கணினிக் கோளாறினால் கடைத்தேறினேன்!
“கம்ப்யூட்டரில் ஏற்பட்ட சிறு கோளாறு (Computer Glitch), என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது! ஆம்; நான் வாழ்ந்த இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வந்தேன்! இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறி என் இதயத் துடிப்பாயிற்று! அது என் இரத்த நாளங்களினூடே புகுந்து, புத்துயிர் அளித்தது! இப்போது என் வாழ்க்கை, இஸ்லாம் இல்லாமல் பயனற்றது என்ற நிலைக்கு வந்துவிட்டது!” என்று கூறி, நம்மை வியக்க வைக்கிறார் ‘சதர்ன் பேப்டிஸ்ட்’ ( Southern Baptist ) கிருஸ்தவப் பிரிவில் இருந்து, ‘ஆமினா’ எனும் அருள் மங்கையாக மாறிய அற்புதப் பெண்மணி.
இம்மாற்றம் நிகழ்ந்ததெப்படி? இப்பெண்ணே கூறும் தன் வரலாற்றின் சாரம் இது:
நான் ஒரு பெண்ணுரிமை அடிப்படைவாதியாக இருந்தேன். அது பற்றிய செய்திகளையே தொகுத்து வானொலியில் ஒலிபரப்புச் செய்தவள். கல்வி கற்ற நாள் முதல், அசாத்தியமான திறமை பெற்றிருந்தேன். பள்ளிப் படிப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, கல்வி ஊக்கத் தொகை ( Scholarship ) வழங்கப் பெற்றிருந்தேன். கல்லூரிப் படிப்பின்போதே சொந்தமாக வியாபாரம் தொடங்கினேன். அதிலும் எனக்கு வெற்றிதான். அந்த நேரத்தில்தான் ஓர் அசம்பாவிதம் -இல்லையில்லை - ஓர் அற்புதம் நிகழ்ந்தது!
1975 ஆம் ஆண்டு அது. அப்போதுதான் மனிதனின் அற்புதப் படைப்புகளுள் ஒன்றான ‘கம்ப்யூட்டர்’ அறிமுகமாயிருந்தது. முதலாவதாகக் கல்லூரிகளில்தான் கணினிகள் பொருத்தப்பட்டிருந்தன. அப்போது கல்லூரிப் பட்டப் படிப்புக்காகக் கணினியில் முன்பதிவு செய்யும் முறை வழக்கத்துக்கு வந்தது. நான் தேர்ந்தெடுத்த ‘பொழுதுபோக்கு’ ( Recreation ) பற்றிய ஆய்வுக்காக என் பெயரை முன்பதிவு செய்துவிட்டு, எனது வியாபார நிறுவனம் இயங்கிய ஆக்லஹாமாசிட்டியை நோக்கி விரைந்தேன்.
திரும்பி வருவதற்குத் தாமதமாயிற்று. இரண்டு வாரங்கள் தாமதமாக வகுப்பிற்குள் நுழைந்தேன். முற்றிலும் புதிய சூழல்! என்ன நடந்தது? நான் எதிர்பார்த்த பாடம் நடக்கவில்லை! எனது பெயர்ப் பதிவு அலுவலகத்திற்குச் சென்றேன். என் பெயர், Recreation என்பதற்குப் பகரமாக, Theater Class ( அரங்குப் படிப்பு ) என்பதில் பதிவாகியிருந்தது! என்ன கொடுமையிது? விளக்கம் கேட்டபோது, எனக்குக் கிடைத்த பதில், Computer Glitch ( கணினித் தவறு )! அந்தப் பிரிவில், மாணவிகள் நடித்துக் காட்டவேண்டுமாம்! ஆனால் நானோ, சங்கோஜி! நடிப்பு பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை என்னால். என்ன செய்வது? பதிவு செய்ததை மாற்றவும் முடியாது. அதில் சேர்ந்து பயின்றால், தேர்வு பெறவும் முடியாது. அவ்வாறு தேர்வு பெறாவிட்டால், எனக்குக் கிடைத்துவந்த கல்வி உதவித் தொகை நிறுத்தப்பட்டுவிடும்.
ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, வகுப்பாசிரியரிடம் சென்றேன். நடிப்புக்குப் பகரமாக, ஒப்பனைக் கலை ( Costume ) யைத் தரக் கோரி, அதற்கான அனுமதியையும் பெற்றேன். அந்த வகுப்பில் சென்று பார்த்தபோதுதான் உணர்ந்தேன், ‘எலிக் குகையை விட்டு புலிக் குகைக்கு வந்துவிட்டோமே’ என்று! அங்கிருந்த வகுப்பு மேடையில் ஒட்டக ஓட்டி வேடமிட்ட அரபு நாட்டு மாணவர்கள்! ‘பைபிலின் கடவுளாகிய இயேசுவை நம்பாத அசிங்கமான ( Dirty heathens! ) காட்டுமிராண்டிகள்! இப்பிறவிகளுக்கு இடையில் நாம் நடமாடுவதா? No way! வகுப்பைப் புறக்கணித்தேன்.
என் கணவர் சொன்னார்: “கடவுள் எதற்கும் ஒரு காரணத்தை வைத்துத்தான் இருப்பார். நீ முற்றிலுமாகப் பின்வாங்குவதற்கு முன் நன்றாகச் சிந்தித்துக்கொள். அது மட்டுமன்றி, உனக்கு வந்துகொண்டிருக்கும் கல்வி உதவித் தொகையும் நின்றுபோகும். நன்றாகச் சிந்தித்துப் பார்.”
அதன் பின்னர், தனிமையில் இருந்து இரண்டு நாட்களாகச் சிந்தித்தேன். முடிவு? வகுப்பில் சேர்வது! ‘இது அந்த அரபுகளைக் கிருஸ்தவர்களாக மாற்றுவதற்குக் கிடைத்த வாய்ப்பாகக் கூட இருக்கலாம்’ என்ற சிந்தனையுடன், எனக்கு முன்னால் குறிக்கோள் ஒன்றை அமைத்துக்கொண்டு, ( a mission to accomplish ) முனைப்புடன் செயலாற்றத் தொடங்கினேன்.
கம்ப்யூட்டர் கோளாறினால், கிருஸ்தவ மதம் பற்றிய ஆய்வில் தடுக்கி விழுந்தேன். ஆர்வம் கூடக் கூட, அறிவும் கூடி வந்தது. அதனால், கிருஸ்தவ மதம் பற்றிய செய்திகளைப் பிறருக்கு எடுத்துக் கூறும் நிலைக்கு வந்தேன்.
வகுப்பில் இடையிடையே அந்த அரபு மாணவர்களுடன் கிருஸ்தவ மதம் பற்றிய செய்திகளை வலிந்து கூறிக்கொண்டிருந்தேன். “இயேசு கிருஸ்துவைப் பாதுகாப்பாளராக ஏற்காவிட்டால், நிரந்தர நரகம்தான்” என்று தொடங்கி, படிப்படியாக பைபிலின் செய்திகளை அவர்களுக்கு விளக்கத் தொடங்கினேன். ஆனால், அவர்கள் என் பேச்சைக் கேட்டார்களே தவிர, மனம் மாறியதாகத் தெரியவில்லை!
‘இவர்களை எப்படி மாற்றுவது?’ சிந்தித்த என் மனத்தில் ஒரு யோசனை உதித்தது. ‘அவர்களின் வேதத்தைப் படித்து, அதிலிருந்தே மேற்கோள் காட்டலாமே!’ இது ஒரு புதுமையான ஐடியாவாகத் தோன்றியது. அடுத்தடுத்த நாட்களில், அவர்களுள் ஒருவரிடமிருந்தே முஸ்லிம்களின் வேதமாகிய குர்ஆனைப் பெற்றேன். அத்துடன் இஸ்லாத்தைப் பற்றி விளக்கும் நூலொன்றும் எனக்குக் கிடைத்தது. மகிழ்ச்சியுடன் அந்நூல்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்கத் தொடங்கினேன். முதலில் குர்ஆனை முழுவதுமாகப் படித்து முடித்தேன். பின்னர், இஸ்லாத்தைப் பற்றி இன்னும் பதினைந்து நூல்களை வாங்கிப் படித்தேன். மீண்டும் குர்ஆனைக் கையில் எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். மீண்டும் மீண்டும் படித்தேன். என் வாதங்களுக்கு வலு சேர்க்கும் தகவல்களைக் குறிப்பெடுத்தேன். ஆனால், படிப்படியாக அந்த மிகையான ஈடுபாடு என்னை வேறொரு மாற்றமான கொள்கையின் பக்கம் இட்டுச் சென்றது!
இப்போது அந்த அரபு மாணவர்களைப் பற்றிய சிந்தனையே எழவில்லை. என்னைப் பற்றியே சிந்திக்கத் தொடங்கினேன். பல மாதங்களாகத் தனிமையில் அந்த நூல்களைப் படிப்பதும், படித்ததைப் பற்றிச் சிந்திப்பதுமாக என் நேரங்கள் கழிந்தன. இத்தனையும், என் கணவருக்குத் தெரியாமல்தான் நடந்தன. இருப்பினும், என்னுடைய நடையுடை பாவனைகளில் தெரிந்த சிறு சிறு மாற்றங்களை என் கணவர் கவனிக்கத் தவறவில்லை.
முன்பு வெள்ளி, சனி நாட்களில் மதுபானக் கடை, பார்ட்டிகள் போன்றவற்றிற்கு ஒன்றாகக் கணவருடன் சென்றுவந்தேன். இப்போது அவற்றைத் தவிர்க்கத் தொடங்கினேன். வீட்டில்கூட மது குடிப்பதில்லை; பன்றிக் கறி உண்பதில்லை. இவை எல்லாம், என்னை என் கணவரிடம் காட்டிக் கொடுத்துவிட்டன என்றே கூறவேண்டும். ஆனால், அவரோ, வேறு விதமாகச் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்! எனக்கு வேறு யாருடனோ தொடர்பு இருப்பதாக எண்ணினார்! ஏனெனில், அவரது கணிப்பின்படி, ஒரு ஆணுக்காகத்தான் பெண்ணொருத்தி மாறுவாள். இறுதியில், இருவரும் இணைந்திருப்பதில் பயனில்லை என்று முடிவு செய்து, என்னைத் தனியாகப் பிரிந்து போய்விடுமாறு கூறினார்! அதன்படியே, நானும் மாறிச் சென்றுவிட்டேன்.
நான் இஸ்லாத்தைப் பற்றிப் படிக்கத் தொடங்கியபோது, எனது சொந்த வாழ்வில் மாற்றம் உண்டாகும் என்பதை நான் எதிர்பார்க்கவேயில்லை. இஸ்லாம் என்னை மாற்றிவிடுமா? நான் இஸ்லாத்தைக் கொண்டு அமைதியான வாழ்வையும் அகமகிழ்வையும் அடைந்துகொள்வேன் என்று ஒருவரும் எனக்கு உபதேசம் செய்யவில்லை.
குர்ஆனையும் மற்ற நூல்களையும் வாசிப்பதன் மூலம் என்னிடத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டது என்னவோ உண்மை. ஆனால், நான் ஒரு கிருஸ்தவப் பெண்; என் மதத்தின் மேல் பற்றுடையவள் என்பதை எப்போதும் காட்டிக்கொள்வேன்.
அன்றொரு நாள் என் வீட்டுக் கதவை யாரோ தட்டினார்கள். திறந்து பார்த்துத் திடுக்கிட்டேன்! வந்தவர்கள் நான்கு அரபுகள்! அவர்களுள் தலைவர் போன்று தெரிந்தவர், தன் பெயர் அப்துல் அஜீஸ் ஆலு ஷைக் என்றும், மற்ற மூவரும் தன் நண்பர்கள் என்றும் அறிமுகம் செய்துகொண்டார். நான் இஸ்லாத்தைத் தழுவ ஆயத்தமாக இருப்பதாகத் தமக்குத் தகவல் கிடைத்ததாகவும், அதனால்தான் என் வீட்டுக்கு வந்ததாகவும் அவர் கூறினார். அவர்கள் வந்த நோக்கத்தை அறிந்தபோது நான் அதிர்ச்சியுற்றேன்! “இல்லை; நான் ஒரு கிருஸ்தவப் பெண். எனினும், எனக்குச் சில ஐயங்கள் உள்ளன. உங்களுக்கு நேரமிருந்தால், உங்களிடம் அவற்றைக் கேட்கலாமா?” எனக் கேட்டேன்.
எனது அழைப்பையும் அனுமதியையும் பெற்று, அவர்கள் என் வீட்டினுள் நுழைந்தனர். எனது பல மாத ஆய்வின் பின் எழுந்த ஐயப்பாடுகளை, ஒவ்வொன்றாகக் கேட்கத் தொடங்கினேன். அந்த இஸ்லாமிய அழைப்பாளர் குழுத் தலைவர் அப்துல் அஜீஸ் எனது கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் அழகாகவும்
அமைதியாகவும் பதில் கூறிக்கொண்டே வந்தார். அவருடைய பேச்சில் அழுத்தம் இருந்தது; ஆனால், ஆவேசமில்லை. கேட்பவரை மட்டம் தட்டிப் பேசவில்லை; கேட்ட கேள்வி வேடிக்கையானது என்றோ, சிறுபிள்ளைத் தனமானது என்றோ அவர் வெட்டிப் பேசவில்லை! நான் கேட்ட கேள்விகளுக்கு அமைதியாகவும் ஆணித்தரமாகவும், பொருத்தமான மேற்கோள்களுடனும் அவர் விளக்கிய விதம் என்னைக் கவர்ந்தது.
இஸ்லாம் கல்வியைத் தேடிக் கற்றுக்கொள்ளும்படி வலியுறுத்துகின்றது என்றும், கேள்விகள் கேட்டு விளக்கம் பெறுவது கல்வி கற்பதன் வழிகளுள் ஒன்றாகும் என்றும் அவர் விளக்கினார். ஏதேனும் ஒன்றை விளக்கும்போது, நிறுத்தி நிறுத்தி, அமைதியாக, அழகிய ரோஜா மலரின் இதழ்களை மெதுவாகப் பிரித்து, அதன் மணத்தை நுகர்வது போன்று இருந்தது அவர் பேசிய விதம்.
ஒருசில விளக்கங்களுக்கு என் கருத்து முரண்படுவதாக நான் கூறியபோது, அவர் உணர்ச்சி வயப்படாமல், நான் கூறியது ஓர் அளவு வரை சரியானதென்ற மறுமொழி கூறி, அதன் முழுமையான விளக்கத்தினைப் பெற எவ்வாறு வெவ்வேறு கோணங்களில் ஆழமாகச் சிந்திக்கவேண்டும் என்பதை அமைதியாக விளக்கினார்.
அந்த அமர்வின் பின், வெகு நாட்கள் செல்லவில்லை, உண்மையை உணர்வதற்கு! ஒரு நாள் அதே குழுவினரைச் சந்தித்து, “லா இலாஹ இல்லல்லாஹ்; முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” என்ற இஸ்லாமிய தாரக மந்திரத்தை மொழிந்து, ‘ஆமினா’ என்னும் அழகிய பெயர்க்குச் சொந்தக்காரியானேன்!
அது 1977 மே மாதம் 21 ஆம் தேதி. ஏறத் தாழ இன்றைக்கு முப்பதாண்டுகள் கடந்துவிட்டன. எனது குடும்பத்தில் பெரும்பாலோரின் அதிருப்திக்கும் ஆச்சரியத்திற்கும் இடையில் நான் இஸ்லாத்தைத் தழுவினேன். எந்த அளவுக்கு அவர்களின் எதிர்வினை இருந்தது தெரியுமா? அவர்களுள் ஒருவர் என்னைக் கொலை செய்துவிடவும் முயன்றார்! அமைதியாகவும் உறுதியாகவும் இஸ்லாத்தைக் கடைப்பிடித்ததன் மூலம், இப்போது என் குடும்பத்தில் பெரும்பாலோர் முஸ்லிம்களாக இருக்கின்றனர்!
உண்மையான மத மாற்றத்தின் பின், குடும்பத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்படலாம்; துரத்தப்படலாம்; பொருளாதாரத் தடை, சொத்தில் பங்கின்மை போன்ற விளைவுகள் நிகழலாம்! அபூர்வமாக ஒரு சிலர் தமது குடும்பத்தினாலும் நண்பர்களாலும் மதிப்பு மரியாதையுடன் நடத்தப்படலாம். ஆனால், இஸ்லாத்தை ஏற்றவர்களுள் பெரும்பாலோர், கடுமையான சோதனைகளை-எதிர்விளைவுகளைக் குறைந்த பட்சம் ஒரு சில மாதங்களேனும் சந்திக்கத்தான் வேண்டியுள்ளது என்பதை உணர்ந்த ஆமினா அஸ்ஸில்மி, தனக்குக் கிடைத்த அருமையான வாழ்வில் அகமகிழ்ந்து நிலைத்துள்ளார்.
அதிரை அஹமது
5 Responses So Far:
இன்னா லில்லாஹி வ இன்னா இலிஹி ராஜிஊன் ...!
அன்பு வாசகர்களின் கவனத்திற்கு: இந்தப் பேறு பெற்ற பெண்மணி ஆமினா அஸ் சில்மி அவர்கள் நியுயார்க்கில் ஓர் இஸ்லாமியப் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு, தனது அப்போதைய உறைவிடமான Newport, Tennesseeக்குத் தன் மகனுடன் திரும்பிக்கொண்டிருந்தபோது, (2010 மார்ச் 6 அன்று) அதிகாலை மூன்று மணிக்கு, கார் விபத்தில் இறைவன் பக்கம் தனது இறுதிப் பயணத்தைத் தொடங்கிவிட்டார் எனும் அதிர்ச்சித் தகவல் உலக முஸ்லிம் சமுதாயத்தை உலுக்கிவிட்டது!
மறைந்த மாமணி ஆமினா, International Union of Muslim Women எனும் அமைப்பின் தலைவியாக இருந்து தகையான சேவை புரிந்து வந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.
Adirai Ahmad சொன்னது…
இன்னா லில்லாஹி வ இன்னா இலிஹி ராஜிஊன் ...!
அன்பு வாசகர்களின் கவனத்திற்கு: இந்தப் பேறு பெற்ற பெண்மணி ஆமினா அஸ் சில்மி அவர்கள் நியுயார்க்கில் ஓர் இஸ்லாமியப் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு, தனது அப்போதைய உறைவிடமான Newport, Tennesseeக்குத் தன் மகனுடன் திரும்பிக்கொண்டிருந்தபோது, (2010 மார்ச் 6 அன்று) அதிகாலை மூன்று மணிக்கு, கார் விபத்தில் இறைவன் பக்கம் தனது இறுதிப் பயணத்தைத் தொடங்கிவிட்டார் எனும் அதிர்ச்சித் தகவல் உலக முஸ்லிம் சமுதாயத்தை உலுக்கிவிட்டது!
மறைந்த மாமணி ஆமினா, International Union of Muslim Women எனும் அமைப்பின் தலைவியாக இருந்து தகையான சேவை புரிந்து வந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.
-----------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். இவர்களை பற்றி நானும் படித்திருக்கிறேன். இவர்களின் பிரிந்து சென்ற கணவனும் இஸ்லாத்தை தழுவி விட்டார்கள் என்றும் படித்தேன். மேலும் செய்த பணியில் இவர்களை பணி நீங்கம் செய்தார்கள். பின் வழக்கு மன்றம் சென்று தன் பணியை திரும்ப பெற்றார்கள். இவர்கள் இஸ்லாத்தில் சேர்ந்ததால் மிக,மிக பெரிய துன்பங்களையெல்லாம் சந்தித்துள்ளார்கள். அல்லாஹ் அன்னாரை பொருந்து கொண்டு சுவர்கத்தில் சேர்ப்பானாக ஆமீன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலிஹி ராஜிஊன் ...!
சகோதரி ஆமினா அசில்மி (Aminah Assilmi), மிகப் பிரபலமான இஸ்லாமிய மார்க்க அறிஞர். அமெரிக்காவைச் சார்ந்த சர்வதேச முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தலைவர் (International Union of Muslim Women ).
சகோதரியின் மறைவை கண்டு அதிர்சியிற்றேன் அல்லாஹ் அவர் பிழையை மன்னித்து ஜன்னத் பிர்தௌஸ் என்னும் சுவனத்தை அளிப்பானாக ஆமீன்..
சகோதரியை பற்றின பதிவை என் இணையத்தில் இரண்டு வருடங்களுக்கு முன் நான் பதிந்த பதிவை கீழே உள்ள சுட்டியை காண்க
http://adiraithenral.blogspot.in/2010/08/aminah-assilmi.html
Post a Comment