நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நாளங்கள் (ஒரு வெற்றிக்கான பகிரங்கக் குறிப்புகள்) 26

அதிரைநிருபர் பதிப்பகம் | ஞாயிறு, ஜூன் 24, 2012 | , , , , ,

(ஒரு வெற்றிக்கான பகிரங்கக் குறிப்புகள்)

நண்பர்கள் எனக்குள்
நாளங்கள்

தத்தம் தன்மைகளை
ரத்தம் எனக்கொண்டு
எனக்குள் ஊடுருவிய
நாளங்கள்

நல்லறம் கொண்டு
நண்மையை வென்று
நாளெல்லாம் ஓடும்
நற்செயல் கடத்தும்
நாளங்கள்

கவலை தாக்கும்
தகவலை கேட்கும்
தருணங்களி லெல்லாம்
ஊசி யின்றியே
நேசிப்பைச் செலுத்தி
மனநலம் காக்கும்
நாளங்கள்.

உடை நெகிழ நேர்ந்தால்
உடன் கை தந்து
திருத்தச் சொன்னது
வள்ளுவன் நட்பு

நடை தளரும்போதும்
தடை இடறும்போதும்
உடன் தாங்கியது
எனக்கான நட்பு

தலைச் சுமை மட்டுமே
பகிர்தல் இயல்பு
மனச் சுமைதனையும்
பிரித்து இலேசாக்கும்
நண்பர்கள் எனக்குள்
நாளங்கள்

தாழ்வு மனப்பான்மைக்கு
தடுப்பு ஊசியையும்;
தன்மானம் காப்பதற்கு
சொட்டு மருந்தையும்;
ஒழுக்க நெறிகளுக்கு
ஊக்க மருந்தையும்;
வெற்றிப் படியேற
கிரியா ஊக்கிகளையும்;
நாள்தோறும் ஓடவிடும்
நாளங்கள்

நிவாரணிகளை யல்ல
ரோகம் தீர்க்கும்
மருந்துகளைச் சுமந்து
இதயத்தை இயக்கும்
நாளங்கள் என்
நண்பர்கள்

தாளங்கள் மேளங்கள்
நாளெங்கும் முழங்கிய
காலங்கள் போயினும்
நாளங்கள் என்றான
தோழன்கள் எனக்குண்டு
வாழுங்கள் என்றியம்ப!

நெட்டை குட்டையென
நீண்டும் குறுகியும்
உச்சி வெயில்தனில்
உடல்மேல் ஒளிந்தாலும்
நிழலென தொடர்வான்;
இருட்டில்கூட
இல்லாமல் இருப்பான்
தோல் போர்த்தி மறைத்த
நாளங்கள் போன்ற நல்
நண்பன்தான்

நண்பன் இல்லா வாழ்வு
நாளங்கள் நலிந்த உடம்பு

நல்ல நண்பன்
நாளங்களுக்குள் உதிரம்
தீய நண்பன்
உதிரத்தினுள் விஷம்

நட்பு கொள்ளுமுன்
குணம் குற்றத்தில்
மிகைநாடி மிக்க கொள்ளல் நலம்

நல்ல நட்பில் நாட்டமா
நல்ல மனிதனாய் வாழ்
இனம் இனத்தோடே சேரும்!

-சபீர் அபுஷாருக்

26 Responses So Far:

crown சொன்னது…

நண்பர்கள் எனக்குள்
நாளங்கள்
---------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.
நா(ள)ங்க(ள்)ளும் உண்டல்லவா அந்த பட்டியலில்?

crown சொன்னது…

தத்தம் தன்மைகளை
ரத்தம் எனக்கொண்டு
எனக்குள் ஊடுருவிய
நாளங்கள்
----------------------------------------------------
இவர்கள் உள்ளத்தில் அன்பு எனும் பூவை உதிரமாய் உதிரும் பூக்கள்.

அதிரை சித்திக் சொன்னது…

சகோ ,சபீர் ..,

தங்களின் கவிதை .வள்ளுவனின்

இருவரியை ஒருவரியால் விளக்கிய அற்புதம்

நட்பு ..அர்த்தத்தை வாழ்வில் நான் முழுமையாய்

விளங்கியன் .எனக்கு கிடைத்த நண்பன் .உங்கள்

கவிதைக்கு தகுதியானவன் ..

தலை சுமையை மாற்றி தாங்கலாம் மனசுமையை....

நல்ல சிந்தனை ..மருத்துவர் போல ..கவி உவமைகள்

அமைந்து இருந்தது ..

ஒன்று தெரியுமா என் நண்பன் பெயரும் சபீர் தான்


.

crown சொன்னது…

கவலை தாக்கும்
தகவலை கேட்கும்
தருணங்களி லெல்லாம்
ஊசி யின்றியே
நேசிப்பைச் செலுத்தி
மனநலம் காக்கும்
நாளங்கள்.
----------------------------------------
கவலை மேகம் சூழ்ந்தாலும் நேசம் குடை பிடித்து உடன் வரும் நேசவிரும்பிகள் இவர்கள்.தான் நனைந்தாலும் நாம் நனையக்கூடாது என்பதில் கவனம் அதிகம் இருக்கும்.

crown சொன்னது…

உடை நெகிழ நேர்ந்தால்
உடன் கை தந்து
திருத்தச் சொன்னது
வள்ளுவன் நட்பு

நடை தளரும்போதும்
தடை இடறும்போதும்
உடன் தாங்கியது
எனக்கான நட்பு
---------------------------------------------------------------------
உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
இடுக்கன் களைவதாம் நட்பு
----------------------------
செயற்கை இல்லாமல் இயற்கையாக துன்பம் என்றவுடன் நம்முடன் மூன்றாவது, நாளாவது கையாயய் சேரும் நம்பிக்கைதான் இந்த நட்பு !

crown சொன்னது…

நல்ல நண்பன்
நாளங்களுக்குள் உதிரம்
தீய நண்பன்
உதிரத்தினுள் விஷம்
--------------------------------------------------------
அந்த விடம்(விஷம்) நம்மிடம் வர விடாது நல் நட்பு! எவ்விடம் சென்றாலும் நல் நட்பே போற்றப்படும் தீய நட்பென்பது ஏதும் இல்லை. காரணம் நட்பென்றாலே தீயது இல்லை!

crown சொன்னது…

நாளங்கள் வாழ் நாளெல்லாம் கூடவரும் சொந்தத்துக்குள் வராத சொந்தம் . இதை சந்தம் பாடி சாந்தம் வரவழைக்கும் தமிழ் சித்துவிளையாட்டில் மறுபடியும் முத்திரை பதித்திருக்கும் கவிதையாதிபதி நீங்கள்.அல்லாஹுக்கே எல்லா புகழும்.

அதிரை சித்திக் சொன்னது…

நட்பு ..பலவகையில் ..ஈர்ப்பு உண்டு ..

ஒத்த கருத்தை உடையவர்கள் நட்பு .

.திறமையை பாராட்டி நட்பு..உதவி நாடி நட்பு

ஒன்றுமே இல்லை ஏனோ தெரியவில்லை ரொம்ப பிடிக்கும் .

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

உடலில் குருதி ஓட்டங்களுக்கு நாளங்கள் போல, வாழ்வியலுக்கு ஒரு மாலுமியாய், பைலட்டாய் திறம்பட ஓட்டிச் செல்ல அமைவது சிறந்த நட்பு என்பதற்கு இனிப்பான கவி வடிப்பு.

சேக்கனா M. நிஜாம் சொன்னது…

கவிநேசரின் அற்புத படைப்பு ! ரத்தத்தை சுண்டி எழுப்பும் வரிகள் !!

// உடை நெகிழ நேர்ந்தால்
உடன் கை தந்து
திருத்தச் சொன்னது
வள்ளுவன் நட்பு

நடை தளரும்போதும்
தடை இடறும்போதும்
உடன் தாங்கியது
எனக்கான நட்பு //

நட்பு :

உண்மையைச் சொல்லப் போனால் நண்பர்கள் ஒரு அரிய பொக்கிஷம் !

அவர்கள் உன்னை சிரிக்க வைப்பார்கள்...............
உன் வாழ்க்கையில் நீ உயர தட்டிக் கொடுப்பார்கள்............
நீ சொல்வதை காது கொடுத்து கேட்பார்கள்.............
நீ நல்ல நிலமைக்கு வரும் போது உன்னை புகழ்வார்கள்…………
அதையும் இதைய பூர்வமாக செய்வார்கள்…………

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

கவிக்காக்காவின் ஆக்கம் நல்ல நட்பின் தாக்கம். அருமை காக்கா.

நல்ல நண்பன் :

எங்கோ வாங்கிய அடிக்கு அவனிடத்தில்
நல்ல மருந்து கிடைக்கும்

மன வேதனையான நேரத்தில் அவன்
ஒரு மிருதுவாய் வருடும் மயிலிறகு

சொல்லாத்துயரில் அல்லல்படும் பொழுது
சொம்பு நிறைய கொண்டுவரப்படும் இளநீர் அவன்

நல்ல நட்பே நமக்கு ஒரு மனதில் குடிகொள்ளும் அசையா சொத்து.

அன்புடன் புகாரி சொன்னது…

நல்ல நட்பு நிச்சயம் வாழ்வில் மிகப்பெரிய வெற்றிதான் கவிஞர் சபீர்.

அன்புடன் புகாரி

Unknown சொன்னது…

நாளங்கள் செய்திடும்

மாயங்கள் ...

நட்ப்பை போற்றி

மனதில் அடித்திடும்

தாளங்கள் .....

சூப்பர் காக்கா

KALAM SHAICK ABDUL KADER சொன்னது…

சேகரப் புதையலே நட்பு
...சோதனை விடைகளே நட்பு
சாகர விடியலே நட்பு
....சாதனை தூண்டுதல் நட்பு
தாகமே தீர்த்திடும் நட்பு
....தாயினைப் போலவே நட்பு
வேகமாய்ச் செயல்படும் நட்பு
....வேரிலே உறுதியாம் நட்பு

KALAM SHAICK ABDUL KADER சொன்னது…

உன்னை நண்பனாய்ப் பெற்றதும் என்றன் நட்பின் பெட்பு (சிறப்பு)

KALAM SHAICK ABDUL KADER சொன்னது…

தீயகம் களைந்து தூய உள்ளமாய்

தியாகம் செய்யும் தன்மை நட்பினை;

உயிரைக் காத்திட உயிரைத் தந்து

பயிரென வளர்ந்திடும் பயனுள்(ள) நட்பினை;

மறவா உள்ளம் மாண்பு பெற்றிடும்

இறவா காவியம் இனிய நட்பே...

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…

//நல்ல நண்பன்
நாளங்களுக்குள் உதிரம்
தீய நண்பன்
உதிரத்தினுள் விஷம்//

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நல்ல நண்பன் மற்றும் கெட்ட நண்பனின் நிலையானது கஸ்தூரியைச் சுமக்கிறவனின் நிலையையும், (உலைக் களத்தில்) உலை ஊதுகிறவனின் நிலையையும் ஒத்திருக்கிறது. கஸ்தூரியைச் சுமப்பவன் ஒன்று அதை உனக்கு அன்பளிப்பாக வழங்கலாம். அல்லது நீ அவனிடமிருந்து (அதை விலைக்கு) வாங்கிக் கொள்ளலாம். அல்லது அதிலிருந்து நீ நறுமணத்தையேனும் பெறலாம். ஆனால் உலை ஊதுபவனோ ஒன்று உன்னுடைய ஆடையை எரித்துக் கரித்துவிடுவான்; அல்லது (அவனிடமிருந்து) நீ துர்வாடையையாவது அடைந்தே தீருவாய்.
என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்

Yasir சொன்னது…

நட்பை பற்றிய நரம்மை புடைக்க வைக்கும் வரிகளுடன் கூடிய கவிதை கவிக்காக்காவின் “ நாளங்கள்”..உங்கள் நட்பு கிடைத்தபிறகு நல்ல பிற விசயங்களை என் வாழ்வில் உங்களிடம் இருந்து கற்று அப்டேட் செய்து கொண்டேன்....

//தத்தம் தன்மைகளை
ரத்தம் எனக்கொண்டு
எனக்குள் ஊடுருவிய
நாளங்கள்// சரியாக சொல்லி இருக்கின்றீர்கள் கவிவேந்தர் அவர்களே

Noor Mohamed சொன்னது…

சகோ. கவி சபீர் அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்

//நண்பர்கள் எனக்குள்
நாளங்கள்//

அழகிய ஆக்கம் - அதுதான்
தாங்கள் பழகும் பழக்க வழக்கம் "படிக்கட்டுகள்" உடன்.

KALAM SHAICK ABDUL KADER சொன்னது…

"தீய நட்பை விட தனிமையே சாலச் சிறந்தது” என்ற ஹதீஸ் நினைவுக்கு வந்தது //நல்ல நட்பில் நாட்டமா
நல்ல மனிதனாய் வாழ்
இனம் இனத்தோடே சேரும்!// என்ற வரிகள்

நிர்வாணமாய் நிற்கும்
நெடு ஊசியே
மானம் காக்க
மனிதனுக்கு
ஆடை தைப்பது போல்
தன்னை இழந்து
தன் நண்பனைக் காப்பவன்
“உயிர் காப்பான் தோழன்”
உயரிய பழமொழிக்கு
ஒரே பொருள் நண்பன்!

Shameed சொன்னது…

நடப்பை பற்றி நட்ப்பாய் சொன்ன கவிதை கலக்கல் (நாளங்களில் நானும் உண்டுதானே)

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

இங்கே சொன்ன நாளங்கள் இல்லாதோர்...

நானம் கொள்வர் !

தொலைந்தவைகள் / தொலைத்தவைகள் / இழந்தவைகள் மீண்டும் கிடைக்குமா ?

நளங்களாக இருந்தோமே ஏக்கத்துடனே !

அன்புடன் புகாரி சொன்னது…

நிர்வாணமாய் நிற்கும்
நெடு ஊசியே
மானம் காக்க
மனிதனுக்கு
ஆடை தைப்பது போல்

அருமையான உவமை சகோ கலாம்

அன்புடன் புகாரி

Ebrahim Ansari சொன்னது…

முகம் புதைக்க மடி
முதுகில் தட்ட கை
சாய்ந்து கொள்ள தோள்
அன்பு சொல்லும் அணைப்பு
குறை கேட்கும் காது
கூப்பிட்டதும் வரும் ஓட்டம்
பச்ச்சைத் தண்ணீரையும்
பகிர்ந்து உண்ணும பரிவு
நண்பனே! நீ இருப்பதால்
சோகமும் எனக்கு சுகமே!--
கண்ணீரை வழித்து விட – உன்
கட்டைவிரல் கிடைத்தால்
அழுவதும் எனக்கு ஆனந்தமே!

-அபூ அஷ்ரப்

//தாளங்கள் மேளங்கள்
நாளெங்கும் முழங்கிய
காலங்கள் போயினும்
நாளங்கள் என்றான
தோழன்கள் எனக்குண்டு
வாழுங்கள் என்றியம்ப!//

இந்த வரிகளைப் படித்ததும் செத்துவிட்டேன். செத்து.

இது போல் அழவைத்தகவிதைகளைப் படித்தே அநேக நாட்களாகிவிட்டன. எப்படிப்பாராட்டுவது என்றே தெரியவில்லை. அந்த கண்ணீர் துளிகளையே கவிஞருக்கு பரிசாக ஆக்குகிறேன்.

KALAM SHAICK ABDUL KADER சொன்னது…

ஜஸாக்கல்லாஹ் கைரன் அன்புடன் புகாரி அவர்கட்கு நெஞ்சம் நிரம்பிய நன்றி.

இதுவே போன்ற உவமைகளை உள்ளடக்கி (காட்டு: “நீர்க்குமிழியும் நீரென்று நீர் என்று உணர்வாயோ அன்றே நீ அடைவாய் ஞானவொளி”) ஒரு நீண்ட கவிவரிகளை நீண்ட நாட்களாய் என்னுள்ளத்தில் பதியம்போட்டு வைத்துள்ளேன்.

sabeer.abushahruk சொன்னது…

வாசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி என் நாளங்களே.

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு