Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மனுநீதி மனித குலத்துக்கு நீதியா? - அலசல் தொடர் - 1 16

அதிரைநிருபர் பதிப்பகம் | May 28, 2012 | , , , ,

எனது முந்தைய ஆக்கமான ‘ இன ஒதுக்கீடும் ,இட ஒதுக்கீடும்- உரசும் உண்மைகள் “என்ற தலைப்பிட்ட பதிவைத் தொடர்ந்து, ஆண்டாண்டு காலமாக இந்திய சமூகத்தை ஆட்டிப்படைத்து வரும் ஆரியக் கொள்கைகளைப்ப்ற்றிய ஒரு விரிவான அலசல் தேவை என்று மனதில் பட்டது. அதனை முன்னிட்டு ஆரியக் கொள்கைகளின் அடிப்படையாகக் காட்டப்படும் மனு நீதி ( நீதியா அது? பேதி.) தர்மத்தை சற்று விரிவாகப் படிக்க ஆரம்பித்தேன். பல அதிர்ச்சிகளை சந்தித்தேன். நாம் படிக்கும் திருமறையிலும், நபி மொழிகளிலும் தென்றல் தவழ்கிறது- பகுத்தறிவு மணம் கமழ்கிறது. ஆனால் மனுநீதியைப் படிக்கும்போது மனிதகுல நாகரிகங்களுக்கு சற்றும் பொருந்தாத கருத்து நாற்றம் குடலைப்பிடுங்குகிறது. இவைகளை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள நினைத்தே இந்த ஆக்கம்.

யாரையும் புண்படுத்தவோ, எள்ளி நகையாடவோ அல்ல. துவேஷ மனப்பான்மையுடனும் அல்ல. இருப்பதை எடுத்துக்காட்டி இவை அறிவுக்கு ஏற்புடையதா? சரிதானா? என்ற கேள்விகளைக் கேட்கவே இந்த அலசல். இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் ஏன் இன்னும் பிற்பட்டே இருககிறார்கள் என்ற கேள்விக்கு ஒரு சிறு விடையை அல்லது சிந்தனையை இந்த ஆக்கம் தரலாம். உண்மைகளை வெளிக்கொண்டு வரும்போது விதண்டாவாதிகளுக்கும், பிற்போக்குவாதிகளுக்கும் கோபம வரலாம் என்று எதிர்பார்த்தே இதைப் பதிகிறேன். உண்மையைச் சொல்ல ஓடி ஒளிய வேண்டியதில்லை. இதில் தோலுரித்துக் காட்டப்படப்போகும் அததனைக்கும் அதிலேயே வரி வரியாக ஆதாரம் இருக்கிறது. நாமாக எதையும் கற்பனை செய்து எழுதவில்லை. மாற்று மத நண்பர்களும் இதை படிக்கும் வண்ணம் இதை பங்கீடு செய்வோம். அவர்கள் வினா எழுப்பினால் விடை தருவோம்.

முதலாவதாக

மனு நீதியின் அடிப்படையில் Chapter 1/31 வது சுலோகம் இப்படி சொல்கிறது.  

But for the sake of the prosperity of the worlds he caused the Brahmana, the Kshatriya, the Vaisya, and the Sudra to proceed from his mouth, his arms, his thighs, and his feet. .
இதன் பொருள்: உலக  மனிதர்களிடையே தொழில்களின்  அடிப்படையில்  பிராமணர், ஷத்ரியர், வைசியர், சூத்திரர்  ஆகிய இனங்களை முறையே கடவுள் தனது வாய், தோள், தொடை மற்றும் கால் பாதங்களில் இருந்து படைத்தார் என்பதாகும். அதாவது பிராமணரை வாயிலிருந்தும், ஷத்ரியரை தோள்களில் இருந்தும், வைசியரை தொடைகளிலிருந்தும் , சூத்திரரை காலடியிலிருந்தும் படைத்தாராம்.

முதலாவதாக நாம் கேட்க விரும்பும் கேள்வி : அறிவியல் ரீதியாக ஆணின் விந்து பெண்ணின் சினை முட்டையோடு சேர்ந்துதானே உயிர்கள் உருவாக முடியும். அது மனித இனப்பெருக்கமாக இருந்தாலும் சரி- விலங்குகளின் இனப்பெருக்கமாக இருந்தாலும் சரி- தாவர இனங்களாக இருந்தாலும் சரி – நியதி ஒன்றுதானே. அது எப்படி வாயிலிருந்தும், தோளில் இருந்தும், தொடையில் இருந்தும், காலடியில் இருந்தும் உயிர்கள் உருவாக முடியும்? போகட்டும் . அவர்கள் கூற்றுப்படி கடவுள் படைப்பதால்  அறிவியல் காரணங்களை ஆராயத்தேவை இல்லை என்றே வைத்துக்கொள்ளலாம். தான் படைத்து பிறக்கவைக்கும் உயிர்களை தனது மக்கள் என்று கடவுள் கருதமாட்டாரா? அந்த தனது மக்களில் ஒரு பெற்றவர் பாகுபாடுவைத்து படைக்கும்போதே படைப்பாரா? அப்படிப்படைத்தால்  அவர் கடவுளா? அட கடவுளே தனது பிள்ளைகளை இப்படி வித்தியாசம் வைத்துப்படைத்து இருக்கிறாரே நாமும் பார்த்தால் என்ன என்று படைப்பினங்கள் நினைக்காதா? விடைகளே சொல்லமுடியாத விந்தைகள். முத்துப்பேட்டை ஆலங்காட்டில் சட்டிபானை செய்பவன் கூட ஒரே மாதிரியாக செய்கிறானே – படைக்கிறானே. அந்த தகுதியைக்கூடவா இந்த ஆரியரின் கடவுள்கள் என்று கூறப்படுபவை இழந்துவிட்டன?

உலகில் உருவான மற்ற எந்த மதமுமே இப்படி மக்களில் பேதம் பார்த்து தரம் பிரிக்கவில்லை என்பது மத ஆராய்ச்சியாளர்களின் ஒருமித்த கருத்து. ஒரு சிறிய மலைசாதியினர், மிருகங்களைப் பச்சையாக கடித்து உண்ணும  காட்டுவாசிகள்  பின்பற்றும் மதங்களில்  கூட இப்படி பிறப்பிலேயே பாகுபாடுகள் இல்லை. இல்லை. இல்லவே இல்லை.

இத்தகைய பிறப்பின் தொழில்ரீதியான பாகுபாடுகளின் அடிப்படையில் பார்த்தால் பிராமணர்கள் என்பவர்கள்  அர்ச்சிக்க,  வேதங்களை உச்சரிக்க, சிலைகளைத்தொட, நகைகளை அணிவித்து அலங்காரம் செய்ய,  பிறருடைய பாவங்களை கழிக்க அருகதை உடையவர்கள். நேராக சொர்க்கம் செல்லும் தகுதி இவர்களுக்கு மட்டுமே உண்டு. மற்ற வர்ணங்களைச் சேர்ந்தவர்கள் இந்தப் பிறவியில் நன்மைகள் செய்து மறுபிறவியில் பிராமணராகப் பிறந்தால்தான் சொர்க்கம் போக முடியும்.

அடுத்து ஷத்ரியர்கள் என்பவர்கள் அரசர்கள், படைத்தளபதிகள், படை வீரர்கள் ஆகியோராவர். இவர்கள் போரில் செத்தால் நான் ஸ்டாப் பிளைட்டில் சுவர்க்கம் போய்விடுவார்களாம்.

வைசியர்கள் என்பவர்கள் வியாபாரிகள். சூத்திரர்கள் என்பவர்கள் அடிமைகள், இழிந்தவர்கள், தீண்டத்தகாதவர்கள். மனு நீதியின் சொந்த வார்த்தையில் இவர்கள் “பாக்யசாதியினர் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் ஒரு பிராமணன், பசு, சிசு, பெண் ஆகியோரின்  உயிரைக்காப்பாற்ற தங்கள் உயிரை விட்டால் டைரக்ட் சொர்க்கம் கிடைக்கும். அத்தியாயம் 10  சுலோகம் 62. (அடப்பாவிகளா? )
இதுதான் மனுநீதி தரும் சமுதாய அமைப்பு. இதில் கை கொட்டி சிரிக்கத் தகுதிபடைத்த வேடிக்கை என்னவென்றால் இந்த நான்கு வகை இனத்தில் முதல் மூன்றுவகையினர் இந்திய மக்கள் தொகையில் 10% மட்டுமே உள்ளவர்கள். இதில் பிராமணர்களின் அளவு வெறும் 3% தான். பாக்கி  90% மக்கள் இவர்களின் வேதத்தின்  கணக்குப்படி அடிமைகள் , இழிந்தவர்கள், கடையர்கள், தலித்துகள் ஆவார்கள்.   இந்த 3% ஒரு கை விரல்களைவிட குறைவான சதவீதத்தினர்தான் பல்லக்குகளில் ஏறி பவனி வருகிறார்கள். இவர்களை  “போற்றிப் பாடடி பொண்ணே ஐயர் காலடி மண்ணே! என்று மற்றவர்கள் துதி பாடுகிறார்கள்.

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு ‘என்று பாடிப்புகழ்ந்தார் பாரதியார். ஆனாலும் என்ன பயன்? மனுநீதியின் அளவுகோளின்படி வள்ளுவர் சூத்திரர்-அதாவது இழிந்தவர்- தொடத்தகாதவர். உலகின் நாற்பது மொழிகளில் வள்ளுவரின் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டு இருக்கிறது. வெள்ளை மாளிகையிலும், கிரெம்ப்ளின் மாளிகையிலும், பக்கிங்க்ஹாம் அரண்மனையிலும் திருக்குறள் தமிழ் நூலாகவே வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும் என்ன புண்ணியம் அவர் பிறப்பால் ஒரு தீண்டத்தகாதவரே.

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவர்போல், இளங்கோ போல் யாங்கணுமே கண்டதில்லை.’’ என்று பாரதியார் போடுகிற லிஸ்டில் இளங்கோவைத்தவிர மற்றவர்கள் சூத்திரர்கள். தொடக்கூடாதவர்கள். கம்பன் எழுதிய இராமயணத்தை நம்புகிறவர்கள்- அந்தக்கதையில் வரும் கற்பனை இராமர் பாலத்தை வைத்து சேது சமுத்திரத்திட்டம் என்கிற ஒரு பெரிய பொருளாதாரத்திட்டத்தை முடக்கிப் போடுகிறவர்கள்-  கம்பனை தங்கள் இனத்தில் சேர்க்கத் தயாரில்லை. கம்பனை மட்டுமா ? கம்ப இராமாயணத்துக்கு மூலமான முதல் இராமாயணம் எழுதிய வால்மீகி முனிவர்கூட சூத்திரரே – தொடத்தகாதவரே. காரணம் அவர் ஒரு வேடர்.

திருமந்திரம் என்ற ஆக்கம் தந்து – சைவ சித்தாந்தம் என்கிற தத்துவத்தை வழங்கிய திருமூலர் , முதல் சைவ சித்தாந்த சாஸ்திரம் வழங்கிய திருவுந்தியார், வைணவ சித்தாந்தம் வழங்கிய திருப்பான் ஆழ்வார் என்கிற ஆழ்வார், கண்ணப்ப நாயனார், நந்தனார், திருநீலகண்டர், திருமங்கை ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், பல்வேறு பதினெட்டு சித்தர்கள், பெரியபுராணத்தில் குறிப்பிடப்படும் 63 நாயன்மார்கள் என்று கூறப்படுபவர்களில் பிராமணராய்ப் பிறந்தவர்கள் தவிர மற்ற அனைவரும் உள்பட  மனு நீதியின் முன் தாழ்த்தப்பட்டோர்கள்- தீண்டத்தகாதவர்கள்- இழிந்தவர்கள்- அடிமைகள். (ஆதாரம்: DALITS &  UNTOUCHABLE SAINTS  OF HINDUS).

வீர சிவாஜி என்று கூறுகிறார்கள். சிவசேனை என்று படை அமைத்து மாற்று மாநிலத்தவரை சூறையாடுகிறார்கள்.  சிவாஜியின் பெயரில் கட்சிவைத்து மும்பையில் வாழும் இஸ்லாமியர்களை கொத்துக்கொத்தாகக் கொல்ல நினைக்கிறார்கள். பொருளாதார முதுகெலும்புகளை ஒடிக்கும்  விதத்தில் வர்த்தக நிலையங்களை தீ வைத்துக் கொளுத்துகிறார்கள். இந்த சிவாஜியின் வாழ்வில் என்ன நடந்தது? பல வெற்றிகளைப் பெற்று வந்தும் மராட்டியத்தின் மன்னனாக முடிசூடிக்கொள்ள சிவாஜியை அனுமதிக்கவில்லை இந்த மனுநீதி பாகுபாடு. சிவாஜி ஒரு சூத்திரன் - அவன் ஷத்ரியன் அல்ல ஆகவே மன்னன ஆகும் தகுதி அவனுக்கு இல்லை என்று மறுத்ததும் ஒரு பிராமணன் கூட அவனுக்கு முடிசூட்டுவிழா மந்திரம் சொல்ல முன் வராததும்தானே வரலாறு? முதலில் சிவாஜியை போற்றுபவர்கள் அவனை  சாதியின் பெயரால் இழிவு படுத்திவைத்து இருக்கும் சாஸ்திரத்தை மாற்றட்டும். அதன்பின் மும்பையிலிருந்து   தமிழ்நாடு, உ.பி. மற்றும் பீகார் மாநிலத்தோரை  விரட்டலாம்.

திருவள்ளுவரிலிருந்து வீர சிவாஜி வரை மட்டுமல்ல இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை வரைந்த டாக்டர் அம்பேத்கார்வரை இன்னும்  ஆயிரக்கணக்கான உதாரணங்களைத் தர இயலும். இவர்களைக்காணும்போது தினமும் டி வி யில் வரும் ஒரு விளம்பரம்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது.

“தினமும் ரெண்டு வேள பால் கொடுக்கிறே ஆனால் கால்சியத்துக்கு என்ன கொடுக்கிறே?

“ அதுதான் சொல்றேனே பால் கொடுக்கிறேன். “

“பால் கொடுக்கிறே ஆனால் கால்சியம் கிடைக்குதா?  “

அதேபோல் இந்த பட்டியலில் உள்ள தனிமனிதர்களுக்கு அவர்கள் செயலால் பால் கிடைக்கிறது ஆனால் பிறப்பால் அவர்களுக்கு கால்சியம் கிடைக்கவில்லை. வள்ளுவர் முதல் வால்மீகி வரை சாதி மறுக்கப்பட்ட சவளைப்பிள்ளைகளே.
சாட்டை சுழலும்.. . 
-இபுராஹீம் அன்சாரி

உங்களுக்குத் தெரியுமா?

புதுக்கோட்டை நகரத்தின் மையப் பகுதியில் உள்ள பல்லவன் குளக்கரையில், இக்குளத்தில் இஸ்லாமியர்களும், ஆதிதிராவிடர்களும் கால் நனைக்கக்கூடாது என்று செதுக்கி வைக்கப்பட்டிருந்த கல்வெட்டை தான் பதவியேற்ற முதல் பணியாக அகற்றியவர் திவான் கான் பகதூர் கலிபுல்லா என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா



நன்றி: உண்மை இதழ், மே மாதம் 2012

16 Responses So Far:

KALAM SHAICK ABDUL KADER said...

சாதி கொடுமை சாகடிக்கச்
சாட்டை அடிகள் வேகமாய்த்தான்
நீதி கேட்டு நிற்பதையும்
நினைத்தால் உதிரம் கூடுதலாய்
வேதி மாற்றம் ஆகிடுதே
வேதம் என்ற கூக்குரலால்
மோத வைக்கும் சூழ்ச்சிகளை
முழுதும் விளக்கும் காட்சிகளே

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மனிதம் போற்றும் மகத்துவ மார்க்கம் இஸ்லாம் ஒன்றே என்பதை இதன் மூலமும் அறிய முடிகிறது.

இப்னு அப்துல் ரஜாக் said...

சீழ் பிடித்து
,நாற்றம் எடுத்து,
மக்களை - மாக்களாய் பாவிக்கும்
இந்து மத மனுவை பற்றி
தோலுரிக்கும் இப்ராஹீம் அன்சாரி காக்கா அவர்களே,
இன்னும் சுழற்றுங்கள்
உங்கள் சாட்டையை.

sabeer.abushahruk said...

இந்த முயற்சி அதிரை நிருபரின் மகுடத்தில் மற்றுமொரு மாணிக்கமாக பதிய இருப்பதற்கான அடையாளங்களைக் கட்டுரையில் காண்கிறேன்.

காக்காவின் கட்டுரைகளில் தரம் - நிரந்தரம்.

sabeer.abushahruk said...

நிற்க,
இபுறாகீம் அன்சாரி காக்கா, அபு இபுறாகீம், தம்பி தாஜுதீன்<

இன்று ச்சும்மாவாவது பார்க்க முடியுமா? அ.நி.பற்றி ஓர் எக்ஸ்க்ளூஸ்ஸிவ் சந்திப்பு அ.இ.காக்கா முன்னிலையில் பேசியேத் தீரவேண்டும். அவர்கள் புறப்படுவதற்கு முன்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

"எதிரிக்கு எதிரி நண்ப‌ன் என்ற‌ பார்முலாவில் த‌ர்கா பார்டிக‌ளும், ஆரிய‌மாயைக‌ளும் ஒன்றிணைந்து உங்க‌ளுக்கு வேட்டு வைக்க‌ முய‌ற்சிக்க‌லாம் இந்த‌ க‌ட்டுரையை அவ‌ர்க‌ளும் ப‌டிக்க‌ நேரிட்டால்......."

அப்படியே இவர்களின் வேட்டு வேலை செய்வது போல் தெரிந்தாலும் இறைவன் அவற்றை நமக்கு சன்மானமாக மாற்றித்தந்து விடுவான் இன்ஷா அல்லாஹ்...

தொடர்ந்து சுழலட்டும் உங்களின் சாட்டை காக்கா......

சேக்கனா M. நிஜாம் said...

மூத்த சகோ. இப்ராகிம் அன்சாரி அவர்களின் இக்கட்டுரை அனைத்து தரப்பினரையும் சிந்திக்க வைக்கும் !

வேதா, ஸ்மிரிதி, சதாச்சார் ஆகிய மூன்றை மட்டுமே ஓர் இந்து பின்பற்ற வேண்டும் என்கிறார் மனு. இந்த மூன்றில் ஒன்றுக்கொன்று முரண்ப்பட்ட விஷயங்கள் இருந்தால் அதில் எதாவது ஒன்றைப் பின்பற்றலாம் ஆனால் அங்கே அறிவினைச் செலுத்தி சிந்தித்து எது சரி எது தவறு முடிவு எடுப்பது என்பது கடுமையான குற்றம் என வரையறுக்கிறது மனுதர்மம். யோசிப்பதையே தவறு என சொன்ன பிறகு அந்த மக்களை நாம் எப்படி யோசியுங்கள் என சொல்வது. வேதங்களையும் சாஸ்திரங்களையும் ஒழிப்பது மட்டுமே இதற்கு தீர்வாக இருக்கும் என்கிறது சாதியை ஒழிப்பது எப்படி ? என்ற புத்தகம்.

குறிப்பு : இக்கட்டுரையை அனைத்து தரப்பினரும் அறிய வேண்டி அ.நி. நெறியாளர் அவர்களிடம் சொல்லி இதன் லிங்க்’கை தமிழ்மனம், தமிழ்வெளி போன்ற இணையதளங்களில் பதிவதற்கு கேட்டுக்கொள்ளலாம்.

Noor Mohamed said...

காக்கா, பலர் அறியாத பல வரலாற்று உண்மைகளை இங்கே அறியத் தந்துள்ளார்கள்.

'காசேதான் கடவுளடா' என்பதை கருவாகக் கொண்டு, பணத்திற்காகவும் பதவிக்காகவும், இந்த 3% மக்கள் எதையும் எப்படியும் இழக்கவும் தயார், எதையும் எப்படியும் செய்யவும் தயார் என்பதை தொழிலாகக் கொண்டவர்கள் என்ற வரலாற்று சான்றுகளை தெளிவாக இங்கே இபுராஹீம் அன்சாரி காக்கா அவர்கள் தோலிருத்து காட்டுகிறார்கள்.

தமிழில் கம்பராமாயணத்தை ஆய்வு செய்து பலர் Ph.D பட்டம் பெற்றுள்ளனர். ஆனால் இதுவரை யாரும், இராமாயணம் எழுதிய வால்மீகி, கம்பன் இவர்களெல்லாம் அந்த இனத்திற்கு சொந்தக்காரர்கள் அல்லர் என்று ஆய்வு எழுதியதாகத் தெரியவில்லை. எங்கள் காக்காவின் இந்த கட்டுரையை பார்க்கும் யாரேனும் முயன்று வெற்றி காண்பர்.

Shameed said...

சவளைபிள்ளைகளை காலில் போட்டு மிதித்து விட்டு சவலைப்பிள்ளைகளின் கதைகளை தலையில் தூக்கிவைத்து ஆடும் கூட்டம்

அதிரை சித்திக் said...

சாதி இரண்டொழிய வேறில்லை ..சாற்றுங்கால்

நீதி வலுவா நெறிமுறையில் மேதினியில் ..

இட்டார் பெரியோர் ..இடாதார் இழிகுலத்தோர் ..

பட்டாங்கில் உள்ளபடி..என்று படித்தபோது ..

மனதில் பதியவில்லை ..நாலு வார்த்தை நறுகென்று

எழுதி ..புரிய வைத்த சகோ அன்சாரி ..அவர்கள் அதிரை நிருபருக்கு

கிடைத்த பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும் ..,

Ebrahim Ansari said...

அன்பானவர்களே!

முதல் அத்தியாயம் படித்து பின்னூட்டம் தந்த அனைவருக்கும் ஜசக்கல்லாஹ் ஹைரன்.

இன்ஷா அல்லாஹ் விரைவில் மீண்டும் சந்திப்போம்.

Unknown said...

மராட்டிய சிவாஜி பற்றிய தகவல் எனக்கு புதியது .இன்னும் நிறைய அறிய தாருங்கள் அன்சாரி காக்கா.

Ebrahim Ansari said...

தம்பி ஹார்மிஸ் அப்துல் ரகுமான் அவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்.

சிவாஜி பற்றிய தகவல் வரலாற்று சம்பவம்.

இந்த சம்பவத்தை வைத்துத்தான் அண்ணா அவர்கள் " சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம் " என்ற தலைப்பில் ஒரு நாடகம் எழுதி நடத்தினார். இந்த நாடகத்தில் நடித்த காரணத்தால்தான் நடிகர் கணேசனுக்கு சிவாஜி கணேசன் என்ற பட்டம் கிடைத்தது. தலைப்புக்கு சம்பந்தப்பட்ட தகவல் என்பதால் இதை எழுதுகிறேன். மற்றபடி அன்பு தம்பி அர. அல. அவர்கள் தவறாக எண்ணவேண்டாம்.

Yasir said...

மாஷா அல்லாஹ்....அன்சாரி மாமாவின் மணிமகுடத்தில் மற்றுமொரு ரத்தினம் இவ்வாக்கம்...நிறைய அறிந்திராத தகவல்கள்...அதிரைநிருபரின் தகவல்பீடியா நீங்கள்...வாழ்த்துக்களும் துவாக்களும்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இந்த தொடர் வெறிகரமாக நிறைவுற்றதும் நூல் வடிவில் நிச்சயம் வெளிவரும் இன்ஷா அல்லாஹ் !

//‘’யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவர்போல், இளங்கோ போல் யாங்கணுமே கண்டதில்லை.’’ என்று பாரதியார் போடுகிற லிஸ்டில் இளங்கோவைத்தவிர மற்றவர்கள் சூத்திரர்கள். தொடக்கூடாதவர்கள். கம்பன் எழுதிய இராமயணத்தை நம்புகிறவர்கள்- அந்தக்கதையில் வரும் கற்பனை இராமர் பாலத்தை வைத்து சேது சமுத்திரத்திட்டம் என்கிற ஒரு பெரிய பொருளாதாரத்திட்டத்தை முடக்கிப் போடுகிறவர்கள்- கம்பனை தங்கள் இனத்தில் சேர்க்கத் தயாரில்லை. கம்பனை மட்டுமா ? கம்ப இராமாயணத்துக்கு மூலமான முதல் இராமாயணம் எழுதிய வால்மீகி முனிவர்கூட சூத்திரரே – தொடத்தகாதவரே. காரணம் அவர் ஒரு வேடர்.//

வரலாற்றை புரட்டிப் போட்டு உண்மைகளை புதைகுழியில் புதைக்கும் ஆரியர்களுக்கு இதெல்லாம் ஜுஜிபி காக்கா....

//வீர சிவாஜி என்று கூறுகிறார்கள். சிவசேனை என்று படை அமைத்து மாற்று மாநிலத்தவரை சூறையாடுகிறார்கள். சிவாஜியின் பெயரில் கட்சிவைத்து மும்பையில் வாழும் இஸ்லாமியர்களை கொத்துக்கொத்தாகக் கொல்ல நினைக்கிறார்கள். பொருளாதார முதுகெலும்புகளை ஒடிக்கும் விதத்தில் வர்த்தக நிலையங்களை தீ வைத்துக் கொளுத்துகிறார்கள். இந்த சிவாஜியின் வாழ்வில் என்ன நடந்தது? பல வெற்றிகளைப் பெற்று வந்தும் மராட்டியத்தின் மன்னனாக முடிசூடிக்கொள்ள சிவாஜியை அனுமதிக்கவில்லை இந்த மனுநீதி பாகுபாடு. சிவாஜி ஒரு சூத்திரன் - அவன் ஷத்ரியன் அல்ல ஆகவே மன்னன ஆகும் தகுதி அவனுக்கு இல்லை என்று மறுத்ததும் ஒரு பிராமணன் கூட அவனுக்கு முடிசூட்டுவிழா மந்திரம் சொல்ல முன் வராததும்தானே வரலாறு? //

அடச்சீ... என்று தூற்றத்தான் மனம் சொல்கிறது !

Ebrahim Ansari said...

Editor Said

//இந்த தொடர் வெறிகரமாக நிறைவுற்றதும் நூல் வடிவில் நிச்சயம் வெளிவரும் இன்ஷா அல்லாஹ் !//

I consider this as a biggest boost towards the efforts.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு