ஒரு சகோதரனின் டைரியிலிருந்து.... !
-சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...
என மெல்லிய குரலில் சப்தமிட்டவாறே.....
காதில் அலுக்கத், கழுத்தில் அஷரப் காசுமாலை, பொட்டிப்பீஸ் மேத்துணி, ஜெமிலாப்பத்தை வேட்டி...
என அணிந்திருந்த உயரமான திடகாத்திரமான உருவம் ஓன்று நிழலாக நின்றது அந்த சுபுஹு நேரத்தில், பட்டென்று கண்விழித்துப் பார்த்தல் அருகில் என் “உம்மம்மா”
“உம்மம்மா இன்னிக்கி “டீசன்” இல்லம்மா “சனிக்கிழமை” 4 வது “C” சார் வரமாட்டாரும்மா” என்றேன்..........
அது இல்லடா இன்னிக்கு “ரெத்தனம்” தோப்பிலே தேங்காய் வெட்டு சீக்கிரம் குத்பா பள்ளி ஹஜரத்திட்டே “குரான்” ஓதிட்டு வந்துரு மகிழங்கோட்டை போவனும்..... எனச் சொல்லிவிட்டு சிறிது நேரத்தில் “அரிக்கன்”லைட்டை எனது கையில் தந்து வழியனுப்புகிறார்.
இங்கே எனது உம்மம்மாவைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் என் மீது அன்பு கலந்த பாசத்தை பொழியக்கூடியவர் மட்டுமல்ல எனது படிப்பின் மீது அதிக அக்கரை எடுத்துக்கொண்டு “குடும்பத்தில் முதல் பட்டதாரி” யாக உருவாக்க வேண்டும் என்ற வைராக்கியத்தோடு எனக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பவர்.
குரான் ஓதிட்டு வந்தவுடன் நானும் எனது உம்மம்மாவும் தோப்பிற்கு சென்றோம்.
அங்கே காத்திருந்த வெட்டுக்காரர்களிடம் “வேலையை சீக்கிரம் ஆரம்பிங்கையா” லேட்டாவுது எனச் சொல்லியவாறு அவர்களை துரிதப்படுத்திவிட்டு தேங்காய் குமித்து போடும் “பற்றறை” க்குச் செல்கிறார் என் உம்மம்மா.
அப்போது என்னருகே வந்து மெல்லிய குரலில் டேய் “வாப்பா”........இந்த தோப்பு உனக்குத்தாண்ட...........அதனாலே கவனமா எல்லாத்தையும் பார்த்துக்க என்றதும்............
ஆமா... ஆமா...வேலைக்காக பெரிசா “ஐஸ்”ல்லாம் தலையில் தூக்கி வைக்காதே..... என பதில்ச் சொல்லிவிட்டு
தேங்காய் ஏதும் தாளைக்குள் விழுகிறதா ? வெட்டுக்காரர் ஒவ்வொரு மரத்திலும் தேங்காய்ப் பறிக்கிறாரா ? அது “நெத்து” க்காயா உள்ளதா ?
பாலை, பூக்கமலை போன்றவற்றை எடுத்து ஓரிடத்தில் சேர்த்தவாறே கண்காணித்துக் கொண்டுச் செல்கிறேன்.
தேங்காய் வெட்டி முடிக்கப்பட்டு வீட்டிற்கும் வந்துவிட்டோம்.
காலங்கள் பல உருண்டு ஓடின........................
இத்தனை நாள் பத்தாவது வரை யாரையும் பெயிலாக்க கூடாதுன்ற கவர்மெண்ட்டு சட்டம் ஒருபுறம் இருந்தாலும் ஒரு ஒரு வகுப்பாக கவனமாகப் படித்து பாஸாயி வந்து இப்ப பத்தாவது முழுப்பரிச்சையும் எழுதியாச்சு.............இனி ரிசல்ட்டுதான் “யா அல்லாஹ்” நான் பாஸாயிடனும் அதை முதலில் என் உம்மம்மாவிடம் சொல்ல வேண்டும் என மனதில் எண்ணியவாறே “மாலை மலர்” பேப்பர் வாங்க நம்ம MP காக்கா கடைக்கு ஓடுகிறேன்......
பேப்பரை வாங்கிப் பார்த்தவுடன் எனக்கு மகிழ்ச்சி காரணம் “நான் பாஸாயிட்டேன்”.............இரவு பகல் எனப் பாராமல் விடா முயற்சியுடன் கவனமாக படித்த எனக்கு மகிழ்வைத் தந்த அந்த அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தியவனாக....... இம்மகிழ்ச்சியைப் எனது உம்மம்மாவிடம் பகிர்ந்துகொள்வதற்காக எனது வீட்டை நோக்கி ஓடுகிறேன்......
வீட்டின் அருகே உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என ஒரேக் கூட்டமாகக் காணப்பட்டார்கள். உள்ளேச் சென்றால் எனது “உம்மம்மா” கட்டிலில் படுக்கையாய் காட்சியளித்தார்....தம்பி உம்மம்மா ”மவுத்தா போச்சுடா” என என் காக்கா சொன்னவுடன் எனது அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் “உம்மம்மா நான் பாஸாயிட்டேன்”..... “உம்மம்மா நான் பாஸாயிட்டேன்”......என கத்தியவாறு அழுகிறேன்.......இதைக்கண்டவுடன் அருகே உள்ள எனது உறவினர்களும் கூடி அழுதனர்.
மாதங்கள் பல ஓடின..................
எனது உம்மம்மாவின் நினைவாக வீட்டில் உள்ள அந்த பொட்டகத்தை திறந்து ஒவ்வொன்றாய் பார்க்கின்றோம் எனது பெயருக்கு “ஹிப்பத்” செய்யப்பட்ட “ரெத்தனம்” தோப்பின் பத்திரம் அதில் இருந்தது.
தொலைந்த பொருளைத் தேடுவது போல் வாழ்க்கையில் “கல்வி”யை தேடிக்கொண்டே இருங்கள்.........அது நிச்சயம் உங்களுக்கு பலனளிக்கும் ( இன்ஷா அல்லாஹ் ! )
-சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...
15 Responses So Far:
மனசு கலங்குதுங்க ..,
தாய் காது குளிர கேட்க வேண்டிய செய்தியை
கதறி அழுதுசொன்னது மனதை அழ வைத்து விட்டது
என் போன்ற எத்தனையோ சகோதரர்கள் இயலாத தாயை
கவனிக்காமல் கடல் (கண்டம் ) கடந்து வாழ்ந்து வருவது அதை
விட கொடுமை ..
பாஸாகிய செய்தி எங்கள் மனங்களை பெயிலாக்கிவிட்டது....துக்கத்தால்
மனதை நெகிழவைத்த சம்பவம், தன் பிள்ளைகளின் வாழ்வை ஒளிமயமாக்க நம்மில் எத்தனை உம்மா மார்கள் தன்னை இருட்டுக்குள் ஆசைகளையெல்லாம் அடக்கிவெச்சிருக்காங்க
யா அல்லாஹ் உலகத்தில் கஷ்டத்தை கொடுத்த அவர்களுக்கு கபுரின் வேதனைகளை விட்டும் சுவர்க்கத்தை கபூலாக்குவாயாக ஆமீன்....!
ஒரு மகனா நாம நல்ல நிலைக்கு வந்தால் உம்மா/வாப்பா கஷ்டத்தையெல்லாம் மறக்க வெச்சி நல்ல வாழ்க்கையை கொடுக்க முயற்சிப்போம், இறந்துவிட்டால் துஆ ஒன்று மட்டுமே அவர்களுக்கு நாம் செய்யும் கைங்காரியம்...
தம்பி நிஜாம்,
இப்படி தேம்பித் தேம்பி அழவைக்கவேண்டுமேன்று எவ்வளவு நாட்களாய்க் காத்து இருந்தீர்கள்?
எங்களுக்காக அன்பான நினைவுகளைத்தவிர எந்த சொத்தையும் விட்டுச்செல்லாத எங்கள் உம்மம்மாவின் நினைவு வந்து இளமைக்கால நினைவுகளை கிளறிவிட்டது. அந்த நினைவுகள் பல கோடி பெறும்.
சாப்பிடாமல் படுத்த இரவுகளில் பாலும் சோறு பிணைந்து தந்து உறங்கிக்கொண்டு இருக்கும்போதே ஊட்டி விட்டவர்கள்.
பலபோடி மீன் வாங்கினால் நகறை மீன் எனக்குப்பிடிக்கும் என்று எடுத்திவைத்துத்தந்தவர்.
விளைக்கரத்தெருவில் மரவல்லிக்கிழங்கை சக்கர வெட்டு வெட்டி
வாங்கித்தந்தவர்.
பெருனாளைக்குப் பட்டு வேட்டி சேனியனிடம் சொல்லிவைத்து வாங்கித்தந்தவர்
அன்றாடம் அரையணாக்காசுக்கு "மொம்தாயார்" கடையில் சக்கரை மிட்டாய் வாங்கித் தின்னச்சொல்லித்தந்தவர்,
ஹந்துரிக்கடையில் பசும்பந்து வாங்கித்தந்து சில்லுப்பந்து விளையாடச்சொன்னவர் ,
மழைக்காலந்த்தில் சோளம் வருத்தும் அவித்தும் கைலி மடியில் சுட சுடத்தந்தவர் இப்படி எத்தனையோ
உருவி உருவி வளத்தவள் இன்று நான் போடும் ஒரு வயிற்று சோறு உண்ண உயிருடன் இல்லையே!
எவ்வளவோ கஷ்டத்தில் நம்மை வளர்த்தார்கள். இன்று நாங்கள் எல்லோரும் அல்லாஹ் உதவியால் நன்றாக இருக்கிறோம். ஆனால் யார் இருந்து பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டோமோ அந்த உம்மம்மா இலையே.
ஆயிரம் சொல்லுங்கள் உம்மம்மா இல்லாத வாழ்வு சைபராகவே தோன்றுகிறது.
நாங்கள் கட்டும் காலனி வீட்டுக்கு உம்மம்மா பெயரைத்தான் சூடி இருக்கிறோம். காலத்துக்கும் அந்தப்பெயர் அஹமது நாச்சியா என்று விளங்குவதற்காக.
நாம் சம்பாதித்து பெற்றோர்களையும் முன்னோர்களையும் காப்பாற்றும் பாக்கியங்களை அல்லாஹ் ஒரு சிலருக்கே அருளியுள்ளான். பாரமாக எண்ணுவோர் பலருண்டு. பரவசமடைவோர் சிலருண்டு.
அஸ்ஸலாமு அலைக்கும்.
// ஆயிரம் சொல்லுங்கள் உம்மம்மா இல்லாத வாழ்வு சைபராகவே தோன்றுகிறது. //
இதை மறுப்பவர் எவரும் இலார்.
மூத்த சகோ. இப்ராஹீம் அன்சாரி அவர்களே,
தங்கள் "உம்மம்மா" மர்ஹூம் அஹமது நாச்சியா அவர்களின் மீது தாங்கள் வைத்துள்ள பாச நேசம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.
இப்படி ஒவ்வொரு சகோதரர்கள் வாழ்விலும் “உம்மம்மா” வின் பங்கு சிறப்புக்குறியதாக இடம்பெற்றிருக்கும்.
"உம்மம்மா"ன்னா பெரியம்மா தானே !? (உம்மாவின் உம்மா !?) ஆஹா ! "ம்ம்மா" ஒன்னு கூடியதும் எவ்வளவு அழுத்தமும் அவர்களின் அன்பின் ஆழமும் ஆர்பரிக்கிறது இங்கே பின்னூட்டங்களாக !
என்னோட வாப்பிச்சாவையே நான் "உம்ம்ம்மா" என்றுதான் அழைப்பேன் ! எல்லையில்லா அன்பின் சிகரம் ! அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொள்வானாக !
என்னாச்சு அ.நி? இந்த வாரம் “கண்ணீர் வாரமா?”
1)அபுஹஷீமா நேற்று அழ வைத்தார்; பேரனும் மகளும், மகனும் வைக்கும் பாசம் தான், நாம் அயல்நாட்டில் பட்ட கஷ்டங்களின் பிரதிபலன் என்று!
2) விமானத்தின் சன்னல் ஓரம் கவிவேந்தர் சபீர் எழுதும் கவிதை, எனது விழிகளின் ஓரம் கண்ணீர் ஓட வைத்தது, மனைவி மக்களை விட்டுப் பிரிந்து விமானத்தில் பயணிக்கும் ஒவ்வொரு முறையும் நமக்கு ஏற்படும் உணர்வுகளின் உரைகல்லாக அக்கவிதை (கண்ணீர்) வடித்துள்ளார்கள்!
3) இன்று, இதோ “விழிப்புணர்வு வித்தகர்” சேக்கனா நிஜாமும் விழிகளின் ஓரங்களில் வழியும் கண்ணீர்க்கு (சகோ. இப்றாஹிம் அன்சாரி சொன்னது போல் தேம்பி, தேம்பி)க் காரணமாக்கி விட்டார்கள், இக்கட்டுரை வழியாக!
உம்மாவின் அன்பையும் அரவணைப்பையும் பார்த்த எனக்கு உம்மம்மாவின் ஞாபகம் இல்லாத அளவுக்கு என் சிறுவயதில் இறந்து விட்டார்கள்! ஆனால், இக்கட்டுரையாளரின் ஏக்கம் போலவே, என் உம்மா அவர்கள் நான் கஷ்டப்பட்ட காலங்களில் எல்லாம் கவலைப்பட்டவர்கள், வளமாக வாழும் காலத்தில் பார்க்க இயலாமல் மண்ணுக்குள் அடங்கி விட்டார்கள் என்ற ஏக்கமும், அதுவும், நான் அமெரிக்காவில் இருந்ததால், அவர்களின் மவுத்தான நேரத்தில் ஊரில் இல்லாமல் போனதும் இன்றும் நினைத்தாலும் என் கண்கள் குளமாகும்!!!! நான் எழுதிய கவிதைகளிலே “தாயே” என்ற அக்கவிதை தான் எனக்கு மன திருப்தியைத் தந்தது; காரணம் முழு மன ஈடுபாட்டுடன் உணர்வுடன் எழுதினேன்!
so touching
எல்லோருடைய உம்மம்மாவும் கஷ்டப்படும் காலத்தில் கூட இருந்து விட்டு நல்லபடியாக இருக்கும் காலத்தில் இல்லாமல் போனவர்களே...
எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பேரனுக்கு உதவியாக இருப்பதாலேயே உயர்ந்தவர்கள் ஆகிறார்கள்.
"உள்ள புள்ளையல்வொல்லேயே நீ தான் ரொம்ப நல்ல புள்ளெ" என்று வாய் பேச இயலாத காலஞ்சென்ற என் பெரியம்மா (உம்மாவின் உம்மா) அவர்கள் சிரமப்பட்டு தன் அரைகுறைப்பேச்சால் என்னை சொல்லி உளமார மெச்சுவதை இன்று சகோ. சேக்கன்னா நிஜாம் அவர்கள் தன் கட்டுரை மூலம் எனக்கு மீள் நினைவுபடுத்தி விட்டீர்கள்.
காலஞ்சென்ற பிரியமான நம்மவர்கள் அனைவர்களின் கப்ருகளையும் அல்லாஹ் விசாலமாக்கி, பிரகாசமாக்கி அவர்களின் முன் பின் பாவங்களையெல்லாம் மன்னித்து அவர்கள் நமக்காக நினைத்திருந்த நல்ல பல ஹாஜத்துக்கள் நிறைவேறி ஜன்னத்துல் ஃபிர்தெளஸ் என்னும் உயர்ந்த சொர்க்கத்தில் அவர்களை எல்லாம் பிரவேசிக்க நல்லருள் புரிவானாகவும்.......ஆமீன்.....
நெஞ்சு கலங்குது உங்கள் வர்ணிப்பு,அல்லாஹ் நம் எல்லா வாப்பிச்சா,உம்ம்மா,அப்பாக்களுக்கு அருள் புரிவானாக,கபுரை வெளிச்சமாகி வைப்பானாக.நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்ப்பானாக
உம்மம்மாவின் இழப்பு ஒவ்வொரு மனிதருக்கும் பெரிதழவு பாதிப்பை ஏற்ப்படுத்திருக்கும்
சகோ சேக்கனா M. நிஜாம் அவர்களின் இப்பதிவினால் மெய்சிலிர்க்க வைத்ததோடு அல்லாமல் பலரின் நினைவலைகளில் உம்மம்மாவை சிக்கவைத்துள்ளார் அருமை வாழ்த்துக்கள்
ஒரு சகோ உம்மம்மாவின் இழப்பை அவர் மன குமுரளினால் நமக்கு பதிவாக எடுத்துரைத்துள்ளார் அதனை முன்பே நான் படித்ததை இங்கே நினைவுட்டுகிறேன் கிழே உள்ள லிங்க்யை சொடுக்கினால் சகோ ஷாநவாஸ் அவர்களின் மனதார அவர் பட்ட கஷ்டம் பதிவாக இதோ....
http://aloorshanavas.blogspot.com/2011/03/blog-post_24.html
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
உம்மம்மாவின் பாசம் உண்மையில் மெய் சிலிர்க்கும் வைக்கும். அவர்களின் பாசத்தை மனதார இன்றும் அசை போட்டுக் கொண்டு இருக்கிறேன். அவர்களின் பாசத்தை எழுத்தில் வடித்து விட முடியாது. வல்ல அல்லாஹ் ''எல்லோரின் உம்மம்மாக்களும் அவர்களின் பாவங்களை மன்னித்து மறுமை வாழ்க்கையை சிறப்பாக்கித் தரட்டும்.''
Post a Comment