Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மனு நீதி மனித குலத்துக்கு நீதியா? அலசல் தொடர் நிறைவுப்பகுதி. 17

அதிரைநிருபர் பதிப்பகம் | September 12, 2012 | , , , , ,

அலசல் தொடர் பனிரெண்டு. 
நிறைவுப்பகுதி

இந்த தொடரின் நிறைவுப்பகுதி இதுவாகும். ஒரு சமயம் ஏதாவது குழல் ஊதும்  பாலாஜிகள் பின்னூட்டத்தில் கேள்விகள் எழுப்பினால் மேலும் விளக்கமளிப்பதற்காக தொடரக்கூடும். 

இந்த தொடர் வெளியிடப்பட்டுக் கொண்டு இருந்த போது இதை  எழுதுவதற்கு ஒரு குறிக்கோள் உண்டு என குறிப்பிட்டிருந்தேன். அவைகளை நிறைவில் சொல்வேன் எனவும் குறிப்பிட்டிருந்தேன். ஒரு குறிக்கோள் மட்டும் அல்ல அந்த குறிக்கோளை சார்ந்த மற்றொரு குறிக்கோளும்தான். அந்த குறிக்கோள்கள் -

ஒன்று தங்களை பிறப்பாலும் , சமுதாய , சமூக பழக்கவழக்கங்களாலும் தாழ்வுபடுத்தி வைத்திருக்கும் சாஸ்திர சம்பிரதாய சட்டங்களை தாழ்த்தப்பட்ட சகோதரர்களுக்கு தோலுரித்துக்காட்டி நீங்கள் சார்ந்திருக்கும் அல்லது நம்பிக்கொண்டிருக்கும் உங்களின் சமயம் உங்களை வைத்திருக்கும் இழிநிலை இதுதான் என்று அவர்களுக்கு சான்றுகளுடன் சொல்வது. 

இரண்டு இப்படி தாழ்வுற்று, வறுமை மிஞ்சி கிடக்கும் இந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தோரை நல்வழி காட்டி நல்ல மார்க்கத்துக்கு அவர்களைக்கொண்டுவர தூண்டுகோலாய் நிற்பது. இந்தப் பணிக்காக தீனை நிலைநாட்ட தீன் குலத்தோரை திரட்டுவதற்கு அடிக்கல் நாட்டுவது. 

இந்த தொடரைப்பொறுத்தவரை போதும் போதும்  என்கிற அளவுக்கு பிறவிப்பாகுபாடு, தீண்டாமை, பெண்ணடிமை உட்பட பல கருத்துக்களில் சமூக  பாகுபாட்டின் ஊற்றுக்கண் ஆன மனுநீதியை வரிவரியாக அலசி வெளிச்சம் போட்டுக்காட்டி இருக்கிறேன். இனி தொடர்ந்தும்  சில இதிகாசங்களை தொட எண்ணி இருக்கிறேன். அதன் தொடர்ச்சியாக மகாபாரதமா? மகாபாதகமா ? என்ற தொடர் இன்ஷா அல்லாஹ் அடுத்து வர இருக்கிறது. ( சும்மா அதிருதில்லே.)

இனி இந்த அத்தியாயத்தில் எழுதி நிறைவு செய்ய இருப்பது துயருறும் மக்களுக்கு நல்வழி காட்டி நல்ல மார்க்கத்துக்கு அவர்களை அழைத்துவர நாம் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றித்தான்.

வீணாக நமக்குள் பழங்கதைகள் பேசி திரியவேண்டாம். இன்றைய இஸ்லாம் இந்தியாவில் மட்டுமல்ல உலக அரங்கில் பரவி வருகிறது என்பது ஒருபுறமிருக்க காயத்த மரம்தான் கல்லடிபடும் என்கிற கருத்துக்கும் தப்பவில்லை. திட்டமிட்டு வரலாறுகள் மறைக்கப்படுவது, தீவிரவாதமுத்திரை குத்தப்படுவது, ஊடகங்களில் செய்திகள் மறைக்கப்படுவது, அஸ்ஸாம், மியான்மர் போன்ற நாடுகளில் இன அழித்தொழிப்பு, இஸ்ரேலின் தொடர்ந்த அடக்குமுறை, வல்லரசுகளின் பாகுபாடான நடவடிக்கைகள் போன்றவற்றால் அல்லாஹ்வின் இந்த மார்க்கம் பெரும் சவால்களை எதிர் நோக்கித்தான் உள்ளது. ஆனாலும் அல்லாஹ் பலவகையிலும் நமது பொருளாதார வலிமையை உயர்த்தி பாதுகாத்தே வருகிறான். இருந்தாலும் நம்மிடையே ஒற்றுமைக்குறைவு என்பது பெரும் சமுதாய  ஊனமாக  இருக்கிறது.

வெறும் வார்த்தைகளால் இதை இப்படி எழுதினாலும் இந்த ஊனத்தின் தாக்கம் பல ஊர்களில் சமுதாயத்தை சமுதாய வளர்ச்சியை – வாழ்வை- இடுப்பொடித்துப் போட்டு இருக்கிறது.    நமக்கு நாமே ஒட்டிக்கொள்ளும் சுவரொட்டிகள்- போட்டுக்கொள்ளும் பொய் வழக்குகள் ஆகியவற்றின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. சகோதரர்களுக்குள் முஷ்டி மடக்கி நடத்திக் கொள்ளும் வன்முறைகளால் பல ஊர்களில் சமுதாயம் சின்னா பின்னப்பட்டுக் கிடக்கிறது. ஆண்டான்  அடிமைத் தனத்தை அடக்கி  வரலாற்றில் இடம் பெற்ற மார்க்கத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பித்து நீயா நானா  என்று பூவா தலையா போட்டுப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். 

இந்த லட்சணத்தில் நம்மை நோக்கி தழுவும் எண்ணத்தோடு தாழ்த்தப்பட்டவர்களை அழைப்புக்கொடுத்து எப்படி ஈர்க்க முடியும் என்பதை நாம்தான் சிந்திக்க வேண்டும். 

ஆனாலும் இந்த அழைப்பிடுதல் அல்லாஹ்வின் கட்டளை. இந்தப் பணியை தொடர்ந்து செய்தே ஆகவேண்டும்.; இதை நிறைவேற்றியே ஆகவேண்டும்.

இறைவன் தனது திருமறையில் கூறுகிறான். 

முஸ்லிம்களாகிய உங்களை நாம் – உம்மத்தன் வாஸத்தன்- சமநிலையுடைய சமுதாயமாக ஆக்கினோம். நீங்கள் மக்களுக்கு சான்று வழங்குபவர்களாகவும், இறைத்தூதர் உங்களுக்கு சான்று வழங்குபவர்களா கவும்   திகழ்ந்திடவேண்டுமென்பதற்காக ( 2: 142-143)

அது மட்டுமா? நாம் நடுநிலயுள்ள சமுதாயம்- நீதியை நிலை நாட்டிய வரலாறு படைத்த சமுதாயம். இந்த நமது சமுதாயத்துக்கு இறைவனே சான்று தருகிறான். இப்படி 

“இனி மனித இனத்தை சீர்படுத்துவதற்காக தோற்றுவிக்கப்பட்டிருக்கும் மிகச்சிறந்த சமூகத்தவராக  நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் நன்மை புரியும்படி ஏவுகின்றீர்கள்; தீமையிலிருந்து தடுக்கிறீர்கள். மேலும் அல்லாஹ்வின் மீது  நம்பிக்கை கொள்கின்றீர்கள். வேதம் அருளப்பட்ட இவர்களும் நம்பிக்கை கொண்டிருந்தால் அது அவர்களுக்குத்தான் நன்மையாக இருந்து இருக்கும். ஆனால் அவர்களில் சிலரே நம்பிக்கையாளராய் இருக்கின்றனர்; அவர்களில் பெரும்பாலோர் வரம்பு மீறுபவர்களாக இருக்கின்றார்கள்.”   ( அத்தியாயம் ஆலு இம்ரான் 110)    

மேலே காணும் இறைவசனம் முஸ்லிம் சமுதாயத்தின் மீது இறைவன் சுமத்திய பொறுப்பாகும். நாம் மிகச்சிறந்த சமுதாயம் என்ற இறைவனின் வசனத்தை நமது ஒழுக்கத்தின் மூலமும், ஒற்றுமையின் மூலமும் நிரூபிக்கவேண்டிய பொறுப்பும், நன்மையை ஏவி மனுநீதி போன்ற தீமையை தடுக்கும் பொறுப்பும் “உம்மத்தன் வாஹிதா”   என்கிற  அல்லாஹ்வை மட்டுமே ரப்பாக ஏற்றுக்கொண்டுள்ள முஸ்லிம்களுக்கு நிறையவே  இருக்கிறது. ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுக்கிடக்கும் ஒரு சமுதாயத்தை கைதூக்கிவிட்டு நல்வழிகாட்டி நம்மோடு இணைத்துக்கொள்ளும் வாய்ப்பும் கடமையும்  நமக்கு இருக்கிறது. 

தாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்கிற கருத்தின் அடிப்படையில் உலகில் உயர்ந்த சமுதாயமாக – ஹைரா உம்மத்-    ஆக இருக்கும் நாம் நாம் பெற்ற இன்பத்தை நோக்கி மற்றவர்களையும் அழைத்து வரவேண்டும். தீர்வைப்பற்றிப் பேசாமல் பிரச்னைகளைப்பற்றி  மட்டுமே பேசிக்கொண்டு இருக்கும் நாம் இந்த கீழ்க்கண்ட இறைவசனத்தை நோக்கி நமது சக்திகளை செலவழிக்க வேண்டும். 

“ எந்த தீனை – வாழ்க்கை நெறியை நூஹூக்கு  அவன் வகுத்தளித்திருந்தானோ, 

மேலும் முஹம்மதே எந்த வாழ்க்கை முறையை உமக்கு நாம் வஹியின் அறிவித்திருக்கின்றோமோ , 

மேலும் எந்த வழிகாட்டலை இப்ராஹீம், மூஸா, ஈசா, ஆகியோருக்கு நாம் வழங்கி இருக்கின்றோமோ

அதே தீனை வாழ்க்கை முறையைத்தான் உங்களுக்காக அவன் நிர்ணயித்துள்ளான் ; இந்த தீனை நிலை நாட்டுங்கள் ; இதில்  பிரிந்து  போய்விடாதீர்கள்  “  ( 42: 13).

ஆகவே தீனை நிலைநாட்டுவோம். இறைவனின் மார்க்கத்தை எல்லோருக்கும் எடுத்துச் செல்லுவோம்; சொல்லுவோம். வழிகெட்டவர்களையும் , மனுநீதிபோன்ற  அநீதியால் அடக்கிவைக்கப்பட்ட அனைவரையும்   அன்பால் அரவணைத்து அன்பும், அமைதியும், சாந்தமும், சமாதானமும், சமத்துவமும்  அனைவரின் வாழ்விலும் பொங்கிப் பெருக உழைக்க கரம்  இணைத்து  சபதமேற்போம். 

இன்ஷா அல்லாஹ் இன்னொரு பகிர்வில் மீண்டும் இணைவோம்.

இபுராஹீம் அன்சாரி

17 Responses So Far:

அதிரை சித்திக் said...

சமூக நீதி வழங்கிய ..
அன்சாரி காக்கா அவர்களின்
எழுத்து பணி மேலும் சிறக்க
எல்லாம் வல்ல அல்லாஹ்
நல்ல ஆரோக்யத்தையும்
நீண்ட ஆயுளையும் தந்தருள்வானாகவும்
ஆமீன் ..!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இபுராஹீம் அன்சாரி காக்கா,

முடிவுரையின் இறுதி பத்தி எதிர்ப்பார்த்தது தான் என்றாலும், ஒட்டுமொத்த தொடரும் நல்ல தெளிவுபெற வைத்தது என்பதில் சந்தேகமே இல்லை. இது போல் மேலும் பல ஆய்வு தொடர்கள் எழுதி உங்களால் முடிந்த நன்மையை இந்த மனித சமுதாயத்திற்கு செய்ய வேண்டும். அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக...

// இறைவனின் மார்க்கத்தை எல்லோருக்கும் எடுத்துச் செல்லுவோம்; சொல்லுவோம். வழிகெட்டவர்களையும் , மனுநீதிபோன்ற அநீதியால் அடக்கிவைக்கப்பட்ட அனைவரையும் அன்பால் அரவணைத்து அன்பும், அமைதியும், சாந்தமும், சமாதானமும், சமத்துவமும் அனைவரின் வாழ்விலும் பொங்கிப் பெருக உழைக்க கரம் இணைத்து சபதமேற்போம். //

இன்ஷா அல்லாஹ்..

எல்லோருக்கு இந்த தூய எண்ணம் வரவேண்டும். மாற்று மத சகோதர சகோதரிகளை இஸ்லாத்திற்கு அழைப்பது என்பது ஏனோ தேவையில்லாத வேலை என்பது போன்ற அச்ச உணர்வு நம்மில் பலருக்கு உண்டு என்பதை பலராலும் மறுக்க முடியாது.

தமிழகத்தில் எத்தனை ஊர்களில் மாற்றுமத சகோதரர்களுக்கு நாமுடைய தூய மார்க்கதை போதிக்கு தஃவா செண்டர்கள் உள்ளன?

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

///// தீனை நிலைநாட்டுவோம். இறைவனின் மார்க்கத்தை எல்லோருக்கும் எடுத்துச் செல்லுவோம்; சொல்லுவோம். வழிகெட்டவர்களையும் , மனுநீதிபோன்ற அநீதியால் அடக்கிவைக்கப்பட்ட அனைவரையும் அன்பால் அரவணைத்து அன்பும், அமைதியும், சாந்தமும், சமாதானமும், சமத்துவமும் அனைவரின் வாழ்விலும் பொங்கிப் பெருக உழைக்க கரம் இணைத்து சபதமேற்போம். ///////// --- இன்ஷாஅல்லாஹ்!

********** இன்ஷாஅல்லாஹ்! **********


நல்ல ஒரு ஆய்வு தொடரை நிறைவு செய்த தங்களுக்கு வாழ்த்துக்கள்!

இன்னும் பல ஆய்வு தொடர்களைத் தர வல்ல அல்லாஹ் தங்களுக்கு நல்லருள் புரியட்டும்!.

*********************************************************************
சகோதரர்களுக்கு : கட்டுரைகளிலும், கருத்துக்களிலும் ''''மாற்று மதம்'''' என்ற சொல்லைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ''''பிற மதம், பிற மதங்கள்'''' என்ற வார்த்தையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
*********************************************************************

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//அலாவுதீன்.S. சொன்னது… சகோதரர்களுக்கு : கட்டுரைகளிலும், கருத்துக்களிலும் ''''மாற்று மதம்'''' என்ற சொல்லைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ''''பிற மதம், பிற மதங்கள்'''' என்ற வார்த்தையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.//

நிச்சயமாக திருத்திக்கொள்ள வேண்டும்.. ஜஸகல்லாஹ் ஹைர்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//தீனை நிலைநாட்டுவோம். இறைவனின் மார்க்கத்தை எல்லோருக்கும் எடுத்துச் செல்லுவோம்; சொல்லுவோம். வழிகெட்டவர்களையும், மனுநீதிபோன்ற அநீதியால் அடக்கிவைக்கப்பட்ட அனைவரையும் அன்பால் அரவணைத்து அன்பும், அமைதியும், சாந்தமும், சமாதானமும், சமத்துவமும் அனைவரின் வாழ்விலும் பொங்கிப் பெருக உழைக்க கரம் இணைத்து சபதமேற்போம்.//

இன்சா அல்லாஹ் இத்தொடரின் குறிக்கோளும் நிறைவேறி, அடுத்து வரும் தொடரும் மிகப் பலனுள்ளாதாய் அமைய துஆ செய்தவனாய்...

sabeer.abushahruk said...

உற்றுநோக்கி எழுதிவந்தத் தொடர் நிறைவுற்றதா!

இந்தத் தொடருக்கான தங்களின் கடின உழைப்புக்கு அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

மதிப்பிற்குரிய இபுராஹிம் அன்சாரி காக்கா நலமாக இருக்கிறீர்களா?

உங்களுடைய இந்த தொடரை படித்ததும். நபி ( ஸல்) அவர்கள். ஹஜ்ஜத் பிதாவில் கடைசியாக உரை நிகழ்த்தியதுதான் சிந்தனைக்கு வருகிறது.

நம் சமுதாயம் எல்லா நிலையிலும் நீதியோடு நடந்து. பிறமதத்தினரை தூய இஸ்லாம் பக்கம் கவரக்கூடிய சமுதாயமாக அல்லாஹ் ஆக்கியருள்வானாக!

Vavanna (உமர்தம்பிஅண்ணன்) said...

உமருடைய ஆட்சிக் காலமாக இருந்தால் இந்தப் பிரச்சினைக்கு எப்படித் தீர்ப்பு வழங்கி இருப்பார்கள்?

வா..

KALAM SHAICK ABDUL KADER said...

//உமருடைய ஆட்சிக் காலமாக இருந்தால் இந்தப் பிரச்சினைக்கு எப்படித் தீர்ப்பு வழங்கி இருப்பார்கள்? //

அதைத்தானே அண்ணல் காந்தியடிகளார் அவர்களும் ஆசைப்பட்டார்கள் என்று அறிகின்றோம்.

KALAM SHAICK ABDUL KADER said...

அன்பின் ஈனா ஆனா காக்கா,
அஸ்ஸலாமு அலைக்கும்
தங்களின் நலமறிய அவா. தங்களின் சிகிச்சை நிலவரம் அறிய அவா.
மீண்டும் துபை வருவீர்களா? இன்ஷா அல்லாஹ் என் குறுவிடுப்பில் அக்டோபரில் ஹஜ்ஜுப் பெருநாளி விடுமுறையில் சந்திப்போம்.

Ebrahim Ansari said...

அன்பின் கவியன்பன் அவர்களுக்கு,

வ அலைக்குமுஸ்ஸலாம்.

உடல் நலம் பெற்று வருகிறேன். நேற்று தஞ்சையில் இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் மூர்த்தி அவர்களிடம் பரிசோதனை செய்துவந்தேன். அல்லாஹ் உதவியால் நலமே. இன்ஷா அல்லாஹ் அடுத்தவாரம் அல்லது அடுத்த மாதம் மீண்டும் பணியில் சேர அனுமதி பெற்று இருக்கிறேன்.

தங்களின் வழக்கமான அன்பான விசாரிப்புக்கு நன்றி. வஸ்ஸலாம்.

KALAM SHAICK ABDUL KADER said...

அல்ஹம்துலில்லாஹ். தங்களின் உடல்நலம் தேறி வருவதும்; மீண்டும் பணிக்குத் திரும்புவதும் எங்கட்கு மட்டற்ற மகிழ்ச்சி தரும் நற்செய்தி, காக்கா.

KALAM SHAICK ABDUL KADER said...

"சமஸ்கிருதம் என்பது தேவமொழி, அதிலிருந்துதான் தமிழ் தோன்றியது என்ற கருத்து மக்கள் மனதில் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டது. நான்கு வேதங்களும் சமஸ்கிருத மொழியில் தான் எழுதப்பட்டன; அதை சூத்திரன் படிக்கக் கூடாது என்றெல் லாம் விதிகளை வகுத்தார்கள். ஏறக்குறைய பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை தமிழர்கள் வேதங்களைப் படிக்க வில்லை. அதில் என்ன எழுதியிருக்கிறது என்றே இவர்களுக்குத் தெரியாது. ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் வந்தபோது அவர்கள் சமஸ்கிருத மொழியில் ஆர்வம் காட்டினார்கள். குறிப் பாக மேக்ஸ்முல்லர் என்ற ஜெர்மானியர் சமஸ்கிருத மொழியை ஆய்வு செய்தார். அதில் பல கருத்துகளை நாம் ஏற்றுக்கொள்ள லாம்; இன்னும் பலவற்றை நிராகரித்தும் விடலாம். பின்னர் வில்சன் என்ற ஆங்கில அறிஞர் ரிக் வேதத்தைப் படித்து அதற்கு ஆங்கிலத்தில் உரை எழுதினார். அந்த நூல் ரிக் வேதத்தை மிகத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டியது. அதுவரை வேதத்தைப் படித்தறியாத பலருக்கும் இந்த நூல் வேதம் பற்றிய மாபெரும் மாயைகளைத் தகர்த்தது. தமிழர்கள் பலரும் இந்த மொழிபெயர்ப்பின் வாயிலாக ரிக் வேதம் என்ன என்பதைக் கண்டு கொண்டார்கள். எனக்கும் வில்சனுடைய ஆங்கிலப் பிரதியே ஆய்வுக்குப் பயன் பட்டது. வரலாற்றறிஞர்கள் தங்களுடைய ஆய்வில், "கி.மு. 2000-க்கு முன்பு ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்திருப்பதற்கான வாய்ப்பே இல்லை' என்று அறுதியிட்டுச் சொல்லிவிட்டார்கள். கி.மு.2000 என்பது அதிகபட்ச கால வரையறை. தற்காலத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு ஒரு புதிய சான்று கிடைத்தது. அப்போது முரளி மனோகர் ஜோஷி மனிதவளத் துறையின் மேம்பாட்டு அமைச்சராக இருந்தார். அவர், "இந்த சான்றின் அடிப்படையில் சிந்துசமவெளி நாகரீகத்தின் காலம் கி.மு.7,500 என்று அரசு முடிவு செய்கிறது' என்று அறிவித் தார். அதை அறிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு நிருபர், "இது திராவிட நாகரீகமா அல்லது ஆரிய நாகரீகமா?' என்று கேட்டார். ஜோஷிக்கு திராவிட நாகரீகம் என்று சொல்ல மனமில்லை. ஆரிய நாகரீகம் என்று சொல்லச் சான்றில்லை. மாறாக "இந்திய நாகரீகம்' என்று சமாளித்தார். இப்போது வரும் சான்றுகளின்படி, கி.மு.10,000 ஆண்டுகளில் சிந்துவெளியில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான செய்திகள் வருகின்றன.

ஆரிய சார்புடைய அறிஞர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் இது பெரிய பின்னடைவு. சமஸ்கிருதத்தை இந்தியாவின் முதல் மொழி என இனி எப்படிச் சொல்வதென்று திகைத்து நிற்கிறார்கள்.

தமிழை நீச பாஷை என்று கடந்த அறுபது ஆண்டுகளுக்கு முன்பு சொன்னார்கள். பிறகு திராவிட இயக்கம் எழுச்சி பெற்றபோது தோன்றிய எதிர்ப்புக்க ளைக் கணக்கில் கொண்டு, சிவனின் உடுக்கையில் பக்கத்துக் கொன்றாகத் தோன்றிய மொழிகளே தமிழும் சமஸ்கிருதமும் என்று பதுங்கினார்கள். ஆனால் சமஸ்கிருதத்திலிருந்துதான் தமிழ் தோன்றியது என்ற எண்ணத்திலிருந்து அவர்கள் மாறுவதாக இல்லை. இந்த நிலையில்தான் பாவாணரது ஆய்வுகள் ஆணித்தரமாக வெளிவந்தன. "சமஸ்கிருதம் தமிழில் இருந்து பிறந்த மொழி' என்று பாவாணர் சொன்னார். அதுமட்டுமல்ல; "சமஸ்கிருத மொழியில் உள்ள சொற்கூட்டத்தில் நூற்றுக்கு நாற்பது விழுக்காடு சொற்கள் தமிழ்ச் சொற்களே' என்றார். இப்போது ரிக் வேதத்தைப் படித்துப் பார்க்கிறபோது பாவாணர் குறிப்பிட்ட நாற்பது விழுக் காட்டினையும் தாண்டுகிறது.

KALAM SHAICK ABDUL KADER said...

மேற்காணும் கருத்துகள்:

//""சமஸ்கிருதம், ஆங்கில மொழிகளெல்லாம் தமிழிலிருந்து பிறந்த மொழிகள்தான்!''
ம.சோ. விக்டர் நேர்காணல்// என்ற ஆய்விலிருந்து எடுத்து பதியப்பட்டதாகும்

Vavanna (உமர்தம்பிஅண்ணன்) said...

நான் ‘முதலை’ இழந்து விட்டேன்! கடையை மூடிய பிறகுதான் அது பேரிழப்பு என்று புரிந்து கொண்டேன். இன்ஷா அல்லாஹ் இழப்பை மீட்டுக் கொள்வேன்!

அது சரி அலசுவதற்கு உங்களுக்குத் தண்ணீர் எங்கிருந்து கிடைக்கிறது? (தவறான பொருள் எடுத்துக் கொள்ள வேண்டாம்!)

வா..

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

எனது மதிப்பிற்குரிய வாவன்னா சார் அவர்களுக்கு,

உங்களின் சொல்லாடலை சிறுவயது முதல் அறிந்தவன். ஆகவே தவறாக எடுக்க மாட்டேன்.

இந்த தொடர் இன்ஷா அல்லாஹ் விரைவில் நூலாக வெளியிடும் முயற்சியில் இருக்கிறோம். அதற்கு முன் தாங்கள் இந்த தளத்திலேயே தேடி படித்து உங்களின் அன்பான அறிவுரைகளைத்தரும்படி கோருகிறேன். - உங்களின் உடல் நலம் அனுமதித்தால் மட்டும்.

Vavanna (உமர்தம்பிஅண்ணன்) said...

கலாம் தந்த ‘கலாம்’ கேட்டு இதயம் நொந்து போனேன்

எங்கள் இதயத்தைச் சோதித்து விடாமல் அல்லாஹ் காப்பாற்றுவானாக!

என்றும் என்
து‘வா..’

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு