நபிவரலாற்றினை ஆழமாக ஆய்வு செய்யும்போதுதான், இஸ்லாமிய இலக்கியத்தின் விரிவும் விளக்கமும் தெரிய வருகின்றன. அரபியில் நபிவரலாற்றைத் தொகுத்தவர்களுள் குறிப்பிடத் தக்கோர் மூவர். அவர்கள் – முஹம்மத் இப்னு ஸஅத், முஹம்மத் இப்னு இஸ்ஹாக், அப்துல் மலிக் இப்னு ஹிஷாம் ஆகியோர் ஆவர். இவர்களுள் மூன்றாமவரான இப்னு ஹிஷாம் அவர்கள் தமது நபிவரலாற்றுத் தொகுப்பைக் கவிதைகளால் விரவச் செய்து, ஒரு கவிதைக் காப்பியமாகவே படைத்துள்ளார். இந்த அறிமுகத்தோடு, சென்ற பகுதியின் தொடரைப் பார்ப்போம்:
‘மூத்தா’ப் போர் நபித் தோழர்களுள் பன்னிருவரின் இறப்பிற்குக் காரணமாக அமைந்துவிட்டிருப்பினும், அது முஸ்லிம்களுக்கு வெற்றியாகவே கருதப்பட்டது. மாவீரர் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களின் போர் வியூகத்தால் இஸ்லாமியப் படை ஓரளவிற்கு வெற்றியை உறுதி செய்துவிட்டு, மதீனாவுக்கு வந்து சேர்ந்தது.
“..... பின்னர் அக்கொடியை ‘சைஃபுல்லாஹ்’ (அல்லாஹ்வின் வாள்) பற்றிப் பிடித்தது. அவரின் கைகளில் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் வெற்றியை அளித்தான்!” என்று நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள்.
(சஹீஹுல் புகாரீ – 1246, 2798, 3063, 3630, 3757, 4262).
இதனடிப்படையில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றே திரும்பினார்கள் என்றாலும், மக்கத்துக் குறைஷிகளோடு கைகோர்த்து நின்று, அவர்களுக்கு முஸ்லிம்கள் பற்றிய இரகசியத் தகவல்களைக் கொடுத்துக்கொண்டிருந்த நயவஞ்சகர்கள், “படை வீரர்கள் தம் உயிருக்கு அஞ்சி மூத்தாவிலிருந்து புறமுதுகிட்டு வந்துவிட்டார்கள்” என்று பொய்த் தகவலைப் பரப்பினார்கள்!
ஆனால், முஸ்லிம் படை வீரர்கள் இறப்பிற்கு அஞ்சா இதயம் கொண்டவர்கள் என்பதை, மதீனாவுக்குத் திரும்பி வந்த படை வீரர் ஒருவரின் கீழ்க்காணும் துயர்க் கவிதை மெய்ப்பித்து, நயவஞ்சகர்களின் நாவுகளை அடக்கிற்று:
كفى حزنا اني رجعت وجعفر
وزيد و عبدالله في رمس أقبر
قضوا نحبهم لما مضوا لسبيلهم
وخلفت للبالوى مع المتغبر
ثلاثة رهط قدموا فتقدموا
إلى ورد مكروه من الموت أحمر
இதன் தமிழ்க் கவியாக்கம்:
அந்தோ! என்கை சேதமே! அழுது
வந்தேன் திரும்பி! வாடுகின் றேனே!
தோழர் மூவர் ஜஅஃபர் ஜெய்தும்
வீழா வீரர் ரவாஹா மைந்தரும்
என்னை முந்தி இறப்பை எய்தி
விண்ணைச் சேர்ந்து விழைந்ததைப் பெற்றார்
இறையின் பாதை இதுதா னென்று
முறையாய்த் தெரிந்த மூவரும் தத்தம்
கடமை முடித்துக் கதிபெற் றார்கள்
கடையன் யானோ கதியற் றிங்கே
புழுதி படிந்த புண்ணுட லோடும்
அழுது வடிந்தே அரும்பதி வந்தேன்
முப்படை யோரை முன்னின் றவர்தான்
தப்பித மின்றித் தணித்தவர் மதீனா
திரும்பிடக் கூறினார் திடந்தோள் வீரர்
விரும்பிடா விடினும் வீடுவந் தடைந்தே
மாற்றார் கைகளில் மாண்டிடா நிலையைத்
தோற்றார் என்னல் துர்ச்செய லன்றோ?
கையறு நிலை போல் கவிதை பாடிய அன்புத் தோழரின் உணர்வைக் கண்டு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நயவஞ்சகர்களைக் கடுமையாகச் சாடினார்கள். (சான்று: சீறத் இப்னு ஹிஷாம்)
(ஆய்வு இன்னும் தொடரும், இன்ஷா அல்லாஹ்....)
10 Responses So Far:
நாத்திகமும் ஆன்மீகமும் மாறி மாறி விவாதிக்கும் நண்பர் ஒருவருக்கு இந்த தொடரின் முதல் நான்கை மின்னஞ்சலில் அனுப்பினேன் அதிரைநிருபரின் சுட்டியைத் தொடுக்காமலே, அதன் பின்னர் பதிலேதும் இல்லாததால் அமைதியாக இருந்து விட்டேன்.
இன்று மதியம் ஜெபல் அலி கஸ்டம்ஸில் அவரை பார்க்க நேரிட்டது சட்டென்று "என்னங்க கவிதை ஓர் இஸ்லாமியப் பார்வை அனுப்பாம விட்டுட்டீங்களே" என்றார்"
எனக்கோ டக்கென்றது அவரைக் கூர்ந்து பார்த்து "சீரியஸவா கேட்கிறீங்க?" என்று கேட்டேன்.
அவரும் "ஆமாங்க"
"நான் உங்களுக்கு பகுதி நான்கிற்கு பிறகு உங்களிடமிருந்து பதிலேதும் வரவில்லை என்றே நானும் தொடர்ந்து அனுப்பவில்லை" என்றதும்.
"சரி சரி விடுங்க நான் தொடர்ந்து படிக்கிறேன்" என்றார்
நானும் ஆவலாக "எப்படி?" என்றேன் !
அவரோ "இதென்ன வித்தையா ? 'அதிரை அஹ்மது' என்று கூகிலில் தட்டிப்பார்த்தால் கொட்டுகிறதே... எழுத்தாளரின் நிறைய எழுத்துக்கள்....
அதிரைநிருபரிலும் அதிரை எக்ஸ்பிரஸிலும் அதிரை அஹமது எழுதுகிறாரே... என்றார் !!
அப்படியா(ங்க) ?
அரபிப்பாவை தமிழ்ப்பாவாக்கி இஸ்லாமியப் பார்வை பார்க்கும் அஹ்மது காக்காவுக்காக என் துஆக்கள்.
காக்கா, அரபியில் கவிதையை மூலத்திலிருந்து எடுத்தாண்டிருப்பீர்கள், சரி.
தமிழாக்கம் தங்களின் புனைவா?
மரபு கோலோச்சுகிறதே அதனால்தான் கேட்டேன்.
ஆய்வும் மொழிபெயர்ப்பும் இஸ்லாத்தில் கவி இடம்பெற்றதையும் தங்களின் மொழிப் புலமையையும் உறுதிபடுத்துகின்றன.
வளரட்டும் உங்கள் ஞானம்!
தம்பி சபீருக்கு:
ஆம்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்புள்ள தம்பி சபீர் அவர்கள் கேட்பது -
//காக்கா, அரபியில் கவிதையை மூலத்திலிருந்து எடுத்தாண்டிருப்பீர்கள், சரி.
தமிழாக்கம் தங்களின் புனைவா?
மரபு கோலோச்சுகிறதே அதனால்தான் கேட்டேன்.//
இதற்கு அஹமது காக்காவின் பதில் ஆம்.
என கருத்து : இப்படி இரு மொழி புலமை பெற்றவர்களால்தான் இப்படிப்பட்ட உயர்வான ஆக்கத்தை தர இயலும். அடுத்தவர்களை சார்ந்து இருக்கும் நிலை இருந்தால் இந்த தொடர் இவ்வளவு சிறப்புடன் அமையாது. தான் உணர்ந்ததை தானே பெற்றிருக்கும் மொழிப்புலமையுடன் கவிதையாக மொழிபெயர்ப்பது SOMETHING EXTRAORDINARY. MASHA ALLAH. WE ARE GRACED TO HAVE YOU WITHIN US.
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஆய்வு பனி ஓய்வு இல்லாமல் பயணிக்க அல்லாஹ் உதவி செய்வானாக.
கவிதைக்கு வலு சேர்க்கும் அதே சமயம் அஹ்மது காக்காவினால் இஸ்லாமிய வரலாற்றுச்செய்திகளும் நமக்கு போனசாக கிடைக்கின்றன..அல்லாஹ் உங்களுக்கு பூரண உடல்நலத்துடன் ஞானத்தையும் விசாலமாக்கி வைப்பானாக
அன்பு அஹ்மது காக்கா,
மஹாராஜாக்களின் வம்சாவழியென ஒரு பெரும் மொழி அறிஞர் கூட்டம் மரபில் வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தாலும் குடிமக்களென பெருத்து பரவிப்போன புதுக்கவிதை வித்தககர்கள் எங்கும் பூத்துக் குழுங்கினாலும் கீழ்கண்டதுபோன்ற நவீனத்துவ புரட்சி அடங்காப்பிடாரிகளும் ரசிக்கப் படுகின்றதின் காரணம் யாது?
இதை இங்கு பதிய முக்கியக் காரணம் இதன் தலைப்பை மாற்றி வட்டாரக் கருவைப் பொதுக் கருவாக மாற்றி திண்ணையில் பதிவுக்குத் தகுதியாக்கியது நம் ஜமீல் காக்காதான் என்று பரை சாற்றவும்தான்.
வெறும் தோற்ற மயக்கங்களோ?
அதற்கப்புறம்
ஆறேழு மாதங்களாகியும்
அம்மாவுக்கு
அப்பாவின் மறைவு குறித்து
தீர்மானமாக ஏதும்
புரிந்துவிடவில்லை
அன்றாட வாழ்க்கையில்
அதிகப்படியான உரையாடல்களை
அம்மா அப்பாவிடம்
சொல்லிக் கொண்டுதானிருந்தாள்
அப்பா வாழ்ந்த வீட்டின்
அத்தனை இடங்களிலும்
நின்றதுவும் நடந்ததுவும்
மொத்த நேரமும்
கூடவே இருந்ததுவும்
சில்லறைக் காரியங்களைச்
செய்து தந்ததுவும்
மாடியில்
தண்ணீர்தொட்டி நிரம்பி
அருவியாய் கொட்டும்போதெல்லாம்
மோட்டாரை நிறுத்தச்சொல்வதும்
காய்கறிக் கடையில்
மறக்காமல் புதினா மல்லியோடு
கறிவேப்பிலைக் கொத்தும்
கிள்ளிப்போட்டு வாங்கிவரச்சொல்வதும்
அடமான நகைக்கு
வங்கியில்
கெடு முடிவடையப்போவதை நினைவுறுத்துவதும்
மாமா வீட்டில்
மண்ணெண்ணெய் வாங்க
இரவல் கொடுத்த
குடும்ப அட்டையை
மறவாமல்
அன்றாவது திரும்ப வாங்கச் சொல்வதும்
என
அப்பாவை
ஏதாவது சொல்லிக்கொண்டிருக்கும்
அம்மாவுக்கு
வீடு முழுவதும் அப்பா இருப்பதாக
தோன்றல்கள்
எனினும்
வீடே உறங்கும்
விடிகாலையில்
ஃபிளாஸ்க்கில் முக்கால்வாசிச் சூடு
நீர்த்துப் போன
காஃபி ஊற்றி
பிஸ்கோத்து நனைத்து
தனியாக
உண்ணும்போது மட்டும்
அம்மாவுக்கு
விழிகளில் நீர் கோர்த்துக்கொள்ளும்.
-Sabeer
வீடே உறங்கும்
விடிகாலையில்
ஃபிளாஸ்க்கில் முக்கால்வாசிச் சூடு
நீர்த்துப் போன
காஃபி ஊற்றி
பிஸ்கோத்து நனைத்து
தனியாக
உண்ணும்போது மட்டும்
அம்மாவுக்கு
விழிகளில் நீர் கோர்த்துக்கொள்ளும்.
Really its beautiful!
// மரபு கோலோச்சுகிறதே அதனால்தான் கேட்டேன்.//
ஆசிரியப்பா இது ஆசிரியரின் பா என்பதிலும் ஐயமுண்டோ? இதுகாறும் அரபுப்பாக்களை தமிழ் மரபுப்பாக்களாய் பொருள் மாறாமலும் எடுத்துக் கொண்ட தமிழ் மரபுப்பாவின் வாய்பாடு அமைப்புப் பிறழாமலும் மொழிபெயர்ப்பில் படைப்பது என்பது மிகவும் கடினமான பணி; ஆனால் எங்கள் ஆசான் அவர்கட்கு அல்லாஹ் அருளிய அருட்கொடை; அதிலும் "ஆம்" என்ற ஒற்றைச் சொல்லில் பதிலிறுத்தியிருப்பதும், "நிறைகுடம் தளும்பாது" என்பதை மெய்ப்படுத்திய மெய்ஞானி!
Post a Comment