இறைவழிபாடு Vs பணம்
சம்பாதித்தல்
மனிதனின்
சறுக்கல் அவன் இந்த உலகத்தில் எதை முக்கியம் என்று நினைக்கிறானோ அதில்தான்
பெரும்பாலும் அமைந்திருக்கிறது. ஒரு பாக்டீரியா பேரன் பேத்தியோடு குடியிருக்கும் உணவை
சாப்பிட்டுவிட்டு ஏன் வயிற்றை இப்படி வலிக்கிறது எனும் ஒரு நோயாளியின்
கேள்விபோல்தான் , பிரச்சினைகளை சொந்தமாக தேடி தன் வாழ்க்கையில்
பிரச்சினைகளை அதிகமாக்கிவிட்டு பிறகு "எனக்கு ஏன் இறைவன் இப்படி
சோதிக்கிறான்" என்று புலம்புவது ஒரு ரகம்.
வாழ்க்கையில்
முன்னேறுவது என்பது முக்கியம் என நினைக்கும் சூடு சுரணை உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு காலம் வரும் அதில்
பணம் வசப்படும், வாக்குக்கு மரியாதை இருக்கும் அப்போதுதான்
மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தன்னை சுற்றி ஒரு ஒளிவட்டம் வந்து விட்டதாக
கற்பனை செய்து கொண்டு தான்
சொல்வதெல்லாம் சரி, தான் செய்வதெல்லாம் சரி என்று ஆட்டம் போட்டால்
சறுக்கும் காலம் வந்தால் முதலில் ப்ரூட்டஸ்களை சந்திக்க தயாராக வேண்டியதுதான்.
அதற்கு பிறகு வளர்த்த கிடா, நெஞ்சில்
பாய்ந்துவிட்டது என புலம்பி புண்ணியமில்லை. [ கிடா நெஞ்சில பாயும் அளவுக்கு
அவ்வளவு குள்ளமாவா இருக்கீங்கனு யாரும் கேட்டமாதிரி தெரியவில்லை]
இன்றைய நவீன
சூழல் மனிதனை தடம்புரளச்செய்யும் எல்லா வசதிகளையும் அவன் கையில் வந்து கொடுத்து
விட்டு போயிருக்கிறது.
ஆண்களைப்பொருத்தவரை
விபரீத உறவுகளாலும், பண ஆசையில் என்ன
செய்கிறோம் என்பதை மறந்த சயன நிலைதான் அவர்களை பாதாளத்துக்கு கொண்டு செல்கிறது.
இதை நெறிப்படுத்த எந்த சட்டமும் செய்யாததை இறைஅச்சம் வெற்றிகரமாக செய்யும். இத்தனை
நாள் இல்லாத பொருளாதார வளர்ச்சி சமயங்களில் தவறையும் சரி என்று பேசச்சொல்லும்.
தேவையில்லாத ஹராமான உறவுகளைக்கூட ஞாயப்படுத்த சொல்லும். மார்க்கம் சரியாக
கற்றிருந்தால் / தொழுகை ஒழுங்குடன் கடைபிடிக்கப்பட்டிருந்தால் அந்த குடும்பம்
மானக்கேடுகளை விட்டு தப்பிக்க முடியும்.
வாழ்க்கையில்
ஒரளவு வெற்றியடைந்தவர்கள் தான் இதுவரை சம்பாதித்ததை தக்க வைத்துக் கொள்ள
மார்க்கத்துக்கு மீறிய இறைவன் வெறுக்கும் இணைவைத்தல், இறைவன் அல்லாதவர்களை வணங்கவும் முற்படுதல்
போன்ற விசயங்களில் இறங்கும்போது அதன் “தண்டனைத் தீவிரம்” தெரிவதில்லை. பிள்ளைகளை வைத்து பெருமை
அடிப்பது, பணம் இருப்பதை வைத்து பெருமையடிக்கும் முன் இரண்டையும் இறைவன் நம்மை சோதிக்கத்தான்
கொடுத்திருக்கிறான் எனும் அவன் வேத வாக்கை நினைத்தால் அகந்தைகள் அடங்கும். நாம்
வாழும் இந்த நூற்றாண்டில் இந்த பரந்த பூமி எத்தனையோ கோடீஸ்வர்களை தனக்குள்
புதைத்து சிதைத்திருக்கிறது. பூமி தன் வயதுக்கு
எத்தனையோ கோடி மக்கள் மரணித்ததை தனது பொறுமையுடன் பார்த்திருக்கும்.
நாம் வாழும்
காலம் , சம்பாதிப்பது எல்லாம் ஒரு மேகம் மாதிரி
மாற்றங்களுக்கு உட்பட்டது. நமக்கு அள்ளித்தருபவன் இறைவன் தான் என்பது சரியாக புரிந்தால்
மனது நிச்சயம் சாந்தப்படும். இந்த உலகத்தில் எத்தனையோ நீர் வளத்தை தந்தவன்
தாகத்துக்காக ஒரு டம்ளர் தண்ணீர் கிடைக்காமல் மரணிக்கும் சூழ்நிலையை எத்தனையோ
மனிதர்களுக்கு கொடுத்திருக்கிறான்.
அதே சமயம் பணம்
சம்பாதிப்பதை ஏதோ பாவச்செயல் மாதிரி பேசும் முல்லாக்கள் சில இளைஞர்கள் மனதில் தனது
ரப்பர் ஸ்டாம்பை ஆழமாக குத்திவிடுவதால் சில இளைஞர்கள் தான் செய்வது தவறு என்று
தெரியும்போது தனது மகள் கல்யாண வயதுக்கு வந்துவிடுகிறது. இனிமேல் கிடைத்த குறுகிய
காலத்துக்குள் தனது தேவைகளை பார்த்துக்கொள்ள அந்த இளைஞர்கள் அழையும்போது அந்த முல்லாக்கள் எந்த உதவியும் அந்த பாதிக்கப்பட்ட மனிதனுக்கு
செய்வதில்லை. ஆரம்பத்திலேயே இந்த முல்லாக்கள் தனது கையாளாகாத தனத்தை மறைக்கத்தான்
இப்படி போதிக்கிறார்கள் என்பதை உணர்ந்தால் இவ்வளவு பிரச்சினைகள் இருக்காது.
எம்பெருமானார் முஹம்மது நபி [ஸல்] அவர்களின் எளிமையான வாழ்க்கையையும் தனது
மகளுக்கு சீதனம் கொடுக்கும்போது இருந்த கஷ்டமான சூழ்நிலையை சொல்லும் அவர்கள் ஒருபோதும் நபி [ஸல்] “சம்பாதித்து வசதியாக வாழ்வதை” ஒருபோதும் தடை சொன்னதில்லை என்று சொல்வதே
இல்லை.
சிலர் எளிமையாக இருப்பதை போதிக்கிறேன் என்று வறுமையாக இருப்பதற்கு போதனை செய்கிறார்கள். சில பெரியவர்கள் செய்யும் தவறு தனது வாழ்க்கையை அப்படியே கார்பன் காப்பி எடுத்ததுபோல்தான் தன் வீட்டு பிள்ளைகளுக்கும் நடக்கும் என்று தன்னாலேயே கற்பனை செய்துகொண்டு சமயங்களில் பிள்ளைகளின் முன்னேற்றத்துகான முடிவுகளுக்கும் தடையாக இருக்கிறார்கள்.
சிலர் எளிமையாக இருப்பதை போதிக்கிறேன் என்று வறுமையாக இருப்பதற்கு போதனை செய்கிறார்கள். சில பெரியவர்கள் செய்யும் தவறு தனது வாழ்க்கையை அப்படியே கார்பன் காப்பி எடுத்ததுபோல்தான் தன் வீட்டு பிள்ளைகளுக்கும் நடக்கும் என்று தன்னாலேயே கற்பனை செய்துகொண்டு சமயங்களில் பிள்ளைகளின் முன்னேற்றத்துகான முடிவுகளுக்கும் தடையாக இருக்கிறார்கள்.
ஆக சுபிட்சத்தை
தருவது இறைவன் தான். முயற்சிகள்
தோல்வியடையலாம் முயற்சிக்க தயங்களாமா?. நீங்கள்
எடுத்துவைக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் இறைவனிடம் மனமார மன்றாடிகேட்டு
ஆரம்பியுங்கள்..அதற்கு பிறகு பாருங்கள் உங்களின் வெற்றிப்பாதையை.
நாம் இறைவனிடம்
சரணடைய தயங்குகிறோம். இதுவரை இறைவன்
நமக்கு தந்த எத்தனையோ வசதிகளுக்கு நாம் நன்றி சொல்லி விட்டோமா? என் வாழ்க்கையில் மிக கஷ்டமான சூழ்நிலையில் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
நான் என் கஸ்டத்தை அவரிடம் சொல்லி புலம்பிக் கொண்டிருக்கும்போது அவர் கேட்டது ' உன் துஆ வில் இறைவனுக்கு நன்றி சொல்வதை அதிகமாக்கு' என்றார். “இறைவனின் ரஹ்மத் உனக்கு நிறைய கிடைக்கும், அவன் அள்ளித் தருவதை உன்னால் கணக்கிட முடியாது” என்றார். என்
வாழ்க்கையில் அவரின் அறிவுரைக்கு பிறகு மிகப்பெரிய மாற்றமும் சுபிட்சமும்
ஏற்பட்டது. எல்லாம் அந்த வல்ல இறைவனின் செயல்.
தொழில்/
வேலை செய்து நல்லபடியாக சம்பாதிப்பவர்கள்
இறை வழிபாட்டுக்கான நேரத்தை ஒதுக்குவதில் மெத்தனம் காட்டுவது அல்லது "ரொம்ப
பிசி" என்று ஒரு வார்த்தையில் இறை வணக்கத்தை செயல்படுத்த சிரமம் காட்டுவது
அவ்வளவு நல்லதல்ல. உங்களுக்கு தரப்பட்டிருக்கும் அனைத்து வசதிகளும் சோதிக்கத்தான்
என தெரிந்தால் அதன்மீது இந்த அளவு அடிமைத்தனம் இருக்காது.
இஸ்லாத்தில் வழிபடுதலும் , கீழ்படிதலும்
என்ற விசயம் இருக்கிறது. இங்கு கீழ்படிதல் என்பது இறைவனின் கட்டளைக்கு. சிலர்
வழிபடுகிறார்கள், ஆனால் கீழ் படிய மறுக்கிறார்கள். நமது மன
இச்சைக்கு தகுந்த மாதிரி இறைவனின் கட்டளைகளை மாற்றி அமைக்க நாம் யார்?. சரி இது போன்ற சமயங்களில் குர்ஆன், ஹதீஸ், மார்க்க அறிஞர்கள் என்று நமது சந்தேகத்தை தீர்க்க முடியும். ஆனால் கடைசியில்
உள்ள மார்க்க அறிஞர்களை முதன்மை படுத்தி
குர்ஆனை கடைசியாக்கி விட்டதால் பல குழப்பங்கள். நாம் இறைவனிடம் சரண் அடையும்
நிலையை உருவாக்கி கொண்டால் அவனது ஆட்சியில் நாம் சுபிட்சமாக இருப்போம்.
நமக்கு தேவைப்பட்டதை கொடுக்கவும் , தேவையற்றதை நம்மிடமிருந்து எடுக்கவும் அவன் ஒருவனே அறிந்தவன்.
இன்றைக்கு நமக்கு
வருமானம் குறைவாக இருக்கலாம். ஆனால் அந்த குறைந்த வருமானத்திலும் நிம்மதியை
தந்திருந்தால் அதுவே பெரிய விசயம். நான் எழுதியிருப்பதை படித்துக் கொண்டிருக்கும்
உங்களுக்கு இறைவன் உங்கள் கண்பார்வையை குறைவின்றி கொடுத்திருக்கிறான், ஒருமுறை உங்கள் கண்களை மூடி படிக்க ஆசைப்பட்டாலே அந்த வல்லோனின் கருணை எவ்வளவு விசாலமானது என்பது தெரியும். எத்தனையோ மக்கள்
தங்கள் குடும்பத்திற்கு அன்றாடம் சாப்பாட்டுக்கு கூலி வேலை பார்க்கும்
சூழ்நிலையிலிருந்தும் கண் பார்வையற்றவர்களாக இருந்து கஷ்டப்படுகிறார்கள். இறைவன்
நம்மை அது போன்ற சோதனைக்கு உட்படுத்தாமல் இருப்பதற்கே நாம் எவ்வளவு நாள் நன்றி
செலுத்த வேண்டும்.
வாழ்க்கையில்
கிடைக்கும் வெற்றிகள் அனைத்திற்கும் நாம்
மட்டும் பொறுப்பல்ல. நம்மை நெறிப்படுத்திய ஆசிரியர்கள், நம்மை கண்டித்த பெற்றோர், தவறு செய்தால் தண்டிக்கப்படுவாய் என்று சொன்ன
பெரியவர்கள் எல்லோரும் சேர்ந்து மோல்ட் செய்யப்பட்டுதான் நாம் இப்போது வெற்றிபெற
தகுதியுடையவானாகிறோம்.
இவையனைத்தையும்
நமக்கு சரியாக தந்து நம்மை காப்பாற்றி வரும் அந்த இறைவனை வழிபடுதல் மிக முக்கியம்
என்பதற்கு மறுமொழி இருக்க முடியாது.
பல வருடங்களுக்கு
முன் என்னிடம் ஒரு இந்தோனேசிய கூலித்தொழிலாளி சொன்னது
நாளைக்கே நமது
மரணம் என்று உன் வணக்கத்தை / நல் அமல்களை செய். இன்னும் நூறு வருடம் வாழப்போவதை
போல் உன் பொருளாதாரத்தை உயர்த்த உழை.
-ZAKIR HUSSAIN
28 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும். இந்த ஆக்கம் படித்ததும் கருத்து எழுத( நான் எல்லாம் கருத்து எழுதி என்ன கிழிக்கப்போகிறேன்?)இங்கு எழுதியிருப்பதில் மேற்கோள் காட்டலாம்னு இருந்தா எல்லா வரிகளையும் மறுபடியும் எழுதனும் போல இருக்கு! எனவே தயவு செய்து ஒன்னுக்கு 2 *3 தடவ திருப்பி படிங்க இதுதான் நான் சொல்ல வந்த கருத்து. அருமையான ஆக்கம்.இந்த ஆக்கத்திற்கு கருத்து எழுத அப்படியே வரிக்கு வரி பிரதி(காப்பி)எடுக்க வேண்டிவரும்.
அஸ்ஸலாமு அலைக்கும் ஜாகிர் காக்கா,
சிலபேர் தன் மற்றும் தன்னை சேர்ந்தவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற சம்பாதிப்பதேயே பேராசை என தெரிந்தோ அல்லது தெரியாமலோ மனதில் இருத்திக்கொண்டு தன் சோம்பேறிதனத்தை வெற்றிகரமாக மறைத்து கொண்டு தன்னையே ஏமாற்றி கொள்கிறார்கள் .இதனால் அவனை சார்ந்த உறவுகளுக்கும் பாதிப்பு .
குடும்பம் என ஒருவனுக்கு அமைவதை ''சர்வ சாதாரணமாக '' நினைப்பது எவ்வுளவு பெரிய மடைமை என்பதை சொந்தங்களின்றி தவிக்கும் முதியவர்களிடம் கேட்டால் சொல்லுவார்கள் .தன்னை சார்ந்த குடும்பத்தை நன்றாக நிலை நிறுத்துவது என்பதை இளமையிலே ஒவ்வருவரும் உணர்ந்து இளமையில் நன்றாக உழைத்து தனக்கும் , தன் குடும்பத்திற்கும் பலம் சேர்ப்பது அவசியம் .
]]]]]நான் எழுதியிருப்பதை படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு இறைவன் உங்கள் கண்பார்வையை குறைவின்றி கொடுத்திருக்கிறான், ஒருமுறை உங்கள் கண்களை மூடி படிக்க ஆசைப்பட்டாலே அந்த வல்லோனின் கருணை எவ்வளவு விசாலமானது என்பது தெரியும்.[[[[
Electric statement .......!!!!!!!!!
Dear Brother Zakir,
Assalaamu alaikkum.
//ஒரு பாக்டீரியா பேரன் பேத்தியோடு குடியிருக்கும் உணவை சாப்பிட்டுவிட்டு ஏன் வயிற்றை இப்படி வலிக்கிறது எனும் ஒரு நோயாளியின் கேள்விபோல்தான்//
என்ற முதல் பாராவைப் படிக்கும்போதே சரிதான் இன்றும் கச்சேரி களை கட்டும் என்று நினைத்துக்கொண்டு தொடர்ந்து படித்தேன்.
உள்ளதை சொல்லப்போனால் படித்து முடித்ததும் அப்படியே மலைத்துப் போய்விட்டேன் என்பதுதான் எனது உணர்வு.
//நாம் இறைவனிடம் சரணடைய தயங்குகிறோம். இதுவரை இறைவன் நமக்கு தந்த எத்தனையோ வசதிகளுக்கு நாம் நன்றி சொல்லி விட்டோமா? என் வாழ்க்கையில் மிக கஷ்டமான சூழ்நிலையில் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். நான் என் கஸ்டத்தை அவரிடம் சொல்லி புலம்பிக் கொண்டிருக்கும்போது அவர் கேட்டது ' உன் துஆ வில் இறைவனுக்கு நன்றி சொல்வதை அதிகமாக்கு' என்றார். “இறைவனின் ரஹ்மத் உனக்கு நிறைய கிடைக்கும், அவன் அள்ளித் தருவதை உன்னால் கணக்கிட முடியாது” என்றார். என் வாழ்க்கையில் அவரின் அறிவுரைக்கு பிறகு மிகப்பெரிய மாற்றமும் சுபிட்சமும் ஏற்பட்டது. எல்லாம் அந்த வல்ல இறைவனின் செயல்//
இது என் வாழ்விலும் நடந்தது. பலருக்கும் நடந்திருக்கும். இப்போது இதை பின்பற்றத்தொடங்குப்வர்களுக்கு தொடங்குப்வர்களுக்கும் நிச்சயம் நடக்கும்.
மிகுந்த பாராட்டுக்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கிரவ்ன்(னு) சொன்னது போல்.. மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டிய பதிவு (இந்த படிக்கட்டு)...
ஜஸாகல்லாஹ் ஹைர் காக்கா...
அஸ்ஸலாமு அலைக்கும்,,
ஜாஹிர் காக்கா....
உங்களை பேன்றவர்கள் எழுதும் பதிவுகள் திரும்பத்திரும்ப படிக்கும் போது இருக்கும் ஏற்படும் உற்சாகம் குறைவதே இல்லை...
//இஸ்லாத்தில் வழிபடுதலும் , கீழ்படிதலும் என்ற விசயம் இருக்கிறது. இங்கு கீழ்படிதல் என்பது இறைவனின் கட்டளைக்கு. சிலர் வழிபடுகிறார்கள், ஆனால் கீழ் படிய மறுக்கிறார்கள். நமது மன இச்சைக்கு தகுந்த மாதிரி இறைவனின் கட்டளைகளை மாற்றி அமைக்க நாம் யார்?. சரி இது போன்ற சமயங்களில் குர்ஆன், ஹதீஸ், மார்க்க அறிஞர்கள் என்று நமது சந்தேகத்தை தீர்க்க முடியும். ஆனால் கடைசியில் உள்ள மார்க்க அறிஞர்களை முதன்மை படுத்தி குர்ஆனை கடைசியாக்கி விட்டதால் பல குழப்பங்கள்.///
மிகச்சரியாக சொல்லியுள்ளீர்கள் இதுவே எதார்த்தம்.. மனோ இச்சைக்கு முக்கியத்துவம் கொடுத்தது மார்க்க அறிஞர்களை முதன்மை படுத்தி குர்ஆனை இரண்டாம் நிலைப்படுத்தியதே பல பிரிவுகளுக்கு காரணம்.
மொத்தத்தில் உற்சாக டானிக் தந்தமைக்கு மிக்க நன்றி...
ஒருவர் பிறரிடம் எப்படிப் பழகுகிறார் ? என்பதை வைத்தே அவரை மற்றவர்கள் ஈசியா மதிப்பிடு செய்ய முடியும். அதேபோல் இப்பதிவில் தெரிகிறது எழுத்தின் முதிர்ச்சி + பதிவரின் அனுபவம்
வாழ்த்துகள் ! தொடர்ந்து எழுதுங்கள்..............இதுபோன்ற உபதேசங்களை
சீக்கிரமாய் சிகரம் எட்ட சிறப்பான நல் வழிகாட்டல்! நன்றி காக்கா.
ஜாகிர் காக்கா, இது வரை ஏறிவந்த படிகளில் முன்னேற்றம், முயற்சி, செயல்பாடு, உழைப்பு, இவையனைத்தையும் சொல்லிட்டு கடைசியில் படைத்த இறைவனுக்கு நன்றி தெரிவிப்பது, அவனே எல்லாத்தையும் செயல்படுத்துகிறான் என்பதாய் சொல்லிருப்பது நம்மை படைத்த இறைவனுக்கு எப்பவும் அடிபணிந்து செயலபட வேண்டும் என்பது தெளிவாகிறது, அவனின்றி எதுவுமில்லை...
அருமை சகோ ஜாகிர், அஸ்ஸலாமு அலைக்கும்.
தங்களின் "படிக்கட்டுகள் ஏற்றம்" கட்டுரைகளை தொடர்ந்து மீண்டும் மீண்டும் படிக்கும் நான், அடிக்கடி கருத்துக்கள் கொடுப்பதில்லை. மாறாக தங்களின் கட்டுரையை law எனக் கொண்டு அதற்கு illustration ஆக பலருக்கு நான் பாடம் நடத்துகிறேன். காரணம் "படிக்கட்டுகள் ஏற்றம்" சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அறிய வேண்டிய அற்புத படைப்பு.
எதுத்துக்காட்டக "படிக்கட்டுகள் ஏற்றம் 7" ல் தங்கள் கூறிய;
//பரீட்சை நேரமாக இருப்பதால் மாணவர்கள் சிலபேர் மின்சாரம் சரியாக இருந்தால் நான் நன்றாக படிக்க முடியும் என்று காரணங்களைக் கண்டுபிடித்து சொல்லிக் கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன். மின்சாரப் பிரச்சினை உங்களுக்கு மட்டும் அல்ல. மொத்த தமிழ்நாட்டுக்கும்தான். உங்களுக்கு ரிசல்ட் வரும்போது மற்ற மாணவர்களும் நல்ல மார்க் எடுத்து பாஸ் செய்து இருப்பார்கள், அந்த சூழ்நிலையில் "கூடங்குளத்திலிருந்து தனியாக 3 ஃபேசில் அவன் வீட்டுக்கு மட்டும் கரண்ட் வந்தது” என சொல்லபோகிறீர்களா?'. முன்பு எழுதியதுதான் உங்கள் மார்க் சீட்டில் இப்போது உள்ள “கூடங்குளம் அணு மின்நிலையப் பிரச்சினை”, “தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின் வெட்டு”, “முல்லைப்பெரியாறு அணை விவகாரம்” எது பற்றியும் பிரிண்ட் ஆகி இருக்காது, உங்கள் மார்க்கை தவிர... நீங்கள் வேலை / படிப்பு தேடி போகும் எந்த இடத்திலும் 'இந்த பிரச்சினைகளை" சொன்னால் “பாட்டி வடை சுட்டு வித்த கதை”க்கு கிடைக்கும் முக்கியத்துவம் கூட கிடைக்காது.//
இதை ஊரில் பத்தாம் வகுப்பு படித்த மாணவ மாணவியர்களுக்கு தொலைபேசியில் அவ்வப்போது விவரமாக விளக்கினேன். அல்ஹம்துலில்லாஹ்! பலர் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளனர் என்பதை இங்கே நான் கூறிக் கொள்கிறேன்
//நாளைக்கே நமது மரணம் என்று உன் வணக்கத்தை / நல் அமல்களை செய். இன்னும் நூறு வருடம் வாழப்போவதை போல் உன் பொருளாதாரத்தை உயர்த்த உழை.//
இந்த வாசகத்தை அதிரை நிருபரின் தலைப்பில் நிரந்தரமாக இட்டுவைக்கலாமே நெறியாளர் ஆலோசிக்கவும்
//ஒரு பாக்டீரியா பேரன் பேத்தியோடு குடியிருக்கும் உணவை சாப்பிட்டுவிட்டு//
//தன்னை சுற்றி ஒரு ஒளிவட்டம் வந்து விட்டதாக கற்பனை செய்து கொண்டு தான் சொல்வதெல்லாம் சரி, தான் செய்வதெல்லாம் சரி என்று ஆட்டம் போட்டால் சறுக்கும் காலம் வந்தால் முதலில் ப்ரூட்டஸ்களை சந்திக்க தயாராக வேண்டியதுதான்//
//பொருளாதார வளர்ச்சி சமயங்களில் தவறையும் சரி என்று பேசச்சொல்லும்//
//அதே சமயம் பணம் சம்பாதிப்பதை ஏதோ பாவச்செயல் மாதிரி பேசும் முல்லாக்கள் சில இளைஞர்கள் மனதில் தனது ரப்பர் ஸ்டாம்பை ஆழமாக குத்திவிடுவதால் //
//சில பெரியவர்கள் செய்யும் தவறு தனது வாழ்க்கையை அப்படியே கார்பன் காப்பி எடுத்ததுபோல்தான் தன் வீட்டு பிள்ளைகளுக்கும் நடக்கும் என்று தன்னாலேயே கற்பனை செய்துகொண்டு சமயங்களில் பிள்ளைகளின் முன்னேற்றத்துகான முடிவுகளுக்கும் தடையாக இருக்கிறார்கள்.//
//வாழ்க்கையில் கிடைக்கும் வெற்றிகள் அனைத்திற்கும் நாம் மட்டும் பொறுப்பல்ல. நம்மை நெறிப்படுத்திய ஆசிரியர்கள், நம்மை கண்டித்த பெற்றோர், தவறு செய்தால் தண்டிக்கப்படுவாய் என்று சொன்ன பெரியவர்கள் எல்லோரும் சேர்ந்து மோல்ட் செய்யப்பட்டுதான் நாம் இப்போது வெற்றிபெற தகுதியுடையவானாகிறோம்.//
ஆகா அருமையான வாக்கிய அமைப்புக்கள் தட்டிக்கொடுக்க வேண்டிய இடத்தில் தட்டிக்கொடுத்து தட்டிக்கேட்க வேண்டிய இடத்தில் தட்டிக்கேட்டு அனுபவங்களை அழகிய முறையில் சொன்ன (எழுதிய )விதம் அழகு
[1]இஸ்லாத்தில் வழிபடுதலும் , கீழ்படிதலும் என்ற விசயம் இருக்கிறது. இங்கு கீழ்படிதல் என்பது இறைவனின் கட்டளைக்கு. சிலர் வழிபடுகிறார்கள், ஆனால் கீழ் படிய மறுக்கிறார்கள்.
[2]சரி இது போன்ற சமயங்களில் குர்ஆன், ஹதீஸ், மார்க்க அறிஞர்கள் என்று நமது சந்தேகத்தை தீர்க்க முடியும். ஆனால் கடைசியில் உள்ள மார்க்க அறிஞர்களை முதன்மை படுத்தி குர்ஆனை கடைசியாக்கி விட்டதால் பல குழப்பங்கள்.
I owe a big thanks to Dr.K.V.S Habeeb Mohamed for his wonderful speech, which i used in this above 2 matters in my articles.
அன்சாரி மாமா சொன்னதுபோல் “பாக்டீரியாவின் பேரன் பேத்திகளை” பற்றிபடித்தவுடன் களைகட்டபோவதாகதான் நினைத்தேன் ஆனால் மேற்க்கொண்டு படித்தவுடன் மெய்மறந்து ஆக்கத்தில் திளைத்துவிட்டேன்....எவ்வளவு பெரிய விசயங்களை அழகாகவும் ஆழமாகவும் மனதில் மென்மையாக உள் செல்லும் அளவிற்க்கு எழுதி இருக்கின்றீகள்..அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளையும்,விசாலமான அறிவையும் தருவானக ஆமீன்
//உங்களுக்கு தரப்பட்டிருக்கும் அனைத்து வசதிகளும் சோதிக்கத்தான் என தெரிந்தால்// அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டிய வார்த்தைகள்
#நெறி படுத்தப்பட்ட சட்டத்தை விட ,இறை அச்சமே
மனிதனை நல் வழிபடுத்தும் ...
#துஆ வில் இறைவனை அதிகமாக நன்றி கூறுங்கள்
#தொழுகை இல்லாத குடும்பம் மானகேட்டிற்கு
ஆளாகலாம் ..போன்ற கருத்துஜாகிர் போன்ற
நல்லவர்களிடம் உரையாடினால் கிடைக்கும் .உரையை
கட்டுரை மூலமாய் அறிந்து சந்தோசம் அடைகிறேன் .
எளிமையான் வாழ்க்கை ..என்றென்றும் நிம்மதியை
தரும் என்பதை நபி (ஸல் )தன்வாழ்கையில் செயல் படுத்தி
காட்டினார்கள் ..அதன் பின்னர் அறிவுரிதினார்கள் ..
நாம் இல்லாத ஊருக்கு ரூட்டு போட்டு பஸ் வருமா
என்று காலம் காலமாய் காத்துக் கொண்டு இருக்கிறோம் ..,
நாளைக்கே நமது மரணம் என்று உன் வணக்கத்தை / நல் அமல்களை செய்.
இன்னும் நூறு வருடம் வாழப்போவதை போல் உன் பொருளாதாரத்தை உயர்த்த உழை.\\\\\\\
இந்தோனேசிய கூலி தொழிலாளி மட்டுமல்ல .இந்தோனேசியா அறிவு ஜீவி ..
"நாம் வாழும் காலம் , சம்பாதிப்பது எல்லாம் ஒரு மேகம் மாதிரி மாற்றங்களுக்கு உட்பட்டது. நமக்கு அள்ளித்தருபவன் இறைவன் தான் என்பது சரியாக புரிந்தால் மனது நிச்சயம் சாந்தப்படும். இந்த உலகத்தில் எத்தனையோ நீர் வளத்தை தந்தவன் தாகத்துக்காக ஒரு டம்ளர் தண்ணீர் கிடைக்காமல் மரணிக்கும் சூழ்நிலையை எத்தனையோ மனிதர்களுக்கு கொடுத்திருக்கிறான்.
அதே சமயம் பணம் சம்பாதிப்பதை ஏதோ பாவச்செயல் மாதிரி பேசும் முல்லாக்கள் சில இளைஞர்கள் மனதில் தனது ரப்பர் ஸ்டாம்பை ஆழமாக குத்திவிடுவதால் சில இளைஞர்கள் தான் செய்வது தவறு என்று தெரியும்போது தனது மகள் கல்யாண வயதுக்கு வந்துவிடுகிறது. இனிமேல் கிடைத்த குறுகிய காலத்துக்குள் தனது தேவைகளை பார்த்துக்கொள்ள அந்த இளைஞர்கள் அழையும்போது அந்த முல்லாக்கள் எந்த உதவியும் அந்த பாதிக்கப்பட்ட மனிதனுக்கு செய்வதில்லை. ஆரம்பத்திலேயே இந்த முல்லாக்கள் தனது கையாளாகாத தனத்தை மறைக்கத்தான் இப்படி போதிக்கிறார்கள் என்பதை உணர்ந்தால் இவ்வளவு பிரச்சினைகள் இருக்காது. எம்பெருமானார் முஹம்மது நபி [ஸல்] அவர்களின் எளிமையான வாழ்க்கையையும் தனது மகளுக்கு சீதனம் கொடுக்கும்போது இருந்த கஷ்டமான சூழ்நிலையை சொல்லும் அவர்கள் ஒருபோதும் நபி [ஸல்] “சம்பாதித்து வசதியாக வாழ்வதை” ஒருபோதும் தடை சொன்னதில்லை என்று சொல்வதே இல்லை."
அருமை.
//அதே சமயம் பணம் சம்பாதிப்பதை ஏதோ பாவச்செயல் மாதிரி பேசும் முல்லாக்கள் சில இளைஞர்கள் மனதில் தனது ரப்பர் ஸ்டாம்பை ஆழமாக குத்திவிடுவதால் சில இளைஞர்கள் தான் செய்வது தவறு என்று தெரியும்போது தனது மகள் கல்யாண வயதுக்கு வந்துவிடுகிறது. இனிமேல் கிடைத்த குறுகிய காலத்துக்குள் தனது தேவைகளை பார்த்துக்கொள்ள அந்த இளைஞர்கள் அழையும்போது அந்த முல்லாக்கள் எந்த உதவியும் அந்த பாதிக்கப்பட்ட மனிதனுக்கு செய்வதில்லை. ஆரம்பத்திலேயே இந்த முல்லாக்கள் தனது கையாளாகாத தனத்தை மறைக்கத்தான் இப்படி போதிக்கிறார்கள் என்பதை உணர்ந்தால் இவ்வளவு பிரச்சினைகள் இருக்காது. எம்பெருமானார் முஹம்மது நபி [ஸல்] அவர்களின் எளிமையான வாழ்க்கையையும் தனது மகளுக்கு சீதனம் கொடுக்கும்போது இருந்த கஷ்டமான சூழ்நிலையை சொல்லும் அவர்கள் ஒருபோதும் நபி [ஸல்] “சம்பாதித்து வசதியாக வாழ்வதை” ஒருபோதும் தடை சொன்னதில்லை என்று சொல்வதே இல்லை.//
இதுவே போல கல்வி விடயத்திலும் இளைஞர்களை “மூளைச் சலவை செய்து “என்ன படித்தாய் என்றெல்லாம் கப்ரில் கேட்கமாட்டார்கள்” என்றெல்லாம் பயான் செய்து கல்வியின் மீதான நாட்டத்தை முளையிலேயே கிள்ளி எரியும் முல்லாக்கள் பலர் உளர். “நடுநிலைச் சமுதாயம்” என்று அல்லாஹ்வால் அல் குர் ஆனில் முத்திரை பதிக்கப்பட்ட நம் சமுதாயம் எல்லாவற்றிலும் ‘நடுநிலையாக” இருப்போம். முல்லாக்களின் மூளையற்ற வார்த்தைகளால் வேலையற்றுப் போனவர்கள்; வணிகத்தை இழந்தவர்கள்;பட்டப்படிப்பை இழந்தவர்கள் கூறிய வாக்குமூலங்கள் கூறும் சான்றுகள், கண்கூடாகக் கண்ட உண்மைகளே வைத்து இக்கருத்துரையிடுகின்றேன்.
அன்புக்குரிய சகோ ஜாகிர்,எதை - எந்த பாராவை வைத்து கருத்திடலாம் என யோசிக்கும்போது,முடியவில்லை.ஆரம்பம் முதல் கடைசி வரி வரை எனக்கு நீங்கள்,சில குரான் வசனங்களுக்கும்,ஹதீஸுக்கும் விளக்கம் (தப்சீர்)தரும் முகமாகவே இருக்கிறது.மாஷா அல்லாஹ்,அந்த அளவுக்கு மிக அருமையாக விளக்கியுள்ளீர்கள்.இதுவரை நான் படித்த கட்டுரைகளில் இது ஒரு மணி மகுடம்.எனக்கு வார்த்தைகள் வரவில்லை உங்களை பாராட்ட,துவா செய்கிறேன்.அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக
அஸ்ஸலாமு அலைக்கும்
இந்த ஆக்கம் நம் மனதிற்கு நல்ல ஊக்கம்
முத்தான கருத்துக்கள், முடியாத தேடல்கள்.
எதிர்பார்ப்போம் அடுத்த படிக்கட்டில் புதியவற்றை
Noor Mohamed சொன்னது…
அருமை சகோ ஜாகிர், அஸ்ஸலாமு அலைக்கும்.
தங்களின் "படிக்கட்டுகள் ஏற்றம்" கட்டுரைகளை தொடர்ந்து மீண்டும் மீண்டும் படிக்கும் நான், அடிக்கடி கருத்துக்கள் கொடுப்பதில்லை. மாறாக தங்களின் கட்டுரையை law எனக் கொண்டு அதற்கு illustration ஆக பலருக்கு நான் பாடம் நடத்துகிறேன். காரணம் "படிக்கட்டுகள் ஏற்றம்" சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அறிய வேண்டிய அற்புத படைப்பு.
----------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். காக்கா உங்களைபோலவே என் எண்ணங்களும் சிலதில் கருத்தொன்றி இருப்பது வியப்பாய் இருக்கிறது. சகோ. ஜாஹிரின் ஆக்கம் பல நான் படித்து அனுபவிக்கிறேன் ஆனால் கருத்து பதிவதில்லை. இதை அவரிடமே பல முறை சொல்லி யுள்ளேன்.அவரின் ஆக்கம் ஒவ்வொன்றும் ஒன்றை முந்துகிறது ,அடுத்து, அடுத்து வருபவைகள்.அருமை. அல்ஹம்துலில்லாஹ்.
காக்கா, தாமதமான என் பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.
அல்லாஹ்வுடைய நியமத்கள் அது பிடுங்கப்படும் பொழுது தான் நாம் அதை நினைத்து அழுது புலம்புகின்றோம். வருந்தி வாடுகின்றோம். அந்த உணர்வை அழகுற தன் கட்டுரையில் வடித்திருக்கின்றீர்கள்.
மனிதர்கள் நல்லவர்களோ அல்லது கெட்டவர்களோ அல்லாஹ் அவர்களுக்கு பல அருட்கொடைகளை அள்ளித்தராமல் இல்லை. அதை நினைவுகூறுபவர் வாழ்வில் ஏற்றம் பெருகின்றனர். மறந்துபோவோர் வருந்தி வாடுகின்றனர்.
"அல்ஹம்துலில்லாஹி லில்குல்லி ஹால்" எல்லாச்சூழ்நிலையிலும் படைத்த அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறேன்.
நெடுந்தூர பயணங்களில் சில வேளை வயிற்றினுள் பெரும் சூராவளியை கொண்டு வந்து அடக்க, அடக்க வரும் மலமும், ஜலமும் பெரும் பொறுமைக்குப்பிறகு அது வெளியேற்றப்படும் பொழுது அதற்குப்பின் வரும் உடல் ராஹத்திற்கு நாமெல்லாம் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த மறந்து விடுகிறோம்.
யா! அல்லாஹ் உன் அருட்கொடைகளை நல்ல முறையில் அனுபவித்துக்கொண்டு உனக்கு நன்றி பாராட்டாமல் நன்றி கெட்டவனாக பெரும்பாலும் இருந்து விட்டேன், இருந்து வருகிறோம் எங்களை எல்லாம் அதன் பொருட்டால் தண்டித்துவிடாதே ரப்புல் ஆலமீனே.......எங்கள் மீது கருணை காட்டி விடு நாயனே....ஆமீன்.....யாரப்பல் ஆலமீன்...
//Shameed சொன்னது…
//நாளைக்கே நமது மரணம் என்று உன் வணக்கத்தை / நல் அமல்களை செய். இன்னும் நூறு வருடம் வாழப்போவதை போல் உன் பொருளாதாரத்தை உயர்த்த உழை.//
இந்த வாசகத்தை அதிரை நிருபரின் தலைப்பில் நிரந்தரமாக இட்டுவைக்கலாமே நெறியாளர் ஆலோசிக்கவும்//
நல்ல பரிந்துரை... தாராளமாக செய்யலாமே !
Thank you so much for all our brothers commented on this episode. Sorry for not thanking individually as i am preparing for works to do in this week.
All praises belongs to Allah.
we will meet in next episode [ most probably "women's role for a successful family"]
அன்புச் சகோ சாகிர் ஹுசைன்,
அருமையான கட்டுரை
>>>>மார்க்க அறிஞர்களை முதன்மை படுத்தி குர்ஆனை கடைசியாக்கி விட்டதால்<<<<<
அத்தனையும் முத்துக்கள் என்றாலும், அனைத்திலும் சிறப்பான வரி இதுவே என்பேன்!
அன்புடன் புகாரி
என்ன தான் இணைய தளத்தில் வெளியிட்டாலும் படித்து விட்டு எல்லாத்தையும் விட்டு விடுவார்கள். பணம் சம்பாதிப்பதில் மோகம் இருப்பது போல் இறைவழிபாட்டில் யாரும் அதிகமாக
மோகம் கொள்வதில்லை. பணமானது மனிதர்களை எல்லாவற்றையும் மறைத்து விடுகிறது.
மனிதனுக்கு பணம் அதிகமாக கையில் வந்துவிட்டால் என்ன செய்வது என்றல்லாம் தெரியாமல் ஆடுகிறான். பணம் வந்துவிட்டாலே இறைவனை மறந்து விடுகிறான் பணத்துக்கு எவ்வளவு
முக்கியத்துவம் கொடுக்கிறானோ அந்த அளவுக்கு இறைவனுக்கு அதி முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
இறைவனுக்கு மனிதன் நன்றி கெட்டவனாக ஆகிவிடுகிறான். பணம் சம்பாதிப்பதில் மனிதன் குறிகோளாக இருக்கிறான் ஆனால் இறைவனை வணங்குவதற்கு மனிதன் சோம்பேறித்தனம் படுகிறான். இறைவனுக்கு செய்ய வேண்டிய காரியங்களை முழுமையாக செய்தாலே போதும்.
"வந்ததிலேயே இதுதான் சிறப்பான அத்தியாயம்" என்று ஒவ்வொரு முறையும் எண்ண வைப்பது என்ன யுக்தியோ!
Post a Comment