Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இலங்கைத் தமிழனின் இதயக் குரல்.. 7

அதிரைநிருபர் பதிப்பகம் | September 16, 2012 | ,

நண்பர்களே!

அறிமுகம் - நண்பர்களே! இன்று எனக்கு ஒரு முக்கியமான நாள்! உயிர்காக்கப்பட்ட நாள்! காப்பாற்றியவர்கள் நான்கு இஸ்லாமியர்கள்! அவர்களுக்காக இந்தப் பதிவு! இது எனது தனிப்பட்ட பதிவாகும்! எனது டைரியை படிப்பது போல இருக்கும்! எனவே அன்பான சொந்தங்கள் அனைவருக்கும் இந்த வேளையில் நன்றி சொல்லிக்கொண்டு, இப்பதிவை தொடருகிறேன்!

இலங்கையில் தமிழர்களுக்கும் - இஸ்லாமியர்களுக்கும் சண்டை, சச்சரவு இருப்பதாக ஒரு தோற்றம் வெளியுலகில் இருக்கிறது! ஆனால் உண்மை அதுவல்ல! எங்கேனும் அரிதாக, நடந்த ஓரிரு சம்பவங்களை வைத்துக்கொண்டு, இரு இனங்களுக்கிடையே பிளவு என்று சொல்லுவது தவறு!

தமிழர்களும் முஸ்லிம்களும் எவ்விதமான பிரச்சனைகளும் இன்றி ஒற்றுமையாக வாழும் பல கிராமங்கள் இலங்கையில் உள்ளன! வவுனியா அதற்கு மிகவும் சிறப்பான எடுத்துக்காட்டு! அங்கே மூவின மக்களும் எவ்விதமான சண்டை சச்சரவும் இன்றி வாழ்கிறார்கள்!

1997 ம் ஆண்டு வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்து, ஒரு முஸ்லிம் அன்பரின் வீட்டில் வாடகைக்கு இருந்தோம்! அந்நாட்களில், பல வன்னிக்குடும்பங்கள், முஸ்லிம் மக்களின் வீடுகளின் வாடகைக்கு இருந்தார்கள்! காரணம், முஸ்லிம் கிராமங்களை இராணுவத்தினர் சுற்றி வளைக்க மாட்டார்கள்! அங்கு வரவும் மாட்டார்கள் என்ற நம்பிக்கையே!

அன்றிலிருந்து, அவர்களோடு பழகும் அரிய வாய்ப்பு கிடைத்தது! அவர்கள் மிகவும் பண்பானவர்கள்! வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தார்கள்! எந்தத் தொழிலையும் தயக்கம் இன்றி செய்வார்கள்! அவர்களுக்குள் தொழில் ரீதியான சாதிப் பாகுபாடு கிடையாது! என்னோடு ஒன்றாகப் படித்த நசீர் என்ற நண்பன், மிகவும் குறும்புக்காரன்! அவனிடம் எப்போதுமே நிறையவே காசு இருக்கும்!

மத்தியானம் பாடசாலை முடிந்ததும், ஒரு மீன் கடையில் வேலை செய்வான்! மின்னல் வேகத்தில் அவன் மீன்களை வெட்டும் அழகே தனி! பின்னர் மாலையில், இருவரும் ஃபுட்பால் விளையாட கிளம்பிடுவோம்! அவனோடு சேர்ந்து, மீன் கடையில் வேலை பார்க்க எனக்கும் விருப்பமாக இருந்தது! ஏன் தெரியுமா? பின்ன, ஏ எல் படிக்கும் போது, கையில காசே இருப்பதில்லை! அதனால்தான்!

அம்மாவிடம் போய், மீன்கடையில் வேலை செய்யப் போவதாக சொன்னேன்! அம்மா தலையில் கைவைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டார்! நான் மீன்கடையில் வேலை செய்வதால் வரும் விளைவுகள் பற்றி ஒரு மணிநேரம் விபரித்தார்! அதில் எனக்கு யாருமே பொண்ணு தரமாட்டாங்களாம் அப்டீன்னும் என்று ஒரு பிட்ட போட்டுட்டா!

இந்த இடத்தில் நீங்கள் ஒரு விஷயத்தை தெளிவாக விளங்கிக் கொள்ளவேண்டும்! இதில் நான் யாரையும் குறைத்து கூறவில்லை! எமது சாதி முறைப்படி, நாங்கள் அப்படியான தொழில் செய்யக் கூடாது என்று அம்மா கண்டிப்பாக சொல்லிவிட்டா! நான் சின்ன வயசில் இருந்தே மாத்தியோசிக்கத் தொடங்கிவிட்டேன் என்பதால், அது ஏன்? இது ஏன்? அப்படிச் செய்தால் என்ன? என்று அம்மாவுடன் ஒரே வாக்குவாதம்!

இறுதியில், “ உன்ர விருப்பப்படி வேலை செய்யுறதென்றால், வீட்டைவிட்டுப் போ” என்ற அம்மாவின் கண்டிப்பான உத்தரவோடு, நான் எனது வாயை மூடிக்கொண்டேன்! அன்றோடு ஒரு மீன்கடையில் வேலை செய்யவேண்டும் என்ற எனது கனவு காணாமல் போனது!

பிறகு இங்கு வெளிநாடு வந்து, நான் வெட்டாத மீனா? வாட்டாத இறைச்சியா? கழுவாத கோப்பையா? ஹி ஹி ஹி ஹி ஆனால் இப்பதான் பலர் பொண்ணு கொடுக்க முன்வருகிறார்கள்! என்ன கொடுமை முனுசாமி? ( எத்தனை நாளைக்குத்தான் சரவணனைக் கூப்புடுறது? )

சரி சரி நான் சொல்ல வந்த விஷயத்தை விட்டுட்டு எங்கோ போய்விட்டேன்!

இஸ்லாமியர்களில் எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு விஷயம்! இறைபக்தி, மதக் கட்டுப்பாடு, நேரம் தவறாத தொழுகை!! எப்படி, இப்படியெல்லாம் கட்டுப்பாடாக, ஒரே கோட்பாட்டோடு இருக்கிறார்கள்? என்று நான் எப்போதுமே ஆச்சரியப்படுவேன்! அவர்களின் இறைவிசுவாசம் - அல்லாஹ் மீது கொண்ட பக்தி, எப்பவுமே ஆச்சரியமானதுதான்! இப்படிப் பட்டவர்களையா, உலகம் பயங்கரவாதிகள் என்கிறது?

இலங்கையில், பி.எச். அப்துல் ஹமீத் என்ற பெரும்சிகரம், தமிழ்க்கடல்! அவர் தொடக்கம், ஏ.ஆர்.எம்.ஜிஃப்ரி, ஃபரீன் அப்துல் காதர், ஃபரீன் அப்துல் கையும், சமோஸ் முஹ்ஹம்மது பெரோஸ், எஸ்.ரி.ரவூஃப் என்று பல வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள் இருக்கிறார்கள்! 

இவர்கள் அனைவரினதும் குரல்களும், அழகிய தமிழ் உச்சரிப்புக்களும், என்னை மேலும் மேலும், இஸ்லாமியர்கள் மீது பற்றுகொள்ள வைத்தது!

இலங்கையில் இஸ்லாமியர்களின் பேச்சுத் தமிழ் மிகவும் வித்தியாசமாக இருக்கும்! நாம் பேசும் யாழ்ப்பாணத்து தமிழுக்கும், அவர்கள் பேசும் தமிழுக்கும் முற்றிலும் வேறுபாடாக இருக்கும்! 

ஆனால் வானொலியில் தமிழ் பேசும் போது அவ்வளவு அழகாக இருக்கும்! மிகவும் அழகு நிறைந்த தமிழில் பேசுவார்கள்! அதுவே மிகப்பெரிய ஆச்சரியம்!

நான் அடிக்கடி ஒரு விஷயத்தை நினைத்துப் பார்ப்பேன்! 

அதாவது தமிழை தாய்மொழியாக கொண்ட இஸ்லாமியர்கள், தமிழில் உள்ள இலக்கியங்களைப் படிக்கும்போது, சங்கடமாக இருக்காதா??

ஏனென்றால், தமிழிலக்கியத்தில் 85 வீதம், இந்து சமயம் கலந்துள்ளது! இந்து சமய கருத்துக்களைக் கலக்காத தமிழிலக்கியமே இல்லை என்று சொல்லிவிடலாம்!

தமிழை தாய்மொழியாக கொண்ட ஒரு இஸ்லாமியர், தமிழின் சிறந்த இலக்கியமாகிய கம்பராமாயணத்தை படிக்க நேர்ந்தால், அதில் பல இந்துமதக் கருத்துக்களைக் கடந்தே செல்லவேண்டும்! இது சங்கடமாக இருக்காதா? இதுபற்றி நான் அடிக்கடி எண்ணிப் பார்ப்பேன்!

இன்று உலகளவில் இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாம் மதத்துக்கும் விடுக்கப்படும் சவால்கள் பற்றி உங்களுக்கு நன்கு தெரியும்! 

நான் வாழும் ஃபிரான்ஸ்கூட, இஸ்லாமியபெண்கள் பர்தா அணிவதை எதிர்க்க்கிறது! 

வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால், எனக்கு இந்த மேற்கு நாடுகளை மிகவும் பிடிக்கும்! குறிப்பாக நான் வாழும் ஃபிரான்ஸ் மீது அளவுகடந்த பற்று உண்டு! யாராவது ஃபிரான்ஸ் பற்றி தப்பாக கதைத்தால் செம டென்சனாகிடுவேன்!

அதே சமயத்தில், இஸ்லாமிய சகோதர்கள் மீது இவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எப்படி எடுத்துக்கொள்வது? 

யாருக்கு சப்போர்ட் செய்வது என்று பல நாட்கள், மண்டையைப் போட்டு குழப்பியிருக்கிறேன்! 

இப்போ, ஆஃப்கானிஸ்தானில் ஒரு ஃபிரெஞ்சு வீரர் இறந்துவிட்டால், அன்று முழுக்க ஒரே டல்லாக இருக்கும்! அதே சமயத்தில், அங்கு இஸ்லாமிய போராளிகளோ, படையினரோ கொல்லப்பட்டாலும், அதுவும் துக்கத்தையே வரவழைக்கும்!

-----

இப்படி ஒரு ரெண்டும் கெட்டான் மனோநிலையில் வாழ்ந்துவருகிறேன்!

குறிப்பாக சதாம் ஹுசேனை, தூக்கில் போட்ட, அந்த நாளில் மிகவும் சங்கடமாக இருந்தது! மனம் அவருக்காக இரங்கவே செய்தது! என்ன செய்வது? 

எங்களுக்கு மேற்கு நாடும் வேண்டும், இஸ்லாமிய சொந்தங்களும் வேண்டும்!

நண்பர்களே! நான் முன்பு சொன்னது போல, நான்கு இஸ்லாமிய நண்பர்களால், நான் காப்பாற்றப்பட்ட அந்த நாள் அக்டோபர் 7 ஆகிய இன்றாகும்! இந்த நன்னாளில், அந்த நால்வரோடும் சேர்த்து, இஸ்லாமிய சொந்தங்கள் அனைவரையுமே நினைத்துப் பார்க்கிறேன்!

அனைவரின் மீதும் அல்லாஹ்வின் கருணை என்றும் நிலவுவதாக!

நன்றி: ‘சுவனப்பிரியன்’ வலைத்தளம்
பரிந்துரை : அதிரை அஹ்மது

7 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ப்Fரான்சில் வாழும் அன்பு தமிழரே!
எங்களுக்கு நிகராக உங்களையும் நேசிக்கிறோம்.
மனிதனுக்கு கிடைத்த உயர்ந்த சிந்திக்கும் அறிவு ஒன்றை மட்டும் பயன் படுத்தி உன்னத மார்க்கம் எது என முடிவெடுங்கள்.
இன்சா அல்லாஹ்! அந்த பேறு கிடைக்கனும், உங்களுக்கும் உங்களைச் சார்ந்தவர்களுக்கும்!

Ebrahim Ansari said...

//அதாவது தமிழை தாய்மொழியாக கொண்ட இஸ்லாமியர்கள், தமிழில் உள்ள இலக்கியங்களைப் படிக்கும்போது, சங்கடமாக இருக்காதா??

ஏனென்றால், தமிழிலக்கியத்தில் 85 வீதம், இந்து சமயம் கலந்துள்ளது! இந்து சமய கருத்துக்களைக் கலக்காத தமிழிலக்கியமே இல்லை என்று சொல்லிவிடலாம்!

தமிழை தாய்மொழியாக கொண்ட ஒரு இஸ்லாமியர், தமிழின் சிறந்த இலக்கியமாகிய கம்பராமாயணத்தை படிக்க நேர்ந்தால், அதில் பல இந்துமதக் கருத்துக்களைக் கடந்தே செல்லவேண்டும்! இது சங்கடமாக இருக்காதா? இதுபற்றி நான் அடிக்கடி எண்ணிப் பார்ப்பேன்!//

இது ஒரு முக்கிய கருத்து.

தமிழ்நாட்டில் அல்லது இந்தியாவிலேயே பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாடத்திட்டங்களில் மதிப்பெண் பெற்று ஆகவேண்டிய கட்டாயத்துக்கு ஆட்பட்டு பல்வேறு மத கருத்துடைய இலக்கியங்களை நாமும் படிக்கும் கட்டாயம் உண்டு. நமது மனதுக்குப் பிடிக்காத - நம்மால் ஏற்க முடியாத - நமது கொள்கைகளுக்கு விரோதமான பாடப்பகுதிகளை எல்லாம் மனப்பாடப்பகுதிகளாக வைத்து இருககிறார்கள்.

உதாரணமாக, திருப்பாவை, திருவாசகம், தாயுமானவர் பாடல்கள், இராமலிங்க அடியார் பாடல்கள் போன்றன நாம் கட்டாயம் மனப்பாடமும், உரைனடையாகவும் படித்தே ஆகவேண்டும். ஆனால் சிறுபானமையினர் சம்பந்தப்பட்ட இலக்கியங்கள் படிக்கும் சுமை மற்ற மாணவர்களுக்கு மிகக் குறைவே. ஒரே ஒரு தேம்பாவணி பாடல் அல்லது ஒரே ஒரு சீராப்புராணப்பாடல் மட்டுமே இருக்கும். இதனால் மாற்றுக்கருத்துக்களை நாம் படிக்கும் சூழ்நிலை அதிகமாக்கப்பட்டும், நமது கருத்துக்கள் இளம் மனதில் சென்று சேர்ப்பது குறைவாகவும் இருக்கிறது.

நம்மைப்பற்றிய புரிந்துணர்வு குறைபாடாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

KALAM SHAICK ABDUL KADER said...


அன்புத்தம்பி இலங்கைத் தமிழர்க்கு அன்பான வாழ்த்துகள்!

எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை குறிப்பிட்டார்: “ இறைச்சிக்கும் கவிதைக்கும் ஏதும் தொடர்பு உண்டா? ஏனெனில், இறைச்சி உணவை அதிகம் விரும்பும் முஸ்லிம்கள் தான் கவிஞர்களாய் நான் காண்கின்றேன்” என்று. இன்றும் அடியேன் அமீரகத்தில் உள்ள அனைத்துத் தமிழ்ச்ச்ங்கங்களிலும், கவியரங்குகளிலும் காணும் ஓர் உண்மை நிலவரம்: இலக்கிய விழாக்களிலும், கவியரங்குகளிலும் அதிகம் பங்கெடுத்துத் தன் திறமையை வெளிக்கொணர்வதில் முஸ்லிம் ஆண்/பெண் கவிஞர்களை நிரம்பக் காண்கின்றேன். சென்ற மே மாதம் என் தலைமையில் துபை வானலை வளர்தமிழ்த் தேர் எனும் இலக்கிய அமைப்பில் அதிகம் கவிதை வாசித்தவர்கள் முஸ்லிம் கவிஞர்கள்; குறிப்பாக முஸ்லிம் பெண் கவிஞர்கள். ஆனால், வெளியுலகில் முஸ்லிம்கள் தமிழ் மொழியின் மீது பற்றற்றவர்களைப் போன்றதொரு “பரப்புரை” செய்யப்படுகின்றது. நீங்கள் வந்துள்ள இத்தளத்தினைப் பாருங்கள்: மூத்த தமிழறிஞர் (இவ்வாக்கத்தை ஈண்டு அறிமுகப்படுத்த பரிந்துரையைச் செய்தவர்கள்) என் ஆசான் அதிரை அஹ்மத், இலக்கணப்பாடம் நடத்து எங்கட்கு “பழகு தமிழ்” கற்றுக் கொடுப்பவர்கள், அதிரை அதி.அழகு எனும் ஜெமீல் காக்கா, கவிதையின் மூலம் தாக்கம் ஏற்படுத்தும் கவிவேந்தர் சபீர், இளங்கவிஞர் ஷஃபாஅத், மகுடக் கவிஞர் க்ரவுன் மற்றும் அடியேன் ஆகிய நாங்கள் முஸ்லிம் கவிஞர்கள் தானே. இன்னும் இங்கு அழகு தமிழில் ஆக்கங்கள் தரும் அத்தனை பேர்களும் முஸ்லிம் சகோதர எழுத்தாளர்களே!

KALAM SHAICK ABDUL KADER said...

மேலும், இலங்கை மட்டுமன்று; அகிலமெலாம் இலங்கை முஸ்லிம் கவிஞர்களின் கவிதைகள் ஒலிப்பதை அடியேன் அனுதினமும் கேட்கின்றேன்; குறிப்பாக இலண்டன் தமிழ் வானொலி நடாத்தும் “வியாழன் கவிதை நேரம்” நிகழ்ச்சியில் என்னுடையதும், என் அன்புச் சகோதரி முத்துப்பேட்டை மலிக்கா ஃபாருக் அவர்களுடையதும் இந்திய முஸ்லிம் கவிஞர்களின் கவிதைகளாக வாசிக்கப்பட்டாலும், அதிகமான கவிதைகள் இலங்கை முஸ்லிம் கவிஞர்களால் யாத்தளிக்கப்படுப்வைகளாகவும், அக்கவிதையினை இனிமையாகவும் ஏற்ற இறக்கமாகவும் பொருள் விளங்க வாசிப்பவர்கள் இலங்கை முஸ்லிம் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது!

KALAM SHAICK ABDUL KADER said...

மேலும், இலங்கைக்கும் எங்கட்கும் நெருங்கியத் தொடர்பு இருப்பதும்; கப்பல் வழியாகக் கடற்கரைப் பட்டினமான எங்கள் “அதிரைப்பட்டினம்” அழகிய இஸ்லாத்தை வணிகர்கள் வழியாகப் பெற்ற பேருண்மைகள் எல்லாம், என் ஆசான் அதிரை அஹ்மத் அவர்களின் வலைத்தளம் “அதிரை வரலாறு” சென்று பார்த்தால் விளங்கும்.

Aboobakkar, Can. said...

இலங்கை புத்தலதிற்கு யாழ். முஸ்லிம்கள் விடுதலைபுலிகளால் குடிபெயற்க பாட்டதை வறலாறு தெரிந்தவர்கள் மறந்துவிடவில்லை.

KALAM SHAICK ABDUL KADER said...

பவுத்த சிங்கள அரசுக்குத் துணையாக காலங்காலமாக இருந்த இலங்கை முஸ்லிம்களைக் குறிவைத்து- பள்ளிவாசல்களை அழிக்கும் சிங்களவர்களும் முஸ்லிம்கட்கு எதிரிகளாகி விட்டனரே! ஆக, பொதுவாக, தமிழகமோ, ஈழமோ அரசியல் - பதவி சுகத்திற்காக முஸ்லிம் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளால் முஸ்லிம்கள் “இருதலைக் கொள்ளி “ வேதனைக்குட்பட்டு வருவதையும் காண்க.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு