கவிதைகள் பற்றிய நபியவர்களின் நிலைபாட்டை அறியாத நிலையில் – தமது இஸ்லாத்தின் தொடக்க காலத்தில் – நபித்தோழர் உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்கள் கவிதைகள் இயற்றும் கவிஞர்களைச் சாடிவந்தார்கள்! ஆனால், பிற்காலத்தில் அன்னார் இஸ்லாத்தின் இரண்டாவது மக்கள் பிரதிநிதியாக (கலீஃபா)ப் பொறுப்பேற்ற பின்னர், கவிதைகளை ஆதரித்ததுடன், கவிதைக் கலையைச் சிறார்களுக்குக் கற்றுக் கொடுக்குமாறு ஆர்வமூட்டியுள்ளார்கள் என்ற உண்மையை அன்னாரின் வரலாறு நமக்குக் கூறாநிற்கின்றது. அதற்கான சான்றுகளை இப்பதிவில் காண்போம்.
நபியின் பாசறையில் வார்த்தெடுக்கப்பட்டவராதலால், உமர் இதில் மிகுந்த எச்சரிக்கையையும் கடைப்பிடித்தார்கள். ‘ஜாஹிலிய்யா’ எனும் அறியாமைக் காலம் முதல், அரபுகளிடம் கவி புனையும் பழக்கம் இருந்துவந்ததை முந்தையப் பதிவுகளில் நாம் கண்டோம். அப்பழக்கம் இஸ்லாத்திலும் தொடர்ந்ததால், ஓரிரு வரம்பு மீறல்கள் நடக்கவே செய்தன. அத்தகைய வரம்பு மீறல்களை உமரவர்கள் வன்மையான கட்டளைகளைக் கொண்டு தடுக்காமலும் இருக்கவில்லை. இத்தகைய கவிதைகளில் பாலியல் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகப் பெண்களின் பெயர்களுடன் சில கவிதைகள் வலம் வந்தபோது, உமரவர்கள் அவற்றிற்குத் தடை விதித்தார்கள். கலீஃபாவின் இக்கட்டளையை மீறிய கவிஞர்கள் மீது கடுமையான தண்டனை பாய்ந்தது!
ஆனால் அதே வேளை, உமரவர்கள் தமது ஆட்சியின் கீழ் இருந்த மாநிலங்களின் ஆளுநர்களுக்கு அவ்வப்போது கட்டளைகள் பிறப்பித்த நேரங்களில், பள்ளி மாணவர்களின் பாடத் திட்டத்தில் கவிதைக் கலையையும் ஒரு பாடமாகச் சேர்த்துப் பயிற்றுவிக்குமாறு அறிவித்தார்கள்!
(சான்று: அல்லாமா, அபுல்ஃபரஜ் இஸ்ஃபஹானியின் ‘كتاب الاغاني’)
உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில், அவர்களால் அமர்த்தப்பட்ட மாநிலங்களின் ஆளுநர்களுள் சிலர் ஆடம்பர வாழ்க்கையை மேற்கொண்டுள்ளார்கள் என்ற தகவல் கலீஃபாவுக்குக் கிட்டியது. உடனே எச்சரிக்கை ஓலை பறந்தது! அதன் பயனாக, திருந்தியவர்கள் அடங்கினார்கள்; இன்னும் சிலர் விளக்கமளித்தார்கள். அவர்களுள் காலித் இப்னு சஈத் (ரலி) என்ற நபித்தோழர் ஒருவர். கலீஃபாவின் கவிதை ஆர்வத்தைக் கருத்துள் கொண்டு, காலித் (ரலி) கவிதையிலேயே மறுமொழி வரைந்தனுப்பினார்கள்.
(சான்றுகள்:فتوح البلدان /كتاب الخراج )
கலீஃபா உமர் (ரலி) அவர்கள் நபியின் பள்ளிவாசல் எனப்படும் ‘மஸ்ஜிதுன் நபவி’யை விரிவு படுத்திக் கட்டியபோது, பள்ளியின் வளாகத்தினுள் மேடையொன்றை அமைத்து, அதை மக்களின் பொது மன்றமாகவும் கவிஞர்களின் கவியரங்கமாகவும் ஆக்கினார்கள்!
(சான்று: خلاصة الوفاء في أخبار دار المصطفى )
தம் அருமைத் தோழர் உமரைப் பார்த்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,
يا ابن الخطاب، والذي نفسي بيده ما لقيك الشيطان سالكا فجا قط إلا سلك فجا غير فجك
(கத்தாபின் மகனே! என் உயிரைத் தன் கைவசம் வைத்திருப்பவன் மீது ஆணையாக, ஒரு தெருவில் நீங்கள் நடந்து செல்வதை ஷைத்தான் கண்டால், அவன் உங்கள் தெருவை விட்டு வேறொரு தெருவில்தான் செல்வான்) என்று சொன்னார்கள்.
(சான்றுகள்: சஹீஹுல் புகாரீ – 3294/3683/6084, சஹீஹ் முஸ்லிம் - 4768)
மேலும் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
لو كان بعدى نبى لكان عمر بن الخطاب
“எனக்குப் பின்னர் நபி இருப்பாராயின், அவர் உமராகத்தான் இருப்பார். எனினும், எனக்குப் பின் நபியில்லை.”
(திர்மிதீ(3686), முஸ்னது அஹ்மத், ஹாக்கிம், தபரானி, இப்னு ஹிப்பான்)
இறைத்த தூதர் (ஸல்) அவர்கள் இன்னும் கூறினார்கள்:
إن الله جعل الحق على لسان عمر وقلبه
“திண்ணமாக, அல்லாஹ் உமரின் நாவின் மூலமும் இதயத்தின் மூலமும் உண்மையை உறுதிப் படுத்திவிட்டான்.” (சான்று: திர்மிதீ – 2682)
மேற்கண்ட சிறப்புகளையும், ‘ஷஹீத்’ (புனிதப் போரில் உயிர் துறப்பவர்) என்ற பெருஞ்சிறப்பையும் பெற்ற கலீபா உமர் (ரலி) அவர்களின் கவிதைப் பற்றினைப் பற்றி அறியும்போது, நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
(ஆய்வு இன்னும் தொடரும், இன்ஷா அல்லாஹ்....)
(ஆய்வு இன்னும் தொடரும், இன்ஷா அல்லாஹ்....)
5 Responses So Far:
தோண்டத் தோண்ட ஊற்றாகும்
*** தொடரு மென்று முற்றாகும்?
நீண்ட விவாதம் வளர்ந்தாலும்
***நீங்க ளின்னும் தளராமல்
வேண்டு மளவு காட்டுகளை
***வேண்டி விரும்பி காட்டுகின்றீர்
ஈண்டு எழுதும் ஆக்கமும்தான்
***இனியொ ருநூலாய் ஆகிடுமோ?
கவியின் தன்மை காலத்திற்கு காலம்
மாறுபடுகிறது ..என்பதை இந்த தொடர் இனம்
காட்டுகிறது ..சாதுர்யம் மிக்க அமீர் ..கலீபா உமர் (ரலி )
அவர்கள் காலத்திலேயே திசை மாற பார்த்ததை
அற்புதமாய் சுட்டி காட்டும்ஆசிரியர் சரியான திசையில்
கட்டுரையை கொண்டு செல்வது சந்தோசமான விஷயம் ..
கவியின் தன்மை காலத்திற்கு காலம்
மாறுபடுகிறது ..என்பதை இந்த தொடர் இனம்
காட்டுகிறது ..சாதுர்யம் மிக்க அமீர் ..கலீபா உமர் (ரலி )
அவர்கள் காலத்திலேயே திசை மாற பார்த்ததை
அற்புதமாய் சுட்டி காட்டும்ஆசிரியர் சரியான திசையில்
கட்டுரையை கொண்டு செல்வது சந்தோசமான விஷயம் ..
இஸ்லாத்தின் கண்ணாடி வழியாக இலக்கியப் பார்வை!
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா,காக்கா.
பதிவு பதினெட்டின்
பின்னூட்டம் வரம்பைக் கடந்துவிட்டது...!
போதும், போதும், போதும், போதும்...!
பதிவு எண் பத்தொன்பது உறங்குகின்றது.
இங்கே கொஞ்சம் வந்து பாருங்களேன்...?
Post a Comment