Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தொட்டால் தொடரும் ! குறுந்தொடர்-3 31

அதிரைநிருபர் பதிப்பகம் | May 02, 2012 | ,


இதை நான் தொடராக எழுதவில்லை. என் கருத்தை சொல்லிவைக்கலாம் என்றுதான் ஆரம்பித்தேன். நண்பர்கள் பலர் அதை தொடர் என்று எண்ணி நிறைய எதிர்பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது.அவர்கள் வேதனையின் உச்சமும் தெரிகிறது. வறுமை,வேதனை மற்றும் இக்கட்டுகளில் இருந்து விடுபட முடியாத ஏராளமான இளகிய உள்ளங்கள் வெயில் தேசத்தின் பாலை அடுப்புகளுக்கு விறகாகிக் கொண்டிருப்பதை நான் அறிவேன். தங்கள் துன்பங்களை துயரங்களை நம்மில் ஒருவர் பகிர்ந்து கொள்கிறார் என்பதை எண்ணி அவர்களுக்கு ஒரு நெகிழ்ச்சியும் ஆறுதலும் ஏற்படுகிறது.அந்தத் துன்பங்களை அனுபவித்த அனுபவசாலிகளில் நானும் ஒருவன் என்பதால் சகோதரர்களின் இன்பதுன்பங்களை அவர்களோடு பகிர்வதில் எனக்கும் ஒரு ஆறுதல்தான். துன்பங்களைக்கூட அதை அனுபவிக்கும்போது அவ்வளவாகத் தெரியாது . 

சுட்டெரிக்கும் வெயிலில் நடந்துவந்து ஒரு நிழலைத்தேடி அதில் இளைப்பாறும் போதுதான் கடந்துவந்த பாதையும் காலில் உள்ள கொப்புளங்களும் கண்ணுக்குத் தெரியும்.

தொண்டை வறண்டு, விம்மல்களை விழுங்கியே தாகத்தைத் தனித்துக் கொண்ட அந்த வேதனைகளை பெற்றோருக்கும் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் சொல்லாமல் தன் நெஞ்சில் வைத்து வெந்து கொண்டிருப்பான் அந்தக் குடும்பத் தலைவன்.

இந்த மனித எரிமலை குமுறிக் கொண்டிருக்குமேத் தவிர எப்போதுமே வெடிக்காது. என்னைக் கேட்டால், பத்து மாதம் சுமந்து பெறுகின்ற தாயின் சுமையைவிட பெற்றோர் மனைவி மக்களை வாழ்நாள் முழுவதும் சுமக்கின்றானே ஒரு குடும்பத் தலைவன். அவன் சுமை உயர்வானது. விலை மதிப்பில்லாதது. எதைக் கொண்டும் எடைபோட முடியாத தியாகத்தின் வடு அது.

அந்த தியாகத்தின் வடுவைத்தான் நீங்கள் சுமந்து கொண்டிருக்கிறீர்கள். அது "பாரத ரத்னா" அவார்டைவிட மதிப்புமிக்கது.

வெளிநாட்டு வேலை - வறுமைக்கும் வாழ்வுக்கும் இடையே நடக்கும் சமர் !

களத்தில் நிற்பவனுக்கு வெற்றி மட்டுமே குறிக்கோளாக இருக்க முடியும்!

அவன் வீசுகின்ற ஒவ்வொரு வீச்சும் வறுமையை வீழ்த்தும்!

அவன் வீட்டுக்கு வெற்றியைச் சேர்க்கும்!

காதலும் காமமும் இல்லாமல் வாழ்க்கை இல்லைதான்... ஆனால் காதலையும் காமத்தையும் இரு கோப்பைகளில் எடுத்து வந்து "காதலாய் கசிந்துருகி" 

இன்ப ரசத்தில் மூழ்கிக் கிடந்தவர்கள் வாழ்ந்ததும் தெரியவில்லை..வீழ்ந்ததும் தெரியவில்லை. 

ஆனால் அவற்றை "டானிக்"கைபோல் பருகிவிட்டு களத்துக்கு ஓடியவர்களின் வாழ்வை வரலாறு சொல்கிறது. 

விலைபேச முடியாத தியாகத்தைத்தான் வெளிநாட்டில் வாழும் அன்பு சகோதரர்கள் செய்து வருகிறீர்கள். இதன் அருமை இப்போது தெரியாவிட்டாலும் " நான் பெற்ற பிள்ளை என்னைப்போல் கஷ்டப்படாமல் நல்லா இருக்கான்.... படைச்ச ரகுமானே என் பிள்ளையை மேலும் மேலும் நல்லாக்கி வை..." என்று வாழ்வின் கடைசி நாட்களை நிம்மதியாக வாழ்ந்துஉங்களுக்காக துஆ கேட்கிறார்களே.... உங்கள் பெற்றோர்,அதன் பலன் மறுமையில் தெரியும். "எங்க வாப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு என்னை ஆளாக்கி விட்டாங்க...அவங்க எப்போதும் கண் கலங்காம வாழணும்.." என்று உங்கள் மகனும் " என் செல்ல வாப்பா.... உங்களுக்கு என்ன வேணும்...." என்று கேட்டு தான் பெற்ற பிள்ளையை உங்கள் மடியில் தவழவிட்டு "இதுதான் அப்பா...(அப்பா - பாட்டா) ....அப்பாக்கு முத்தம் கொடு..." என்று உங்கள் அன்பு மகளும் உங்களைச் சூழ இருந்து வாழும்போது உங்கள் உழைப்பின் உங்கள் தியாகத்தின் "ருசி" உங்களுக்குத் தெரியும்.

( இன்ஷா அல்லா நேரமும் மின்சாரமும் இருக்கும்போது தொடர்வேன்...)
-அபூஹாஷிமா

31 Responses So Far:

சேக்கனா M. நிஜாம் said...

மனதை வருடிய காட்சிகள் :

சில மாதங்களுக்கு முன்ப திருச்சி விமான நிலையத்திற்கு எனது நண்பர் மற்றும் உறவினர் ஆகியோர்களை “துபாய்” நாட்டிற்கு வழியனுப்பி வைப்பதற்காகச் சென்றேன். அங்கே கண்ட என் மனதை வருடியக் காட்சிகள் சில.........

குறிப்பாக.....................

1. குழந்தைகள் தங்களின் வாப்பாவைக் ( Father ) “டாட்டா” க் ( Bye Bye ) காண்பித்து வழியனுப்பியது..............................விரைவில் வந்துவிடுவேன்ட “செல்லம்” , “தங்கம்” என கன்னத்தில் தட்டி கண்ணீரை அடக்கிக்கொண்டு குழந்தைகளுக்கு ஆறுதல் கூறியது...........................

2. அன்பான மனைவியோ என் கணவன் இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் திரும்ப வந்துவிடுவார் என்ற நினைவில் மூழ்கியவாறு கண்களில் கண்ணீருடன் முகத்தில் எந்த சலனத்தையும் காட்டாமல் வழியனுப்பியது.........................

3. பெற்றோர்களோ தங்களின் எதிர்பார்ப்பில் “ நாம் கஷ்டப்பட்டு படிக்க வைத்து உருவாக்கிய நமது மகன் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தையும் நிச்சயமாக போக்குவான் ” என்ற நம்பிக்கையில் கையசைத்து வழியனுப்பியது......................

4. அன்பான மனைவியின் பிரிவு, குழந்தைகளின் படிப்புச் செலவுகள், சகோதரிகளின் திருமணச் செலவுகள், பெற்றோர்களின் மருத்துவச் செலவுகள், நிலம் வாங்குதல், வீடு கட்டுதல், நகைகள் வாங்குதல் போன்ற என்னற்றக் கடமைகளை ( ? ) மனதில் சுமந்துவாறு “கையசைத்து” விட்டு நுழைவாயிலை நோக்கி நடந்து சென்ற பயனாளிகளின் முகத்தை பார்த்தது......................

இவைகள் எல்லாம் என் மனதை வருடியது.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

எதார்த்தமான இக்கட்டுரையை வர்ணிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. அந்த வல்லோனே நம் துயரங்களை துடைத்தெறிய போதுமானவன்....

ஊரில் இருந்தால் வெளிநாடு செல்ல வேண்டும் என்ற எண்ணம் தானாகவோ அல்லது பிறர் தூண்டுதலாலோ வந்து விடுகிறது.

வெளிநாட்டில் இருந்தால் என்ன வாழ்க்கை இது? என்று எண்ணி வெறுப்படைந்து ஊர் செல்ல‌ச்சொல்கிற‌து.

சீரான வாழ்க்கைக்கு ஆழ்ந்து சிந்தித்தால் சில மணித்துளிகளில் அவை சின்னாபின்னமாகி சிந்தித்த சில நல்ல நினைவுகள் மறைந்து விடுகிறது.

மரணத்தைக்கண்டால் மரண பயம் வருகிறது. உல்லாசத்தைக்கண்டால் உல்லாசமாக இருக்க நினைக்கிறது.

வரியவனைப்பார்த்தால் உள்ளம் வாடி விடுகிறது. பணக்காரனை பார்த்தால் அவனைப்போன்று பகட்டு வாழ்க்கை வாழ‌ ஆசை கொள்கிற‌து.

சிக்க‌ன‌மாக‌ இருப்ப‌வ‌னை பார்த்தால் சிக்க‌னமாக‌ இருக்க‌ச்சொல்கிற‌து. ஊதாரியைப்பார்த்தால் உல‌கில் சிக்க‌ன‌மாக‌ இருந்து என்ன‌த்தெ கொண்டு போக‌ப்போகிறோம் இறுதியில்? என்று சொல்ல‌ வைத்து விடுகிறது.

மிடுக்கான‌ உடை உடுத்திய‌வ‌னைக்க‌ண்டால் நாமும் அப்ப‌டி உடுத்தி ம‌கிழ‌ வேண்டும் என‌ ஆசை கொள்கிற‌து.

திமிரான‌, ஆண‌வ‌மான‌, அதிகார‌ வ‌ர்க்க‌ங்க‌ளைப்பார்த்தால் ஆத்திர‌ம் கொள்கிற‌து. அமைதியான‌வ‌னைப்பார்த்தால் உள்ள‌ம் சாந்தி அடைகிற‌து.

அடைம‌ழையைக்க‌ண்டால் வெயிலின் உஷ்ண‌த்தை தேடுகிற‌து. க‌டும் வெயிலில் க‌த‌க‌த‌ப்பான‌ குளிரை வேண்டுகிற‌து.

ந‌க‌ர‌த்தில் இருப்ப‌வ‌னுக்கு சுகாதார‌மும், சுற்றுப்புற‌ச்சூழ‌லும் ப‌டுத்துற‌ங்கும் கிராம‌ப்புற‌ங்க‌ளுக்கு போக‌ச்சொல்கிற‌து. கிராம‌ப்புற‌ங்க‌ளில் இருப்ப‌வ‌னுக்கோ நாக‌ரீக‌ம் வேண்டி ந‌க‌ர்ப்புற‌ங்க‌ளை நோக்கி ந‌க‌ர‌ச்சொல்கிற‌து.

திருமணமாகாதவர்களுக்கு திருமணத்தின் மேல் ஒரு மோகம் வருகிறது. திருமணம் ஆன பின் திருமணத்திற்கு முன் உள்ள தனிமையாய் சுற்றித்திரியும் இளைய வாழ்க்கையை தொலைத்ததாய் எண்ணி துன்பமடைகிறது.

அலுவ‌ல‌க‌த்தின் குளிரூட்டப்பட்ட‌‌ அறைகளின் இருக்கையில் காலையிலிருந்து மாலை வ‌ரை அம‌ர்ந்து ப‌ணிபுரிப‌வ‌னுக்கு வெளியில் சுற்றித்திரியும் வேலைக்கார‌னை பார்த்து பெருமித‌ம் கொள்கிற‌து. வெளியில் சுற்றித்திரிப‌வ‌னுக்கோ ஏதேனும் அலுவ‌ல‌க‌த்தில் ஒரு மூலையில் ந‌ம‌க்கு வேலை கிடைக்காதா? என‌ ஏங்க‌ வைத்து விடுகிற‌து.

இப்ப‌டி உள்ள‌ம் எந்த‌ நிலையிலும், வ‌ய‌திலும் போதுமென்ற‌ த‌ன்னிறைவை, நிலைத்த‌ன்மையை அடைவ‌தில்லை.

எதை, எதையோ நினைத்து எங்கெங்கோ அலைந்து திரியும் மனிதனை ம‌ர‌ண‌ம் ஒரு போதும் ம‌ற‌ந்து இருந்து விடுவ‌தில்லை.

ZAKIR HUSSAIN said...

இப்படி ஆம்பிளைங்க கஸ்டத்தை எல்லாம் சொன்னால் பெண்கள் மதித்தால் சரி...

Yasir said...

//அவன் சுமை உயர்வானது. விலை மதிப்பில்லாதது. எதைக் கொண்டும் எடைபோட முடியாத தியாகத்தின் வடு அது./// நிறைய பேருக்கு இது புரிவதில்லை..அந்தியாகத்தை மதிக்காவிட்டாலும் பரவாயில்லை மிதிக்காமல் இருந்தாலே அது பெரிய விசயம்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

சுமார் முப்பது வருடங்கள் அரபுநாட்டில் உழைத்து, கலைத்து, நாடி நரம்பெல்லாம் வீரியமிழந்து சரி இத்துடன் விசாவை முடித்துக்கொண்டு ஊரோடு சென்று எஞ்சிய கொஞ்ச கால‌ வாழ்க்கையை கழித்து விட்டு போய்ச்சேரலாம் என்று எண்ணி வந்தவரை பார்த்து ஆசை மனைவி கேட்டாளாம் "யாங்கங்க முடிச்சிட்டு வந்தியெ????????"

(ஆசை மனைவி என்பது கணவன் மேல் ஆசையல்ல....உலக ஆசாபாசங்களில் தீராத மோகம் கொண்டவள்)

ஊர், உலகம் இப்படி இருக்கும் பொழுது உண்மையில் செட்டிலாக வேண்டிய இடம் ஊரல்ல....மண்ணறை தான் போலும்.........

KALAM SHAICK ABDUL KADER said...

//"எங்க வாப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு என்னை ஆளாக்கி விட்டாங்க...அவங்க எப்போதும் கண் கலங்காம வாழணும்.." என்று உங்கள் மகனும் " என் செல்ல வாப்பா.... உங்களுக்கு என்ன வேணும்...." என்று கேட்டு தான் பெற்ற பிள்ளையை உங்கள் மடியில் தவழவிட்டு "இதுதான் அப்பா...(அப்பா - பாட்டா) ....அப்பாக்கு முத்தம் கொடு..." என்று உங்கள் அன்பு மகளும் உங்களைச் சூழ இருந்து வாழும்போது உங்கள் உழைப்பின் உங்கள் தியாகத்தின் "ருசி" உங்களுக்குத் தெரியும்.//
இவ்வரிகள் என் எண்ணங்களை அப்படியே நகலெடுத்துப் பதிவாக்கி விட்டனவா? என்றும் சிறிது கண் கலங்க அழுதும் விட்டேன்! ஆம். என் உள்ளத்தின் உணர்வுகளில் ஓடும் இவ்வரிகளை இக்கட்டுரை ஆசிரியர் எப்படி உணர்ந்தார்?!

கஷ்டப்பட்டு சம்பாத்தித்துச் சேமித்த பணத்தால் கட்டப்பட்ட என் மாளிகையின் ஒவ்வொரு கல்லும் அல்லாஹ் எனக்கு வழங்கிய நிஃமத் மற்றும் என் உழைப்பின் பலனைச் சொல்லும்! ஒவ்வொரு முறையும் அம்மாளிகையின் ஒவ்வொரு இடத்திலும் நின்று யோசிப்பேன்,”இதனைக் கட்டி முடிக்க எவ்வளவு கஷ்டங்களை இந்த மேனி அனுபவித்தது?” என்று! ஆம். அன்று கஷ்டப்பட்டேன்; இன்று சந்தோஷமாக உள்ளொம்; நானும், மனைவி, மகள், மருமகன், பேரன், மகன் என்று எல்லாரும் அம்மாளிகையை அனுபவிக்கும் நேரமெல்லாம், இக்கட்டுரை ஆசிரியரின் இறுதி வரிகள் உணர்வுபூர்வமாய் அனுபவித்து எழுதியுள்ளது போல் அடியேனும் எண்ணிக் கொள்வேன்; அல்ஹம்துலில்லாஹ் ஷுக்கூர்!!

sabeer.abushahruk said...

//ஊர், உலகம் இப்படி இருக்கும் பொழுது உண்மையில் செட்டிலாக வேண்டிய இடம் ஊரல்ல....மண்ணறை தான் போலும்......... //

பயமாயிருக்கு.

sabeer.abushahruk said...

ரிட்ட(ர்)ன் டிக்கெட்:

இருக்கை ஒட்டிய ஜன்னல் வழியோ
இறக்கை வெட்டும் வின்னின் வெளியோ
விமான எயிலிரான்களின் விசையோ
வான எழில்முகில்களின் அசைவோ

விடுப்பு முடிந்து
வேலைக்குத் திரும்பும்
எனக்கு
எதிலும் லயிக்கவில்லை
என்
இதயம் களிக்கவில்லை

முப்பத்தி யொரு நாட்கள்
முத்தமழை பொழிந்த
மகளின் முகம் வந்து
மனத்தை கொல்லுதையா
மழலை வெல்லுதையா

ப்பிங்க் நிற பார்பியும்
அதே நிறத்தில்
பள்ளிக்கூடப் பையும்

பென்சில் பொவுச்சும்
அழி ரப்பரும்
ட்டாமின் வாயில் விட்டு
பென்சில் சீவும் ஷார்ப்பனரும்

தோரா அணிந்த ஷூவும்
தேரா பஜாரில்
ஏறி இறங்கி வாங்கிய
வெளிர் நீல ப்பஃப் கவுனும்

மதீனா மார்க்கெட்டில்
மணிக்கணக்கில் தேர்ந்தெடுத்த
ச்சாக்லேட்டும் பிஸ்கட்டும்

தமிழ் பஜார்
தலை ஸ்கார்ஃபும்
மினுக்கும் கல் வளையும்

எல்லாம் கொடுத்து
இன்முகம் ரசித்து
விடுப்பு முடிந்து
விடைபெறும் நாளினில்

தன்னுடன் இருக்க வேண்டி
என்னிடம் கெஞ்சிய
மகளுக்குச் சொன்னேன்
மறுபடியும் அவளுக்கு
பொருள் வாங்கச் செல்வதாக.

மழலை மருண்டது
நொடிகளில் தெளிந்தது
கீழ்ஸ்தாயில் கேட்டதொரு
கேள்வி
கிழித்துப் போட்டதென் மனத்தை:
“எனக்கு
நீ தரும்
எதுவும் வேண்டாம்
என்னோடு
இருந்துவிடேன் வாப்பா!”

அதிரை சித்திக் said...

தொட்டால் தொடரும் ...,

அற்புதமானா தொடர் ...வளைகுடா வாழ்க்கை..

என்ற தலைப்பில் ஒரு நூல் வெளியிடும் அளவிற்கு

எழுதி வைத்திருந்தேன் அணைத்து மக்களும் பயன்

பெற வேண்டும் விழிப்புணர்வு பெற வேண்டும் என்ற நோக்கத்துடன்

எழுதினேன் பத்து வருடத்திற்கு எழுதிய எழுத்திற்கும் தற்போதை

சூழ்நிலை வேறாகவே இருக்கிறது ...

அந்த கால சூழல் வெல்லாந்தியாய் இருந்தார்கள்

கடித போக்குவரத்து எட்டு முதல் பத்து நாட்கள்

போன்பேச இரண்டு மணி நேர காத்திருப்பு

கதிரிப்பதில் சுகம் கண்டவர்கள் ..என் கணவர் வெளிநாட்டில்

இருக்கிறார் என்று சொல்வதில் ஒரு சுகம் ...அதே போன்று

கணவனுக்கு மனைவி மக்களோடு இருப்பதை விட வெளிநாட்டிலிருந்து

வந்து தினம் ஒரு புது சட்டை போட்டுக்கொண்டு உலா வருவது

தன்னை பல பேர் எப்போ வந்தீங்க என வினவுவதை பெரிதாக

நினைத்த காலம் வந்த விடுப்பு முடிந்து திரும்ப் செல்வத்தின் வேகம்

குடும்பத்தை விட்டு பிரிவதின் சோகம் அவ்வளவாக இருக்காது ..

இளமை இருக்கும் வரை இல்லற சுகம் காண்போம் இருப்பதை கொண்டு வாழ்வினை தொடர்வோம் என்ற சித்தாந்தம் என்று

நமக்கு வருகிறதோ அன்றுதான் எல்லாவற்றிகும் விடிவு காலம்

அதிரை சித்திக் said...

தம்பி ..நெயனாவின் சமுதாய பார்வை

நடை முறைவால்வில் நடக்கும் வொவ்வொரு

விசயத்தையும் அப்பட்டமாக பதிவதை வரவேற்கிறேன்

அன்புடன் புகாரி said...

>>>>>ஊர், உலகம் இப்படி இருக்கும் பொழுது உண்மையில் செட்டிலாக வேண்டிய இடம் ஊரல்ல....மண்ணறை தான் போலும்......... ......... <<<<

நெய்னா.... உங்களுடையது நெய் நா!

Noor Mohamed said...

//" நான் பெற்ற பிள்ளை என்னைப்போல் கஷ்டப்படாமல் நல்லா இருக்கான்.... படைச்ச ரகுமானே என் பிள்ளையை மேலும் மேலும் நல்லாக்கி வை..." என்று வாழ்வின் கடைசி நாட்களை நிம்மதியாக வாழ்ந்துஉங்களுக்காக துஆ கேட்கிறார்களே.... உங்கள் பெற்றோர்,அதன் பலன் மறுமையில் தெரியும். "//

நான் பெற்ற பிள்ளை சம்பாதித்து, எங்களுக்கு கை நிறைய பணம் கொடுத்து நாங்கள் நிம்மதியாக வாழ அவனும் அவனின் மனைவி மக்களும் எங்களுக்கு உதவி புரிகின்றார்களே, இறைவா என் பிள்ளைகளின் வாழ்வை நலமான வாழ்வாக ஆக்குவாயாக! என பெற்றோர்கள் கேட்கும் துஆ இன்ஷா அல்லாஹ் இம்மை மறுமை வாழ்வை செழிக்க வைக்கும்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஓயாது ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளும், இன்ப துன்பங்களையெல்லாம் தொலைத்து எங்கோ ஒரு அயல் தேசம் ஓடிச்சென்று பிழைக்கும் பிழைப்பும் ஒன்றுக்கொன்று சம்மந்தம் செய்து கொண்ட சம்மந்திகளோ?

ஓய‌ப்போவ‌து எப்போது?

சிறுபிள்ளையாய் விளையாடித்திரிந்த‌ கால‌ம்
எங்கோ தொலைத்து வ‌ந்த‌ இன்ப‌ம்
இன்று ச‌ல்ல‌டையாய் தேடினாலும்
எங்கும் இல்லைய‌டா தோழா!!!

அப்துல்மாலிக் said...

சகோ அபுஹாஸிமா, எப்படி கத்தினாலும் தலைகீழே நின்னு சொன்னாலும் நானும் வந்து அனுபவித்து பார்க்கிறேனே என்று புடிவாதமா வந்துக்கொண்டுதான் இருக்காங்க (நானும் இப்படிதான் வந்தேன்),
வாரம் ஒரு முறை
இரு மணித்தியாளம் காத்திருந்து
நான் நலம், நீ புள்ளைகள் உம்மா வாப்பா நலமா
என்ற வார்த்தைகள் மட்டுமே பேசிய காலம் போய்
இன்று
எழுந்த்திலிருந்து படுக்கைக்குபோகும் வரை
என்னவெல்லாம் நடக்கிறது என்பதை
அப் டு டேன் செய்தியாக/முகம் பார்த்தும் பறிமாரும்
காலம் ஆதலாம்
ஒரு குறையுமின்றி சந்தோஷமாகவே
வாழ்க்கை நகருகிறது....................

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

மாலிக் சொல்வது போல்,

களரிச்சாப்பாட்டை காணொளியில் கண்டேன்
அந்த தேங்காய்ச்சோற்றின் மணம் மட்டுமின்றி

குழந்தையின் சிணுங்களை கேட்டேன்
தொட்டிலிட்டு தாலாட்ட இயலாமல் நின்றேன்

உம்மாவின் சுருங்கிய மேனியில் ஓராயிரம்
வாழ்த்துக்களுடன் து'ஆவையும் கேட்டேன்

வாப்பாவின் ஆறுத‌ல்க‌ள் வானுய‌ர‌க்க‌ண்டேன்

தொட்டு விளையாடி பிள்ளைக‌ள் த‌ரும் சுக‌த்தை
இங்கு தொட்டு விளையாடும் ஐபோட் த‌ருமா?

அப்துல்மாலிக் said...

//குழந்தையின் சிணுங்களை கேட்டேன்
தொட்டிலிட்டு தாலாட்ட இயலாமல் நின்றேன்//
நெய்னா, நம்மில் எத்தனை பேர் தொட்டிலாட்டுறோம் ஊருக்கு வெக்கேஷன் போனா, கவிதைக்கு வேணும்னா படிக்க நல்லாயிருக்கும் ஆனா செயல்முறைனு வரும்போது???
உண்மையிலே செய்றத சொல்லுங்கப்பா...... 

அதிரை சித்திக் said...

அப்துல் மாலிக் ...

கவிதை படிக்கும்போது நன்றாக இருக்கும் ,,நடைமுறைக்கு.....>>>>

தொட்டில் ஆட்ட முடியாத உணர்வு ..

நிச்சயம் ஏற்படும் கருவை கொடுத்து கர்ப்பிணியாக்கி விட்டு

கடல் கடந்து வந்து பிள்ளை பெற்று இரண்டு வருடம் சென்று தானே

ஊர் செல்கிறோம் அது வரை பிள்ளையின் சிணுங்கள் சுகமாக

கேட்கும் அதே குழந்தை சுகவீனம் கண்டு அழும் போது போனில்

குரல் கேட்டு மனம் பதைபதைப்பது உண்மைதான் ..

முப்பது ஐந்து , நாற்பது வயதை உடையவர்கள்

அனுபவிக்கும் கொடுமை அது ..

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

"எம் ஹலாலான பசிகளுக்கு இங்கும் அங்கும் பொருத்தப்பட்ட‌
வெப் கேமராக்கள் பசியாற வைத்து விடுமா?"

குடும்பத்துடன் இருப்பவர்களுக்கு தனிமையைப்பற்றியோ அந்த தனிமையின் எங்கோ இருக்கும் துணைவியின் சிணுங்கள் பற்றியோ துல்லியமாக தெரிந்திட வாய்ப்பில்லை.

என்னை நானே நாடுகடத்திய பின் உன்னிடம் முறையிட்டு
என்ன தீர்வு கிடைக்கப்போகிறது? என்று நம்மை நாமே விடை தெரியாமல் கேட்டுக்கொள்ளும்/கொல்லும் கேள்வி இது....

Noor Mohamed said...

//என்னை நானே நாடுகடத்திய பின் உன்னிடம் முறையிட்டு
என்ன தீர்வு கிடைக்கப்போகிறது? என்று நம்மை நாமே விடை தெரியாமல் கேட்டுக்கொள்ளும்/கொல்லும் கேள்வி இது..//

விடை கொடுக்க முடியாத வாக்கியம் இது.....

அப்துல்மாலிக் said...

சகோ. அதிரைசித்தீக், நான் சொல்லவந்தது நம்மில் எத்தனை பேர் வெக்கேஷன் மாதம் முழுதும் (1 அ 2 மாதம்) வீட்டிலே தங்கி குழந்தையை தன் பொறுப்பிலே எடுத்து செய்கிறோம், நாமே செய்ய முன்வந்தாலும் வீட்டுலே உள்ளவங்க (மனைவி உட்பட) லீவுலே வந்திருக்கீங்க நல்லா ரெஸ்ட் எடுங்க என்ரு ஒதுக்கிவெச்சிடுவாங்க.அந்த பாக்கியம் ஒரு சிலருக்கு மாத்திரமே கிட்டும். மேலும் வெக்கேஷன் சென்ற அந்த மாதமும் நண்பர்களுடன் அதிக நாள் ஊர் சுத்த கிளம்பிடுவோம்.... அதனாலேதான் கவிதைக்கு வேணா நல்லாயிருக்கும், நடைமுறைக்கு வரும்போது கொஞ்சம் கஷ்டம்தான்

Ebrahim Ansari said...

பிறப்பையும் கண்டதில்லை

பிள்ளையின் மழலைச் சொற்கள்

சிறப்பையும் கண்டதில்லை

சிறு மகள் பூத்து நாணும்

மறைப்பையும் கண்டதில்லை

மகனெனத் தன்னைப் பெற்றோர்

இறப்பையும் கண்டதில்லை -

இதற்குமேல் சாவு இல்லை!

படித்தவர்கள் அங்கே

மூளையாயிருக்கிறார்கள்

படியாதவர்கள்

சூளையாயிருக்கிறார்கள்!


ஆயுள் முழுக்க

அயல் நாட்டில் இருக்கும்

அத்தா வாப்பா எல்லாம்

இத்தாவில் இருக்கும்

ஆண் விதவைகள் !

- பேராசிரியர் தி. மு.அ. காதர்

KALAM SHAICK ABDUL KADER said...

//ஆயுள் முழுக்க

அயல் நாட்டில் இருக்கும்

அத்தா வாப்பா எல்லாம்

இத்தாவில் இருக்கும்

ஆண் விதவைகள் !

- பேராசிரியர் தி. மு.அ. காதர் //

அன்புச் சகோதரர் இப்றாஹிம் அன்சாரி அவர்களே! இதல்லாம் எங்கிருந்து பிடிக்கின்றீர்கள்/படிக்கின்றீர்கள்? இப்பேராசிரியர் அவர்களும் உங்களின் ஆசிரியராக இருந்தவர்களா? உண்மையில் கவிதை எழுதும் எங்களை விட கவிதைகளை நாடி, தேடிப் படிக்கும் நீங்கள் தான் பாராட்டுக்கு உரியவர்கள்; காரணம், உங்களிடம் கவிதையின் பால் உங்கள் உள்ளத்தில் ஓர் அவா இருப்பதாற்றான், நிரம்பக் கவிதைகள் நேசிக்கின்றீர்கள்; வாசிக்கின்றீர்கள். இன்ஷா அல்லாஹ், உங்கள் வீட்டிற்கு வந்தால் நிரம்பக் கவிதை நூற்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கின்றேன். உங்களைப் போன்ற கவிதை இரசிகர்கள் இருக்கும் வரை எங்களைப் போன்ற கவிதை யாத்திடுவோர்க்கு ஊக்கம் பிறக்கும்; அதனாலேயே எங்கள் கவிதைச் சிறக்கும்!

abu haashima said...

ஏர்போர்ட் போனால் பல முகங்களைப் பார்க்கலாம்.
வரவேற்க ஒரு முகம்
வழியனுப்ப ஒரு முகம்
முகங்கள்
அகங்களின் கண்ணாடி!
ஒரு கவிதை எழுதினேன்...
இந்த மேட்டருக்குப் பொருத்தமான கவிதை.
அதையும் பதிவேற்றம் செய்வேன்.

abu haashima said...

//என்னை நானே நாடுகடத்திய பின் உன்னிடம் முறையிட்டு
என்ன தீர்வு கிடைக்கப்போகிறது?#(அருமை...அருமை....)

நெய்னா முஹம்மது அவர்களின் வரிகள் நிதர்சனத்தின் வலி. புஹாரி அவர்கள் சொன்னதுபோல "நெய்" நா என்பதில் சந்தேகமில்லை. "தேன்" என்று காகிதத்தில் எழுதிவைத்து நக்கிப் பார்த்தால் அது தித்திக்காது. அதுபோல்தான் காணொளியிலும் காதொலியிலும் கிடைக்கும் இன்பம் உண்மையான இன்பத்தைத் தராது என்கின்ற வாதம். அதிரை சித்திக் பாய் கூறும் இளமையின் ஏக்கமும் ஹலாலான உடல் தேவைகளும் பணத்தைக் கொண்டு பெறமுடியாதவைதான்.நிஜாம்பாய், யாசிர்பாய்,நூர்முஹம்மது, மாலிக்பாய் ஆகியோரும் தங்கள் கருத்துக்களை பதித்திருக்கிறார்கள். கணவனின் தியாகம் சில இடங்களில் அவன் கொண்டுவரும் செல்வத்தின் கனத்தை பொறுத்தே மனைவிகளிடத்தில் மதிப்பைப் பெற்றுத் தருகின்றன.

இன்னும் சில இடங்களில் எவ்வளவு கொடுத்தாலும் மதிப்புக்கு மதிப்பில்லாமல் போய்விடுகிறது. கொடுக்காமலிருந்தாலும் கணவனை கண்ணைப்போல் மதிக்கும் உத்தமமான மனைவிகளும் இல்லாமலில்லை.

அபுல்கலாம் அவர்களின் கண்ணீரில் கலந்த நினைவுகள் என்நெஞ்சிலும் நெகிழ்வை ஏற்படுத்தியது. நண்பர்களின் பின்னூட்டங்கள் புதுத் தெம்பைத் தருகிறது. இந்த வலைத்தளத்தில் என்னை எழுத வைத்த நண்பர் இப்ராஹீம் அவர்களுக்கும் என் நன்றிகள். இன்ஷா அல்லாஹ் தொடர்வோம்.....

Ebrahim Ansari said...
This comment has been removed by the author.
Ebrahim Ansari said...

அன்பு சகோதரர் கவியன்பன் அவர்களே! உங்கள் கேள்வி

//இப்பேராசிரியர் அவர்களும் உங்களின் ஆசிரியராக இருந்தவர்களா? //

என் பதில்: ஆமாம். வாணியம்பாடியில்.

ஆனால் இன்றளவும் எனது நண்பர் போலவும் பழகி இருந்து வருகிறார். அபூ ஹஷிமா அவர்களுக்கும் நண்பரே.

எப்படித்தேடிபடிக்கிறீர்கள்? என்று கேட்டுள்ளீர்கள். வண்டுகள் தேன் தேடி அலையும்போது அழகு மலர்கள் வண்டுகளின் கண்களைக்கவரும் என்பது கவிஞருக்குத் தெரியாதா? அப்படி அலையும் வண்டுகளின் நானும் ஒருவன். சில மலர்களின் மேல் நீண்ட நேரம் உட்கார்ந்து கவிதை தேன் குடிப்பேன். அந்த மலர்களில் உங்களின் மலரும் ஒன்று.
பகிர்ந்து கொள்ளப்பட்ட இன்பம் இரட்டிப்பாகும் எனவே பகிர்கிறேன். வஸ்ஸலாம்.

Noor Mohamed said...

//கணவனின் தியாகம் சில இடங்களில் அவன் கொண்டுவரும் செல்வத்தின் கனத்தை பொறுத்தே மனைவிகளிடத்தில் மதிப்பைப் பெற்றுத் தருகின்றன.
இன்னும் சில இடங்களில் எவ்வளவு கொடுத்தாலும் மதிப்புக்கு மதிப்பில்லாமல் போய்விடுகிறது. கொடுக்காமலிருந்தாலும் கணவனை கண்ணைப்போல் மதிக்கும் உத்தமமான மனைவிகளும் இல்லாமலில்லை.//

சகோ. அபூஹாஷிமா அவர்களின் இந்த ஏற்புரை நிறைந்த கருத்தை குறைந்த வரிகளில் எழுதிய நல்ல முடிவுரை.

இப்னு அப்துல் ரஜாக் said...

//" நான் பெற்ற பிள்ளை என்னைப்போல் கஷ்டப்படாமல் நல்லா இருக்கான்.... படைச்ச ரகுமானே என் பிள்ளையை மேலும் மேலும் நல்லாக்கி வை..." என்று வாழ்வின் கடைசி நாட்களை நிம்மதியாக வாழ்ந்துஉங்களுக்காக துஆ கேட்கிறார்களே.... உங்கள் பெற்றோர்,அதன் பலன் மறுமையில் தெரியும்.//

சகோதர் அவர்களே,நீங்கள் இதை உங்கள் பேனாவால் (தட்டச்சு)எழுதவில்லை.உங்கள் இதயத்தால் எழுதி இருக்கிறீர்கள்.

abu haashima said...

உண்மைதான் நண்பரே.இதயம் உள்ளவர்கள் நாம்.பெற்றோரைக் கொண்டு சொர்க்கத்தை பெற்றுக் கொள்ளும் பேறுபெற்ற மக்கள் நாம்தான்.
நம் மார்க்கம் கற்றுத் தந்ததும் அதைத்தானே.அல்லாஹ் நமக்கு அருள் புரியட்டும்.
நண்பர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு ....இந்தத் தொடர் இன்னும் முற்றுப் பெறவில்லை. இன்னும் சில அத்தியாயங்கள் மிச்சமிருக்கின்றன . அதுவரை தொடர்ந்து வரும்.இன்ஷா அல்லாஹ்.

Ebrahim Ansari said...

//நண்பர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு ....இந்தத் தொடர் இன்னும் முற்றுப் பெறவில்லை. இன்னும் சில அத்தியாயங்கள் மிச்சமிருக்கின்றன . அதுவரை தொடர்ந்து வரும்.இன்ஷா அல்லாஹ்.//

I LIKE THIS DEALING.

PLEASE MAINTAIN THIS AS IT IS.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

////இன்னும் சில இடங்களில் எவ்வளவு கொடுத்தாலும் மதிப்புக்கு மதிப்பில்லாமல் போய்விடுகிறது. கொடுக்காமலிருந்தாலும் கணவனை கண்ணைப்போல் மதிக்கும் உத்தமமான மனைவிகளும் இல்லாமலில்லை.//// .....................உண்மையே!

வளைகுடா வாசிகளின் தியாகங்களை வெளிக் கொண்டு வரும் நல்லதொரு அனுபவ குறுந்தொடர்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு