Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தொட்டால் தொடரும்...! குறுந்தொடர்-5 18

அதிரைநிருபர் பதிப்பகம் | May 30, 2012 | ,

வாழ வைக்கும் பாலை

கொஞ்ச வருடங்களுக்கு முன்னாலெல்லாம் நல்ல பேரீத்தங்கனிகள் உண்ண வேண்டுமானால் யாராவது ஹஜ்ஜுக்குப் போய்வந்து தந்தால்தான் உண்டு.

அதற்காகவே குழந்தைகள் கூட்டம் ஹாஜிகளின் வீடுகளை சுற்றிச் சுற்றி வருவதுண்டு. அரேபியா "சபர்" ஆரம்பித்த பிறகு வீட்டுக்கு வீடு வித விதமான பேரீத்தங்கனிகள் ருசிக்கப்பட்டன. மாடி வீடுகளைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்ட குடிசைவாசிகளின் புதிய புதிய "அரேபிய" வீடுகளைப் பார்த்து "பழைய மாடி வீட்டுக்காரர்கள்" இப்போது பெருமூச்சு விட ஆரம்பித்தார்கள். அரபு நாட்டின் செல்வத்தின் செழிப்பு முஸ்லிம்கள் வாழும் நகரங்களை

மட்டுமல்ல....பட்டி தொட்டிகளையும் எட்டிப்பார்த்து நலம் விசாரித்தது. அதுவரை அரேபியாவுக்குப் போகாமல் போவதற்கு வசதியில்லாமல் இருந்தவர்களும் புறப்பட ஆயத்தமானார்கள்.

இங்கே நன்றியோடு ஒரு செய்தியை பதிவு செய்ய வேண்டும். அது.......

பண வசதியில்லாத ஏழை இளைஞர்கள் அரேபியா போய் சம்பாதிப்பதற்கு வழியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தபோது ஊரிலுள்ள வசதிமிக்க பணக்காரர்களும் உறவுமுறைத் தாய்மார்களும் அந்த ஏழைகளுக்கு வலிய வந்து பண உதவி செய்தார்கள். சிலர் நகைகளை விற்றும் குடியிருந்த வீட்டை விற்றும் அரேபியா சென்றார்கள். அப்புறமென்ன?

பெரும்பாலான முஸ்லிம் ஊர்களில் வசதியும் வாய்ப்பும் வளர ஆரம்பித்தது. கிழிந்த ஆடைகள் காணாமல் போகத்தொடங்கின. கடை வீதிகளில் "அத்தர்" "சென்ட்" வாசனை கம கமத்தது. "ஜக்காத்" வாங்கியவர்கள் கொடுக்க ஆரம்பித்தார்கள். பள்ளிவாசல்கள் புதுப்பிக்கப்பட்டன. 

அல்லது மிகப் பிரம்மாண்டமாய் கட்டப்பட்டன. ஊருக்குள் அது அடையாளமாய், கம்பீரமாய் எழுந்து நின்றது.

சின்னச் சின்ன ஊர்களிலுள்ள "அரேபிய மாப்பிள்ளைகளைகளுக்கு" பட்டணத்து பணக்காரர்களும் (பட்டணம் என்பது கிராமம் அல்லாத இடங்களைக் குறிக்கும்) நகரத்துச் சீமான்களும் பெண்கொடுக்கத் தேடி வந்தார்கள்.திருமண பந்தத்தின் மூலம் உறவுகள் பல இடங்களிலும் பரந்து விரிந்தது. 

புதிது புதிதாய் முஸ்லிம் குடியிருப்புகள் உருவாக ஆரம்பித்தன. 

விளைச்சல் இல்லாத வயல்களும் அரைகுறை விவசாயம் நடந்த நிலங்களும் வீட்டு மனைகளாய் மாறின. மாற்று மத மக்கள் வாழும் இடங்களின் மதிப்பைவிட முஸ்லிம்கள் புதிதாகக் குடியேறிய இடங்களின் விலைகள் பலமடங்கு அதிகமாக இருந்தன. கூட்டுக் குடும்பம் நடத்திய அண்ணன் தம்பிகள் தனித்தனி குடும்பங்களாய் பிரிந்து புது வீடுகளில் வாழ்க்கையை ஆரம்பித்தார்கள். வசதி வாய்ப்பும் புதிதாய் ஒட்டிக்கொண்ட பணக்கார குணநலன்களும் பெற்றோர் மீதான பாசத்துக்கு புதிய பரிமாணங்களை ஏற்படுத்தித் தந்தன. சமுதாயம் அதுவரைக் கண்டிராத புதிய பார்முலா அது.

ஒரு மகன் தாயையும் மற்றொரு மகன் தகப்பனையும் பங்குவைத்து ஆளுக்கொருவராக இழுத்துச் சென்றார்கள். முதுமையில் பசியையும் பட்டினியையும் தாங்க முயாத அந்த"ஏழைத் தகப்பனும் தாயும்" தங்களின் "பணக்கார பிள்ளைகளால்" பிரிக்கப்பட்டு நெஞ்சுக்குள்ளே அழுது நடை பிணங்களாகி விதவைகளைப்போல் வாழ கற்றுக் கொண்டார்கள். 

சமுதாயத்தின் கலாச்சாரமும் வேகமாய் மாறத் தொடங்கியது. பள்ளிவாசல்களிலும் பெண்வீட்டு முற்றத்திலும் நடைபெற்றத் திருமணங்கள் ஆடம்பரமாய் "திருமண மண்டபங்களில்" நடைபெற ஆரம்பித்தன. ஒரு சாயா மிக்சரோடு முடிந்த பெண்வீட்டு விருந்துச் செலவு எடுத்தஎடுப்பிலேயே "பிரியாணி" " நெய்ச்சோறு" என்று விண்ணைத் தொட்டது. கல்யாணத்துக்கு வந்தவர்கள் சுகமாக சாப்பிட்டுச் சென்றார்கள். பெண்ணை பெற்ற ஏழைகள் பெரும் பாடுபட்டார்கள். அரேபியா போய்வந்த பெருமையிலும் இஷ்டம்போல் பணத்தில் புரண்ட கர்வத்திலும் அன்றைய இளைஞர்கள் பலரிடம் அடக்கமும் பணிவும் பறிபோயிருந்தது. சமுதாயத்தில் ஏற்பட்ட ஒரு முக்கிய மாற்றத்தையும் இங்கே தொட்டுச் சென்றே ஆக வேண்டும்.அது -

முக்கியமாக மார்க்க விசயங்களிலும் பல முரண்பாடுகள் தோன்றின. ஜமாத்துக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தவர்கள் "அது சரியில்லை" "இது சரியில்லை" என்று சொல்ல ஆரம்பித்தார்கள். தமிழகத்தின் பல ஜமாத்துகள் உடைந்தன. புது ஜமாத்துகளும் முஸ்லிம் அமைப்புகளும் உருவாகின. இந்த அமைப்புகளைத் தேடி இளைஞர்கள் கூட்டம் ஓடியது. இதன் காரணமாக பல வீடுகளிலும் பிரச்சினைகள் பிரிவினைகள் ஏற்பட்டன. ஒரே ஊரில் இரண்டு மூன்று நாட்கள் பெருநாள் கடைபிடிக்கப்பட்டது. வாப்பாவுக்கு ஒருநாள்....மகனுக்கு ஒருநாள் என்று பெருநாட்களும் வித்தியாசப்பட்டன.

இந்தப் பிரச்சினைகளால் குடும்பங்கள் சில சிதறின. திருமணங்களும் அவரவர் சார்ந்த அமைப்புகளோடு நடைபெற ஆரம்பித்தன. "ஜக்காத்" பணம் எளியவர்களுக்கு கொடுக்கப் படாமல் இயக்கங்களுக்குக் கொடுக்கப் பட்டன. இப்படி ஏராளமான செய்திகளை சொல்லிக் கொண்டே போகலாம். இந்த கட்டுரைக்கு அது கரு இல்லை என்பதால் லேசாக தொட்டுக் காட்டப் பட்டுள்ளது.

எது எப்படி இருந்தாலும் வெளிநாடு செல்லும் சகோதரர்களின் மனநிலை மட்டும் "கசாப்புக் கடைக்கு இழுத்துச் செல்லப்படும் ஆட்டின்" மனநிலையிலிருந்து விடுபடவேயில்லை. விடுமுறை நாட்களில் அவர்கள் சந்தோசமாக நடமாடுவதுபோல் தோன்றினாலும் உள்ளுக்குள் ஒரு துயரத்தின் எரிமலை குமுறிக் கொண்டே இருந்தது. விடுமுறை முடிந்து மீண்டும் அரேபியா போவதற்கு முன்னால் அவர்கள் உடைந்துபோய் அழுவார்கள். மனைவியின் கண்ணீர் அவன் இதயத்தைத் துளைக்கும். அந்த அழுகையும் இதயத்தைப் பிசையும் வேதனையும் வார்த்தைகளில் விவரிக்க முடியாத துன்பத்தை தருவனவாக இருக்கும்.

இதனால் விளைந்த நன்மைகளை கணக்கிடும்போது இந்த வேதனைகள் சகித்துக் கொள்ளக் கூடியவைதான். எப்படி.....

1984 ல் நான் சுஊதியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.தம்மாம் நேப்கோ பேக்டரியில் வேலை. அருமையான அக்காமடேசன். மிக அருமையான நண்பர்கள். பேக்டரி வேலை என்பதால் "ஷிப்ட்" மாறி மாறி வரும். நாங்கள் சொந்தமாக சமைத்துச் சாப்பிடுவது சிரமமாக இருந்தது. அப்போதுதான் ஒரு "சமையல்காரர்" எங்களைத் தேடி வந்தார். அவர் பொதக்குடியைச் சேர்ந்த கண்ணியமிக்க ஒரு ஆலிம். 45 வயது இருக்கும். ஏதோ ஒரு விசாவில் வந்து சரியான வேலை இல்லாமல் அவதிப்பட்டார். நாங்கள் ஆறுபேர் சாப்பிடுவதற்கு அவர் சமையல் செய்து தந்தார்.நாங்கள் கணிசமான ஒரு தொகையை அவருக்குக் கொடுத்தோம். எங்களுக்குத் தெரிந்த நண்பர்களிடமும் சொல்லி வேறு பல சமையல் வேலைகளையும் பெற்றுக் கொடுத்தோம். மரியாதைமிக்க அந்த மனிதர் ஒரு மணி நேரத்தில் எங்களுக்கான சமையலை முடித்து விடுவார்.நேரம் இருந்தால் பல ஹதீஸ்களைக் கூறி விளக்கம் சொல்வார்.

ஒருநாள் அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது...."இப்படி வந்து கஷ்டப் படுறீங்களே...ஊருலே ஏதாவது இமாம் வேலை பார்க்கக்கூடாதா?" என்று கேட்டேன். அவர்..." இல்லை தம்பி...என்னைப்போல ஓதிப் படிச்சவங்க வீட்டிலே வறுமை தாண்டவமாடுது. வெளியே சொல்ல வெட்கப்பட்டு பல நாட்கள் பட்டினி இருந்திருக்கிறோம். எனக்கு அல்லாஹ் மூன்று பெண்பிள்ளைகளைத் தந்திருக்கிறான்...அவர்களை நான் நல்லமுறையில் கட்டிக் கொடுக்க வேண்டும். என்னைப் போன்ற பலர் வேறு வழியில்லாமல் ஊர் ஊராகப்போய் பள்ளிவாசல்களில் பயான் செய்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து கஷ்டப்பட்டு பிள்ளையை கட்டிக் கொடுக்கிறார்கள். எனக்கு அதில் விருப்பமில்லை. என் பிள்ளைகளை நான் சம்பாதித்து என் செலவில் கட்டிக் கொடுப்பேன்...." என்று கூறி கண்கலங்கினார். எங்களில் யாருக்கும் அவரை பிரிய மனமில்லை. எங்களால் இயன்ற உதவிகளை நாங்கள் அவருக்கு செய்தோம். 

இப்படி வறுமையில் வாழ்ந்த சமுதாய அந்தஸ்துள்ள மா மனிதர்களின் மானத்தைக் காப்பாற்றி அவர்களுக்கும் கண்ணியமான வாழ்வை அமைத்துத் தந்து வாழ வைத்ததும் வைப்பதும் இந்த அரபு நாட்டு வருமானம்தான்.

ஊரில் தெருக்கூட்டுவது,கட்டிடக் கூலி வேலை செய்வது,போன்ற சாதாரண வேலைகளைச் செய்ய முன்வராத படிக்காத இளைஞர்கள் அந்த வேலைகளை அரபு நாடுகளில் தயக்கமின்றி செய்தார்கள்.வேலை நேரம் குறைவு என்பதால் பார்ட் டைம் ஆக வேறு வேலைகளும் செய்து பணம் சம்பாதித்தார்கள். துன்பங்களை தூர எறிந்துவிட்டு களத்தில் குதித்த இந்த களப்பணியாளர்களின் குடும்பங்கள் கொஞ்ச வருடங்களில் "ஓகோ" என்று முன்னுக்கு வந்தன. அவர்களின் பிள்ளைகள் நல்ல படிப்பு படித்தார்கள். தமிழக முஸ்லிம்களிடமிருந்த "கல்லாமை" சமுதாயத்திலிருந்து விரட்டப்பட்டது.

அதன்பிறகு படித்தவர்களும் வசதி உள்ளவர்களும் அரேபியப் பயணத்தை மேற்கொண்டனர். சமுதாயம் ஒட்டு மொத்தமாக வளர்ச்சிப் பாதையை நோக்கிப் பயணித்தது. உள்ளூரிலும் உள்நாட்டிலும் பல முஸ்லிம்கள் தொழில் முதலீடுகளை அரேபியாவில் இருந்துகொண்டே செய்தார்கள்.

பல முஸ்லிம்கள் கலை அறிவியல் கல்லூரிகளும் பொறியியல் கல்லூரிகளும் ஆரம்பித்தார்கள். கல்வி வளம் பெருகியது .பணமும் படிப்பும் வளர வளர பிள்ளைகளிடம் நல்ல பண்புகளும் அறிவும் வளர ஆரம்பித்தன. ஓரிருவர் மட்டுமே இன்ஜினியர்களாகவும் டாக்டர்களாகவும் இருந்த ஊர்களில் இன்று எண்ணற்ற இன்ஜினியர்களும் டாக்டர்களும் உருவாகி இருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம்....இந்த அரேபிய உழைப்பால் கிடைத்த வருமானம்.

....சமுதாய விழிப்புணர்வு, சமூக முன்னேற்றம், கல்வி, வேலை வாய்ப்பு, சமூக அந்தஸ்து , அரசியல் பலம் என்று பல்வேறு துறைகளில் முஸ்லிம் சமுதாயம் வெற்றி நடை போடுவதற்கு காரணமாக இருப்பது இந்த "திரை கடலோடியும் திரவியம் தேடும்" ஆர்வம்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. இதற்கு நம்முடைய மார்க்கமும் ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பே வழிகாட்டியிருக்கிறது என்பது ஆச்சரியமான உண்மை. அதை அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறேன்....இன்ஷா அல்லாஹ்.

......இந்த பதிவுகள் நேரம் போகாமல் எழுதப் படக் கூடிய பதிவுகள் அல்ல. நாம் கடந்து வந்த பாதை..... இனி நாம் முன்னேற வேண்டிய பாதை.... 

இவற்றை படம் பிடித்துக் காட்டும் தொடர். இதை படிப்பவர்கள் தயவு செய்து தங்கள் கருத்துக்களையும் தங்கள் அனுபவங்களையும் பதிவு 

செய்தால் அது எனக்கும் நம் அனைவருக்கும் உதவியாக இருக்கும் என்பதை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

( இன்ஷா அல்லாஹ் தொடர்வேன்...)
-அபூஹாஷிமா

18 Responses So Far:

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

தன் மேனி முழுவதும் முள் பதித்த அந்த பெரும் பலாப்பழம் போன்ற அரபு நாட்டு வாழ்க்கையை முறையே மரத்திலிருந்து காலமறிந்து பறித்து நன்கு பழுக்க வைத்து சரியான விரிப்பு தரையில் விரித்து கத்தியில் எண்ணெய் தடவி பக்குவமாக உறித்து அதன் கழிவுகளை நீக்கி தேன்சுளைகளாக‌ தட்டையில் வைத்து கச்சிதமாக எவ்வித குறையுமின்றி இங்கு தன் கட்டுரை மூலம் வழக்கம் போல் அழகுற நமக்கு பரிமாறி இருக்கிறார் சகோ. அபூஹாஷிமா அவர்கள். வாழ்த்துக்கள்...

கஷ்டமான கடந்த காலங்களை நினைக்கயிலே எம் கண்களில் கூட நீர் வற்றி வறண்டு பாலைவனமாகி விடும். ஆயிரம் ஆசைகளுடன் என்னை அரபுநாட்டிற்கு அனுப்பி வைத்த பாசமிகு பெற்றோர்களின், உடன்பிறந்தவர்களின் தேவைகளை கருத்தில் கொண்டும், ஊர் சென்றால் திருமணம் நடந்தேறும் என்பதனாலும் பல இன்னல்களை கூட இலகுவாக எண்ணி தொடர்ந்து நாற்பத்தைந்து மாதங்கள் பிறந்த மண் செல்லாமலேயே வந்த மண்ணில் (மதீனா மாநகரில்) வாழ்ந்து வந்திருக்கிறேன்.

க‌ட்டுரையின் க‌ருவான‌ பேரீத்த‌ம்ப‌ழ‌த்திற்கும் என‌க்கும் நிறைய‌ ச‌ம்ம‌ந்த‌ம் உண்டு. கார‌ண‌ம் நான் அந்த‌ நாற்ப‌த்தைந்து மாத‌ங்க‌ள் செல‌விட்ட‌து உஹ‌த் மலை அருகில் சுற்றிலும் பேரீத்த‌ம‌ர‌ தோட்ட‌த்தின் ந‌டுவே அமைந்திருந்த ஒரு பெரும் பேரீத்த‌ம் ப‌ழ‌ ஏற்றும‌தி நிறுவ‌ன‌த்தில் தான்.

அந்த‌ நேர‌ம் ஊரிலிருந்து வ‌ரும் ஹாஜிக‌ளெல்லாம் அவ‌ர்க‌ள் யாராக‌ இருந்தாலும் அவ‌ர்க‌ளை இருப்பிட‌ம் சென்று காணும் பொழுது உள்ள‌த்திற்கு பெற்றோர்க‌ள் போல‌வும், உற்றார், உற‌வின‌ர்க‌ள் போல‌வும் தான் காட்சி த‌ருவ‌ர். அங்கு பாச‌மும், நேச‌மும், விசாரிப்பும் ஒன்றோடொன்று கூடி குதூக‌ல‌ம‌டையும். நீண்ட‌ கால‌ம் இருந்து வ‌ந்த‌ ப‌கைக‌ளெல்லாம் வெருண்டோடிப்போகும். இறுதியில் வ‌ரும் ம‌ர‌ண‌த்தை நினைத்தே எல்லாம் இல‌குவாகிப்போகும்.

நிறைய‌ எழுத‌ ச‌ங்க‌திக‌ள் இருந்தும் பின்னூட்ட‌மாத‌லால் இத்துட‌ன் நிறுத்திக்கொள்கிறேன்.

இப்னு அப்துல் ரஜாக் said...

சகோதரர் அபூ ஹாஷிமா அவர்களின் கட்டுரை நம் முஸ்லிம் சமூகத்தின் உண்மை நிலையை படம் பிடித்துக்காட்டும் கண்ணாடி என்றால் மிகை அல்ல.மறுப்பதற்கு ஒன்றும் இல்லை,உங்கள் கட்டுரையில்.மாஷா அல்லாஹ்.

அரபு நாட்டுபயணம் மூலம் கிடைத்த பயன்களில் ஒன்றாக நான் நினைப்பது ,நிறைய பேருக்கு மார்க்கம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ளவும்,செயல் படவும் உதவின.தொழுகைகள் கடைபிடித்தலும்,இன்னபிற வணக்கங்களும் பெருகின.(இல்லையென்றால் தரீக்கா,தர்ஹா மூட நம்பிக்கைகள் இன்னும் வீரியம் பெற்றிருக்கும்).அல்லாஹ் இது மூலமும் நம்மைக் காப்பாற்றினான்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஒரு நேரம் கம்பீரமாக காட்சி தந்து குடும்பத்தை மார்க்கத்துடன் கட்டுக்கோப்பாக நடத்தி வந்த வீட்டின் அப்பா, பெரியம்மா போன்றோர்கள் தன் கடைசி கால படுக்கையில் இருந்து கொண்டு வாழ்த்தி அந்த வல்லோனிடம் து'ஆச்செய்து என்னை அரபு தேசத்திற்கு வழியனுப்பி வைத்தார்கள். ஒரு வாரத்திலேயே உலகில் இமாலய மாற்றங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து விடும் இச்சூழ்நிலையில் உலகம் எனக்காக நாற்பத்தைந்து மாதங்கள் அப்படியே சும்மா இருந்து விடுமா? கொண்டு சென்று விட்ட‌து அவ‌ர்க‌ளையும் த‌ன்னுட‌ன்........

ஊர் வந்திறங்கி வீட்டில் நோக்கினேன். அவர்கள் ஆட்சி புரிந்த இடம் வெறும் வெற்றிடமாகவே இருந்தது என் கண்களோரம் கண்ணீரை மட்டும் விட்டு விட்டுச்சென்றது. அதற்கு பகரமாக புது வரவுகளாக என் தங்கை பிள்ளைகளை அந்நேரம் கண்டேன்.

நிச்ச‌ய‌ம், இது எனக்கு மட்டுமல்ல‌ யாரெல்லாம் ஆர‌ம்ப‌ கால‌ம் முத‌ல் இன்று வ‌ரை அர‌பு தேச‌ங்க‌ளிலும், பிற‌ அய‌ல் நாடுக‌ளிலும் வாழ்ந்து வ‌ருகிறார்க‌ளோ அவ‌ர்க‌ள் ஓவ்வொருவ‌ருக்குப் பின்னும் ஒரு பெரும் சோக‌மும், சுக‌மும் நிறைந்த‌ வ‌ர‌லாறு புதைந்தே கிட‌க்கும் என்ப‌து திண்ண‌ம்.

உருண்டோடிய வாழ்க்கையில் புரட்டிப்போடப்பட்ட விடயங்கள் எத்தனை? எத்தனை?

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//இப்படி வறுமையில் வாழ்ந்த சமுதாய அந்தஸ்துள்ள மா மனிதர்களின் மானத்தைக் காப்பாற்றி அவர்களுக்கும் கண்ணியமான வாழ்வை அமைத்துத் தந்து வாழ வைத்ததும் வைப்பதும் இந்த அரபு நாட்டு வருமானம்தான்.//

உண்மை தான்...

போக்கிரியாக இருந்தவர்கள்கூட பிழைப்புக்காக வெளிநாடு சென்று மார்க்க ஞானம்பெற்று ஊருக்கு வந்து தன் குடும்பத்தை ஸிர்க் பித்அத்களிலிருந்து விலகியவர்கள் நிறைய உண்டு, இதை பற்றியும் கொஞ்சம் விரிவாக எழுதுங்களேன்...

ஏன் இதை சொல்லுகிறேன் என்றால் இன்னும் இந்த கந்தூரி என்னும் கூத்தாட்டங்களுக்கு நிதி உதவி செய்கிறவர்கள் ப்லர் வெளிநாட்டில் வாழும் அன்பு நேசங்களே...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அரபுலகம், அதிரைக்கு தந்த மாற்றங்கள் பற்றிய அருமையான பக்குவத்துடன் கூடிய வரலாற்றுப் பதிவு!

Yasir said...

எழுத்தில் பாஸிட்டிவ் உணர்வைக்கொண்டு வருவது என்பது எளிதான காரியம் அல்ல ஆனால் உங்கள் கட்டுரையில் அதனை பல இடங்களின் கொண்டுவந்து மனதுக்கு தெம்பு ஊட்டுகின்றீர்கள்.....உங்கள் அனுபவங்களும்,எழுத்துக்களும் எங்களையும் சமுதாயத்தையும் பண்படுத்தும் என்றால் அது மிகையல்ல..கம்பீரமாக தொடருங்கள்

sabeer.abushahruk said...

சகோ. அபூஹாஷிமா,

ஏற்கனவே பலர் தத்தமது கோணங்களில் சொல்லி முடித்த சபுராளி வாழ்க்கையைத் தாங்கள் தனியொரு பானியில் சொல்லி வருவது புதிதாகவும் ட்டச்சிங்காகவும் இருக்கிறது.

தொடர வாழ்த்துகள்.

Shameed said...

பாலைவன பணம் பாய்ந்து செழிப்பான நமது ஊர்களில் கப்சாவும் சுட்ட கோழியின் வாசமும் இருந்தது போக தற்போது மேற்குலக பணம் பாய்ந்து K.F.C. ம் பர்கரும் ஊரில் மணக்க ஆரம்பித்துள்ளது

Ebrahim Ansari said...

ஜனாப். எம். எச். ஜகபர் சாதிக் அவர்கள் சொன்னது

//அரபுலகம், அதிரைக்கு தந்த மாற்றங்கள் பற்றிய அருமையான பக்குவத்துடன் கூடிய வரலாற்றுப் பதிவு! //

இந்த ஆக்கத்தின் பதிவாளர் நண்பர் அபூ ஹஷிமா அவர்கள் அதிரையை சார்ந்தவர்கள் அல்ல. குமரி மாவட்டத்தின் கோட்டாறு என்ற ஊரைச் சேர்ந்த்தவர்கள் ஆவார்கள். இவர்கள் குறிப்பிட்டிருக்கிற காட்சிகள் குமரியிலிருந்து தொடங்கி தமிழகத்தின் அனைத்து ஊர்களுக்கும் பொருந்தும் காட்சிகளே. இந்த ஆக்கத்தின் வரிகள் நமது இன்றைய சமூகத்தின் நாடித்துடிப்புகளாகும்.

ZAKIR HUSSAIN said...

அரபு நாடுகளில் நம் மக்கள் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் நம் ஊர்களில் ஏற்பட்ட மாற்றங்களை கிராபிக்ஸ் இல் மாறுவது மாதிரி அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இப்ராஹிம் அன்சாரி காக்கா அவர்கள் சொன்னதிலிருந்து:-

சலாம் காக்கா!

அபூஹாசிமா அவர்களைப் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி.

//அரபுலகம், அதிரைக்கு தந்த மாற்றங்கள்//
கட்டுரையாளர் சொன்ன கருத்து தமிழகத்துக்கே பொருந்தும் என்றாலும் குறிப்பாக நம்மூருக்கு உகந்த கட்டுரை என்பதால் அதிரைக்கும் என்ற கருத்தை தான் மனதால் நினைத்து எழுதினேன். மெய்யாலுமே 'ம்' விடுபட்டது பின் தான் அறிந்தேன்.

ALAVUDEEN said...

அரபு நாட்டுபயணம் மூலம் கிடைத்த பயன்களில் ஒன்றாக நான் நினைப்பது ,நிறைய பேருக்கு மார்க்கம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ளவும்,செயல் படவும் உதவின.தொழுகைகள் கடைபிடித்தலும்,இன்னபிற வணக்கங்களும் பெருகின.(இல்லையென்றால் தரீக்கா,தர்ஹா மூட நம்பிக்கைகள் இன்னும் வீரியம் பெற்றிருக்கும்).அல்லாஹ் இது மூலமும் நம்மைக் காப்பாற்றினான்.
மாஷா அல்லாஹ்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//......இந்த பதிவுகள் நேரம் போகாமல் எழுதப் படக் கூடிய பதிவுகள் அல்ல. நாம் கடந்து வந்த பாதை..... இனி நாம் முன்னேற வேண்டிய பாதை....

இவற்றை படம் பிடித்துக் காட்டும் தொடர். இதை படிப்பவர்கள் தயவு செய்து தங்கள் கருத்துக்களையும் தங்கள் அனுபவங்களையும் பதிவு //

முற்றிலும் உண்மை !

நிறையபேர் என்னிட(மு)ம் கேட்டது இவ்வளவு நாள் இல்லாத ஞானம் ஏன் இப்பொது என்றும், எழுத நேரம் இருக்கிறது அதான் இப்படி எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என்று(ம்)....

பாவம்! அப்படிக் கேட்டவர்களின் இயலாமை என்றே நினைத்துக் கொள்வேன், அதையெல்லாம் தாண்டி வந்தவர்கள்தான் இங்கே நம் சமுதாய மக்கள் மீது கொண்ட கோபம், அனுதாபம், மீட்டெடுக்க போராட வேண்டி கவலையுடனும் அக்கரையுடனும் தங்களது பொன்னான நேரத்தை ஒதுக்கி எடுத்துச் சொல்கின்றனர்....

சகோதரர் அபூஹாஷிமா... இந்த ஆக்கம் சென்றடையும் இடங்களும் இதயங்களும் ஏராளம், தொடருங்கள் இன்ஷா அல்லாஹ்... எழுத்துப் பனிக்கு எங்களின் முழு ஆதரவு என்று தொடரும்...

அப்துல்மாலிக் said...

வெளிநாட்டில் சம்பாதித்துக்கொண்டு இதனால் நாம் இழந்தது எவ்வளவு, என்னவெல்லாம், கஷ்டம் இப்படிதான் நிறைய படித்தும் எழுதியும் இருக்கிறோம், இந்த கட்டுரை ஒன்றுதான் மாற்றமே, இந்த சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம் திரைகலோடியும் திரவியம் தேடு என்ற பழமொழிதான், அதை அழக விவரிச்சிருக்கீங்க சகோ...

Ebrahim Ansari said...

Brother M.H.J.

Wa alaikkumussalam.

Noted Thank you.

abu haashima said...

அஸ்ஸலாமு அலைக்கும் நண்பர்களே...
நண்பர் நைனா முஹம்மது அவர்களின் பெயர் என் பாட்டனார் பெயர். அவர் ஒரு நாவலர்... நண்பர் அவர்களின் எழுத்திலும் ஒரு ஈர்ப்பு இருக்கிறது.பெயரில் "முஹம்மதை" வைத்திருக்கும் அவர்கள் "முஹம்மது ரசூலுல்லாஹ்" அவர்களின் மண்ணில் 45 மாதங்கள் தொடர்ந்து வாழும் பெரும் பேறு பெற்றிருக்கிறார்கள் . ஆனால் அவர்களின் மற்றொரு வாக்கியம் நெஞ்சை கனக்க வைத்து விட்டது...
ஊருக்குத் திரும்பி வரும்போது பாசத்துக்குரிய பெரியவர்கள் மறைந்துபோன துயரம் "அந்த" வெற்றிடமாய் மனதை அழுத்துகிறது. அல்லாஹ் பொறுமையை தரப் போதுமானவன்.இதுபோன்ற அனுபவங்கள் வெளிநாட்டிலிருப்போரின் நெஞ்சங்களை நொறுக்கிவிடும் என்பதில் சந்தேகமில்லை.
இது ஒட்டுமொத்த தமிழ் முஸ்லிம்களின் வெளிநாட்டு வாழ்க்கை குறித்த ஆய்வுதான். எந்த ஒரு ஊருக்கு மட்டுமுள்ள வரலாறு அல்ல. இந்தத் தொடரைப் படித்து பின்னூட்டமிட்டுள்ள நண்பர்களின் ஆர்வமும் வாழ்த்தும் மனதுக்கு உற்சாகத்தை தருகிறது. அவர்களுக்கெல்லாம் என் இதயம் நிறைந்த நன்றி. இந்த குழுமத்தில் என் எழுத்துக்களும் பதிவாவதை எனக்குக் கிடைத்த வரமாக எண்ணி மகிழ்கிறேன். அதற்கு வாய்ப்பளித்த ஆசிரியர் குழுவும் நண்பர் இப்ராஹீம் அன்சாரி அவர்களும் என் நன்றிக்கு உரியவர்கள்.
புது உற்சாகத்தோடு இன்ஷா அல்லாஹ் அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்......

abu haashima said...

அஸ்ஸலாமு அலைக்கும் நண்பர்களே...
நண்பர் நைனா முஹம்மது அவர்களின் பெயர் என் பாட்டனார் பெயர். அவர் ஒரு நாவலர்... நண்பர் அவர்களின் எழுத்திலும் ஒரு ஈர்ப்பு இருக்கிறது.பெயரில் "முஹம்மதை" வைத்திருக்கும் அவர்கள் "முஹம்மது ரசூலுல்லாஹ்" அவர்களின் மண்ணில் 45 மாதங்கள் தொடர்ந்து வாழும் பெரும் பேறு பெற்றிருக்கிறார்கள் . ஆனால் அவர்களின் மற்றொரு வாக்கியம் நெஞ்சை கனக்க வைத்து விட்டது...
ஊருக்குத் திரும்பி வரும்போது பாசத்துக்குரிய பெரியவர்கள் மறைந்துபோன துயரம் "அந்த" வெற்றிடமாய் மனதை அழுத்துகிறது. அல்லாஹ் பொறுமையை தரப் போதுமானவன்.இதுபோன்ற அனுபவங்கள் வெளிநாட்டிலிருப்போரின் நெஞ்சங்களை நொறுக்கிவிடும் என்பதில் சந்தேகமில்லை.
இது ஒட்டுமொத்த தமிழ் முஸ்லிம்களின் வெளிநாட்டு வாழ்க்கை குறித்த ஆய்வுதான். எந்த ஒரு ஊருக்கு மட்டுமுள்ள வரலாறு அல்ல. இந்தத் தொடரைப் படித்து பின்னூட்டமிட்டுள்ள நண்பர்களின் ஆர்வமும் வாழ்த்தும் மனதுக்கு உற்சாகத்தை தருகிறது. அவர்களுக்கெல்லாம் என் இதயம் நிறைந்த நன்றி. இந்த குழுமத்தில் என் எழுத்துக்களும் பதிவாவதை எனக்குக் கிடைத்த வரமாக எண்ணி மகிழ்கிறேன். அதற்கு வாய்ப்பளித்த ஆசிரியர் குழுவும் நண்பர் இப்ராஹீம் அன்சாரி அவர்களும் என் நன்றிக்கு உரியவர்கள்.
புது உற்சாகத்தோடு இன்ஷா அல்லாஹ் அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்......

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு