந்தரவும் தொல்லைகளும் இல்லாமல் இறுதியில் இறைவனடி சேர ஒவ்வொருவருவரும் தம் வாழ்நாட்களில் ஐங்கால இறைவணக்கத்துடன் அணுதினமும் குறைந்தது அரை மணி நேரமாவது கண்டிப்பாக உடலுக்கும், வயதிற்கும் ஏற்ற உடற்பயிற்சி செய்ய கடமைப்பட்டுள்ளோம். இதற்கு நகரத்தில் தான் வசிக்க வேண்டுமென்றோ அல்லது உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவும் உடற்பயிற்சி நிலையங்களுக்கு காசு செலவழித்து செல்ல வேண்டுமென்ற அவசியமோ இல்லை. ஊரில் இருந்து கொண்டே, வீட்டில் இருந்து கொண்டே, அறையில் இருந்து கொண்டே எவரும் அறியாத வகையிலும் செய்யலாம். இது ஒன்றும் மார்க்கத்திற்கு புறம்பான செயல் அல்ல. (பிறகென்ன ஒரே யோசனெ? ஆரம்பிச்சிட வேண்டியது தானே?)
உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உடற்பயிற்சி செய்வதால் வரும் இன்ன பிற நன்மைகள் பற்றியும் நம்மூர் பாஷையில் கொஞ்சம் இங்கு அலசுவோம் வாங்கஹாக்கா...
1. கை கால் கடுப்பு, இடுப்பு புடிப்பு கொறையும். (இதில் திட்டுமுட்டு செரவடி, கொடப்பெரட்டு, ஓங்காரம், ஒரு மாரியா வர்ரது, மசக்கம், பித்தம் எல்லாம் அடங்கும்)
2. கழுத்து சுலுக்கு வராது.(மொம்மானிவாக்கா கடையிலெ வீசக்கார தைலம் வியாபாரம் கொஞ்சம் கொறைய வாய்ப்புண்டு)
3. தலவாணிக்கு ஒறை போட்ட மாதிரி தொந்தி உழுவாது. (நெறையா பேரு ஊர்லெ நிண்டுக்கிட்டே தன் சொந்த பெரு விரலெ சின்னப்புள்ளையிலெ பாத்தது......)
4. வாய்வுக்கோளாறு கொறையும். (அங்கிட்டு, இங்கிட்டு காத்து கண்ணாப்பின்னாண்டு பிரியாது. அக்கம், பக்கம் திரும்பி பாத்துக்கிட்டு யாருமில்லாத நேரம் டீசண்ட்டா பிரியும்)
5. இனிப்பு நீரு, ரெத்தக்கொதிப்பு வராமல் தள்ளிப்போகும். அப்படியே வந்திருந்தாலும் கட்டுப்பாட்டோடு ஈக்கிம். (பகல்லெ களரிக்கார ஊட்டுக்கு போயிட்டு சாங்காலம் ஆஸ்பத்திரிக்கு போக வேண்டி ஈக்காது)
6. ஒடம்புலெ தேவையில்லாமல் தொங்கும் ஊளைச்சதை வத்திப்போவும். (அதனாலெ சட்டெ, பேண்டு அளவு எப்பொழுதும் மாறாமல் ஒரேக்கணக்கா ஈக்கிம்)
7. தோலு சுருக்கம் சுருக்கன வராது. (அதுக்காக இன்னொரு கலியாணத்துக்கெல்லாம் ஆசப்படக்கூடாது)
8. ராத்திரி அசந்த நல்ல தூக்கம் வரும். (கள்ளன்வொலுக்கு வசதியாப்போயிடாமெ பாத்துக்கிட வேண்டியது ஆமாம்..)
9. சேர்மாவாடிக்கு போறதுக்கு கூட செத்த பைக்கு கடன்வாங்க அவசியம் ஈக்காது. (கடன் வாங்காம சொந்த கால்லேயே போயிட்டு வந்துர்லாம்)
10. மனசு சீராக பதஸ்ட்டமும், படபடப்பும் இல்லாமல் சாந்தமாக ஈக்கிம். (அதுக்குத்தானே ஒலகத்துலெ இவ்ளோவ் செரமப்படனுமா ஈக்கிது?)
11. ஒடம்புக்காக ஒன்னுமே செய்யாததாலெ வரும் ஏகப்பட்ட ப்ரச்செனைகள் கொறஞ்சி பட்டுக்கோட்டைக்கும், தஞ்சாவூருக்கும் ஆஸ்பத்திரி, ஊடுண்டு அலையிறது கொறஞ்சி போகும். நேரமும், காசும் மிஞ்சும். (அந்த காசெ சேத்தாலே காலப்போக்குலெ மனக்கட்டு வாங்கி போடலாம் எங்கையாச்சும்..)
12. ஒரு மூக்கு ஓட்டையிலெ மூச்செ புடிச்சி கொஞ்சம் நொடி உள்ளக்க வச்சி பொறகு இன்னொரு மூக்கு ஓட்டையிலெ மூச்செ உட்டு ஒவ்வொரு நாளும் இப்புடி பழகுனா நெஞ்சுக்குள்ள அடிக்கடி கறி, கோழி, குருவி சாப்புட்றதுனாலெ கொழுப்பு அடைச்சி மூச்சி பிரச்சினை, ஹார்ட்டு குழாயி அடப்பு பிரச்சினை இதெல்லாம் வராம தடுக்கலாம். (ஊட்டு சர்சராக்குழியிலெ கானு அடச்சி போயிட்டாலெ அதெ சுத்தம் பண்ண வ்ளோவ் காசு கேக்குறானுவோ? ஹார்ட்டுக்குள்ள அடப்பு வந்திரிச்சிண்டா ஊட்டு பத்திரத்தெயிலெ எழுதிக்கேப்பானுவோ டாக்டருமாருவொ?)
13. உடற்பயிற்சி செய்யிறதுனாலெ ஒடம்புலெ உள்ள கெட்ட நீரு/கிருமிகள் வேர்வை மூலமா வெளியாயிடும். ஒடம்பும், மனசும் ஃப்ரஸ்ஸா ஈக்கிம். ரத்த ஓட்டம் சீராக ஈக்கிம்.
14. மணிக்கணுக்குலெ காலைக்கடனுக்கு காத்துக்கெடக்க வேண்டிய அவசியம் ஈக்காது. அப்புறம் ஒடம்பு ரொம்ப ராஹத்தா ஈக்கிம்.
15. உடற்பயிற்சியை ஆரம்பிக்கும் பொழுது ரெண்டு, மூணு நாளெக்கி ஒடம்பு பூராவும் வலிக்கும். காச்சல் கூட வரும். பயந்துட கூடாது. காச்சல் உட்டதும் தொடரனும். அப்புறம் என்னா? சிக்ஸ் பேக்கு, எயிட் பேக்குண்டு வசதிக்கு தகுந்தமாரி வச்சிக்கிட வேண்டியது தானே? இதுக்கு அரசாங்க வரியா போடப்போவுது?
நம்ம ரத்தத்துலெ இனிப்பையும், கொழுப்பையும் கொறச்சிட்டா அல்லது கட்டுப்பாட்டுடன் வச்சிக்கிட்டாலே போதுங்க. ஏகப்பட்ட நோய்நொடிகள் நம்மை தாக்காமல் தடுக்கலாம். பெருவாரியான நோய்நொடிகளை நம்ம ஒடம்புக்குள்ள பந்தல் போட்டு வாசல்லெ பன்னீரு தெளிச்சி, சந்தனத்தெ ஒரு கோப்பையிலெ வச்சிக்கிட்டு வரவேற்கிறதே இந்த ரெண்டும் தாங்க (இனிப்பும், கொழுப்பும்). (சகன்லெயும் அது ரெண்டும் தானே நாட்டாமை பண்ணுது?)
எப்புடி பலமான இறையச்சம் (தக்வா) உள்ளவர்களை பார்த்து சைத்தான் அவர்களை வழிகெடுக்க நெருங்க முடியாமல் எரிச்சலடைந்து சோர்ந்துபோகிறானோ (சோந்துபோவான்) அது மாதிரி தாங்க நம்ம ஒடம்பெ ஆரோக்கியமா எப்போழும் வச்சிக்கிட்டா நோய்நொடிகள் எளிதில் நம்மை தாக்க முடியாமல் எரிச்சலாகி மாச்சப்பட்டு எங்கையாவது ஓடிப்போயிடும். அப்புறமென்ன நோய்நொடிகளும் அதை ஊக்குவிப்பவர்களும் ஒன்று சேர்ந்து கூடங்குளம் அணுமின் நிலையம் போல் ஆரோக்கியமான மனிதர்களை எதிர்த்து போராட வேண்டியது தான். அதுக்கு ஒத்து ஊதுறதுக்கும் ஆளுவொ நாட்லெ ஈக்கத்தான் செய்வாங்க. அதெ பத்தி கவலைப்படாதியெ. நமக்கு நம்ம ஆரோக்கியம் தான் முக்கியம்ங்க.......
இன்னொரு விசயங்க, எங்க அப்பா காலத்துலெ எல்லாம் எல்லாப்பள்ளியாசல்லையும் ஒரு நாக்காலியெ கூட பாத்தது இல்லெ. எம்பது, தொன்னூறு வயசானவங்க கூட நின்டுக்கிட்டு இல்லாட்டி தரையிலெ உக்காந்துகிட்டு தான் தொழுவுவாங்க. இப்பொ என்னாண்டாக்கா ஒவ்வொரு பள்ளியாசல்லையும் பத்து நாக்காலிக்கு மேலெ வாங்கி போட்டு வச்சிக்கிறாஹ. சின்ன, சின்ன வயசுகாரவங்க கூட எதாவது ஒடம்பு சரியில்லாம நாக்காலியிலெ உக்காந்துக்கிட்டு தொழுவுறாங்க...காரணம் என்னாண்டாக்கா இப்பொ உள்ள மக்கள்ட்டெ ஆரோக்கியம் கொறஞ்சி போச்சிங்க.
கொஞ்ச நாள்ச்செண்டு திடீர்ண்டு மனசுலெ வந்ததெ எழுதிப்புட்டெங்க. படிச்சிட்டு உங்க கருத்தெ சொல்லுங்க....
-மு.செ.மு. நெய்னா முஹம்மது
28 Responses So Far:
நல்லவிசயங்களை சொன்ன அருமை சகோ அவர்களுக்கு ஒரு நடையை போடு
அழகான மருத்துவ உடற்ப்பயிர்ச்சிக்கட்டுறை. பாராட்டுக்கள். ஆனால் இந்த மாதிரி அரைகுறை தமிழில் எழுதுவதால்தான் தமிழுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து சிலர் தமிழ் கற்றுக்கொள்ள தொடர்ந்த்து எழுதுகிறார்களோ!!??
Abdul Razik
Dubai
அஸ்ஸலாமு அலைக்கும்.
நாட்டிலே யார் யாருக்கோ டாக்டர் பட்டம் கொடுக்குறாங்க. எம். எஸ்.எம்.
நெய்னாவின். உடற்பயிற்சி ஆலோசனை சான்றிதழை வைத்து.
முதலமைச்சர் அம்மாவிடம்.டாக்டர் பட்டத்துக்கு யாராவது சிபாரிசு செய்தா நன்னா இருக்கும்.
கருத்தை படித்துப்புட்டு எனக்கு ரொம்ப கொழுப்புன்டு சொல்லிப்புடாத.
காற்று பிரிவதற்கும் பரிவுடன் ஒரு ஆலோசனை வழங்கிய MSM அவர்களுக்கு வாழ்த்துக்கள்
பள்ளிவாசலில் நாற்காலி மேட்டரை நான் எழுத இருந்தேன் நீங்கள் முந்திக்கொண்டு விட்டீர்கள் MSM
கொஞ்சம் விட்டால் நம்ம பயலுவொ ஊர்லெ காத்து ஃபிரியா பிரிவதற்கும் பார்டி வச்சி FAREWELL DAY கொண்டாடச்சொல்லுவானுவொ????? அப்புடி பட்ட காலமா ஈக்கிது இது.....உசாரா ஈந்துக்கிடுங்க சாகுல் காக்கா....
சகோ. ராஜிக்கிற்கு,
இது நம்மூர் பாஷைண்டு ஏற்கனவே சொல்லியாச்சி வேறெ என்னா அரகொறை தமிழுண்டு புது எலக்கணம் சொல்ரிய???? கோவமா ஈக்கிற மாரி ஈக்கிது????
நீங்க சொல்ற தமிழ் சங்கம் வைத்து வளர்த்தெடுக்கப்பட்ட மதுரைத்தமிழ். இதுவோ எந்த சங்கமும் வைக்காமல் (சங்கம் என்றால் நான் முன்னாடி எல்லாம் நெனெச்சிக்கிட்டு ஈந்தது என்னாண்டாக்கா சம்சுல் இஸ்லாம் சங்கம், தாஜுல் இஸ்லாம் சங்கம், மேலத்தெரு சங்கம், கீழத்தெரு சங்கம்ண்டு......) செக்கடி மோட்டிலோ, செடியன்குள மேட்டிலோ, வெட்டிக்குளத்துக்கரையிலோ வெளுத்தெடுக்கப்பட்ட உள்ளூர் அதிரைத்தமிழ். இதற்கெல்லாம் வருங்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு அஹமது சாச்சா ஒரு புதிய அகராதி எழுதி வெளியிட்டால் தான் சரியா வரும்.....
ஏற்கனவே நம்ம ரெக்குவஸ்ட் அனுப்பியாச்சி.....என்னா செய்றாஹண்டு பாப்போம்.....
எனக்கு என்னமோ "சங்க"காலத்து தமிழை விட அதிரை தமிழ் தாங்க பிடிக்குது அதிலும் MSM எழுத்து என்றால் எனக்கு ரொம்ப ஒகப்பு
சகோதரர் நெய்னா, உங்க ஊர்க்காரன் நான். வாசிக்க வாசிக்க சிரிப்பாகவும் ஏதோ ராஜாமடம் ரோட்லே வாக்கிங் போறப்ப பேசுற மாதிரியும் ரொம்ப அந்நியோநியமா இருக்கு.
இதச் செஞ்சா இப்படி அவதிதான்னு சொல்லியதில் அக்கறையும், உடற்பயிற்சி சம்பந்தமான உங்களின் அறிவும் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.
நம்மூர் வட்டார மொழியில் சொல்லியிருப்பதுதான் இந்த பதிவின் கூடுதல் ஈர்ப்பு.
வாழ்த்துகள்
அந்த முடிச்சு:
அது
சம்பவித்துக் கொண்டிருந்தது
அருகிலிருந்து
அவதானித்துக் கொண்டிருந்தேன்
உடல்
கிடத்தி வைக்கப்பட்டு
உயிர்
கொஞ்சம் கொஞ்சமாக
பிடியை இழக்க
அது
சம்பவித்துக் கொண்டிருந்தது
அது
சம்பவித்து முடிவதில்
ஏதோ ஓர்
எதிர்ப்பு இருப்பதாக
என்னால்
உணர முடிந்தது
எனினும்
அது
கால்களின் விரல்களில் துவங்கி
மேல்நோக்கி
கைப்பற்றிக்கொண்டே செல்வதற்கான
அடையாளங்களைக்
காண முடிந்தது
அது
கடந்து சென்ற வழியெல்லாம்
நரம்பு நெகிழ்ந்து அசைவிழக்க
உஷ்ணம்
குறையத் தொடங்குவதைக்
குறிக்கத் தவறவில்லை நான்.
மரணப் படுக்கையில்
பார்வை
பிரத்தியேகமானது என்று
கேள்விப்பட்டிருந்தும்
அந்த வகையான பார்வையை
நான் என்
வாழ்நாளில் கண்டதில்லை
வெற்றான இலக்கில் குத்தி நின்றாலும்
அடையாளம் காண முடியாத பயமும்
அளப்பதற்கரிய ஆசைகளும்
அது
சம்பவித்துக் கொண்டிருப்பதை
அறியாததோர் அப்பாவித்தனமும்
உச்சகட்ட வலியை
அனுபவித்துக்கொண்டிருக்கும்
சுரணையோ இல்லாத நிலையும்
இன்னும்
அலைகளற்ற கடலை
அடிவானம் வரை பார்ப்பது போலும்
ஒரு பார்வை
மூச்சு இழுத்து விடுவதில்
முடிச்சு ஒன்று
விழுவதும் அவிழ்வதுமாகவே
எனக்குப் பட்டது.
ஒரு சில சமயங்களில்
அவிழ்ந்து முடிகிறதோவென
நினைக்க
சட்டென மீண்டும்
முடிச்சு விழ
அது
எதிர்ப்பை விஞ்சி
சம்பவிக்க முயல்வதைக்
காண முடிந்தது
நான்
வெளியேற எத்தனிக்கயில்
என் முகம் நோக்கியப் பார்வையில்
பிரியாவிடையின் சாயல் தெரிய
சன்னமான சப்தத்தோடு
அவிழ்ந்த முடிச்சில்
இரத்த வாடை வீசியதாக ஞாபகம்.
வாயிலைக் கடக்கும்போது
கோஷம் போன்றதொரு
அதிக ஓசையுடனான
அழுகுரலால்
அது
சம்பவித்து முடிந்திருக்கலாம்
என
யூகிக்க முடிந்தது!
- சபீர் அபுஷாருக்
நன்றி 01) இவ்வார திண்ணை டாட் காம்
நன்றி 02) எம் எஸ் எம் (கம்ப்பார்ட்மென்ட்ல இடம் தந்ததற்கு)
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
இனிப்புக்கு கொழுப்புத்தான்:
நமக்குத்தான் கொழுப்பு அதிகம் : நாளை நாளை என்று நடைபயிற்சியை சோம்பலால் தாமதப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.
சோம்பிக் கிடக்காதீர்கள் இனிப்பும், கொழுப்பும் வாட்டி விடும் என்று இந்தப் பதிவில் தெளிவாக்கி இருக்கிறீர்கள்.
சகோ. நெய்னா : வாழ்த்துக்கள்!
சூப்பர் நெய்னா ! உடற்பயிற்சியை இந்த வாரம் ஆரம்பிக்கலாம் இல்ல அடுத்த வாரம் என
தள்ளி கொண்டே போகிறது .....சோம்பல் :(
சபீர் காக்கா மரண வலி கவிதை ரொம்ப தத்ரூபமாய் இருக்கிறது ! நானும் பார்த்திருக்கிறேன்
கடைசி முடிச்சை
ராஹத்தா இருக்க நல் வழியும் நம் மொழியும் சூப்பரு!
என்னமோ "சங்க"காலத்து தமிழை விட அதிரைத் தமிழ் தாங்க பிடிக்குது அதிலும் நெய்னா மச்சான் எழுத்து என்றால் ரொம்ப இனிப்பு.
நம்மூரு வட்டார மொழியில் சொல்லியிருப்பதுதான் இந்த பதிவின் கூடுதல் இனிப்பு. அதோட கொஞ்சம் கொழுப்பும் இடையிலெ சேத்திருப்பது ஹைலைட்டு!
இங்கு கருத்திட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகளும், து'ஆவும்.
சபீர் காக்காவின் 'அந்த முடிச்சு' மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் நிச்சயம் தப்பிக்க வழியின்றி இறுதியில் தாண்ட வேண்டியுள்ள பெரும் சமுத்திரத்தை தத்ரூபமாக தன் எழுத்தில் வடித்திருக்கிறீர்கள்.
ஒரு நிமிடம் நம் மூச்சை உடலுக்குள் இறுக்கிப்பிடித்து மூச்சிப்பயிற்சி செய்யும் பொழுது படும் பாடும், அது எப்படியாவது ஏதேனும் ஒரு துவாரத்தின் மூலம் உடலிலிருந்து வெளியேற உடலுக்குள் அங்குமிங்கும் அலைமோதுவதும் அதனால் உடல் வேர்த்து விறுவிறுத்துப்போவதும், இரு செவிகளும் மெல்ல, மெல்ல அடைத்துப்போவதும், கண்களின் பார்வையும் மங்கிப்போவதும் ஒரு இனம் புரியாத பதற்றம் உடலில் தொற்றிக்கொள்வதும் என பல வேதனைகள் நாலாப்புறமும் சூழ்ந்திருக்கும் இருக்கும் அந்த ஒரு நிமிடத்தில் நிச்சயம் நம் உயிர் நிரந்தரமாக உடலை விட்டு பிரியும் பொழுது வரும் வேதனையும், வலியும் உச்சக்கட்டத்தில் இருக்கும் என்பது யாரும் சொல்லித்தெரியப்போவதில்லை.
அல்லாஹ்வுக்கு பிரியமான எம்பெருமானார் கண்மணி நபிகள் நாயகம் ரசூல் (ஸல்...) அவர்களுக்கே உயிர் இவ்வுலகை விட்டு பிரியும் தருவாயில் வேதனை இருந்ததாக ஹதீஸ் மூலம் பலர் சொல்லக்கேட்ட நமக்கு, சாதாரன மனிதர்களாகிய நம் உயிர் பிரியும் பொழுது எப்படி இருக்குமோ? என சிந்தித்துக்கூட பார்க்க இயலவில்லை.
யா! அல்லாஹ், எங்களின் உயிர் இவ்வுலகை விட்டு பிரியும் பொழுது வெண்ணெய்யில் விழுந்த தலை மயிரை இலகுவாக எடுத்து விடுவது போல் வேதனையின்றி பிரித்தெடுத்திடுவாயாக......ஆமீன்.
வயதாகி விட்டால் ஒரு பக்கம் நோய்நொடிகள் வந்து வாட்டி எடுத்து ஈவிரக்கமின்றி அவர்களை படாத பாடு படுத்தும். மறுபுறம் பெற்றடுத்த பிள்ளைகளே தாய்,தந்தையர் என்று கூட பார்க்காமல் வேதனை செய்வர். இவ்விரண்டிருக்கும் மத்தியில் அவர்கள் மரணம் எப்பொழுது வருமோ? என ஆவலுடன் எதிர்பார்க்க கூட சுயநினைவு இருக்காது. இந்த வேதனையான சூழ்நிலையை ஒரு கணம் உள்ளத்தில் நினைத்துப்பார்ப்போம். வீட்டில் மிச்சம் இருக்கும் பெரியவர்களை மதித்து வேண்டிய பணிவிடை செய்வோம்.
கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்!
எங்கள் தொழிலை முடக்க நினைக்கும் கனம்.m s m அவர்களை வன்மையாக கண்டிக்கும் வகையில் எங்கள் கூட்டமைப்பு சார்பாக அவர்
ஊர் வரும் வழியில் எங்கள் தோழர்கள் கருப்புக்கொடி காட்ட இருக்கிறார்கள் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
அகில இந்திய மயிலெண்ணெய் விற்பனையாளர் கூட்டமைப்பு.
//மயிலெண்ணெய்..???
இதை எதற்கு பயன்படுத்துகிறார்கள்.? எப்படி தயாரிக்கிறார்கள்?...யாராவது தெரிந்தவர்கள் எழுதுங்களேன்..
"மயிலெண்ணெய் எப்படி செய்கிறார்கள்?"
நாலஞ்சி மயிலைப்பிடித்து மண்பானையில் வைத்து மூன்று நாட்களுக்கு ஊற வைக்க வேண்டும். பிறகு அதை வீட்டின் மெத்தையில் இன்னும் நான்கு நாட்களுக்கு உச்சிஉரும வெயிலில் காய வைக்க வேண்டும். அதற்குப்பிறகு அதை புடைத்து தூசிகள் அகற்றி சுத்தம் செய்து அப்படியே செக்கிலிட்டு ஆட்டினால் கிடைப்பதே சுத்தமான மயில் எண்ணெயாக இருக்கும் என்பதே என் அபிப்ராயம்......
நெய்னா நீ தலகீழே நின்னாலும் நம்மூராலுங்க ஆஸுபத்திரிக்கு காச கொண்டுப்போய் கொட்டுவாங்களே தவிர இது மாதிரி உடற்பயிற்சி செஞ்சா செரவடியாப்போகும். அப்போதான் புதுபுது நோய் வரும் மாதிரி நெனெச்சிக்கிட்டு அதுக்கும் ஆஸுபத்திரிக்கு அலையுவாங்க..
பி.கு. இப்போவெல்லாம் தஞ்சாவூரு டாக்குட்டரின் தனி ஃபைல் ஓவ்வொருவருக்கும் ஓட்டர் ஐடி மாதிரி இருக்குறதுதான் ஃபேஷனாமே?
எந்த ஒரு டாக்குட்டரின் ஆலோசனையாக இருந்தாலும், ஹெல்த் சொல்லக்கூடிய புக்கா இருந்தாலும் (பால்வினையை சொல்லக்கூடியதும்) அதுலே “உடற்பயிற்சி செய்யவும்” என்ற வார்த்தை இல்லாமல் இருக்காது...
இலக்கணத் தமிழை விட சகோ நெய்னாவின் தமிழ்,(நம்ம ஊரு பாஷை)அருமை.அதிலும் நல்ல நகைச்சுவை அவர் கைவண்ணம்.வாழ்த்துக்கள்.
நல்ல பதிவு, நலமான பதிவு,
நகைச்சுவை மணத்துடன் பரிமாறிய விதம் அற்புதம்.
`நம்ம பாட்டன், முப்பாட்டனெல்லாம் எந்த ஆஸ்பத்தரிக்குப் போனான்??~ என்று சிந்திக்க வைக்கிறது உங்கள் எழுத்து.....
தொடரட்டும் உங்கள் (நடைப்) பயணம்!!!!
அன்பு சகோதரர் எம்.எஸ்.எம் நெய்னா அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.
வாப்பா, பெரிய வாப்பா, அப்பா, மாமா, சாச்சா ஆகியோர் கூப்பிட்டுவைத்து நமக்கு புத்திமதி சொல்வது போன்ற உணர்வு .
வளைகுடா நாடுகளில் புரோசன் உணவுகளை உண்டுகொண்டு, அடித்துப்பிடித்து அலுவலுக்கு கிளம்புவதும், போக்குவரத்து தாமதங்களால் அலுத்து சலித்துப்போய் இருக்கும் பலரால் இத்தகைய பயிற்சிகளை மேற்கொள்ள முடியாமல் இனிப்பும் கொழுப்பும் ஏறிக்கொண்டே போகின்றன.
18 வருடம் சவூதியில் பணியாற்றிவிட்டு ஒய்வு பெற்று வந்த என் நண்பனிடம் கடந்த வாரம் வலைபேசியில் பேசும்போது கேட்டேன்.
‘ என்ன மாப்பிள்ளே இவ்வளவு நாள் உழித்து என்ன தேடிவைத்து இருக்கிறாய்?”
அவர் சொன்னது “ ஓர் மகளுக்கு கணவனை தேடிக்கொடுத்தேன்- ஒரு பத்து லட்சத்தில் வீடு வைத்திருக்கிறேன்- நாலு மனைக்கட்டு வைத்திருக்கிறேன்- இரண்டு பையனில் ஒருவனை இஞ்சினியரிங்க் படிக்க வைத்திருக்கிறேன்.- பேங்கில் கொஞ்சம் பணம் வைத்து இருக்கிறேன்.
எனக்காக 320 சுகரும், 233 கொலஸ்ட்ராலும் வைத்து இருக்கிறேன்” என்றார்.
பலரின் நிலை இப்படித்தான் இருக்கிறது.
பாராட்டுக்கள் நெய்னா. ( தாமதத்துக்கு பொறுத்திடுக) 99.7 கிலோ உடம்பை தூக்கிக்கொண்டு ஓடி வந்தது இளைக்கிறது.
இபுராஹீம் அன்சாரி
//நாலஞ்சி மயிலைப்பிடித்து மண்பானையில் வைத்து மூன்று நாட்களுக்கு ஊற வைக்க வேண்டும்.//
Blue Cross பார்த்தால் நம்மலெ ஊற வச்சிடுவானுக
இபுராஹீம் அன்சாரி
// பாராட்டுக்கள் நெய்னா. ( தாமதத்துக்கு பொறுத்திடுக) 99.7 கிலோ உடம்பை தூக்கிக்கொண்டு ஓடி வந்தது இளைக்கிறது.//
என்ன மாமா ஏதோ F .M .ரேடியோ (99 .7 ) அலைவரிசையை சொல்வதுபோல் உடல் எடையை சொல்கின்றீர்கள் குறைக்க முயற்சி செய்யவும்
ZAKIR HUSSAIN சொன்னது…
//நாலஞ்சி மயிலைப்பிடித்து மண்பானையில் வைத்து மூன்று நாட்களுக்கு ஊற வைக்க வேண்டும்.//
//Blue Cross பார்த்தால் நம்மலெ ஊற வச்சிடுவானுக
/
Blue Cross பார்த்தால் நம்ம முதுகுலே Red Cross போட்டுடுவான்கள்
மயில் எண்ணெய் தயாரிப்பது எப்படி? என்று கொரவன்ட்டெ கேட்க வேண்டிய கேள்வியை எல்லாம் இப்படி சபையில் வந்து கேட்டால் லுவாக் காப்பி போல் அவரவருக்கு தெரிந்த செய்முறை சோதனையை சொல்ல வேண்டி வரும்.
ரெட் கிராஸு, புளூக்கிராஸு எல்லாம் கொரவன்வொலுக்கு NOT APPLICABLE.
அதுனாலெ உல்லாங்குருவியெல்வொலெ கொரவன்வொலெ வச்சி புடிக்க நெனெக்காதியெ.....
erb. Nice Post.
Post a Comment