அவளைச் சுற்றி...!
அப்பெண்ணுக்கு நிகழ்ந்தது என்ன? உலக இயல்பில் நிகழும் அன்றாட நிகழ்வுகளுள் ஒன்றுதான் அவளுக்கும் நிகழ்ந்தது. இறையன்பு கொண்டோரைச் சோதிக்கும் நிகழ்வுகளுள் ஒன்று!
“ஒவ்வோர் ஆன்மாவும் மரணத்தைச் சுகித்தே தீரும். நன்மை-தீமை செய்யும் நிலையில் வைத்து உங்களை நாம் சோதிக்கிறோம். பின்னர் நீங்கள் நம்மிடமே மீளவேண்டியவர்களாவீர்கள்.” -அல்குர்ஆன் (அன்பியா) 21:35
இல்லற வாழ்வின் முதற்படியில் ஏறி நின்ற அவ்விளம் பெண்ணுக்கு இந்தச் சோதனைதான்! அதனை நுகர்ந்தபோது, அவளுடைய உள்ளத்து உணர்ச்சிகள், எண்ண ஓட்டங்கள், சிந்தனைச் சிதறல்கள் எவ்வாறு இருந்தன? அவற்றின் இறுதி இலக்கு யாது? இவற்றை அப்பெண் வாயிலாகவே கேட்போமே:
வழக்கமாக தேவாலயம் செல்லும் (Church-going) கத்தோலிக்கக் குடும்பத்தில் வளர்ந்தவள் நான். அங்குச் சென்றபோதெல்லாம், என் மனம் எங்கோ அலைந்து திரிந்தது. கல்வி கற்கப் பள்ளி சென்ற நாட்களிலும் இதே நிலைதான். சிலைகளுக்கு முன்னால் மண்டியிட்டேன். ஓங்கியொலித்த உபதேசங்களைக் கேட்டேன். பயன்?
கத்தோலிக்கத்தின் அடுத்த வீடாகிய புராட்டஸ்டாண்டுக்குள் நுழைந்து பார்த்தேன். அங்கும் நான் தேடியது கிடைக்கவில்லை. ஓர் ஆன்மிகச் சூனியம்! பாழ்பட்ட பாலை வெளி! கடவுளைத் தேடினேன்; காண முடியவில்லை! கடவுளை நோக்கிய தெளிவான பாட்டை எங்குமில்லை! சில நாட்கள் தேவாலயத்தை விட்டு ஒதுங்கியும் இருந்ததுண்டு. மன நிம்மதியில்லை. துள்ளித் திரிந்த பள்ளிப் பருவத்திலிருந்து, பக்குவப்பட்ட பகலின் தொடக்கத்திற்கு வந்தேன். அப்போது, கடவுளைத் தேடுவதில் பயனில்லை என்ற முடிவுக்கு வந்தேன்! காரணம், கடவுளின் வழியைக் காட்டுவோர் எவரையும் காண முடியவில்லை.
இந்த நிலையில்தான், என் மனம் கவர்ந்த ஒருவரைக் கணவராகக் கரம் பிடித்தேன். இல்வாழ்க்கை இனித்தது. விளைவு? சில மாதங்களில் கர்ப்பவதியானேன். தாய்மை என்ற உயர் பதவியை நினைத்தபோது, என் உள்ளமும் உடலும் சிலிர்த்தன. அந்த இன்ப நினைவுடன் பின்னர் நான் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டேன். சில நேரங்களில் தனிமை கிடைத்தது. அந்நிலையில், மீண்டும் முகிழ்த்தது, மதம் பற்றிய சிந்தனை. கடவுளின் வழி எது? எனக்கும் கடவுளுக்கும் இடையில் இன்னொருவர் ஏன்? நான் யாரை வணங்குகிறேன்? ‘அந்த மூவருள்’ கடவுள் யார்? கடவுளின் சார்பில் இருந்து, மனிதர் ஒருவர் என் பாவங்களை எப்படி மன்னிப்பார்? என் சிந்தனை இப்போது என் வயிற்றில் இருந்த குழந்தையின் பக்கம் சென்றது. ‘பிறக்கும் குழந்தைகள் எல்லாம் பாவத்தைச் சுமந்த நிலையில்தான் பிறக்கின்றன’ என்று கூறுகின்றது கிருஸ்தவம்! எனக்குப் பிறக்கப் போகும் குழந்தையும் பாவத்தோடுதான் பிறக்கப் போகிறதா? முடியாது!
கலப்பற்ற காதலுக்கும், தூய்மையான உறவுக்கும் பிறகு பிறக்கப்போகும் என் அன்புக் குழந்தை, திருச்சபைக்கு வந்து, புனித நீராட்டம் நடத்தப்படவில்லை என்றால், அது இறக்கும்போது, அதற்குக் கிருஸ்தவ மயானத்தில் இடமில்லையாம்! வேடிக்கை! வேதனை!
1982 ஜனவரி 22. நானும் என் கணவரும் ஆவலுடன் எதிர்பார்த்த அன்புக் குழந்தை அலெக்சான்ட்ரா பிறந்தாள்! எங்களின் மகிழ்வுக்கு எல்லையில்லை. அவள் பிறப்பதற்கு முன் இருந்த (மதம் பற்றிய) என் சிந்தனையை மறந்தேன். அன்பு! பாசம்1 இன்பம்! இரக்கம்! எதிர்காலத்தைப் பற்றி ஏகப்பட்ட கனவுகள்!
என் செல்ல மகள் பிறந்து ஐந்து நாட்கள். ஐந்து நாட்கள் ஐந்தே நிமிடங்களாகக் கழிந்தன. அப்போதுதான் அந்தச் செய்தியைக் கொண்டுவந்தார் அந்த மருத்துவ மனையில் பணியாற்றிய முஸ்லிம் டாக்டர் ஒருவர். அது செய்தியில்லை. பேரிடி! வழக்கமான பரிசோதனைக்கு (Routine check-up) எடுத்துச் செல்லப்பட்ட என் இதயக் கனி இறந்துவிட்டாளாம்! நம்ப முடியவில்லை! இல்லை! இல்லை! இல்லை!
டாக்டர் சொன்னார்: “சகோதரியே! வள்ளமையுள்ள இறைவன் அல்லாஹ் ஏற்படுத்தி வைத்த விதி இது. பொறுமை செய்! அல்லாஹ் அருள் புரிவான்!”
பிறந்து ஐந்தே நாட்களில் என் கண்மணி அலெக்சான்ட்ரா இறந்துவிட்டாள்! நானும் என் கணவரும் மீளாத் துயரில் ஆழ்ந்தோம். அவளின்றி, வெற்றுக் கைகளுடன் மருத்துவ மனையைவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டபோது....... அம்மம்மா! நான் பட்ட வேதனை! அது சொல்லுந்தரத்தன்று! இந்த இழப்பை எப்படி நான் ஏற்றுக்கொள்வேன்? என் உலகு இருண்டுபோய்விட்டது!
அவளுடைய இறப்பு, முன்கூட்டியே இறைத் தீர்மாணம் (pre-destined) ஆனது என்றல்லவா அந்த டாக்டர் சொன்னார்? எங்களுக்கு ஏற்பட்ட இழப்பினால், இடிந்துபோன என்னையும் என் கணவரையும் இந்த ஒரு சொல்லால் ஆறுதல் படுத்த முடியுமா? ஆனால், என் மனப் போராட்டத்தின் பின் ஏற்பட்ட சிந்தனையின் இறுதியில், அதுவே உண்மை என்பது உறுதியாயிற்று!
இறைத் தீர்மாண உண்மை என்ற கசப்பான மாத்திரையைத் துன்பத்துடன் விழுங்கினேன்! ‘ஒருவேளை, அதுதான் நிகழவேண்டும் என்பது இறை விருப்பமோ?’ அன்புக் கனியான அலெக்சான்ட்ரா, அழகுச் சிலையான அலெக்சான்ட்ரா, பாவமற்ற நிலையில் தூய்மையாகப் பிறந்தாள். எப்பாவமும் அறியாத எங்கள் இதயக் கனியைக் கிருஸ்தவக் கொள்கைப்படி, பாவத்துடன் பிறந்தவளாக எப்படிக் கூற முடியும்? ‘இல்லை!’ என்ற குரல் என் இதயத்தில் ஓங்கி ஒலித்தது!
அவள் பிறந்து உயிர் வாழ்ந்த அந்த ஐந்து நாட்களில் என்னால் அவளை நன்கு பார்க்கக்கூட முடியவில்லை! அந்த அளவுக்கு நான் பிள்ளைப்பேற்றினால் பலவீனப்பட்டிருந்தேன்! இப்போது நினைத்தால்கூட, அது என் இதயத்தைக் கிள்ளுகின்றது!
தாய் தந்தையின் அன்பை மட்டுமே பெற்று ஐந்தே நாட்கள் வாழ்ந்த அந்தப் பச்சிளங்குழந்தை ‘இயற்கைப் பாவம்’ ( Original Sin ) உடையதாக என் பழைய மதம் கூறிற்று. அது எப்படி இருக்க முடியும்? இல்லை! இல்லை! இல்லவேயில்லை! ஒரு நூறு தடவை அல்ல, ஓராயிரம் தடவை கூறுவேன், ‘இல்லை’ என்று!
பிறப்பு, இறப்பு, இழப்பு, ஏக்கம், தாக்கம் எல்லாம் சேர்ந்து என்னை வாட்டின! என் நிலையை என்னால் உணர முடியவில்லை! முயன்றேண்; முடியவில்லை! அந்த நாட்கள்! அம்மம்மா! எத்துணை வேதனை மிக்க, கடினமான நாட்கள்! வெறுமை! திக்கற்ற நிலை! பயங்கர நினைவுகள்! இவற்றையெல்லாம் களைய நான் பட்ட பாடு! வெற்றி பெற்றேனா? தோல்வியைத் தழுவினேனா? எனக்குத் தெரியாது!
அவளை நினைக்குந்தோறெல்லாம், என் மார்பகங்களிலிருந்து சுரந்து பீரிட்டு வந்த தாய்ப் பாலின் குளுமை, எனது வெந்துபோன உணர்வுத் தணலில் கலந்து, சூடாக வடிந்தது! அவள் மறைந்த ஏக்கத்தில் என் கணவரும் நடைப் பிணமானார்! நானும் வெறுமையில்! இந்த இழப்பை நான் எப்படித் தாங்கினேன்? எனக்கே தெரியாது! நான் ஏன் உயிரோடிருந்தேன் என்றும் எனக்குத் தெரியாது!
என் கண்மணி மகளைக் கையில் ஏந்தி, அதரங்களால் முத்தமிட்டு, மார்பைத் திறந்து மாந்தக் கொடுக்கப் பாலுண்டு! ஆனால், அவள் இல்லையே உருவத்தில்! இல்லையில்லை! இருக்கின்றாள் என் இதயத்தில்! அவள் வேறெங்கும் போய்விடவில்லை! அவள் என்னோடே இருக்கின்றாள்! என் மடியில்! என்னைச் சூழவுள்ள இயற்கை எழிலினூடே ஓடித் திரிகின்றாள்! அவளைப் போன்ற மழலைச் செல்வங்களின் மகிழ்ச்சியான முகமலர்களில்! நான் சுவாசிக்கும் மூச்சில்! சிந்தையை வருடும் சிறுமழைத் துளியில்! என் கணவரின் கண்களிலும்!
விதி! ஆம்; விதி! நான் என் இயல்பான உணர்வின் பக்கம் மீண்டு வர முயன்றேன், சிறிது சிறிதாக, அலெக்சான்ட்ராவின் நினைவுடன், அமைதியாக, அவளுடன் இரண்டறக் கலந்து, அவள் காட்டிய வழியில்! அவளைப் பிரிந்ததுதான் விதியா? இறைவன் விதித்ததா? அவனது திட்டமா? அந்த இறைவனோடு முதல் முறையாக நெருக்கமானதை அப்போதுதான் உணர்ந்தேன்!
ஒரு நாள், படுக்கையில் சாய்ந்து, உறக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடைப்பட்ட நிலையில் அயர்ந்து படுத்திருந்தேன். என் முன்னால் வெளிச்சமொன்று பரவிற்று! அது கனவா? வினோதமான, வெண்மையான பகுதியொன்றில் என்னைக் கண்டேன். என்னைச் சுற்றி அறிமுகமில்லாத மக்கள் கூட்டம்! ஆண்களும் பெண்களும்! எல்லாரும் வெண்மையான உடை அணிந்திருந்தனர்! நானும்தான்! என் சொந்தக்காரர்களுடன் எப்படி மகிழ்ந்தும் இணைந்தும் இருப்பேனோ, அப்படியே அவர்களுக்கிடையே நான்! என் மீது அவர்கள் அன்பு பாராட்டினர்! எல்லாரும் வட்ட வடிவமாக, நடுவில் ஏதோ ஒன்றின் மீது எங்கள் பார்வைகளைச் செலுத்தி நின்றோம்!
காட்சி மறைந்தது; கண் விழித்தேன். கண்ட காட்சியைத் திரும்பத் திரும்ப என் மனக் கண்முன் கொண்டுவந்து, எல்லையில்லா இன்பத்துடன் அசைபோட்டு, அசையாமல் படுத்துக் கிடந்தேன். இக்கனவு எனக்கு ஏன் தோன்றவேண்டும்? அதுதான், மருத்துவ மனையில் அந்த முஸ்லிம் டாக்டர் சொன்ன ‘விதி’ என்பதோ?
நான் கண்ட கனவை என் கணவரிடம் கூறியபோது, அவரும் மகிழ்ந்தார். எங்கள் இருவரையும் ஏதோ ஓர் அற்புதமான வாழ்க்கையின் பக்கம் அக்கனவு இட்டுச் செல்லும் எதிர்பார்ப்பில் சில நாட்களைக் கடத்தினோம்.
ஒரு நாள், யாரோ முஸ்லிம்களின் வேதமான புனித குர்ஆனைத் தந்தார்கள். படிக்கத் தொடங்கினேன். படித்துக்கொண்டே இருந்தேன். தொடர்ந்து பல அத்தியாயங்களைப் படித்தேன். மிக விரைவில் நான் அதன் பக்கம் ஈர்க்கப்பட்டேன். எனது கேள்விகளுக்கு அது பதில் தந்துகொண்டிருந்தது. எல்லாம் எனக்குப் பொருந்தி வந்தன. இதுதான் ‘விதி’யின் விளைவா?
அது 1982இன் கோடைக் காலம். வீட்டில் இருந்த டெலிவிஷனைப் பார்த்துக்கொண்டிருந்தேன். சேனலை மாற்றியபோது, இடையில் அரபுச் சேனல் ஒன்று வந்தது. அதில் முஸ்லிம்களின் புனிதத் தலமாகிய மக்காவும், அதிலிருக்கும் கஅபாவும் தோன்றின. முஸ்லிம்கள் தமது ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றும் காட்சி அது. அவர்களின் ஊடே நானும் கலந்திருப்பது போன்ற ஓர் உணர்ச்சி! இறைவா! இது என்ன விந்தை?! இறந்துபோன என் மகளைச் சுற்றி என் எண்ண ஓட்டங்கள் இருந்த நிலையில், இது என்ன தொடர்பு? இதுதான் ‘விதி’யா? எங்களை நேர்வழியிலாக்க நீ செய்து காட்டும் திட்டமா? மறைந்த எங்கள் மகள் மூலம் நீ காட்டிய நேரிய பாட்டையா?
குர்ஆனைப் படித்துக்கொண்டிருந்த வேளையில், இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் அருள் மொழியொன்றைப் படித்த நினைவு வந்தது. “பிறக்கும் குழந்தைகளெல்லாம் (தூய்மையாக) இஸ்லாமிய இயற்கையில்தான் பிறக்கின்றன.” ஆமாம்! என் மகளும் தூயவள்தான்! இந்த உண்மையை எனக்கு உணர்த்தத்தான் அவளைச் சுற்றி என் நினைவுகள் இத்தனை நாட்கள் வட்டமிட்டுக்கொண்டிருந்தனவோ?
இங்கிலாந்தின் மெர்சிசைடு(Merseyside) மாவட்டத்திலுள்ள வாலசி(Wallasey) என்ற ஊரின் பள்ளிவாயிலில் நானும் என் கணவரும் இஸ்லாத்தில் இணைந்தோம்! நான் ‘சுமய்யா’ ஆனேன்; அவர் ‘ரஷீத்’ என்ற பெயர் பெற்றார்! பின்னர், இஸ்லாமியச் சட்டத்தின்படி, எங்கள் திருமணத்தைப் புதுப்பித்துக் கொண்டோம்! எங்களுக்குக் கிடைத்த பேற்றை எண்ணி மகிழ்ந்தோம்!
அதிரை அஹமது
5 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
அல்லாஹ் பரிசுத்தமானவன் !
நம் செயல்களாலும் அமல்களாலும் ஈர்க்கலாம் அனைவரையும், அல்லாஹ்வுக்காக செய்யும் அமல்களில் ஊன்றியிருப்போம் அவ்வாறே செயல்களையும் அமைத்துக் கொள்வோம் இன்ஷா அல்லாஹ்...
//இறையன்பு கொண்டோரைச் சோதிக்கும் நிகழ்வுகளுள் ஒன்று!// தனக்கு பிரியப்பட்டோரை இறைவன் சோதிப்பான் என்று சொல்வார்கள். அந்த சோதனையின் முடிவு நனமையாகவே இருக்கும். அந்த வகையில் // நானும் என் கணவரும் இஸ்லாத்தில் இணைந்தோம்!// என்கிற தேன் குடிக்கும் முன்பு துன்பத் தேநீக்களுடன் போராடிய சகோதரி சுமைய்யா அந்த துன்பங்களை சுமையாக எடுக்காமல் சுகமாக ஏற்று இஸ்லாத்தில் இணைந்ததை அறிந்து மகிழ்வோம்.
உரிய நேரத்தில் உயரிவனைக் குறித்து கூறப்பட்ட ஓரிரு சொற்கள், இவ்வளவு பெரிய மாற்றத்தை உருவாக்கியிருக்கின்றது. அல்லாஹ் மிகப்பெரியவன். !!
ஒருவருக்கு அல்லாஹ்
இஸ்லாம் எனும் நேர்வழி
கொடுக்க நாடினால் ..
நம்மவரின் நற் செயல்
ஒன்றினால் ஈர்க்க பட்டு
இஸ்லாம் எனும் நேர்வழியை
நாடுவர் ...நல்ல நசீப்
நற் பேரு பெற்ற பெண் மணி
//ஒரு நாள், யாரோ முஸ்லிம்களின் வேதமான புனித குர்ஆனைத் தந்தார்கள். படிக்கத் தொடங்கினேன். படித்துக்கொண்டே இருந்தேன். தொடர்ந்து பல அத்தியாயங்களைப் படித்தேன். மிக விரைவில் நான் அதன் பக்கம் ஈர்க்கப்பட்டேன்.//
//அது 1982இன் கோடைக் காலம். வீட்டில் இருந்த டெலிவிஷனைப் பார்த்துக்கொண்டிருந்தேன். சேனலை மாற்றியபோது, இடையில் அரபுச் சேனல் ஒன்று வந்தது. அதில் முஸ்லிம்களின் புனிதத் தலமாகிய மக்காவும், அதிலிருக்கும் கஅபாவும் தோன்றின. முஸ்லிம்கள் தமது ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றும் காட்சி அது. அவர்களின் ஊடே நானும் கலந்திருப்பது போன்ற ஓர் உணர்ச்சி! //
இந்த பதிவில் பின் வரும் விடையங்கள் தெளிவாகிறது.
குர்ஆன் மற்றும் நபிமொழி புத்தகங்களை இஸ்லாத்தை பற்றி அறியாத மக்களுக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும்.
மீடியாவை முறையாக பயன்படுத்தபட்டால்,நிச்சயம் மாற்று மத சகோதர சகோதரிகளிடம் நம்முடைய தூய மார்க்கத்தின் தாக்கம் ஏற்படும். இன்ஷா அல்லாஹ்..
நல்ல பயனுல்ல பதிவு...
Post a Comment