Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

எழுது ஒரு கடுதாசி... ! 54

அதிரைநிருபர் பதிப்பகம் | June 29, 2012 | , , ,


கிராமங்களில்தான் ஒரு நாட்டின் கலாச்சார உயர்வுகள் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றன. கிராமங்களில் வளர்ந்தவர்கள், பெருநகரத் தெருக்களில், கிராமிய மணங்கமழ தம் பழக்க வழக்கங்களையும் வாழ்க்கை நெறிகளையும் நினைவுகூர்ந்து உரையாடும்போதும், அவை தொடர்பான எண்ணங்களை பரிமாறிக் கொள்ளும்போதும், பெருநகரத்துச் செயற்கை நாடகங்களால் உள்ளே செத்துக்கிடக்கும் அத்தனை உணர்வுகளும் உயிர்பெற்று மீண்டும் புலர்ந்துவிடுவது இன்றும் நம்மை நம் அடிப்படைப் பண்பு மாறாமல் பாதுகாத்துவருகின்ற வரம். 

இங்கே ஒரு கிராமத்து மகன், புகைப்படத்தையும் உறவினர்களின் பரிந்துரைகளையும் மட்டுமே முழுமனதுடன் ஏற்று, ஒரு வண்ண நிலவை வாழ்க்கைத்துணையாக்க நிச்சயம் செய்கிறான். உரையாடுவதோ கடிதம் வரைவதோ ஏற்றுக்கொள்ளப்படாத அந்த கிராமத்தில், பெருநகர வாழ்க்கையின் தூண்டுதலால், அவளிடம் கடித சுகம் கேட்டு அவன் எழுதும் கடிதமே இந்தக் கவிதை.

அவர்களின் நாட்டுப்புற நடையிலேயே நடக்கிறது.


நேத்துவர எம்மனச
நெலப்படுத்தி நானிருந்தேன்
பாத்துவச்ச தாய்தம்பி
பருசமுன்னு சொன்னாங்க


வேத்துவழி தெரியாம
விழுந்தேன் நான் வலைக்குள்ள
ஊத்தாட்டம் எம்மனசு
ஒன்னெனப்பா பொங்குதிப்போ


பாழான எம்மனசு
பனியே ஒன் வசமாயி
நாளாவ நாளாவ 
நீ நடக்கும் நெலமாச்சி


மாளாத கனவாச்சி
மங்காத நெனப்பாச்சி
தாளாத தனிமையில
தீராத ஆசையில


வாடாத மருக்கொழுந்தே
வத்தாத தேனூத்தே
போடேண்டி கடுதாசி
பொல்லாத மனசமாத்தி


போடாட்டி எம்மனசு
புண்ணாகிப் போகூன்னு
மூடாத முழுநிலவே
மச்சினனத் தூதுவிட்டேன்


ஆடாத மனசோட
அசையாத மொகத்தோட
போடாம கடுதாசி
புதிராக இருந்துட்டே 


வாடாத எம்மனசும்
வாடிப்போய்க் கெடக்குதடி
கூடாத காரியமா
குத்தமுன்னு யாருசொன்னா 


தாத்தா சொன்னாரா
தாய்மாமஞ் சொன்னாரா
பூத்த புதுப் பூவாட்டம்
போட்டாவக் கொடுத்தாங்க


கூத்தாத் தெரியலியா
கூடாது கடிதமுன்னா
வேத்தாளு ஆனேனா
வீணாயேன் மறுத்தாங்க 


யாருவந்து கேட்டாங்க
ஏம்பரிசம் போட்டாங்க
ஊரயெல்லாங் கூட்டிவச்சி
ஒன்னெனப்பக் கொடுத்தாங்க


நீரயள்ளி எறைச்சாக்கா
நெலம் ஈரம் ஆவாதா
தூரநாடு வந்ததால
தொலையுதுன்னு போவாதா 


தேர இழுத்தும் இப்போ
தெருவசந்தங் காணலியே
பூவப் பரிச்சும் இப்போ
புதுவாசம் வீசலியே


நாளமெல்லப் போக்காத
நரகத்துல தள்ளாத
யாருநின்னு தடுத்தாலும்
எழுதமட்டும் தயங்காத


நாந்தான ஒங்கழுத்தில்
நல்லமல்லி மாலையிடுவேன்..
வாந்தாலும் எங்கூட
வாடினாலும் எங்கூட


நாந்தானே ஒனக்கூன்ன
நாடறிஞ்ச சேதிய நீ
ஏந்தாமத் தூங்காத
எழுது ஒரு கடுதாசி


-அன்புடன் புகாரி

54 Responses So Far:

sabeer.abushahruk said...

வாசிக்கும் வழியெல்லாம் உடன் வருகிறது ஒரு ரிதம். நேசிக்கும் உணர்வுகளில் நெஞ்சை அள்ளுகிறது மொழி. யோசிக்க நேரமின்றி வேகம் தொத்துகிறது வாசிப்பில்.

கலக்கலான பாடல் அன்புடன் புகாரி.

வாழ்த்துகளும் வரவேற்பும்.

sabeer.abushahruk said...

//நாந்தானே ஒனக்கூன்ன
நாடறிஞ்ச சேதிய நீ
ஏந்தாமத் தூங்காத
எழுது ஒரு கடுதாசி//

எழுதிட்டாப் போச்சு
என் வீட்டு மகராசா
ஒங்களாட்டம் தமிழெழுத
எங்களுக்குத் தெரியாதே

ஒட்டுப் போட்டாவது -என்
ஓட்டைத் தமிழ் வாசியுங்க
கண்ணாலம் முடிஞ்சபொறவா
என் கடிதம் வாசியுங்க.

*******


என்
அன்புக் கணவா
உன்
அன்பு கனவா?

உனை யெனக்கு
மணம் பேசிய
தினம் வீசிய
வசிய மணம்
நினை விருக்கா?

அந்நாள் முதல்
என் வீட்டுப்
பின் முற்றத்தில்
முருங்கைப் பூவில்
முல்லை மலர் வாசம்
வேப்பமரக் காற்றும்
தேனினிக்க வீசும்!

முற்றத்து தோட்டத்தில்
என்னையே
உற்றுப்பார்த்த
ஒற்றை ரோஜாவுக்கு
உன் பெயர் வைத்தேன்!

குட்டிச்சுவர் அணிலும்
சிட்டுக் குருவிகளும்
கரையாத காகமும்
கருந்திரள் மேகமும்
சித்தெறும்பு சாரையும்
சிறியதொரு தேரையும்
என
எல்லாமும் நீயாகி
என்னையேப் பார்க்க
வெட்கி முகம் சிவந்தேன்!

தோழிகள் தவிர்த்து
கோழிகள் வளர்த்தேன்
தென்னையின் நிழலிலும்
உன்னையே உணர்ந்தேன்!

உன்னையே உண்டு
உன்னையே அருந்தி
உனக்காக உடுத்தி
உன் நினைவில் உழன்று
உன்
நினைவென்ற வட்டத்துள்
என்
உலகம் சுருங்கியது!

கொல்லைப்புறக் காற்றில்
கனத்த உன்
நினைவுகளைச் சுமந்தேன்!

வெயிலும் தூறலும்
கலந்த ஒரு
வானவில் தோரண நாளில்
திருகாணித் தோடணிந்த -என்
மருதாணிக் கை பிடித்தாய்!

என்
பெயர் முதல்
உயிர் வரை
அத்தனையிலும்
உனை இணைத்தாய்...
என்
சொல் முதல்
பொருள் வரை
அர்த்தம் மற்றிப்போட்டாய்!

காலையும் மாலையும்
கனவும் நினைவும்
இருத்தலும் இறத்தலும்
இரவும் உறவுகளும்
எல்லாம்
மங்கலாய்த் தெரிய
நீமட்டும் நிலைத்தாய்
நெஞ்சமெல்லாம் நிறைந்தாய்!

உன்னுயிரை
எனக்குள் விதைத்து
என்னுயிரை
உன்னோடு கொய்து
எங்கோ போனதும்...

கொல்லைப்புறம் எனக்கு
தொல்லை தரலானது
அணில் முதல் ஆடு வரை
இணையோடு நின்றது!

திரைகடலோடி நீ
திரவியம் தேட
அலைபேசி எனக்கு
ஆறாம் விரலானது!

கணினித் திரையில்
இனி நீ தெரிவாய்
கற்கண்டு மொழியில்
காதினில் இனிப்பாய்!

மற்றுமொரு
வானவில்தினம்
வரும்வரை
உயிரிலும்
வயிற்றிலும் உனையே சுமந்து
காத்திருக்கிறேன்!

காத்திருப்பதுதான்...
கவுரவமான காதல்!

-- சபீர்
-Sabeer.abuShahruk

sabeer.abushahruk said...

//மச்சினனத் தூதுவிட்டேன்//

கிரவுனு,
இவிங்க எல்லாருமே இப்டித்தானோ!!!

அதிரை சித்திக் said...

வந்தாலும் என்கூட ..

வாடினாலும் என்கூட ..>>>>>>>>>>

சொல்லாத சோகத்த..சட்டுன்னு

சொல்லிட்டீக ,,வாடிய மல்லிகளை

வந்து நானும் காடாடுமா ..

கூட கூடையா கொட்டட்டுமா ..

பாவி மக்கா ..பாத்ததுமே வாக்க பட்டு மோசம் போன

வெளிநாட்டு வேலையின்னு ஆசைப்பட்டு

அத்தனையும் தொல்ச்சிபுட்டா ..

வாந்ததுதான்கொஞ்ச காலம்

வாடினது நெடுங்காலம்

கடுதாசி காத்திருப்பில் சுகமுண்டு

கள்ளத்தனம் இருந்தாலும்

காதல் அதில் இருந்ததையா ..

கடுன்சொல்லும் கேக்காது ..

கேட்டாலும் காத்தில் அது பறந்திடுமே

வார்த்தைகளால் கொள்ளும் அலை பேசி

வந்ததினால் வாழ்கையே புளிக்கிதையா ..

crown said...

நேத்துவர எம்மனச
நெலப்படுத்தி நானிருந்தேன்
பாத்துவச்ச தாய்தம்பி
பருசமுன்னு சொன்னாங்க


வேத்துவழி தெரியாம
விழுந்தேன் நான் வலைக்குள்ள
ஊத்தாட்டம் எம்மனசு
ஒன்னெனப்பா பொங்குதிப்போ

----------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். நான் பாட்டுக்கு என் சோலின்னு இருந்திருந்தேன் . திடுதிப்புன்னு பரிசம் போட்டது என் சொந்தம் .
வேறு வழி?
தெரியாமலேயே உன் அன்பின் வலையில் விழுந்துவிட்டேன்.
ஊற்றெடுத்து உன் நினைப்பே பொங்குதடி!
(ஆத்தாடி இப்படி ஒரு மண் வாசனை தெம்மாங்கு கேட்டு நாளாச்சி! நம்ம அண்ணாச்சி புகாரி அள்ளி தெளித்திருக்கார். எல்லாம் மண்ணின் வாசம் மாறாமல். களத்தின் தன்மை கண்டு விளைச்சிருக்கார். பாராட்டும், பரவசமும்.

அதிரை சித்திக் said...

எனக்கு ஒரு ஆசை ...

கவிஞர்கள் நிறைந்த இத்தளத்தில்

தொடர் கவி நடத்தினால் என்ன .

ஒருவர் எழுதி அதிலிருந்து மற்றவர்

தொடர் ஓட்டம் போல தொடர் கவி

எப்படி என் ஆவல் ...

crown said...

பாழான எம்மனசு
பனியே ஒன் வசமாயி
நாளாவ நாளாவ
நீ நடக்கும் நெலமாச்சி

-----------------------------------------------------
அடப்பாவி பெண்ணே உன்னாலே நித்தம், நீ என நான் கி(க)டக்க! நீ நிலம் தண்னில் நடந்தாலும் என் நெஞ்சில் உன் பாதம் பதியுதடி ஏன் என்னை இப்படி ஆக்கிபுட்டே! ஆரமுதே!
---------------------------------
இங்கே சொல் கம்பீரமாய் நடைபோடுகிறது.

crown said...

தாத்தா சொன்னாரா
தாய்மாமஞ் சொன்னாரா
பூத்த புதுப் பூவாட்டம்
போட்டாவக் கொடுத்தாங்க


கூத்தாத் தெரியலியா
கூடாது கடிதமுன்னா
வேத்தாளு ஆனேனா
வீணாயேன் மறுத்தாங்க
-----------------------------------------------------------
போட்டோவ கொடுத்தவக ! காகிதம் போட மறுத்ததென்ன ? எனக்கு வியப்பாக இருப்பதுடன் போட்டோவை பார்த்து மனம் பூரிக்கும் வேளையில் உன் கையெழுத்து ஓவியம் பாராமல் மனம் இங்கே வாட!
போட்டாவ போட்டவங்க என்னை இப்படி ஏன் போட்டாங்க பரிதவிக்கும் நிலையிலே!

crown said...

தேர இழுத்தும் இப்போ
தெருவசந்தங் காணலியே
பூவப் பரிச்சும் இப்போ
புதுவாசம் வீசலியே
-----------------------------------------------
அட இப்படி வாட விட்டுடாங்களே! பூவபறித்தும் இப்ப புதுவாசம் வீசலேயே! நல்ல சொல்லாடல் கவிஞரே! காகிதப்பூ (கடிதம்)இல்லாமல் கொடியில் அன்றலர்ந்த மலரும் வாசம் வீசவில்லை . நல்ல உவமானம். வாழ்த்துக்கள்.

crown said...

நாந்தானே ஒனக்கூன்ன
நாடறிஞ்ச சேதிய நீ
ஏந்தாமத் தூங்காத
எழுது ஒரு கடுதாசி
--------------------------------------
நீ என்னை கடிந்து கொண்டாலும்
எழுது ஒரு கடுதாசி அதை நான் என்றும் நேசிக்கும்படி,
உன் கடிதமெனும் ஓவியத்தில் வர்ணமாய் நானே குழைந்திடுவேன்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அன்புடன் கவிக்கலக்கல்!

ஊரே வண்ண நிலவை தடுத்திட்டாலும்
ஒன்று சேரும் காலம் எப்ப வருமோ யென
உறைந்து கிடக்கும் உள்ளமும் உடனடியாய் உருகும்
உம் கவியின் உருக்கத்தால் கடித சுகம் கிடைக்கும் கட்டாயம்.

Unknown said...

இலக்கியம்......!

crown said...

sabeer.abushahruk சொன்னது…

//மச்சினனத் தூதுவிட்டேன்//

கிரவுனு,
இவிங்க எல்லாருமே இப்டித்தானோ!!!
---------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.
அதானே?
இனி மைத்துனன் என்பதை மைதூதன் என கொள்வோமா? கவிஞர்களே சொல்லுங்களே!

அன்புடன் புகாரி said...

அன்புச் சகோக்களே கவிகளே,

அப்படியே தேனில் விழுந்த திராட்சையாய்த் திக்கு முக்காட வைக்கின்றன உங்களின் பின்னூட்டங்கள்.

ஒவ்வொரு பின்னூட்டமும் ஓர் கவிதை. இந்த இழை நிறைத்து கவிதைமழை பொழிவதைக் காண ஆனந்தமாய் இருக்கின்றது.

உலக அரங்கில் கவிதைகள் அதிகம் எழுதுவோரும், அதை அதிகம் நேசிப்போரும் இஸ்லாமியர்கள்தாம் என்று ஒரு குறிப்பு சொல்கிறது.

ஒருமுறை எழுத்தாளர் சுஜாதா சொன்னார், ‘மட்டனுக்கும் கவிதைக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? எங்கு பார்த்தாலும் கவிஞர்கள் முஸ்லிம்களாகவே இருக்கிறார்களே?”

மூத்தசகோ ஆய்வாளர் அகமது அவர்களின் ஆய்வுக் கட்டுரைகளில், அரபு நிலத்தில் யுத்தகாலத்திலும்கூட கவிதைகள் பொழிந்ததையும் அவற்றை நபிகள் நாயகம் ரசித்ததையும் வாசிக்கும்போது புல்லரிக்கத்தானே செய்கிறது?

அன்புடன் புகாரி

Unknown said...

அன்பர்களே,

இந்தக் கவிதை நான் இப்போது எழுதியதல்ல. என் பழைய கவிதை. ஜமீல் நாணாவெல்லாம் அப்போதே வாசித்தக் கவிதை.

குத்துமதிப்பாக எந்த ஆண்டு இக்கவிதை எழுதப்பட்டிருக்கலாம் என்று எவராவது யூகிக்க முடியுமா?

அன்புடன் புகாரி

ZAKIR HUSSAIN said...

வைரமுத்து, நா.காமராசன், மு.மேத்தா, கவிக்கோ வரிசையில் அடுத்து இருப்பவர்கள் அதிராம்பட்டினத்தோடு ஒன்றியவர்கள் மட்டுமே!!!

சபீர் உன் வரிகளான "
" வேப்பமரக்காற்றும் தேனினிக்க வீசும்" என்ற வார்த்தையை கண்டுக்காம போனால் இளமையை தொலைத்து புலம்பும் வம்சத்தோடு ஒன்றிப்போய்விடுவோனோ?

இதுபோன்ற தரமான கவிதைகளை நான் ஹிக்கின்பாதம்சிலும் , திருவள்ளைக்கேனியிலும், தி.நகர் புத்தக கடைகளிலும் தேடி வாசித்தவன்.

இப்போது என்வீட்டு வாசல் வரை வந்து கொடுத்துவிட்டுப்போன புகாரி ஒரு உபகாரி.

Unknown said...

அன்புக்கவி சபீர்,

>>>>என்
அன்புக் கணவா
உன்
அன்பு கனவா?

உனை யெனக்கு
மணம் பேசிய
தினம் வீசிய
வசிய மணம்
நினை விருக்கா?<<<<<

கவியரங்கத்தில் கவிதை பாடும் கலை தெரிந்தவராய் நீங்கள் இருக்க வேண்டும். அதற்கான அமர்க்கள நடை தெரிகிறது இங்குமங்குமாய்.

>>>>>வெயிலும் தூறலும்
கலந்த ஒரு
வானவில் தோரண நாளில்
திருகாணித் தோடணிந்த -என்
மருதாணிக் கை பிடித்தாய்!<<<<<

ஆகா, அமோக கற்பனை அநியாயத்துக்கு அழகான கவிநயம். வாசிக்கவே மகிழ்ச்சியாய் இருக்கிறது.

அதிரை நிருபருக்குள் வர முதலில் ஒரு காரணம்தான் இருந்தது. இப்போது காரணங்கள் வளர்ந்தவண்ணமாய் இருக்கின்றன.... நன்றி அதிரை நிருபருக்கு. அதிரை என் அம்மா ஊர் என்று மெதுவே பெருமைப்படத் தொடங்குகிறது மனது.

அன்புடன் புகாரி

Unknown said...

===================
//மச்சினனத் தூதுவிட்டேன்//

கிரவுனு,
இவிங்க எல்லாருமே இப்டித்தானோ!!!
===================

ஆனால், இந்த மச்சினன் பயலுவ எல்லாரும் கவுத்துருவானுவளே, சரியா :)

Unknown said...

>>>>ஆத்தாடி இப்படி ஒரு மண் வாசனை தெம்மாங்கு கேட்டு நாளாச்சி! நம்ம அண்ணாச்சி புகாரி அள்ளி தெளித்திருக்கார். எல்லாம் மண்ணின் வாசம் மாறாமல். களத்தின் தன்மை கண்டு விளைச்சிருக்கார். பாராட்டும், பரவசமும்<<<<

பாராட்டும்போதும் கவிதையாகவே பாராட்டும் கிரவுன் வாழ்க வாழ்க

அன்புடன் புகாரி

Unknown said...

அன்புச்சகோ சித்திக்,

>>>>எனக்கு ஒரு ஆசை ...கவிஞர்கள் நிறைந்த இத்தளத்தில் தொடர் கவி நடத்தினால் என்ன .ஒருவர் எழுதி அதிலிருந்து மற்றவர் தொடர் ஓட்டம் போல தொடர் கவி எப்படி என் ஆவல் ... <<<<<

இப்படித்தான் வடநாட்டில் கஜல் கவிதைகள் உருவாகின. போட்டிக் கவிதைகளாகவே அத்தனையும் இருக்கும். சுவைக்குச் சொல்லவே வேண்டாம்.

வா வா வா என்பார்கள் தமிழிலும் அதற்குப் பொருள் அருமைதானே?

அன்புடன் புகாரி

Unknown said...

>>>>பூவபறித்தும் இப்ப புதுவாசம் வீசலேயே! நல்ல சொல்லாடல் கவிஞரே! காகிதப்பூ (கடிதம்)இல்லாமல் கொடியில் அன்றலர்ந்த மலரும் வாசம் வீசவில்லை<<<<

சட்டுனு இப்படி கவி ஆய்வில் கலக்குறீர்களே, உங்களுக்குத்தான் எத்தனை கவிமனம்? வாழ்க கிரவுன் உங்கள் கவிநேயமனம்.

அன்புடன் புகாரி

Unknown said...

>>>>ஊரே வண்ண நிலவை தடுத்திட்டாலும்
ஒன்று சேரும் காலம் எப்ப வருமோ யென
உறைந்து கிடக்கும் உள்ளமும் உடனடியாய் உருகும்
உம் கவியின் உருக்கத்தால் கடித சுகம் கிடைக்கும் கட்டாயம்.<<<<

சகோ சாதிக், இது ரொம்பப் பழைய கவிதை. இப்ப நான் கிழ போல்ட் உடம்பால்தான், மனதால் அல்ல :) என் மன வயது பதிலேழு சொச்சம்

அன்புடன் புகாரி

Unknown said...

>>>>Adirai Ahmad சொன்னது…
இலக்கியம்......! <<<<<

அடடா..... ஒரே ஒரு சொல்..... பரந்த அந்த வானத்தை அப்படியே கொண்டுவந்து பூமியில் கொட்டிவிட்டீர்களே? எப்படி இது சாத்தியம் ஆனது?

ஐயா உங்கள் வரவும் என் கவிதைக்கான பாராட்டும் நான் பெற்ற பாக்கியம். ஓர் உண்மையைச் சொல்ல வேண்டு இங்கே, இக்கவிதையை என் முதல் கவிதையாய் இடுவதற்கு நீங்கள் ஒரு முக்கிய காரணம். இதை நான் அதிரை நிருபர்களிடமும் சொன்னேன்.

அன்புடன் புகாரி

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.இன்று என் உயிரின் வால் நீண்டு கொண்டே போகிறது! நேச(ர்)கவி அண்ணன் புகாரியின் மனம் "'புளகாங்கிதம்"அடைந்தது அவர் எழுதிய புகழ் காகிதமாம் கடுதாசி அடைந்த அளவு!எல்லாம் அல்லாஹ்வின் அருளே என்மேல் கொண்ட வாழ்துக்களான வாழ்க. வாழ்க போல் நீங்களும் பல்லாண்டு வாழ்க!அன்பென்னும் அமுதம் அது கொடுத்தோர்க்கும் இன்பம் வார்க்கும். அதை பெற்றோர்க்கும் இன்பம் சேர்க்கும்.

Unknown said...

>>>>இனி மைத்துனன் என்பதை மைதூதன் என கொள்வோமா? கவிஞர்களே சொல்லுங்களே!<<<<

அன்புச் சகோ கிரவுன், நோய்விட்டுப் போனேன்.

ஏனெனில் நான் வாய்விட்டுச் சிரித்தேன். ஆனால் இந்த நகையிலும் எத்தனை கவி?

அன்புடன் புகாரி

crown said...

அன்புடன் புகாரி சொன்னது…

>>>>இனி மைத்துனன் என்பதை மைதூதன் என கொள்வோமா? கவிஞர்களே சொல்லுங்களே!<<<<

அன்புச் சகோ கிரவுன், நோய்விட்டுப் போனேன்.

ஏனெனில் நான் வாய்விட்டுச் சிரித்தேன். ஆனால் இந்த நகையிலும் எத்தனை கவி?

அன்புடன் புகாரி
-----------------------------------------------------------
நன்றி அண்ணன் அவர்களே! நகையின் நடுவில் சில முத்துக்களும். வைரங்களும் இருக்கத்தானே செய்யும்.?

Unknown said...

>>>>இப்போது என்வீட்டு வாசல் வரை வந்து கொடுத்துவிட்டுப்போன புகாரி ஒரு உபகாரி.<<<<<

அன்புச் சகோ சாகிர், இப்போது உங்கள் அற்புத ஆக்கங்களின் ரகசியம் புரிந்துபோய்விட்டது. கன்னா பின்னாவென்று வாசிக்கும் பழக்கம் உள்ளவர் நீங்கள். நான் பொறாமைப் படுகிறேன். என் பணிச்சுமையால் நான் வாசிப்பது குறைவு. ஆனால் வாசிக்க வேண்டும் என்ற ஆவல் மிக அதிகம்.

உங்கள் பாராட்டு எனக்குள் தேனூட்டு!

அன்புடன் புகாரி

Unknown said...

அன்புச் சகோ கிரவுன்,

சொல்லுக்குச் சொல்,வரிக்கு வரி தூள் பரத்துகிறீர்கள். உங்கள் மனம் அப்படி இலவம் பஞ்சு, அது தரும் ஏகப்பட்ட ’பஞ்ச்’சு!

crown said...

அன்புடன் புகாரி சொன்னது…

அன்புச் சகோ கிரவுன்,

சொல்லுக்குச் சொல்,வரிக்கு வரி தூள் பரத்துகிறீர்கள். உங்கள் மனம் அப்படி இலவம் பஞ்சு, அது தரும் ஏகப்பட்ட ’பஞ்ச்’சு!
---------------------------------------------------------------------
ஆரா(ய்ந்து)ஞ்சி பார்த்தா அத்துனையும் ஆரஞ்சு நு சொல்வீங்க ! ஹாஹாஹாஹா சும்மா தமாசு

Ebrahim Ansari said...

நல்ல மழை. கவி மழை. ஒரு தென்மேற்கு பருவக் காற்று மழை ஒரு வடமேற்குப் பருவக்காற்று மழை. எல்லாம் ஒரு சேர பொழிகிறது. நனைகிறேன். மழையில் நனைந்து கொண்டே இருக்கும்போது ஒரு கை பெய்யும் மழைத் தண்ணீரைப் பிடித்துக்குடிப்பதில் ஒரு சுகம் , சுவை தெரியும். அதுபோல இருக்கிறது எனக்கு.

ஒருபக்கம் அன்புடன் புகாரி, மறுபக்கம் என் அன்பின் சபீர், சகோதரர்.சித்தீக் , வார்ர்த்தைகளின் வடிவமைப்பாளர் கிரவுன் இப்படி ஒரு பட்டாளமே இந்தக்காலை வேளையில் பரிமாறும் இந்த கவி விருந்து இந்த நாளை மிக சிறப்பான நாளாக்கி இருக்கிறது.

நான் கவிதைகளின் ரசிகன். இன்று எனக்கு செம வேட்டை.

அனைவருக்கும் பாராட்டுக்கள்.

crown said...

Ebrahim Ansari சொன்னது…

நல்ல மழை. கவி மழை. ஒரு தென்மேற்கு பருவக் காற்று மழை ஒரு வடமேற்குப் பருவக்காற்று மழை. எல்லாம் ஒரு சேர பொழிகிறது. நனைகிறேன். மழையில் நனைந்து கொண்டே இருக்கும்போது ஒரு கை பெய்யும் மழைத் தண்ணீரைப் பிடித்துக்குடிப்பதில் ஒரு சுகம் , சுவை தெரியும். அதுபோல இருக்கிறது எனக்கு.

ஒருபக்கம் அன்புடன் புகாரி, மறுபக்கம் என் அன்பின் சபீர், சகோதரர்.சித்தீக் , வார்ர்த்தைகளின் வடிவமைப்பாளர் கிரவுன் இப்படி ஒரு பட்டாளமே இந்தக்காலை வேளையில் பரிமாறும் இந்த கவி விருந்து இந்த நாளை மிக சிறப்பான நாளாக்கி இருக்கிறது.

நான் கவிதைகளின் ரசிகன். இன்று எனக்கு செம வேட்டை.

அனைவருக்கும் பாராட்டுக்கள்.
-----------------------------------------------------
மழையை ஏந்தும் மழலைப்போல் குதூகலம் உங்களுக்கு எனக்கோ மலையே மழையை ஏந்தும் குதூகலம்
நான் மழலை என்பதும் நீங்கள் மலை என்பதும் உண்மைதானே!!

அன்புடன் புகாரி said...

>>>>நல்ல மழை. கவி மழை. ஒரு தென்மேற்கு பருவக் காற்று மழை ஒரு வடமேற்குப் பருவக்காற்று மழை. எல்லாம் ஒரு சேர பொழிகிறது. நனைகிறேன். மழையில் நனைந்து கொண்டே இருக்கும்போது ஒரு கை பெய்யும் மழைத் தண்ணீரைப் பிடித்துக்குடிப்பதில் ஒரு சுகம் , சுவை தெரியும். அதுபோல இருக்கிறது எனக்கு.<<<<>

அட நவீன கவிதை சாயலில் ஒரு வாழ்த்தா? சரியாப்போச்சு இங்கே எல்லோரும் கவிஞர்களா??? நான் அம்பேல்!

நன்றி சகோ இப்றாகிம் அன்சாரி!

அன்புடன் புகாரி

Ebrahim Ansari said...

முதல் கவிதையைப் பாராட்டுவதா? கவிதைக்குப் பின்னூட்டம் கவிதையாகவே வருவதைப் பாராட்டுவதா? முன்நூட்டக்கவிதையையே தூக்கி சாப்பிடும் பின்நூட்டாக்கவிதைகளை எழுதுவோரைப் பாராட்டுவதா ? வேண்டாம் யாரையும் பாராட்ட வேண்டாம். இந்த சுவைகளை நமக்குத்தரும் வல்லமையை அவர்களுக்குத்தந்துள்ள எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி செலுத்திவிடுவோம். அல்லாஹு அக்பர்.

crown said...

Ebrahim Ansari சொன்னது…

முதல் கவிதையைப் பாராட்டுவதா? கவிதைக்குப் பின்னூட்டம் கவிதையாகவே வருவதைப் பாராட்டுவதா? முன்நூட்டக்கவிதையையே தூக்கி சாப்பிடும் பின்நூட்டாக்கவிதைகளை எழுதுவோரைப் பாராட்டுவதா ? வேண்டாம் யாரையும் பாராட்ட வேண்டாம். இந்த சுவைகளை நமக்குத்தரும் வல்லமையை அவர்களுக்குத்தந்துள்ள எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி செலுத்திவிடுவோம். அல்லாஹு அக்பர்.
------------------------------------------------------------
அல்லாஹுக்கே எல்லாப்புகழும்

KALAM SHAICK ABDUL KADER said...

நடுநிசி நேரத்துல
நானுந்தான் உறங்கல
கடுதாசி வரும்வரை
கதவையும் திறக்கல

என்னெஞ்செ புரிஞ்சவரே
எழுதுங்கக் கடுதாசி
மின்னஞ்சல் வேணாங்க
மின்னலாய் மறைஞ்சுடுமே

வாசக் கதவை மூடிவிட்டு
வாசிப்பேன் உன் கடுதாசி
நேசக் கதவை திறந்துவச்சு
நெஞ்சுக்குள்ளே பூட்டிவச்சு

மண்ணுக்குள் உழுதாக்கி
மறைச்சு வச்ச விழுதாக்கி
எண்ணத்தை எருவாக்கி
என்னையே கருவாக்கி

கடுதாசி பூ தந்தாய்
காகிதப் பூ ஆனாலும்
தொடுநேசிப்பு உணர்ந்தேனே
தொடரும் மன வாசனையில்..

கண்ணுக்குள் வாழுமென்
கண்ணான மச்சானே
பெண்ணுக்குள் மறைஞ்சுள்ள
பொக்கிசமாய் வச்சானே

உண்”மை”யால் நிரப்பிய
உன்கடுதாசி என்பேனா
உண்மையில் மனசாய்
உள்ளதென காண்பேனா?

அழியாத காகிதம்
அதுவென் இதயம்
கிழியாத அதன்மேலெ
கிறுக்கினாய் உன்கடிதம்

அழியாத ஓவியம்
அழகான காவியம்
விழியோர முத்தம்
விழிக்கும் உணர்வின் சத்தம்

உன்கடுதாசி கவிதை
உள்ளத்தினுள் விதை
உன்கடுதாசி கதை
உரசி உணர்வூட்டும் சதை!

படுதாயின்னு பரிதாபமாய்ப்
பாடுவதாய்ப் படிக்கின்றேன்;
கடுதாசி என்னோடு
கதறுவதாய்த் துடிக்கின்றேன்!

தூக்கத்தைக் கலைச்சுப்புட்டு
தூரத்தில் இருப்பவரே!
ஏக்கத்தை விதைச்சுப்புட்டு
ஏனுங்க கடுதாசி?

பாயும் பழமும்
பார்த்தென சிரிக்குது
நோயும் நோவும்
நித்தமுமென அரிக்குது

கடுதாசி வேகத்திலெ
கடிதாக வாங்க மச்சான்
படுத்தாலும் தூக்கமில்லா
பரிதாபம் ஏங்க மச்சான்?

Ebrahim Ansari said...

கோடை மழையை காணவில்லையே என்று குடையை கையில் வைத்துக்காத்திருந்தோம். வந்து விட்டது கவியன்பன் கவி உருவில் .

நெறியாளர் அவர்களே!

இனியும் என்ன யோசனை? சகோதரர் சித்தீக் அவர்கள் முன் மொழிந்து , அன்புடன் புகாரி அவர்கள் வழி மொழிந்துள்ள கவித்தொடரை ஆரம்பிக்க?

sabeer.abushahruk said...
This comment has been removed by the author.
KALAM SHAICK ABDUL KADER said...

//கோடை மழையை காணவில்லையே என்று குடையை கையில் வைத்துக்காத்திருந்தோம். வந்து விட்டது கவியன்பன் கவி உருவில் //

நேசிப்புக் குரியவரின் நாட்டுப்புறக் கவிதையை
வாசித்ததும் என்னுள்ளும் வாடைக் காற்று
யோசித்தேன் அருவியாய்க் கொட்டின வரிகள்
யாசித்தேன் மின்சாரம் தடையின்றி இருக்கவே

ஏனோ.

பாதியெழுதி படித்துப் பார்ப்பதற்குள்
மீதியெழுத முடியாமல் மின்சாரம்
தடைபட்டுப் போனதால் தாமதம்
நடைகட்ட முடியாமல் நான் தவிக்க

மின்சாரம் வந்ததும் மின்னலாய் மின்னஞ்சலில்
என்சார்பில் இக்கவிதைப் பின்னூட்டம்
மரபுக்கவிஞர் அஹ்மத் எனும் அறிஞர்
உரக்கச்சொல்லிய ஓர் சொல்லே எனையும்

”இலக்கியம்” எனும் வரப்புக்குள்
கலக்கும் நாட்டுப்புற நாற்றங்காலை
பதியமிட வைத்தது பக்குவமாய்
பதிந்துவிட்டேன் இப்பக்கமாய்

sabeer.abushahruk said...

கவியன்பன்,
தலைமைக்கவி தாமதமா வரலாமா? நீங்க வர நேரமானதால் எனக்கு பிரத்யேகமாக வந்த தங்களின் துடிப்புகளைப் பதிந்து விட்டுப் பார்த்தால் தாங்கள் வந்துவிட்டதை தங்களின் பின்னூட்டம் காட்டியது. எனவே, நான் பதிந்த தங்கள் கவிதையை எடுத்துவிட்டேன்.

தங்கள் கடிதத்தில் மொத்தமும் விருந்து எனினும் அதிலிருந்து ஒரு சோறு பதம் பார்க்க....

பாயும் பழமும்
பார்த்தென சிரிக்குது
நோயும் நோவும்
நித்தமுமென அரிக்குது

crown said...

அன்புடன் புகாரி சொன்னது…

அன்பர்களே,

இந்தக் கவிதை நான் இப்போது எழுதியதல்ல. என் பழைய கவிதை. ஜமீல் நாணாவெல்லாம் அப்போதே வாசித்தக் கவிதை.

குத்துமதிப்பாக எந்த ஆண்டு இக்கவிதை எழுதப்பட்டிருக்கலாம் என்று எவராவது யூகிக்க முடியுமா?

அன்புடன் புகாரி
--------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். 1985?எழுதியிருப்பீங்களா?ஒரு கனிப்புதான்.

KALAM SHAICK ABDUL KADER said...

//உன்னுயிரை
எனக்குள் விதைத்து
என்னுயிரை
உன்னோடு கொய்து
எங்கோ போனதும்..//

கவிவேந்தர் சபீர்! “உணர்வின் ஓசை” என்பது கவிஞர்கட்கும்- கவிதாயினிகட்கும் (குறிப்பாக அன்புடன் புகாரியின் மாணவியும் என் தங்கையுமான நீரோடை மலிக்கா ஃபாரூக்)ஒரே எண்ண ஓட்டத்தில் ஓடுவதில் ஒற்றுமை காண்கிறேன்!உங்கள் கவிதைகளில் குழந்தையின் ஏக்கம்; நட்பின் ஏக்கம், மனைவியின் ஏக்கம் கருவாக அமைவதால் உங்கள் மனமும் ஏக்கங்களின் கூடாக இருப்பதும் உணர்கிறேன். அதனாற்றான் உங்கள் கவிதைகள் உருக்கம் எனும் நெகிழ்வை உருவாக்கும்!!

தாமதம் என்பது எனக்கு விருப்பமில்லாத ஒன்று. உங்களின் பின்னூட்டம் (”பொய்” பற்றியக் கட்டுரைக்கு)படித்து மறுமொழி இடும் வரை தடையின்றி இருந்த மின்சாரம் எனது இக்கவிதை பாதி வரை இருந்து விட்டு நின்று விட்டதால் தாமதம். ஊர் வந்து இணைய இணைப்புக் கிட்டாமல் என் இதயத் துடிப்பு வேகமாகியும் இணையம் வேகமாய்க் கிட்டாமல் தவிப்பு!கிட்டினாலும், கைக்கு எட்டி வாய்க்கு எட்டாமல்:
1) மகனார் பயன்படுத்த எடுத்துக் கொள்ளும் நேரம்;
2) பெயரன் (2 வயது) எடுத்துக் கொள்ளும் நேரம்;
3) இடை இடையே மின் தடை எடுத்துக் கொல்லும் நேரம்

இதனால் “தாமதம்” என்பது எனக்குப் பிடிக்காத ஒன்று என் மீது சுமத்தப்பட்ட ஒரு வேண்டாத சாபமாய் ஆனதும் எனக்குக் கோபம்!

தலைமைக் கவிஞனாய் 11/05/2012 அன்று துபை வானலை வளர்தமிழ் மன்றத்தில் 33 கவிஞர்களை மரபுப்பாவால் அழைத்து கவியரங்கம் நடாத்திக்
கொடுத்த பொழுதும்,
நட்சத்திரக் கவிஞன் என்று துபை சங்கமம் தொலைக்காட்சியில் இலங்கை காப்பியக்கோ ஜின்னா ஷர்ஃபுதீன் வாப்பா அவர்களால் கவரவிக்கப்பட்ட பொழுதும்
மற்றும் அமீரகத்தின் அனைத்துத் தமிழ்ச்சங்கங்களின் விழாக்களின் பங்களிப்புகளில் எனக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்ட பொழுதும்

குறிப்பாக,கணினித் தமிழறிஞர் “கணீர்” குரலின் சொந்தக்காரர் ஜெமீல் காகா அவர்களைப் பாராட்ட துபை பூங்காவுக்கு வருகை தந்த பொழுதும்

எனது பிழைப்பிற்குரிய நான் மதிக்கும் என் தொழிலுக்குரிய அலுவலகத்தில்
வருகைப் பதிவு இடுவதிலும்

“தாமதம்” என்பதே கிடையாது என்பதன் மூலம், என்னால் தாமதம் ஏற்படாது; ஆனால் ”பவர் கட்” போன்ற இக்கட்டானா நிலைமைக்கு அடியேன் பொறுப்பாக மாட்டேன்.

Ebrahim Ansari said...

எனக்கென்னவோ அன்புடன் புகாரி அவர்களின் கவிதைக்கு வயது இருப்பதாக தோன்றவில்லை. என்றைக்கு எழுதி மலர்ந்து இருந்தாலும் இன்று மலர்ந்த மலராகவே தோன்றுகிறது.

KALAM SHAICK ABDUL KADER said...

//குத்துமதிப்பாக எந்த ஆண்டு இக்கவிதை எழுதப்பட்டிருக்கலாம் என்று எவராவது யூகிக்க முடியுமா?//

நீங்களும் நானும் மும்பை பாஷா ட்ரவல்ஸில் பாஸ்போர்ட் கொடுத்துவிட்டு ஒரே லாட்ஜில் இருந்த ஆண்டு 1980 = அப்பொழுது கவிதை எழுதுவதை நான் அவதானிக்கவில்லை

நீங்களும் ஜெமில் நாநாவும் தம்மாம் எனும் ஊரில் இருந்த பொழுதும், நீங்கள் கவிப்பேரர்சு போல் வெள்ளை ஜிப்பாவுடன் கையில் ஏட்டுடன் கவிதைகள் எழுதியதும்;குறிப்பாக உங்களின் திருமண அழைப்பிதழில் புதுக்கவிதை எழுதினீர்கள் (”மனமெனும் மணமேடையில்” என்ற வரிகள் என்னைக் கவர்ந்தன; என்னை புதுக்கவிதை எழுத அழைத்ததும் உங்கள் அழைப்பிதழ் தான்)அந்த ஆண்டு 1984-1985 என்று நினைக்கிறேன்

Unknown said...

இமாம் ஷாஃபி(ரஹ்)பள்ளி பாடத்திட்டம்: அடுத்த பதிவிற்கான முன்பதிவு
http://adiraipost.blogspot.in/2012/06/blog-post_29.html

இமாம் ஷாஃபி (ரஹ்) பள்ளியின் பாடத்திட்டம் ஒரு ஆய்வு! முந்தையப் பதிவின் தொடர்ச்சி...
http://adiraipost.blogspot.in/2012/06/blog-post_30.html

Unknown said...

>>>>வாசக் கதவை மூடிவிட்டு
வாசிப்பேன் உன் கடுதாசி
நேசக் கதவை திறந்துவச்சு
நெஞ்சுக்குள்ளே பூட்டிவச்சு<<<<<

அளவின்றி பொழியும் இப்படியான கவித்தேன்மழை எத்தனைக் குடை பிடித்தாலும் உள்ளுக்குள் அல்லவா வந்து பொழிகிறது. நன்றி கலாம்.

அன்புடன் புகாரி

Unknown said...

>>>>>எனக்கென்னவோ அன்புடன் புகாரி அவர்களின் கவிதைக்கு வயது இருப்பதாக தோன்றவில்லை. என்றைக்கு எழுதி மலர்ந்து இருந்தாலும் இன்று மலர்ந்த மலராகவே தோன்றுகிறது.<<<<<

இதை இதை இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்! நன்றி சகோ அன்சாரி.

எழுதிய ஆண்டை கிட்டத்தட்ட சரியாய்ச் சொன்ன சகோ கிரவுன் அவர்களுக்குப் பாராட்டு.

Unknown said...

>>>>குறிப்பாக உங்களின் திருமண அழைப்பிதழில் புதுக்கவிதை எழுதினீர்கள் (”மனமெனும் மணமேடையில்” என்ற வரிகள் என்னைக் கவர்ந்தன; என்னை புதுக்கவிதை எழுத அழைத்ததும் உங்கள் அழைப்பிதழ் தான்)அந்த ஆண்டு 1984-1985 என்று நினைக்கிறேன் <<<<

அற்புத நினைவாற்றல் கவிநண்பா கலாம். இதோ நான் என் நண்பர்களுக்கு மட்டும் அனுப்புவதற்காக எழுதிய கவிதை. ஓர் அழைப்பிதழை மணப்பெண்ணுக்கு அனுப்பி, அவசியம் என் திருமணத்தில் கலந்துகொள் என்ற குறிப்போடு அனுப்பி வைத்தேன். அழைப்பிதழின் பின் அட்டையில் கவிஞர் வைரமுத்துவின் கவிதை ஒன்றையும் இட்டிருந்தேன். அது நினைவிருக்கிறதா?

*

திருமண அழைப்பிதழ்

பேரன்புடையீர்

நிகழும்
1985ம் ஆண்டு
டிசம்பர் திங்கள் 1ம் நாள்
பிறை 18 காலை 9 முதல் 10க்குள்

என்
வாலிப வானுக்குள்
உலாவர வருகிறாள்
ஒரு வசீகர நிலா

என்
பசும்புல் வெளிகளில்
எழில் கூட்டப் பூக்கிறாள்
ஒரு வசந்த ரோஜா

பொழுதும்
கனவுக் காற்று வீசும்
என் மனக்கரை மணலில்
நடனமிட வருகிறாள்
ஓர் இளமயில்

ஆம்...
நான் என்
விலா எலும்பின்
விலாசத்தை விசாரித்து
மாலைமாற்ற
மனங்களைக் குவித்துவிட்டேன்

உதவி நிர்வாகப் பொறியாளர்
ஜனாப் பி. அப்துல்குதா அவர்களின்
நேசப்புதல்வி செல்வி யாஸ்மின் ராணி
பெரியோர்களின் நல்லாசியுடன்
பட்டுக்கோட்டை
86, காளியம்மம் கொவில் தெரு
மணமகள் இல்லத்தில் என்னுடன் இணைய
தாம்பத்ய தீபம் ஏற்றுகின்றோம்

எங்கள் இல்லறக் கவிதைக்கு
இனிய வாழ்த்துப் பண்ணிசைக்க
நன்நெஞ்சத்தோரே வாரீர்.... வாரீர்....

பிரியங்களடர்ந்த இதயமுடன்
புகாரி

Ebrahim Ansari said...

//ஆம்...
நான் என்
விலா எலும்பின்
விலாசத்தை விசாரித்து
மாலைமாற்ற
மனங்களைக் குவித்துவிட்டேன்// வாவ் ....வாறே வாவ்.

crown said...

ஆம்...
நான் என்
விலா எலும்பின்
விலாசத்தை விசாரித்து
மாலைமாற்ற
மனங்களைக் குவித்துவிட்டேன்
---------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். அருமை! இதுபோல் முன்பு ஒருமுறை கவிசக்கரவர்த்தி சகோ.சபீர்காக்காவின் கவிதைக்கு நான் எழுதியது நினைவிற்கு வந்தது.
அவள் என் வேரில் பூத்த பலா!
என் விலாவில் இருந்து வந்த விலா!
என்றும் என்னை விலகா!விலா!

crown said...

உதவி நிர்வாகப் பொறியாளர்
ஜனாப் பி. அப்துல்குதா அவர்களின்
நேசப்புதல்வி செல்வி யாஸ்மின் ராணி.
----------------------------------------------
அண்ணன் அவர்களே! உங்களின் ராணி ஆட்சி வீட்டில் இருக்"குதா"? இல்லையா?

Unknown said...

>>>>உங்களின் ராணி ஆட்சி வீட்டில் இருக்"குதா"? இல்லையா? <<<<

இன்று எனக்குகொரு தனியஞ்சல் வந்தது. பத்த வச்சிட்டியே பரட்டை என்று :) அந்த நகைச்சுவையை ரசித்தேன்.

”குதா” என்ற சொல்லை கிரவுன் அழகான சிலேடையாக்கி கலக்கியிருக்கிறார் அவ்வளவுதான். எதையும் பத்தவைக்கவில்லை :)

அப்துல் குதா என் மாமனார் பெயர் ராணி என் மனைவியின் அழைபெயர். இரண்டையும் இணைத்து இரு பொருள் தரும் அருமையான கவிநயச் சொல்லாடல் தந்த கிரவுனைப் பாராட்டுகிறேன்.

ராணி ஆட்சிதான் வீட்டில் நடக்கிறது கிரவுன்!

அன்புடன் புகாரி

அதிரை சித்திக் said...

அன்பு கவி புகாரியின் எழுத்தை வைத்தே சொல்லலாம் ..

இல்லத்திலும் ராஜா ..,கவிதை புனையும் நளினதால் ராணியின்

உள்ளத்திலும் ராஜா ..ஏட்டில் நல்ல கவிபுனைந்து வாசகரின் அன்பு ..,

வீட்டிலும் ராஜா ..சரி தானே ..

Yasir said...

அன்பினிக்குறிய அன்புடன் புகாரி அவர்களே !!! உங்களின் கடுதாசி..உங்களை மிகவும் நேசிக்கவைத்துவிட்டது......மனதுக்கு மத்தாளம் போடவைக்கும் வரிகள்.....ரசித்து ருசித்த கவிதை

Unknown said...

அன்புச்சகோ யாசிர் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்

>>>>அன்பினிக்குறிய அன்புடன் புகாரி அவர்களே !!! உங்களின் கடுதாசி..உங்களை மிகவும் நேசிக்கவைத்துவிட்டது......மனதுக்கு மத்தாளம் போடவைக்கும் வரிகள்.....ரசித்து ருசித்த கவிதை<<<<<

மிக்க நன்றி. இறைவன் எனக்கு அருளிய இக்கலையால் நான் உங்கள் அன்பைப் பெறுகிறேன். மகிழ்கிறேன். அவனுக்கு நன்றி கூறுகிறேன்.

அன்புடன் புகாரி

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு