Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கவிதை – ஓர் இஸ்லாமியப் பார்வை-11 11

அதிரைநிருபர் பதிப்பகம் | March 19, 2012 | , ,


ஹிஜ்ரி எட்டாம் ஆண்டின் ‘ஜுமாதல் ஊலா’ மாதத்தில் ஒரு நாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘மஸ்ஜிதுன்னபவி’யில் மன வருத்தத்தோடு அமர்ந்திருந்தார்கள். காரணம், தாம் கொண்டுவந்த இனிய மார்க்கமான இஸ்லாத்தை ஏற்கும்படி ஆட்சித் தலைவர்களுக்கு விடுத்த அழைப்புகளுள் ஒன்றான ‘ஷாம்’ நாட்டு ‘புஸ்ரா’வின் ஆட்சியாளன் அல்ஹாரிஸ் பின் அபீ ஷும்மருக்கு, அல்ஹாரிஸ் பின் உமைர் அல் அஸ்தீ (ரலி) என்ற நபித்தோழர் வழியாக அனுப்பப்பட்ட நிருபம் அவமதிக்கப்பட்டது!  அது மட்டுமன்றி, அத்தூதுவரும் அநியாயமாகக் கொல்லப்பட்டார்!  நபியின் கவலைக்கு அதுவே காரணம்.

எதிரி, ஒரு மாநிலத்து ஆட்சியாளன்தான் என்றாலும், அவனுக்குப் பின்னணியில் இருந்ததோ வலிமையான ரோமப் பேரரசு!  இருப்பினும், அந்தப் பாதகனுக்குப் பாடம் புகட்டவேண்டும் என்பதில் நபியவர்களும் தோழர்களும் ஒத்த கருத்தில் இருந்தனர்.  3000 பேர் கொண்ட பெரும் படையொன்று ஆயத்தப் படுத்தப்பட்டது.

“இந்தப் போரில் தலைமை தாங்கும் ஜைது இறைவழியில் இறந்துவிட்டால், ஜஅஃபர் படைத் தளபதியாகச் செயல்படுவார்.  அவரும் இறந்தால், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா தலைமை ஏற்பார்” என்று நபியவர்கள் அறிவித்தார்கள்.
(சஹீஹுல் புகாரீ- 4261)

இவ்வாறு கூறிவிட்டு, கீழ்க்காணும் வான்மறை குர்ஆனின் வசனத்தை நபி (ஸல்) ஓதினார்கள்:

و إن منكم إلا واردها كان على ربك حتما مقضيا

உங்களுள் ஒவ்வொருவரும் (நரகமாகிய) அதைக் கடந்து செல்லாமல் இருக்கவே மாட்டார்.  இது உம் இரட்சகனிடம் நடைபெற்றே ஆகவேண்டிய நியதியாகும்.”
-அல்குர்ஆன் 19:71

அடுத்து, ‘மூத்தா’ என்ற இடத்தை நோக்கி முஸ்லிம்களின் படை முன்னேறிப் புறப்பட்டுக்கொண்டிருந்தது.  அந்த நேரத்தில், மூன்றாவது தளபதியாக நபியவர்களால் அறிவிக்கப்பட்ட அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்கள் அழத் தொடங்கினார்கள்! 

“ஏன் அழுகின்றீர்?  போரின் அச்சம் உங்களைப் பொங்கி அழத் தூண்டுகின்றதா?” என்று மக்கள் கேட்டனர். 

“இல்லை; நபியவர்கள் ஓதிக் காட்டிய மறை வசனத்தின்பால் எனது சிந்தனையைச் செலுத்தினேன்.  நரகத்தைப் பற்றிய அச்சம்தான் என்னை அழத் தூண்டிவிட்டது” என்று விளக்கமளித்துவிட்டுக் கீழ்க் காணும் கவிதையடிகளை மொழிந்தார்கள்:

لكنني أسأل الر حمان مغفرة
و ضربة ذآت فرغ تقذف الزبدا
أو طعنة  بيدي حران مجهزة
بحربة تنفذ الأحشاء و الكبدا
حتى يقال إذا مروا على جدثي
أرشده الله من غاز و قد رشدا

இதன் தமிழ்க் கவியாக்கம்:

                  நானோ இறையின் மன்னிப்பை
                     நாடிப் பெறவே வேண்டுகிறேன்
                  தானே வீழும் வெற்றடியும்
                      தரையில் நுரையை உருவாக்கும்!
                 
                  அதிரும் நிலையில் வந்தாலும்
                      அம்பைக் கொண்டு தாக்கிடுவேன்
                  எதிரிப் படையில் நுழைந்தவுடன்
                      என்கை வீச்சால் வீழ்த்திடுவேன்!
                 
                  வீரத் துடனே போராடி
                      வீழ்ந்த பின்என்  மண்ணறையின்
                  ஓரத் தில்போய் நின்றிடுவோர்
                      உயர்ந்த ஷஹீதே இவரென்பார்!

பெருமானாரின் முன்னறிவிப்பின்படி, முதல் தளபதி ஜைத் (ரலி) ஷஹீதானார்!  அவரையடுத்துக் கொடியைப் பிடித்த ஜஅஃபர் (ரலி) அவர்களின் வாயிலிருந்து போர்ப் பரணி ஒன்று புறப்பட்டு வந்தது:

يا حبذا الجنة واقترابها
طيبة و باردا شرابها
و الروم روم قد دنا عذابها
كآفرة بعيدة أنسابها
علي إذ لاقيتها ضرابها
இதன் தமிழ்க் கவியாக்கம்:

                  நன்றே செய்தீர் நண்பர்களே!
                        நமக்கோ சொர்க்கம் நெருங்கிற்று
                  குன்றா மணஞ்சேர் பானங்கள்
                        குளிரும் மறுமைக் குடிப்புகளாம்
                 
                   எதிரிப் படைகள் ரோமர்களே
                        இறங்கிற் றவர்மேல் வேதனையே
                  கதறச் செய்வோம் அன்னவரை
                        காஃபிர்ப் படையாம் அந்நியரே.
                 
                  நேரில் வந்தே எம்மவரை
                        நெரிக்கப் பார்க்கும் எதிரிகளைப்
                  போரில் நின்றே பேரிடியாய்ப்
                        புரட்டி யடிப்பேன் இறையருளால்!

பெருமானாரின் படைத் தளபதிகள் போர்ப் பரணி பாடுவதிலும் வல்லவர்கள் என்பதை அவர்களின் இது போன்ற பாக்கள் மெய்ப்பிக்கின்றன.  ‘வெற்றி அல்லது வீரச் சாவு!’ எனும் உறுதியான கொள்கையோடு களம் புகுந்தவர்கள் அவர்கள்.  கொடியைத் தாங்கிய ஜஅஃபரின் வலக்கை எதிரி வீரன் ஒருவனால் துண்டிக்கப்பட்டது.  ஆனால், கொடி வீழவில்லை!  அவரின் இடக்கை அதைத் தாங்கிப் பிடித்தது.  அதுவும் வெட்டப்பட்டது.  கழுத்தும் வெட்டப்பட்டது.  ஜஅஃபர் ஷஹீதானார்!  உடனே அங்கு வந்த அப்துல்லாஹ் இப்னு ரவாஹா அதைத் தூக்கிப் பிடித்தார்!  அடுத்துப் புறப்பட்டது அவர் வாயிலிருந்து போர்ப் பரணி:

أقسمت يا نفس لتنزلنه
لتنزلن أو لتكرهنه
إن أجلب الناس و شدوالرنه
ما لي أراك تكرهين الجنه
قد طال ما قد كنت مطمئنة
هل أنت إلا نطفة في شنه
இதன் தமிழ்க் கவியாக்கம்:

                  சபதம் செய்தேன் ஆன்மாவே!
                        சமரில் பொருதல் விதியென்றே!
                  சபலம் ஒன்றும் எனக்கில்லை
                        சாப வெறுப்பும் எனக்கில்லை! 

                  பறையை முழக்கிப் பெருங்கூட்டம்
                        பாய்ந்தே வந்தும் எனக்கென்ன?
                  சிறையாம் உலகின் வாழ்வின்முன்
                        சிறந்த சொர்க்கம் பெரிதன்றோ?!

                   மனமே நேரம் நீள்கிறது
                        மாற்றம் வருமுன் சீர்படுவாய்!
                   இனமோ விந்தின் துளியாவாய்
                        இனியேன் உனக்குச் சபலங்கள்?

உள்ளம் உணர்ச்சியை இழக்கவில்லை!  இயல்புக் கவிஞர் இன்னும் பாடினார்:

يا نفس إلا تقتلي تموتي
هذا حمام الموت قد صليت
و ما تمنيت فقد أعطيت
إن تفعلي فعلهما هديت
இதன் தமிழ்க் கவியாக்கம்:

                  என்றன் உளமே! படைநடுவில்
                        இறப்பேன் வெட்டப் பட்டவுடன்
                  உன்றன் விதியில் இறப்பொன்றே
                        உண்டோ அதுவே நிலையாகும்!

                  எதனை எதிர்பார்த் திருந்தாயோ
                        இறப்பாம் அதனை அடைவாய்நீ
                  முதலில் சென்ற அவ்விருவர்
                        முடிவே உனக்கும் விதியாகும்!

(மகாஸீ லி இப்னு இஸ்ஹாக்)

நபியவர்களின் நல்லறத் தோழர்கள் இறந்து சிறக்கப் பிறந்தவர்கள்!  இறப்பிற்கும் அஞ்சாத எந்தல்கள்!  முன்னவர்கள் இறந்ததைக் கண்டு, முழுமையாகத் தம்மை இறப்பிற்காக ஆயத்தப் படுத்தியவர்கள்!  இதனைப் பின்வரும் இறைவசனம் மெய்ப்பிக்கிறது:

من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه و منهم من ينتظر وما بدلوا تبديلا

“நம்பிக்கையாளர்களுள் (வீரம் மிக்க) ஆண்கள் பலர் இருக்கின்றனர்.  இவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை உண்மைப் படுத்தினார்கள்.  அத்தகையோருள் பலர் (இறந்து ஷஹாதத் எனும்) தம் இலட்சியத்தை அடைந்துவிட்டனர்.  இன்னும் சிலர் (இன்னும் இறக்கவில்லை என்றாலும், அதனை அடைய ஆவலுடன்) எதிர்பார்த்தே இருக்கின்றனர்.  (என்ன நேரிட்டாலும், அவர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து) ஒரு சிறிதும் மாறுபட்டுவிடவேயில்லை.” 
(அல்குர்ஆன் 33:23)   

அண்ணலாரின் வாயிலிருந்து புறப்பட்டு வந்த அருள்மறை வாக்கு ஒன்றைக்  கேட்டு இத்துணை எழுச்சி பெற்று, அவ்வுணர்ச்சியைக் கவிதை வரிகளாக்கிப் பாடிய நபித் தோழர்கள் வீணில் பாடவில்லை; விளங்கிப் பாடினார்கள்; வெற்றியைக் குவித்தார்கள்!  அந்த வீர உணர்வின் சாயல்கள்தான் நாமாக இருக்க வேண்டும்.  இது மிகைக் கூற்றல்லவே?


(ஆய்வு இன்னும் தொடரும், இன்ஷா அல்லாஹ்....)
-அதிரை அஹ்மது


11 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

உணர்வின் வெளிப்பாடே கவிதை, அதை விளங்கிப் பாடி வெற்றியும் கண்டிருக்கிறார்கள் என்பதை அண்ணலாரின் தோழர்களின் சம்பவம் உணர்த்துவதை ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன.

ZAKIR HUSSAIN said...

இந்த தொகுப்பை / ஆய்வை தாராளமாக Ph.D க்கு பரிந்துரைக்களாம். நிச்சயம் ஏதாவது ஒரு பல்கலைக்கழகம் இதை அங்கீகரிக்கும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இந்த தொகுப்பை / ஆய்வை தாராளமாக Ph.D க்கு பரிந்துரைக்களாம். நிச்சயம் ஏதாவது ஒரு பல்கலைக்கழகம் இதை அங்கீகரிக்கும்.//

அசத்தல் காக்கா, சரியாகவே சொன்னீர்கள் !

இதனையே இத் தொடர் துவங்கு முன்னர் நூர் முஹம்மது காக்கா அவர்கள் அழுத்தமாகவே சொன்னார்கள், அஹ்மது மாமா தலைமையில் தமிழறிஞர்களின் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்து... அதில் இவ்வாறான ஆய்வுகளை சமர்ப்பிக்க வைத்து அதனை பல்வேறு பல்கலைக் கழகங்களுக்கு அனுப்பி அங்கீகாரம் பெற முயற்சிக்க வேண்டும் என்று..

ஏற்கனவே ஏராளமான புழுகு மூட்டைகளை கவிதகளாகவும், அதனை இஸ்லாமிய கவிதைகள் என்றும் அங்கீகரித்து வைத்துக் கொண்டு அதனை இஸ்லாமிய தமிழ் இலக்கியம் என்று பாதுகாத்து வரும் நிலையை மாற்றி நபி வழி இஸ்லாமிய தமிழ் இலக்கியங்களை ஆவணப்படுத்தப்பட வேண்டும்..

நாமும் இதற்கு முயற்சிக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்...

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

நல்லோர்களை பற்றி நல்ல ஆய்வு.வாழ்த்துக்கள்

Yasir said...

மாஷா அல்லாஹ் தெள்ளத்தெளிவான ஆதாரங்கள்.....

Shameed said...

நல்ல எடுத்துக்காட்டுக்களும்
வலுவான ஆதாரங்களும்

உண்மையில் இது Ph.D க்கு போக வேண்டியவை

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

ஸஹாபாக்கள்(ரலி) அவர்களின் போர்க் கவிதை அருமை!

கவிதை என்று குப்பைகளை கொண்டாடும் இடங்களில் இஸ்லாத்தின் உண்மை கவிதைகள் சென்றடைய வேண்டும்.

****************
///// இதனையே இத் தொடர் துவங்கு முன்னர் நூர் முஹம்மது காக்கா அவர்கள் அழுத்தமாகவே சொன்னார்கள், அஹ்மது மாமா தலைமையில் தமிழறிஞர்களின் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்து... அதில் இவ்வாறான ஆய்வுகளை சமர்ப்பிக்க வைத்து அதனை பல்வேறு பல்கலைக் கழகங்களுக்கு அனுப்பி அங்கீகாரம் பெற முயற்சிக்க வேண்டும் என்று..

ஏற்கனவே ஏராளமான புழுகு மூட்டைகளை கவிதகளாகவும், அதனை இஸ்லாமிய கவிதைகள் என்றும் அங்கீகரித்து வைத்துக் கொண்டு அதனை இஸ்லாமிய தமிழ் இலக்கியம் என்று பாதுகாத்து வரும் நிலையை மாற்றி நபி வழி இஸ்லாமிய தமிழ் இலக்கியங்களை ஆவணப்படுத்தப்பட வேண்டும்..

நாமும் இதற்கு முயற்சிக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்... ///

****************

நானும் வழிமொழிகிறேன்.

sabeer.abushahruk said...

அசைக்க முடியாத ஆதாரங்களைக் கொண்டு அதிரை அறிஞர் அஹ்மது காக்கா செய்யும் இந்த ஆய்வு ப்பி ஹெச் டிக்கு முற்றிலும் தகுதியானதே.

யாரோ எப்போதோ செய்த ஆய்வுதனை ஈயடிச்சான் காப்பி செய்து பக்கத்துக்கு பத்துநூறு ரூபாயென இணைத்து ப்பி ஹெச் டி வாங்கும் இந்தக் காலகட்டத்தில் காக்காவின் பிரத்யேக இந்த ஆய்வு நிச்சயம் டாக்ட்டர் பட்டத்தை வெல்லும்.

ஒய் நாட்?

Noor Mohamed said...

அஹமத் காக்கா அவர்களின் இஸ்லாமிய தமிழ் அறிவை கருவாகக் கொண்டு, குரான் ஹதீஸ் ஆதாரத்துடன், முறையான உண்மையான இஸ்லாமிய காப்பியம் ஒன்றை முதலில் உருவாக்கி, அந்த காப்பியத்தை தமிழ் M.A படித்தவர்கள் ஆய்வு செய்து Ph.D பட்டம் பெறவேண்டும்.

இந்த ஈடு இணையற்ற உழைப்பு வெற்றி பெற அஹமத் காக்கா அவர்களின் உடலும் உள்ளமும் நலமாய் அமைய முதலில் வல்ல இறைவனிடம் துஆ செய்வோமாக

Ameena A. said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

மாஷா அல்லாஹ் தரமான ஆய்வு, தக்க ஆதாரங்களை வைத்து எழுதும் மூத்த சகோதரர் அதிரை அஹ்மது அவர்களுக்கு வல்லமை பொருந்திய அல்லாஹ் நல்ல ஆரோக்கியத்தை வழங்குவானாக இதேபோல் இன்னும் தொடர்ந்து எழுதுங்கள் இன்ஷா அல்லாஹ்.

இதுவரை "பேறு பெற்ற பெண்மணிகள்" தொடர் கடைசியாக பிப்ரவரி 7ம் தேதி வெளிவந்தது அதன் பின்னர் வெளிவர வரவில்லையே ? சிரமம் பாராமல் தொடருங்கள் அதனையும் இன்ஷா அல்லாஹ்...

Anonymous said...

அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

சகோதரி ஆமீனா அவர்களுக்கு:

தங்களின் உள்ளார்ந்த கருத்திற்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர்...

தாமதமாக பதிலுரை தருவதற்கும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்.

//இதுவரை "பேறு பெற்ற பெண்மணிகள்" தொடர் கடைசியாக பிப்ரவரி 7ம் தேதி வெளிவந்தது அதன் பின்னர் வெளிவர வரவில்லையே ? சிரமம் பாராமல் தொடருங்கள் அதனையும் இன்ஷா அல்லாஹ்... //

சகோதரர் அதிரை அஹ்மது அவர்களால் எழுதப்பட்ட "பேறு பெற்ற பெண்மணிகள்" முழுவதும் எங்களுக்கு அனுப்பித் தந்து விட்டார்கள் எங்களின் வேலைப்பளு மற்றும் அதனை எழுத்துருக்களாக கொண்டுவரும் வேலயில் தாமதம் இவைகள்தான் காரணம்,

விரைவில் "பேறுபெற்ற பெண்மணிகள்" தொடரும் தொய்வின்று இரண்டு புத்தகங்களும் நிச்சயம் பதிவுக்குள் கொண்டு வர முயலுவோம் இன்ஷா அல்லாஹ்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு