Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சுடச்சுட அதிரை! 36

அதிரைநிருபர் பதிப்பகம் | May 10, 2012 | , ,

பூதம் ஒன்று
புழங்குகிறது ஊருக்குள்ளே
வாதம் கொண்டூர்
முடங்குகிறது ராவுக்குள்ளே

நிதமும் மிரட்டும்
மின்வெட்டு பூதத்தால்
நிறங்கள் இறக்கின்றன
இருளெனும் ரோகத்தால்

மின்னல் வெட்டு போல
மின்னிமின்னி மின்சாரம் மறைகிறது
மின் வெட்டு வாளால்
கண்ணின் மணியைக் குடைகிறது

சேமித்து வைப்பதற்கு
சில்லைரையாகக்கூட
மின்வரத்து இல்லாததால்
காது திறுகப்பட்டக்
கைக்குழைந்தைபோல
கதறுகிறது மின்கலன்

காட்சிகள் இருக்கின்றன
காண முடியவில்லை
விளக்குகள் இருக்கின்றன
வெளிச்சம் இல்லை

கருமேகக் கூட்டங்களும்
குலுகுலுவென மழைக்காற்றும்
கனமழை வருமென
கட்டியம்கூற
காசு கொடுத்துக் கூட்டி வந்த
கட்சித் தொண்டர்கள்போல
கைதட்டி
கலைந்து போனது தூறல்

தூறலின் கைதட்டால்
ஊறலில் உறங்கிய
நுழம்பு விழிக்கிறது
கிளம்பி வருகிறது
நித்தம் கடிக்கிறது
ரத்தம் குடிக்கிறது

கொசுவின் கடியைவிட
கொடுமையா யிருக்கிறது
காதுக்குள் ரீங்காரம்

சபுர் ஏதும் செய்யாமல்
சல்லிக் காசுமில்லாமல்
குருதி குடித்தே
கொழுத்துப் போயிருக்கின்றன கொசுக்கள்

கொசுக் கடியால்
விடியவிடிய
விழித்துக் கொண்டிருக்கிறது இரவு

இல்லங்களில் இருட்டே
இத்தனை கொடுமையெனில்
உள்ளங்களில் இருட்டு
எத்துணை தீமை

-சபீர்

36 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நீண்ட நாட்கள் கழித்து வந்தாலும் எல்லாமே சுடச் சுடத்தான்...

//கொசுவின் கடியைவிட
கொடுமையா யிருக்கிறது
காதுக்குள் ரீங்காரம்//

கை தட்டிகிட்டே இருக்கலாம் காக்கா ! (கொசுவுக்கல்ல இந்த வரிகளை வடித்த உங்களுக்கு !) :)

//சேமித்து வைப்பதற்கு
சில்லைரையாகக்கூட
மின்வரத்து இல்லாததால்
காது திறுகப்பட்டக்
கைக்குழைந்தைபோல
கதறுகிறது மின்கலன்///

அதுவும் சக்தியிழந்து கதறுவதை குறைத்துக் கொள்கிறது...

இருந்தாலும் சொல்லி வச்சு அடிக்கிறான்னு சொல்வது போல்...

மின் வெட்டினால்...
கண் சிமிட்டினேன்
அப்போதும் இருட்டே
எனக்கு தெரிந்தது

:) (கவிதைன்னு சண்டைக்கு வர வேண்டாம்)

சேக்கனா M. நிஜாம் said...

கொசுக்கடி, அறிவிக்கப்படாத மின்வெட்டு போன்ற ஊரின் அவலத்தை சகோ. கவிநேச(பி)ரின் வரிகளில் குறிப்பிடப்பட்டுள்ளார். வாழ்த்துகள் !

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

/ கொசுக் கடியால்
விடியவிடிய
விழித்துக் கொண்டிருக்கிறது இரவு//

இன்று இரவு பனிரெண்டரை முதல் காலை ஒன்பது மணி வரையிலும் மின் கட்டால்.மோடி,ராஜபக்சே இவர்களின் குணம் படைத்த கோழை கொசுக்கள் மின்சார துறையின் ஒத்துழைப்பால் இருட்டில் வந்து பச்சிளம் பாலகனையும் சித்திரவதை செய்ததை எந்த நீதி மன்றத்தில் போய் சொல்ல.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

அடிக்கடி மறையும் மின்சாரம்
அதனால் கொசுவுக்கு கொண்டாட்டாம்!
ஜெவோ கூடங்குளத்தை காரணம் காட்டி
பெட்டிக்கு செக் வைக்கிறார்!
கூடங்குள மின்சாரம் முழுவதும் வேண்டுமாம்
தமிழக மக்களை ஏமாற்ற அடிக்கடி அறிவிப்பு
வியாபாரிகளின் செய்திகளில்!
என்று ஒழியும் மக்களைக் கடிக்கும் கொசுவும்
மக்களின் ரத்தத்தை வரி என்ற வடிவில் உறிஞ்சி
வாழும் மக்கள் விரோத அரசும்!

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

சபீர் காக்காவின் நல்ல விழிப்புணர்வு கவிதை இது.

//நம்ம, நம்ம பொழங்குற எடத்தெ சுத்தமா வச்சிக்கிறாத வரைக்கும் கொசுக்களையும் அங்காங்கே உற்பத்தியாகும் தொற்று நோய் கிருமிகளையும் எந்தக்கொம்பனாலும் அழித்து ஒழித்திட முடியாது என்பதை இந்த மக்கள் மன்றத்தில் ஆணித்தரமாக எடுத்து வைக்க விரும்புகிறேன்//

கொசு ஒழிப்புக்கும் மனித ஒழிப்புக்கும் நடக்கும் இந்த போரில் இறுதியில் வெல்லப்போவது மனிதனின் பொடுபோக்காலும், அரசுகளின் கவனமின்மையாலும், அலட்ச்சியத்தாலும் கொசுப்படை தான் என்பது இப்பொழுதே லட்ச்சணம் தெரிய ஆரம்பித்து விட்டது. இதுலெ தெனமும் ஆங்காங்கே நடக்கும் கொலை, கொள்ளை, திருட்டு, கற்பழிப்பு, வழிப்பறி, லஞ்சம், ஊழல்....ஆக்கா......மனுசன் தன் சொந்த செலவிலேயே வைத்துக்கொண்ட சூ...த்திற்கு நிரம்புவது என்னவோ மந்திரவாதிகளின் பைதான்....

Yasir said...

சுடச்சுட அதிரை கவிதை,
படபட வென்று படிக்க தூண்டினாலும்,
தடதட வென்று நெஞ்சில் கம்பன் எக்ஸ்பிரஸ்போல் இனிமையாக ஓடி, ரொம்ப நேரத்திற்க்கு சப்தம் மனதில் ரீங்கார மிடுகிறது....ஊரின் அவலத்தை உலகிற்க்கு சொல்கிறது

//கட்சித் தொண்டர்கள்போல
கைதட்டி
கலைந்து போனது தூறல் /// வாவ்

//உள்ளங்களில் இருட்டு
எத்துணை தீமை// உடைகளில் உஜாலா போட்டு பலனில்லை...உள்ளங்களின் தூய்மை ரொம்ப அவசியம்

Noor Mohamed said...

//கருமேகக் கூட்டங்களும்
குலுகுலுவென மழைக்காற்றும்
கனமழை வருமென
கட்டியம்கூற
காசு கொடுத்துக் கூட்டி வந்த
கட்சித் தொண்டர்கள்போல
கைதட்டி
கலைந்து போனது தூறல்//

பசுமைகள் எல்லாம் பிளாட் ஆகிவிட்டதால், தான் எங்கு பெய்ய வேண்டும் என்று தெரியாது மழையே மறந்துவிடுகிறது.

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1975 ஆண்டுகளில் குழந்தை நல சிறப்பு தலைமை மருத்துவராக டாக்டர் விஸ்வநாதன் அவர்கள் பணி புரிந்தார்கள். இவர்தான் டாக்டர் ஜானகிராமன் அவர்களின் தலைமை பேராசிரியர்.

1975 ஆண்டுகளில் டாக்டர் விஸ்வநாதன் அவர்களிடத்தில், குழந்தைகளின் நலத்திற்கு காண்பிக்கும் அந்த நேரத்தில், குழந்தைகள் கொசுக்கடியால் அவதிப் படுகின்றனர் என்று கூறும்போது, அவர்கள் அன்று சொன்ன பதில்;
"மரங்களைஎல்லாம் அழித்து விட்டு வீடு கட்டி விட்டீர்களே, அந்த பகுதியில் வாழ்ந்த கொசுக்கள் எங்கு செல்லும். உங்கள் வீட்டில்தான் வாழும், உங்களைத்தான் கடிக்கும்" என அன்று வேடிக்கையாக கூறியது எனக்கு நினைவுண்டு.

இன்றோ! பசுமைகள் எல்லாம் பிளாட் ஆகிவிட்டதால், கொசுக் கொடுமையிலிருந்து எப்படி நாம் தப்பிக்க முடியும்?!

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அது மட்டுமில்ல காக்கா, மரங்களை மனிதன் அழித்து விட்டதால் பறவைகள் கூட ஆபத்தறியாமல் செல்போன் டவர்களின் கூடு கட்டி வாழ்கின்றன.

ZAKIR HUSSAIN said...

மொத்தத்திலெ பயங்காட்டுறே

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி சபீர் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

இரண்டு நாள் ஊரில் தங்கியதே இப்படி கவிதை தருமானால்?????
வேதனையான விஷயங்கள்தான் – வேறுவழி இல்லை என்பதால் நாடிச்செல்கிறோம்.

//இல்லங்களில் இருட்டே
இத்தனை கொடுமையெனில்
உள்ளங்களில் இருட்டு
எத்துணை தீமை//

உள்ளங்களில் உள்ள இருட்டுத்தான் இந்த இல்லங்களின் இருட்டுக்கும் காரணமோ?
திட்டமிடல் குறைவால் விளையும் தீமைகள். காலத்துக்கும் தட்டியும் திறக்காத நிர்வாகக் கதவுகள்.
எல்லா வருடங்களிலும் தவறாமல் இந்த முறையீடுகள் கேளாக்காதுகளில் , கேட்டாலும் துடைத்துபோட்டுவிட்டு அடுத்தவரை குறைசொல்லும் ஆளும் வர்க்கம்.

ஏக்கப்பெருமூச்சைத் தவிர எதுவும் செய்ய முடியாத நிலை. பயணப்பெட்டிகளோடு தட்டுவதற்கு கைகளையும் தயார் செய்தே வரவேண்டும்.

//பூதம் ஒன்று
புழங்குகிறது ஊருக்குள்ளே//

இந்த பூதத்துக்கு பயந்து விமான பயண சீட்டை ரத்து செய்யவே நாடுகிறது பல மனங்கள்.

வேதனையான விஷயங்கள்தான் – வேறுவழி இல்லை என்பதால் நாடிச்செல்கிறோம்.


Thanks & Regards,
Ebrahim Ansari

sabeer.abushahruk said...

கொசுவாகப்பட்டது நம்மைக் கடிக்குமுன், அதன் ரீங்காரம் காதுகளில் கர்ண கடூரமாகக் கேட்கும்போதே கொலை நடுங்குகிறது.

மேலும் நம்மூர் கொசுக்கள் கை கால்களில் எந்தவித ஊணமும் இல்லாமல் குடித்துக் கொழுத்துத் திரிகின்றன.

எம் எஸ் எம்முக்கு பேட்டி கொடுத்த கொசு ஒன்று என்னை மீண்டும் கடிக்க வந்தபோது அதன் முகத்தை வைத்தே அடையாளம் கண்டு 'இந்த கொசுதான் என்னை நேற்றும் கடித்தது' என்று கண்டுபிடித்தேனென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் அதன் சைஸை!

Shameed said...

//கொசுவின் கடியைவிட
கொடுமையா யிருக்கிறது
காதுக்குள் ரீங்காரம்//

சூடான உண்மை

Shameed said...

கொசுக்களில் ஊமை கொசுக்கள் உண்டா கொஞ்சம் யாராச்சும் சொல்லுங்கப்பா !!

Unknown said...

அப்ப ஊருக்கு வர இருப்பவர்களுக்கு எச்சரிக்கை மணி ?
மனதளவில் தயார் செய்து டிக்கெட்டை புக் பண்ணவேண்டும் போல .

KALAM SHAICK ABDUL KADER said...

கவிவேந்தர் சபீர் அவர்களின் கவிதையில்:

சுடச்சுட கொதித்தன- வரிகள்
படபடவென பறந்தன- கற்பனைகள்
தடதடவெனத் தட்டின - நியாயங்கள்
மடமடவென வழிந்தன - சந்தங்கள்
கிடுகிடுவென உயர்ந்தன - தரங்கள்

இஃது என் மதிப்பீடு.

குறிப்பு: சப்ரமஞ்சி கட்டிலில் கொசுவலையில் படுத்துறங்கும் வசதியான அந்த கால யான்ஸ் (அறை)மீது ஏக்கம் உண்டாக்கி விட்டன உங்கள் கவிதை!

crown said...

பூதம் ஒன்று
புழங்குகிறது ஊருக்குள்ளே
வாதம் கொண்டூர்
முடங்குகிறது ராவுக்குள்ளே

நிதமும் மிரட்டும்
மின்வெட்டு பூதத்தால்
நிறங்கள் இறக்கின்றன
இருளெனும் ரோகத்தால்.
-------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். வாதம் என்றாலும் நித்தம் இது நடப்பது தானே? வர்ணனை அத்துணையும் மனம் கவருது !இருட்டை நல்லா வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் கவியரசர்.

crown said...

மின்னல் வெட்டு போல
மின்னிமின்னி மின்சாரம் மறைகிறது
மின் வெட்டு வாளால்
கண்ணின் மணியைக் குடைகிறது.
-----------------------------------------
நல்ல உவமானம். 'அவாளின்'ஆட்சியில் மின் வெட்டு வெட்டுவாள்தாம். இருளின் ஆட்சி! அவாளின் சூழ்ச்சி!இருளுக்கு வருமா வீழ்ச்சி! தருமா மகிழ்சி?(இதுவும் ஒரு குருட்டு நம்பிக்கைதான்)

crown said...

சேமித்து வைப்பதற்கு
சில்லைரையாகக்கூட
மின்வரத்து இல்லாததால்
காது திறுகப்பட்டக்
கைக்குழைந்தைபோல
கதறுகிறது மின்கலன்.
-----------------------------------------------------
சில்லரை பார்க்கும் கைகள் ஆட்சியாளர்களின் கைகள். அவை சிலரின் கைகளாகவும். அந்த சிலரின் கால்களில் விழும் கைகலாகவும் இருப்பதால். அவரிகளின் காதுகளில் விழுமா கவிஞரின் குரல்????

crown said...

காட்சிகள் இருக்கின்றன
காண முடியவில்லை
விளக்குகள் இருக்கின்றன
வெளிச்சம் இல்லை.
------------------------------
இது ஆட்சியாளர்களின் அவலத்திற்கு இருட்டே சாட்சி! சட்டம் ஒரு இருட்டறை என்னும் சொல்வழக்கு உன்மையாக்கப்பட்ட நிதர்சனம். இதனால் வாடுவது அறியாசனம்.அறியாசனம் ஏறியவர்களின் செயல் படாத்தன்மையால் திரிவிளக்குகூட நெடும் நேரம் எறியவிடப்பாடாதவாறு மண் எண்ணெய் கூட நம்மை காச்சும் விலை! இது திரிகாத உண்மை.

crown said...

கொசுக் கடியால்
விடியவிடிய
விழித்துக் கொண்டிருக்கிறது இரவு.
---------------------------------------------------
ஆமாம் கண்சிவக்க மேனி வலிக்க விழித்துக்கொண்டிருக்கிறது இரவு என்று விடிவுவரும்????

crown said...

இல்லங்களில் இருட்டே
இத்தனை கொடுமையெனில்
உள்ளங்களில் இருட்டு
எத்துணை தீமை.
---------------------------------------
அன்சாரி காக்கா சொன்னது போல் உள்ளத்தின் இருட்டே இந்த இல்லத்துக்கும் இருட்டு வர மூலக்காரணம். கவிஞர் வழக்கம் போல் சமூக அக்கறையை தன் அனுபவித்த வலியுடன் விளக்கிய விதம் அருமை. அல்லாஹ் எல்லாருக்கும் அருள் புரிவானாக ஆமீன்.

Unknown said...

//குறிப்பு: சப்ரமஞ்சி கட்டிலில் கொசுவலையில் படுத்துறங்கும் வசதியான அந்த கால யான்ஸ் (அறை)மீது ஏக்கம் உண்டாக்கி விட்டன உங்கள் கவிதை//
--------------------
இன்னும் நம் வீடுகளில் யான்ஸ் என்ற சொல் பழக்கத்தில் உள்ளது .
ஆமா அது எந்த மொழி ? யாருக்காவது தெரியுமா ?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

வேதனையில் பிறந்த கவிதை
வடித்ததன் மகிமை அருமை!

தீமையிலும் சில நன்மை
.................அதுபோல..................
நீவிர் கவியால் புலமை என்பதும் உண்மை!

sabeer.abushahruk said...

அபு இபுறாஹிம்:
//மின் வெட்டினால்...
கண் சிமிட்டினேன்
அப்போதும் இருட்டே
எனக்கு தெரிந்தது
:) (கவிதைன்னு சண்டைக்கு வர வேண்டாம்)//
இருட்டு எப்படித் தெரியும்? தெரியாமல் இருப்பதுதானே இருட்டு! இப்படி எடக்கு மடக்காக இருப்பதால் இது கவிதையேதான்.:)

எல் எம் எஸ்:
//மோடி,ராஜபக்சே இவர்களின் குணம் படைத்த கோழை கொசுக்கள் மின்சார துறையின் ஒத்துழைப்பால் இருட்டில் வந்து பச்சிளம் பாலகனையும் சித்திரவதை செய்ததை எந்த நீதி மன்றத்தில் போய் சொல்ல.//
நீங்கள் குறிப்பிடும் கோமாளிகளைப் போல கொசுக்கள் கொலை செய்வதில்லை. கடித்து அதிகபட்சமாக வியாதியைத் தருகின்றன. குணமாகிவிடும். நீதி மன்றத்தில் சொன்னால் தீர்ப்பு வருவதற்குள் தீர்ந்து விடும் ஆயுள். பரவாயில்லையா?
கொசுக்களுக்கு கொசுமருந்து.
கொடூரக் கோமாளிகளுக்கு?

அலாவுதீன்:
//தமிழக மக்களை ஏமாற்ற அடிக்கடி அறிவிப்பு
வியாபாரிகளின் செய்திகளில்!//
இவிங்களோட கொசுக்கடி பெருத்த கடி. தாங்கமுடியல இந்த தினசரி வேதனை.

எம் எஸ் எம்:
//வெல்லப்போவது மனிதனின் பொடுபோக்காலும், அரசுகளின் கவனமின்மையாலும், அலட்ச்சியத்தாலும் கொசுப்படை தான்//
இதே அதிரை நிருபரில் உங்களின் கொசுக்களுடனான பேட்டியை ரசித்துப் படித்தபோது தெரியாது மேட்டர் இவ்வளவு சீரியஸுன்னு. நீஙக காமெடி பண்றீங்கன்னுதான் நெனச்சேன். ஆனா, இரண்டு நாட்கள் ஊரில் இருந்தபோது ஒவ்வொரு கடியிலும் உஙகள் பேட்டியின் கேள்விகளும் அதற்கு கொசுக்களின் பதில்களும் சுல்சுல்லென உறைத்தன. அப்பதான் உணரந்தேன் நீஙகள் எங்கள வச்சி காமெடி கீமெடி பண்ணலேன்னு.

sabeer.abushahruk said...

யாசிர்:

//உள்ளங்களின் தூய்மை ரொம்ப அவசியம்//

இந்தத் தூய்மை, இறையச்சத்தாலும் தனிமனித ஒழுக்கத்தாலும் மட்டுமே சாத்தியம்.

நூர் முகமது காக்கா:

//இன்றோ! பசுமைகள் எல்லாம் பிளாட் ஆகிவிட்டதால், கொசுக் கொடுமையிலிருந்து எப்படி நாம் தப்பிக்க முடியும்?!//

காக்கா, இந்தக் கருத்தில் ஓரளவு உண்மையிருந்தாலும், கொசுக்களின் இடங்களில் கட்டிடங்கள் வந்துவிட்டதால் கொசுக்கள் கட்டிடங்களுக்குள் வசிக்க வந்துவிட்டன என்னும் டாக்டரின் கருத்தில் ஒரு சந்தேகம் கேட்கனும் எனக்கு.

கொசுக்கள் சாக்கடை போன்ற தேங்கிய நீர்நிலைகளிலிருந்துதான் உற்பத்தி ஆகி வருவதாக அறிகிறோம். எனவே, பிறப்பிடத்தை ஒழித்தால் அவை புகுந்த வீடாக நம் வீடுகளுக்கு வராதே. இனப்பெருக்க விகிதாச்சாரத்தை இ.அ.காக்காவிடம் கேட்டு வாங்கி விளங்கிக்கொள்வோமேயானால் பசுமையான நிலப்பரப்புகள் வீடுகளாவதைத் தடுக்க முடியாதே?

உர்ப் பெருகக் காரணமான ஒவ்வொரு புது வீட்டின் பின்னணியிலும் ஒரு ப்ளாட் (plot) அள்விற்கானப் பசுமை அழிக்கப்பட்டதென்பதுதானே எதார்த்தம்?

(இ.அ. காக்கா: வயக்காட்டில குடியேறிய உங்களுக்கும் எனக்கும் சேர்த்துத்தான் வக்காலத்து வாங்குறேன். அவுகள சப்போர்ட் பண்ணிடாதிய.)

//மரங்களை மனிதன் அழித்து விட்டதால் பறவைகள் கூட ஆபத்தறியாமல் செல்போன் டவர்களின் கூடு கட்டி வாழ்கின்றன//

இது சரியான கருத்துதான் எம் எஸ் எம். மரங்களை அழிப்பதை தடுத்தே தீரவேண்டும். (“மனிதர்கள் மரங்களென மனத்தைக் கொண்ட பிறகு மரங்களுக்கென்ன அவசியம்” என்று யாரோ ஒரு ஞானி சொன்னதாக ஞாபகம். நான் சொல்றதுதான். நான் சொன்னதுன்னா யாராவது கேப்பாய்ங்களா..? அதான்..ஞானி சொன்னதா புருடா)

இபுறாகிம் அன்சாரி காக்கா:
//திட்டமிடல் குறைவால் விளையும் தீமைகள். காலத்துக்கும் தட்டியும் திறக்காத நிர்வாகக் கதவுகள்.
எல்லா வருடங்களிலும் தவறாமல் இந்த முறையீடுகள் கேளாக்காதுகளில் , கேட்டாலும் துடைத்துபோட்டுவிட்டு அடுத்தவரை குறைசொல்லும் ஆளும் வர்க்கம்.//

காக்கா, இது என் பீர்யட். எனக்கு லேசா தலை வலின்னு உங்கள க்ளாஸ் எடுக்கச் சொன்னா நீங்க உங்க சப்ஜெக்ட்டை எடுக்க ஆரம்பிச்சிட்டீங்களா?

ஆனா, உங்க சப்ஜெக்ட்டை நீஙக க்ளாஸ் எடுக்கறதா இருந்தா நான் மாணவனாக ஆஜர்.

sabeer.abushahruk said...

சேக்கனா நிஜாம்,அப்துர்ரஹ்மான், எம் ஹெச் ஜே: வாசித்து விரும்பியமைக்கு மிக்க நன்றி.
(//வேதனையில் பிறந்த கவிதை
வடித்ததன் மகிமை அருமை!//
கூர்முனையில் ஊசியே உவமை
கடித்ததும் கலையுமே பொறுமை

எம் ஹெச் ஜே….எழுதி நாட்களாகின்றன. எழுதுங்களேன்)

ஹமீது:
//கொசுக்களில் ஊமை கொசுக்கள் உண்டா கொஞ்சம் யாராச்சும் சொல்லுங்கப்பா//

இருக்கின்றன. அவற்றால் பேச முடியாது…ஆனா, ங்ங்ங்ங்ர்ர்ர் என்று பாடும். பரவால்லயா?

கவியன்பன்:
//சப்ரமஞ்சி கட்டிலில் கொசுவலையில் படுத்துறங்கும் வசதியான அந்த கால யான்ஸ் (அறை)மீது ஏக்கம் உண்டாக்கி விட்டன உங்கள் கவிதை!//
கொசுவலைக்குள் கடியில்லையா?

sabeer.abushahruk said...

அன்பிற்குரிய கிரவுனுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….

நலம் நலமறிய நாட்டம்.

நிற்க,
கோடை மழையெனக் கொட்டித் தீர்த்திருக்கும் தங்களின் தமிழுக்கு மிக்க நன்றி. தங்களின் செறிவான கருத்துகளுக்கு நான் மட்டுமல்ல, இந்தத் தளமே தவம் கிடக்கும்போது தாங்கள் வெற்றிபெற்ற எம் எல் ஏவைப் போல இந்தத் தொகுதிப்பக்கம் அடிக்கடி தலைகாட்டாமல் இருப்பது எங்களுக்கெல்லாம் மன வேதனையைத் தருகிறது.

மேலும், சமீப காலமாக தங்களின் உணர்ச்சிபூர்வமான ஆக்கங்களும் இங்கு வாசிக்கக் கிடைக்காதது அதிரை நிருபருக்குப் பெரும் குறையாக நிற்கிறது. இங்கு தங்களை யாரும் ஏதும் வருத்தப்படும்படி செய்திருந்தால் அல்லாஹ்வுக்காக மன்னித்து தொடர்ந்து எங்களுடன் ஒரு வரி அல்லது ஒரு வார்த்தை என்றளவிலாவது தொடர்பில் இருங்கள்.

தங்களின் நட்பும் தொடர்பும் தாமதாமாகக் கிடைத்தாலும் இந்தத் தரமான நட்பை இத்தளத்தின் வாசகர்களும் பங்களிப்பாளர்கள் எளிதாக இழந்துவிடமாட்டோம். (குறைந்தபட்சம் நானாவது தொடர்ந்து தொல்லை கொடுத்துக்கொண்டே இருப்பேன்.)

கெஞ்சுறிய, வெட்கமாயில்லை? என்று யாரும் கேட்பார்களேயானால்., என் பதில்:

“ஹி.ஹி. இல்லை இல்லவே இல்லை”

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும் . சபீர்காக்காவின் கெஞ்சும் அளவிற்கு நெஞ்சில் இடம் இருக்கும். அது இன்சா அல்லாஹ் நிலைத்திருக்கும். கொஞ்சினால் மிச்சமாட்டேன். சில வியாபார முயற்சியில் இருப்பதால் வந்து போக முடியவில்லை. அதே நேரம் அதிரை நிருபரை பார்க்காத நாள் என்னால் இயல்பாய் இருக்க முடியாது என்பதே உண்மை. நலம் நாடுவதும், நித்தம் உங்களை போன்றவர்களை மனம் தேடுவதும் தொடர்கிறது, தொடரும் இன்ஷா அல்லாஹ்.

Noor Mohamed said...

தம்பி கவிவேந்தர் சபீர் அவர்களே! தாங்கள் கவியன்பன் அவர்களுக்கு கொடுத்த பதிலில்;

//கொசுவலைக்குள் கடியில்லையா?//

என்றால் என்ன?

sabeer.abushahruk said...

நூர் முஹமது காக்கா,

அடுத்தாளுக்கு எழுதிய கடுதாசியைப் படித்ததுமட்டுமல்லாமல், விளக்கம்வேறு கேட்பது தம்பிக்கு வெட்கமாயிருக்கு.

sabeer.abushahruk said...

காக்கா,

மீனுக்கு வலையென்றால் மீனிருக்கும் உள்ளே; மான் பிடிக்க வலை வீச மான் மாட்டும் உள்ளே; கொசுவுக்கு வலை யென்றால் கொசு மாட்டனும் உள்ளே...அல்லவா?

அதான்...மானைப்போல் மீனைப்போல் வலைக்குள் மாட்டிய...கொசு

"கொசுவலைக்குள் கடியில்லையா?"

எப்புடீ?

(யாரங்கே? சோடா ப்ளீஸ்...அப்டியே செத்த ஃபேனையும் போடுங்கப்பா)

ZAKIR HUSSAIN said...

இந்த கிரவுன் வர வர சரியில்லை....சபீரின் கவிதைக்கு மட்டும் "மட்டுமே" விமர்சனம் எழுதுவது....

Noor Mohamed said...

//(யாரங்கே? சோடா ப்ளீஸ்...அப்டியே செத்த ஃபேனையும் போடுங்கப்பா) //

இதற்கும் மேலே கேட்டால் சோடா தந்தவர்களே போடா என்று சொல்லி விடுவார்கள்.

KALAM SHAICK ABDUL KADER said...

மேடைப்பேச்சு தனக்கு வராது என்று அடிக்கடிச் சொல்லும் கவிவேந்தர் ம், சபீர் அவர்கள் “சோடா ப்ளீஸ்” என்று “மேடைச் சோடா”அடிக்கடிக் கேட்பது
முரண்படுகின்றது என்றாலும் மேடைப்பேச்சில் நாவலர் நூர்முஹம்மத் அவர்களையும் விஞ்சும் ஆற்றல் உண்டு என்பதால் சோடாவை (அதிரையில்)வாங்கிக் கொடுத்து விடலாம்.கொசுவலைக்குள் கடிபட்டது கொசுதானே? இவ்வண்ணம் நகைச்சுவைகள் பறிமாறிக் கொள்வதில் இஸ்லாத்தில் தடையேதும் இல்லை என்பது என் எண்ணம்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

'கொசு வலைக்குள் கடி வாங்கியது யாரென்று
பார்க்கும் முன் தடைபட்டது மின்சாரம்'

Muhammad abubacker ( LMS ) said...

// (யாரங்கே? சோடா ப்ளீஸ்...அப்டியே செத்த ஃபேனையும் போடுங்கப்பா)//

தலைவரே சோடா ரொம்ப சுடுது.

கரண்டு செத்து விட்டதால் செத்துபோன ஃபேனும் ஓட மறுக்கிறது தலைவரே!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு