Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சகோதரியே! - தொடர் - 5 27

அதிரைநிருபர் பதிப்பகம் | May 01, 2012 | , , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) - (இறைவனின் சாந்தியும், சமாதானமும் தாங்கள் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!).

சகோதரர் ஜாகிர் சென்ற அத்தியாயத்தில் வரதட்சணை எல்லாம் குறைந்து விட்டது என்று கருத்து பதிந்திருந்தார். மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் பெண் வீட்டிலிருந்து பால் குடம், பனியாரம், காலை பசியாற, அல்வா, பிரியாணி, தோழன் சாப்பாடு இப்படி ஏகப்பட்ட ஐயிட்டங்களை வாங்கி சாப்பிட்டு ஏப்பம் விடுவது இன்னும் குறையவில்லை. பெண் வீட்டிலிருந்து வீடாக, மனையாக வாங்குவதும் குறையவில்லை. (வரதட்சணையை வெளியில் தெரியாமலும், ரகசியமாகவும் வாங்கிக் கொள்வதாக கேள்விப்பட்டேன்).  சர்க்கரை நோய் உள்ளவர்களும் பெண் வீட்டில் சீனியில் செய்த பலகாரங்கள் கேட்கிறார்கள். இவர்கள் வாங்கி சாப்பிடுவதற்கா? நாங்களும் பெண் வீட்டில் வாங்கியிருக்கோம்ல? என்று வெளியில் காட்டி தெருவுக்கு பங்கு வைக்கத்தான். (எங்களுக்கு மற்றவர்கள் அவர்கள் வீட்டு திருமணத்தில் பெண் வீட்டில் வாங்கி எங்களுக்கு பலகாரங்கள் தந்திருக்கிறார்கள். நாங்களும் பதிலுக்கு கொடுக்கனும்ல? எங்கள் பணத்தை செலவழித்து இனிப்புகள் வாங்கி தெருவுக்கு கொடுக்க நாங்கள் என்ன பைத்தியக்காரர்களா? அதான் எங்கள் வீட்டு பையனுக்கு, பெண் தருகின்ற ஏமாளி வீட்டில் பலகாரங்கள் வாங்கி பதிலுக்கு தெருவுக்கு பங்கு வைக்கிறோம்) .

பல  ஊர்களில் மாப்பிள்ளை வீட்டார்: பெண் வீட்டில் பலகாரத்தோடு எவர்சில்வர் பொருள்கள் கேட்கிறார்கள். உதாரணத்திற்கு 100 கிலோ அல்வா என்றால் அதோடு எவர்சில்வர் வாளி 200 அல்லது 300 அதற்கு மேலும் (வாளி, தட்டு, டப்பா என்று எவர்சில்வரில் ஏதாவது ஒன்று) வசதிக்கு தக்கவாறு பெண்வீட்டில் கேட்பார்கள். (இது நிச்சய சீராம், திருமண சீர் தனியாக இருக்கிறது).

இந்த பலகாரத்தை எவர் சில்வர் பாத்திரத்தில் வைத்து அதோடு பத்திரிக்கையையும் வைத்து ஊர் ஊராக, வீடு வீடாக கொண்டு போய் கொடுத்து திருமணத்திற்கு வாருங்கள் என்று அழைப்பார்கள். (நாளை மறுமையில் நாங்கள் மட்டும் அல்லாஹ்விடம் குற்றவாளியாக நிற்கக் கூடாது. நண்பர்கள், தோழிகள், மாமா, மச்சான், அண்ணன், தம்பி, அக்கா, சின்னம்மா, பெரியம்மா இப்படி எத்தனை உறவுகள் இருக்கிறீர்களோ அத்தனை பேரும் எங்களோடு சேர்ந்து வல்ல அல்லாஹ்விடம் குற்றவாளியாக நில்லுங்கள்! (நாங்கள் செய்த காரியத்திற்கு நீங்கள்தானே சாட்சிகள்!) என்றுதானே பொருள், அவர்கள் தருவதை வாங்கினால்???)

பெண் வீட்டிலிருந்து வரும் பொருள், நகை எதுவாக இருந்தாலும் தகப்பன், அண்ணன், மாமா, மச்சான் இப்படி எத்தனை சொந்தங்கள் பெண்ணுக்கு இருக்கிறார்களோ அத்தனை பேரின் இரத்த  வேர்வையில், தியாகத்தில் வந்த பணத்தில் அல்லவா பெண் வீட்டில் இருந்து பொருட்கள் வருகிறது.

பெண் வீட்டில் வாங்கி சாப்பிடும் பழக்கம் இன்று வரை குறையவில்லையே. எந்தவித உழைப்பும் இல்லாமல், அடுத்தவரிடம் இருந்து வரும் பொருளைத்தானே (எந்தவித உறுத்தலும் இல்லாமல்) சாப்பிடுகிறார்கள்.  

பெண் வீட்டில் பகல் கொள்ளை அடிக்கும், லஞ்சத்தை (கைக்கூலியை) வாங்கும் பழக்கம் ஒழியும் வரை நம் சக்திக்கு உட்பட்டு போராடிக் கொண்டுதான் இருக்க வேண்டும். (அவர்களை பெண் வீட்டில் கை நீட்டி வாங்குவதை நிறுத்தச் சொல்லுங்கள். நாமும் சொல்வதை நிறுத்திக் கொள்வோம்).

பெண் பார்ப்பது:
பெண் வீட்டிற்கு வந்து முதலில் பெண்ணைப் பார்ப்பதை விட நீங்கள் என்ன தருவீர்கள்? என்ற பேச்சைத்தானே ஆரம்பிக்கிறார்கள். பெண்ணின் மார்க்கம், கல்வி, குணநலன் இப்படி எதையுமே முதலில் கேட்காமல் அழிந்து போகும் பொருளையே முதலில் கேட்கிறார்கள்.

ஒரு சகோதரர் சொன்னார்: அவரின் சகோதரியின் மகளை பெண் பார்க்க வந்தவர்கள் முதலில் வீட்டை சுற்றிப் பார்த்து எத்தனை ரூம் இருக்கிறது, என்ன வசதிகள் இருக்கிறது என்று பார்த்து விட்டு பிறகுதான் பெண்ணைப் பற்றி பேச ஆரம்பித்தார்களாம். இவர்கள் பெண் பார்க்க வந்தவர்கள் போல் தெரியவில்லை. வீட்டை வாங்க வந்தவர்கள் போல் தெரிகிறது, இந்த குடும்பத்திற்கு பெண் கொடுக்க வேண்டாம் என்று முடிவு செய்தார்களாம்.

மஹர் கொடுத்த திருமணம்:
ஒரு சகோதரர் சொன்னது: நான் தூரத்து உறவினர் திருமணத்திற்கு சென்றேன். கல்யாண மண்டபத்தில் மாப்பிள்ளையைத் தேடினேன். மிக எளிமையாக அமர்ந்திருந்தார். (மாப்பிள்ளைக்கு என்று இருக்கும் உடை அலங்காரம் எதுவும் இல்லாமல்). அவர்கள் வீட்டில் 5 பெண்கள் இந்தப் பெண்தான் கடைசிப்பெண். வசதி இல்லாத குடும்பம்தான் பெண்ணின் அண்ணன்தான் எல்லாம் செய்ய வேண்டும். பெண் பார்க்கும்பொழுதே மாப்பிள்ளையின் கட்டளை வரதட்சணை எதுவும் வேண்டாம், நான் மஹர் கொடுத்து திருமணம் செய்து கொள்கிறேன், கட்டிய சேலையோடு அனுப்பினால் போதும் என்று.

பெண்ணின் அண்ணனுக்கோ மனக்குறை எதுவும் தங்கைக்கு கொடுக்கவில்லை என்று, மாப்பிள்ளையின் கட்டளையை மீறி பர்னிச்சர் கடையில் கடனுக்கு 40ஆயிரம் வரை பீரோ, கட்டில் என்று எல்லாப்பொருட்களையும் வாங்கி திருமண முதல் நாளன்று கல்யாண மண்டபத்தில் கொண்டு வந்து வைத்து விட்டாராம். திருமணம் முடிந்து மாப்பிள்ளை சொன்னபடி பெண்ணை மட்டும் அழைத்துக் கொண்டு காரில் ஏறிய பிறகு பொருள்கள் அனைத்தும் மண்டபத்திலேயே இருக்க! பெண்ணின் அண்ணன் மாப்பிள்ளையிடம் எவ்வளவோ சொல்லியும், நான் உங்களிடம் எதுவும் கேட்கவில்லையே. நாளை மறுமையில் வல்ல அல்லாஹ்விடம் குற்றவாளியாக நிற்கும்படி வைத்து விடாதீர்கள் என்று சொன்னாராம்.          (பெண்ணின் அண்ணன் வாங்கிய பொருள்களை கடையில் கொடுத்து விடலாம் என்று கேட்டபொழுது திருப்பி வாங்கும் பழக்கம் இல்லை என்று சொல்லி விட்டார்களாம், வேறு வழியின்றி தன் வீட்டிற்கே எடுத்து சென்றாராம்). இப்படி ஒரு அதிசயமான திருமணத்திற்கு சென்று வந்தேன் என்று சொன்னார்.

இந்த விபரத்தை சொன்ன சகோதரரும்:
தகப்பன் இல்லா ஏழை பெண்ணை திருமணம் முடித்தார். திருமண பேச்சு ஆரம்பித்த நாள் முதல் திருமணம் முடிக்கும் வரை மார்க்கம் என்ன சொல்லி இருக்கிறது என்று ஒவ்வொன்றாக கேட்டு அறிந்து அதன்படி செய்தார். பெண்ணுக்கு மஹராக 13 பவுன் வரை கொடுத்தார், வாட்ச், துணிமனிகள், மொபைல் என்று அனைத்தையும் கொடுத்தார். வலிமா விருந்து வைத்து திருமணம் முடித்தார். பெண் வீட்டிலிருந்து (பெண்ணின் சித்தப்பா) கட்டில், பீரோ, பேண்ட், சர்ட் எடுத்தாவது தருகிறோம் என்று சொன்னார்களாம்  அதையும் கண்டிப்பாக வேண்டாம் என்று தடுத்து விட்டார். ஐடியில் நல்ல வேலை, நல்ல சம்பளம். 100பவுன், 200பவுன், கார், மற்ற பொருள்களோடு இவருக்கு பெண் கொடுக்க மற்றவர்கள் தயாராக இருந்ததால், வீட்டில், அம்மா, அப்பா, மற்ற உறவுகளுக்கு புரிய வைக்க மிகப் பெரிய போராட்டமே நடந்ததாம். அவர் தாயிடம் நம் வீட்டு பெண்களுக்கு திருமணம் முடித்துக் கொடுக்க நாம் எவ்வளவு சிரமப் பட்டோம் மற்றவர்களும் அப்படித்தானே சிரமப்படுவர்கள் என்று விளக்கி சொல்லி இருக்கிறார். (மேலும், அப்படி மீறி பெண் வீட்டிலிருந்து ஏதாவது பொருட்கள் மண்டபத்திற்கு வந்தால் மண்டபத்திலேயே இருக்கும். வீட்டிற்கு வரக்கூடாது என்று கட்டளை போட்டு விட்டாராம்). 

இவர் மார்க்கத்தை ஒழுங்காக கடைபிடித்து வருவதால் மார்க்கம் சொல்லியபடி பெண்ணின் மார்க்கப்பற்று, நல்ல குணம் இந்த இரண்டையும் அடிப்படையாக வைத்து தன்னுடைய திருமணத்தை அமைத்துக் கொண்டார். (போன வருடம்தான் திருமணம் நடந்தது). (பெண் வீட்டில் வரதட்சணை வாங்காததால்  பிழைக்கத் தெரியாதவன் என்று பட்டமும் இவருக்கு கிடைத்ததாம்).

வரதட்சணை திருமணம்:
என் உறவில் ஒரு திருமணம் நடந்தது. மாப்பிள்ளை தஞ்சாவூர் பக்கம். இங்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்த நாள் முதல் திருமணம் நடக்கும் வரை பெண் வீட்டிலிருந்து எப்படி எல்லாம் வாங்கலாம் என்ற கொள்கைப்பிடிப்போடு இருந்தார்கள் மாப்பிள்ளை வீட்டார்கள். (மாப்பிள்ளை அம்மா பிள்ளையாம், அம்மா பேச்சை தட்டமாட்டாராம். வரதட்சணை பேச்சு வார்த்தை நடக்கும்பொழுது அவருக்குத் தெரிந்தும் மிக அமைதி காத்தார்). மாப்பிள்ளை எதையுமே கண்டுகொள்ளவில்லை. இந்த கல்யாணத்தில் (முதன் முதலில் நான் கேள்விப்பட்டது) பெண்ணின் கழுத்தில் மஞ்சள் கயிற்றில் தாலியும் (இந்துக்கள் தாலி) முஸ்லிம் முறைப்படி(???) கருகமணியும்? கட்டினார்களாம். (பெண்ணின் கழுத்தில் தாலியோடும், கருகமணியோடும் 40 நாளுக்கு மேல் இருக்க வேண்டுமாம் - எங்கிருந்து இந்த பெயர் தாங்கி முஸ்லிம்கள் சட்டம் எடுத்தார்கள் என்று தெரியவில்லை).

(இஸ்லாம் இவர்களுக்கு எந்த அளவுக்கு புரிந்து இருக்கிறது) (மாப்பிள்ளை வீட்டிற்கு 100கிலோ அல்வாவும் சீராக சென்றதாம்).

மாப்பிள்ளையின் பெற்றோர்:
மாப்பிள்ளையை பெற்றவர்கள்; என்றால் இவர்களுக்கு அப்படி என்ன ஒரு அந்தஸ்து வந்து விடுகிறது என்று தெரியவில்லை. பெண்ணை பெற்றவர்கள் இவர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுக்க வேண்டுமாம். ஆண் பிள்ளையை வளர்த்ததில் என்ன பெரிய சாதனை படைக்கிறார்கள் மாப்பிள்ளையை பெற்றவர்கள். மாப்பிள்ளைத்தான் என்ன சாதனை படைக்கிறார்.

காய்கறி கடை, மளிகை கடை முதல் நாம் பயன்படுத்தும் அனைத்து உலக காரியங்களுக்கும் பணத்தை நாம்தாம் கொடுத்து அந்த பொருளை வாங்குகிறோம். இதுதான் உலக நடைமுறை. ஆனால் திருமணம் என்ற பேச்சு ஆரம்பிக்கும்பொழுது மட்டும் இப்படி எந்தவித பண செலவும், உழைப்பும் இல்லாமல், நெஞ்சில் ஈரம் இல்லாமல், உறுத்தல் இல்லாமல் கைநீட்டி வாங்குவது தன்மானத்திற்கு இழுக்கு என்ற நினைப்பு மட்டும் ஏன் வருவதில்லை மாப்பிள்ளையின் பெற்றோர்களுக்கு. (அறியாமைக்காலத்தில்  வாழ்ந்த அரபுகள் கூட பெண்களுக்கு மஹர் கொடுத்தே மணமுடித்திருக்கிறார்கள். ஆனால் நாங்கள் ஓதுகிறோம், ஐந்து வேளை தொழுகிறோம், ஹஜ்க்கு சென்று வந்தோம் என்று சொல்லும் மாப்பிள்ளையின் பெற்றோர்களுக்கு வல்ல அல்லாஹ்வின் அச்சம் இல்லாமல் போனது ஏன்???)

பெண் பிள்ளையை நல்ல முறையில் வளர்ப்பது என்பது மிகப்பெரிய சவாலாகி போய்விட்டது இந்தக்காலத்தில். ஆண் பிள்ளையை வளர்ப்பதை விட பெண் பிள்ளையை வளர்ப்பதில்தான் செலவு அதிகமாகிறது. வளர்ப்பதிலும் சிரமம், பாதுகாப்பதிலும் சிரமம், 17வருடம் 20வருடம் சீராட்டி பாதுகாத்து வளர்த்த பெண்ணின் பெற்றோரிடம் கல்நெஞ்சமும் கரையும் விதத்தில் பேரம் பேசும் மாப்பிள்ளையின் பெற்றோர்களே??? அல்லாஹ்வின் அச்சம் இல்லையா? உங்களுக்கு? கப்ரு வாழ்க்கை, மறுமை வாழ்க்கை உங்களுக்குக் கிடையாதா??? பெண்வீட்டில் வாங்குவது நியாயம்தானா? மாற்றி யோசி மக்களே!

ஐபிஎல் கிரிக்கெட்டில் கிரிக்கெட் வீரர்களை?????? விற்பது போல் என் மகனை உங்களிடம் விற்கிறேன் நல்ல விலை தருவீர்களா??? என்ன விலை தருவீர்கள்??? அந்த வீட்டில் கேட்டு வந்ததது??? இந்த வீட்டில் கேட்டு வந்ததது??? அவர்கள் கேட்டதை விட நல்ல விலை தந்தால் உங்களுக்கே என் மகனை விற்று விடுகிறேன். (கொஞ்சம் அதிகமாக பார்த்து போட்டு கொடுங்கள் - மீட்டருக்கு மேல் ஆட்டோக்காரர் கேட்பது போல்).

பெண்ணின் தகப்பனார் இதற்கு முன் ஆடு, மாடுகளை எல்லாம் விலைக்கு வாங்கினார் அதுவெல்லாம் அவருக்கு விசுவாசமாக சேவை செய்கிறது. (சேவை என்றால்??? பால் தருகிறது, குட்டி போட்டு, கன்று ஈன்று பண வரவிற்கு வழி செய்கிறது) அப்படித்தானே மாப்பிள்ளையையும் விலை கொடுத்து வாங்குகிறார். ஏன் மாப்பிள்ளை மட்டும் விலை கொடுத்து வாங்கிய மாமனாருக்கு விசுவாசமாக சேவை செய்வதில்லை???. இது நியாயமா??? வாயில்லா ஐந்தறிவு ஜீவன் செய்யும் நன்றிக்கடன் - ஆறறிவு மாப்பிள்ளைக்கு இல்லாமல் போனது ஏன்???

மாப்பிள்ளைக்கு ஒன்றுமே??? தெரியாது:
மாப்பிள்ளையின் பெற்றோர்கள், உறவுகள்: பெண் வீட்டில் நாம் பேரம் பேசும் விஷயம் எதுவும் பையனுக்குத் தெரியாது. அவனுக்கு இதெல்லாம் பிடிக்காது. நீங்களும் வெளியில் சொல்லாதீர்கள்.  (முழுப்பூசணிக்காயை எப்படி சோற்றில் மறைக்க முடியும்). அவனுக்குத் தெரிந்தால் விபரீதமாகி விடும். தெரியாது என்பதில் 1% உண்மையும் இருக்கலாம். (மாப்பிள்ளைக்குத் தெரியாது என்ற மர்மத்தை தெரிந்தவர்கள் விளக்கினால் நல்லது).

நிச்சயம் (பரிசம்):
பெண் பார்த்து கொடுக்கல், வாங்கல் ஓரளவுக்கு இருவரும் (மாப்பிள்ளை வீட்டார் வற்புறுத்தியும் - பெண் வீட்டார் வேண்டா வெறுப்பாகவும், நிறைய இடங்களில் மன வேதனையுடனும்) பேரம் பேசி விலை படிந்து ஒத்துக் கொண்ட பிறகு நடக்கும் நிகழ்ச்சி வெளியூர்களில் மாப்பிள்ளை வீட்டார் பெண்ணுக்குத் தேவையான துணிமனிகள் பலகாரங்கள் கொண்டு வந்து பெண் வீட்டில் கொடுத்து விட்டு மோதிரம் போட்டு விட்டு திருமண தேதி நிச்சயம் செய்து விட்டுப் போவார்கள்.

பால்குடம்: (மாப்பிள்ளையை விற்றுவிட்டோம் என்று உறுதி செய்யும் நிகழ்ச்சி)

கடற்கரை ஊர்களில் பால்குடம் என்ற அதிசய கண்டுபிடிப்பு (யார்??? கண்டு பிடித்தது என்று தெரியவில்லை) பெண் வீட்டார் - மாப்பிள்ளை வீட்டாருக்கு பால் குடம் என்ற பெயரில் பழம், பால், பலகாரங்கள் கொண்டு போய் கொடுத்து வருவார்களாம். (இதற்கு 40, 50 ஆயிரம் வரையும் மேற்கொண்டும் செலவாகுமாம்) (பால்குடம் கொடுத்து விட்டால் தெருவில் உள்ளவர்களுக்குத் தெரியுமாம்: அந்த வீட்டு பையனை இந்த பெண் வீட்டுக்காரர்கள் விலைக்கு??? வாங்கி விட்டார்கள் என்று ).

அட, இதில் கூட தர்மம்நியாயம் எதுவும் கடைபிடிக்கப்படுவதில்லை. பெண் வீட்டில் ஒட்டு மொத்தமாக கொள்ளையடிப்பதற்கு பேரம் பேசி விட்டு, அதற்குப் பிறகு இந்த பால்குட நிகழ்ச்சி. நியாயப்படி மாப்பிள்ளை வீட்டார்தானே பெண் வீட்டிற்கு பால் குடம் கொடுக்க வேண்டும். பெண் வீட்டிற்கு  சென்று பெண்ணுக்குத் தேவையான பொருள்களை கொடுத்து திருமண நிச்சயம் செய்து விட்டு வரவேண்டும். மாற்றி யோசி மக்களே!.

Islam is Best. Muslim is worst. ஓர் அறிஞரின் பார்வையில் வெளியான வார்த்தை. அவர் ஆய்வில் இஸ்லாம் நல்ல மார்க்கம் என்று தெரிகிறது. ஆனால் முஸ்லிம்களின் வாழ்வில் இஸ்லாம் வெளிப்படவில்லை என்பது அவரால் காண நேரும்பொழுது இப்படி ஒரு வார்த்தை வெளியாகிறது.

இன்ஷாஅல்லாஹ்! மஹர் சம்பந்தமாக குர்ஆன், ஹதீஸ் ஒளியில் அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

வாசகர்களுக்கு ஒரு கேள்வி: ஆண் பிள்ளையை வளர்ப்பதில் சிரமம் அதிகமா? பெண் பிள்ளையை வளர்ப்பதில் சிரமம் அதிகமா? இருவரையும் வளர்ப்பதில் யாருக்கு செலவு அதிகம் ஆகிறது?

இன்ஷாஅல்லாஹ் வளரும் ...
-S.அலாவுதீன்

27 Responses So Far:

Yasir said...

//கல்நெஞ்சமும் கரையும் விதத்தில் பேரம் பேசும் மாப்பிள்ளையின் பெற்றோர்களே??? அல்லாஹ்வின் அச்சம் இல்லையா? உங்களுக்கு? கப்ரு வாழ்க்கை, மறுமை வாழ்க்கை உங்களுக்குக் கிடையாதா??? பெண்வீட்டில் வாங்குவது நியாயம்தானா? மாற்றி யோசி மக்களே!///

நெஞ்சை பிளந்து கிழிக்கும் வார்த்தைகள்....இழிந்த வரதட்சணை வாங்கும் பெற்றோர்களுக்கும் அதனை அறியாதவன் போல நடிக்கும் பிள்ளைக்கும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும்

Yasir said...

காலைப்பசியாறைக்கு வட்டலப்பம் வைக்காததையும்,கடற்பாசி காய்ச்சாதையும் பெரிது படுத்தி முல்லை பெரியாறு அணைப்பிரச்சனைபோல் ஆக்கும் மூடர்கள் ஒழிவது எந்நாள்

Yasir said...

பெண்பார்ப்பதை செட்டியார் வீட்டில் செய்வதைப்போல் செய்யவேண்டும்....பெண்ணை பார்க்கும் முன் செட்டியார்கள் என்ன செய்வார்கள் தெரியுமா ?....மாப்பிள்ளை குடும்பத்தின் நெருங்கிய உறவினர்கள் ஒரு பத்துபேரை விருந்துக்கு அழைப்பார்கள், அங்கு பெரும்பாலும் அனைத்துவித உணவுகளும் பறிமாறப்பட்டு இருக்கும்...அப்பொழுது மாப்பிள்ளை வீட்டினர் மற்றும் மாப்பிள்ளையின் சாப்பாட்டு ஒழுங்கு எப்படி இருக்கின்றது என்று கவனிக்க 2 பேரை நியமித்து இருப்பார்கள்.....மாப்பிள்ளை அல்லது அவரைச்சார்ந்தவர் எவரேனும் சாப்பாட்டை பார்த்தவுடன் வாயைப்பிளந்து வாணி ஊத்திக்கொண்டு அல்லது சாப்பிடும் போது கிடைச்சுடுடா ஒரு வெட்டு வெட்டு என்ற தொணியில் சாப்பிட்டால் ...அவர்களின் குடும்ப குணநலங்களை புரிந்துகொண்டு...பெண்ணை கொடுக்கமாட்டார்கள்........நாமும் இதேபோல் ...யார் 100, 200 பணியான் வேண்டும் என்று கறாறக கேட்பவர்களுக்கு பெண் கொடுக்காமல்.......

இப்படி வாங்கி திண்பதற்க்கு உங்கள் மகனை கூவாகம் கூத்தாண்டவர் கோவிலுக்கு நேந்து விட்டுருங்க என்று முஞ்சில் அடித்துபோல் சொல்லிவிடவேண்டும்

Yasir said...

காக்கா உங்கள் கேள்விக்கு பதில்
அல்ஹம்துலில்லாஹ்....... பெண் பிள்ளைகளை வளர்ப்பதற்குதான் அதிக சிரமம்/செலவு இருக்கின்றது......”பெண் மக்கள்” இறைவனின் விலையுயர்ந்த பொக்கிஷம், பொக்கிஷத்தை பாதுகாக்க சந்தோஷத்துடன் செலவுகள் செய்துதான் ஆக வேண்டும் ஆனால் அவர்களுக்கு நல்ல ஆண்மகன் கணவனாக அமைந்துவிட்டால் 18 அல்லது 20 வயதிற்க்குமேல் சொல்லிக்கொள்ளும் அளவிற்க்கு செலவு இருக்காது

அதிரை சித்திக் said...

பொண்டாட்டியோட போய்ட்டான் ..என்று புலம்பும்

பெற்றோர்கள் ..பெண் எடுக்கும்போது நல்ல எண்ணத்தோடு

வரதச்சனை இல்லாமல் பெண் எடுத்தால் ..,

மேற்கண்ட புலம்பலுக்கு வேலை இல்லாமல் போயிருக்கும்.,

வரதச்சனையால் வாடிவதங்கி மணமான பின் தான் பெற்ற ஆண் பிள்ளைக்கு

அதே தாய் தான் வர தச்சனை கேட்கிறாள் .,இது தான் கொடுமை ..,

Noor Mohamed said...

//வாசகர்களுக்கு ஒரு கேள்வி: ஆண் பிள்ளையை வளர்ப்பதில் சிரமம் அதிகமா? பெண் பிள்ளையை வளர்ப்பதில் சிரமம் அதிகமா? இருவரையும் வளர்ப்பதில் யாருக்கு செலவு அதிகம் ஆகிறது?//

வளர்க்கும் பெற்றோரையும், வளரும் பிள்ளைகளையும் பொறுத்தே இதற்கு பதில் அமையும்.

பெண் குழந்தைகளை மட்டும் பெற்றவர்கள் அநியாய சடங்குகளின் அவல நிலையை எண்ணி கவலை நிறைந்த வாழ்வை ஆரம்பித்து இறுதியில் இனிய வாழ்வு வாழ்வதையும், ஆண் குழந்தைகளை மட்டும் பெற்றவர்கள் ஆணவம் நிறைந்த வாழ்வை ஆரம்பித்து இறுதியில் அங்குமிங்கும் அழைக்கழிக்கப்பட்ட வாழ்வு வாழ்வதையும் கண்கூடாகப் பார்க்கின்றோம்.

மார்கத்தை மையமாக வைத்து செலவை கணக்கிட்டால், ஆண் பிள்ளைகளை வளர்ப்பதில்தான் செலவு அதிகம். ஆனால்! அந்த ஆண் பிள்ளைகள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரசூலுக்கும் கட்டுப்பட்டு எதிர்காலத்தில் பெற்றோர்களை பேணி நடத்துவார்களேயானால், சிரமத்திற்கும் செலவிற்குமுள்ள கூலியை பெற்றோர்கள் பெற்றுக் கொள்கின்றனர்.

நம்மூரில் எத்தனை பேர் பெற்றோர்களை பேணி நடத்துகிறார்கள்? மாமியார் வீட்டுக்கு விசிட் வரும் மருமகள் துப்பட்டியை கழற்றாமல் 1000 ரூபாய் செலவு பணம் என அகம்பாவத்துடன் மாமியாரிடம் கொடுத்து விட்டு சென்று விடுகிறார்கள். சிலர் மாமியார் வீட்டுக்கு வருவதே இல்லை அதை மாப்பிள்ளையும் கண்டு கொள்வதே இல்லை.

"பெற்றோர்களை பேணி நடத்துங்கள்" எனும் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று நடந்தால் வரதட்சணை ஒழியும், வாழ்வு சிறக்கும்.

ZAKIR HUSSAIN said...

//கடற்கரை ஊர்களில் பால்குடம் என்ற அதிசய கண்டுபிடிப்பு (யார்??? கண்டு பிடித்தது என்று தெரியவில்லை)//

எனக்கும் யார்னு தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் 'அதிராம்பட்டினத்து ஆட்கள்தான்" - ஏனெனில் நான் கல்யாணம் செய்த காலத்தில் இதுபோன்று [ பால்குடம்] ஒரு வார்த்தையே கிடையாது.இப்போது அதிகம் பேசப்படும் வார்த்தையும் இதுதான்.

சேக்கனா M. நிஜாம் said...

பயனுள்ளப் பதிவு வரதட்சனை வாங்க நினைக்கிறவர்களுக்கு.....

வரதட்சனை !

அதிரைப்பட்டினத்தில் உள்ள ஒவ்வொரு முஹல்லாவிலும் உள்ள திருமணப் பதிவேட்டை வாங்கிப் பார்த்தாலே...நம்மாளுவோ எவ்வளவு வாங்கிருக்காங்கிறது தெரிஞ்ஜிடும்...........

Ebrahim Ansari said...

அன்புள்ள சகோதரர் அலாவுதீன் அவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்த முறை உங்கள் சாட்டை தீவிரமாகத்தான் சுழன்று இருக்கிறது. காரணம் உங்கள் எதிரே இருக்கும் குற்றவாளிகள் அப்படி. விழவேண்டிய அடிதான். ஆனாலும் ரோஷம் வருமென்றா நினைக்கிறீர்கள்.?

பால்குடத்தை கண்டுபிடித்தது போல் ஒரு மோர்க்குடத்தையும் கண்டுபிடிப்பார்கள்.

உலகம் முழுதும் போகிறார்கள். ஆனால் உலக அறிவைப்பெருக்கிக் கொள்ளவில்லை. பெண்களின் முந்தானைகளில் முடிச்சாகத் தொங்குகிறார்கள்.

ஆலிம்கள் பெருத்த ஊர் - மாவட்டத்தின் மார்க்கத்தீர்ப்பு வழங்க தகுதி படைத்த ஊர் என்றெல்லாம் மார் தட்டுகிறோம். ஹராமான் கைக்கூலியை கொடுப்பதற்கு ஒரு நிகழ்வை வைத்து அதற்கு ஒரு பாத்திஹாவும் ஆலிம் வாயால் ஓதுகிறோம். ஊர் அறிய மைக் போட்டு மாப்பிள்ளைக்கு பெண் வீட்டார் கொடுப்பது இன்னது என்று மஜ்லீசில் ஊர் பெரிய மனிதர் படிக்கிறார். அதற்கு சாட்சி கைஎழுத்துப்போடுகிறோம்.

இவைகளை நிறுத்தும் தீர்வு எப்போது? யாரால்? ஒரு முடிவு எடுக்கும் கட்டத்தில் இருக்கிறோம். இனியாவது திருந்துவோமா?

sabeer.abushahruk said...

அன்பாகச் சொல்லிப்பார்த்தாயிற்று ஆதரவாகப் பேசிப்பார்த்தாயிற்று ஊஹூம் எந்த மாற்றமுமில்லை.

இனி இந்த பதிவில் சொல்வதுபோல் பளார் பளார் என்று சொல்வதைத்தவிர வேறு வழி இல்லை.

மாறுங்கள் மக்களே!

sabeer.abushahruk said...

உன் கேள்விக்கு பதில் சொல்வதா வேண்டாமா என குழப்பமாயிருக்கிறது.  காரணம், நான் என் குழந்தைகளை வளர்க்கவில்லை. அவர்கள் என்னோடு சேர்ந்து வளர்கிறார்கள்.

உண்ணவும் உடுக்கவும் கொடுத்தலே வளர்ப்பு எனில் நான் உண்ணும்போது உண்டனர்; நான் கொடுத்ததை உடுத்தினர்; என்னோடு வளர்ந்தனர்.

என் பிள்ளைகளை நான் வளர்ப்பது சுமையாக கனக்காததால் இரு பாலரையும் வளர்ப்பதில் எனக்கு எந்த சிரமமும் இல்லை.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

வீரியமிக்க ஏவுகனை தாக்குதல்!

நிச்சயம் ஒருநாள் விடிவு பிறக்கும்.
அதில் உங்கள் பங்கு பெரிதாயிருக்கட்டும்.

அன்புடன் புகாரி said...

அன்பிற்கினிய அலாவுதீன் அவர்களுக்கு,

அன்பும் அமைதியும் அருளப்படட்டும்!

நான் அதிரை நிருபர் வலைப்பூவில் இதுவரை வாசித்துக் கொண்டிருக்கும் அத்தனை கட்டுரைத் தொடர்களிலும் மிக உயர்வானது இந்தக் கட்டுரைத் தொடர்தான் என்று (வரதட்சணை வாங்குபவர்களை அசராமல்) அடித்துச் சொல்வேன்.

ஏனெனில்....
கெட்டுபோன ஒரு சமுதாயத்தை
மாற்ற நினைக்கும் எண்ணத்தைவிட
உயர்ந்த எண்ணம்
வேறு எதுவும் இருக்க முடியாது

அத்திசையில்
நாம் எறியும் கற்களைவிட
சைத்தானுக்கு எறியும் எந்தக் கல்லும்
பெரியதாக இருக்க முடியாது

வரதட்சணை வாங்காவிட்டால் மாப்பிள்ளைக்கு எய்ட்ஸ் போன்று ஏதாவது கொடிய வியாதி இருக்கும் என்று உறுதியாக நம்புபவர்கள்தான் ஏராளமாமே?

இந்தக் கசடுகளைக்
கழுவி எடுக்கக் காலங்களாகலாம்
ஆனால்
கழுவும் பணிமட்டும் ஓயக்கூடாது
ஏனெனில்
அதுதான் யுகபுருசர் ரசூலின் வழி

நிறைய இடங்களில் உங்கள் நகைச்சுவை உணர்வைக் கண்டு மகிழ்ந்தேன். சாட்டையடிதரும் நகைச்சொடுக்குகள் (சேடைச்சொடுக்குகள்) உங்களுக்குச் சிறப்பாக வருகின்றன. வாழ்த்துக்கள்.

நம்மூரில்
மாப்பிள்ளை என்பவன்
அருமை பெருமைகள் நிறைந்த
அழகு ரத்தினத்தை மணமுடிக்க வரும்போது
எதைக் கொண்டுவருகிறான் தெரியுமா
”அதை” மட்டும் கொண்டுவருகிறான்
அவ்வளவுதான்

அன்புடன் புகாரி

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும் அலாவுதீன் காக்கா, 
V
ஊரில் கல்யாண சீஸன், வரதட்சனை திருமணங்களுக்கு  செல்லக்கூடாது என்பதற்காண முன்னெச்சரிக்கையாகவே இந்த பதிவை நான் கருதுகிறேன்.

சரியாண சாட்டையடி....

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

விலை பேசிய மாடு மிரள்வது போல் உள்ள ஆக்கத்திற்கு.தண்ணி காட்ட இன்னும் எம்.எஸ். எம்.நெய்னாவை காணோமே!

// (பெண்ணின் அண்ணன் வாங்கிய பொருள்களை கடையில் கொடுத்து விடலாம் என்று கேட்டபொழுது திருப்பி வாங்கும் பழக்கம் இல்லை என்று சொல்லி விட்டார்களாம், //

வியாபார கொள்கையில் கடைக்காரார் சரியாக இருந்தாலும். வரதட்சணைக்காக பொருள் வாங்கியவர் இஸ்லாமிய கொள்கையில் சரியாக இல்லை என்பதை கோடிட்டு காட்டுகிறது.


இபுராஹீம் அன்சாரி காக்கா சொன்னது.

// பால்குடத்தை கண்டுபிடித்தது போல் ஒரு மோர்க்குடத்தையும் கண்டுபிடிப்பார்கள். //

வெயில் காலத்தில் ஒவ்வொரு ஊரின் முக்கியமான முச்சந்தில் அரசியல் வாதிகள் மோர்குடம் வைப்பதால் நம் சமுதாயம் மோர்குடத்தை விரும்பவில்லை போலும்.

ZAEISA said...

சமீபத்தில் நடந்தது இது,
ஒருவரை மாப்பிள்ளை கேட்டு பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டுக்குப் போய்
பாதி வீடும்,நகையும் தருகிறோம் என்ற பீடிகையுடன் மாப்பிள்ளை கேட்க,அங்கிருந்தவர் என் பிரியம் மட்டுமில்லை குடும்பத்தில் கலந்து பேச வேண்டியுள்ளது எனக்கூறி அனுப்பி வைக்க, மறுநாள், பெண் வீட்டாரே வந்து
சரி சரி முழு வீடே தருகிறோமென ஆஜரானார்கள்.ஆனால்,ஒரு பைசா வாங்காமல் வேறு வீட்டிற்கு மாப்பிள்ளை கொடுத்தார்கள்.

இன்னொன்று, ஒருவர் எந்தவரதட்சனையும் வாங்காமல் நபிவழி திருமணம் செய்தார். பிறகு வரதட்சினை வீடு கேட்டு......மணமுறிவு வரை போய்விட்டது. இந்த கேசுகள் எல்லாம் வேறு எங்கேயும் அல்ல.
காரம்,மணம்,குணம் நிறைந்த நம் அதிரை மாநகரில்தான்.

Anonymous said...

//வாசகர்களுக்கு ஒரு கேள்வி: ஆண் பிள்ளையை வளர்ப்பதில் சிரமம் அதிகமா? பெண் பிள்ளையை வளர்ப்பதில் சிரமம் அதிகமா? இருவரையும் வளர்ப்பதில் யாருக்கு செலவு அதிகம் ஆகிறது?//

சபாஷ் சரியான கேள்வி. எனது கருத்து.

ஆண் ஆனாலும் பெண் ஆனாலும் எல்லாம் நமது பிள்ளைகளே.

அவரவர்களுக்குத்தேவையானதை நாம் செய்யும்போது கணக்குப்பார்க்கவோ “காஸ்ட் ஷீட் “ தயார் பண்ணவோ வேண்டியதில்லை.

செலவு கூடுதல் என்பதற்காக எந்தப் பிள்ளையையும் நாம் ஒதுக்கிவைத்துவிடப்போவதில்லை. பெற்ற மனம் விட்டுக்கொடுக்காது.

ஆனாலும் –

ஆண் மக்களுக்கு அடைக்கலம் தந்து ஆதரித்தால் போதும்.

பெண்மக்களுக்கு போர்த்திக்கொள்ளப் போர்வையும் கொடுக்கவேண்டும்.

ஆண் மக்கள் மருந்துக்கடையில் ஷோ கேஸ்களில் அடுக்கிவைக்கப்பட்ட மருந்துகள் என்றால் பெண்மக்கள் பிரிட்ஜில் வைக்கப்பட்ட மருந்துகள்.

பாதுகாப்புடன் வளர்க்கப்படவேண்டியவர்கள்.

நமது சமுதாயத்தின் கண்ணியம், பண்பாடு பெண்மக்களது நடப்புகளாலேயே அதிகமாக அளவிடப்படுகிறது.

ஆண்மக்கள் கை ஊன்றி கரணம் போட முடியும் பெண்மக்களுக்கு நாம்தான் எல்லாவகையிலும் துணை நின்று பாதுகாக்கவேண்டும்.

இப்படிப்பட்ட தனித்தன்மைகளால் பெண்களுக்கு செலவு அதிகம் ஆவது சுமைதான். ஆனால் அது சுகமான சுமையே. அந்த சுமையை தகப்பனுடன் ஆண்மக்களும் சேர்ந்தே சுமக்கிறார்களே.

ஆனால் ஒன்று,

பெண்பிள்ளைகளின் மேல் நாம் காட்டும் இந்த கரிசனம்தான் நமது வீக்னெஸ். இதைப்பயன்படுத்திதான் அடிமாடுகள் நம்மிடம் அதிகம் விலை கோருகின்றன.

வீடு என்றும், நகை என்றும், மனை என்றும், கர்ப்பம் உண்டாக மருந்து கொடு என்றும், தலைப்பிரசவ செலவு தாய்வீட்டோடு என்றும், பிரசவ செலவு என்றும், காப்பு விடவேண்டுமென்றும் பெண்ணைப் பெற்றோரை ‘கிரில் ‘ செய்கிறார்கள். நாமும் கொட்டி அழுகிறோம்.

பெண்ணுக்கு அதிகம் செலவு என்றால் அது அவர்களது வரதட்சனை, திருமணம் மாமியார் வீட்டுக்கு அழுவதாகவே இருக்க முடியும்.

ஆணுக்கு அதிகம் வரவு என்றால் அது அவர்கள் மூலம் வரும் வரதட்சணை , அவரது மாமியார் வீட்டை பிழிந்து எடுப்பதாகவே இருக்க முடியும்

இரண்டுமே ஹராமனவை. ஒழிக்கப்படவேண்டியவை.

மற்றபடி தம்பி சபீர் அவர்கள் கூறுவதுபோல் எல்லாம் நம் மக்களே. நமது கடைமைக்கு உட்பட்ட காரியங்களில் கணக்குப்பார்க்கத்தேவை இல்லை. – இவை எனது அபிப்பிராயங்கள்.

வஸ்ஸலாம்.

Ebrahim Ansari

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

அன்புச் சகோதரர்கள் : யாசிர், அதிரை சித்திக், நூர் முகமது, ஜாகிர், சேக்கனா நிஜாம், இபுறாஹிம் அன்சாரி, சபீர், ஜஹபர் சாதிக், புஹாரி, தாஜுதீன், லெ.மு.செ. அபுபக்கர், ஜயிசா, தாங்கள் அனைவரின் கருத்துக்களும் மிக மிக வரவேற்கக் கூடியதாக இருந்தது.

காலம் ஒரு நாள் மாறும் பெண் கவலைகள் எல்லாம் தீரும் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அதிரடி ஏவுகணை தாக்குதல் எதுவும் இல்லாமல் பெண்ணை பெற்றவர்களின் கவலையை ஒழிக்க முடியாது.

அன்புச்சகோதரர்கள்: நெய்னா தம்பி, நெய்னா முகமது, அர அல, ஹமீது மீதமுள்ளவர்கள் எல்லாம் கலரி சாப்பாடு சாப்பிட சென்றது போல் தெரிகிறது. விரைவில் வாருங்கள். தங்களின் கருத்திற்காக காத்திருக்கிறேன்.

தங்களின் கருத்திற்கு நன்றி! ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

KALAM SHAICK ABDUL KADER said...

//ஆண் பிள்ளையை வளர்ப்பதில் சிரமம் அதிகமா? பெண் பிள்ளையை வளர்ப்பதில் சிரமம் அதிகமா? இருவரையும் வளர்ப்பதில் யாருக்கு செலவு அதிகம் ஆகிறது?//

ஆண் பிள்ளையை வளர்ப்பதில் சிரமம் அதிகம்; செலவும் அதிகம்!!!!!!!!!!!!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அன்புச்சகோதரர்கள்: நெய்னா தம்பி, நெய்னா முகமது, அர அல, ஹமீது மீதமுள்ளவர்கள் எல்லாம் கலரி சாப்பாடு சாப்பிட சென்றது போல் தெரிகிறது. விரைவில் வாருங்கள். தங்களின் கருத்திற்காக காத்திருக்கிறேன்.//

அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா:

எம்புள்ளைக்கு இதெல்லாம் புடிக்காதும்மான்னு சொன்ன வூடுவ அன்றைய நிலைய நெனச்சுபார்த்து கிட்டே இருந்தேனா..(சுருக்கமா சொல்லனும்னா வேலை) அதான் !

என்னோட அப்பா அடிக்கடி சொல்வது ஞாபகத்திற்கு வருது ! பெண் குழந்தைகள் சூழ்ந்திருக்கும் வீடு கலையாக இருக்கும்னு ! (அந்த அனுபவப் பேச்சும் என்னால் உணரத்தான் முடிந்தது அந்தச் சூழலில் அப்பா அவர்களோடு இருந்த அற்புதமான காலங்களில்)

அன்புடன் புகாரி said...

அன்பிற்கினிய அலாவுதீன் அவர்களுக்கு,

என் பெயரை புஹாரி என்று எழுதி இருக்கிறீர்கள். என் பெயரை புகாரி என்று எழுதினால் ஏதேனும் தவறிருப்பதாய்க் கருதுகிறீர்களா? வெறுமனே கிரந்தம் பயன்படுத்துவதை நான் விரும்புவதில்லை. ஏனெனில் அவை தமிழ் எழுத்துக்கள் இல்லை!

அன்புடன் புகாரி

அலாவுதீன்.S. said...

/// என் பெயரை புஹாரி என்று எழுதி இருக்கிறீர்கள். என் பெயரை புகாரி என்று எழுதினால் ஏதேனும் தவறிருப்பதாய்க் கருதுகிறீர்களா? வெறுமனே கிரந்தம் பயன்படுத்துவதை நான் விரும்புவதில்லை. ஏனெனில் அவை தமிழ் எழுத்துக்கள் இல்லை! ///
*****************************************************************

அன்புச் சகோதரர் புகாரி அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

என் சகோதரியின் மகன் பெயரும் புகாரிதான் அவன் பெயரை புஹாரி என்று எழுதி பழகியதால் எழுத்து (பழக்க) தோஷத்தால் வந்த என் தவறு வருந்துகிறேன். தங்களின் கருத்தில் புகாரி என்று எழுதி இருந்தீர்கள் அதையும் கவனிக்கவில்லை. வரும் காலங்களில் எழுத்துப் பிழை இல்லாமல் தங்கள் பெயரை எழுதுகிறேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி!

இப்னு அப்துல் ரஜாக் said...

//அன்புச்சகோதரர்கள்: நெய்னா தம்பி, நெய்னா முகமது, அர அல, ஹமீது மீதமுள்ளவர்கள் எல்லாம் கலரி சாப்பாடு சாப்பிட சென்றது போல் தெரிகிறது. விரைவில் வாருங்கள். தங்களின் கருத்திற்காக காத்திருக்கிறேன்.//


காக்கா உங்கள் அன்பு அழைப்புக்கு நன்றி.
கலரி சாப்பாடு என்றாலே எனக்கு அலர்ஜி,கொலச்ற்றால்தான் காரணம்.
அநி யில் வரும் கட்டுரைகளில் என் முதல் வோட்டு உங்களுக்குத்தான்,புஹாரி காக்கா சொல்ற மாதிரி (நான் அதிரை நிருபர் வலைப்பூவில் இதுவரை வாசித்துக் கொண்டிருக்கும் அத்தனை கட்டுரைத் தொடர்களிலும் மிக உயர்வானது இந்தக் கட்டுரைத் தொடர்தான் என்று (வரதட்சணை வாங்குபவர்களை அசராமல்) அடித்துச் சொல்வேன்.)
//ஆண் பிள்ளையை வளர்ப்பதில் சிரமம் அதிகமா? பெண் பிள்ளையை வளர்ப்பதில் சிரமம் அதிகமா? இருவரையும் வளர்ப்பதில் யாருக்கு செலவு அதிகம் ஆகிறது?//
ஆண் பிள்ளையை வளர்ப்பதில் சிரமம் அதிகம்; செலவும் அதிகம்!

இப்னு அப்துல் ரஜாக் said...

காக்கா,நெத்தியடின்னு சொல்வாங்களே,அது உங்க இந்த பதிவ சொல்லலாம்.ஆண்மை இல்லாத,பேடிகள்தான் இப்படி வரதட்சணை வாங்குவான்.அநியாயத்துல பெரிய அநியாயம்,இப்போ நகை,பணம் எல்லாம் வேணாம்,வீடு மட்டும் கொடுங்கள் என்று நவீன பிச்சை எடுத்து மனைவியின் வீட்டை அபகரிப்பது.இதனால் மற்ற சகோதர்கள்,சகோதர்களுடைய பங்கையும் விழுங்குவது.இதனால் அல்லாஹ் பிரித்து வைத்துள்ள சொத்து பகிர்மான சட்டத்தை அமுல் படுத்தாமல் ,கபளீகரம் செய்யும் நிலையம் ஏற்படுகிறது.இதனால் நிரந்தர நரகம் ஏற்படும் என்று அல்லாஹ்வின் எச்சரிக்கையை நினைவு கூற கடமை பட்டுள்ளோம்.

மேலும்,இப்படி யாரும் வீடு(வீடும்....) வாங்காமல் இருந்து,முற்றிலும் வரதட்சணை (எந்த பெயரில் வந்தாலும்)இன்றி - தூய்மையாக உள்ளார்களோ -அவர்கள் மட்டுமே வரதட்சணை பற்றி கருத்து கூற வேண்டும் என்பது என் கருத்து,இல்லையெனில் அது முனாபிக் தனமாகிவிடும்.மற்றவர்களுக்கு போதித்து விட்டு,தான் செய்யாமல் இருப்பது,தான் மட்டும் நல்லது செய்வது,மற்றவர்களுக்கு சொல்வது இல்லை போன்ற செயல்கள் நம்மிடம் இருந்தால் திருத்திவிட்டு,நாம் அல்லாஹ்விடம் தவ்பா செய்வோம்.
இன்னும் பல முசீபத்தான காரியங்களில் இருந்து விடுபட,அலாவுதீன் காக்கா அவர்களின் பேனா முனை,போர்வாளாக மாறிட,அல்லாஹ் துணை நிற்பானாக.ஆமீன்

Ebrahim Ansari said...

ASSALAMU ALAIKKUM.

BROTHER AR.AL.

//மேலும்,இப்படி யாரும் வீடு(வீடும்....) வாங்காமல் இருந்து,முற்றிலும் வரதட்சணை (எந்த பெயரில் வந்தாலும்)இன்றி - தூய்மையாக உள்ளார்களோ -அவர்கள் மட்டுமே வரதட்சணை பற்றி கருத்து கூற வேண்டும் என்பது என் கருத்து,இல்லையெனில் அது முனாபிக் தனமாகிவிடும்.மற்றவர்களுக்கு போதித்து விட்டு,தான் செய்யாமல் இருப்பது,தான் மட்டும் நல்லது செய்வது,மற்றவர்களுக்கு சொல்வது இல்லை போன்ற செயல்கள் நம்மிடம் இருந்தால் திருத்திவிட்டு,நாம் அல்லாஹ்விடம் தவ்பா செய்வோம்.//

தம்பி! அர.அல. இது ஜனாப். அலாவுதீன் அவர்கள் அடித்த நெத்தியடி கைமாறும் முன் நீங்கள் அடித்த நெத்தியடி. படிப்பினைகள்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அலாவுதீன் காக்கா, தாமதமான என் கருத்திற்கு மன்னிக்கவும். நமதூரில் வரதட்சிணை எதுவும் வாங்கவில்லை என்று சொல்லலாம். ஆனால் பெரும்பாலும் திருமணத்திற்கு பிறகு பெண் வீட்டில் தான் வசித்து வருகிறோம். அதுவும் இல்லை என் சொந்த வீட்டில் மனைவி மக்களுடன் வாழ்ந்து வருகிறோம் என்று சொல்பவர்கள் கூட. மனைவிக்கு திருமண சமயம் மஹர் கொடுக்காமல் இருந்திருக்கலாம். அல்லது மனைவி வீட்டினரின் பொருட்களை (இதில் பனியான், சாப்பாடு, சகலமும் அடங்கும்) தெரிந்து தெரியாமலோ பயன்படுத்தி இருக்கலாம். அதிரையில் பிறந்த காரணத்திற்காக இப்படி ஏதேனும் ஒரு வகையில் நாம் ( ) இஸ்லாமிய மார்க்க சட்டதிட்டங்களை நிச்சயம் தகர்த்தெறிந்திருப்போம். அப்படி எதுவுமே நடந்திராத பட்சத்தில் அல்லாஹ் அவர்களுக்கு இம்மை, மறுமையின் வாழ்க்கையை சிறப்பாக்கி வைப்பான்.

அப்ப‌டி தூய‌ ப‌ரிசுத்த‌ வாழ்க்கை வாழ்ப‌வ‌ர்க‌ள் ந‌ம் புற‌க்க‌ண்க‌ளுக்குத்தெரியாம‌ல் இருக்க‌லாம். அல்லாஹ்வின் பார்வையிலிருந்து அவ‌ர்க‌ள் விடுப‌ட்டுப்போவ‌தில்லை.

எழுதிக்கொண்டே இருங்க‌ள் காக்கா. இது ஒரு அழ‌கான‌, அருமையான‌ க‌ட்டுரை என்று சொல்வ‌தை விட‌. ச‌முதாய‌த்தில் புரையோடிப்போய் இருக்கும் ந‌ச்சுக்கிருமிக‌ளுக்கு கொடுக்க‌ப்ப‌ட்ட‌ ஆண்ட்டி ப‌யாட்டிக் இன்‍ஜ‌க்ச‌ன் போன்ற‌து.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
கருத்திட்ட அன்புச்சகோதரர்கள்: அபுல்கலாம், நெய்னா தம்பி, அர அல, இப்ராஹிம் அன்சாரி, மு.செ.மு.நெய்னா முஹம்மது அனைவருக்கும் நன்றி! ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு